Saturday, August 13, 2011

குப்பை - 55 வார்த்தை சிறுகதை

சுஜாதா அவர்களின் 55 வார்த்தை கதைகளின் மேல் கொண்ட ஈர்ப்பால் நான் முயற்சி செய்துள்ள சின்னஞ்சிறுகதை. இந்த கதையில் மொத்தம் 55 வார்த்தைகள் மட்டுமே. எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

குப்பை



தீபாவளி சமயம் அலுவலக விடுமுறைக்கு பெரியம்மா  வீட்டுக்கு வந்திருந்த அரவிந்தன் காலை உணவு திருப்தியாக சாப்பிட்ட பின் கை கழுவ வாஷ்பேசின் அருகே வந்தான். 

சட்டென்று முகம் மாறி அருகில் இருந்த டம்ப்ளரில் தண்ணீர் பிடித்து ஹாலில் நடுவே கை கழுவினான்.

அரவிந்தா என்ன பண்றே என்று பதறிய பெரியம்மாவைப் பார்த்து சிரித்தபடி, நீங்க மட்டும் குப்பையை கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போடாம மாடிலே இருந்து கிழே வீசலாம், நான் நடு வீட்டில் கை கழுவக்கூடாதா என்றான்.

Friday, August 12, 2011

பக்கோடா - சிறுகதை (சைதாபேட்டை நினைவுகள்)



டேய் இன்னாடா அது பையிலே தூக்கினு போறே என்று கேட்ட பக்கத்துக்கு வீட்டு ரகு அம்மாவை சற்று எரிச்சலுடன் பார்த்தேன். இதுக்கு வேறே வேலையே இல்லியா நம்மளை நோட்டம் விடுறது தான் இதுக்கு முக்கிய வேலை என்று நினைத்து கொண்டாலும் அதை வெளியே காட்டிகொள்ளாமல் பதில் கூறினேன்.
அது ஒன்னும் இல்லீங்க, முருகர் கோவிலுக்கு எதுர்க பக்கோடா கடை இருக்குதில்லே, அங்கே பக்கோடா, மிச்சர் போட்டு குடுக்க இந்த மாறி கவர் செஞ்சு குடுத்தா, நூறு கவருக்கு 75 காசு குடுப்பாங்க. அதான் வூட்டுல இருந்த பழைய பேப்பர்லே கவர் செஞ்சு எடுத்துனு போறேன் என்றேன்.

ஏய், உனுக்கு ஏண்டா இந்த தேவல்லாத வேலை, படீக்ரத வுட்டுட்டு, இரு இரு உங்க அம்மா கைலே சொல்றேன். இந்த பக்கோடா கடைக்காரன் இப்பிடி கவர் செஞ்சு குடுத்தா துட்டு குடுப்பானு இவ்ளோ நாள் எனுக்கு தெரியாம போச்சே, இரு அவனை இப்பமே போய் இன்னான்னு கேக்குறேன்.

சர்தான், இதுக்கும் வெச்சுதா ஆப்பு, எதோ கவர் வித்து கொஞ்சம் மூசுண்ட வாங்கி துன்னலாம்னு பாத்தா அத்த போய் இது கெடுக்குதே என்று மனதில் நினைதுகொண்டதை  வெளியில் காட்டாமல், ஐயோ வேணாங்க இந்த ஒரு தபா மட்டும் தாங்க, இனிமேல் பண்ண மாட்டேன், அம்மா கைலே சொல்லாதீங்க என்று கெஞ்சினேன்.

செரி, செரி சொல்லலே, அந்த பைய என் கைலே குடுத்துட்டு நீ போய் படீக்ற வேலைய பாரு. இன்னொரு தபா இத்த செஞ்சே அவ்ளோதான், அக்காங்...என்று பெரிய மகராணி தோரணையில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரகு அம்மா.

சில மணி நேரம் வீட்டில் உட்கார்ந்து ஏதேதோ செய்து கொண்டிருந்த நான், பின்னர் போரடிகுதே, ரகுவை கூப்பிட்டு எதாவது வெளையாடலாம என்று நினைத்து கொண்டிருந்தபோது  டிரௌசர் பாக்கட்டில் வைத்திருந்த கோலிக்குண்டுகள்  சலசலத்தது.

ரகு வீடு வாசலில் நின்று குரல் கொடுத்தேன், டேய் ரகு, வரியாட கொஞ்ச நேரம் ராஜா டோனி வெள்ளாடலாம்.

