Wednesday, August 31, 2011

ஒரு பதிவரின் கதை


அலுவலகத்தில் இருந்து வந்து பைக்கை நிறுத்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரவியை பார்த்தேன்.

ஏண்டா ரவி, ஸ்கூல்லே இருந்து வந்ததுலே இருந்து விளையாட்டுதானா, கொஞ்சம் நேரம் வீட்டுலே உக்காந்து படிக்ககூடாதா என்று கத்தினேன்.

இதோ வரேன் டாடி, ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்...

சரி, சரி சீக்கிரம் வா என்றபடி உள்ளே சென்று, வழக்கம் போல சோபாவில் சாய்ந்து இன்று என்ன பதிவு எழுதலாம் என்று நினைத்துக்கொண்டே, லேப்டாப்பில் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.

பின் குறிப்பு: ஒரு சடன் பிக்க்ஷன் பாணியில் இந்த 55 வார்த்தை சிறுகதையை முயற்சித்திருக்கிறேன். அதனால் எல்லா விஷயங்களையும் விளக்காமல் உங்கள் கற்பனைக்கே விட்டிருக்கிறேன். 

Tuesday, August 30, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #1

முன்பு விண்வெளியில் முதல் மனிதன் என்ற ஒரு பதிவில் விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதாகக் கூறிப் பின்னர், எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்று ஒரு முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். மேலும் ஒரே பதிவில் பிரபஞ்சம் பற்றி நான் கூற விரும்பும் அனைத்தையும் அடைப்பது சற்று சிரமம் என்பதால், அதை ஒரு தொடராக எழுதலாம் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளேன். வானவியலைப் பற்றிப் படிப்பது எனது பொழுது போக்கு மட்டுமே, தொழில்முறையில் எனக்கு இந்தத் துறை சம்பந்தம் இல்லாதது. எனவே எதாவது தவறு இருந்தால் கூறுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

இதோ பிரபஞ்சப் புதிர்கள் உங்கள் பார்வைக்கு...

-----------------------------------------------------------------------


ஒரு நாள் மேகங்கள் அற்ற இரவு நேரத்தில் ஆரவாரம் அதிகம் இல்லாத இடத்தில் இருந்து விண்ணை சற்று உற்று நோக்குங்கள். பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுவதை எந்தவித தொலைநோக்கியும் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும். சிறிது சிறிதாக மின்னும் அத்தனை நட்சத்திரங்களும் நாம் வாழும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

நம் சூரியனும் ஒரு நட்சத்திரமே. என்ன, நமக்கு கொஞ்சம் அருகில் இருக்கிறது. எவ்வளவு அருகில் என்று கேட்கிறீர்களா ? சுமார் 93 மில்லியன் மைல்கள் அருகில் உள்ளது. இதை விட பல ஆயிரம் மடங்கு தூரத்தில் இருப்பதால் தான் மற்ற நட்சத்திரங்கள் நமக்கு மிகச்சிறியதாக தெரிகின்றன. நம் சூரியனை தவிர்த்து பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான ப்ராக்சிமா செண்டாரி (Proxima Centuari or Alpha Centauri C) சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யகூடிய தொலைவு. ஒளியின் வேகம் தோரயமாக ஒரு வினாடிக்கு 186 ,282 மைல்கள். கணக்குப் போட்டுப்பார்த்தால் சுமார் 5.88 மில்லியன் மில்லியன் மைல்கள் ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் என்று தெரிகிறது. ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் ப்ராக்சிமா செண்டாரி நட்சத்திரத்தை அடைய நமக்கு 4.3 ஆண்டுகள் ஆகும். சில நட்சத்திரங்கள் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கூட இருக்கின்றன. நாம் சாதரணமாக இரவில் அண்ணாந்து பார்க்கும் பல நட்சதிரங்களின் ஒளியை அந்த நட்சத்திரம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உமிழ்ந்திருக்கலாம். நம் சூரியனில் இருந்து புறப்பட்ட ஒளி நம்ம வந்து சேர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகும். அதாவது நாம் பார்க்கும் சூரியன் எட்டு நிமிடங்களுக்கு முன்னதாக இருந்த நிலை, இப்போது இந்த நிமிடத்தின் நிலை அல்ல.

இப்படி ஒரு நட்சத்திர கூட்டத்திற்கிடையே ஒரு சிறிய கிரகத்தில் நின்று கொண்டிருக்கும் மனிதன் தன்னை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை பற்றி அறிய பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். அந்த முயற்சியில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த பிரபஞ்சம் இன்னும் பல புதிர்களை தன்னுள் கொண்டிருகிறது.

சரி பிரபஞ்சம், பிரபஞ்சம் என்று இந்தப் பதிவில் நான் வரிக்கு ஒரு தடவை எழுதும் பிரபஞ்சம் என்றால் என்ன ? நம்ம சுற்றி உள்ள சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சதிரங்கள், நட்சத்திரங்களுக்கு இடையே தெரியும் வெளி, இன்னும் பலவித கண்ணுக்கு தெரியாத வாயுக்கள் எல்லாம் சேர்ந்தது தான் பிரபஞ்சம், ஆங்கிலத்தில் யூனிவர்ஸ் என்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகள் வானவியல் வல்லுனர்கள் இந்த பிரபஞ்சத்தின் அளவு என்ன, வயது என்ன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு விடை தேட போராடிக் கொண்டிருந்தனர். முக்கியமான கேள்வி இந்த பிரபஞ்சம் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்குமா அல்லது எங்காவது ஓர் இடத்தில் முடிந்துவிடுமா என்பது தான். மேலும் அது எப்போதுமே இருந்ததா அல்லது என்றாவது ஒரு காலகட்டத்தில் தோன்றியதா என்பது அடுத்த கேள்வி. அவர்களுக்கு (ஏன் நமக்கும் தான்) முடிவில்லாத ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இருந்தது. சரி பிரபஞ்சத்திற்கு ஒரு முடிவு உண்டு என்று வைத்துக்கொள்வோம். ஒரு வாதத்திற்காக - நீங்கள் அந்த முடிவின் விளிம்பில் நின்று கொண்டு கையை நீட்டினால், உங்கள் கை எங்கே செல்லும். இப்படி விடைத் தெரியாக் கேள்விகள் வானவியல் வல்லுனர்களிடையே எழுந்துகொண்டே இருந்தன, சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டைக்  கண்டுபிடிக்கும் வரை...

தொடரும்...

Monday, August 29, 2011

கூட்டாஞ்சோறு - Aug 29, 2011


கூட்டாஞ்சோறு - நெல்லை மற்றும் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் பிரசித்தி பெற்ற உணவு வகை. அரிசி, பருப்பு, பலவித காய்கறிகள், தேங்காய், சிவப்பு மிளகாய் என பலவித ஐட்டங்களை சேர்த்து காரசாரமாக செய்யப்படும் ஒரு உணவு. இப்போது கூட்டாஞ்சோறு என்ற பெயரில் சென்னையில் கூட ஒரு உணவகம் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

கூட்டாஞ்சோறு போல கதம்பமாக பல விஷயங்களை பதிவில் எழுதவேண்டும் என்று நினைத்துகொண்டு சில மாதத்திற்கு முன் ஒரு புதிய பதிவு வகையை சேர்த்தேன். ஆனால் அப்படி நினைத்தபடி அடிக்கடி இந்த வகையில் எழுத முடியவில்லை. இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்து துவங்கி இருக்கிறேன். இனி கூட்டாஞ்சோறு உங்களுக்காக...உப்பு, புளிப்பு, காரம் எதுவும் சரியாக இல்லை என்றால் சொல்லுங்கள், இந்த முறையோ அல்லது அடுத்த முறையோ சரி செய்ய முயற்சிக்கிறேன்.

