Tuesday, May 24, 2011

துரோக சங்கிலி - சிறுகதை


இது சிறுகதை கிடையாது. ஆனா சிறுகதை மாதிரி....என்ன ரொம்ப குழப்பமா இருக்கா. எனக்கு கதை மாதிரி தோன்றி சில நிகழ்வுகளை இங்கு எழுதி இருக்கிறேன். படித்திவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

இனி இதோ துரோக சங்கிலி உங்கள் பார்வைக்கு.....
-------------------------------------------------------------
தருண், காலேஜ்லே படிக்கும் போது உன்னை காதலிச்சது என்னமோ உண்மை தான். இப்போ எனக்கு கல்யாணம் ஆயிருச்சு. இப்படி அடிக்கடி மீட் பண்ணி என்னை டார்ச்சர் பண்ணாதே. என்னோட அப்பா அம்மா கட்டாயத்தினாலதான் அவங்க சொன்னவரை கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என் மேலே உயிரையே வெச்சு இருக்குற அவருக்கு நான் உண்மையா இருக்கேன். என்னோட ஹஸ்பண்டுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தாங்கமாட்டார். என்னை இப்படி  கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை பண்ணாதே. உனக்கு மொத்தமா எவ்வளவு பணம் வேணுமோ சொல்லு, எப்படியாவது நான் கொடுக்குறேன்.

அதை கேட்டு தருண் கடகடவென்று சிரித்தான். ப்ரியா நீ ஒரு தங்க முட்டை போடுற வாத்து, உன்கிட்டே அப்பப்போ வந்து எனக்கு தேவையானதை வாங்கிட்டு போறது தான் எனக்கு பிடிச்சிருக்கு, இப்படி ஒரே பேமன்ட் கொடுத்து என்னை கழட்டி விட பாக்காதே.

ப்ளீஸ் தருண், என்னாலே ஒவ்வொரு தடவையும் எதாவது பொய் சொல்லி பணம் கேக்க முடியாது.  என்னோட வாழ்கையை கெடுக்காதே. என்னை தயவு செஞ்சு விட்டுரு.

இதோ பாரு ப்ரியா,  இந்த பணத்துக்கும் வசதிக்கும் ஆசைப்பட்டு தானே என்னோட காதலை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போனே, என்னை விட்டுட்டு போகதேன்னு உன்னை நான் எவ்வளவு கெஞ்சினேன். நீ மட்டும் எனக்கு கிடைச்சு இருந்தா, எனக்கும் ஒரு  குடும்பம் வாழ்க்கைன்னு இருந்திருக்கும். நீ எப்போ உங்க வீட்டுல பாத்த பணக்கார மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்க படிப்பை பாதில நிறுத்திட்டு போனியோ அன்னிக்கே என்னோட படிப்பும் போச்சு. படிப்பு இல்லாம ஒரு நல்ல வேலை இல்லாம,  இன்னிக்கு நான் இந்த நிலைமைலே நிக்கறதுக்கு நீயும் ஒரு காரணம். உன் புருஷனுக்கு தான் கோடி கோடியா சொத்து இருக்கே, அதுலே இருந்து எனக்கு தேவை படும்போது கொஞ்சம் பணம் கொடுகறதுலே நீ ஒன்னும் குறைஞ்சு போக  மாட்டே. அப்பிடி குடுக்கலேனா  நாம எடுத்துகிட்ட போட்டோஸ், லெட்டர் எல்லாம் உன் புருசனுக்கு அனுப்பிருவேன்.  அதான் எப்பவும் பாதுகாப்பா அதை எல்லாம்  என் கையிலேயே வெச்சுட்டு சுத்துறேன் என்று போட்டோஸ், லெட்டர் அடங்கிய  கவரை எடுத்து ப்ரியாவின் முன்னே ஆட்டினான்.
அய்யோ தருண், அப்பிடி எல்லாம் பண்ணிடாதே,  இந்தா இப்போதைக்கு இதை வச்சுக்கோ, என் ஹஸ்பண்ட் வர நேரம் ஆச்சு, நீ சீக்கிரம் கிளம்பு என்று அவசரமாக கூறினாள் ப்ரியா.

என்ன ப்ரியா, நாம லவ் பண்ணும்போது என் கூடவே இருக்கணும்னு சொல்லுவே, இப்போ இப்படி துரத்துறியே, சரி நான் அப்புறமா உன்கிட்டே போன்லே பேசுறேன் என்று கூறி கதவருகே சென்றதும், அந்த ஆட்டோமாடிக்  டோர் வெளியில் இருந்து யாரோ சாவி போட்டு திருகியதால் ப்ளக் என்று ஓபன் ஆனது.

அடுத்த வினாடி உள்ளே நுழைந்தவனை பார்த்து பிரியா அவசரமாக, எ..எ...என்னங்க சீக்கிரம் வேலை முடிஞ்சிருச்சா, அதுக்குள்ளே வந்துடீங்க, இது என்னோட காலேஜ்லே கூட படிச்ச தருண் என்று அறிமுகப்படுத்தினாள்.

போதும் நிறுத்து பிரியா, இவ்வளவு நேரம் வெளிலே இருந்து நீங்க பேசிட்டு இருந்ததை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன். இந்த விஷயத்தை  என்கிட்டே முன்னாடியே ஏன் நீ சொல்லலே, இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விட கூடாது. டேய் யாருக்கு தாண்டா பழைய காதல் இல்லை. நீ உண்மையா ப்ரியாவை காதலிச்சு இருந்தீனா இப்படி அவளை தொல்லை பண்ணுவியா. மரியாதையா அந்த போட்டோஸ், லெட்டர் எல்லாத்தையும் கொடுத்துட்டு இங்கே இருந்து போயிரு, என்று கூறியபடி தன் கைபெட்டியில் இருந்து துப்பாக்கியை எடுத்து தருண் முகத்துக்கு நேரே நீட்டினான்.

