முன்பு விண்வெளியில் முதல் மனிதன் என்ற ஒரு பதிவில் விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதாகக் கூறிப் பின்னர், எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்று ஒரு முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். மேலும் ஒரே பதிவில் பிரபஞ்சம் பற்றி நான் கூற விரும்பும் அனைத்தையும் அடைப்பது சற்று சிரமம் என்பதால், அதை ஒரு தொடராக எழுதலாம் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளேன். வானவியலைப் பற்றிப் படிப்பது எனது பொழுது போக்கு மட்டுமே, தொழில்முறையில் எனக்கு இந்தத் துறை சம்பந்தம் இல்லாதது. எனவே எதாவது தவறு இருந்தால் கூறுங்கள், திருத்திக் கொள்கிறேன்.
இதோ பிரபஞ்சப் புதிர்கள் உங்கள் பார்வைக்கு...
-----------------------------------------------------------------------
ஒரு நாள் மேகங்கள் அற்ற இரவு நேரத்தில் ஆரவாரம் அதிகம் இல்லாத இடத்தில் இருந்து விண்ணை சற்று உற்று நோக்குங்கள். பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுவதை எந்தவித தொலைநோக்கியும் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும். சிறிது சிறிதாக மின்னும் அத்தனை நட்சத்திரங்களும் நாம் வாழும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.
நம் சூரியனும் ஒரு நட்சத்திரமே. என்ன, நமக்கு கொஞ்சம் அருகில் இருக்கிறது. எவ்வளவு அருகில் என்று கேட்கிறீர்களா ? சுமார் 93 மில்லியன் மைல்கள் அருகில் உள்ளது. இதை விட பல ஆயிரம் மடங்கு தூரத்தில் இருப்பதால் தான் மற்ற நட்சத்திரங்கள் நமக்கு மிகச்சிறியதாக தெரிகின்றன. நம் சூரியனை தவிர்த்து பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான ப்ராக்சிமா செண்டாரி (Proxima Centuari or Alpha Centauri C) சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யகூடிய தொலைவு. ஒளியின் வேகம் தோரயமாக ஒரு வினாடிக்கு 186 ,282 மைல்கள். கணக்குப் போட்டுப்பார்த்தால் சுமார் 5.88 மில்லியன் மில்லியன் மைல்கள் ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் என்று தெரிகிறது. ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் ப்ராக்சிமா செண்டாரி நட்சத்திரத்தை அடைய நமக்கு 4.3 ஆண்டுகள் ஆகும். சில நட்சத்திரங்கள் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கூட இருக்கின்றன. நாம் சாதரணமாக இரவில் அண்ணாந்து பார்க்கும் பல நட்சதிரங்களின் ஒளியை அந்த நட்சத்திரம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உமிழ்ந்திருக்கலாம். நம் சூரியனில் இருந்து புறப்பட்ட ஒளி நம்ம வந்து சேர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகும். அதாவது நாம் பார்க்கும் சூரியன் எட்டு நிமிடங்களுக்கு முன்னதாக இருந்த நிலை, இப்போது இந்த நிமிடத்தின் நிலை அல்ல.
சரி பிரபஞ்சம், பிரபஞ்சம் என்று இந்தப் பதிவில் நான் வரிக்கு ஒரு தடவை எழுதும் பிரபஞ்சம் என்றால் என்ன ? நம்ம சுற்றி உள்ள சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சதிரங்கள், நட்சத்திரங்களுக்கு இடையே தெரியும் வெளி, இன்னும் பலவித கண்ணுக்கு தெரியாத வாயுக்கள் எல்லாம் சேர்ந்தது தான் பிரபஞ்சம், ஆங்கிலத்தில் யூனிவர்ஸ் என்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகள் வானவியல் வல்லுனர்கள் இந்த பிரபஞ்சத்தின் அளவு என்ன, வயது என்ன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு விடை தேட போராடிக் கொண்டிருந்தனர். முக்கியமான கேள்வி இந்த பிரபஞ்சம் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்குமா அல்லது எங்காவது ஓர் இடத்தில் முடிந்துவிடுமா என்பது தான். மேலும் அது எப்போதுமே இருந்ததா அல்லது என்றாவது ஒரு காலகட்டத்தில் தோன்றியதா என்பது அடுத்த கேள்வி. அவர்களுக்கு (ஏன் நமக்கும் தான்) முடிவில்லாத ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இருந்தது. சரி பிரபஞ்சத்திற்கு ஒரு முடிவு உண்டு என்று வைத்துக்கொள்வோம். ஒரு வாதத்திற்காக - நீங்கள் அந்த முடிவின் விளிம்பில் நின்று கொண்டு கையை நீட்டினால், உங்கள் கை எங்கே செல்லும். இப்படி விடைத் தெரியாக் கேள்விகள் வானவியல் வல்லுனர்களிடையே எழுந்துகொண்டே இருந்தன, சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டைக் கண்டுபிடிக்கும் வரை...
தொடரும்...
9 comments:
எனக்கும் வானவியலில் தங்களைப் போல்
மிகவும் ஆர்வம்.தாங்கள் அது குறித்த மிகத் தெளிவாக
விரிவான பதிவிடுவது மகிழ்வு அளிப்பதாக உள்ளது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
நல்லதொரு தேடல் நண்பரே.
பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றொரு பழமொழி உண்டு நண்பரே..
வாரா வாரம் தான் புதன் கிழமை வருகிறதே..
ஏன் இப்படியொரு அனுபவமொழியைச் சொன்னார்கள் என்று ஆழ்ந்து நோக்கினால்..
நம் முன்னோர் வானியலில் எத்தகைய தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பது புலனாகும்.
புதன் என்னும் கோளைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்.
வெறும் கண்ணால் எல்லாக் கோள்களையும் காணலாம் புதன் மட்டும் அவ்வளவு எளிதில் காண இயலாதது என்று கருதியே அவ்வாறு கூறியிருக்கின்றனர் என்பது புரியும்.
இன்று என் வலையில்..
இதை நான் எதிர்பார்க்கல?
(வாழ்வியல் கேள்வி பதில்)
http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_30.html
பதிவைக் காண அன்புடன் அழைக்கிறேன்
அருமையான பதிவு.எனக்கு ஏற்கனவே அரை குறையாக இது பற்றி தெரிந்தாலும்,முழுமையாக தெரிந்து கொள்ள ஆசை.தொடருங்கள்.
//@Ramani said...//
வாங்க ரமணி ஐயா. முடிந்தவரை எளிமையாகவும் தெளிவாகவும் எழுத முயற்சிக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//முனைவர்.இரா.குணசீலன் said... நல்லதொரு தேடல் நண்பரே.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குணசீலன்.
//முனைவர்.இரா.குணசீலன் said... பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றொரு பழமொழி உண்டு நண்பரே..//
நல்ல விளக்கம் குணசீலன்.
ஏன் புதன் எளிதில் கண்ணுக்கு புலப்படாது என்பதை பின்பு தொடரில் ஒரு பகுதியில் எழுதுகிறான்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
//R.Elan. said...அருமையான பதிவு.எனக்கு ஏற்கனவே அரை குறையாக இது பற்றி தெரிந்தாலும்,முழுமையாக தெரிந்து கொள்ள ஆசை.தொடருங்கள்.//
வாங்க Elan, உங்கள் ஆர்வம் குறித்து மகிழ்ச்சி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment