Wednesday, October 26, 2011

தீபாவளி - சைதாபேட்டை நினைவுகள்





அனைவருக்கும், என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பல வருடங்களாக மனதில் நான் மெல்ல ஆசைப் போட்டுகொண்டிருந்ததை இன்று எழுத்தில் கூற முயற்சிக்கிறேன். இவை அத்தனையும் இனிமையான நினைவுகள் அல்ல, என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதையை, நினைவில் பதிந்து என்னை விட்டு விலகாத நிகழ்வுகளை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

இதோ என் தீபாவளி நினைவுகள்....

எனக்கு அப்போது ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று சாதரணமாக மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் வயிற்று போக்கிற்கு அரசு மருத்துமனையில் சேர்த்த என் தந்தை இளவயதிலேயே காலமாகிவிட்டார். விவரம் புரியாத வயதில், நான் முதன் முதலில்  பார்த்த உயிர் இழப்பு அது.  வீட்டில் தந்தையின் சடலம் கிடத்தப்பட்டு சுற்றி அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அவ்வபோது எல்லோரும் அழுவதைப் பார்த்து நானும் புரியாமல் அழுதேன். அழாதேடா, அப்பா எங்கேயும் போகலே, இன்னும் கொஞ்ச நாளில் வந்திடுவாரு என்று என்னை சமாதனப்படுத்த யாரோ கூறிய பொய்யை நம்பி என் அம்மாவிடம் சென்று அழாதேம்மா என்று கண்ணை துடைத்துவிட்டேன். ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகளுடன் வீட்டை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். அப்படி விளையாடி கீழே விழுந்து மண்டையை வேறு உடைத்துகொண்டேன். என்னைத் தூக்கி கொண்டு டாக்டரிடம் ஓடியது ஒரு கூட்டம். தந்தையின் இழப்பின் வலி அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அப்போது அதைப் பற்றி பெரிதாக நினைக்காத போதும், இன்று வரை அந்த நினைவு என்னை சுற்றிச் சுற்றி வட்டமிடுகிறது. தந்தையின் முகம் என்றாலே அன்று உயிரற்ற சடலமாகப் பார்த்தது தான் என் நினைவில் உள்ளது. அந்த வகையில் நான் கொஞ்சம் பரவாயில்லை. என்னை விட இரண்டு வயது இளையவனான என் சகோதரனுக்கு தந்தையின் முகம் என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது. தந்தை காலமாவதற்கு சில மாதங்கள் முன்பு தான் பல்லாவரத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருந்தோம். பல இடங்களில் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீட்டில் அவரால் அதிக காலம் வாழ முடியவில்லை. அடுத்த சில வாரங்களில் சுற்றி இருந்த உறவுகள் ஒவ்வொருவராக சென்றனர். தந்தையின் நினைவுகள் மற்றும் கடன் தொல்லையினால் அங்கு இருக்க முடியாமல், அதற்கு முன்பு இருந்த சைதாபேட்டையில் வாடகை வீடு பார்த்துக் குடியேறினோம்.

