ஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.
ஏண்டா இப்படி சின்னக் குழந்தைங்க மாதிரி அடிசுக்குறீங்க...நீங்களே பாருங்க வசந்தி அக்கா - பன்னெண்டு வயசுக்கு மேலே ஆச்சு, ரெண்டும் இப்படி அடிச்சிகிட்டு இருக்குதுங்க.
நீ ஒன்னும் கவலைப்படாதே, அதெல்லாம் போகப்போக சரி ஆயிடும்... சரி நீ சொல்லு, உன்னைப் பத்தி இப்படிப் பேசி இருக்கா அவ, சும்மாவா விட்டே நீ .
அதெப்படி விட முடியும், அவ வீட்டுக்கே போய் நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தைக் கேட்டுட்டு வந்துட்டேன், ஆனா நான் சொல்லவே இல்லைன்னு சாதிக்கிறா அவ.
USA -ல் CT அல்லது MA பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி. கனக்டிகட் தமிழ் சங்கத்தின் இருபதாவது ஆண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னிசையுடன் கொண்டாடும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.
இசை சங்கமம் 2011, ஜெயா டிவி புகழ் ஹரியுடன் நான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்று கலக்க போகும் இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை அக்டோபர் 8 -ம் தேதி கனக்டிகட்டில் உள்ள Glastonbury High School -ல் நடக்கவிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
இன்னும் சில வாரங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களின் விநியோகம் ஆரம்பித்து விட இருக்கிறார்கள். இது உண்மையிலேயே ஏழை எளியவர்களுக்கு மட்டும் சென்றடைந்தால் நல்லது தான். மன்னன் படத்தில் கவுண்டமணி, 'செயினையும், மோதிரத்தையும் உள்ளே வாங்கி வெளியே வித்துர வேண்டியதுதான்' என்று சொல்வது போல, பல இடங்களில் வசதி படைத்தவர்களும் இந்த ஆட்டத்தில் நுழைந்து வாங்கிய பொருட்களை வெளியே பாதி விலைக்கு விற்று விடுகிறார்கள். அரசின் கேபிள் திட்டமும் அமலுக்கு வந்துவிட்டது, 150 முதல் 200 ருபாய் வரைக் கட்டிவந்த கேபிள் சந்தா 70 ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்பால் ஏற்ப்படும் நஷ்டம், கேபிள் ஆப்பரேட்டர்களுக்கா இல்லை தமிழக அரசுக்கா என்று புரியவில்லை.
காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் ஏன் இப்போது சமீபத்தில் தாத்தப் பாட்டி தினம் என்று கூட மதுரையில் கொண்டாடி இருக்கிறார்கள். இது போன்ற வரிசையில் சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம் என்று ஒரு தினம் இருப்பதாக இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதை முன்னிட்டு மெரீனா கடற்கரையில் மாணவர்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றினர். உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையை பாதுகாப்பது நல்லது தான். நிறைய குப்பைதொட்டிகளை நிறுவினால் நன்றாக இருக்கும். இந்த அவசர உலகில், குப்பைத் தொட்டி அருகில் இருந்தாலே போய் போட சோம்பேறித்தனம் கொண்ட நம் மக்கள், குப்பைத் தொட்டி எங்கே இருக்கிறது என்று தேடித் போய் போடப் போவதில்லை. எப்படியோ மெரீனா சுத்தமானால் சரி.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே கிழே கண்டெடுத்த பையில் இருந்த பத்தாயிரம் ரூபாயை நான்கு நண்பர்கள், போலீசார் வசம் ஒப்படைத்தார்கள் என்று செய்தியில் படித்தேன். இந்தக் காலத்தில் இவ்வளவு நேர்மை இருப்பது, ஒரு பெரிய விஷயம். அதுவும் யாராவது ஒருவர் கண்டெடுத்து ஒப்படைத்து இருந்தால் கூட பரவாயில்லை, நான்கு நண்பர்களும் சேர்ந்து ஒரு மனதாக இந்த காரியத்தை செய்திருப்பது அவர்கள் நல்ல மனதை காட்டுகிறது. இந்த செய்தியை படித்ததும், ஒவ்வையின் மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
அறிவியல் பிட்ஸ்:
சும்மா கார்லே பறக்குறானே என்று நிஜமாகவே காரில் பறக்கும் ஒருவரைப் பற்றிச் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஆம் டெர்ராபுஜியா (Terrafugia) என்ற அமெரிக்க கம்பெனி அடுத்த வருடத்தில் இந்த கார் சந்தைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. விலை ருபாய் ஒரு கோடிக்கு மேல் எகிறுகிறது. அதற்குள் நூறு பேருக்கு மேல் இந்தக் காரை வாங்க முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதை எந்த ஒரு நேர் சாலையிலும் ஒட்டி டேக் ஆப் செய்ய முடியும். அதே போல தரை இறங்கியவுடன் பதினைந்து நொடிகளுக்குள் இறக்கைகளை மடக்கிவிடலாம். விண்ணில் பறக்கும் போது அதிகபட்சம் மணிக்கு 115 மைல்கள் வேகத்திலும், தரையில் ஓடும் போது அதிகபட்சம் 62 மைல்கள் வேகத்திலும் செல்லக்கூடியது. இதற்கு பெட்ரோல் சாதாரண பெட்ரோல் பங்குகளில் நிரப்பிக் கொள்ளலாம். இதை ஓட்ட சிறு விமானங்களை ஓட்டத் தகுதி பெற்ற லைசென்ஸ் தேவை. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பறக்கும் காரை பாருங்கள்.
சினி பட்டறை:
சிம்பு தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாக கூறும் ரகத்தை சேர்ந்தவர். மங்காத்தா படத்தை முதல் நான் முதல் ஷோ சென்னை சத்யம் திரைஅரங்கில் சென்று விசிலடித்துப் பார்த்தாராம். பார்த்துவிட்டு வந்தவுடன் தன் பேஸ்புக் இணையதளத்தில் 'தல படத்தில் பணத்தை மட்டும் கொள்ளை அடிக்கவில்லை, மொத்த படத்தையும் ஆக்கிரமித்து எங்கள் மனதை கொள்ளை அடித்துவிட்டார், தல டா, மங்காத்தா டா' என்று குறிபிட்டிருக்கிறார்.
'த்ரீ இடியட்ஸ்' தமிழ் ரீமேக்கான நண்பன் திரைப்படத்தை, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று நாயகர்களை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இவ்வளவு பெரிய இயக்குனர் ரீமேக் படத்தை இயக்க சம்மதித்தது பெரிய விஷயம் தான். எந்திரன் படப்பிடிப்பின் டென்ஷனுக்கு இடையே 'த்ரீ இடியட்ஸ்' பார்த்து மிகவும் பிடித்து போனாதால் இதற்கு சம்மதித்தாராம். படம் ரஷ் பார்த்தேன் சூப்பரா வந்திருக்கு என்கிறார். நாங்களும் பார்க்க காத்திருக்கிறோம் சார். இங்கே சில நண்பன் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்பட்டங்கள் காணலாம்.
கருத்து கந்தசாமி:
கடவுள் தான் நமக்கு உறவினர்களை கொடுத்தார்.
நன்றி கடவுளே, எங்கள் நண்பர்களை நாங்களே தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.
வாயேஜர் 1 - கடந்த முப்பத்தி நான்கு வருடங்களாக தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கும் விண்கலம். 1977 -ம் ஆண்டு சுமார் 700 கிராமே எடையுள்ள இந்த விண்கலம், சூரிய குடும்பத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதக்காக விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றளவில் பூமியில் இருந்து செலுத்தபடும் கட்டளைகளைப் பெற்றுகொண்டு திரும்ப தகவல்களை பூமிக்கு அனுப்புகிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் 114,155 மைல்கள் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும், இந்த விண்கலம் 2025 வரை தொடர்ந்து வேலை செய்யும் என்று கூறுகிறார்கள். மனிதத் தயாரிப்பில் அதிக தூரம் பயணித்த ஒரே சாதனம் இந்த வாயேஜர் 1 விண்கலம் தான். இதுவரை 100 AU (Astronomical Unit) மேல் தாண்டி பயணித்துக் கொண்டிருகிறது. ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு, சுமார் 93 மில்லியன் மைல்கள். இந்த வேகத்தில் பயணிக்கும் வாயேஜர் 1, இன்னும் ஓரிரு வருடங்களில் சூரிய குடும்பத்தின் எல்லையை கடந்து வெளியே சென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலும் இந்த விண்கலம் தான் பூமிக்கு அனுப்புகிறது. வாயேஜர் 1 எடுத்த புகைப்படங்கள் சில இங்கே...
