Thursday, May 9, 2013

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் ஓன்று



சில வருடங்களுக்கு முன்னர் என்னிடம் யாரவது வந்து மாரத்தான் ஓடினேன் என்று கூறி இருந்தால், ஓ அப்படியா! என்று ஒரு போலியான ஆச்சர்ய கேள்வி கேட்டுவிட்டு, அப்புறம் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என் சடார் என்று ட்ராக் மாறி இருப்பேன். ஆனால், இப்போ கொஞ்ச நாட்களாக நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் பலவற்றிகாக அனைவரும் ஓடிக்கொண்டிருந்தாலும், புதிதாக ஒருவன் ஓடுவதற்காக நேரத்தை ஒதுக்கும் போது பல புருவ உயர்வுகளை சந்திக்க நேர்கிறது. என்ன சார், திடீர்னு ஓடறீங்க என்று சிலர் ஆச்சர்ய கேள்வி எழுப்பினர். ரன்னிங் பண்றது கால் மூட்டுகளுக்கு அவ்வளவு நல்லதில்லைங்க என்று சிலர் திடீர் டாக்டர்களாக மாறி அறிவுரை கூறினார்கள். என்னால எல்லாம் ஓட முடியாது என்று சிலர் தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்கள். சில நேரங்களில் எதற்காக ஒன்றை செய்கிறோம் என்று உடனடி பதில் சொல்ல முடியாது. ஏன் ஓடுகிறோம் என்ற கேள்வியை என்னையே நான் பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். பல வித பதில்கள் மனதில் வந்து விழுகின்றன.என் எண்ண ஓட்டங்களை முடிந்த அளவு சுவாரசியமாக எழுத்தில் பகிர முயற்சிக்கிறேன். பொதுவாக ஓடுவதற்கு முன்னால் எந்த திசையில், எவ்வளவு தூரம் என்று மனதில் கணக்கு போட்டுகொண்டு செல்வேன். ஆனால் இந்த பதிவு எந்த திசையில் செல்லும், என்ன எழுதுவேன், எத்தனை அத்தியாயம் எழுதுவேன் என்று தெரியவில்லை. இனி என் ஓட்டம், உங்கள் பார்வைக்கு....



அத்தியாயம் ஓன்று - நீச்சல்

படிப்பு மட்டும் தான் முக்கியம் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைகள் எல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் வேஸ்ட் ஒப் டைம் என்று சொல்லாமல் சொல்லும் நடுத்தர வர்க்க குடும்பச் சூழலில் வளர்ந்தவன் நான். எனக்கு தெரிந்து எண்பதுகளில், நம்ம ஊரில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் இருந்தது இல்லை. (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு கேக்குறீங்களா ?).  அதுவும் நடுத்தர வர்கத்தில் உள்ள ஒருத்தன் சுமாரா படிச்சிட்டு, கிரிக்கெட் மட்டும் விளையாடுறேன்னு சொன்னா வீடு கூட்டும் தொ. கட்டையை எடுத்து அடிக்க வருவாங்க. மற்றபடி ஓட்டப்பந்தயம், கால்பந்து, நீச்சல் போன்றவைகளுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

இங்கு அமெரிக்காவில் குழந்தைக்கு நடை பழக கற்றுகொடுப்பது போல சர்வ சாதாரணமாக நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஸ்விம்மிங் கற்று கொடுக்கிறார்கள். என் எட்டு வயது இளைய மகள், டைவிங் போர்டில் இருந்து குதித்து பதிமூன்று அடி ஆழத்தில் உள்ளே சென்று வெளியே வருவதை மகா ஆச்சர்யத்துடன் பார்த்துகொண்டு நிற்பேன். நமக்கு தெரிந்தது எல்லாம் கடப்பாரை நீச்சல் தான். கடப்பாரையை தண்ணீரில் போட்டால் கொஞ்ச தூரம் சென்று எப்படி நிற்குமோ அப்படி கொஞ்ச தூரம் நீந்தி பின் நின்று விடுவேன். என் உயரத்தைவிட அதிகமான ஆழத்திற்கு முடிந்த அளவு செல்ல மாட்டேன். அதுவும் சிறிய வயதில் நண்பர்கள் உதவியுடன் கற்றுக்கொண்டதால் தான் சாத்தியமாகியது. சிறு வயதில் ஒரு முறை, சென்னை நந்தனம் அருகே இருக்கும் YMCA வில் உள்ள ஸ்விம்மிங் பூல் செல்லலாம் என்று கூறியதற்கு, சாராமாரியாக பலரிடம் இருந்து வாங்கி கட்டிக்கொண்டது நினைவிற்கு வருகிறது. அப்படியும் திருட்டுதனமாக நண்பர்களுடன் சேர்ந்து அங்கு சென்று நீந்துவது ஒரு சுகமானா அனுபவம். அப்போது அங்கே அனுமதி கட்டணம், ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ என்று நினைக்கிறேன். ஸ்விம்மிங் பூல் உள்ளே சர்வ சாதாரணமாக நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டும் மோதிக்கொண்டும் நீச்சல் அடிப்போம்.  சென்னை , சைதாபேட்டையில் இருந்து டீச்சர்ஸ் காலேஜ், தாடண்டர் நகர் வழியாக (சில நேரங்களில் B கிரௌண்ட் வழியாக) YMCA -விற்கு  நடந்தே அங்கு செல்வோம். அப்போது அங்கு நிறைய சினிமா ஷூட்டிங் நடக்கும். ஒரு முறை கமல் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. படம் பெயர் வெற்றிவிழாவா அல்லது சூரசம்ஹாரமா என்று சரியாக நினைவில்லை. அநேகமாக வெற்றிவிழாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன். கமலை மிக அருகில் பார்த்த நானும் என் நண்பர்களும் ரொம்ப குஷியாகிவிட்டோம். ஆனால் கிட்டே போய் பேச பயம். அப்போது கமல் வேறு பயங்கரமா எக்சர்சைஸ் பண்ணி ஆர்ம்ஸ் ரெண்டையும், எங்களில் பலருக்கு அப்போதிருந்த தொடை சைஸ் -க்கு வைத்திருந்தார். குறைந்த பட்சம் ஒரு ஆட்டோகிராப் வாங்கலாம் என்று நினைக்கும் போது, கையில் பேப்பர் பேனா எதுவும் இல்லை. ஆமா ஸ்சூலுக்கு படிக்க போகும்போதே பேப்பர் பேனா கொண்டு போகாதவனுங்க, ஸ்விம்மிங் பூல் போகும் போதா கொண்டு போவோம். அப்படி இப்படி என்று பேப்பர், பேனா எல்லாம் யார்கிட்டயோ தேத்தி, கமல் கிட்டே போநூறு கலாம்னு பார்த்தா, அவர் ஒரு வேனில் உட்கார்ந்து சுவாரசியமாக பூரி மசாலை உள்ளே தள்ளிகொண்டிருந்தார். சரி, அவரை ப்ரீயா விட்டுரலாம்னு எங்களுக்குள்ளேயே பெருந்தன்மையா முடிவெடுத்து, அருகில் வெண்ணிற ஆடை மூர்த்தியை வைத்து படமாக்கிக் கொண்டிருந்த ஒரு உப்பு சப்பு இல்லாத காட்சியை பார்த்துவிட்டு நகர்ந்தோம். 