அங்கு குடியேறிய சில நாட்களில் தீபாவளி திருநாள் வந்தது. தந்தை இல்லாத முதல் தீபாவளி, அம்மா ஒருபுறம் அழுது கொண்டிருக்க, என் மனமோ புதுத்துணி, பட்டாசு என்று அலை பாய்ந்துகொண்டிருந்தது. ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும் போது நாங்கள் சுற்றி யாரும் இல்லாமல் தனித்தீவில் விடப்பட்டது போல இருந்தது. அப்பொழுது தான் தந்தையில் இழப்பு லேசாகப் புரிந்தது. அது சுயநலம் தான், மறுக்கவில்லை. ஆனால் அந்த சுயநலம் தான், அந்த தீபாவளியை எனக்கு மறக்க முடியாத தீபாவளியாக மாற்றியது. வீட்டில் ஒரு ஓரத்தில் அழுது கொண்டே முடங்கிக் கிடந்த நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவை திறக்க சென்ற அம்மாவின் பின்னல் நானும் ஓடினேன். கதவைத் திறந்ததும் அங்கு ஒருவர் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். கௌரி பார்மசிலே இருந்து சேட் குடுத்து அனுப்பி இருகாரும்மா, ஸ்வீட், பசங்களுக்கு துணி, பட்டாசு எல்லாம் இருக்கு என்று அட்டைப் பெட்டியை வைத்துவிட்டு சென்றார். அம்மாவிற்கு கண்ணில் கண்ணீர், எனக்கோ மனதில் மகிழ்ச்சி. அவசரமாக பெட்டியை திறந்து பார்த்து பூரித்தேன். வித விதமான பட்டாசுகள், ஸ்வீட் மற்றும் புதுத்துணி.  எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன்.  இத்தனையும் கொடுத்து அனுப்பிய, கௌரி பார்மசி சேட் வேறு யாரும் இல்லை, என் தந்தையின் நெருங்கிய நண்பர். மார்வாடி இனத்தை சேர்ந்த சேட் கண்டிப்பாக திருக்குறள் படித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் குறிப்பறிந்து காலத்தினால் செய்த உதவி அது. அன்று அந்த தீபாவளியில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பிறகு வசதியும் வாய்ப்பும் பெருக, எத்தனையோ தீபாவளி சிறப்பாக கொண்டாடினாலும், அவை எதுவும் என் நினைவில் அந்த அளவு நிற்கவில்லை. அந்த ஒரு துயரமான நேரத்தில் கிடைத்தப் புது துணிக்கும், பட்டாசுக்கும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று நினைக்கும் போது இப்போது சற்று வெட்கமாக இருந்தாலும், அந்த நிகழ்வை எங்காவது பதிய வேண்டும் என்று பல வருடங்களாக என்னை உறுத்திக் கொண்டிருந்ததின் விளைவே இந்த பதிவு. 


Sunday, October 23, 2011

கடன் ________ நெஞ்சம்போல (55 வார்த்தை சிறுகதை)

என்னங்க இப்படி சொல்றீங்க, நம்ம பொண்ணோட தலை தீபாவளி செலவுக்கு பணத்துக்கு என்ன பண்றது.

அதான் தெரியலே... கட்டாயம் கொடுக்குறேன்னு சொன்ன ராகவனை பிடிக்கவே முடியலே, நான் நேர்லயே போய் கேட்குறேன்.

சில மணி நேரத்தில் ராகவன் வீட்டில் - இப்படி திடீர்னு இல்லேன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன் ராகவா, என் பொண்ணு தலை தீபாவளி செலவுக்காக லோன் போட்டு வெச்சுருந்த பணத்தை, உன் அவசரத்தேவைக்காக கொடுத்தேன். இப்போ நான் திருப்பி கேட்கும் போது கொடுக்கலேனா எப்படி...

பின் குறிப்பு: தலைப்பில் உள்ள ____________ -ஐ இப்போது உங்களாலேயே நிரப்பிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

