Saturday, June 25, 2011

தினைத் துணை - சிறுகதை


ஞாயிற்றுகிழமை சாயங்காலம் சினிமா தியேட்டர் -ல் உட்கார்ந்து படம் பார்த்துகொண்டிருக்கும் போது சிவாவின் செல்போன் ஒலித்தது. போனில் நவீன்...மாப்ளே, நம்ம குமாரை பாத்தேண்டா,  மலேசியாலே இருந்து நேத்து தான் வந்தானாம், உன்கிட்டே எதோ பண விஷயமா உடனே பேசணும்னு போன் நம்பர் கேட்டான். உன்னோட வீட்டு நம்பரும், செல் நம்பரும் குடுத்திருக்கேன்.

நீ ஏண்டா போன் நம்பரை அவனுக்கு குடுத்தே, நானே அவன் கூட பேசி வருஷ கணக்குல ஆச்சு...எப்பவும் பணம் கேட்டு என்னை நச்சரிப்பான்...இப்போ தான் கொஞ்ச நாளா அவன் தொல்லை இல்லாமல் இருந்தேன்.

இல்லடா சிவா, பாக்க பாவாமா இருந்தது, நீயும் அவனும் தானே ஸ்கூல்லே இருந்தே க்ளோஸ் பிரண்ட்ஸ்...ஏதாவது பிரச்சனையோ என்னமோ, என்கிட்டே சொல்ல தயங்குறான், அதான் உன் நம்பரை கொடுத்தேன்.

சார், நீங்க போன் பேசணும்னா கொஞ்சம் வெளிலே போய் பேசுங்க, இங்கே உக்காந்து பேசி ஏன் எல்லாருக்கும் தொல்லை குடுக்குறீங்க, பின்னால் இருந்து ஒரு குரல் வர...சற்று மெதுவாக...நவீன்...நான் இப்போ தியேட்டர் -லே இருக்கேன், அப்புறம் உனக்கு கால் பண்ணுறேன்...வெச்சுரு.  போனை வைத்த பின்னர் படத்தில் கவனமே ஓடவில்லை. இப்போ எதுக்கு இவன் பேசணும்னு சொல்றான் என்று குமாரின் பழைய நினைவுகளில் மூழ்கினான்.

சிவாவின் குடும்பம் விருதுநகரில் ஓரளவு வசதியான குடும்பம். அப்பா சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வந்தார்.  தாயார் வீட்டின் அருகிலேயே அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்தார். வீட்டின் அருகே இருந்த காரணத்தால் அதே பள்ளியில் சிவாவை சேர்த்து படிக்க வைத்தனர். அந்த பள்ளியில் தான் குமார் சிவாவின் நட்பு சிறு வயதிலேயே துளிர் விட துவங்கியது. குமாரின் தந்தை கட்டட வேலை செய்யும் கூலி தொழிலாளியாக இருந்தார். குமாரும் தன் குடும்பத்தின் நிலை உணர்ந்து நன்றாக படித்தான். வகுப்பில் எப்போதும் அவன்தான் முதல் ரேங்க் வருவான். படிப்பிலும் விளையாட்டிலும் சரி குமார் பல நேரங்களில் சிவாவிற்கு குருவாக இருந்திருக்கிறான். கணக்கு அறிவியல் என பாடத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தீர்த்து வைப்பது மட்டுமல்லாமல் விளையாட்டில் பம்பரம் விடுவது, கில்லி விளையாடுவது, கிரிக்கெட்டில் ஸ்பின் போடுவது என பலவற்றை சிவாவிற்கு சொல்லிக்கொடுப்பான். சிவாவும் புத்தகங்கள், பென்சில், பேனா, விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள், தீபாவளி பட்டாசு என எல்லாவற்றையும் குமாருடன் பகிர்ந்து கொள்வான்.  இப்படி இருவரும் பிளஸ் டூ வரை ஒன்றாகவே படித்தனர். பள்ளிபடிப்பு முடிந்து  சிவா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நன்கொடை கொடுத்து சேர்ந்தான். சிவாவை விட ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றும் குமார் வசதி மற்றும் அவன் தந்தை உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. அதன் பிறகு இருவருக்கும் தொடர்பு அவ்வளவாக இல்லாமல் போனது. அவ்வபோது எதாவது அவசரத்தேவை என்றால் சிவாவிடம் வந்து பணம் வாங்கி செல்வான் குமார். ஆனால் கண்டிப்பாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவான். சிவாவும் முகம் சுழிக்காமல் முடிந்த அளவு அவனுக்கு உதவி வந்திருக்கிறான். கல்லூரி படிப்பு முடிந்து சிவா சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி -ல் சேர்ந்துவிட, குமாரிடம் நட்பு மேலும் படிபடியாக குறைந்தது. சிறு வயதில் பணம், அந்தஸ்து என்று பார்க்காமல் இருந்த சிவாவின் மனம் ஏனோ சற்று மாற தொடங்கியது. நகர வாழ்கையும் அங்கு கிடைத்த நட்பு வட்டாரத்தின் கவர்ச்சியும் குமாரின் தொடர்பை முற்றிலும் துண்டித்து. அவ்வபோது மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தொலைபேசியில் அழைப்பதை கூட நிறுத்திவிட்டான். இதனிடையே குமார் யார் கையை காலையோ பிடித்து  மலேசியாவில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்தான். அவன் மலேசியா செல்வதற்கு முன்பணமாக கட்ட வேண்டிய இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை, சிவாவை சந்தித்து பேசி கடனாக வாங்கி இருந்தான். மலேசியா சென்றதும் எப்படியாவது உடனே பணத்தை திருப்பி கொடுக்கிறேன் எனகூறி சென்றவன்தான், அதன் பின்னர் ஓரிரு முறை அழைத்து பேசி இருக்கிறானே தவிர அதன் பின்னர் பேசவும் இல்லை பணத்தை திருப்பி அனுப்பவும் இல்லை. சிவாவை பொறுத்த வரை இருபத்தி ஐந்தாயிரம் ருபாய் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும்,  நண்பன் ஏமாற்றி விட்டானோ என்று ஒரு சிறு எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தது. இப்படியே இரண்டு வருடங்கள் ஒடி விட்டது.

இவ்வளவு நாட்கள் ஒரு தொடர்பும் இல்லாமல் இப்போது மட்டும் எங்கிருந்து இவனுக்கு என் நினைப்பு வந்தது என்று சிவா தன் மனதில் கோபபட்டுகொண்டே காரை ஒட்டியபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். சிவா எண்டா இவ்வளவு லேட்டு, உன்  பிரெண்ட் குமார் போன் பண்ணி இருந்தான் என்னமோ உன்னை அர்ஜண்டா பாக்கணுமாம், நீ வந்ததும் போன் பண்ண சொன்னான் என்று அப்பா கூறினார். பாத்துடா அவன் பாட்டுக்கு ஏதாவது பணம் வேணும்னு வந்து நிக்க போறான். ஏற்கனவே அவனுக்கு பணம் கொடுத்து ஏமாந்திருக்கே, இனிமேலும் ஏமாறாதே.  நீயே இப்பதான் ஒரு வேலைலே சேர்ந்து சுயமா நாலு காசு சம்பாரிக்க ஆரம்பிச்சிருக்கே. நீ உன் இஷ்டத்துக்கு பணத்தை தூக்கி கொடுக்காதே என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்தார். அதெல்லாம் இல்லப்பா, நான் பாத்துக்குறேன். ஏற்கனவே ஸ்கூல் படிக்குற காலத்திலே இருந்து நிறைய அவனுக்கு செஞ்சிருக்கேன். இனிமேல் சும்மா அவனுக்கு கொடுக்க முடியாது. அவன் கிட்டே பேசும்போது கட் அண்ட் ரைட்டா சொல்லிடுறேன்.