இப்படி அப்பப்ப போய் நீச்சல் கத்துகிட்டு வந்தோம். ஆனால் அதற்கும் சில நாட்களில் வேட்டு வந்துவிட்டது. ஒரு நாள் நீச்சல் அடிச்சிட்டு திரும்பி வரும் போது வழக்கமா தண்ணீர் குடிக்கும் குழாயில் தண்ணீர் குடித்து பின்னர் அருகில் இருந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, செந்தில்னு ஒருத்தன் ரஜினி மாதிரி இந்த விழுதுலே தொங்கி ஆடலாமனு கேட்டான் (பத்தவெச்சுட்டியே பரட்டை!). அப்போ வேற டிவியில் அடிக்கடி போடுற 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினி ஒரு பாட்டில் கௌபாய் மாதிரி உடையில் ஆலமரத்துக்கு கீழே குதிரையில் வந்துட்டே இருப்பார். குதிரையில் வேகமாக வரும்போதே அப்படியே தாவி ஆலமர விழுதை பிடிப்பார். குதிரை பாட்டுக்கு முன்னாடி போயிரும். ரஜினியோ அப்பிடியே கொஞ்ச தூரம் தொங்கியபடி முன்னாடி போய் நேரா குதிரை மேலே உட்காருவார். எப்டி போறான் பார்றா என்று நாங்கள் நண்பர்கள் சிலாகிதுக்கொள்வோம். ரஜினி கமலுக்கு எல்லாம் அவர் இவர் என்று மரியாதை கொடுத்து நாங்கள் தள்ளி வைத்ததில்லை. எம்ஜியார் சிவாஜி என்றால் மரியாதை கொடுத்து பேசுவோம். இந்தப் பய ஆலமர விழுதிலே ஆடலாம்னு சொன்னதும் எனக்கு அந்தக் காட்சி நியாபகம் வந்தது. உடனே நான் முதல்லே பண்றேன்னு ஒரு நான்கடி உயர சிறிய சுவற்றின் மேல் இருந்து குதித்து ஆலமர விழுதை பிடித்து ஆட நினைத்தேன். அதையெல்லாம் விட ரிஸ்கான கில்லி தாண்டு, பம்பரம், கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டை ஆடும் எங்களுக்கு அது ஒரு ஜுஜுபி -யாக அந்த நேரத்தில் தோன்றியது.  சரி என்று முதல் ஆளாக சுவற்றில் ஏறினேன், தாவி விழுதை பிடித்தேன். நான்கைந்து முறை விழுதில் ஆடிவிட்டு கீழே குதித்து நின்று விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்...

ஓட்டம் தொடரும்...




Wednesday, January 2, 2013

நடுவுல கொஞ்சம் நினைவுகளைக் காணோம்





முன் குறிப்பு: சமீபத்தில் சுஜாதாவின் பேசும் பொம்மைகள் நாவலை எடுத்துப் படித்தேன். அதைப் படித்ததின் தாக்கத்தினால் உருவான கதை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். கொஞ்சம் கேட்சிங்கா இருக்கட்டுமேனு நடுவுல கொஞ்சம் நினைவுகளைக் காணோம்னு தலைப்பு வைத்திருக்கிறேன். இனி கதைக்குச் செல்வோம்.


சென்னை. டிசம்பர், 19, 2405

அமாம் டாக்டர், நரேஷ் பற்றிய அத்தனை நினைவுகளையும் என்னிடம் இருந்து அழித்து விடுங்கள்.

டாக்டர் மாசிலாமணி கண்ணாடி மேஜைக்கு பின்னாலிருந்து, தீர்க்கமாய் அவன் முகத்தை சில வினாடிகள் பார்த்தார்.

'குமார், பொதுவா நான் ஒரு பேஷன்ட் பத்தி தகவல்களை அடுத்தவங்களுக்கு சொல்ல மாட்டேன். ஆனாலும், உங்களுக்காக...'

'நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியும் டாக்டர். நரேஷ் போன வாரம் உங்க கிட்டே வந்து என் நினைவுகளை அழிச்சது தெரிஞ்சுதான் வந்திருக்கேன். ஒரு சில பிரச்சனைகளாலே நாங்க கொஞ்ச நாள் பேசாமே இருந்தோம். ஆனா அவன் இந்த அளவுக்கு போவான்னு நான் நினைக்கலே. ப்ளீஸ் டாக்டர், நரேஷின் நினைவுகளை என்னிடம் இருந்து அழித்து விடுங்கள்.'

'நல்லா யோசனை பண்ணிதான் சொல்றீங்களா குமார். இந்த காலத்து யங்ஸ்டர்ஸ் தொட்டதுக்கெல்லாம் நினைவுகளை அழிக்கும் முடிவுக்கு வந்துடுறாங்க. கடந்த நானூறு வருடங்களில் நாம் ந்யுரோ சயின்சில் எவ்வளவோ முன்னேறிட்டோம். ஆனாலும் நினைவுகளை அழிப்பது கொஞ்சம் ரிஸ்கான மேட்டர் தான். நரேஷின் நினைவுகளை அழிப்பதால் அதனுடன் சேர்ந்த மற்ற முக்கிய நினைவுகளும் அழிந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன். நரேஷ் உங்களுக்கு சின்ன வயசில் கூட்டல் கழித்தல் சொல்லி கொடுத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நரேஷின் நினைவுகளை உங்களிடம் இருந்து அழித்தால், உங்களுக்கு கூட்டல், கழித்தல் கூட மறந்து போகலாம். சிலருக்கு இதனால் மனநிலை பாதிக்கும் நிலைமை கூட ஏற்பட்டிருக்கிறது. நீங்க வேணும்னா ரெண்டு நாள் யோசிச்சி முடிவு பண்ணுங்க. '

'அதுக்கு அவசியமில்லை டாக்டர். நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். அவன் கூட என்னாலே இனிமேல் சேர முடியாது. தவிரவும் அவன் என் நினைவுகளை அழித்துவிட்டான். இனிமேல் நரேஷின் நினைவுகளுடன் வாழ்வது எனக்கு நரகம் போல இருக்கு. ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க.'

'ஓகே, ஒரு சின்ன டெஸ்ட் எடுத்துட்டு ப்ரோசீஜரை ஸ்டார்ட் பண்ணிரலாம். உங்க தலையிலே பின்னாடி ஒரு மைக்ரோ இன்சீஷன் போட்டு சின்ன கம்ப்யூட்டர் சிப் அனுப்புவோம். அது உள்ளே சென்றதும் நரேஷின் நினைவுகளை அழிக்க இந்தக் கம்புயுடரில் இருந்து கட்டளைகள் செலுத்துவோம்.. இதில் முக்கியமானது என்னவென்றால், நான் ஸ்டார்ட் சொன்னதும் முதல் 5 வினாடிகள் நீங்கள் நரேஷை பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். உங்களிடம் நரேஷின் போட்டோ எதாவது இருந்தால் அதைப் பார்த்தபடி இருந்தால் கூட போதும்.'

'அவன் போட்டோ என் போன்லே இருக்கு டாக்டர். '

'ஓகே, கொஞ்சம் சாய்ந்து ரிலாக்ஸா உட்காருங்கள், கண்களை மூடிக்கொள்ளுங்கள். ஒரு சின்ன டெஸ்ட் எடுக்கணும். ஐந்து நிமிடத்தில் நீங்கள் இந்த ப்ரோசீஜரை தாங்குவீர்களா என்று இந்தக் கம்புயுடர் சொல்லிவிடும். '

ப்ளீஸ் வெயிட் என்றபடி பரபரவென்று குமாரின் உடலெங்கும் சில ஒயர்களை மாட்டுவதில் மும்முரமாக இருந்தார்.

வட்ட வடிவத்தில் இருந்த பெரிய ஊதா நிற பட்டனை டாக்டர் அழுத்திய சில நிமிடங்களில், கம்புயுடரில் பச்சை விளக்கு விட்டு விட்டு ஒளிர்ந்தது.

'குட், எல்லாம் ஓகே. நான் ஸ்டார்ட் சொன்னதும் நரேஷை நினைத்தபடி அவன் போட்டோவையும் பாருங்கள். அதன் பின்னர் உங்களுக்கு நரேஷின் அத்தனை நினைவுகளும் ஒவ்வொன்றாக வந்து பின்னர் அழிந்துவிடும். ஆர் யு ரெடி ?'

குமாரின் அடிவயிற்றில் ஒரு பயம் 'ஜிவ்வ்' வென்று ஏறியதைப் பொறுத்துகொண்டு, நடுங்கும் குரலில்... 'எ..ஸ், எஸ்...  ரெடி டாக்டர்' என்றான்.

'ஓகே, ரிலாக்ஸா இருங்க. ஸ்டார்டிங் நவ்', என்று சுவிட்சை ஆன் செய்தார்.

நரேஷின் போட்டோவை பார்த்து அவனை நினைத்தபடி இருந்த சில நொடிகளில், நரேஷை முதலில் பார்த்ததும் பேசிய வரிகள் நினைவுக்கு வந்தது.

'என்னமோ தெரியலே, உங்களை பார்த்த எதோ ரொம்ப நாள் பழகியது போல இருக்கு.'

'எனக்கும் அப்படிதான் தோணுது, ஐ ஆம் நரேஷ் என்று கையை நீட்டினான்'

பின்னர் நரேஷுடன் பழகியது, சினிமா பார்த்தது, ஒன்றாக சுற்றியது என்று ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்து அழிந்தது.

