Monday, May 5, 2014

பட்டிமன்றப் படிப்பினை - பாகம் 1


சமீபத்தில் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் திரு ராஜா அவர்களின் தலைமையில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு பேசினேன். பட்டிமன்றத்தின் தலைப்பு வாழ்வில் பெரிதும் உதவுவது உறவா நட்பா ? இது எல்லா இடத்துலேயும் தொவச்சு போட்ட பழைய தலைப்பு தான். ஆனாலும் இங்கு பாஸ்டன் பகுதியில் நடக்கும் பல பட்டிமன்றங்களில் இந்தியாவா அமெரிக்காவா எது சிறந்தது  என்கிற ரீதியில் கேட்டு கேட்டு சலித்துப் போன காதுகளுக்கு இது சற்று வித்தியாசமான தலைப்பாகவே தோன்றியது.  பட்டிமன்றத்தில் பேசுகிறீர்களா என்று கேட்ட தமிழ் சங்கத் தலைவர் திரு ராஜ் வேல்முருகனிடம்,  கண்டிப்பா பேசுகிறேன், ஆனால் இந்தியாவா அமெரிக்காவா என்ற தலைப்பு இல்லாவிட்டால் உங்களுக்கு புண்ணியமா போகும் என்றேன். நான் சொன்னதால் அந்தத் தலைப்பு வைத்தார்களா இல்லை எதேச்சையாக வைத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் தலைப்பு எனக்கு பிடித்து இருந்தது.

எல்லா வேலைக்கும் மெசின் இந்த அமெரிக்க மண்ணில் இருந்தாலும் அந்தந்த வேலையை நாம் தான் செய்யவேண்டும்.  இது இங்கு வாழ்பவர்களுக்கு நன்றாகப் புரியும். அலுவலக வேலை, வீட்டு வேலை போக கிடைக்கும் நேரத்தில் பட்டிமன்றத்திற்கு ஒரு மூன்று வாரத்திற்கு முன்பே அவ்வபோது தலைப்பை பற்றி மனதில் அசைபோட்டபடி இருந்தேன். இப்போது இங்கு குளிர் கொஞ்சம் குறைந்திருப்பதால் சாலைகளில் ஓட ஆரம்பித்திருக்கிறேன். (குளிர் காலங்களில் டிரெட் மில்லிடம் சரணாகதி). தனியாக ஓடுவதில் ஒரு வசதி இருக்கிறது. யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் நமக்கு தேவையானதை யோசிக்க முயற்சி செய்து சில நேரங்களில் வெற்றி பெறலாம். மனம் ஒரு குரங்கு என்பது அந்த நேரத்தில் நன்றாக புரியும். ஆனாலும் ஓட்டத்தின் போது எழும் சிந்தனைகளை அவ்வபோது குறிப்பெடுத்துக் கொள்வேன். எங்கள் அணியில் இருந்த நான்கு பேரும் அவ்வபோது தொலைபேசியில் பேசி யார் என்ன பேசுகிறோம் என்று பகிர்ந்துகொண்டோம். ஒரே விஷயத்தை அணியில் நால்வருமே பேசக் கூடாது என்பதால் நாங்கள் பேசும் விஷயத்தின் சாரத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதனிடையில் ஒரு முறை நேரில் சந்தித்துக் கொண்டோம். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் நால்வருமே முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள். இந்தப் பட்டிமன்றத்திற்காக ஓன்று சேர்ந்தோம். ஆனால் சில தொலைபேசி பேச்சு மற்றும் ஒரு சந்திப்பில் எங்களிடையே ஒரு நல்ல நட்புணர்வு வந்து விட்டது. ஆனால் நங்கள் அனைவரும் வேறு வேறு அலைவரிசையில் சிந்தித்துக் கொண்டிருந்தோம். பல நேரங்களில் கார சாரமான விவாதங்கள் தொலைபேசியில் நிகழ்ந்தன. பல தகல்வல்களைப் பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொரு மனிதனிடமும் எவ்வளவு தகவல்கள், ஆச்சர்யங்கள் நமக்காக காத்திருகின்றன. ஆனால் அவை வெளியே வர வைக்க ஒரு கிரியா ஊக்கியாக ஒரு காரணம் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த பட்டிமன்றதால் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே. 