பயத்தில் தருணின் முகம் வெளிறியது, சார் சார், ஒன்னும் பண்ணிடாதீங்க, இந்தாங்க எல்லாத்தையும் நீங்களே வெச்சுக்கோங்க, நான் இங்கே இருந்து போய்டுறேன் என்று தன் கையில் இருந்த கவரை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு விறுவிறுவென்று  திரும்பி பார்க்காமல் வெளியில் சென்றான்.

தருண் வெளியே சென்றதும் பெரிதாக புன்னகைத்த பிரியா, இப்ப தான் நிம்மதியா இருக்கு கிஷோர். எப்படி இந்த தருண் கிட்டே இருந்து தப்பிபோம்னு ஒரே கவலைலே இருந்தேன். நல்ல வேலை நம்ம பிளான் பண்ணினா மாதிரி, அவர் பிசினஸ் விஷயமா வெளிநாடு போய் இருக்குற நேரத்துல,  நீ  என் ஹஸ்பண்ட் மாதிரி நடிச்சு அவன் கிட்டே இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டே. அந்த கவரை இங்கே கொடு நான் கிழிச்சு போடுறேன்.

இல்லை பிரியா, இதை வீட்டுகுள்ளேயே வெச்சு கிழிச்சு போடுறது அவ்வளவு சேப் கிடையாது. நான் கொண்டு போய் வெளிலே எங்காவது டிஸ்போஸ் பண்ணிடுறேன். நீ போய் ரெஸ்ட் எடு என்று கூறியபடி ப்ரியாவை மேலும் ஏதும் பேசமுடியாதபடி அங்கிருந்து கிளம்பினான் கிஷோர்.

அவன் சென்றதும், அப்பாடி இனிமேல் இந்த தருண் தொல்லை இருக்காது என்று ஒரு பெருமூச்சுடன் படுக்கையில் விழுந்தாள். இந்த கிஷோர் பரவாயில்லை, சின்ன வயசிலே இருந்து பக்கத்துக்கு வீட்டுலே ஒண்ணா வளர்ந்ததாலே கூட பொறந்தவன் மாதிரி, எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாம இவ்ளோ பெரிய ஹெல்ப் செஞ்சு இருக்கான். அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அனுப்பிட்டேன் என்று ஏதேதோ நினைத்தபடி தூங்கினாள்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து காலை உணவு சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்து ஒரு துண்டு இட்லியை வாயில் எடுத்து போட்டவுடன் அருகில் இருந்த செல்போன் அடித்தது. போனை எடுத்தும் மறுமுனையில் கிஷோர் குரல் கேட்டது.

ஹலோ பிரியா, நான் கிஷோர் பேசுறேன், நேத்து தருண் கிட்டே இருந்து வாங்கின கவரை டிஸ்போஸ் பண்ணலாம்னு தான் போனேன், ஆனா எனக்கு உன்னோட உதவி கொஞ்சம் தேவைப்படுது, அதனாலே எதுக்கும் இருக்கட்டுமேனு நானே அதை வெச்சு இருக்கேன். எனக்கு பணம் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம், அப்புறமா வேணும்னா கேட்டு வாங்கிக்குறேன்.  ஆனா இப்போ உங்க வீட்டுகாரரோட கம்பெனிலே ஒரு நல்ல வேலை வாங்கி கொடுத்துரு. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. ஒரு நல்ல வேலைலே இருந்தாதானே எனக்கும் கொஞ்சம் மதிப்பா இருக்கும்.  நான் ஈவ்னிங் வந்து நேர்லே மீட் பண்ணி விவரமா சொல்றேன் என்று போனை வைத்தான். அதை கேட்டவுடன் வாயில் போட்ட இட்லியை முழுங்காமல் விக்கித்து அமர்ந்திருந்தாள் பிரியா. ச்சே இந்த கிஷோரை நல்லவன்னு நெனைச்சோம், எவ்ளோ நம்பினோம், இப்படி பண்ணிட்டானே. வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் தான் பல பேரு நல்லவங்களா இருக்காங்க. இனிமேல் அவ்வளவு சீக்கிரத்துலே யாரையும் நம்ப கூடாது. சிறிது நேரத்தில் ஏதோ முடிவுக்கு வந்தவளாக செல்போனை எடுத்து தன் கணவனை அழைத்தாள். என்னங்க நீங்க இன்னிக்கே கிளம்பி இங்கே வர முடியுமா, நான் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயத்தை பேசணும்.

ஒ என்ன பிரியா இது, சின்ன குழந்தை மாதிரி சொல்றே. நான் இன்னும் ரெண்டு நாள் இங்கே தாய்லாந்த்லே இருக்கணும், நிறைய முக்கியமான வேலைங்க இருக்கு என்றான் நீச்சல் குளத்தில் இரண்டு அழகிகளின் அணைப்பில் இருந்தபடி செல்போனில் பேசிய ப்ரியாவின் கணவன்.

-------------------------------------------------------------
ஓகே, படிச்சிட்டீங்களா...இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த கதையில் வரும் சில கதாபாத்திரங்கள் மற்றவருக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள். யார் செய்தது மிக பெரிய துரோகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படி நினைக்க என்ன காரணம் என்றும் முடிந்தால் கூறுங்கள்.

Sunday, May 22, 2011

செயற்கைக்கோள் சுற்றுப்பாதை - ஒரு அறிவியல் அலசல்

ப்ளாக் சைட் ஆரம்பித்துவிட்டு  ரொம்ப நாள் எழுதவில்லேயே என்ற குற்ற உணர்வு அவ்வபோது மனதை உறுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், எதேச்சையாக செய்திகளை மேய்ந்துகொண்டிருக்கும் போது,  இந்தியாவின் புதிய நவீன செயற்கைக்கோள் GSAT-8, மே 21, 2011 சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது என்ற செய்தியை காண நேர்ந்தது. இதை பார்த்ததும் செயற்கைக்கோள் மற்றும் அதன் சுற்றுப்பாதை பற்றி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று மனம் பரபரத்தது. தொழில் முறையில் இதற்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சொந்த ஆர்வத்தில் அங்கங்கு படித்து அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். சரி இனி விஷயத்திற்கு நேராக செல்கிறேன். 

முதலில் செயற்கைக்கோள் என்றால் என்ன என்று பார்க்கலாம். ஒரு பெரிய பொருளை (object) மற்றொரு சிறிய பொருள் சுற்றி வந்தால் அதை ஆங்கிலத்தில் சாட்டிலைட் என்று அழைகின்றனர். நம் பூமி சூரியனின் சாட்டிலைட், நிலவு பூமியின் சாட்டிலைட். இவைகள் நேச்சுரல் சாட்டிலைட் என்று அழைக்கபடுகின்றன. மனிதன் செயற்கையாக பூமியின் சுற்று பாதையில் சுழல விடும் பொருளை ஆர்டிபிசியல் சாட்டிலைட் அல்லது செயற்கைக்கோள் என்று அழைக்கிறோம். ஆனாலும் பொதுவாக சாட்டிலைட் என்று ஆர்டிபிசியல் சாட்டிலைட்டை மட்டுமே கூறுகின்றனர். பூமியை சுற்றி ஆயிரக்கணக்கில் செயற்கைகோள்கள் சுற்றி வருகின்றன. அவை தொலை தொடர்பு, வானிலை பற்றி தகவல் அறிய, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் காண என பல்வேறு வகைகளில் நம் வாழ்வில் உதவுகின்றன. இன்றைய காலகட்டத்தில் செயற்கைக்கோள் நம் அன்றாட வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது.

சரி செயற்கைக்கோள் பற்றி ஒரு சிறிய விளக்கம் பார்த்தாகிவிட்டது, இப்போது  சுற்று பாதை என்றால் என்ன என்று  பார்க்கலாம். சுற்றுப்பாதையை பற்றி புரிந்துகொள்ள முதலில் க்ராவிடி எனப்படும்  ஈர்ப்பு விசையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஈர்ப்பு விசை என்பது அனைத்து பொருட்களையும் தன்னுள்  இழுத்துகொள்ளும் ஒருவித சக்தி ஆகும். இந்த அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்பு சக்தி உள்ளது. இந்த சக்தி அந்தந்த பொருளில் உள்ள நிறை (Mass) கொண்டு மாறுபடும். உதாரணத்திற்கு உங்களுக்கு என்று ஒரு ஈர்ப்பு களம் உண்டு. உங்கள் அருகில் இருக்கும் மேஜை நாற்காலி போன்ற பொருட்களுக்கும் ஈர்ப்பு களம் உண்டு. ஆனால் உங்களுக்கும் நாற்காலிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மிகவும் வலிமையற்றதாக உள்ளதால் அதை உணர முடிவதில்லை. பூமி போன்ற பெரிய கோளின் ஈர்ப்பு விசை மிகவும் வலிமையானது என்பதால் அதை உணர முடிகிறது.  பூமி தன்னை சுற்றி உள்ளை அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி ஈர்த்துக்கொண்டிருகிறது. ஒரு கல்லை வானத்தை நோக்கி தூக்கி போட்டால் அது வேகமாக கீழே வந்து விழுகிறது. அந்த கல் வந்து விழும் விசையை F=mg என்ற சூத்திரத்தால் குறிக்கின்றனர். இதில் m என்பது அந்த பொருளின் நிறை, g என்பது புவிஈர்ப்பு முடுக்கம் (acceleration due to gravity). பூமியில் கடல் மட்ட அளவில் புவிஈர்ப்பு முடுக்க அளவு 9.81 m/s 2ஆகும்.

ஒரு கல்லை வேகமாக உங்கள் எதிரே வீசினால் அது சிறிது தூரம் சென்று கீழே விழுகிறது. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் ஓரளவு விசையுடன் வீசப்பட்ட கல் A என்று குறிக்கப்பட்ட இடத்தில் விழுகிறது. மேலும் சற்று விசையுடன் வீசினால் B என்று குறிக்கப்பட்ட இடத்தில் விழுகிறது. கல் வீசப்படும் விசை மேலும் மிக அதிகமாக கூட்டினால் C எனபடும் சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அப்படி ஒரு சுற்று பாதையில் சுற்ற முதலில் சரியான விசையுடன் கல்லை வீசவேண்டும். 


இங்கு A மற்றும் B -ல் கல் விழுவதற்கு காரணம் காற்றின் உராய்வால் வேகம் குறைந்து பூமியின் புவிஈர்ப்பு விசையால் கீழே இழுக்கபடுகிறது. அதே நேரத்தில் அந்த கல் வேகமாக எறியப்பட்டு பூமியின் வளிமண்டலத்தை தாண்டி வெளியே சென்று விட்டால் அங்கு தடுப்பதற்கு காற்று மண்டலம் இல்லாததால் அது சீராக ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கவேண்டும். இது நியூட்டனின் முதலாம் விதி. ஒரு பொருள் ஒய்வு நிலையில் இருக்கும் போது அதே ஒய்வு நிலையில் இருக்கும் அல்லது அந்த பொருள் நகர்ந்துகொண்டிருந்தால் அதே வேகத்தில் மற்றும் திசையில்  நகர்ந்துகொண்டிருக்க வேண்டும். எதாவது ஒரு விசை வெளியில் இருந்து அந்த பொருளை தாக்காதவரை அதன் நிலை அப்படியே இருக்கவேண்டும். இதன் படி வளிமண்டலத்தை தாண்டி வீசி எறியப்பட்ட கல் தடுப்பதற்கு வேறு விசை இல்லாததால் நேராக செல்ல முயலும். ஆனால் பூமியின் புவிஈர்ப்பு அந்த கல்லை கீழே இழுக்கும். அதனால் திசை மாறி கல் கீழே ஆனால் வேகம் குறையாமல் பயணிக்கும். கீழே உள்ளே படத்தில் உள்ள புள்ளி அதன் வேகத்தில் நேராக செல்ல முயற்சிகிறது. ஆனால் பூமியின் ஈர்ப்பு விசையால் திசை மாறி பயணிக்கிறது. இது தொடர்ந்து நடப்பதால் சுற்றுப்பாதை உருவாகிறது. 