Monday, September 26, 2011

குடும்ப அமைப்பு முறை - இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில்


சன் டிவியின் கல்யாணமாலை நிறுவனர் திரு மோகன் மற்றும் கல்யாணமாலை நிறுவன இயக்குனர் திருமதி மீரா நாகராஜன் அவர்களும் சென்ற சனிக்கிழமை, தங்கள் வட அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக கனக்டிகட் வந்திருந்தனர். கனக்டிகட் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய அந்த நிகழ்ச்சியில் கல்யாணமாலை நிகழ்ச்சி பற்றி ஒரு குறும்படமும் அதைத் தொடர்ந்து ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது. பட்டிமன்றத் தலைப்பு - இந்தியக் குடும்ப அமைப்பு முறை - இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில். அதாவது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கிறதா அல்லது இந்தியாவில் வாழும் இந்தியர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கிறதா என்பது தான் தலைப்பு. இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு பேசினேன் என்பது எனக்கே சற்று ஆச்சரியமான விஷயம். சாதாரணமாக புதியவர்களிடம் கூட அதிகம் பேச மாட்டேன். இந்த நிலையில் பட்டிமன்றத்தில் பேசுவது என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தில் இருந்து நண்பர் ஒருவர் அட சும்மா வந்து பேசுங்க என்று கூறியதால் சரி போய் பேசித்தான் பார்ப்போம் என்று ஒரு அசட்டு துணிச்சலில் சென்று கலந்துகொண்டேன். ஓரளவுக்கு சுமாராக பேசினேன் என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு பேசும் வாய்ப்பு கடைசியில் கிடைத்ததால் நேரமில்லாமல் நான் பேச வேண்டும் என்று நினைத்ததை அனைத்தையும் பேச வாய்ப்பில்லாமல் போனது. அதனால் நான் பேச நினைத்தது அனைத்தையும் உங்கள் முன்னால் கொட்டலாம் என்று இந்த பதிவை எழுதுகிறேன். படித்துவிட்டு இந்தப் பதிவைப் பற்றியோ அல்லது பட்டிமன்றத் தலைப்பை பற்றியோ உங்கள் கருத்தை முடிந்தால் கூறுங்கள்.

சரி இனி என் பேச்சு இங்கே எழுத்தில்...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்வாங்க. சாதரணமா உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாறிப் போய் வாழ்வது சற்று சிரமம் தான். அப்படி இருக்கும் போது இந்தியாவில் இருந்து கடல் கடந்து வெளிநாட்டுக்கு ஒருவன் ஓடுவது எதற்காக. அப்படிக் கிளம்பும் யாரும், 'எனக்கு வெளிநாட்டில் யாரவது மூதாதையர் இருக்கிறார்களா என்று கண்டு பிடிக்கப் போகிறேன்னு' சொல்லிவிட்டு போவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியர்கள் வெளிநாட்டிற்கு வாணிபம் செய்வதற்காகத்தான் சென்றார்கள். இந்தக் காலத்தில் வேலை செய்யப் போகிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். இங்கு அடிப்படை நோக்கம் பொருள் ஈட்டுவது தான் அதாவது பணம் சம்பாரிக்கத் தான் ஒருவன் வெளிநாட்டிற்கு செல்கிறான். அவன் நினைப்பெல்லாம் தனக்கு கிடைக்கப்போகும் சம்பளத்தை முப்பதைந்தாலோ அல்லது நாற்பதைந்தாலோ பெருக்கி, இந்தியா ரூபாயில் கணக்குப் போடுவது தான். பல நேரங்களில் புதிதாகச் செல்பவர்கள், வெளிநாட்டில் செலவு செய்யபோவது இந்தியா ரூபாயில் அல்ல என்பதை மறந்து விடுகிறார்கள்.

சரி வெளிநாட்டிற்கு சென்றாகிவிட்டது.  அங்கு அவன் கொஞ்சம் நிலைத்து நின்றதும், என்ன செய்கிறான். அண்ணனாக இருந்தால் தம்பியை கூப்பிடுவான், தம்பியாக இருந்தால் அண்ணனை கூப்பிடுவான். இரண்டும் இல்லாமல் திருமணம் ஆகதவனாக இருந்தால் கல்யாணம் செய்துகொண்டு மனைவியை அழைத்து வருவான். இதை தவறென்று கூறவில்லை. அடிப்படையில் பார்த்தால் அவன் மனது முழுவதும் அவன் வாழ்ந்து வளர்ந்த இந்தியக் குடும்ப சூழ்நிலையைத் தான் தேடுகிறது. அவனை சிரிக்க வைக்க, மகிழ வைக்க, நெகிழ வைக்க அவனை சுற்றிலும் உறவுகள் தேவைபடுகிறது. தன் சொந்த உறவுகளை அழைத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்திய நண்பர்களை சேர்த்துக் கொள்கிறான். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தான் வாழ்ந்த இந்தியக் குடும்ப சூழ்நிலை வெளிநாட்டில் கிடைக்காததால் தன்னால் இயன்ற அளவு தன் வீட்டிற்குள் ஒரு இந்தியக் குடும்பத்தை செயலவில் மெய்யாக்கதக்க சூழ்நிலையை உருவாக்கி அதில் மகிழ்ச்சி அடைகிறான். அது முழுமையான மகிழ்ச்சி அல்ல. சூரிய ஒளியை நிலவு பிரதிபலிப்பது போல இந்திய குடும்ப சூழலை சிறிய அளவு பிரதிபலித்து, அதுதான் மேன்மையானது என்று தங்களைத் தாங்களே சமாதானப் படுத்திகொள்ளும் ஒரு முயற்சி.

