இங்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு எப்போ போன் பண்ணினாலும் நம்ம மக்கள் கேட்கிற ஒரு முக்கியமான கேள்வி, எப்போ இங்கே வரீங்க என்பது தான். நாமும் இந்த வருஷம் வரணும்னு ஒவ்வொரு வருசமும் சொல்லிக்கிட்டு இருப்போம். சரி சரி, சீக்கிரமா வாங்க, புள்ளைங்களை எல்லாம் தேடுது என்று நம்பிக்கையுடன் சொல்பவர்களை பார்த்து நம் மைன்ட் வாய்ஸ் இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிட்டு இருக்கு என்று கேட்க்கும். ஒரு சில புத்திசாலி இளவட்டங்கள் நேரடியாக - ஆமாம் எப்ப கேட்டாலும் இதே பதில் தான் சொல்றீங்க என்று மனதில் உள்ளதை தைரியமாக சொல்வார்கள். ஆமாம் அதுவும் சரிதான், நாம் ஏன் இப்படி பண்றோம்னு யோசிச்சு மனசுல தோணினதை இங்கே எழுதுறேன்.
ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் பள்ளி விடுமுறையின் போது, இந்த வருஷம் இந்தியா போயிட்டு வரலாமாப்பா என்று வீட்டில் தங்கமணி ஒரு கேள்வி எழுப்புவார். நானும் சரி பாக்கலாம் என்று அப்போதைக்கு சொல்லிவிட்டு, அதை பற்றி மெதுவாக மனதில் அசை போட்டுகொண்டு அலுவலக வேலையோ அல்லது வீட்டு வேலையோ எதாவது ஒன்றில் மூழ்கி விடுவேன். அமெரிக்கா வந்த புதிதில் பல வருடங்களாக இங்கு வாழும் இந்தியர்களிடம் பேசும்போது நான் இந்தியா போய் ஐஞ்சு வருஷம் ஆச்சு, பத்து வருஷம் ஆச்சு என்று கூறுவார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும், எப்படி தான் அவ்ளோ நாள் இந்தியா பக்கம் போகாம இருக்காங்களோ என்று தோன்றும். ஒரு சிலரிடம் ஏங்க அவ்ளோ நாளா போகலே என்று கேட்டால், கிரீன் கார்டு போட்டு இருக்கோம், லீவ் இல்லை, குழந்தைகள் வளர்ந்து இங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள், வேறே யாரும் முக்கியமா பாக்குறா மாதிரி இந்தியாவிலே இல்லே என்று ஏதாவது ஒரு பதில் வரும். இதை போன்ற பதில்களை கேட்கும் போது, நம் மனம் எப்படி 'Decision making' செய்கிறது என்பதை பற்றி படித்த புத்தக வரிகள் நியாபகம் வரும். பொதுவாக நாம் உள் மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதற்கு ஏற்றமாதிரி ஆயிரம் காரணங்களை நம் மனம் அடுக்கி அந்த முடிவு சரி தான் என்று நம்மை சமாதானப்படுத்தும். அது தான் இங்கும் நடக்கிறதோ என்று தோன்றும்.