இந்த வரிகளை எழுதிகொண்டிருக்கும் போதே எதை நினைத்து இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தோம், இப்பொழுது என்ன எழுதிகொண்டிருக்கிறோம் என்று ஒரு எண்ணம் என் மனதில் ஓடிக் கொண்டிருகிறது. அது என் எழுத்தின் பலவீனமா அல்லது பலமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி பெரிதாக கவலைப் படவும் தோன்றவில்லை. சரி எதற்காக இந்தப் பதிவு என்று பார்ப்போம். அதற்கு இரண்டு காரணங்கள்.

முதல் காரணம், பட்டிமன்றத்தில் எனக்கு எதிரணியில் பேசிய ஒரு பெண்மணி. அவர் அனுமதி இல்லாமல் பெயரைக் குறிப்பிட எனக்கு மனம் வராததால் பெண்மணி என்று குறிப்பிடுகிறேன். எனக்கு ஏற்கனவே ஓரளவிற்கு அறிமுகம் ஆனவர் தான். இது போன்று ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொள்வோம். என்னைப் பார்த்ததும் என்ன நீங்க இப்போ எழுதறதே இல்லை என்று கேட்டார். பல நண்பர்கள் இதைப் போல சம்பிரதாயக் கேள்வி கேட்பார்கள். நானும் டைம் இல்லைங்க என்று ஒரு சப்பைக்கட்டு பதிலை சொல்லுவேன். இவரிடமும் அதே போல ஆமாங்க எழுதனும்னு மனதளவில் ஒருவித சலிப்போடு கூறினேன். ஆனால் அவர் நான் முக்கியமாகக் கருதும் ஒரு பதிவைப் பற்றி விலாவாரியாகக் கூறி, அதைப் படித்ததும் மிகவும் மனம் நெகிழ்ந்து விட்டதாகவும் கூறினார். அதற்கு மேல் அந்தப் பதிவில் வரும் ஒரு  நபரின் பெயரைக் குறிப்பிட்டதைக் கேட்டதும் நான் மனதளவில் வெட்கி தலை குனிந்தேன். இவ்வளவு நுணுக்கமாகப் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிறாரே என்று ஆச்சர்யமாக இருந்தது. இதை நான் எப்படி எழுதி இருக்கிறேன் பார் என்கிற சுய தம்பட்டம் அடிக்கும் தொனியில் கூறவில்லை. நான் எழுத்து என கூறிக்கொள்ளும் கிறுக்கல்களின் நிலை எனக்கு நன்றாத் தெரியும். ஆனால் என் கிறுக்கல்களை வலை உலகின் முன் சமர்பிக்கும் போது அது எங்கோ யாரையோ சென்றடைந்து ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் மனதை அசைக்கிறது என்பதை நினைக்கும் போது ஒரு நெகிழ்வான உணர்வு ஏற்படுகிறது. அந்தப் பெண்மணிக்கு நன்றி. முடிந்த அளவு நிறைய எழுகிறேன் அம்மா. 

இரண்டாவது காரணம்...அடுத்தப் பதிவில் தொடரும்....






















வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது உறவா நட்பா - பட்டிமன்ற பேச்சின் காணொளி

வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது உறவா நட்பா - பட்டிமன்ற பேச்சின் காணொளி





Friday, January 3, 2014

மனம்

விரும்பியவர் இழைத்த பெரும் தவறையும்
வினாடியில் மறக்கும் மனதின் முன்
விருப்பம் அல்லாதாரின் சிறு தவறும்
பெரும் குரலெடுத்து ஒலிப்பது ஏன் ?
மனம் என்ன ஒரு குரங்கா ?
இல்லை மரக்கிழைகள் தாவும் குரங்கும்
உறவுக்கிழைகள் முறிக்கும் மனித மனமும்
ஒன்றல்ல.



 

Monday, November 4, 2013

அக்கா எங்களையும் போட்டோ எடுக்குறியா

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த போது, ஆடி பெருக்கிற்கு குடும்பத்துடன் பவானி சென்று விட்டு கொடிவேரி அணை செல்லலாம் என்று காலையில் அவரசரமாக கிளம்பிக் கொண்டிருந்தோம். அப்போது பெரியவள் அகிலா என்னிடம் வந்து டாடி, இன்னைக்கு நான் போட்டோ எல்லாம் எடுக்கட்டுமா என்று கேட்டாள்.

