Showing posts with label பிரபஞ்சப் புதிர்கள். Show all posts
Showing posts with label பிரபஞ்சப் புதிர்கள். Show all posts

Sunday, December 4, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #3

பிரபஞ்சப் புதிர்கள் இரண்டாம் பாகத்தில் நியூட்டன் வகுத்த விதிகளைப் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். 

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விவாதங்கள் எப்போதும் நடந்துகொண்டிருகிறது. பலர் கடவுள் படைத்தது என்று நம்புகின்றனர். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் ஒரு பெரும் வெடிப்பின் காரணமாகத் தோன்றியது என்று நம்புகின்றனர். பெருவெடிப்பு என்று கூறுவதை விட பெரும் விரிவு என்று கூறிவது சரியாக இருக்கும். ஒரு பலூனை ஊதினால் எப்படி விரிவடைகிறதோ அதைப் போல இந்தப் பிரபஞ்சமும் விரிவடைந்துக் கொண்டிருகிறது. இனி பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன என்று பார்ப்போம்.




பிரபஞ்சம் விரிந்துகொண்டே போகிறது என்று வானவியல் வல்லுனர்கள் உணர்ந்தபோது, அதற்கு முன்பு அது சிறியதாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தனர். பல வானவியல் வல்லுனர்கள் பெருவெடிப்பு சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது என்று கருதுகிறார்கள். சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தப் பிரபஞ்சமே ஒரு குண்டூசியின் நுனி அளவை விட பல ஆயிரம் மடங்கு சிறிதாக இருந்திருக்கிறது. இது ஒருவித ஒருமை நிலை (ஆங்கிலத்தில் Singularity என்கிறார்கள்). இந்த நிலை ஏன் வந்தது, எப்படி வந்தது என்பதற்கு சரியான பதில் இல்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் பிரபஞ்சம், நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு வெப்பமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. ஏதோ ஒரு காரணத்தினால் அது திடீர் என்று விரிவடையத் தொடங்கியிருகிறது. அந்த கணத்தில் தான் நம் பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்ந்தது. காலம், வெளி, பொருள் (matter) போன்றவைகள் பிறந்திருக்கிறது. பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஏதோ ஓன்று வெடித்து அதனால் பல பொருட்கள் விண்வெளியில் பறந்து சென்றதாக கருத்தில் கொள்ளக் கூடாது. பெருவெடிப்பிற்க்கு முன்னர் வெளி (space) என்பதே கிடையாது. அதற்கு முன்னாள் காலமும் (time) கிடையாது, ஆம் காலம் பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கிய போது தான் உருவானது. இந்தப் விரிவடைதல் தொடங்கி சில வினாடிகளில் பிரபஞ்சம் ஒரு நட்சத்திர மண்டலத்தின் அளவிற்கு விரிவடைந்து விட்டது. இப்படி விரிவடைதல் தொடர்ந்து கொண்டு அதே நேரத்தில் குளிரவும் தொடங்கியது. அந்தக் குளிர்ச்சி தான் நாம் வாழும் இந்த பூமி, நம் சூரிய மண்டலம், நம்மை சுற்றி அண்டவெளியில் உள்ள வாயுக்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்கள் போன்றவை உருவாகக் காரணம்.




சரி பெருவெடிப்புக் கொள்கை கேட்பதற்கு பரபரப்பாகத் தான் இருக்கிறது. இது உண்மையா, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கருதப்படும் இந்த பெருவெடிப்பு உணமையிலேயே நிகழ்ந்ததா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு நிகழ்ந்திருந்தாலும் அது மூன்று பெரிய தடயங்களை கொடுத்திருகிறது. 