இங்கு வந்த புதிதில் வருஷத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒன்றரை வருஷத்துக்கு ஒரு முறையோ என்று இருந்த இந்திய பயணம், சில ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் இந்திய பயணம் என்று ஆகிவிடும். இதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும், பலர் சொல்லும் முக்கியமான காரணம் பள்ளி விடுமுறை மற்றும் பயண செலவு தான். குழந்தைகள் வளரத்துவங்கி பள்ளி செல்லும் கால கட்டத்தில், இந்திய பயணம் என்பது பள்ளியின் கோடை விடுமுறையான ஜூன் தொடங்கி ஆகஸ்ட்-க்குள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரி கிட்டத்தட்ட மூணு மாசம் லீவ் இருக்கே அதுலே ஒரு மாசமாவது போயிட்டு வரலாமேன்னு கேட்டீங்கனா, அதுக்கு பதில் பிளைட் டிக்கெட் ரேட் தான். எல்லாருமே இந்த மூணு மாசத்துக்குள்ளே பயணம் செய்ய விரும்புவதால் பிளைட் டிக்கெட் எல்லாம் யானை வேலை சொல்லுவானுங்க. டிக்கெட் ரேட் தவிர இந்தியா போய் ஆகிற செலவு தனி. அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்று தெரிந்தால் - சலூனில் போய் சவரம் செய்து விட்டு எவ்வளவு ஆச்சுங்க என்று கேட்டால் கூட, குடுங்க சார், நீங்களே பார்த்து குடுங்க என்று நம் சுயமரியாதைக்கு சவால் விடுவார். அது மட்டும் இல்லாமல் இந்தியா போகும் போது 'இண்டியா ஷாப்பிங்' என்று கூறி ஒரு இங்கு வாழும் நம் மக்கள் ஒரு அலப்பறை குடுப்பார்கள் பாருங்கள்...எப்பா தலையே சுத்தும். பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தன் பெருமையை பெரிதாக அவர்கள் வாழும் ஊரில் காட்ட முடியாது, இந்த மாதிரி இந்திய பயணத்தின் போது தான், என் இந்திய மண்ணில் நடந்து போன இடத்தில் கூட, ஒரு பத்து நிமிடமாவது சென்ட் வாசனை வீச வேண்டும் என்கிற ரேஞ்சில் விலை கொடுத்து பொருட்கள் வாங்குவார்கள். தனக்கு ஷாப்பிங் செய்வதோடு இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எதாவது வாங்கி போக வேண்டும். இப்படி செலவு கணக்கை போட்டு - சொப்பா இப்பவே கண்ண கட்டுதே என்று சிலர் இந்திய பயணத்திற்கு கல்தா குடுத்துவிடுவதும் உண்டு. இது புலி வாலை புடிச்ச கதை தான், பணம் சம்பாரிக்க வெளிநாட்டுக்கு வந்து, நம்ம சொந்தங்களை பாக்க போக கூட யோசிக்க வைக்கிற சமூக மற்றும் பொருளாதார கண்ணாமூச்சிலே மாட்டிகிறோம்.
இப்படி இருந்தா அப்ப எப்பதான் இந்தியா போயிட்டு வருவீங்க என்று நீங்க கேட்கலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சிலருக்கு புரட்டாசி மாதம் முழுக்க அசைவம் சாப்பிடாமல் இருந்து அடுத்த மாதம் தொடங்கியதும் ஒரு கட்டு கட்ட ஆசை வரும் பாருங்கள், அதை போல சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் இந்தியா போயே ஆக வேண்டும் என்று ஆசை வரும் - அப்பொழுது மேலே கூறிய காரணங்கள் எல்லாம் தவிடு பொடியாகி, என்ன டேட் ஆனாலும், என்ன ரேட் ஆனாலும் எட்றா டிக்கெட்டை இந்தியாவுக்கு என்று ஒரு வேகத்தில் டிக்கெட் முடிவு செய்யப்படும். அதன் பின்பு எல்லா ஏர்லைன்ஸ் வெப்சைட்களையும் போட்டு தாக்கி, பல டிராவல் ஏஜென்ட்களுக்கு குடைச்சல் கொடுத்து ஒரு வழியாக டிக்கெட் எடுத்துருவோம். அப்படி எடுத்து முடித்ததுமே ஒரு வித உற்சாகம் வந்துவிடும். சரி அதே உற்சாகத்தில் இந்தியாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து சொல்லிவிடலாம் என்று முதலில் யாராவது ஒருவருக்கு போன் அடித்து அவருக்கு எப்போது வருகிறோம் எவ்வளவு நாள் தங்குகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த நபருக்கு போன் அடித்து ஹலோ என்று சொல்வதற்குள், 'ஆமா, அடுத்த வாரம் வரீங்கன்னு கேள்விப்பட்டேன்' என்று நம்மை அதிர வைப்பார். இந்தியாவின் தொலைதொடர்ப்பு விஞ் ஞான வளர்ச்சியை பற்றி வியந்துகொண்டிருக்கும் போதே - அவனுக்கு தெரியுது, எங்களுக்கு எல்லாம் முதல்ல சொல்ல மாட்டீங்க என்று சற்று கோபத்துடன் கூறுவார். நாம் மனதிற்குள் ஐயா வடை யாருக்காவது ஒருத்தருக்கு தான் முதல்லே கிடைக்கும் என்று நினைத்துகொண்டு, ஹி ஹி...நான் உங்களுக்கு தான் முதல்லே போட்டேன், லைன் கிடைக்கலேன்னு அவருக்கு பண்ணி சொன்னேன் என்று ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டிவரும்.