இரண்டு மணி நேரத்திற்கு பின், மெதுவா கண்ணை திறந்து பாருங்க என்று டாக்டரின் குரல் கேட்டது.

'குமார், எவரிதிங் வெண்ட் ஸ்மூத். உங்களுக்கு கொஞ்சம் டையர்டா இருக்கும். நீங்க இன்னும் ரெண்டு நாள் இங்கே தங்கி இருக்கணும். நல்லா ரெஸ்ட் எடுங்க. நீங்க டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போனதும், எதாவது வலி இருந்தால் உடனே கால் பண்ணுங்க.'

'தேங்க்ஸ் டாக்டர், ஒரு கொஸ்டின். நான் எதுக்காக இங்கே வந்தேன்னு சொல்ல முடியுமா. இங்கே வந்தது நினைவிருக்கு, எதுக்காக வந்தேன்னு தான் தெரியலே.'

ஹா ஹா ஹா, என்று எதோ பெரிய ஜோக்கை கேட்டது போல பலமாக சிரித்தார் டாக்டர் மாசிலாமணி.

'இங்கே வருகிற ஒவ்வொரு பேஷண்டும் இந்த ப்ரொசீஜர் முடிந்ததும் கேட்கிற கேள்விதான். நீங்கள் ஒரு விஷயத்தை உங்கள் நினைவில் இருந்து அழிப்பதற்காக வந்திருந்தீர்கள். சாரி குமார், இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அப்படிச் சொன்னால் உங்களுக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் உபயோகம் இல்லாமல் போய்விடும். இதைப்பற்றி நினைக்காமல் ஊட்டி இல்லை கொடைகானல் போய் ஒரு வாரம் ரெஸ்ட் எடுங்க. ஆல் தி பெஸ்ட்.'

'ஓகே, தேங்க்ஸ் ஆகைன் டாக்டர்.'

அடுத்த சில நாட்களில் ஊட்டியில் பொட்டானிகல் கார்டனில் நடந்து கொண்டிருக்கும் போது எதிரில் சிநேகமாக சிரித்த முகத்துடன் வந்தவனைப் பார்த்ததும் ஏனோ குமாருக்கு பேசத் தோன்றியது.

'ஹலோ, நீங்க யாருன்னு தெரியலே. ஆனா, உங்களை எங்கேயோ பார்த்து ரொம்ப நாள் பழகியது மாதிரி இருக்கு.'

'எனக்கும் அப்படிதான் தோணுது, ஐ ஆம் நரேஷ் என்று கையை நீட்டினான்.'


Tuesday, January 1, 2013

2013 புத்தாண்டு வாழ்த்துக்கள்





அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சென்ற வருடம் புத்தாண்டு அன்று, எழுத ஆரம்பித்து அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. பெரிசா எதுவும் இல்லாவிட்டாலும் ஐம்பது பதிவு எழுதிவிட்டேன் என்று எழுத முடிந்தது. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல, 2012-ல் மொத்த வருடத்திற்குமே ஐந்து பதிவுகள் தான் எழுத முடிந்தது. ஏன் என்று யோசித்து பார்த்தால் அலுவலக வேலை பளு, வீடு இடம் மாறியது, பிள்ளைகள் படிப்பு அது இது என்று பல காரணங்களை மனம் கூறி சமாதானம் செய்கிறது. எதோ ஒரு புத்தகத்தில் படித்த ஒரு வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. நீ ஒன்றை செய்ய வேண்டாம் என்று நினைத்து விட்டால், உன் மனம் அதற்கு சாதகமான ஆயிரம் காரணங்களை அடுக்கும். ஆனால் எழுத வேண்டாம் என்று நினைத்து எழுதாமல் இருந்ததில்லை. எழுத ஆரம்பித்து முடிக்க முடியாமல் டிராப்டில் பல பதிவுகள் உட்கார்ந்து இருகின்றன. ஏனோ சரிவர நேரத்தை ஒதுக்கி எழுத முடியவில்லை. மேலும் 2012 -ல் வெற்றிகரமாக ஒரு முழு மாரத்தான் ஓடியதும் இதற்கு காரணமாக இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடம் கடுமையாக பயிற்சி எடுத்து அக்டோபர் மாதம் 26.2 மைல்கள் (42.2 கிலோமீட்டர்கள்) வெற்றிகரமாக ஓடினேன். அந்த அனுபவத்தை பற்றி பின்னர் விரிவாக ஒரு பதிவிடுகிறேன். இந்த வருடம் நிறைய தமிழ் புத்தகங்கள் படிக்க வேண்டும், நிறைய இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