முதல் தடயம், முக்கியமான தடயம். அது என்னவென்றால் பிரபஞ்சத்தின் இயக்கம் (motion). அதாவது பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்லும் நிலை. பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்களின் வெளிப்படும் ஒளியை வைத்து அவை நம்மை விட்டு விலகிச் செல்கின்றன என்று வானவியல் வல்லுனர்களால் கூறமுடிகிறது. இந்த ஒளி விலகிச் செல்லும் விஷயத்தைப் பற்றி பின்னர் விவரமாக பார்க்கலாம்.

இரண்டாவது தடயம், பிரபஞ்சத்தில் அதிக அளவில் உள்ள ஹீலியம் தனிமம். பெருவெடிப்பை பொறுத்தவரை முதலில் தோன்றிய பொருட்கள் ஹீலியம் தனிமமும், ஹைட்ரஜன் வாயுவும் கொண்டதாக இருந்தன. ஒவ்வொரு ஹீலியம் அணுக்கும், பன்னிரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தன. பின்னர் 1995 -ல்  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தொலை நோக்கி மூலமாக நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே உள்ள வாயுக்களை சோதித்தபோது சரியாக ஒவ்வொரு ஹீலியம் அணுக்கும், பன்னிரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தன. 

மூன்றாவது தடயம், பிரபஞ்சத்தில் உள்ள பின்னணி கதிர்வீச்சு (background radiation). பிரபஞ்சம் பிறந்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு நாளடைவில் குளிர்ந்து வெகுவாக குறைந்து இருந்தாலும், இன்றளவிலும் அந்த கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் உள்ளது. அறிவியல் உபகரணங்கள் மூலமாக விஞ்ஞானிகள் அதை உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.  வானவியல் அறிவியலைப் பொறுத்தவரை, மற்ற அறிவியல் துறைகளைப் போல சோதனைச் சாலைக்கு கொண்டுவந்து எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது. நம் பிரபஞ்சத்தின் உள்ள தடயங்களின் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக வருகிறது என்ற ரீதியில் தான் பல விஷயங்கள் நிரூபிக்க முடிகிறது. ஆனாலும் அறிவியல் வளர்ச்சியின் மூலமாக இன்று நிறைய விஷயங்கள் உறுதியாக நிரூபிக்கும் நிலைக்கு வளர்த்திருக்கிறது.

சரி இப்போது தொலைதூர நட்சத்திர மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஒளி நம்மை விட்டு விலகிச்செல்லும் விஷயத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளியை நிறமாலை மூலமாக சிவப்பில் இருந்து ஊதாவரை வேறு வேறு நிறங்களில் பிரிக்க முடியும். ஒளி நகரும் போது அலைகளாக பல்வேறு நிறங்களில் நகர்கிறது.  ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அலையளவு (wavelength) இருக்கிறது. சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதா நிறத்தின் அலையளவு நீளம் குறைந்ததாகவும் இருக்கிறது. தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளியளைகளை நிறமாலையைக் கொண்டு சோதிக்கும் போது அவை சிவப்பு நிறத்தை நோக்கி நகர்கிறது. இதற்கு காரணம் அந்த நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிசெல்வதால் தான். 



நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிச்செல்லும் வேகம் அவற்றின் தூரத்தைப் பொருத்து அமைகிறது. அதாவது எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு வேகமாக நகர்ந்து செல்கின்றன. நீங்கள் இந்த வரிகளைப் படித்துகொண்டிருக்கும் நேரத்தில் தொலைதூர நட்சத்திர மண்டலங்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் நம்மைவிட்டு நகர்ந்து சென்றிருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரபஞ்சப் புதிர்கள் மூன்று பாகங்கள் வரை வந்த பிறகும் ஒரு முக்கியமான நபரை பற்றி இன்னும் நான் கூறவில்லை. அவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீன் பற்றியும் அவருடைய கொள்கைப் பற்றியும் விரிவாக அடுத்தப் பகுதியில் காணலாம்.

தொடரும்...