என்றைக்கும் இல்லாத அதிசயமாக, இது போன்ற கமிட்மெண்டில் எல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாத அகிலா அப்படி கேட்டதும், என் ஆச்சர்யத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று காமிராவை தூக்கி அவள் கையில் ஒப்படைத்தேன்.
அவள் எடுத்த புகைப்படங்கள் மிகவும் நன்றாக வந்திருந்தன.  அதுவும் பொதுவாக நாம் சாதரணமாக கொஞ்சம் கூட சட்டை செய்யாத பல விஷயங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது ஆச்சர்யமாக இருந்தது. அதில் முக்கியமான ஓன்று கொடிவேரி அணையில் சிறு பொம்மைகள் மற்றும் மருதாணி அச்சு போன்றவற்றை விற்பவர்களை படம் எடுத்தது. முதலில் சிறு பொம்மைகள் விற்கும் ஒரு கடையை புகைப்படம் எடுத்தாள். அதை எடுத்துவிட்டு அருகில் இருந்த அச்சுகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு புகைபடம் எடுத்துக் கொண்டிருந்தாள். உடனே அந்தக் கடைகாரர் பாப்பா ஒரு நிமிஷம், நானும் உட்காந்துக்குறேன், என்னையும் போட்டோ எடுக்கமுடியுமா என்று தயங்கிய படி கேட்டார். உடனே அவர் போஸ் கொடுக்க தயாராகிவிட, அவரையும் சேர்த்து அவர் கடையை புகைப்படம் எடுத்தாள். அங்கு அவர்  விளையாடிகொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் இதைப் பார்த்தவுடன் அக்கா, அக்கா எங்களையும் போட்டோ எடுக்கிறியா என்று ஓடி வந்தனர். அவர்களை நிற்க வைத்து எல்லோரும் சிரிங்கனு சொல்லி புகைப்படம் எடுத்தாள். அதை எடுத்து காமிராவின் திரையில் அவர்களுக்கு காட்டியதும், அவர்கள் புன்னகை போஸ் கொடுக்கும் போது இருந்ததை விட ஆயிரம் மடங்கு விரிந்தது. நாம் என்று வாழ்கையில் சர்வ சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தின் மூலம் அவர்களின் மனதில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் புகைப் படங்களை கீழே காணலாம்.




Sunday, July 28, 2013

பாக்யா செய்தது சரியா

சுஜாதா அவர்களின் ஐம்பத்தைந்து வார்த்தைகள் கொண்ட ஈர்ப்பால் நானும் எனக்கு தோன்றுவதை கதை என்று கூறிக்கொண்டு, அவ்வப்போது என்னுடைய வலைத்தளத்தில் எழுதுவேன். நேற்று கோவை கிராஸ்கட் ரோட்டில் நடந்துகொண்டிருக்கும் போது, ஒரு பெட்டிக்கடையில் தொங்கிகொண்டிருந்த ஆனந்த விகடன் புத்தகத்தில் 'ஹன்சிகாவை காதலிக்கிறேன், எங்கள் திருமணம் நிச்சயம் - இது சிம்பு சிக்ஸர்' என்ற அட்டைப் படத்தை பார்த்து ஒரு ஆனந்த விகடன், குமுதம் மற்றும் பாக்யாவை வாங்கினேன். எப்போதும் பாக்யாவை வாங்காத நான் ஏதோ தோன்றியதால் அன்று வாங்கினேன். வீட்டிற்க்கு வந்ததும் ஆனந்த விகடன் மற்றும் குமுதத்தை படித்துவிட்டு பாக்யாவை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். நேற்று இரவு தூக்கம் வராமல் பாக்யாவை புரட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு கதை எங்கேயோ படித்து போல இருந்தது. மேலும் சிலவரிகள் படித்ததும், அடப்பாவிங்களா இது நான் 2011-ல் என்னுடைய வலைத்தளத்தில் எழுதிய கதை என்று உரக்க கூறியபடி படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தேன். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அந்த இரு கதைகளுக்கு அடியில் என் பெயரைப் போட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து யாரும் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. அட்லீஸ்ட் ஒரு ஈமெயில் அல்லது கமெண்ட் போட்டு, இது போல உங்கள் கதையை பிரசுரிக்க போகிறோம் என்று கூறியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். நம்ம எழுதியதை எல்லாம் கதைன்னு மதிச்சு பாக்யாவில் போட்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இது போல தெரியாமல் எத்தனை கதைகள் அச்சில் வந்திருகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் பெரிதாக எதுவும் டிஸ்க்ளைமர் எல்லாம் என் வலைத்தளத்தில் போடாததால், பாக்யா செய்தது சரியா தவறா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் கதைகள் பிரசுரமானது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதைகளில் வலைதள முகவரிகளையும், பாக்யாவில் வந்த பாகத்தையும் கீழே காணலாம்.