இப்படி புவிஈர்ப்புக்கும் கல் சென்று கொண்டிருக்கும் வேகத்திற்கும் இடை நடக்கும் போர் தான் சுற்றுப்பாதை உருவாக காரணம். இங்கு நான் எளிமை கருதி வளிமண்டலத்தை தாண்டி கல்லின் வேகத்தை தடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறேன். வளிமண்டலத்தை தாண்டியும் கண்ணுக்கு தெரியாத பல சங்கதிகள் வேகத்தை தடுக்க உள்ளது ஆனாலும் அது காற்றின் உராய்வு போன்று வலிமையானது அல்ல. இப்படி உருவாகும் சுற்றுப்பாதை வட்டமாகவோ நீள் வட்டமாகவோ எறியப்பட்ட வேகத்தை பொருத்து அமைகிறது. 

இந்த பாணியிலேயே செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் விடப்படுகிறது. அதை கொண்டு சென்று சுற்றுப்பாதையில் விட ராக்கெட்டை பயன்படுத்துகின்றனர். பொதுவாக சுற்றுப்பாதையில் எறியப்பட்ட செயற்கைக்கோள் அதன் பாதையில் சீராக சென்று கொண்டிருக்கும், ஆனால் சில நேரங்களில் வளிமண்டலத்தின் ஈர்ப்பால் பாதை மாறி கீழே வர சாத்தியம் உண்டு. அது போன்ற நேரங்களில் சிறிது உந்துதல் கொடுத்து மீண்டும் சரியான சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

பல இடங்களில் எளிமை கருதி நுணுக்கமான அறிவியல் தகவல்களை தரவில்லை.  ஏதேனும் பிழை இருந்தால் தவறாமல் சுட்டிகாட்டுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.




Tuesday, April 12, 2011

விண்வெளியில் முதல் மனிதன்


யூரி காகரின்
இன்று ஏப்ரல் 12, 2011. சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த யூரி காகரின் என்பவர் விண்கலத்தில் ஏறி அதிவேகத்தில் பயணம் செய்து புவிஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு நம் பூமிப்பந்தை ஒரு முறை வலம் வந்து பத்திரமாக தரை இறங்கினார். அந்த நாள் மனித குலத்தின் சாதனைகளில் ஒரு முக்கியாமான மைல் கல் என்று கூறலாம்.  அதை தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் குறைவில் அமெரிக்க விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் விண்வெளியில் பறந்தார். அதன் பின்னர் 1969 -ல் அமெரிக்க விண்வெளி வீரர்  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்த முதல் மனிதன் என பெயர் பெற்றார்.

இப்படி விண்வெளி ஆராய்ச்சியில் மனித குலம் பல மகத்தான சாதனைகளை புரிந்துகொண்டிருகிறது. சாதாரண மனிதன் மட்டும் அல்லாமல் பல அறிவில் சிறந்த விஞ்ஞானிகள் கூட விடை கூற முடியாத பல புதிர்களை கொண்டது விண்வெளி. ஆம், மனிதன் விடை காண முடியாத பல விஷயங்களில் விண்வெளி கண்டிப்பாக மிக முக்கியமானது. அதில் முக்கியமானது விரிவடைந்து கொண்டே நம்ம விட்டு விலகி செல்லும் கேலக்சி எனப்படும் பல நட்சத்திர மண்டலங்கள் (இதை பற்றி எப்போதாவது தனியாக ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது).  இது போல பல புதிர்கள் கொண்ட விண்வெளியை பற்றி மனிதனின் தேடல் சலிக்காமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த தேடல் தேவையா இது உண்மையிலே மனித குலத்திற்கு உபயோகமானதா என்று ஒரு சாரர் கேள்வி எழுப்பினாலும், மனிதனின் தேடல் தான் நம் சமுதாயம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே இந்த தேடல் தொடரட்டும் என்று இதற்காக உழைத்தவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிப்போம்.

Wednesday, March 9, 2011

வீட்டில் அடிக்கடி தேடும் பத்து பொருட்கள்

அடச்சே, எதுவும் வெச்சது வெச்ச எடத்துல இருக்காது, எங்கே போச்சு என்று...வீட்டிலேயே அடிக்கடி தொலைத்துவிட்டு தேடும் பத்து பொருட்கள் இங்கே....

1) பேனா
2) டிவி ரிமோட்
3) சீப்பு
4) கார்ட்லெஸ் போன்
5) செல்போன் மற்றும் சார்ஜர்
6) பைக் அல்லது கார் சாவி
7) சாக்ஸ் 
8) டார்ச் லைட்
9) பாட்டரி
10) குடை

இந்த லிஸ்ட்லே ஏதாவது மிஸ் ஆகி இருந்தா நீங்க சொல்லுங்க.....

Saturday, March 5, 2011

குழந்தைகளும் நேர்மையும்

நேர்மை என்பது ஒரு நல்லொழுக்கம், அதை நாம் குழந்தைகளுக்கு கற்று தர முடியும். சரி, ஏன் நாம் நேர்மையை குழந்தைகளுக்கு கற்று கொடுக்கவேண்டும். இதற்கு பதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

இதன் பொருள், ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவரது மக்களை (குழந்தைகளை) கொண்டு அறிந்துகொள்ளலாம். இங்கு எச்சம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஓன்று மக்கள் அதாவது குழந்தைகள் மற்றொன்று அவருக்கு பின் எஞ்சி நிற்கும் புகழ் சொல்லோ அல்லது பழி சொல்லோ என்று பொருள் கொள்ளலாம். நண்பர் ஒருவருடன் சில மாதங்களுக்கு முன்னர் பேசிகொண்டிருந்த போது, அவர் தனக்கு சிறுவயதில் யாரும் நேர்மையாக இருக்கவேண்டும் என்று கற்று கொடுத்ததில்லை என்று வருத்ததுடன் கூறினார். அதை கேட்ட பின்னர் சிந்தித்து பார்த்ததில் உண்மைதான், ஏட்டு படிப்பாக நேர்மையாக இருக்கவேண்டும் என்று படித்ததை தவிர, நடைமுறை வாழ்க்கையில் யாரும் நமக்கு எப்படி நேர்மையாக இருக்கவேண்டும் என்று கற்று கொடுத்ததில்லையே என்று தோன்றியது. குழந்தைகள் வளரும் பருவத்திலே படிப்பு, விளையாட்டு, இசை, நடனம் என பலவற்றை கற்று கொடுக்கும் அதே நேரத்தில், நேர்மையான நடத்தையை கற்று கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இளம் கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப இளம் வயதில் எதையும் சிந்திக்காமல் செய்யும் தைரியம் இருக்கும். அது மட்டும் இன்றி, நன்மை எது தீமை எது என்று பகுத்தறிவதும், இளம் வயதில் சற்று கடினம் தான். வயதும் வாழ்கை அனுபவமும் சேர்ந்தே ஒருவற்கு நன்மை தீமையை இனம் கண்டுகொள்ள உதவுகிறது. 