முந்தய பகுதிகள்:
பிரபஞ்சப் புதிர்கள் #1

Thursday, September 8, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #2



நியூட்டன் மரத்தில் இருந்து ஆப்பிள் விழுந்ததும் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்பது நம் பலருக்குத் தெரியும். சரியாக சொல்லவேண்டும் என்றால் ஆப்பிள் தரையை நோக்கி இழுக்கப்பட்டது. அதன் விசை பூஜ்யத்தில் இருந்து ஏதோ ஒரு வேகத்திற்கு உயர்ந்து பின்னர் தரையை நோக்கி வந்து விழுந்தது. ஏதோ ஒரு விசை ஆப்பிளை இழுத்திருகிறது, இந்த விசை தான் ஈர்ப்பு விசை.


உங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு விசை இருக்கிறது. உங்களுக்கும் சந்திரனுக்கும் ஏன் சூரியனுக்கும் இடையே கூட ஈர்ப்பு விசை இருக்கிறது. உங்களுக்கு அருகே இருக்கும் மேஜை, நாற்காலி இப்படி பல பொருட்களுக்கும் இடையே ஈர்ப்பு விசை இருக்கிறது. அப்படி என்றால் ஏன் நம்மை சூரியனோ, சந்திரனோ அல்லது மற்ற கோள்களோ தன்னை நோக்கி இழுத்துகொள்ளவில்லை. ஏன் பூமிலேயே இருக்கிறோம். ஏனென்றால் பூமியின் ஈர்ப்பு விசை மற்றவற்றின் ஈர்ப்பு விசையை விட நம்மேல் அதிகமாக இருப்பதால் தான். பூமியைப் பொறுத்தவரை அது தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி இழுக்க முயற்சிகிறது. அதனால் தான் பூமியில் எந்தப் பகுதியிலும் ஒருவர் நிற்க முடிகிறது. அப்படி என்றால் விண்வெளி வீரர்கள் பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி செல்கிறார்களே அது எப்படி ? அவர்கள் ஈர்ப்பு விசையை தாண்டிப் போகவும் இல்லை அங்கு ஈர்ப்பு விசை இல்லாமலும் இல்லை. விண்வெளி வீரர்கள் தொடர்ந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் எடையற்றை தன்மையை உணர்கிறார்கள். இதேபோலத்தான் செயற்கை கோள்களும் பூமியில் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் பற்றி செயற்கைக்கோள் சுற்றுப்பாதை - ஒரு அறிவியல் அலசல் என்ற பதிவில் எழுதி இருக்கிறேன்.

நியூட்டன் கூறுவது என்னவென்றால், இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை அவற்றின் நிறையையும் அவையிடையே உள்ள தூரத்தையும் பொருத்ததாகும். இந்த ஈர்ப்பு விசையே பூமி சூரியனை சுற்றி வருவதற்கும், சந்திரனை பூமி சுற்றி வருவதற்கும் காரணம்.  பிரபஞ்சத்தை பற்றிய நம் புரிதலுக்கு பெரிதும் உதவிய நியூட்டன் வகுத்த மூன்று விதிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதால், அவற்றை இங்கு சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.

முதல் விதி:

பந்து பாட்டுக்கு சும்மா இருக்குது, அதை ஏன் எட்டி உதைக்கணும்

இது எளிமையான விதி. அசைவில் இருக்கும் ஒரு பொருள் அதன் அசைவு நிலையிலேயோ, ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருள் அதன் ஒய்வு நிலையிலேயோ தொடர்ந்து இருக்கும். மற்றொரு விசை வெளியில் இருந்து இந்த பொருளின் மீது செலுத்தப்பட்டால் தான் அதன் நிலை மாறும்.