http://iniyaulavaaga.blogspot.in/2011/11/55.html
http://iniyaulavaaga.blogspot.in/2011/08/55.html




பருவம்



மகளுடம் சேர்ந்து சாலையில் நடக்கும் நேரத்தில்
அடிக்கடி திரும்பிப் பார்க்கும் சாலையோரத்து இளைஞர்கள்
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை உணர்த்துகிறார்கள்.




மரியான் - விமர்சனம் அல்ல

மரியான் படத்திற்கு ஆன்லைனில் புக் செய்துவிட்டு டிக்கெட்டை பெற்றுக்கொள்ள கவுன்டரில் நின்று கொண்டிருந்த நேரத்தில் அருகில் இன்னொரு கவுன்டரில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தன் மனைவியிடம் மரியான் டிக்கெட் இருக்காம், எடுத்துரட்டுமா என்று கேட்டுகொண்டிருந்தார். அதற்கு அவர் பின்னால் காக்கி சட்டை போட்டு (ஆட்டோ டிரைவராக இருக்கலாம்) நின்றுகொண்டிருந்த ஒருவர் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, சார் மரியான் வேண்டாம், அதுக்கு நீங்க சிங்கம் II இல்லைனா பட்டத்துயானை பார்க்கலாம் என்று கூறி எனக்கு பீதியை கிளப்பி விட்டார். சரி டிக்கெட்எடுத்தாகிவிட்டது, போய் பார்த்து விடுவோம் என்று மனதை தேற்றிக்கொண்டு சென்று தியேட்டரில் அமர்ந்தோம். படம் பார்த்துகொண்டிருக்கும் போது சிறிது நேரத்திலேயே அந்த காக்கி சட்டைக்காரரை மானசீகமாக இந்தப் படம் ஏன் சார் உங்களுக்கு பிடிக்கல என்று கேட்டேன். தனுஷ் நடிப்பு, ரஹ்மான் இசை, காமிரா, டைரக்க்ஷன் என்று எல்லாமே என்னைப் பொறுத்தவரை நன்றாகத் தான் இருந்தது. இடைவேளைக்கு அப்புறம் சிறிது மெதுவாக சென்றாலும் ரசிக்கும்படி இருந்தது. அதுவும் பசியில் பிடியில் இருக்கும் நேரத்தில் கற்பனையில் விருந்து சாப்பிடுவது சிம்ப்லி அமேசிங். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் சிரிக்கும் மக்களைப் பார்த்து, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா என்று எழுந்து நின்று கத்தத் தோன்றியது. அதைத் தவிர பனிமலரிடம் தனுஷ் தொலைபேசியில் பேசும் காட்சி மற்றும் பாலைவனத்தில் சிறுத்தை சுற்றிவரும் காட்சிகளில் தனுஷின் நடிப்பு அற்புதம்.

இந்த வாரம் என்ன வி.ஐ.பி வாரமா என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னாள் வைகோவிடம் பேசினேன். இப்போது மரியான் படம் பார்த்து வெளியில் வரும்போது படத்தின் இயக்குனர் பரத்பாலா, அந்த மாலில் உள்ள ஒரு உணவகத்தில் எதோ வாங்கிகொண்டு நின்றிருந்தார். அவரிடம் சென்று இப்போது தான் படம் பார்த்துவிட்டு வருகிறோம், படம் நன்றாக இருந்தது என்று கூறியதும் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை காண முடிந்தது. அவரே ஆவலாக பாட்டு எல்லாம் எப்படி இருந்தது என்றும் கேட்டார். அவர் அவசரமாக விமான நிலையம் சென்று கொண்டிருப்பதாக சொன்னதால், அவரை தாமதப்படுத்தாமல் வேகமாக ஒரு புகைப்படம் எடுத்துகொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...