கொஞ்சம் உள்ளே வந்து உக்காருடா, எங்க அம்மா ஒரு வேலை கொடுதிருகுறாங்க, அத்த முட்சிடு வரேன் என்றான் ரகு.

நான் உள்ளே நுழைந்து பார்த்தபின் அதிர்ச்சில் ஒரு கணம் தடுமாறிவிட்டேன். ரகு, அவன் அக்கா, அண்ணன் என குடும்பமே பக்கோடா கட்ட கவர் செய்துகொண்டிருந்தது.

Tuesday, August 9, 2011

இந்திய பயணம், பாரிஸ் மற்றும் பதிவு எழுதுவது


ஒரு வழியா இந்திய பயணத்தை முடிச்சிட்டு, அமெரிக்க வாழ்க்கையிலே ஓடுறதுக்கு திரும்பி வந்தாச்சு. ஏர்போர்டுக்கு வழியனுப்ப வந்த உறவினர்கள் பலர் கண்கள் கலங்கி சிவந்து இருந்ததை கண்டு, நாங்களும் கலங்கி போய் கனத்த மனதுடன் தான் விடைகொடுத்தோம். இது போன்ற நேரங்களில் நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன சொல்ல இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை தவிர...சரி சொல்ல வந்ததை விட்டுவிட்டு, இப்படி சீரியஸ் ட்ராக்குக்கு போகலே. இந்தியா வரும் வழியில் பாரிஸ் ட்ரான்சிட்-ல்  சுமார் பதினோரு மணிநேர டைம் இருந்ததால், ரொம்ப நாள் பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்த ஈபில் டவர் போய் பாத்துட்டு வந்தோம். பாரிஸில் அன்று அவ்வபோது மழை பெய்தது, ஆனாலும் ரெயின் கோட் வாங்கி அணிந்து கொண்டு ஊர் சுற்றி பார்த்தோம். பாரிஸில் ஈபில் டவர் தவிர இன்னும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்குனு உள்ளே போய் பாத்தாதான் தெரியுது. எல்லாம் அவ்வளவு அழகு. ஊருக்கு போனதும், ஒழுங்கா பிரெஞ்சு வரலாற்றை பற்றி படிக்கணும்னு நினைச்சுகிட்டேன். எதாவது நல்ல புத்தகம் தெரிந்தால் சொல்லுங்க.

பாரிஸ் போயிட்டு வர விசயத்திலே, முதல்லே ஏர்போர்ட் விட்டு வெளிலே போய்ட்டு திரும்பி நேரத்துலே வந்து பிளைட் பிடிக்க முடியுமான்னு ஒரே குழப்பமா இருந்தது. சரி இருக்கவே இருக்கு நம்ம ப்ளாக் சைட், அதுலே ஒரு பதிவு போட்டு கேட்டு பார்ப்போம். நம்மை பதிவையும் மதிச்சு படிக்க வருபவர்களில், யாரவது ஒருத்தர் பாரிஸ்லே இருந்து பதில் சொல்ல மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை இருந்தது. என்ன ஆச்சரியம் பாருங்க, யாரோ ஒருத்தர் பேர் சொல்லாம அனானி முகவரிலே இருந்து பதில் போட்டு இருந்தாரு. பாரிஸ் பற்றி விவரங்கள் அளித்த அந்த அன்பருக்கு என் நன்றிகள், நீங்க இந்த பதிவை படித்தீர்கள் என்றால் உங்கள் பெயரை குறிப்பிட  வேண்டுகிறேன். நம்ம ப்ளாக் எழுதறதுல எப்படி எல்லாம் உதவி கிடைக்குது பாத்தியா என்று தங்கமணியிடம் சொல்லி ரெண்டு நாள் சிலாகித்துகொண்டிருந்தேன். ஆமாம் கூகிள்லே போட்டா பதில் வந்து தானா விழுது, இதுக்கு போய் அந்த கம்ப்யுட்டரை முறைச்சு முறைச்சு பாத்துகிட்டு ப்ளாக் எழுதறது தேவையா என்று ஒரு முனுமுனுப்பு கேட்டது. ப்ளாக் எழுதுவதில் எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை இருக்குனு தெரியலே, நான் எப்போ ப்ளாக் எழுத உக்காந்தாலும் உடனே இதை பண்ணலியா அதை பண்ணலியா என்று வீட்டுலே இருக்கிற நண்டு சிண்டுங்க கூட வந்து வேறே எதாவது வேலை தருவாங்க. எனக்கெல்லாம் எழுத தோணுவதே பெரிய விஷயம், அதை எழுத ட்ரை பண்ணும் போது அதுக்கு வர தடைகள் இருக்குதே, எப்பா சொல்லி மாளாது. அதுலே தங்கமணி சொல்ற இன்னொரு விஷயம், 'நீங்க எழுதும் போது நீங்க ரொம்ப டென்சனா இருக்குற மாதிரி இருக்கு, எதுக்கு அப்பிடி டென்சனா எழுதணும்' என்று அக்கறையா கேக்குற கேள்விக்கெல்லாம் என்னத்தை பதில் சொல்றது. ஏதோ நான் எதையாவது எழுதி/கிறுக்கி முடித்தால் ஒரு வித திருப்தி கிடைகிறது. அதைவிட திருப்தி அதற்கு நீங்கள் பின்னூட்டம் இடும்போது கிடைகிறது. அதனால் முடிந்த வரை நேரத்தை ஒதுக்கி மனதிற்கு தோன்றியதை எழுதுகிறேன். சரி இப்படி நான் பதிவு எழுதும் கதையை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். நான் சொல்லவந்ததை விட்டு விட்டு திரும்பவும் ரூட் மாறுகிறேன். என்ன சொல்லவந்தேன் ? ஆங்...இந்திய பயணம் நன்றாக இருந்தது. அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பொதுவாக நன்றாக கழிந்தது. எப்போதும் போல பயண நினைவுகளை அசை போட்டுகொண்டு அடுத்து முறை செல்வதற்காக காத்திருப்பு தொடர்கிறது. இங்கே சாம்பிளுக்கு ஒரு ஈபில் டவர் படம், மற்ற படங்களை தனியாக இன்னொரு பதிவில் போடுகிறேன்.