அடுத்தநாள் காலையில் சிவா அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிகொண்டிருக்கும் போது அவன் செல்போன்  ஒலித்தது. எடுத்து ஹலோ என்றதும், டேய் சிவா, நான் குமார் பேசுறேன்டா, எப்படி இருக்கே...பார்த்து ரொம்ப நாள் ஆச்சுடா...உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஈவ்னிங் எங்கயாவது மீட் பண்ணலாமா ? என்று கேட்டவனிடம் சரி ஒரு ஆறு மணிக்குமேலே போன் பண்ணு, நான் ப்ரீயா இருந்தா மீட் பண்ணலாம்.

என்ன இவன் போன்லே ஒன்னும் சொல்லாம நேர்லே பேசணும்னு சொல்றானே, எதோ பெரிய அமௌன்ட் கேக்க போறான் போல இருக்கு. இனிமேல் முன்ன மாதிரி கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க முடியாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிற வேண்டியது தான். எதோ சின்ன வயசிலே இருந்து கூடவே பழகிட்டானேனு கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்து இருக்கேன். இதுவரைக்கும் கொடுத்தது போதும் இதுக்கு மேலே இவன் கேட்கும் போதெல்லாம் தூக்கி கொடுக்க முடியாது என்று மனதிற்குள் சிவா குமுறிக்கொண்டிருந்தான். மாலை மணி 6:15, சிவாவின் செல்போன் ஒலித்தது. சிவா போன் எடுத்து ஹலோ என்றான். ஹலோ சிவா, குமார் பேசுறேன்டா, ஆறு மணிக்கு மேலே போன் பண்ண சொன்னியே...இன்னிக்கு ப்ரீயா, மீட் பண்ணலாமா என்றான். ஓ ஆமாம் குமார்...மறந்தே போய்டேன்...நீ என்ன பண்ணு, ஒரு ஏழு மணிக்கு ஸ்பென்சர் பிளாசா வந்துரு, நான் என்டரன்ஸ் கிட்டே வெயிட் பண்றேன், ஆனா அரைமணி நேரத்துக்கு மேலே பேச முடியாது, எனக்கு நிறைய வேலை இருக்கு என்று சற்று கண்டிப்பாக கூறினான் சிவா.

இல்லடா அரைமணி நேரம் போதும்...ஆனா முக்கியமான விஷயம், எங்கயும் போகாம வெயிட் பண்ணுடா.

மணி ஏழு பதினைந்து.  ஸ்பென்சர் பிளாசா.  சிவா பொறுமையில்லாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். என்ன இவன், என்னை ஏழு மணிக்கு வர சொல்லிவிட்டு இன்னும் இவனை காணும். இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணலாம், அவன் வரலேனா கிளம்பி போய்டே இருக்க வேண்டியதுதான். இவனை எல்லாம் மதிச்சி இங்கே வந்து வெயிட் பண்றேன், இவன் என்னடான இவ்வளவு லேட்டா வரான். இப்படி சிவா கோபப்பட்டு கொண்டிக்கும் போதே குமார் அங்கு வந்து சேர்ந்தான்.

சாரிடா சிவா, டிராபிக் அதான் கொஞ்சம் லேட் ஆச்சு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்றான்.
ஏண்டா, இருபது நிமிஷமா வெயிட் பண்றேன், நான் அர்ஜண்டா போகணும்னு சொன்னேன் இல்லே. சரி சீக்கிரம் சொல்லு என்ன விஷயம்னு என்று படபடத்தான் சிவா.

என்ன சிவா, இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்றோம், எப்படி இருக்கேன்னு கூட ஒரு வார்த்தை கேட்காம...நீ என்னடான கால்லே சுடு தண்ணி ஊத்தினா மாதிரி பறக்குறே...

சாரிடா கொஞ்சம் ஆபீஸ் டென்ஷன்,  சரி, என்ன விஷயம் சொல்லு...என்றான் சிவா.

நான் மலேசியாலே இருந்து இங்கேயே செட்டில் ஆகலாம்னு வந்துட்டேன்டா, நாளைக்கு கோயம்பத்தூர் போறேன், அதுக்கு முன்னாடி உன்னை பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் கூப்பிட்டேன்.

தெரியும்டா உனக்கு இப்போ பணம் தேவைப்படும்...அதான் என்னோட நினைப்பு வந்துருச்சு உனக்கு, இத்தனை நாள் எங்கடா இருந்தே, ஒரு கஷ்டம்னதும் கொஞ்சம் கூட வெக்கபடாம என்கிட்டே வந்து நிக்கிறியே... சாரிடா குமார், நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு தெரியுது...என்னாலே இப்போ ஏதும் உனக்கு பண உதவி செய்ய முடியாது. ஏற்கனவே உனக்கு நான் எவ்வளவோ செஞ்சுட்டேன், இனிமேல் என்னாலே உனக்கு எதுவும் செய்ய முடியாது. எனக்கும் லைப் இருக்கு, புரிஞ்சிப்பேன்னு நினைக்குறேன்...சாரி...நான் கிளம்புறேன்.

குமார் ஒரு நிமிடம் வாயடைத்து போய் கண்கள் குளமாக நின்றான். அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க முயன்ற சிவாவை பார்த்து ஓடினான். சிவா, சிவா...ஒரு ரெண்டு நிமிஷம் உன்கிட்டே பேசணும்டா, ப்ளீஸ் என்று தடுத்து நிறுத்தினான்...நான் சின்ன வயசிலே இருந்து உதவின்னு உன்னை தவிர வேற யார் கிட்டேயும் போய் கேட்டதில்லை. நீயும் நானும் சேர்ந்து வளர்ந்த உரிமையிலே தான் எப்பவும் உன்கிட்டே எனக்கு கஷ்டம்னா வந்து நிற்பேன். உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்து இருக்கேன்னு எனக்கு இவ்வளவு நாள் தெரியலேடா. மலேசியாவுக்கு வேலைக்கு போய் உன்கிட்டே வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா என்னோட விதி நான் நெனைச்ச மாதிரி வேலை அமையலே, சம்பளம் இல்லாம, சில நேரம் சாப்பாடு தூக்கம் இல்லாம ரெண்டு வருஷமா கஷ்டப்பட்டேன். உன்கிட்டே தரேன்னு சொன்ன பணத்தையும் தர முடியலே, வீட்டுக்கும் பணம் அனுப்ப முடியலே, இப்படி பல பிரச்சனைகளில் மாட்டிகிட்டேன். சரி விடு நடந்ததை பத்தி பேசி என்ன பிரயோஜனம்...ஆனா...இப்போ உன்கிட்டே பணம் வேணும்னு கேக்க வரலே சிவா. நான் மலேசியாவுலே இருக்கும் போது ஒருநாள் எதேச்சையா வாங்கின ஒரு லாட்டரி சீட்டுலே எனக்கு இருபது கோடி ரூபா விழுந்துது. அந்த பணம் கிடைச்சதும் முதல்லே உனக்கு தான் சொல்லனும்னு இங்கே கிளம்பி வந்தேன். என்னை பொருத்தவரைக்கும் நான் இன்னிக்கு இந்த நிலையிலே இருக்குறதுக்கு காரணம் நீ தான் சிவா. அதுக்கு கைமாறா என்னாலே எதுவுமே செய்ய முடியாது. நான் இது வரைக்கும் உனக்கு எதுவுமே கொடுத்ததில்லை. இந்த பெட்டிலே ஒரு கோடி ரூபா கேஷ் வெச்சு இருக்கேன், கூடவே ஒரு பிளான்க் செக்கும் வெச்சு இருக்கேன். நீ எவ்வளவு வேணும்னாலும் எழுதிக்கோ...தயவு செய்து மறுக்காம வாங்கிகோடா சிவா என்று நா தழுதழுக்க கூறி பெட்டியை கையில் திணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான். சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் சிலையாக நின்ற சிவா, அங்கிருந்து மெதுவாக நடந்து செல்லும் போது எதிரே ஒரு புத்தக கடையில் சுவற்றில் மாட்டியிருந்த கரும்பலகையில் தினம் ஒரு திருக்குறள் என்று எழுதி அதன் கீழே எழுதி இருந்த குறள் தெரிந்தது.

தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர் பயன் தெரிவார்.

Saturday, June 11, 2011

பொய்

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம்,  பொய்மையும் வாய்மை இடத்து  போன்ற வரிகளை பார்க்கும் போது,  நல்ல விஷயத்திற்காக ஒரு பொய் இல்லை பல பொய்கள் கூட  சொல்லலாம் என்று அறியலாம். ஆனால் பொய் சொல்வது தவறு என்று பல சான்றோர்கள் கூறவும், பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது போன்ற பழமொழிகளில் இருந்தும் அறிகிறோம். அதனால் இந்த பதிவு பொய் சொல்வது சரியா தவறா என்று தீர்மானிக்கவோ அல்லது யாரும் பொய் சொல்லகூடாது என்கிற போதனையோ அல்ல. ஏன் பொய் சொல்கிறோம் என்கிற ஒரு அலசல் மட்டுமே. இங்கு 'சொல்கிறோம்' என்று உங்களையும் ஒரு உரிமையுடன் என்னுடன் சேர்த்து கொள்கிறேன். அப்படி நீங்கள் இதுவரை பொய்யே சொல்லதவராக இருந்தால், ப்ளீஸ் இதற்கு மேலே நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஏனென்றால் இதை படித்துவிட்டு நீங்கள் கெட்டுபோய் விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் கூறுகிறேன். முதலில் முக்கியமாக ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறேன். இதை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காயப்படுத்த எழுதவில்லை. பல நாட்களாக மனதில் நினைத்து கொண்டிருந்ததை இப்போது எழுதுகிறேன்.  சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பொய் சொல்லி இருப்பார்கள்.  பொதுவாக பொய்யை சுயநலம் காரணமாகவோ அல்லது பயம் காரணமாகவோ சிறு வயதிலேயே கூற பழகி விடுகிறோம். சிறு வயதில் தவறு செய்து பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ இருந்து தப்பிக்க கூறும் சிறு சிறு பொய்களில் இருந்தே பொய்யெனும் குன்றா விளக்கை நாம் ஏற்ற துவங்கிவிடுகிறோம். இப்படி தொடங்கி பின்னர் வளர்ந்து வயது வந்ததும் அந்த அந்த நிலைக்கு ஏற்ப பல நேரங்களில் பொய் சொல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறோம். திருக்குறள் தொடங்கி பல சமய நூல்களில் கூட நல்ல விசயத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற கருத்து நமக்குள் திணிக்கபடுகிறது. பொதுவாக நன்மை தீமை என்பது அவரவர் நிலையில் இருந்து வேறுபடும். இதற்கு உதாரணமாக 'ஹே ராம்' என்ற திரைப்படத்தில் வரும் வசன வரிகளை கூறலாம். ஒரு ஓநாய் சிறிய குழந்தையை தூக்கிகொண்டு போனால் அது தவறில்லையா என்ற கேள்விக்கு அது அந்த ஓநாயாய் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் என்று பதில் வரும்.  மனிதனோ அல்லது விலங்கினமோ தன் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இயற்கையே கற்று கொடுத்திருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இங்கு சுயநலம் என்பது உயிர் வாழ்வது என்கிற மிக அடிபடையான உரிமையையே குறிக்கிறது.  கற்கால மனிதன் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்து கொண்டு தன் உணவை தானே வேட்டையாடி உண்ணும் நிலையில் இருந்து பரிணாம வளர்ச்சியால்  இன்று  சமூகம், அறிவியல், அன்பு, காதல், குடும்பம், உறவு, நட்பு இப்படி பலவற்றை சொல்லிகொண்டே போகும் அளவில் பல முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறான்.

இப்படி வளர்ச்சி பெற்ற மனித இனம் தன் இனத்திற்கே செய்யும் தாக்குதல்கள் பல இருந்தாலும், அன்றாட வாழ்வில் உள்ள  சமூக உறவில் காணப்படும் பொய்யை பற்றி மட்டும் பார்ப்போம். நாம் பல நேரங்களில் சூழ்நிலைக்கு தக்கவாறு பொய் சொல்லி தப்பித்துகொள்ள முயல்வோம். இதில் மிக  முக்கியமாக சுய விருப்பங்களை பாதுகாத்து கொள்ளும் ஒருவித தற்காப்பு உணர்வே தலையோங்கி இருக்கும்.  இத்தகைய பொய்கள் காதலில், உறவில், நட்பில், வேலை பார்க்கும் இடத்தில் என்று பல இடங்களில் இருக்கும். இங்கு காதல், உறவு, நட்பு, வேலை பார்க்கும் இடம் என்ற அனைத்தையும் பொதுவாக உறவு என்று எடுத்து கொள்ளலாம். அடிபடையில் உறவில் ஏன் பொய் வருகிறது என்று பார்த்தால், அது பல நேரங்களில் அந்த உறவை தன்னிடம் தக்கவைத்து கொள்ளும் முயற்சியாக தான் இருக்கும். எங்கே அந்த உறவு நம்மை விட்டு பிரிந்து விடுமோ என்கிற ஒரு வித தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். உதாரணத்திற்கு ஒரு காதலன் தன் காதலியிடம் தான் இதற்கு முன் எந்த பெண்ணுடனும் பழகியது இல்லை என்று பொய் சொல்லலாம். எங்கே தன் பழைய காதலை அவளிடம்  சொன்னால், தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என்ற பயத்தில் இத்தகைய பொய்யை கூறலாம். இது போன்ற பயமும், அதனால் கிடைக்கபோகும் தண்டனையும் தான் பொய் சொல்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.  சில நேரங்களில் ஒருவருடைய மனது புண்படகூடாது என்பதற்காக பொய் சொல்ல வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு பாட்டு நல்ல பாடுறீங்க, சாம்பார் சூப்பரா இருக்கு, இந்த டிரஸ் உங்களுக்கு நல்லா இருக்கு என்ற ரீதியில் சில பொய்களை சொல்ல நாம் தயங்குவதில்லை. இது போன்ற சிறு சிறு விசயங்களில் பொய் சொல்வதால் அந்த உறவு பலப்படுமேயன்றி பாதிக்கப்படாது. ஆனால் மற்ற சிக்கலான விஷயங்களை அடுத்தவர் மனம் புண்படகூடாது என்பதற்காக சில நேரங்களில் பொய் சொல்ல நேரிடும். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு, என்றாவது அந்த விஷயம் தெரிய வந்தால்,  நாம் அவர்களுடைய நம்பிக்கையை  இழந்துவிடுவோம். இங்கு ஒருவர் தன்னிடம் நம்பிக்கை வைத்துள்ள மற்றொருவரிடம் பொய் சொல்லும் போது அந்த பொய் அவருக்கு தெரிய வரபோவதில்லை என்று திடமாக நம்புவதால் தான் கூறுகிறார். ஆனால் அந்த பொய் வெளியே தெரிந்தால் அது அந்த உறவை வெகுவாக காயப்படுத்தும். அது மட்டும் அல்லாமல் அந்த பொய் நெடுநாட்களாக வளர்த்த நம்பிக்கையை முறித்துவிடும். அவ்வாறு முறிந்த நம்பிக்கைய மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவது மிகுந்த சிரமம், பல வருடங்கள் கூட ஆகலாம். மேலும் சிலர் சமுகத்தில் தன்னை அனைவரும் பெரிதாக மதிக்க வேண்டும் என்று பொய் சொல்வார்கள், எடுத்துக்காட்டாக குமாஸ்தாவாக இருக்கும் ஒருவர் தான் ஒரு பெரிய மேனேஜர் பதவியில் இருப்பது போல காட்டிகொள்வார், சைக்கிள் வைத்து இருக்கும் ஒருவர் பைக் வைத்திருப்பதாக சொல்வார். இப்படி பொய் சொல்லும் காரணங்களை பல விதமாக அடுக்கிகொண்டே போகலாம்.