இரண்டாம் விதி:


இதுதான் விதி

இந்த விதியை ஒரு சிறிய கதை மூலம் விளக்க முயற்சிக்கிறேன். நீங்கள் பயணம் செய்யும் பஸ் பிரேக் டவுன் ஆகி உங்களை இறங்கி கொஞ்சம் தள்ள சொல்லி இருக்கிறார்களா. அப்படி தள்ளி இருந்தால் அது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது ஒய்வு நிலையில் இருக்கும் பஸ்ஸை நகரச் செய்ய பல பேர் சேர்ந்து விசையை அளிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு காரை தள்ளுவது எப்படி இருக்கும். அதுவும் சற்று சிரமம் தான் ஆனால் பஸ்ஸை விட சற்று சுலபமாக இருக்கும். சரி இப்போது பஞ்சராகி நின்று போன சைக்கிளை தள்ளிக்கொண்டு போவது எப்படி இருக்கும். ஓரளவு சுலபம் தான், தனியாளாக தள்ளிவிடலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன, ஏன் பஸ்ஸை பலர் சேர்ந்து சிரமப்பட்டு தள்ள வேண்டி இருக்கிறது, அதே நேரத்தில் சைக்கிளை மிக எளிதாக ஒருவராலேயே தள்ள முடிகிறது. அதற்க்கு முக்கிய காரணம் அந்த பொருளின் நிறை ஆங்கிலத்தில் மாஸ் (mass) என்கிறார்கள். பஸ்சின் நிறை சைக்கிளை விட பல மடங்கு அதிகமானது. அதை நகர வைக்க அல்லது முடிக்கம் கொடுக்க அதிக விசை தேவைப்படுகிறது. ஒரு முக்கிய விஷயம் இங்கே கவனிக்கவும். நிறை என்பது ஒரு பொருளின் அளவு அல்ல. அதாவது பஸ் பெரிதாக இருக்கிறது அதனால் அதிக நிறை கொண்டது என்று அர்த்தம் இல்லை.  ஒரு பெரிய பஞ்சு மூட்டையை சற்று சுலபமாக தூக்கி விடலாம். பெரிய பஞ்சு மூட்டை என்றாலும் அதன் நிறை குறைவு, அதனால் சிறிது விசை கொடுத்தாலே அதை தூக்கலாம் அல்லது நகர்த்தி விடலாம். சரி புரிகிறது, அதிக எடை உள்ள பொருளை நகர்த்த சிரமப்பட வேண்டி இருக்கிறது,  எடை குறைவாக இருந்தால் எளிதாக நகர்த்தி விடலாம். அதை விட்டு விட்டு நிறை என்று ஏன் குறிப்பிடுகிறேன். எடையும் நிறையும் ஒன்றா அல்லது வித்தாயசம் உள்ளதா என்ற கேள்வி உங்களுக்கு இதற்குள் தோன்றி இருந்தால், என் சார்பில் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுகொள்ளுங்கள். எடையும் நிறையும் ஒன்றல்ல. நிறை என்பது ஒரு பொருளின் உள்ளே எவ்வளவு விஷயம் (ஆங்கிலத்தில் matter) உள்ளது என்கிற அளவு. எடை என்பது அந்தப் பொருளை ஈர்ப்பு விசை எவ்வளவு வலுவாக இழுக்கிறது என்பதாகும். நீங்கள் பூமியில் இருந்து, உங்கள் எடையை ஒரு எடை பார்க்கும் மெசினில் பார்த்து விட்டு, பின்னர் சில நாட்கள் பயணித்து சந்திரனில் இறங்கி அதே எடை பார்க்கும் மெசின் வைத்து உங்கள் எடையைப் பார்த்தீர்கள் என்றால் அது சற்று குறைவாகக் காட்டும். அதற்க்கு காரணம் சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியை விடக் குறைவு. அதனால் தான் சந்திரனில் நடக்கும் விண்வெளி வீரர்கள் சற்று குதித்து குதித்து நடக்கின்றனர். சுருக்கமாக, உங்கள் மொத்த உருவம் நிறை. அது எந்த இடத்திலும் மாறது. ஆனால் எடை நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். இவ்வளவு ஏன், விண்வெளியில் பயணிக்கும் போது எடையே இல்லாமல் உணர்வீர்கள். 

நிலவில் மனிதன் ஓடுவதை இந்த வீடியோவில் பாருங்கள்.



நியூட்டன் இரண்டாம் விதி என்ன சொல்கிறது என்றால், நிறை அதிகமுள்ள ஒரு பொருளை முடிக்க (அல்லது நகர்த்த என்று எடுத்துக்கொள்ளலாம்) அதிகமான விசை தேவைப்படும். அதற்கு ஒரு சூத்திரமே கொடுத்திருகிறார் நியூட்டன்.

F=ma

இதில் 'm' என்பது பொருளின் நிறை, 'a' என்பது முடிக்கம். F என்பது விசை.

மூன்றாம் விதி:

மிக எளிமையான விதி. சற்று தத்துவார்த்தமானதும் கூட. ஒவ்வொரு விசை அல்லது இயக்கத்திற்கும் அதே அளவு சமமான எதிர்வினையான இயக்கம் இருக்கும். சிறிய உதாரணம், நீச்சல் அடிக்கும் போது கையால் நீரை பின்னோக்கி தள்ளினால் முன்னால் செல்கிறோம்.

சரி, நியூட்டன் மூன்று விதிகளை பார்த்தாகிவிட்டது, இனி பிரபஞ்சத்திற்கு வருவோம். நியூட்டன் புவி ஈர்ப்பு தத்துவத்தின் படி பூமி மட்டுமன்றி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்றவற்றை ஈர்த்துகொண்டிருகிறது. இப்படி இருக்கையில் இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு முடிவு என்று இருந்தால், ஒவ்வொரு பொருளிலும் உள்ள ஈர்ப்பு விசை மற்றதை ஈர்த்து மொத்த பிரபஞ்சமே ஓன்று சேர்ந்து நிலை குலைந்துவிடும். இது நடக்கவில்லை, எனவே பிரபஞ்சம் முடிவில்லாதது என்று கருதினார். இந்த பிரபஞ்சம் முடிவில்லாதது என்பதெல்லாம் சரி, இதற்கு ஆரம்பம் என்று ஒரு இருக்கவேண்டுமே அது என்ன என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். அதற்கு பதில் தான் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory). இதைப்பற்றி விரிவாக அடுத்தப்பகுதியில் காணலாம்.

தொடரும்...

முந்தய பகுதிகள்:

பிரபஞ்சப் புதிர்கள் #1

Tuesday, August 30, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #1

முன்பு விண்வெளியில் முதல் மனிதன் என்ற ஒரு பதிவில் விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதாகக் கூறிப் பின்னர், எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்று ஒரு முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். மேலும் ஒரே பதிவில் பிரபஞ்சம் பற்றி நான் கூற விரும்பும் அனைத்தையும் அடைப்பது சற்று சிரமம் என்பதால், அதை ஒரு தொடராக எழுதலாம் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளேன். வானவியலைப் பற்றிப் படிப்பது எனது பொழுது போக்கு மட்டுமே, தொழில்முறையில் எனக்கு இந்தத் துறை சம்பந்தம் இல்லாதது. எனவே எதாவது தவறு இருந்தால் கூறுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

இதோ பிரபஞ்சப் புதிர்கள் உங்கள் பார்வைக்கு...

-----------------------------------------------------------------------


ஒரு நாள் மேகங்கள் அற்ற இரவு நேரத்தில் ஆரவாரம் அதிகம் இல்லாத இடத்தில் இருந்து விண்ணை சற்று உற்று நோக்குங்கள். பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுவதை எந்தவித தொலைநோக்கியும் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும். சிறிது சிறிதாக மின்னும் அத்தனை நட்சத்திரங்களும் நாம் வாழும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