மேகமூட்டமான வானிலையில் ஈபில் டவர்



Friday, August 5, 2011

கோவை - சில புகைப்படங்கள்


அவினாஷி சாலை - மாலை சுமார் ஆறு மணி அளவில்

கோவை வ.உ.சி பூங்கா

வ.உ.சி பூங்கா எதிரில் உள்ள சாலை

வ.உ.சி பூங்கா எதிரில் உள்ள சாலை

மருதமலை மேலிருந்து கோவை ஷாட்

மருதமலை மேலிருந்து கோவை ஷாட்

மருதமலை அடிவாரம்

சைதாபேட்டை நினைவுகள்




என் பின்னால் சுமார் பத்து பேர் கொண்ட ஒரு சிறிய கூட்டமே ஒடி வந்துகொண்டிருந்தது. டேய் புடிரா, விட்டுற கூடாது...என்று ஆக்ரோஷமான குரல்கள் கேட்டது. எனக்கு எப்படி ஒரு வேகம் வந்ததோ தெரியவில்லை எல்லோருக்கும் முன்னே ஒடிகொண்டிருந்தேன். அந்த வேகத்தில் ஓடும்போதும் என் கண்கள் மட்டும் வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. எனக்கும் என்னை பின்தொடர்ந்த கூட்டத்திற்கும் குறைந்தது பத்தடி தொலைவு இருக்குமாறு பார்துகொண்டேன். மூச்சிரைத்தது, போதும் ஓட்டத்தை விட்டுறலாமா என்று தோன்றியது. வேண்டாம், இப்போ விட்டால் இந்த மாதிரி வாய்ப்பு திரும்ப கிடைக்க எத்தனை நாள் ஆகுமோ தெரியாது. மனதிற்குள் உத்வேகத்தை ஏற்படுத்திக்கொண்டு வேகத்தை கூட்டினேன். இன்னும் சிறிது தூரம் தான் என்று எனக்குள் கூறிக்கொண்டு வானத்தை பார்த்தபடி ஓடினேன். இந்த மாதிரி ஒடிகொண்டிருப்பது அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான், என்னை ஒரு வழி ஆகிவிடுவாள். ஆனாலும் ஆசை யாரை விட்டது, இப்போது என் நோக்கம் எல்லாம் வேகமாக ஓடுவதுதான். இதோ என் இலக்கை நெருங்கி விட்டேன். சற்றே வேகத்தை கூட்டி இரண்டடி தாவி டீலில் அறுந்து வந்த, அந்த 1 சீட் (sheet) ரெட்டை கண் பானா காத்தாடியை பிடித்தேன். 