சரி பொய் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பதிலாக ஒரு நிகழ்வையோ அல்லது நிகழாத ஒன்றையோ மாற்றி கூறுவது பொய் என்று வைத்துகொள்வோம். சரி நான் பொய் சொல்லவில்லை, ஆனால் வேண்டும் என்றே உண்மையை மறைத்துவிட்டேன் என்றால் அது பொய் ஆகுமா என்ற கேள்விக்கு என்ன பதில் என்று பல முறை எனக்குள் நானே கேட்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு விடை கூறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.  அதில் முதன்மையானது, அதை பற்றி நான் மறந்துவிட்டேன் என்று சொல்லி சுலபமாக தப்பித்து கொள்ளலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதை பொய் என்று கூற முடியாது. ஆனால் அந்த நிகழ்வை கூறக்கூடிய வகையில் பேச்சோ அல்லது மற்றொரு நிகழ்ச்சியோ நடந்தும், தெரிந்தே அந்த உண்மையை மறைத்திருந்தால் அதுவும் ஒருவகை  பொய் தான். முன்பு கூறியது போல் இதை பொய் என்று ஏற்றுகொள்வதில் அல்லது நிரூபிப்பதில் தான் சிக்கல்கள் உள்ளது.  இதில் மேலும் சிக்கலான ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியதை வெளியில் சொல்லலாமா என்பதாகும். அது சத்தியம், வாக்கு தவறாமை, நேர்மை போன்ற நியதிகளுக்குள் வந்துவிடுகிறது. அந்த குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நேரடியாக ஒருவர் கேட்கும் போது அதை பற்றி தெரியாது என்று கூறிவிடலாம அல்லது உண்மையை போட்டு உடைத்துவிடலாம. அப்படி தெரியாது என்று கூறினால் பொய் சொல்கிறோம் என்று ஆகிவிடும், அப்படியல்லாமல்  உண்மையை கூறினால் நாம் வெளியில் சொல்ல மாட்டோம் என்று கொடுத்த வாக்கு என்ன ஆவது போன்ற பல சிக்கலான கேள்விகள் வரும். இது போன்ற சூழ்நிலையில் கொடுத்த வாக்கை காப்பாற்றி பொய் சொல்வதே நல்லது என்பது என் கருத்து.

பல நேரங்களில் பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே  பொய் சொல்ல நேரிடும்.  ஒரு பொய்யை மறைக்க பல பொய்யை சொல்ல வேண்டியதாக இருக்கும் என்பதை போல, சிலர் ஏற்கனவே கூறிய பொய்யை காப்பாற்றுவதற்காக மேலும் பல பொய்களை சொல்லி பொய் சொல்வது பழக்கத்திற்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.  தொழில் ரீதியாகவும்  பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலை சிலருக்கு இருக்கும்.  வழக்கறிஞர்கள்  பெரும்பாலான நேரத்தில் பொய் சொல்ல வேண்டி இருக்கும். அது தொழில் தர்மம் என்ற கோட்பாட்டுகள் வந்துவிடும். மற்றபடி வியாபாரிகள் பொருளின் விலையை பற்றி கூறும் பொய்யும் இந்த வகை தான். மொத்தத்தில் பார்த்தால் ஏன் பொய் சொல்கிறோம் என்ற கேள்வியை விட, ஏன் பொய் சொல்லக்கூடாது என்கிற நிலை தான் இன்று இருக்கிறது. அதனால் அவரவர் சூழ்நிலையை பொருத்து சில பல பொய்களை சொல்வது மட்டுமே நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமானது. ஆனால் உறவுகள் பலப்பட முடிந்த அளவு அந்த உறவில் பொய் கலக்காமல் இருப்பதே நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. இதில் உங்களுக்கு உடன்பாடோ மாற்று கருத்தோ இருந்தால் தெரிவியுங்கள். 

Tuesday, May 24, 2011

துரோக சங்கிலி - சிறுகதை


இது சிறுகதை கிடையாது. ஆனா சிறுகதை மாதிரி....என்ன ரொம்ப குழப்பமா இருக்கா. எனக்கு கதை மாதிரி தோன்றி சில நிகழ்வுகளை இங்கு எழுதி இருக்கிறேன். படித்திவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

இனி இதோ துரோக சங்கிலி உங்கள் பார்வைக்கு.....
-------------------------------------------------------------
தருண், காலேஜ்லே படிக்கும் போது உன்னை காதலிச்சது என்னமோ உண்மை தான். இப்போ எனக்கு கல்யாணம் ஆயிருச்சு. இப்படி அடிக்கடி மீட் பண்ணி என்னை டார்ச்சர் பண்ணாதே. என்னோட அப்பா அம்மா கட்டாயத்தினாலதான் அவங்க சொன்னவரை கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என் மேலே உயிரையே வெச்சு இருக்குற அவருக்கு நான் உண்மையா இருக்கேன். என்னோட ஹஸ்பண்டுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தாங்கமாட்டார். என்னை இப்படி  கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை பண்ணாதே. உனக்கு மொத்தமா எவ்வளவு பணம் வேணுமோ சொல்லு, எப்படியாவது நான் கொடுக்குறேன்.

அதை கேட்டு தருண் கடகடவென்று சிரித்தான். ப்ரியா நீ ஒரு தங்க முட்டை போடுற வாத்து, உன்கிட்டே அப்பப்போ வந்து எனக்கு தேவையானதை வாங்கிட்டு போறது தான் எனக்கு பிடிச்சிருக்கு, இப்படி ஒரே பேமன்ட் கொடுத்து என்னை கழட்டி விட பாக்காதே.

ப்ளீஸ் தருண், என்னாலே ஒவ்வொரு தடவையும் எதாவது பொய் சொல்லி பணம் கேக்க முடியாது.  என்னோட வாழ்கையை கெடுக்காதே. என்னை தயவு செஞ்சு விட்டுரு.