நம் சூரியனும் ஒரு நட்சத்திரமே. என்ன, நமக்கு கொஞ்சம் அருகில் இருக்கிறது. எவ்வளவு அருகில் என்று கேட்கிறீர்களா ? சுமார் 93 மில்லியன் மைல்கள் அருகில் உள்ளது. இதை விட பல ஆயிரம் மடங்கு தூரத்தில் இருப்பதால் தான் மற்ற நட்சத்திரங்கள் நமக்கு மிகச்சிறியதாக தெரிகின்றன. நம் சூரியனை தவிர்த்து பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான ப்ராக்சிமா செண்டாரி (Proxima Centuari or Alpha Centauri C) சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யகூடிய தொலைவு. ஒளியின் வேகம் தோரயமாக ஒரு வினாடிக்கு 186 ,282 மைல்கள். கணக்குப் போட்டுப்பார்த்தால் சுமார் 5.88 மில்லியன் மில்லியன் மைல்கள் ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் என்று தெரிகிறது. ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் ப்ராக்சிமா செண்டாரி நட்சத்திரத்தை அடைய நமக்கு 4.3 ஆண்டுகள் ஆகும். சில நட்சத்திரங்கள் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கூட இருக்கின்றன. நாம் சாதரணமாக இரவில் அண்ணாந்து பார்க்கும் பல நட்சதிரங்களின் ஒளியை அந்த நட்சத்திரம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உமிழ்ந்திருக்கலாம். நம் சூரியனில் இருந்து புறப்பட்ட ஒளி நம்ம வந்து சேர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகும். அதாவது நாம் பார்க்கும் சூரியன் எட்டு நிமிடங்களுக்கு முன்னதாக இருந்த நிலை, இப்போது இந்த நிமிடத்தின் நிலை அல்ல.

இப்படி ஒரு நட்சத்திர கூட்டத்திற்கிடையே ஒரு சிறிய கிரகத்தில் நின்று கொண்டிருக்கும் மனிதன் தன்னை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை பற்றி அறிய பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். அந்த முயற்சியில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த பிரபஞ்சம் இன்னும் பல புதிர்களை தன்னுள் கொண்டிருகிறது.

சரி பிரபஞ்சம், பிரபஞ்சம் என்று இந்தப் பதிவில் நான் வரிக்கு ஒரு தடவை எழுதும் பிரபஞ்சம் என்றால் என்ன ? நம்ம சுற்றி உள்ள சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சதிரங்கள், நட்சத்திரங்களுக்கு இடையே தெரியும் வெளி, இன்னும் பலவித கண்ணுக்கு தெரியாத வாயுக்கள் எல்லாம் சேர்ந்தது தான் பிரபஞ்சம், ஆங்கிலத்தில் யூனிவர்ஸ் என்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகள் வானவியல் வல்லுனர்கள் இந்த பிரபஞ்சத்தின் அளவு என்ன, வயது என்ன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு விடை தேட போராடிக் கொண்டிருந்தனர். முக்கியமான கேள்வி இந்த பிரபஞ்சம் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்குமா அல்லது எங்காவது ஓர் இடத்தில் முடிந்துவிடுமா என்பது தான். மேலும் அது எப்போதுமே இருந்ததா அல்லது என்றாவது ஒரு காலகட்டத்தில் தோன்றியதா என்பது அடுத்த கேள்வி. அவர்களுக்கு (ஏன் நமக்கும் தான்) முடிவில்லாத ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இருந்தது. சரி பிரபஞ்சத்திற்கு ஒரு முடிவு உண்டு என்று வைத்துக்கொள்வோம். ஒரு வாதத்திற்காக - நீங்கள் அந்த முடிவின் விளிம்பில் நின்று கொண்டு கையை நீட்டினால், உங்கள் கை எங்கே செல்லும். இப்படி விடைத் தெரியாக் கேள்விகள் வானவியல் வல்லுனர்களிடையே எழுந்துகொண்டே இருந்தன, சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டைக்  கண்டுபிடிக்கும் வரை...

தொடரும்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...