1977 -ல், பூமியையும் சந்திரனையும் சேர்த்து ஒன்றாக எடுத்த முதல் புகைப்படம்
1979 -இல் எடுத்த ஜுபிட்டர் கிரகத்தின் புகைப்படம். ஜுபிடரின் ஒரு சந்திரனையும், மற்றொரு சந்திரனின் நிழலையும் காணலாம்
1981 -ல் எடுத்த சனி கிரகத்தின் புகைப்படம்
இந்தப் படம் மிகவும் முக்கியமானது. பூமியில் இருந்து சுமார் 4 பில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படம். இவை சூரியனில் இருந்து ப்ளுடோவை விட அதிக தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு.
வாயேஜர் ப்ளுட்டோவை மட்டும் படம் பிடிக்க முடியவில்லை. திருவாளர் ப்ளுட்டோ அவர்கள் தன் 248 வருட சுற்றுப் பாதையில் எங்கேயோ தள்ளி இருந்தார்.
அலுவலகத்தில் இருந்து வந்து பைக்கை நிறுத்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரவியை பார்த்தேன்.
ஏண்டா ரவி, ஸ்கூல்லே இருந்து வந்ததுலே இருந்து விளையாட்டுதானா, கொஞ்சம் நேரம் வீட்டுலே உக்காந்து படிக்ககூடாதா என்று கத்தினேன்.
இதோ வரேன் டாடி, ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்...
சரி, சரி சீக்கிரம் வா என்றபடி உள்ளே சென்று, வழக்கம் போல சோபாவில் சாய்ந்து இன்று என்ன பதிவு எழுதலாம் என்று நினைத்துக்கொண்டே, லேப்டாப்பில் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.
பின் குறிப்பு: ஒரு சடன் பிக்க்ஷன் பாணியில் இந்த 55 வார்த்தை சிறுகதையை முயற்சித்திருக்கிறேன். அதனால் எல்லா விஷயங்களையும் விளக்காமல் உங்கள் கற்பனைக்கே விட்டிருக்கிறேன்.
முன்பு விண்வெளியில் முதல் மனிதன் என்ற ஒரு பதிவில் விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதாகக் கூறிப் பின்னர், எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்று ஒரு முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். மேலும் ஒரே பதிவில் பிரபஞ்சம் பற்றி நான் கூற விரும்பும் அனைத்தையும் அடைப்பது சற்று சிரமம் என்பதால், அதை ஒரு தொடராக எழுதலாம் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளேன். வானவியலைப் பற்றிப் படிப்பது எனது பொழுது போக்கு மட்டுமே, தொழில்முறையில் எனக்கு இந்தத் துறை சம்பந்தம் இல்லாதது. எனவே எதாவது தவறு இருந்தால் கூறுங்கள், திருத்திக் கொள்கிறேன்.
ஒரு நாள் மேகங்கள் அற்ற இரவு நேரத்தில் ஆரவாரம் அதிகம் இல்லாத இடத்தில் இருந்து விண்ணை சற்று உற்று நோக்குங்கள். பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுவதை எந்தவித தொலைநோக்கியும் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும். சிறிது சிறிதாக மின்னும் அத்தனை நட்சத்திரங்களும் நாம் வாழும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.
நம் சூரியனும் ஒரு நட்சத்திரமே. என்ன, நமக்கு கொஞ்சம் அருகில் இருக்கிறது. எவ்வளவு அருகில் என்று கேட்கிறீர்களா ? சுமார் 93 மில்லியன் மைல்கள் அருகில் உள்ளது. இதை விட பல ஆயிரம் மடங்கு தூரத்தில் இருப்பதால் தான் மற்ற நட்சத்திரங்கள் நமக்கு மிகச்சிறியதாக தெரிகின்றன. நம் சூரியனை தவிர்த்து பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான ப்ராக்சிமா செண்டாரி (Proxima Centuari or Alpha Centauri C) சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யகூடிய தொலைவு. ஒளியின் வேகம் தோரயமாக ஒரு வினாடிக்கு 186 ,282 மைல்கள். கணக்குப் போட்டுப்பார்த்தால் சுமார் 5.88 மில்லியன் மில்லியன் மைல்கள் ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் என்று தெரிகிறது. ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் ப்ராக்சிமா செண்டாரி நட்சத்திரத்தை அடைய நமக்கு 4.3 ஆண்டுகள் ஆகும். சில நட்சத்திரங்கள் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கூட இருக்கின்றன. நாம் சாதரணமாக இரவில் அண்ணாந்து பார்க்கும் பல நட்சதிரங்களின் ஒளியை அந்த நட்சத்திரம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உமிழ்ந்திருக்கலாம். நம் சூரியனில் இருந்து புறப்பட்ட ஒளி நம்ம வந்து சேர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகும். அதாவது நாம் பார்க்கும் சூரியன் எட்டு நிமிடங்களுக்கு முன்னதாக இருந்த நிலை, இப்போது இந்த நிமிடத்தின் நிலை அல்ல.