இதோ பாரு ப்ரியா,  இந்த பணத்துக்கும் வசதிக்கும் ஆசைப்பட்டு தானே என்னோட காதலை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போனே, என்னை விட்டுட்டு போகதேன்னு உன்னை நான் எவ்வளவு கெஞ்சினேன். நீ மட்டும் எனக்கு கிடைச்சு இருந்தா, எனக்கும் ஒரு  குடும்பம் வாழ்க்கைன்னு இருந்திருக்கும். நீ எப்போ உங்க வீட்டுல பாத்த பணக்கார மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்க படிப்பை பாதில நிறுத்திட்டு போனியோ அன்னிக்கே என்னோட படிப்பும் போச்சு. படிப்பு இல்லாம ஒரு நல்ல வேலை இல்லாம,  இன்னிக்கு நான் இந்த நிலைமைலே நிக்கறதுக்கு நீயும் ஒரு காரணம். உன் புருஷனுக்கு தான் கோடி கோடியா சொத்து இருக்கே, அதுலே இருந்து எனக்கு தேவை படும்போது கொஞ்சம் பணம் கொடுகறதுலே நீ ஒன்னும் குறைஞ்சு போக  மாட்டே. அப்பிடி குடுக்கலேனா  நாம எடுத்துகிட்ட போட்டோஸ், லெட்டர் எல்லாம் உன் புருசனுக்கு அனுப்பிருவேன்.  அதான் எப்பவும் பாதுகாப்பா அதை எல்லாம்  என் கையிலேயே வெச்சுட்டு சுத்துறேன் என்று போட்டோஸ், லெட்டர் அடங்கிய  கவரை எடுத்து ப்ரியாவின் முன்னே ஆட்டினான்.
அய்யோ தருண், அப்பிடி எல்லாம் பண்ணிடாதே,  இந்தா இப்போதைக்கு இதை வச்சுக்கோ, என் ஹஸ்பண்ட் வர நேரம் ஆச்சு, நீ சீக்கிரம் கிளம்பு என்று அவசரமாக கூறினாள் ப்ரியா.

என்ன ப்ரியா, நாம லவ் பண்ணும்போது என் கூடவே இருக்கணும்னு சொல்லுவே, இப்போ இப்படி துரத்துறியே, சரி நான் அப்புறமா உன்கிட்டே போன்லே பேசுறேன் என்று கூறி கதவருகே சென்றதும், அந்த ஆட்டோமாடிக்  டோர் வெளியில் இருந்து யாரோ சாவி போட்டு திருகியதால் ப்ளக் என்று ஓபன் ஆனது.

அடுத்த வினாடி உள்ளே நுழைந்தவனை பார்த்து பிரியா அவசரமாக, எ..எ...என்னங்க சீக்கிரம் வேலை முடிஞ்சிருச்சா, அதுக்குள்ளே வந்துடீங்க, இது என்னோட காலேஜ்லே கூட படிச்ச தருண் என்று அறிமுகப்படுத்தினாள்.

போதும் நிறுத்து பிரியா, இவ்வளவு நேரம் வெளிலே இருந்து நீங்க பேசிட்டு இருந்ததை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன். இந்த விஷயத்தை  என்கிட்டே முன்னாடியே ஏன் நீ சொல்லலே, இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விட கூடாது. டேய் யாருக்கு தாண்டா பழைய காதல் இல்லை. நீ உண்மையா ப்ரியாவை காதலிச்சு இருந்தீனா இப்படி அவளை தொல்லை பண்ணுவியா. மரியாதையா அந்த போட்டோஸ், லெட்டர் எல்லாத்தையும் கொடுத்துட்டு இங்கே இருந்து போயிரு, என்று கூறியபடி தன் கைபெட்டியில் இருந்து துப்பாக்கியை எடுத்து தருண் முகத்துக்கு நேரே நீட்டினான்.

பயத்தில் தருணின் முகம் வெளிறியது, சார் சார், ஒன்னும் பண்ணிடாதீங்க, இந்தாங்க எல்லாத்தையும் நீங்களே வெச்சுக்கோங்க, நான் இங்கே இருந்து போய்டுறேன் என்று தன் கையில் இருந்த கவரை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு விறுவிறுவென்று  திரும்பி பார்க்காமல் வெளியில் சென்றான்.

தருண் வெளியே சென்றதும் பெரிதாக புன்னகைத்த பிரியா, இப்ப தான் நிம்மதியா இருக்கு கிஷோர். எப்படி இந்த தருண் கிட்டே இருந்து தப்பிபோம்னு ஒரே கவலைலே இருந்தேன். நல்ல வேலை நம்ம பிளான் பண்ணினா மாதிரி, அவர் பிசினஸ் விஷயமா வெளிநாடு போய் இருக்குற நேரத்துல,  நீ  என் ஹஸ்பண்ட் மாதிரி நடிச்சு அவன் கிட்டே இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டே. அந்த கவரை இங்கே கொடு நான் கிழிச்சு போடுறேன்.

இல்லை பிரியா, இதை வீட்டுகுள்ளேயே வெச்சு கிழிச்சு போடுறது அவ்வளவு சேப் கிடையாது. நான் கொண்டு போய் வெளிலே எங்காவது டிஸ்போஸ் பண்ணிடுறேன். நீ போய் ரெஸ்ட் எடு என்று கூறியபடி ப்ரியாவை மேலும் ஏதும் பேசமுடியாதபடி அங்கிருந்து கிளம்பினான் கிஷோர்.

அவன் சென்றதும், அப்பாடி இனிமேல் இந்த தருண் தொல்லை இருக்காது என்று ஒரு பெருமூச்சுடன் படுக்கையில் விழுந்தாள். இந்த கிஷோர் பரவாயில்லை, சின்ன வயசிலே இருந்து பக்கத்துக்கு வீட்டுலே ஒண்ணா வளர்ந்ததாலே கூட பொறந்தவன் மாதிரி, எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாம இவ்ளோ பெரிய ஹெல்ப் செஞ்சு இருக்கான். அவனுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அனுப்பிட்டேன் என்று ஏதேதோ நினைத்தபடி தூங்கினாள்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து காலை உணவு சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்து ஒரு துண்டு இட்லியை வாயில் எடுத்து போட்டவுடன் அருகில் இருந்த செல்போன் அடித்தது. போனை எடுத்தும் மறுமுனையில் கிஷோர் குரல் கேட்டது.

ஹலோ பிரியா, நான் கிஷோர் பேசுறேன், நேத்து தருண் கிட்டே இருந்து வாங்கின கவரை டிஸ்போஸ் பண்ணலாம்னு தான் போனேன், ஆனா எனக்கு உன்னோட உதவி கொஞ்சம் தேவைப்படுது, அதனாலே எதுக்கும் இருக்கட்டுமேனு நானே அதை வெச்சு இருக்கேன். எனக்கு பணம் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம், அப்புறமா வேணும்னா கேட்டு வாங்கிக்குறேன்.  ஆனா இப்போ உங்க வீட்டுகாரரோட கம்பெனிலே ஒரு நல்ல வேலை வாங்கி கொடுத்துரு. எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. ஒரு நல்ல வேலைலே இருந்தாதானே எனக்கும் கொஞ்சம் மதிப்பா இருக்கும்.  நான் ஈவ்னிங் வந்து நேர்லே மீட் பண்ணி விவரமா சொல்றேன் என்று போனை வைத்தான். அதை கேட்டவுடன் வாயில் போட்ட இட்லியை முழுங்காமல் விக்கித்து அமர்ந்திருந்தாள் பிரியா. ச்சே இந்த கிஷோரை நல்லவன்னு நெனைச்சோம், எவ்ளோ நம்பினோம், இப்படி பண்ணிட்டானே. வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் தான் பல பேரு நல்லவங்களா இருக்காங்க. இனிமேல் அவ்வளவு சீக்கிரத்துலே யாரையும் நம்ப கூடாது. சிறிது நேரத்தில் ஏதோ முடிவுக்கு வந்தவளாக செல்போனை எடுத்து தன் கணவனை அழைத்தாள். என்னங்க நீங்க இன்னிக்கே கிளம்பி இங்கே வர முடியுமா, நான் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயத்தை பேசணும்.