முதலில் நேர்மை என்றால் என்ன என்று பார்க்கலாம். இதற்கு விளக்கம் ஒரு சில வார்த்தைகளில் கூறுவது கடினம். நேர்மை என்பது உண்மையாக, நடுவுநிலைமையுடன்,  வாக்கு தவறாமல், ஏமாற்றாமல், பொய் சொல்லாமல் இருப்பதே ஆகும். இப்படி நேர்மையாக இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கே சிரமம் தான். அதற்கு முக்கிய காரணம் நேர்மையாக இருப்பதால் உடனடி நன்மை எதுவும் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் நேர்மை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதனால் கிடைக்கும் உடனடி நன்மை தான். (இங்கு ஒரு இடைச்செருகல், அப்படி கிடைக்கும் நன்மை  உண்மையிலேயே நன்மையா என்பதை காலம் தான் சொல்லும்). உதாரணதிற்கு இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது, மேஜையில் இருக்கும் தண்ணீர் குவளையை கிழே தட்டி விட்டு தண்ணீர் முழுவதும் கொட்டிவிட்டது என்று வைத்துகொள்வோம்,  நீங்கள் யார் இதை செய்தது என்று கேட்டால், பொதுவாக அந்த இரண்டு குழந்தைகளும் நான் செய்யவில்லை என்று தான் கூறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் ஒருவித தற்காப்பு முயற்சியே ஆகும். நான் தான் கிழே கொட்டினேன் என்று கூறும் உண்மையினால் கிடைக்க போகும் தண்டனை பற்றி பயத்தினால் அவர்கள் பொய் சொல்லும் கட்டாயத்திற்கு தள்ள படுகின்றனர். நேர்மையின்மை என்பதில் ஒரு பகுதி தான் பொய் சொல்வது என்றாலும், இந்த பதிவில் எளிமையை கருதி நாம் நேர்மையின்மை மற்றும் பொய் சொல்வதை ஒரே பொருளில் எடுத்துகொள்ளலாம். 

சாதாரணமாக பொய் சொல்லும் பழக்கம் எல்லா குழந்தைகளிடமும் இருக்கவே செய்கிறது. இது முதலில் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று தோன்றினாலும், அது தவறு என்று அவர்களுக்கு புரியவைக்காமல் விட்டுவிட்டால் பின்னால் அது அவர்கள் வாழ்வில் பிரச்சனையாகலாம். முதலில் குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடித்து அந்த அடிப்படை பயத்தை ஒழிக்க வேண்டும். இதை சொல்வது போல் செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. நாம் எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும், அவர்கள் அந்தந்த செயலுக்கேற்ப,  சூழ்நிலைகேற்ப அதனால் கிடைக்கபோகும் தண்டனைகேற்ப பொய் சொல்லலாமா வேண்டாமா என்று முடிவு செய்கின்றனர். தண்டனை பயம் மட்டுமே பொய் சொல்ல காரணம் கிடையாது, சில பதின்ம வயது குழந்தைகள் தங்கள் நட்பு வட்டாரத்தில் தங்களை அனைவரும் உயர்வாக நினைக்க பல பொய்களை கூறுகின்றனர். 

சரி எப்படி நேர்மையை கற்று கொடுப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு விடை கூறுவது அவ்வளவு சுலபமானது இல்லை என்றாலும், எனக்கு தோன்றிய மற்றும் தெரிந்த சில வழிகளை கூறுகிறேன். முதலில் கற்றுகொடுக்கும் நாம் நேர்மையாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேர்மையாக இருப்பதில் முன் உதாரணமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நேர்மையை சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ கற்று கொடுக்க முடியாது. அது அவர்கள் வாழ்வோடு இணைந்து இருக்க வேண்டும். அவர்கள் நேர்மையை அல்லது நேர்மையின்மையை முதலில் வீட்டில் இருந்து தான் கற்று கொள்கின்றனர். முக்கியமாக பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதற்கு முக்கிய தூண்டுகோலாக இருகின்றனர். குழந்தைகள் எங்கே இதை எல்லாம் கவனிக்க போகிறார்கள் என்று நினைத்துகொண்டு பெற்றோர் செய்யும் பல செயல்களை மிக விரைவில் குழந்தைகள் கிரகித்து கொள்கிறார்கள். அந்த ஆளு வந்தா நான் வீட்டுல இல்லைன்னு சொல்லிடும்மா என்று அப்பா அம்மாவிடம் கூறுவதை கேட்கும் குழந்தைகள், அதே உத்தியை வேறு ஒரு சூழ்நிலையில் உபயோகிக்க தயங்குவதில்லை.