நாட்டு நடப்பு:

லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக அன்னா ஹசாரே இருந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னதான் சட்டம் கொண்டுவந்தாலும், அதிகாரிகளும், மக்களும் இன்னும் சாமர்த்தியமாக மாட்டிகொள்ளாமல் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ முயற்சித்தால் என்ன செய்ய முடியும். லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையும் நடக்காது என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும், லஞ்சம் மற்றும் ஊழலில் மக்கள் பங்கும் பெருமளவில் இருக்கிறது என்பதே என் கருத்து. தன் காரியம் விரைவில் அதிகம் செலவு இல்லாமல் முடியவேண்டும் என்பதால் மக்கள் லஞ்சம் கொடுக்க முன்வருகின்றனர். முறையான ஓட்டுனர் உரிமம் கூட இல்லாமல் எத்தனைப் பேர் வாகனம் ஓட்டுகிறார்கள். டிராபிக் போலீசிடம் மாட்டிகொண்டால் சுலபமாக தப்பித்துகொள்ள இருக்கவே இருக்கிறது லஞ்சம். இன்று கல்லூரியில் முதலாம் ஆண்டு காலடி எடுத்து வைக்க இருக்கும் ஒரு இளைஞன் கூட போலீஸ்காரங்களை எல்லாம் மதிக்கக்கூடாது என்கிறான். இது ஒரு சிறு உதாரணம் தான், இதைப்போல நிலம் வாங்க/விற்க, கல்லூரியில் சேர்க்க, வருமான வரி என பல இடங்களில் கண்ணுக்கே தெரிந்தே லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் தேர்வு என்ன என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. நல்ல தலைவன் மற்றும் மக்களுக்கு கல்வியும் உலக அறிவும் கிடைத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது. 

அறிவியல் பிட்ஸ்:

செவ்வாய் கிரகம் கைகெட்டும் தூரம் தான்


தற்சமயம் உள்ள டெக்னாலஜியை உபயோகப்படுத்தி ராக்கெட்டுகள் மூலமாக சென்றால் செவ்வாய் (மார்ஸ்) கிரகத்தை அடைய சுமார் ஏழு மாதங்கள் வரை ஆகலாம். அதுவும் நினைத்த நேரத்தில் அப்படி செல்ல முடியாது. செவ்வாய் கிரகம் சுமார் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூமியில் இருந்து மிகக்குறைந்த தொலைவில் இருக்கும். அந்த நேரத்தை கணக்கிட்டு பயணித்தால் சுமார் ஏழு மாதங்கள் ஆகும். அதை தவிர திரும்பி வர இரண்டு வருடங்கள் காத்திருந்து பின்னர் பயணத்தை தொடங்க வேண்டும்.

மணிக்கு 123,000 மைல் வேகத்தில் செல்லகூடிய பிளாஸ்மா என்ஜின் மூலமாக மார்ஸ் கிரகத்திற்கு 39 நாட்களில் பயணிக்க முடியும் என்று கூறுகிறார்கள். பிளாஸ்மா எஞ்சினில் உள்ள நியுக்ளியர் ரியாக்டர்கள் பிளாஸ்மாவை இரண்டு மில்லியன் டிகிரி வரை சூடாக்கும் திறன் கொண்டவை. இவ்வகை என்ஜின் குறித்து ஆராய்சிகள் நடந்துகொண்டிருகிறது. பிளாஸ்மா என்ஜின் மெதுவாக தொடங்கி பின்னர் அதிவேகத்தில் செல்ல ஆற்றல் கொடுக்கும். அதனால் இதை தொலைதூரப் பயணத்திற்கு மட்டுமே உபயோகிக்கும் சாத்தியம் உள்ளது. இது போன்ற சிக்கல்களை சரி செய்தால், சந்திரனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம், உலகையே ஒரு மணிநேரத்தில் நான்கு முறைக்கு மேல் சுற்றிவந்து விடலாம்.

சினி பட்டறை:


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள, மங்காத்தா திரைப்படம் USA -வில் 70 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படம் உலகெங்கிலும் (கேரளா தவிர) ஆகஸ்ட் 31 அன்று ரிலீஸ் ஆகிறது. அஜித்தின் லுக் அண்ட் ஸ்டைல் மிக வித்தியாசமாக உள்ளது. மங்காத்தா அஜித்தின் ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிரைலரே அசத்துகிறது, கிழே உள்ள வீடியோ கிளிக் செய்து பாருங்கள்.



கருத்து கந்தசாமி:

புது மாப்பிள்ளைக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில்...

திருமண வாழ்கையில் நீ கடைபிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள்,
  • உன் மீது தவறு இருந்தால் ஒப்புக்கொள்.
  • உன் மீது தவறு இல்லாவிட்டால் வாயை மூடிகொண்டு அமைதியாய் இரு.