தமிழில் பேசுவது எழுதவது குறைந்துவிட்டது, யாருக்கும் ழகரம் உச்சரிக்க வரவில்லை என்று இப்போது புலம்ப போவதில்லை. தமிழ் கூட பரவாயில்லை. நம் மக்கள் கையில் ஆங்கிலம் படும் பாடு இன்னும் மோசமாக இருக்கிறது. What = wat, This=dis, the=d, இப்படி அடுக்கிகொண்டே போகலாம். ஸ்பெல்லிங் தெரியாமல் தப்பாக அடிக்கிறானா, இல்லை ஸ்டைல் என்ற பேரில் இப்படி அடிக்கிறானா(ளா) என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பாரதி இருந்தால் இந்நேரம், ஆங்கிலம் இனி மெல்ல...என்று எழுதி இருப்பார். உங்களுக்கு இதை எப்படி நான் புரிய வைப்பேன். ஆங்...ஞாபகம் வந்துருச்சு. 'Going out, just made dress' - வெளிலே போறாங்களாம், இப்போதான் டிரஸ் பண்ணாங்களாம். கிண்டலுக்காக சொல்லவில்லை, ஒரு ஆதங்கத்தில் தான் சொல்கிறேன். இவர்கள் எல்லாம் படிக்காதவர்கள் ஒன்றும் இல்லை, பலர் டிகிரி முடித்து பன்னாட்டு நிறுவனங்களில் ஆங்கிலத்திலேயே பேசி வேலை செய்பவர்கள்.  அது சரி, இவ்வளவு வாய் கிழிய சொல்றியே, நீ என்ன பெரிய தமிழ் புலவனா, இங்கிலீஷ்லே எல்லாம் கரைச்சு குடிச்சிட்டியா என்று நீங்கள் கேட்கலாம். இல்லை நான் ஸ்பெஷல் இல்லை , அதே சாதா தோசை தான் (உபயம் BigFM RJ பாலாஜி). ஆறாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து, பின்னர் ஆங்கிலத்தில் படித்தேன். தமிழும், ஆங்கிலமும் தட்டு தடுமாறி தான் கற்றுகொண்டேன், கற்றுக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை ஓரளவிற்கு வார்த்தைகளை கொலை செய்யாமல் சரியாக உபயோகிக்கிறேன். இதை எல்லாம் இவர்களிடம் சொல்லவும் பயமாக இருக்கிறது. அப்படியே சொன்னாலும், எனக்கு எல்லாம் நல்லாத் தெரியுமே என்று பதிலடி கொடுகிறார்கள். ஒரு விஷயம் தெரியாமல் இருப்பது தவறில்லை, அது தெரியவில்லை என்றால் அதை உணர்ந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும் என்பது தான் நான் சொல்ல வரும் கருத்து. இப்படி அட்வைஸ் செய்வதையும் இந்த வருடம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பல வருட அமெரிக்க வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக மாறியிருக்கிறேன் என்றால் அது வெளிப்படையாக பேசுவது. நான் ஒரு இன்றோவேர்ட்/ அவ்வளவாக யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். அப்படி பேசினால் மனதில் நினைப்பதை முலாம் பூசாமல் வெளிப்படையாக சொல்லிவிடுவேன். இது நம்ம ஆட்களுக்கு பிடிக்கவில்லை. அதுவும் அவர்களின் நலனுக்காக சொல்வதுதான். உதாரணதிற்கு,  நீ ரொம்ப நாள் உயிர் வாழனும் என்றால், கண்டிப்பா டெய்லி உடற்பயிற்சி செய். இப்படி சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை. என்ன நல்ல நாள் அதுவுமா இவன் உயிரை பத்தி எல்லாம் பேசுறான் என்று நினைகிறார்கள். இப்படிதான் எதோ எழுத ஆரம்பித்து மனதை நிலைப்படுத்தாமல் என்னனமோ எழுதுவது வழக்கமாகிவிட்டது. மற்றபடி இந்த வருடம் நிறைய எழுத முயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Wednesday, August 22, 2012

முக்கோண நட்பு - சிறுகதை (மாதிரி)





ரொம்ப நாளா பதிவு எழுத வர முடியலை. வீட்டு வேலை, அலுவலக வேலை என பல காரணங்களை கூறி மனம் சமாதானம் செய்தாலும், எழுதுவது இல்லை, எழுதுவது இல்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு கோரஸ் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. பல நாட்களாக மனதில் அசை போட்டு கொண்டிருந்த ஒரு விஷயத்தை இன்று எழுதலாம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு கதை மாதிரி தான். முக்கோண காதல் மாதிரி, இது முக்கோண நட்பு. இது முழுக்க முழுக்க கற்பனை என்றெல்லாம் பொய் சொல்ல மனமில்லை. என் நண்பன் அவனுக்கு நிகழ்ந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டு என்னுடைய அபிப்ராயம் கேட்டான். அதை சற்று கற்பனை கலந்து உங்கள் முன் வைக்கிறேன். பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. நான் என்னுடைய கருத்தை அவனுக்கு சொல்லிவிட்டேன், ஆனால் நான் கூறிய கருத்து சரியா தவறா என்று தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள். உங்கள் கருத்து ஒரு நல்ல நட்பை சேர்த்து வைக்கும் வாய்ப்புள்ளது. இனி கதைக்கு செல்வோம்.

------------------------------

சென்னையில் வசிக்கும் சரவணனும், குமரனும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்கள் மட்டுமில்லாமல் இருவரின் மனைவிகளும் மேலும் நெருங்கிய சினேகிதிகள். இப்படி இரண்டு  குடும்பகளும் பல வருடங்களாகப் பழகி வந்தன. 

இப்படி இருக்கும் போது சரவணனின் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் மற்றொரு நண்பன் ராம் காலப்போக்கில் குமரனுக்கும் அறிமுகமாகிறான். புதிய நட்பு என்பதால் குமரன் மற்றும் ராம், தாங்கள் படித்த புத்தகங்கள், பின் நவீனத்துவம், இசை, பாடல்கள் என தங்களுக்குப் பிடித்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிக நேரம் தனியாக செலவழிப்பதைப் பார்த்த சரவணன் கொஞ்சம் எரிச்சல் அடைந்தான். ஒருநாள் குமரனிடம் சென்று...

குமரா, நீ இப்ப எல்லாம், ராம் கூட தான் ரொம்ப பேசுறே. எப்பவும் என்னை ஒதுக்கி வெச்சுட்டு, நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிட்டு இருக்கீங்க. 

டேய், அப்படி எல்லாம் இல்லடா. நானும் ராமும் இப்பதான் புதுசா பழகுறோம். ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் நிறைய தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு. இதுலே சீக்ரெட் எதுவும் இல்லே, நீயும் வந்து தாராளமா கலந்துக்கலாம்.