குழந்தைகள் நேர்மையாக இருக்க பெற்றோர் முக்கிய காரணமாக இருக்கும் அதே நேரத்தில், நேர்மையில்லாமல் இருபதற்கு பெற்றோர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. பள்ளி மற்றும் வீட்டின் அருகாமையில் கிடைக்கும் நட்பு முதலியவை நேர்மையை அல்லது நேர்மையின்மையை அவர்களுக்கு கற்று கொடுக்கும். அப்படி நேர்மையின்மையை அவர்கள் காணும் நேரத்தில் அடிக்கு அடி, உதைக்கு உதை என்னும் பாணியில் நேர்மையில்லாமல் நடக்க கூடும். அதனால் நேர்மையின்மையை அவர்கள் எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லிகொடுத்தல் அவசியமாகிறது. எதிராளி நேர்மை இல்லாமல் நடந்தால் பதிலுக்கு நாமும் நேர்மை இல்லாமல் நடக்க கூடாது என்பதை கூறவேண்டும். பொதுவாக எந்த ஒரு நல்ல விஷயத்தை எடுத்துகொண்டாலும் உடனடியாக நன்மை கிடைப்பது கடினம், நேர்மையும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அதனால் நேர்மையாக இருப்பதால் கிடைக்ககூடிய நன்மைகளை குழந்தைகளுக்கு எடுத்து கூறுதல் அவசியம். நேர்மையாக இருப்பதால் காலபோக்கில்  கிடைக்கும் மிகபெரிய நன்மை மற்றவர்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கை. அதற்கு அடுத்து, நாம் உண்மை என்று நம்புவதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதால் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துகொள்ளலாம்.  மேலும் தெளிவான மனதும், எதை பற்றியும் தயங்காமல் பேசக்கூடிய தைரியமும் கிடைக்கும். நேர்மையாக இருந்தால்  வீட்டில் மற்றும் சமூகத்தில் அனைவராலும் மதிக்கபடுவாய் என்றும், நேர்மையாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை நீதிகதைகள் மூலமாகவோ, அவர்களிடம் சொல்ல முடிந்த நிஜ வாழ்கை சம்பவத்தையோ உதாரணமாக கூறலாம். என்ன சொல்லலாம் என்பது குழந்தைகளின் வயது மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றவற்றை கொண்டு மாறுபடும். 

நான் ஆரம்பத்தில் கூறியது போல நேர்மை பற்றி விவரிப்பது கடினம். அது ஒரு நெடுந்தூர பயணம், பல நேரங்களில் பாதை கரடு முரடாக இருக்கும். ஆனால் சிறிது காலம் பழகிவிட்டால் நேர்மையாக இருப்பதை தவிர வேறு எதையுமே நினைக்க தோன்றாது. நேர்மையை கடைபிடித்தால் ஒட்டுமொத்த வாழ்கை தரம் மேன்மை அடையும். இப்படி நிறைய கூறிக்கொண்டே போகலாம். நேர்மையை பற்றி இவ்வளவு பிரச்சாரம் செய்வதால் நான் பெரிய உத்தமன் என்று காட்டிகொள்ள முயற்சிக்கவில்லை. முடிந்தவரை நேர்மையாக இருக்க முயற்சிக்கிறேன், அதை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நேர்மையை பற்றி  என்னால் முடிந்தவரை ஒரு சிறிய பகுதியை மட்டும் இங்கு பகிர்ந்திருக்கிறேன். ஏதேனும் பிழையோ, மாற்று கருத்தோ இருந்தால் கூறுங்கள்.

Saturday, February 26, 2011

Guzaarish - என் பார்வையில்


குசாரிஷ் - சமீபத்தில் நான் பார்த்த அருமையான ஹிந்தி திரைப்படம். முதலில் ஆரம்பிக்கும் முன் இது ஒரு திரை விமர்சனம் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன். ஏனென்றால் ஒரு படத்தை பார்த்து விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு விஷயம் தெரியாது என்பது தான் உண்மை. இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் ஏனோ என்னை சற்று பாதித்ததால், படத்தில் எனக்கு பிடித்தது மற்றும் புரிந்தது பற்றி உங்களுடன் பகிர்கிறேன்.

தூம் 2, ஜோதா அக்பர் ஆகிய இரு படங்களை அடுத்து மூன்றவதாக ஹ்ரிதிக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதால் எனக்குள் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். படத்தின் ஆரம்ப காட்சியே அசத்தலாக இருந்தது. ஹ்ரிதிக் ரோஷன் படுக்கையில் தூங்கிகொண்டிருக்க, ஐஸ்வர்யா ராய் அறைக்குள்ளே வந்து அவரை எழுப்பி பல் தேய்த்து விட்டு, குளிக்க வைத்து, உடை மாற்றி, வீல் சேரில் உட்கார வைக்கும்போதே நம்மை அட பரவயில்லையே வித்தியாசமான படம் தான் போல இருக்கே என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பிற்கு கொஞ்சமும் பங்கம் வைக்காமல் ஆரம்பம் முதல் முடிவு வரை சற்றும் விறுவிறுப்பு குறையாமலேயே படம் செல்கிறது. முதலில் இப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த ஹ்ரிதிக் ரோஷனுக்கு ஒரு பெரிய சல்யுட் அடிக்கலாம். மனிதர் முகத்தில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் நடிப்பை வெளிபடுத்துகிறார். முக்கியமாக அவர் கண்கள் சந்தோசம், கோபம், ஆச்சரியம் என பல பரிமாணங்களை காட்டுகிறார்.

கதை கோவாவில் நிகழ்கிறது.  உலகிலேயே மிகச்சிறந்த மேஜிக் கலைஞனாக திகழும் Ethan Mascarenhas (ஹ்ரிதிக் ரோஷன்),  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு ஆபத்தான அந்தரத்தில் மிதக்கும் மேஜிக் நிகழ்த்தும் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் quadriplegic எனப்படும் உடல் முழுக்க உணர்வுகளை இழக்கும் ஒருவித நோய்க்கு ஆளாகிறார். உடலில் தலையை தவிர எந்த ஒரு பாகத்திலும் உணர்ச்சி இல்லாமல் வீல் சேரில் தான் அவர் வாழ்கை நகர்கிறது. இந்த நிலையில் பன்னிரெண்டு வருடங்கள்,  நர்ஸ் சோபியா டிசௌசா (ஐஸ்வர்யா ராய்) உதவியுடன் உற்சாகத்துடன் ரேடியோ ஜாக்கியாக 'ரேடியோ ஜிந்தகி' என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி கொண்டும் பல தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்களை எழுதியும் வெற்றிகரமாக விளங்குகிறார். ஐஸ்வர்யா ராய் ஒரு அழகிய நர்சாக ஒரு பார்பி டால் போல படம் முழுவதும் வலம் வருகிறார். நடிப்பிலும் ஹ்ரிதிக் ரோஷனுக்கு போட்டியாக மிக சிறப்பாக தன் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