பின் குறிப்பு: சென்னை, சைதாபேட்டையில் வளர்ந்த நான், சிறுவயது நினைவுகளை அவ்வபோது எடுத்துவிட நினைத்ததின் விளைவே இந்த மைக்ரோ சிறுகதை.

Thursday, August 4, 2011

இந்திய பயணம், உதவும் கரங்கள் மற்றும் பாரிஸ் வாழ் மக்களுக்கு ஒரு கேள்வி



இந்திய பயணம்:

இப்போது தான் இந்திய பயணம் என்று பதிவு எழுதியது போல இருக்கிறது, அதற்குள் திரும்பி இரை தேடும் வாழ்க்கைக்கு கிளம்பும் நாள் நெருங்கிவிட்டது. ஷாப்பிங், உணவகங்கள்,  உறவினர்களை சந்திப்பது, கோவில் குளம் சென்று வருவது என்று நன்றாக கழிந்தது. இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், எங்கள் மகள் பிறந்தநாளை மருதமலை கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, அங்கு அருகில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக (ஆதரவற்ற ? - இப்படி கூறலாமா என்று தெரியவில்லை, வேறு எதாவது வார்த்தை உள்ளதா ?) 'உதவும் கரங்கள்' நடத்தும் சொந்தம் என்கிற இடத்தில் கொண்டாடினோம். சுமார் எழுபது குழந்தைகள் உணவு மற்றும் இனிப்பு வகைகள் வழங்கிவிட்டு அவர்கள் அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து பாடுவதை கேட்டு எனக்கு லேசாக கண்ணீரே வந்துவிட்டது. வேறு இடத்தில் எத்தனை ஆயிரம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாடினாலும் இந்த நெகிழ்ச்சி கிடைப்பதில்லை. இந்த எழுபது குழந்தைகளை பார்த்துகொள்வதுடன் அவர்களே அருகில் இந்த குழந்தைகளுக்கென ஒரு பள்ளியும் நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியில் வெளியில் இருந்து குழந்தைகள் வந்து பயில்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியா வந்தபோது, இதே இடத்தில் எங்கள் மகள் பிறந்தநாளை கொண்டாடினோம். அப்போது அங்கு 'சிம்ரன்' என்று பெயரிடப்பட்ட சிறு குழந்தையை எங்களுக்கு ஏனோ மிகவும் பிடித்திருந்தது. அப்போது சிறு குழந்தையாக பார்த்த சிம்ரன் நன்றாக வளர்ந்திருந்தாள். அந்த குழந்தைக்கென்று தனியாக எதாவது செய்யவேண்டும் என்று எங்கள் மகள் விரும்பியதால், சிம்ரனின் வருடாந்திர கல்வி செலவை நாங்கள் ஏற்றுகொள்வதாக கூறி, இந்த வருடத்திற்கான தொகையை கட்டிவிட்டு வந்தோம். அந்த குழந்தையின் முகத்தில் அப்படியொரு வெட்கம் கலந்த சந்தோசம். உதவும் கரங்கள் அமைப்பு தங்களுக்கு வரும் நன்கொடையை மற்ற பிரபலமாகாத சிறிய அமைப்புகளுக்கும் கொடுத்து உதவுதாக கேள்விப்பட்டேன். நீங்கள் கோவைக்கு சென்றால், இங்கு சென்று முடிந்த உதவி செய்ய கேட்டுக்கொள்ளவே இந்த விஷயத்தை கூறுகிறேன். இன்னொரு தகவல் - இங்கு வளரும் எல்லா குழந்தைகளுக்கும் அவர்களின் பெயரின் பின்னே வித்யாசாகர் என்று இந்த அமைப்பை உருவாக்கியவரின் பெயரை Lastname -ஆக போடுகிறார்கள்.

பாரிஸ் வாழ் மக்களுக்கு ஒரு கேள்வி:

இந்த வாரம் பாரிஸ் (Paris, Charles de Gaulle -CDG) வழியாக பாஸ்டன் செல்கிறேன். பாரிசில் சுமார் பதினோரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்திற்குள் ஏர்போர்ட் விட்டு வெளியே சென்று அருகில் எதாவது பார்த்துவிட்டு திரும்ப முடியுமா அல்லது ஏர்போர்ட்டிலேயே காத்திருப்பது உத்தமமா ? பாரிஸ் வாழ் மக்கள் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள், எதாவது ஐடியா கொடுத்தால் நன்றாக இருக்கும். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...