அந்தப் பிரச்சனை அதோடு முடிந்தது. அதன் பின்னர் சில மாதங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லாமல் சென்றது. இதற்கிடையில் ராமின் அலுவலகத்தில் வேலை மாற்றத்தினால் பெங்களூருக்கு குடும்பத்துடன் அடுத்த சில மாதங்களில் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சரவணன் செய்தான். அதனால் ராமும் சரவணனும் தனியாக அதிக நேரம் செலவு செய்ய நேர்ந்தது. இதைப் பற்றி அறிந்த குமரனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் அதை நேரடியாக சரவணனிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

ஆனால் ராமிடம் மட்டும், இப்பல்லாம் சரவணன் உன்னோட நேரத்தை நிறைய எடுத்துக்குறான். நீயும் நானும் பேசவே முடியறது இல்லே. ஞாயித்துகிழமை கூட உன்னாலே என்னை பாக்க வர முடியலே.

அதெல்லாம் ஒன்னும் இல்லே குமரா. உனக்கே தெரியும் பெங்களூர் மாத்தி போறதுனாலே வீட்டுல ஏகப்பட்ட வேலை. அதான் ஞாயித்துகிழமை பாக்க வர முடியறதில்லை.

என்னவோ சொல்ற, நீ பெங்களூர் கிளம்பி போனதும் அவன் என்கிட்டே தானே வருவான். என்னாலே எல்லாத்தையும் மறந்துட்டு உடனே பழக முடியாது. கொஞ்சம் டைம் ஆகும் என்றான் குமரன். 

இதைக்கேட்டு ராம் சற்று அதிர்ச்சி அடைந்தான். என்னடா இதே பிரச்சனை தானும் குமரனும் பழகுவதால் வந்தது. சரி நாம் இங்கிருந்து பெங்களூர் கிளம்பி விட்டால், இவர்கள் இருவரும் எப்படியும் ஓன்று சேர்ந்து விடுவார்கள். அதைத்தவிர ஏற்கனவே முன்பு இதேபோல் நடந்த பிரச்சனையை அவர்கள் இருவருமே பேசி தீர்த்துக் கொண்டார்கள். அப்படி இல்லாவிட்டாலும் இருவரின் மனைவிகளும் நெருங்கிய சினேகிதிகள், அவர்கள் பேசி சேர்த்து வைப்பார்கள். தானே கனியும் பழத்தை தடியை எடுத்து அடிப்பானேன். அவர்கள் இருவரும் பல வருடங்களாக பழகும் நண்பர்கள், இதில் நாம் தலையிட வேண்டாம் என்று நினைத்து சரவணனிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்து விட்டான்.

சில மாதங்களில் ராம் பெங்களூருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் சென்று விட்டான். அவ்வபோது தொலைபேசியில் இரு நண்பர்களிடமும் தொடர்பில் இருந்தான். குமரன் முன்பு கூறியதைப் போல சரவணனிடம் சற்று விலகியே இருந்தான். 

குமரன் ஏன் இப்படி இருக்கிறான் என்று குழம்பிய சரவணன், ஒரு நாள் தனியே சந்தித்து...

குமரா, அப்படி என்னதான் கோபம் என் மேலே, நீயா போன் பண்றதில்லை, நான் பேசினாலும் பட்டும் படாம தான் பேசுறே. என்ன ஆச்சு உனக்கு ?

நீயே யோசிச்சு பாரு, நீயும் ராமும் சேந்துகிட்டு என்னை ஒதுக்கி வெச்சீங்க. அன்னைக்கு ஒருநாள் அவனுக்கு நான் மெசேஜ் பண்ணினேன், அவன் உன் வீட்டுல இருக்கறதா எனக்கு ரிப்ளை பண்றான். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா இருக்கீங்க.

அதன் பின்னர் ஒருவழியாக சரவணனும் குமரனும்  ஏதேதோ பேசி சமாதானம் ஆகி விட்டார்கள்.  இப்போது பிரச்சனை என்னவென்றால் சரவணன் குமரன் இருவருமே ராமிடம் பேசுவதில்லை. சரவணனாவது அவ்வப்போது  தொடர்பு கொள்வான். ஏனோ தெரியவில்லை குமரன் சுத்தமாக ராமின் தொடர்பை துண்டித்து விட்டான். எப்படியும் காலபோக்கில் பேசுவார்கள் என்று காத்திருந்த ராம் ஒரு நாள் பொறுமை இழந்து சரவணனை அழைத்தான்.

சரவணா, என்னதான் அப்படி மனசில் நினைசிகிட்டு என்கிட்டே பேசாமே இருக்கே ?

குமரனுக்கு என்கிட்டே பிரச்சனைன்னு உனக்கு முன்னாடியே தெரியும் இல்லே, அதை ஏன் என்கிட்டே சொல்லலே. என்னை நீ நல்லா ஏமாத்திட்டே. என் வீட்டுல இருந்துட்டே அவனுக்கு மெசேஜ் பண்றே, என்கிட்டே சொல்ல கூட இல்லை. குமரன் என் மேலே கோவமா இருக்குறதை, என் கூடவே இருந்துகிட்டே எப்படி உன்னாலே மறைக்க முடிஞ்சது. உனக்கு முன்னாடியே நானும் குமரனும் பிரண்ட்ஸ், நாங்க சண்டை போட்டு பிரியறது உனக்கு சந்தோசம். அதான் என்கிட்டே சொல்லாம மறைச்சிட்டே என்று கத்தினான்.