ஒரு சிறிய நாற்றை கூட ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் பிடுங்கி நடும்போது அதன் தாய் மண்ணோடு தான் நடுவார்கள். அப்படி நட்டால் தான் அது புதிய மண்ணில் முதலில் சிறிது வாட்டம் கண்டாலும் பின்னர் பட்டுபோகாமல் நன்கு வளரும். நம் குடும்பம் என்பது அந்த தாய்மண் போன்றது. அதுதான் அவன் வளர்ச்சிக்கு ஆதாரம். அந்த ஆதாரத்தை ஸ்திரபடுத்திக் கொள்வதற்கு தான் அவன் வெளிநாட்டிற்கே செல்கிறான். அவன் சம்பாரிபதையும் முடிந்த அளவு தன் குடும்பத்திற்கு கொடுக்கிறான். மகிழ்ச்சியிலே பெரிய மகிழ்ச்சி நாம் அன்பு செலுத்துபவர்களை மகிழ்விப்பது தானே. இப்படி பொருள் சேர்க்க சொந்த பந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு சென்று தன் தேவை எவ்வளவு என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லாமல் வாழ்க்கையில் ஓட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். இந்த மாயையிலே சிக்கி கார், வீடு, நகை, நிலபுலன் என்று வாங்கி (கடன் வாங்கி) பொருளாதாரச் சங்கிலியில் புலி வாலைப் பிடித்தது போல மாட்டிக்கொள்கிறான். இதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. எங்கே புலியின் வாலை விட்டுவிட்டால் இதே வேகத்தில் தொடர்ந்து ஓடமுடியமா அல்லது எங்கே புலி தன்னை கடித்துவிடுமோ என்கிற பயம் தான் முக்கிய காரணம். சிலர் குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் வெளியில் வரத் தயங்குகிறார்கள்.

முதலில் குடும்பம் என்றால் என்ன என்று பார்க்கவேண்டும். அண்ணன், அண்ணி, மாமன், மச்சான், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி இப்படி பல உறவுகள் ஒரு நல்லது கெட்டது என்றால் ஓன்று கூடி, பேசி, சிரித்து, அழுது, சண்டைபோட்டு, பின்னர் சமாதானமாகி...இப்படி பல வகை வேறுபாட்டு நிலைகளை கொண்டதுதான் உண்மையான குடும்பம். வெளிநாட்டில் வாழும் பல குழந்தைகளுக்கு (சில நேரங்களில் பெரியவர்களுக்கும்) தெரிந்த உறவு எல்லாம் ஆண்டி, அங்கிள் தான். பல இடங்களில் பிறந்து சிலவாரங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். இதே குழந்தை இந்தியக் குடும்பச் சூழலில் பிறந்திருந்தால் அதன் சித்தியோ, பெரியம்மாவோ, அத்தையோ, பாட்டியோ யாரவது ஒருவர் வீட்டிலேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் அந்தக் குழந்தை தன் பாட்டியின் மடியின் கதகதப்பிலே தூங்குவது சுகமா அல்லது ஒரு செவிலித்தாய் கண்காணிப்பில் பத்தோடு பதினொன்றாக இருப்பது சுகமா. இது பிறந்த குழந்தைகளின் நிலை. அவர்கள் வளரும் போதும் கிட்டத்தட்ட இதே நிலைதான் பாட்டு, டான்ஸ், கராத்தே, கீ போர்டு அப்படி இப்படி என்று பல வகுப்புகளில் சேர்த்துவிடுவார்கள். முக்கியமாக பக்கத்துக்கு வீட்டு இந்தியக் குடும்பத்தில் உள்ள குழந்தைச் செல்லும் கிளாசிற்கு கண்டிப்பாக அனுப்பி விடுவார்கள். இதையெல்லாம் தவிர இந்திய புராண கதைகள், பஜனை போன்றவற்றை கற்றுக் கொடுக்க தனியாக ஒரு கிளாஸ் அனுப்புவார்கள். அதாவது சாமி எப்படி கும்பிடுவது என்பதற்கே ஒரு கிளாஸ். இது போன்ற விஷயங்களை இந்தியக் குடும்ப சூழ்நிலையில் தாத்தா பாட்டியே அந்த குழந்தைகளை தூங்கவைக்கும் போது தலை முடியை கோதி விட்டுக்கொண்டே சொல்லித் தந்துவிடுவார்கள்.