இப்படி பதினான்கு ஆண்டுகள் சுதந்திரமாக தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த ஈதன் உடலில் உள்ளுறுப்புகள் பாதித்து இருப்பதாக தன் மருத்துவர் மூலம் அறிந்ததும், தன்னால் மருத்துவமனையில் காலத்தை தள்ள முடியாது என்று தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்புகிறார். அதனால் Euthanasia என்ற கருணை கொலைக்கு தன் தோழி மற்றும் வழக்கறிஞர் தேவயாணி தத்தா மூலம் நீதிமன்றத்தில் விண்ணபிக்கிறார்.  இந்தியாவில் இத்தகைய கருணை கொலைக்கு சட்டத்தில் அனுமதி இல்லை. பலர் இதை முதலில் எதிர்த்தாலும் பின்னர் கருணை கொலை சரியே என்று கூறுகின்றனர். வழக்கு விசாரணையின் போது ஈதன் தாயரே மகன் துன்பபடுவதை காண முடியவில்லை, கருணை கொலைக்கு அனுமதி கொடுங்கள் என்று நீதிபதியிடம் கூறும் இடம் மனதை ஏதோ செய்கிறது. இப்படி ஒரு பக்கம் கதை போய் கொண்டிருக்க இதற்கிடையே ஒமார் சித்திக் என்னும் இளைஞன் தனக்கு மேஜிக் கற்று தருமாறு ஈதன் முன் வந்து கெஞ்சுகிறான். முதலில் மறுக்கும் ஈதன் பின்னர் ஒமாருடைய ஆர்வத்தை பார்த்தும் தனக்கு பின்னர் தன் மேஜிக் நிகழ்சிகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் கற்று தர முன் வருகிறார். அப்படி மேஜிக் சொல்லி கொடுக்கும் போது பிளாஷ் பேக்கில் மேஜிக் ஷோ, நடன காட்சிகள் என ஹ்ரிதிக் ரோஷன் கலக்குகிறார்.

இவ்வளவு ஹெவி சப்ஜெக்டாக இருந்தும் படத்தில் மனதை பிழியும் சோகம் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே விறு விறு என்று படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர் மற்றும் திரைகதை எழுத்தாளர் 'சஞ்சய் லீலா பன்சாலி'.  ஆனாலும் சில இடங்களில் சறுக்கல்கள் இருக்கிறது.  சோபியா தன் குடும்பம் மற்றும் கணவனை விட்டுவிட்டு ஒரு நாள் கூட விடுப்பு ஒய்வு என்று இல்லாமல் ஏன் நர்சாக பணி புரிகிறார் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. ஈதன் - சோபியா இடையே ஒரு மெல்லிய காதல் இருப்பதை படத்தின் ஆரம்பத்தில் இருந்தே உணர முடிகிறது. ஆனால் அந்த காதலின் காரணம் புரியவில்லை.

முடிவில் ஈதன் வழக்கின் தீர்ப்பு என்ன ? ஈதன் - சோபியா காதல் வெற்றி பெற்றதா என்பது தான் படத்தின் மீதி கதை. மொத்தத்தில் என்னை பொறுத்தவரை இது ஒரு பார்க்க வேண்டிய படம்.

Trailer:


Sunday, February 13, 2011

நேரத்தின் வரலாறு

ஒரு கிலோமீட்டருக்கு ஆயிரம் மீட்டர், ஒரு மீட்டருக்கு நூறு சென்டிமீட்டர், ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு...இப்படி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எண்கள் அனைத்துமே தசம எண்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் தினமும் பார்க்கும் கடிகாரத்தில் நேரம் மட்டும் ஏன் ஒரு மணிநேரத்திற்கு அறுபது நிமிடங்கள் என்றும், ஒரு நிமிடத்திற்கு அறுபது வினாடிகள் என்றும் இருக்கிறது.  ஏன் ஒரு மணிநேரத்திற்கு 100 அல்லது 120 நிமடங்கள் என்றோ இருக்ககூடாது. இதற்கு சரியான பதில் இதுதான் என்று கூற முடியாது. அதனால் நான் படித்து அறிந்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். இதோ ஒரு மணி நேரத்திற்கு அறுபது நிமிடங்கள் இருக்கும் காரணம்...

இதற்கு பதில் தேட நாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் 3100 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். ஆம், பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியர்கள் Base 60 எண்களை பயன்படுத்தினர், அதுவே நாம் இன்றளவில் உபயோகபடுத்தும் பல அளவுகளின் முன்னோடி எனலாம். சுமேரிய மற்றும் அக்காடிய நாகரீகங்களில் பயன்படுத்திய எண்ணிக்கை முறையே பாபிலோனிய எண்களுக்கு அடித்தளம் ஆகும். இப்போது நாம் சிறு குழந்தைகளுக்கு கூட்டல் அல்லது கழித்தல் சொல்லு கொடுக்க கை விரல்களை பயன்படுவது போல, பாபிலோனிய காலத்து மனிதர்களும் முதலில் தங்கள் கை விரல்களையே பயன்படுத்தி இருகிறார்கள். சாதாரணமாக கை விரல்களை உபயோகித்து எண்ணினால் பத்து வரை என்ன முடியும், சரி கால் விரல்களையும் சேர்த்து எண்ணினால் இருபது வரை என்ன முடியும். அப்படி இருந்தால் அவர்கள் நாம் இன்றளவில் உபயோகிக்கும் Base 10 அல்லது Base 20 தானே பயன்படுத்தி இருக்கவேண்டும், இந்த அறுபது எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழும். அவர்கள் கை விரல்களை உபயோகபடுத்தி எண்ணியது என்னமோ உண்மை தான் ஆனால் ஒரு வித்யாசம், அவர்கள் கை விரல்களை சற்று நுணுக்கமாக பார்த்தான் விளைவே Base 60 எண்களை உபயோகித்ததின் காரணம்.