ஒ என்ன பிரியா இது, சின்ன குழந்தை மாதிரி சொல்றே. நான் இன்னும் ரெண்டு நாள் இங்கே தாய்லாந்த்லே இருக்கணும், நிறைய முக்கியமான வேலைங்க இருக்கு என்றான் நீச்சல் குளத்தில் இரண்டு அழகிகளின் அணைப்பில் இருந்தபடி செல்போனில் பேசிய ப்ரியாவின் கணவன்.

-------------------------------------------------------------
ஓகே, படிச்சிட்டீங்களா...இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த கதையில் வரும் சில கதாபாத்திரங்கள் மற்றவருக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள். யார் செய்தது மிக பெரிய துரோகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படி நினைக்க என்ன காரணம் என்றும் முடிந்தால் கூறுங்கள்.

Sunday, May 22, 2011

செயற்கைக்கோள் சுற்றுப்பாதை - ஒரு அறிவியல் அலசல்

ப்ளாக் சைட் ஆரம்பித்துவிட்டு  ரொம்ப நாள் எழுதவில்லேயே என்ற குற்ற உணர்வு அவ்வபோது மனதை உறுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், எதேச்சையாக செய்திகளை மேய்ந்துகொண்டிருக்கும் போது,  இந்தியாவின் புதிய நவீன செயற்கைக்கோள் GSAT-8, மே 21, 2011 சனிக்கிழமை அன்று வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது என்ற செய்தியை காண நேர்ந்தது. இதை பார்த்ததும் செயற்கைக்கோள் மற்றும் அதன் சுற்றுப்பாதை பற்றி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று மனம் பரபரத்தது. தொழில் முறையில் இதற்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சொந்த ஆர்வத்தில் அங்கங்கு படித்து அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். சரி இனி விஷயத்திற்கு நேராக செல்கிறேன். 

முதலில் செயற்கைக்கோள் என்றால் என்ன என்று பார்க்கலாம். ஒரு பெரிய பொருளை (object) மற்றொரு சிறிய பொருள் சுற்றி வந்தால் அதை ஆங்கிலத்தில் சாட்டிலைட் என்று அழைகின்றனர். நம் பூமி சூரியனின் சாட்டிலைட், நிலவு பூமியின் சாட்டிலைட். இவைகள் நேச்சுரல் சாட்டிலைட் என்று அழைக்கபடுகின்றன. மனிதன் செயற்கையாக பூமியின் சுற்று பாதையில் சுழல விடும் பொருளை ஆர்டிபிசியல் சாட்டிலைட் அல்லது செயற்கைக்கோள் என்று அழைக்கிறோம். ஆனாலும் பொதுவாக சாட்டிலைட் என்று ஆர்டிபிசியல் சாட்டிலைட்டை மட்டுமே கூறுகின்றனர். பூமியை சுற்றி ஆயிரக்கணக்கில் செயற்கைகோள்கள் சுற்றி வருகின்றன. அவை தொலை தொடர்பு, வானிலை பற்றி தகவல் அறிய, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் காண என பல்வேறு வகைகளில் நம் வாழ்வில் உதவுகின்றன. இன்றைய காலகட்டத்தில் செயற்கைக்கோள் நம் அன்றாட வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது.

சரி செயற்கைக்கோள் பற்றி ஒரு சிறிய விளக்கம் பார்த்தாகிவிட்டது, இப்போது  சுற்று பாதை என்றால் என்ன என்று  பார்க்கலாம். சுற்றுப்பாதையை பற்றி புரிந்துகொள்ள முதலில் க்ராவிடி எனப்படும்  ஈர்ப்பு விசையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஈர்ப்பு விசை என்பது அனைத்து பொருட்களையும் தன்னுள்  இழுத்துகொள்ளும் ஒருவித சக்தி ஆகும். இந்த அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்பு சக்தி உள்ளது. இந்த சக்தி அந்தந்த பொருளில் உள்ள நிறை (Mass) கொண்டு மாறுபடும். உதாரணத்திற்கு உங்களுக்கு என்று ஒரு ஈர்ப்பு களம் உண்டு. உங்கள் அருகில் இருக்கும் மேஜை நாற்காலி போன்ற பொருட்களுக்கும் ஈர்ப்பு களம் உண்டு. ஆனால் உங்களுக்கும் நாற்காலிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மிகவும் வலிமையற்றதாக உள்ளதால் அதை உணர முடிவதில்லை. பூமி போன்ற பெரிய கோளின் ஈர்ப்பு விசை மிகவும் வலிமையானது என்பதால் அதை உணர முடிகிறது.  பூமி தன்னை சுற்றி உள்ளை அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி ஈர்த்துக்கொண்டிருகிறது. ஒரு கல்லை வானத்தை நோக்கி தூக்கி போட்டால் அது வேகமாக கீழே வந்து விழுகிறது. அந்த கல் வந்து விழும் விசையை F=mg என்ற சூத்திரத்தால் குறிக்கின்றனர். இதில் m என்பது அந்த பொருளின் நிறை, g என்பது புவிஈர்ப்பு முடுக்கம் (acceleration due to gravity). பூமியில் கடல் மட்ட அளவில் புவிஈர்ப்பு முடுக்க அளவு 9.81 m/s 2ஆகும்.

ஒரு கல்லை வேகமாக உங்கள் எதிரே வீசினால் அது சிறிது தூரம் சென்று கீழே விழுகிறது. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் ஓரளவு விசையுடன் வீசப்பட்ட கல் A என்று குறிக்கப்பட்ட இடத்தில் விழுகிறது. மேலும் சற்று விசையுடன் வீசினால் B என்று குறிக்கப்பட்ட இடத்தில் விழுகிறது. கல் வீசப்படும் விசை மேலும் மிக அதிகமாக கூட்டினால் C எனபடும் சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அப்படி ஒரு சுற்று பாதையில் சுற்ற முதலில் சரியான விசையுடன் கல்லை வீசவேண்டும். 


இங்கு A மற்றும் B -ல் கல் விழுவதற்கு காரணம் காற்றின் உராய்வால் வேகம் குறைந்து பூமியின் புவிஈர்ப்பு விசையால் கீழே இழுக்கபடுகிறது. அதே நேரத்தில் அந்த கல் வேகமாக எறியப்பட்டு பூமியின் வளிமண்டலத்தை தாண்டி வெளியே சென்று விட்டால் அங்கு தடுப்பதற்கு காற்று மண்டலம் இல்லாததால் அது சீராக ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கவேண்டும். இது நியூட்டனின் முதலாம் விதி. ஒரு பொருள் ஒய்வு நிலையில் இருக்கும் போது அதே ஒய்வு நிலையில் இருக்கும் அல்லது அந்த பொருள் நகர்ந்துகொண்டிருந்தால் அதே வேகத்தில் மற்றும் திசையில்  நகர்ந்துகொண்டிருக்க வேண்டும். எதாவது ஒரு விசை வெளியில் இருந்து அந்த பொருளை தாக்காதவரை அதன் நிலை அப்படியே இருக்கவேண்டும். இதன் படி வளிமண்டலத்தை தாண்டி வீசி எறியப்பட்ட கல் தடுப்பதற்கு வேறு விசை இல்லாததால் நேராக செல்ல முயலும். ஆனால் பூமியின் புவிஈர்ப்பு அந்த கல்லை கீழே இழுக்கும். அதனால் திசை மாறி கல் கீழே ஆனால் வேகம் குறையாமல் பயணிக்கும். கீழே உள்ளே படத்தில் உள்ள புள்ளி அதன் வேகத்தில் நேராக செல்ல முயற்சிகிறது. ஆனால் பூமியின் ஈர்ப்பு விசையால் திசை மாறி பயணிக்கிறது. இது தொடர்ந்து நடப்பதால் சுற்றுப்பாதை உருவாகிறது. 