என்னதான் சொல்லுங்க, இத்தனையையும் தாண்டி தமிழ்நாட்டிலே காலடி எடுத்து வைத்ததும் ஒரு சூப்பர் பீலிங் வருங்க. என்னை பொருத்தவரை சுத்தி இருக்குற மக்கள் யாருகிட்டே வேணும்னாலும் தமிழ்லே பேசலாம் என்கிற நினைப்பே ஒருவித போதை தான். நாம என்ன நினைச்சு என்ன ஆக போகுது...தமிழ்நாட்டிலே போஸ்ட் ஆபீஸ் போனா கூட - எஸ், வாட் டூ யு வான்ட் -னு கேக்குறாங்க. என்ன பண்ண தமிழ் நாட்டிலே தமிழ் பேசாததை பத்தி முன்பு தமிழா தமிளா என்கிற பதிவில் குமுறி இருக்கிறேன். அங்கே போய் சேர்ந்து ரெண்டாவது நாளே, நம்ம சொந்த பந்தங்கள் இத்தனை நாள் போனில் கேட்க முடியாமல், மனசுக்குள் பூட்டி வைத்திருந்த அனைத்தையும் எடுத்து நம் முன் வீச - நம்ம வாயும் சும்மா இருக்குமா, பெரிய நாட்டாமை மாதிரி எதாவது ஏடாகூடமா சொல்ல, அது சண்டையிலே போய் முடியும். என்ன தான் இருந்தாலும் நம்ம ஆளுங்க கிட்டே இருக்குற நல்ல குணம் என்ன பிரச்சனை வந்தாலும் கொஞ்ச நாள்லே மறந்துட்டு திரும்பி சகஜமா பேச ஆரம்பிச்சிருவாங்க. யாரவது ஏன்னு கேட்டா என்னோட மாப்ளை கிட்டே நான் சண்டை போடாம வேறே யாரு போடுவா என்று பதில் வரும். சும்மாவா சொன்னாங்க - குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லைன்னு. ஆனா ஒன்னு, நம்ம உறவுங்க மற்றும் நண்பர்கள் கூட இருந்து பழைய கதைகளை பேசி மனசு விட்டு பேசி சிரிக்கிறது இருக்கே அதுக்கு ஈடு இணை கிடையாது. அந்த சந்தோசத்திலே திளைத்துகிட்டு இருக்கும் போதே நம்ம திரும்பி கிளம்ப வேண்டிய நாள் வந்துரும். ஆனாலும் அந்த நினைவுகளை சுமந்து அடுத்த ட்ரிப் வரும் வரை ஓட்டலாம்.
பின் குறிப்பு:
ஒரு முக்கியமான விஷயம் மகாஜனங்களே, இது யாரையும் மனசுல நினைச்சுட்டு போட்டு தாக்க எழுதவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த வாரம் இந்தியா போக இருப்பதால், சும்மா எதோ மனசுல தோணினதை எழுதி இருக்கேன். இதுலே சொல்ற பல விஷயங்கள் நானும் பண்ணி இருக்கேன் அண்ட் பண்றேன். தப்பா நினைச்சுக்காம காமடியா நினைச்சிக்கோங்க.
19 comments:
அருமையான பதிவு அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனோ நிலை குறித்து
இத்தனை இயல்பாக யாரும் எழுதிப் படித்ததில்லை
தங்கள் இந்திய பயணம் சிறக்க என மனமார்ந்த வாழ்த்துக்கள்
Really nice article.
-Lovely, Singapore.
கருத்துக்கு மிகவும் நன்றி ரமணி ஐயா
அன்புடன்
நாராயணன்
//Really nice article.
-Lovely, Singapore.//
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
நாராயணன்
True. Nicely written.
Have a nice trip.
What about the shopping in India, just before coming back?
Sorry....no tamil font:(
ஓலை, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை நிறை குறைகளை இப்பதி பகிர்ந்தால் தான், நம் இளைஞர்களிடையே
உள்ள வெளிநாட்டு மோகம் குறையும்.