இதைக் கேட்டதும் கண்களில் பொங்கிய அழுகையை அடக்கியபடி, அப்படி இல்லே சரவணா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா பிரண்ட்ஸ். நான் பெங்களூர் கிளம்பியதும், எப்படியும் நீங்க ஒன்னா சேர்ந்துருவீங்க. இதுலே நான் எதுக்கு நடுவுலே புகுந்து குட்டையை குழப்பனும்னு தான் சொல்லலே. நான் சொல்லாட்டியும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே பிரச்னை இருக்குனு நீங்க உணர்ந்து இருப்பீங்க. ஏற்கனவே இதுக்கு முன்னாடி வந்த பிரச்னையை நீங்களே தான் பேசி தீர்த்துகிட்டீங்க. அதே மாதிரி, இதையும்  நீங்களே எப்படியும் பேசி சால்வ் பண்ணுவீங்கனு தான் சொல்லலே. மத்தபடி நம்ம மூணு பேருமே எப்பவும் ஒன்னா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன்.

ஆனால், ராம் என்ன கூறியும் சரவணன் சமாதானம் ஆகவில்லை.

இப்பொழுது என் கேள்வி. 
  1. ராம் நிலையில் இருந்து பார்க்கும்போது, அவன் செய்தது சரியா அல்லது தவறா.
  2. கோபப்பட்டு பேசாமல் இருந்த குமரனிடம் நட்பு பாராட்டும் சரவணன், இதற்கு நடுவில் ஒரு பார்வையாளன் போல இருந்த ராமிடம் விலகி இருப்பது சரியா அல்லது தவறா.
  3. எந்தக் காரணமும் கூறாமல் குமரன் ராமிடம் விலகி இருப்பது சரியா அல்லது தவறா.
சரியா, தவறா என்று கூறி அது ஏன் என்று விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும். 


Monday, April 9, 2012

ஸ்கூல் - 55 வார்த்தை சிறுகதை


எனக்கு இந்த ஸ்சூலுக்கு போறது கொஞ்சம் கூட பிடிக்கலை. பாடம், பரீட்சை இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டாலே எரிச்சலா வருது. நாள் முழுக்க நாலு சுவர்களுக்கு மத்தியிலே உட்கார முடியலே.

இன்னிக்கு அப்பாவிடம் இதைப் பத்தி பேசிடனும் என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றேன். அப்பா...எனக்கு ஸ்சூலுக்கு போகவே பிடிக்கலே. பேசாமே, இந்த டீச்சர் வேலையை ரிசைன் பண்ணிட்டு எனக்கு பிடிச்ச மாதிரி பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்.



Sunday, March 11, 2012

அமெரிக்கர்களிடம் எனக்கு புரிந்த ஐந்து விஷயங்கள்




சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவர் எழுதி இருந்த 'அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்' என்று ஒரு பதிவைப் படித்தேன். சரி அவருக்கு எது பிடிக்கிறது எது பிடிக்கவில்லை என்பது அவரது உரிமை. சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமலிடம் ரசிகர் ஒருவர் மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேரடி போட்டியின் போது கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

சார், ஹேராம் படத்திலே கடைசி சில காட்சிகளில் எல்லாமே கருப்பு வெள்ளையில் காட்டியிருப்பீர்கள். ஆனால் அதில் ஒரு பக்கம் நெருப்பு எரியும் போது அதை மட்டும் கலரில் காட்டி இருப்பீர்கள். அது ஏன் என்று புரியவில்லை.

அதற்கு கமல் - நீங்கள் பிடிக்கலை என்று சொல்லாமல் புரியலை என்று சொல்லியதே நீங்கள் புதிதாகத் தெரிந்துகொள்ளத் தயாராக இருக்குறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. என்னுடைய சமூகக் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக தன்னுள் கனன்று கொண்டுருந்த கோபத்தை வெளிப்படுத்தவே அவ்வாறு காட்டினேன் என்கிற ரீதியில் பதில் சொல்லி இருப்பார்.

இங்கு கவனிக்க வேண்டியது ஒருவர் செய்வது நமக்கு பிடிக்கவில்லை என்பதை விட அவர் ஏன் அதை செய்கிறார் என்று அறிந்து கொண்டால் நம் அறிவும் வளரும் அந்த உறவில் சிக்கல் ஏற்பாடாமலும் இருக்கும். இது போல தனிப்பட்ட பதிவைப் பற்றி என் கருத்துக்களை நான் இதுவரை நேரடியாக எழுதியதில்லை. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிற என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இது. அந்த பதிவரின் கருத்துக்களை // அடைப்பிற்குள்ளும், என் புரிதலை அதற்கு கீழேயும் கொடுத்திருக்கிறேன்.


//# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.//

இதில் எதுவும் தவறு இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் குளிர் வாட்டும். அடிக்கடி சளி பிடிக்கும். அதனால் பள்ளிகளிலேயே முதலில் எப்படி மூக்கை சுத்தமாக சிந்தி அந்த நாப்கின்னை பத்திரமாக குப்பை தொட்டியில் போடுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இது மட்டும் இல்லை, குழந்தைகளுக்கு பள்ளிகளில் முதலில் படிப்பை விட அவர்கள் வாழும் சமுதாயத்தில் எப்படி ஒரு நல்ல குடிமகனாக நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தான் சொல்லிக் கொடுகிறார்கள். உதாரணதிற்கு எப்படி நன்றி சொல்வது, குளிருக்கு அணியும் கோட்டை எப்படி பத்திரமாக மாட்டுவது, ஒருவர் உதவி செய்தால் எப்படி நன்றி சொல்வது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பொது இடங்களில் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். நம்ம ஊரில் சாப்பிட்டுவிட்டு எல்லோர் முன்னிலையிலும் பெரிதாக ஏப்பம் விடுவதைப் போல் அமெரிக்கர்கள் செய்வதில்லை. அப்படியே மீறி ஏப்பம் வந்தாலும் கண்டிப்பாக மன்னிப்பு கேட்பார்கள். பொது இடங்களில் லஜ்ஜை இல்லாமல் சிறுநீர் கழிப்பதில்லை. நீங்களே யோசித்து பாருங்கள், சளி வந்தால் போகிற போக்கில் சாலையில் துப்புவதை விட, எந்த இடம் என்றாலும் நாப்கினை உபயோகித்து சிந்தி அதைக் குப்பைத் தொட்டியில் போடுவது மேல் இல்லையா.

//# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்போது மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.//

ஐயா ஓரிரு மாதத்திற்கு பின் அல்ல, குழந்தை பிறந்ததில் இருந்தே தனியாகத் தான் படுக்க வைப்பார்கள். இதற்கு காரணம் குழந்தையின் மீது உள்ள அக்கறையால் தான். குழந்தையை கூடப் படுக்க வைப்பதால் போர்வை மூடியோ அல்லது தலையணை மூடியோ மூச்சுத் திணறி அதன் உயிருக்கே ஆபத்து ஏற்ப்படும் வாய்ப்பு இருக்கிறது. நம்ம ஊரில் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைப்பதில்லையா, அது போல் தான் இங்கு தனியாக கிரிபில் படுக்க வைப்பது. குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் அதற்கு பாதுகாப்பு மற்றும் நோய் தொற்றும் ஏற்படுவதில்லை என்பதால் மருத்துவர்களும் இதையே பரிந்துறைக்கிறார்கள். இதை போய் ஐந்தறிவு ஆறறிவு பாசம் போன்றவற்றை சொல்லி குழப்பிக் கொள்ளகூடாது. குழந்தைகளைத் தனியாகப் படுக்கவைப்பதால் அவரகளுக்கு பாசம் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

//# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.//

பணம் இல்லாதாதால் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்ற நிலை எனக்குத் தெரிந்து எந்த அமெரிக்க குடிமகனுக்கும் வந்ததாக தெரியவில்லை. ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தால் தான் வைத்தியம் கிடைக்கும் என்றில்லை, அது இல்லாதவர்களுக்கும் பல இலவச முகாம்கள் இருக்கின்றன. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். மேலும் இது விவாதத்திற்குரிய தலைப்பு.

//# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).//

எல்லா ஊரையும் நாம் வாழ்ந்த வாழ்கையை வைத்து கணக்குப் போடக் கூடாது. அமெரிக்காவில் உள்ள எலும்பைத் துளைக்கும் குளிரில் ஒரு சொம்புத் தண்ணீரை எடுத்து ஊற்றினால் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து ஜன்னி வந்துவிடும் ஐயா. மேலும் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் மரத்தில் தான் கட்டியிருப்பார்கள். அதனால் நம்ம ஊரைப் போல் பாத்ரூமில் தண்ணீரை எல்லாம் ஊற்ற முடியாது. அப்படி ஊற்றினால் கிழே உள்ள தளத்தில் தண்ணீர் ஒழுகும் வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீர் உபயோகித்து நேரடியாக கழிவுகளைத் தொடாமல் பேப்பரை உபயோகித்து பின்னர் சோப்பு போட்டு கை கழுவுவதால் அதனால் நோய் ஏற்ப்படும் வாய்ப்பும் குறைவு.


//# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.//

அவர்களைப் பொறுத்தவரை தான் சரி என்று நினைப்பதை யோசிக்காமல் செய்வார்கள். ஐயோ நாம் இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதில்லை. என்னதான் நினைத்த நேரம் விவாகரத்து செய்து கொண்டாலும், திருமண வாழ்க்கையில் கணவனோ மனைவியோ வேறொரு நபரிடம் உறவு வைத்துக்கொள்வதை அனுமதிக்க மாட்டார்கள். கணவனோ மனைவியோ நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கும் போதே அடுத்த பெண்ணுடனோ, ஆடவனுடனோ உறவு வைத்துக் கொள்வதை விட பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துகொண்டு போவது எவ்வளவோ மேல். அமெரிக்காவில் இருதார மனம் எல்லாம் சட்டப்படி குற்றம். மேலும் பெண்கள் பொருளாதார ரீதியில் கணவனை சார்ந்து இருப்பதில்லை, அதனால் விவாகரத்து பெருகுகிறது. இப்போது இந்தியாவிலும் பெண்களின் பொருளாதார வளர்ச்சியால் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. அந்தக் காலத்தைப் போல கணவன் அடித்தாலும் உதைத்தாலும் தாங்கிக்கொண்டு குடும்பத்தை நடத்தும் நிலை இப்போது இல்லை என்பது என்னைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க விஷயம்.


Saturday, March 10, 2012

ஏன் சார் எழுதறதே இல்லை - 55 வார்த்தை சிறுகதை



என்ன சார், ரொம்ப நாளா புதுசா எதுவும் எழுதலே போல இருக்கு, என்ன ஆச்சு என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

அட நம்ப எழுதலேன்னு, இதே கேள்வியை நிறைய பேரு கேக்குறாங்களே என்கிற ஆச்சர்யம் தான்.

எங்கே சார், ஆபீஸ் வேலை ஏற்கனவே அதிகம், இப்போ ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. அதனாலே வேலை இன்னும் அதிகம். கண்டிப்பா எழுதுறேன்.

வீட்டிற்க்கு  வந்ததும்...எவன் கண்ணு பட்டுதோ ரெண்டு மாசமா எழுத முடியவில்லை என்று நினைத்தபடி தலைப்பை எழுதினேன் - தேவையற்ற  மூடநம்பிக்கைகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...