இப்படி புவிஈர்ப்புக்கும் கல் சென்று கொண்டிருக்கும் வேகத்திற்கும் இடை நடக்கும் போர் தான் சுற்றுப்பாதை உருவாக காரணம். இங்கு நான் எளிமை கருதி வளிமண்டலத்தை தாண்டி கல்லின் வேகத்தை தடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறேன். வளிமண்டலத்தை தாண்டியும் கண்ணுக்கு தெரியாத பல சங்கதிகள் வேகத்தை தடுக்க உள்ளது ஆனாலும் அது காற்றின் உராய்வு போன்று வலிமையானது அல்ல. இப்படி உருவாகும் சுற்றுப்பாதை வட்டமாகவோ நீள் வட்டமாகவோ எறியப்பட்ட வேகத்தை பொருத்து அமைகிறது. 

இந்த பாணியிலேயே செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் விடப்படுகிறது. அதை கொண்டு சென்று சுற்றுப்பாதையில் விட ராக்கெட்டை பயன்படுத்துகின்றனர். பொதுவாக சுற்றுப்பாதையில் எறியப்பட்ட செயற்கைக்கோள் அதன் பாதையில் சீராக சென்று கொண்டிருக்கும், ஆனால் சில நேரங்களில் வளிமண்டலத்தின் ஈர்ப்பால் பாதை மாறி கீழே வர சாத்தியம் உண்டு. அது போன்ற நேரங்களில் சிறிது உந்துதல் கொடுத்து மீண்டும் சரியான சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

பல இடங்களில் எளிமை கருதி நுணுக்கமான அறிவியல் தகவல்களை தரவில்லை.  ஏதேனும் பிழை இருந்தால் தவறாமல் சுட்டிகாட்டுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.




Tuesday, April 12, 2011

விண்வெளியில் முதல் மனிதன்


யூரி காகரின்
இன்று ஏப்ரல் 12, 2011. சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த யூரி காகரின் என்பவர் விண்கலத்தில் ஏறி அதிவேகத்தில் பயணம் செய்து புவிஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு நம் பூமிப்பந்தை ஒரு முறை வலம் வந்து பத்திரமாக தரை இறங்கினார். அந்த நாள் மனித குலத்தின் சாதனைகளில் ஒரு முக்கியாமான மைல் கல் என்று கூறலாம்.  அதை தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் குறைவில் அமெரிக்க விண்வெளி வீரர் அலன் ஷெபர்ட் விண்வெளியில் பறந்தார். அதன் பின்னர் 1969 -ல் அமெரிக்க விண்வெளி வீரர்  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் காலடி பதித்த முதல் மனிதன் என பெயர் பெற்றார்.

இப்படி விண்வெளி ஆராய்ச்சியில் மனித குலம் பல மகத்தான சாதனைகளை புரிந்துகொண்டிருகிறது. சாதாரண மனிதன் மட்டும் அல்லாமல் பல அறிவில் சிறந்த விஞ்ஞானிகள் கூட விடை கூற முடியாத பல புதிர்களை கொண்டது விண்வெளி. ஆம், மனிதன் விடை காண முடியாத பல விஷயங்களில் விண்வெளி கண்டிப்பாக மிக முக்கியமானது. அதில் முக்கியமானது விரிவடைந்து கொண்டே நம்ம விட்டு விலகி செல்லும் கேலக்சி எனப்படும் பல நட்சத்திர மண்டலங்கள் (இதை பற்றி எப்போதாவது தனியாக ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது).  இது போல பல புதிர்கள் கொண்ட விண்வெளியை பற்றி மனிதனின் தேடல் சலிக்காமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த தேடல் தேவையா இது உண்மையிலே மனித குலத்திற்கு உபயோகமானதா என்று ஒரு சாரர் கேள்வி எழுப்பினாலும், மனிதனின் தேடல் தான் நம் சமுதாயம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே இந்த தேடல் தொடரட்டும் என்று இதற்காக உழைத்தவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிப்போம்.

Wednesday, March 9, 2011

வீட்டில் அடிக்கடி தேடும் பத்து பொருட்கள்

அடச்சே, எதுவும் வெச்சது வெச்ச எடத்துல இருக்காது, எங்கே போச்சு என்று...வீட்டிலேயே அடிக்கடி தொலைத்துவிட்டு தேடும் பத்து பொருட்கள் இங்கே....

1) பேனா
2) டிவி ரிமோட்
3) சீப்பு
4) கார்ட்லெஸ் போன்
5) செல்போன் மற்றும் சார்ஜர்
6) பைக் அல்லது கார் சாவி
7) சாக்ஸ் 
8) டார்ச் லைட்
9) பாட்டரி
10) குடை

இந்த லிஸ்ட்லே ஏதாவது மிஸ் ஆகி இருந்தா நீங்க சொல்லுங்க.....

Saturday, March 5, 2011

குழந்தைகளும் நேர்மையும்

நேர்மை என்பது ஒரு நல்லொழுக்கம், அதை நாம் குழந்தைகளுக்கு கற்று தர முடியும். சரி, ஏன் நாம் நேர்மையை குழந்தைகளுக்கு கற்று கொடுக்கவேண்டும். இதற்கு பதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

இதன் பொருள், ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவரது மக்களை (குழந்தைகளை) கொண்டு அறிந்துகொள்ளலாம். இங்கு எச்சம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஓன்று மக்கள் அதாவது குழந்தைகள் மற்றொன்று அவருக்கு பின் எஞ்சி நிற்கும் புகழ் சொல்லோ அல்லது பழி சொல்லோ என்று பொருள் கொள்ளலாம். நண்பர் ஒருவருடன் சில மாதங்களுக்கு முன்னர் பேசிகொண்டிருந்த போது, அவர் தனக்கு சிறுவயதில் யாரும் நேர்மையாக இருக்கவேண்டும் என்று கற்று கொடுத்ததில்லை என்று வருத்ததுடன் கூறினார். அதை கேட்ட பின்னர் சிந்தித்து பார்த்ததில் உண்மைதான், ஏட்டு படிப்பாக நேர்மையாக இருக்கவேண்டும் என்று படித்ததை தவிர, நடைமுறை வாழ்க்கையில் யாரும் நமக்கு எப்படி நேர்மையாக இருக்கவேண்டும் என்று கற்று கொடுத்ததில்லையே என்று தோன்றியது. குழந்தைகள் வளரும் பருவத்திலே படிப்பு, விளையாட்டு, இசை, நடனம் என பலவற்றை கற்று கொடுக்கும் அதே நேரத்தில், நேர்மையான நடத்தையை கற்று கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இளம் கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப இளம் வயதில் எதையும் சிந்திக்காமல் செய்யும் தைரியம் இருக்கும். அது மட்டும் இன்றி, நன்மை எது தீமை எது என்று பகுத்தறிவதும், இளம் வயதில் சற்று கடினம் தான். வயதும் வாழ்கை அனுபவமும் சேர்ந்தே ஒருவற்கு நன்மை தீமையை இனம் கண்டுகொள்ள உதவுகிறது. 