எத்தனை வித கொண்டாட்டங்கள், பண்டிகைகள், திருமணங்கள். நம் குடும்பத்துடன் சேர்ந்து குதுகலிக்க எத்தனை விஷயங்கள். வெளிநாட்டில் இருந்து தீபாவளி, பொங்கல் என்றால் ஸ்கைப்பில் பேசிவிட்டு வேலைக்கு செல்ல வேண்டியதுதான். இதெற்கெல்லாம் மேல் இன்றளவிலும் இந்தியக் குடும்ப வாழ்க்கை மேலோங்கி இருப்பதால் தான், இன்றைய இளைய சமுதாயம், தன்னை பெற்று, வளர்த்து, ஆளாகிய தன் பெற்றோர்கள் தங்களுக்கு சரியான வாழ்கை துணையைத் தேடித்தருவார்கள் என்று அந்தப் பொறுப்பை தன் பெற்றோர்களிடமும் விட்டிருகிறார்கள். அதற்கு கல்யாணமாலை போன்ற நிகழ்ச்சியே சான்று. நம் நாட்டில் நடப்பது போல இத்தனை பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. அதெல்லாம் அந்தக் காலம் இப்போதெல்லாம் இந்தியாவிலேயே யாரும் ஓன்று கூடி பண்டிகைகளை கொண்டாடுவதில்லை, பலர் காதல் திருமணம் தான் செய்கிறார்கள், விவாகரத்துகள் அதிகரித்து விட்டன என்று நீங்கள் கூறுவதாக இருந்தால்...அவர்கள் அனைவரும் இந்திய குடும்ப சூழலில் வாழாமல் மேற்கத்திய மோகத்தில், மேற்கத்திய வாழ்கை முறையை கடைபிடிக்க முயற்சிகிறார்கள் என்பதே என் பதில். சில இடங்களில் தவறுகள் நேரத்தாலும் இந்தியக் குடும்ப முறை மேலோங்கி இருப்பது இந்தியாவிலே என்று கூறி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.

Sunday, September 25, 2011

கூட்டாஞ்சோறு - Sep 25, 2011

நாட்டு நடப்பு:

தனியொருவனுக்கு உணவில்லை எனில் என்று தன் கோபத்தை காட்டிய பாரதி, இன்றைய நிலையை பார்த்தால் என்ன கூறுவார் என்று தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தி இரண்டு கோடியாக இருந்தது. தற்போது இது நாற்பது கோடியாக உயர்ந்திருக்கிறது. அதுவும் இதை எப்படி கணக்கு எடுக்கிறார்கள் தெரியுமா, நகர் புறங்களில் 965 ருபாய் மாத வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் 781 ருபாய் மாத வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளை கருதப்படுவதில்லை. இப்படி இருக்கையில் உண்மையாக வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிகையை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை வருடத்தில் அனைவருக்கும் தரமான கல்வி அளித்திருந்தால் இந்த நிலை கண்டிப்பாக ஓரளவிற்காவது மாறி இருக்கும் என்று தோன்றுகிறது. ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளிக்கு அருகே அந்தப் ஊராட்சியின் கழிவுகள் மட்டும் இல்லாமல் பல வணிக நிறுவனகளின் உணவுக்கழிவுகளும் கொட்டப்படுகின்றனவாம். சுமார் 1800 மாணவர்களுக்கு மேல் படிக்கும் இந்த பள்ளியை அவ்வப்போது துர்நாற்றம் தாங்க முடியாமல் விடுமுறை விட்டு விடுவார்களம். நல்லா சூழ்நிலையில் படிக்கும் போதே மாணவர்களின் கவனம் சிதறும், இப்படி ஒரு நிலையில் எப்படி படிக்க முடியும். அங்குள்ள ஆசிரியர்கள் தான் எப்படி பாடம் நடத்த முடியும்.

கடந்த சில நாட்களில் அமெரிக்க டாலரின் மதிப்பு விறுவிறுவென்று ஏறிவிட்டது. இப்போது ஒரு டாலரின் மதிப்பு சுமார் 50 ருபாய். அமெரிக்காவில் வசிக்கும் சில இந்தியர்கள் இந்த செய்தியை பெரும் மகிழ்ச்சியோடு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் இது இந்தியவிற்கு உண்மையிலேயே நன்மையாகத் தேரியவில்லை (ஒரு சில வர்த்தகங்களைத் தவிர). இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் சுமார் 680 மேல் குறைந்துவிட்டது. பெண் பிள்ளைகளுக்கு வரதட்சணையாக கொடுக்க நகை வாங்கிய பெற்றோர்கள் இதனால் - ச்சே கொஞ்சம் பொருத்து வாங்கி இருக்கலாமோ என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அறிவியல் பிட்ஸ்:

சர்வதேச விண்வெளி மையம்:


மனிதன் தயாரித்து விண்வெளியில் உள்ள மிகப் பெரிய பொருள் சர்வதேச விண்வெளி மையம் தான். பூமியிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மையம் பூமியைச் சுற்றி மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ஒரு நாளில் 16 முறை பூமியைச் சுற்றி வரும் இந்த மையம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா என மேலும் பல நாடுகளின் கூட்டு தயாரிப்பின் உருவானது. இதில் தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அவர்களுக்கு தேவையான சாதனங்கள் பூமியில் இருந்து அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலங்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. இங்குள்ள விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவரும் சுமார் ஆறு மாத காலம் வரை தொடர்ச்சியாக தங்கி இருந்து ஆராய்சிகளை மேற்கொள்கிறார்கள். பிற்காலத்தில் நிலவில், செவ்வாய் கிரகத்தில் தங்கி இருப்பதற்கு பயிற்சிக் களமாக இந்த விண்வெளி மையத்தை உருவாக்கி இருகின்றனர். விண்வெளியில் தொடர்ந்து தங்கி இருக்கும்போது தசைகள் இழப்பும் எலும்புகளின் நிறை குறைவும் வெகு விரைவில் ஈர்ப்பதும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்பதற்காக ஒவ்வொரு விண்வெளி வீரரும் ஒரு நாளில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்தாகவேண்டும். 

 

சினி பட்டறை:


மங்காத்தா பட வெற்றிக்கு பின் சத்தமில்லாமல் 'தல' அஜித் தன் அடுத்த படமான பில்லா 2 -வில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதில் அஜித் இருபது வயது இளைஞாக தோற்றமளிக்க வேண்டி இருப்பதால் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்கிறாராம். முதல் கட்ட படபிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படபிடிப்புக்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இதன் இயக்குனர் சக்ரி டோளிடி கூறி இருக்கிறார்.