ரசித்த வீடியோ:



நன்றி.


Sunday, August 28, 2011

ஐரீன் அப்டேட் - புகைப்படங்களுடன்

ஐரீன் சூறாவளியின் சீற்றம் ஒரு வழியாக குறைந்தது. வடகிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் பலத்த வெள்ளம் ஏற்பட்டிருகிறது. இப்போது கனடா பார்டரை நோக்கி முன்னேறி இருக்கிறது. இதுவரை இருபத்தி மூன்று பேர் ஐரீனால் உயிரிழந்திருகிரார்கள் என்று தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஐரீன் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. சராசரியாக ஏழு இன்ச் மழை பொழிந்திருகிறது. ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துகொண்டிருகிறது, இது நாளை வரை தொடரும் என்று கூறுகிறார்கள். இன்னும் பல இடங்களில் பலத்த காற்று (சுமார் ஐம்பது மைல் வேகத்தில்) வீசிகொண்டிருகிறது. சுமார் நான்கு மில்லியன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி இருக்கின்றன. இவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வாரமோ அதற்கு மேலோ ஆகலாம். இங்கே கிழே உள்ள சில புகைப்படங்களும் மற்றும் காணொளி ஐரீனின் சீற்றத்தை விளக்கும்.










காணொளி:



போர் - சிறுகதை



பீட்டர் விமானத்தில் இருந்து கீழே தெரிந்த எதிரிகள் மீது குண்டுகளை விடாமல் வீசிக்கொண்டிருந்தான். இன்னும் சிறிது தூரம் செல்லத்தான் எரிபொருள் இருந்தது. அதற்குள் எத்ரிகளை கொன்று குவித்து விட்டு அடுத்த இலக்கை அடைய வேண்டும். நடுநடுவில் வந்த பெரிய கட்டடங்கள் மீது குண்டுகளை வீசினான்.

கீழிருந்து எதிரிகள் தங்கள் பீரங்கிகளால் விமானத்தை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீசும் குண்டுகள் விமானத்தின் மீது பட்டுவிடாமல் வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.

திடீர் என்று விமானத்தின் பின்னால் இருந்து எதிரிகள் வீசிய குண்டு விமானத்தின் பின் பகுதியில் பட்டு, விமானம் நிலை தடுமாறி கிழே வேகமாக விழ ஆரம்பித்தது.

பீட்டர், அங்கே என்ன பண்றே. வீடியோ கேம் விளையாடியது போதும், சீக்கிரம் வந்து ஹோம் வொர்க் பண்ணு.


Saturday, August 27, 2011

மியுசியம் - 55 வார்த்தை சிறுகதை



இது ஒரு Sudden Fiction வகை கதை. இதை சுஜாதா அவர்கள் உடனடிக்கதை என்று குறிப்பிடுவார். உடனடிக்கதைகள் எளிமையானவை. கதை எழுதுபவனுக்கு சம்பவங்களும் கதாபாத்திரங்களும் நன்றாக தெரியும். ஆனால், எல்லாவற்றையும் வாசகர்களுக்கு காட்ட மாட்டான். ஒரு பகுதியை மட்டும் காட்டி மற்றவற்றை வாசகரை உணர வைப்பான். உடனடிக்கதைகள் 55 வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டும் என்ற நியதி இல்லாவிட்டாலும், இங்கு 55 வார்த்தைகளில் ஒரு உடனடிக்கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறேன். இனி கதைக்கு போகலாம்.


---------------------------------


சரி, சரி, சீக்கிரம் கிளம்புங்க. லேட்டா போனா உள்ளே அனுமதிக்கமாட்டாங்க.

ஒரு நிமஷங்க, இதோ கிளம்பிட்டோம்.

சில நிமிடங்களில் அனைவரும் கிளம்பி வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், அது சட்டேன்று வேகம் எடுத்தது.

சில மணிநேர பயணத்திற்கு பின் , புவிஈர்ப்பு விசையை லேசாக உணர ஆரம்பித்த சில நிமிடங்களில் ஜிவ்வென்று சென்று பூமியில் தரை இறங்கியது.