முதலில் நேர்மை என்றால் என்ன என்று பார்க்கலாம். இதற்கு விளக்கம் ஒரு சில வார்த்தைகளில் கூறுவது கடினம். நேர்மை என்பது உண்மையாக, நடுவுநிலைமையுடன்,  வாக்கு தவறாமல், ஏமாற்றாமல், பொய் சொல்லாமல் இருப்பதே ஆகும். இப்படி நேர்மையாக இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கே சிரமம் தான். அதற்கு முக்கிய காரணம் நேர்மையாக இருப்பதால் உடனடி நன்மை எதுவும் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் நேர்மை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதனால் கிடைக்கும் உடனடி நன்மை தான். (இங்கு ஒரு இடைச்செருகல், அப்படி கிடைக்கும் நன்மை  உண்மையிலேயே நன்மையா என்பதை காலம் தான் சொல்லும்). உதாரணதிற்கு இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது, மேஜையில் இருக்கும் தண்ணீர் குவளையை கிழே தட்டி விட்டு தண்ணீர் முழுவதும் கொட்டிவிட்டது என்று வைத்துகொள்வோம்,  நீங்கள் யார் இதை செய்தது என்று கேட்டால், பொதுவாக அந்த இரண்டு குழந்தைகளும் நான் செய்யவில்லை என்று தான் கூறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் ஒருவித தற்காப்பு முயற்சியே ஆகும். நான் தான் கிழே கொட்டினேன் என்று கூறும் உண்மையினால் கிடைக்க போகும் தண்டனை பற்றி பயத்தினால் அவர்கள் பொய் சொல்லும் கட்டாயத்திற்கு தள்ள படுகின்றனர். நேர்மையின்மை என்பதில் ஒரு பகுதி தான் பொய் சொல்வது என்றாலும், இந்த பதிவில் எளிமையை கருதி நாம் நேர்மையின்மை மற்றும் பொய் சொல்வதை ஒரே பொருளில் எடுத்துகொள்ளலாம். 

சாதாரணமாக பொய் சொல்லும் பழக்கம் எல்லா குழந்தைகளிடமும் இருக்கவே செய்கிறது. இது முதலில் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று தோன்றினாலும், அது தவறு என்று அவர்களுக்கு புரியவைக்காமல் விட்டுவிட்டால் பின்னால் அது அவர்கள் வாழ்வில் பிரச்சனையாகலாம். முதலில் குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடித்து அந்த அடிப்படை பயத்தை ஒழிக்க வேண்டும். இதை சொல்வது போல் செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. நாம் எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும், அவர்கள் அந்தந்த செயலுக்கேற்ப,  சூழ்நிலைகேற்ப அதனால் கிடைக்கபோகும் தண்டனைகேற்ப பொய் சொல்லலாமா வேண்டாமா என்று முடிவு செய்கின்றனர். தண்டனை பயம் மட்டுமே பொய் சொல்ல காரணம் கிடையாது, சில பதின்ம வயது குழந்தைகள் தங்கள் நட்பு வட்டாரத்தில் தங்களை அனைவரும் உயர்வாக நினைக்க பல பொய்களை கூறுகின்றனர். 

சரி எப்படி நேர்மையை கற்று கொடுப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு விடை கூறுவது அவ்வளவு சுலபமானது இல்லை என்றாலும், எனக்கு தோன்றிய மற்றும் தெரிந்த சில வழிகளை கூறுகிறேன். முதலில் கற்றுகொடுக்கும் நாம் நேர்மையாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேர்மையாக இருப்பதில் முன் உதாரணமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நேர்மையை சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ கற்று கொடுக்க முடியாது. அது அவர்கள் வாழ்வோடு இணைந்து இருக்க வேண்டும். அவர்கள் நேர்மையை அல்லது நேர்மையின்மையை முதலில் வீட்டில் இருந்து தான் கற்று கொள்கின்றனர். முக்கியமாக பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதற்கு முக்கிய தூண்டுகோலாக இருகின்றனர். குழந்தைகள் எங்கே இதை எல்லாம் கவனிக்க போகிறார்கள் என்று நினைத்துகொண்டு பெற்றோர் செய்யும் பல செயல்களை மிக விரைவில் குழந்தைகள் கிரகித்து கொள்கிறார்கள். அந்த ஆளு வந்தா நான் வீட்டுல இல்லைன்னு சொல்லிடும்மா என்று அப்பா அம்மாவிடம் கூறுவதை கேட்கும் குழந்தைகள், அதே உத்தியை வேறு ஒரு சூழ்நிலையில் உபயோகிக்க தயங்குவதில்லை.

குழந்தைகள் நேர்மையாக இருக்க பெற்றோர் முக்கிய காரணமாக இருக்கும் அதே நேரத்தில், நேர்மையில்லாமல் இருபதற்கு பெற்றோர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. பள்ளி மற்றும் வீட்டின் அருகாமையில் கிடைக்கும் நட்பு முதலியவை நேர்மையை அல்லது நேர்மையின்மையை அவர்களுக்கு கற்று கொடுக்கும். அப்படி நேர்மையின்மையை அவர்கள் காணும் நேரத்தில் அடிக்கு அடி, உதைக்கு உதை என்னும் பாணியில் நேர்மையில்லாமல் நடக்க கூடும். அதனால் நேர்மையின்மையை அவர்கள் எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லிகொடுத்தல் அவசியமாகிறது. எதிராளி நேர்மை இல்லாமல் நடந்தால் பதிலுக்கு நாமும் நேர்மை இல்லாமல் நடக்க கூடாது என்பதை கூறவேண்டும். பொதுவாக எந்த ஒரு நல்ல விஷயத்தை எடுத்துகொண்டாலும் உடனடியாக நன்மை கிடைப்பது கடினம், நேர்மையும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அதனால் நேர்மையாக இருப்பதால் கிடைக்ககூடிய நன்மைகளை குழந்தைகளுக்கு எடுத்து கூறுதல் அவசியம். நேர்மையாக இருப்பதால் காலபோக்கில்  கிடைக்கும் மிகபெரிய நன்மை மற்றவர்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கை. அதற்கு அடுத்து, நாம் உண்மை என்று நம்புவதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதால் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துகொள்ளலாம்.  மேலும் தெளிவான மனதும், எதை பற்றியும் தயங்காமல் பேசக்கூடிய தைரியமும் கிடைக்கும். நேர்மையாக இருந்தால்  வீட்டில் மற்றும் சமூகத்தில் அனைவராலும் மதிக்கபடுவாய் என்றும், நேர்மையாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை நீதிகதைகள் மூலமாகவோ, அவர்களிடம் சொல்ல முடிந்த நிஜ வாழ்கை சம்பவத்தையோ உதாரணமாக கூறலாம். என்ன சொல்லலாம் என்பது குழந்தைகளின் வயது மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றவற்றை கொண்டு மாறுபடும். 

நான் ஆரம்பத்தில் கூறியது போல நேர்மை பற்றி விவரிப்பது கடினம். அது ஒரு நெடுந்தூர பயணம், பல நேரங்களில் பாதை கரடு முரடாக இருக்கும். ஆனால் சிறிது காலம் பழகிவிட்டால் நேர்மையாக இருப்பதை தவிர வேறு எதையுமே நினைக்க தோன்றாது. நேர்மையை கடைபிடித்தால் ஒட்டுமொத்த வாழ்கை தரம் மேன்மை அடையும். இப்படி நிறைய கூறிக்கொண்டே போகலாம். நேர்மையை பற்றி இவ்வளவு பிரச்சாரம் செய்வதால் நான் பெரிய உத்தமன் என்று காட்டிகொள்ள முயற்சிக்கவில்லை. முடிந்தவரை நேர்மையாக இருக்க முயற்சிக்கிறேன், அதை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நேர்மையை பற்றி  என்னால் முடிந்தவரை ஒரு சிறிய பகுதியை மட்டும் இங்கு பகிர்ந்திருக்கிறேன். ஏதேனும் பிழையோ, மாற்று கருத்தோ இருந்தால் கூறுங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...