சூர்யா, ஸ்ருதிஹாசன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் முதல் பதினைந்து நிமிடம் பிரமாண்டமாக இருக்கப் போகிறதாம். நிமிடத்திற்கு ஒரு கோடி என பதினைந்து நிமிட காட்சிக்கு பதினைந்து கோடி ருபாய் செலேவ செய்திருக்கிறார்களாம். இதில் சூர்யா மூன்று பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். ஏழாம் அறிவு வரும் அக்டோபர் 26 அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.

கருத்து கந்தசாமி:

ஒரு ஜென் துறவியும் அவர் சீடனும் ஒரு ஆற்றின் கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்த ஆற்றில் உள்ள மீன்களைப் பார், எவ்வளவு சந்தோசமாக நீந்திக் கொண்டிருகின்றனர் என்று சீடனை பார்த்துக் கூறினார்.

அதற்கு சீடன், குருவே நீங்கள் அந்த மீன் இல்லையே, அவை உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் நீந்திக் கொண்டிருகின்றன என்று எப்படி உங்களுக்கு தெரியும் என்றான்.

அதற்கு அவர், நீ நான் இல்லையே,  அவை மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு தெரியாது என்பது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டார்.

ரசித்த வீடியோ:






Friday, September 23, 2011

தீபாவளி - 55 வார்த்தை சிறுகதை


தீபாவளி. புதுச்சீலையில் மின்னிய அம்மாவை கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தேன்.

அவள் முகத்தில் பெருமை, நான் வாங்கிக் கொடுத்ததாம். அருகில் அப்பா பளீர் வேட்டி சட்டையில். அவர்கள் பின்னால் அண்ணன், அண்ணி, அக்கா, மற்றும் குழந்தைகள் பட்டாளம். இடையிடையே வெடிச்சத்தம். 

அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எதேச்சையாக மணி பார்த்தேன், இரவு பதினொன்று. நேரமாச்சு, நான் காலைலே சீக்கிரம் எழுந்து, நியூயார்க் ஆபீசுக்கு போகணும். நான் நாளைக்கு பேசுறேன் என்று ஸ்கைப் திரையில் தெரிந்த முகங்களை மனமில்லாமல் மூடினேன்.


Sunday, September 11, 2011

9/11 - என் நினைவுகள்


 
அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து ஒரு ஏழெட்டு மாதங்கள் இருக்கும். செப்டம்பர் 11 - பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு காலை வேலையில், சுமார் ஏழு மணிக்கு அவசர அவசரமாக புறப்பட்டு பாஸ்டன் நகரப் போக்குவரத்தில் கலந்தேன். இன்னும் சில மணிநேரத்தில் நிகழப்போகும் விபரீதத்தை உணராமல் அனைவரும் அவரவர் திசையில் பயனித்துக் கொண்டிருந்தோம். நான் அப்போது பார்த்துகொண்டிருந்த வேலையில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கு சென்று அங்கு தேவையான வேலையை முடித்து கொடுத்துவிட்டு திரும்ப வேண்டி இருந்தது. அன்று போகவேண்டிய வாடிக்கையாளரின் அலுவலகத்தை அடைய சுமார் ஒன்றரை மணி நேரம் காரில் பயணிக்க வேண்டும். சுமார் எட்டரை மணிக்கு அந்த அலுவலகத்தை அடைந்து சிறிது நேரத்தில் வேலையில் மூழ்கினேன். மணி அப்போது காலை 10:30 மணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அமர்ந்திருந்த அறையில் என்னுடன் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எனக்கு பின்னால் இருந்த அமெரிக்க நண்பர் ஒருவர் இருக்கையில் இருந்து துள்ளி, 'ஹேய், லுக் ஹியர்' என்று அவசரமாக அவருடைய கம்ப்யுடர் திரையை பார்க்க அழைத்தார். உடனே சென்று பார்த்தால், அவர் காட்டிய புகைப்படத்தில், உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டடங்களும் இடிந்து பாதி தெரிந்தது. அதன் மேலிருந்து பெரிய புகை மூட்டம் விண்ணை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த போதே என்னுடைய கம்புயடரில் இருந்து MSN Messanger-ல் இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். உனக்கு எல்லாம் ஓகே தானே என்று விசாரித்தார். அதற்குள் மற்றொரு இந்திய நண்பர் சாட் செய்தார். அவருடைய கசின் நியுயார்க்கில் வேலை செய்வதாகவும், அவர்களை தொலைபேசியில் அழைக்க முடியவில்லை, இது தான் அவர்கள் போன் நம்பர், கொஞ்சம் அவர்களை அழைத்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க முடியுமா என்று கூறினார். அவருக்கு இதோ உடனே செய்கிறேன் என்று கூறி அந்த நம்பரை அழைத்துப் பார்த்தேன், ஆனால் லைன் போகவில்லை. என்னாலும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்ததுடன் கூறினேன். வீட்டிற்கு அழைத்து வெளியில் எங்கும் போகவேண்டாம் என்று கூறி விட்டு, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, அலுவலகத்தில் இருந்து கிளம்ப விருப்பம் உள்ளவர்கள் கிளம்பலாம் என்று அறிவித்தனர்.