சுவாசிக்க மாஸ்க் போட்ட பின்னர் கீழிறங்கி, குழந்தைகளிடம் - இது தான் பூமி, நம்மோட மூதாதையர்கள் எல்லாம் இங்கே தான் வாழ்ந்தாங்க என்றேன்.

Friday, August 26, 2011

ஐரீனு ஐயாம் நாட் லவ் யு


ஆடுகளம் படத்திலே தனுஷ் சொல்ற வசனம் மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா. என்ன பண்ண, இப்ப இங்கே இருக்குற சூழ்நிலையிலே அதை தான் சொல்ல முடியும் போல இருக்கிறது. அண்ணன் இப்ப குளிக்கிறார், அண்ணன் டிபன் சாப்பிடுறார், அண்ணன் கிளம்பிட்டார் என்று எதோ ஒரு படத்தில் லைவ் கமெண்ட்ரி கொடுப்பது போல அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிற சூறாவளி ஐரீன் பற்றி டிவியில் எந்த சேனல் போட்டாலும் பேசிக் கொண்டிருகிறார்கள். நார்த் கேரலினாவில் இருந்து மக்களை வழுக்கட்டாயமாக வெளியேற சொல்லிவிட்டார்கள். அடுத்தது எந்தெந்த பகுதியில் இருந்து மக்களை ஊரைவிட்டு கிளம்ப சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு மக்கள் வெளியே பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று கொண்டிருகிறார்கள். என்ன செல்வம் சேர்த்து என்ன, இயற்கையின் முன்னால் ஒரு கொம்பனும் நிற்க முடியாது என்பது தான் உண்மை. அதன் சீற்றத்தில் இருந்து விலகி தலை தெறிக்க ஓட மட்டுமே முயற்சிக்கலாம் என்பது தெரிகிறது. 

இப்படி நிலை இருக்கும்போது, மக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஈமெயில் மற்றும் டிவியிலும் எல்லா பயபுள்ளங்களும் போய் ஒழுங்கா சாப்பாடு, தண்ணி (ஹலோ, வெறும் குடிக்கிற தண்ணி தான், ஓவரா கற்பனை பண்ணாதீங்க) எல்லாம் வாங்கி வெச்சுகோங்க என்று ஓயாம சொல்லிட்டு இருக்காங்க. சரி இவ்வளவு சொல்றாங்க, அதுக்கு மரியாதையை கொடுத்தாவது நம்மளும் போய் எதாவது வாங்கி ஸ்டாக் பண்ணுவோம்னு கடைக்கு போனேன். அங்க போய் பாத்தா, ஆளாளுக்கு ஷாப்பிங் கார்ட்டை புல்லா நிறைச்சிட்டு இருந்தாங்க. என்னடா ஒரு வருஷத்துக்கு தேவையானதை வாங்குறாங்க போலன்னு நினைச்சுகிட்டேன். அவங்களை சொல்லியும் குத்தம் இல்லை. ஏன்னா, அமெரிக்காவில் சாதரணமாக கரண்ட் போகாது, ஆனால் அப்படி போனால், திரும்பி வர சில நேரங்களில் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அதனாலே பிரிட்ஜிலே வைக்க வேண்டிய அவசியம் இல்லாத சாப்பாட்டு ஐட்டங்களா வாங்கி குவிக்கிறாங்க. எந்த நேரத்திலே ஊரை விட்டு வேறே இடத்துக்கு போக சொல்லுவாங்கனு தெரியாமே, மக்கள் எல்லாம் காருக்கு பெட்ரோல் நிரப்பிகிட்டு இருக்காங்க. இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் -ல் இருந்து கீழே பூமியை பார்க்கும் அஸ்டிராநட்ஸ் கூட, இங்கே இருந்து பாக்கவே ரொம்ப பயங்கரமா தான் இருக்கு என்கிறார்களாம்.

ஐரீன் அடுத்த இரு நாட்களில் எந்த பக்கம் திரும்புவானு எல்லாரும் உன்னிப்பா பாத்துட்டு இருக்கோம். பாக்கலாம் ஒன்னும் பெரிசா பிரச்சனை இல்லாம ஐரீன் கரை கடந்தால் நன்றாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...