உங்கள் கை விரல்களை சற்று கூர்ந்து கவனித்து பார்த்தால், கட்டை விரலை தவிர மற்ற அணைத்து விரல்களிலும் மூன்று எலும்புகள் அல்லது ஜாயிண்டுகள் உள்ளன.  நம் இடது கையில் கட்டை விரலை லேசாக மடக்கிவிட்டு பார்த்தால் மற்ற நான்கு விரல்களால் பன்னிரெண்டு வரை என்ன முடியும். இப்போது வலது கைகளில் உள்ள விரல்களால் இடது கையில் உள்ள பன்னிரெண்டு பன்னிரெண்டாக ஐந்து முறை எண்ணினால் மொத்தம் அறுபது எண்கள் வருகிறது. இதுவே பாபிலோனியர்கள் Base 60 எண்களை உபயோகபடுத்திய காரணம். இதன் அடிப்படையிலேயே பாபிலோனியர்கள் ஒரு மணி நேரத்திற்கு அறுபது நிமிடம் என்றும் ஒவ்வொரு நிமிடத்தையும் அறுபது வினாடிகள் என்றும் பகுத்திருகின்றனர்.  பாபிலோனியர்கள் ஒரு நாளில் சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தை பன்னிரெண்டு மணி நேர பகல் பொழுதாகவும், சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தை பன்னிரெண்டு மணி நேர இரவு பொழுதாகவும் பிரித்திருந்தனர். அதனால் அவர்கள் உபயோகித்த நேர அளவுகள் நாம் இன்று உபயோகிப்பது போல இல்லாமல் வருடத்தில் மாறிக்கொண்டே இருந்தது. அதாவது சூரிய வெளிச்சம் இருக்கும் வரை நேரத்தை நீட்டி பன்னிரெண்டு மணிநேரமாக வைத்திருந்தனர். பாபிலோனியர்களை தொடர்ந்து எகிப்து நாகரீகத்தில் இந்த நிலையின்மையை மாற்றி, பகல் வெளிச்சம் மற்றும் இரவு நேரம் என்று பிரிக்காமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றும் அதை ஒரு மணி நேர பாகங்களாக நாம் இன்றளவில் பயன்படுத்தும் முறையை கொண்டு வந்தனர்.அதன் விளைவே நாம் இன்று மணிக்கு அறுபது வினாடிகள் என்றும், ஒரு வட்டத்தில் மொத்தம் 360 டிகிரி இருக்கிறது என்றும் உபயோகிப்பதற்கு காரணம்.

அது சரி, அப்படி என்றால் ஏன் இந்த Base 60 எண்கள் இன்று பயன்பாட்டில் இல்லை என்று நீங்கள் கேட்கலாம். பாபிலோனியாயர்களின் எண்ணிக்கை முறை அவ்வளவு துல்லியமானதாக இருந்ததாக தெரியவில்லை. அவர்கள் எண்களை எழுத இரண்டே குறிகளை உபயோக படுத்தினார்கள். ஓன்று என்ற எண்ணை குறிக்க I போன்ற குறியையும், பத்து என்ற எண்ணை குறிக்க < போன்ற குறியை மட்டுமே உபயோகபடுத்தி எண்களை எழுதினார்கள். உதரணத்திற்கு இருபத்திநான்கு என்ற எண்ணை குறிக்க <<IIII இப்படி எழுதினர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் பாபிலோனியர்கள்  ஜீரோ எனப்படும் பூஜ்ஜியம் என்ற எண்ணுக்கு குறிகள் எதுவும் வைத்துகொள்ளவில்லை. அதனால் அவர்கள் பூஜ்ஜியம் என்பதை அறியாமல் இருந்தார்கள் என்று கூறவில்லை. அதற்கான குறியீடு மட்டுமே இல்லாமல் இருந்தது, அதற்கு பதில் ஒரு வெற்று இடத்தை போட்டு அதன் அருகில் ஒரு பிராக்கெட் போன்ற குறியை போட்டனர். அவர்கள் பூஜ்யத்திற்கு குறியில்லாமல் விட்டதற்கு அந்த காலத்தில் நடந்த தத்துவ ரீதியான விவாதமும் ஒரு காரணம். பூஜ்ஜியம் என்றால் ஒன்றும் இல்லாதது, அப்படி ஒன்றும் இல்லாதது எப்படி எதாவது ஒன்றாகும், அதற்கு எப்படி குறிப்பிட முடியும் போன்ற விவாதங்களால் பூஜ்ஜியத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை.

பூஜ்ஜியத்தை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாவை சேர்ந்த பிங்களா மற்றும் அவருடன் இருந்த பண்டிதர்களும் தான், சூன்யா என்ற சம்ஸ்கிருத வார்த்தைதான் நாம் இன்று உபயோகபடுத்தும் ஜீரோ ஆகும். அதன் பின்னர் வந்த பிரம்மாகுப்தா பூஜ்ஜியத்தின் உபயோகம் மற்றும் நெறிமுறைகளை பற்றி ப்ரஹமசுப்த சித்தாந்தம் என்ற நூலில் எழுதி இருக்கிறார். அதன் பின்னர் ஆர்யபட்டர் பூஜ்ஜியத்தை உபயோகத்தினை மேலும் விரிவு படுத்தி, இன்று நாம் உபயோகபடுத்தும் Place value notation, அதாவது இன்று நாம் எண்களில் ஒவ்வொரு இடத்திற்கும் ஓன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று உபயோகபடுத்தும் முறைக்கு முன்னோடியாக விளங்கினார். மனித வரலாற்றில் கணிதம் எப்படி தோன்றி இன்று நம் மனித இனம் கண்டுள்ள முன்னேற்றத்திற்கும் வழிக்காட்டியாக இருந்திருப்பதை சற்று பின்னோக்கி பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.

நான் மேலே கூறிய தகவல்களில் ஏதும் பிழை இருந்தாலோ அல்லது மாற்று கருத்து இருந்தாலோ உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...