இப்படி ஒரு நட்சத்திர கூட்டத்திற்கிடையே ஒரு சிறிய கிரகத்தில் நின்று கொண்டிருக்கும் மனிதன் தன்னை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை பற்றி அறிய பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். அந்த முயற்சியில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த பிரபஞ்சம் இன்னும் பல புதிர்களை தன்னுள் கொண்டிருகிறது.
சரி பிரபஞ்சம், பிரபஞ்சம் என்று இந்தப் பதிவில் நான் வரிக்கு ஒரு தடவை எழுதும் பிரபஞ்சம் என்றால் என்ன ? நம்ம சுற்றி உள்ள சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சதிரங்கள், நட்சத்திரங்களுக்கு இடையே தெரியும் வெளி, இன்னும் பலவித கண்ணுக்கு தெரியாத வாயுக்கள் எல்லாம் சேர்ந்தது தான் பிரபஞ்சம், ஆங்கிலத்தில் யூனிவர்ஸ் என்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகள் வானவியல் வல்லுனர்கள் இந்த பிரபஞ்சத்தின் அளவு என்ன, வயது என்ன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு விடை தேட போராடிக் கொண்டிருந்தனர். முக்கியமான கேள்வி இந்த பிரபஞ்சம் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்குமா அல்லது எங்காவது ஓர் இடத்தில் முடிந்துவிடுமா என்பது தான். மேலும் அது எப்போதுமே இருந்ததா அல்லது என்றாவது ஒரு காலகட்டத்தில் தோன்றியதா என்பது அடுத்த கேள்வி. அவர்களுக்கு (ஏன் நமக்கும் தான்) முடிவில்லாத ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இருந்தது. சரி பிரபஞ்சத்திற்கு ஒரு முடிவு உண்டு என்று வைத்துக்கொள்வோம். ஒரு வாதத்திற்காக - நீங்கள் அந்த முடிவின் விளிம்பில் நின்று கொண்டு கையை நீட்டினால், உங்கள் கை எங்கே செல்லும். இப்படி விடைத் தெரியாக் கேள்விகள் வானவியல் வல்லுனர்களிடையே எழுந்துகொண்டே இருந்தன, சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டைக் கண்டுபிடிக்கும் வரை...
கூட்டாஞ்சோறு - நெல்லை மற்றும் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் பிரசித்தி பெற்ற உணவு வகை. அரிசி, பருப்பு, பலவித காய்கறிகள், தேங்காய், சிவப்பு மிளகாய் என பலவித ஐட்டங்களை சேர்த்து காரசாரமாக செய்யப்படும் ஒரு உணவு. இப்போது கூட்டாஞ்சோறு என்ற பெயரில் சென்னையில் கூட ஒரு உணவகம் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
கூட்டாஞ்சோறு போல கதம்பமாக பல விஷயங்களை பதிவில் எழுதவேண்டும் என்று நினைத்துகொண்டு சில மாதத்திற்கு முன் ஒரு புதிய பதிவு வகையை சேர்த்தேன். ஆனால் அப்படி நினைத்தபடி அடிக்கடி இந்த வகையில் எழுத முடியவில்லை. இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்து துவங்கி இருக்கிறேன். இனி கூட்டாஞ்சோறு உங்களுக்காக...உப்பு, புளிப்பு, காரம் எதுவும் சரியாக இல்லை என்றால் சொல்லுங்கள், இந்த முறையோ அல்லது அடுத்த முறையோ சரி செய்ய முயற்சிக்கிறேன்.