அங்கிருந்து கிளம்பி திரும்பவும் பாஸ்டன் நகரை நோக்கி காரை செலுத்திகொண்டிருந்தேன். வழக்கமாக டோல் (Toll) வசூலிக்கும் இடங்களில் அன்று இலவசம் யாரும் நிற்கத் தேவையில்லை என்று அறிவிப்பு கண்ணில் தென்பட்டது. நிலைமையின் விஸ்தீரணம் அப்போது நன்றாகப் புரிந்தது. வீட்டிற்கு வந்து தொலைக்கட்சியில் செய்திகள் பார்த்து ஆயிரக்கணக்கில் மக்கள் உயிர் இழந்திருகிறார்கள் என்று தெரிந்த போது மனதை ஏதோ செய்தது. இந்தியாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, நீங்க நல்லா இருக்கீங்க இல்லே என்று கேட்டு பின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஒரு சிலர் பேசாமே நீங்க இங்கே கிளம்பி வந்துருங்க என்று கூட கூறினர். எதாவது ஒரு இடத்தில், உயிருக்கு உத்திரவாதம் என்று மட்டும் இருந்துவிட்டால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான் என்று நினைத்துகொண்டு, அவர்கள் மனம் நோகக் கூடாதே என்று, அதெல்லாம் எதுக்கு இங்கே ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி அவர்களை சமாதனப்படுத்தினேன். இன்று பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அன்றைய நிகழ்வுகள் மனதை ரீங்காரமிட்டபடி இருந்ததால் இந்தப் பதிவை எழுதுகிறேன். அந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.



Saturday, September 10, 2011

வாழ்க்கை



சுகமாக இருக்கையில் சாய்ந்தமர்ந்து
ஐம்பது இன்ச் டிவியில் ஆங்கிலப்படம்,

மாலை சிற்றுண்டி விழுங்கி
சூடான காபியை ரசித்து குடித்து,

காரில் ஏறி அமர்ந்து
ஏ.சி. போதாமல் சற்றே கூட்டி,

வெளிச்சத்தம் கேட்காமல் இருக்க
இசையின் ஒலியைச் சற்று அதிகப்படுத்தி,

மிதமான வேகத்தில் செல்லும்போது
கண்ணில் பட்டது அந்த காட்சி,

சாலையோரத்தில் தாயின் மடியில்
பசியால் கதறும் குழந்தைக்கு பின்னே,

தலைவர் படத்தின் ரிலீஸ்-போஸ்டர்
மனதில் ஒரு உற்சாக சிலிர்ப்பு,

எவ்வளவு செலவானாலும் சரி
முதல் நாளே பார்த்துவிட வேண்டும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...