நாட்டு நடப்பு:
லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக அன்னா ஹசாரே இருந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னதான் சட்டம் கொண்டுவந்தாலும், அதிகாரிகளும், மக்களும் இன்னும் சாமர்த்தியமாக மாட்டிகொள்ளாமல் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ முயற்சித்தால் என்ன செய்ய முடியும். லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையும் நடக்காது என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும், லஞ்சம் மற்றும் ஊழலில் மக்கள் பங்கும் பெருமளவில் இருக்கிறது என்பதே என் கருத்து. தன் காரியம் விரைவில் அதிகம் செலவு இல்லாமல் முடியவேண்டும் என்பதால் மக்கள் லஞ்சம் கொடுக்க முன்வருகின்றனர். முறையான ஓட்டுனர் உரிமம் கூட இல்லாமல் எத்தனைப் பேர் வாகனம் ஓட்டுகிறார்கள். டிராபிக் போலீசிடம் மாட்டிகொண்டால் சுலபமாக தப்பித்துகொள்ள இருக்கவே இருக்கிறது லஞ்சம். இன்று கல்லூரியில் முதலாம் ஆண்டு காலடி எடுத்து வைக்க இருக்கும் ஒரு இளைஞன் கூட போலீஸ்காரங்களை எல்லாம் மதிக்கக்கூடாது என்கிறான். இது ஒரு சிறு உதாரணம் தான், இதைப்போல நிலம் வாங்க/விற்க, கல்லூரியில் சேர்க்க, வருமான வரி என பல இடங்களில் கண்ணுக்கே தெரிந்தே லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் தேர்வு என்ன என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. நல்ல தலைவன் மற்றும் மக்களுக்கு கல்வியும் உலக அறிவும் கிடைத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.
அறிவியல் பிட்ஸ்:
செவ்வாய் கிரகம் கைகெட்டும் தூரம் தான்
தற்சமயம் உள்ள டெக்னாலஜியை உபயோகப்படுத்தி ராக்கெட்டுகள் மூலமாக சென்றால் செவ்வாய் (மார்ஸ்) கிரகத்தை அடைய சுமார் ஏழு மாதங்கள் வரை ஆகலாம். அதுவும் நினைத்த நேரத்தில் அப்படி செல்ல முடியாது. செவ்வாய் கிரகம் சுமார் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூமியில் இருந்து மிகக்குறைந்த தொலைவில் இருக்கும். அந்த நேரத்தை கணக்கிட்டு பயணித்தால் சுமார் ஏழு மாதங்கள் ஆகும். அதை தவிர திரும்பி வர இரண்டு வருடங்கள் காத்திருந்து பின்னர் பயணத்தை தொடங்க வேண்டும்.
மணிக்கு 123,000 மைல் வேகத்தில் செல்லகூடிய பிளாஸ்மா என்ஜின் மூலமாக மார்ஸ் கிரகத்திற்கு 39 நாட்களில் பயணிக்க முடியும் என்று கூறுகிறார்கள். பிளாஸ்மா எஞ்சினில் உள்ள நியுக்ளியர் ரியாக்டர்கள் பிளாஸ்மாவை இரண்டு மில்லியன் டிகிரி வரை சூடாக்கும் திறன் கொண்டவை. இவ்வகை என்ஜின் குறித்து ஆராய்சிகள் நடந்துகொண்டிருகிறது. பிளாஸ்மா என்ஜின் மெதுவாக தொடங்கி பின்னர் அதிவேகத்தில் செல்ல ஆற்றல் கொடுக்கும். அதனால் இதை தொலைதூரப் பயணத்திற்கு மட்டுமே உபயோகிக்கும் சாத்தியம் உள்ளது. இது போன்ற சிக்கல்களை சரி செய்தால், சந்திரனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம், உலகையே ஒரு மணிநேரத்தில் நான்கு முறைக்கு மேல் சுற்றிவந்து விடலாம்.
சினி பட்டறை:
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள, மங்காத்தா திரைப்படம் USA -வில் 70 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படம் உலகெங்கிலும் (கேரளா தவிர) ஆகஸ்ட் 31 அன்று ரிலீஸ் ஆகிறது. அஜித்தின் லுக் அண்ட் ஸ்டைல் மிக வித்தியாசமாக உள்ளது. மங்காத்தா அஜித்தின் ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிரைலரே அசத்துகிறது, கிழே உள்ள வீடியோ கிளிக் செய்து பாருங்கள்.
கருத்து கந்தசாமி:
புது மாப்பிள்ளைக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில்...
திருமண வாழ்கையில் நீ கடைபிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள்,
உன் மீது தவறு இருந்தால் ஒப்புக்கொள்.
உன் மீது தவறு இல்லாவிட்டால் வாயை மூடிகொண்டு அமைதியாய் இரு.