இருப்பதை வைத்து சந்தோஷமாக இந்தியாவிலேயே சிறப்பாக வாழத் தொடங்குவர்
குழந்தைகள் வளர்ந்து இங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள், வேறே யாரும் முக்கியமா பாக்குறா மாதிரி இந்தியாவிலே இல்லே
This is the worst mindset
துளசி கோபால், நல்ல பாயிண்ட் நியாபகப்படுத்தி இருக்கீங்க.
அதுக்கு ஒரு தனி பதிவே எழுதலாம். நம்ம ஆளுங்க, முடிஞ்சா மொத்த இந்தியாவையும் மூட்டை கட்டி தூக்கிட்டு வந்துடுவாங்க. மளிகை சாமான், பாத்திரம், குக்கர், டிரஸ், நகை, ஸ்வீட்... அது இதுன்னு ஐநூறு ருபாய் நோட்டு (இப்போ எல்லாம் ஆயிரம் ரூபாயோ என்னமோ, தெரிந்தவர்கள் சொல்லவும்) பறக்கும். அதுக்கு அப்புறம் அதை எல்லாம் பேக்கிங் பண்ணி எடை பார்த்து திரும்பி கொண்டு வரதுக்குள்ளே ஒரு வழி ஆயிடும்.
வருகைக்கு மிகவும் நன்றி.
சரியாக சொன்னீர்கள் ராம்ஜி,
இப்பொழுது இந்தியாவில் உள்ள வாய்ப்புகளுக்கு வெளிநாட்டு வந்து வேலை செய்யவேண்டும் என்கிற அவசியமே இல்லை என்றே தோன்றுகிறது. வெளிநாட்டுக்கு வருவது கூட பரவாயில்லை, இங்கு வந்தவுடன் இதை எதை சொர்கபுரி போல நம்ம ஊரில் உள்ள ஆட்களுக்கு சித்தரிப்பது தான் கொடுமை. அதை கேட்டு தான் மற்றவர்களும் வெளிநாடு செல்லவேண்டும் என்று விழைகிறார்கள் என்பது என் கருத்து.
வருகைக்கு நன்றி.
//குழந்தைகள் வளர்ந்து இங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள், வேறே யாரும் முக்கியமா பாக்குறா மாதிரி இந்தியாவிலே இல்லே
This is the worst mindset//
ஆமாம். ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு தேவை என்றால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாரையாவது அழைத்து வைத்துகொள்வது. கேட்டால் நாங்க எல்லாரும் போவதற்கு அவர்கள் வந்துவிட்டால் பரவாயில்லை என்று சொல்வது.
சிலர் இருகிறார்கள், அவர்களுக்கு தேவை என்றால் கூப்பிட்டு வைத்து உறவாடுவார்கள். பின்னர் தேவை இல்லை என்றால் கழட்டி விடுவார்கள். இதெல்லாம் கூட ஒண்ணுமில்லை, முன்பு ஒருமுறை எனக்கு தெரிந்த ஒருவர் கூறினார் - என்னோட அம்மாவுக்கு உடம்பு நல்லா இருக்கும் போதே அவங்களை கூப்பிட்டு இங்கே யூஸ் பண்ணிக்கணும். அதை கேட்டவுடன், இந்த அளவிற்கு மனிதன் சுயநலமாக மாறிவிடுவானா என்று ஆச்சரியமாக இருந்தது.
Same feelings.... We're going to India in Sep after 2 years. I'm trying avoid most of the above facts. But thangamni kekkiramadiri teriyillai. Enna panna?!?!?!
//Same feelings.... We're going to India in Sep after 2 years. I'm trying avoid most of the above facts. But thangamni kekkiramadiri teriyillai. Enna panna?!?!?! //
நீங்க நம்ம ஆளு சார். நம்ம என்னத்தை பெருசா பண்ண முடியும். அவங்க ஆசையா பொருட்களை வாங்கி (அவங்க பக்க உறவுகாரங்களுக்கு மட்டும்) குவிக்கும்போது நாம எதாவது சொன்னா ஊருக்கு போற நேரத்திலே பிரச்சனையா முடியும். காந்திய அஹிம்சா வழி தான் நமக்கு எல்லாம் சரி. (ஆமா...இல்லாட்டாலும் இவரு...தங்கமணியின் வாய்க்குள் முனகுவது கேட்கிறது)
உங்கள் பயணம் மகிழ்ச்சியுடன் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
அட்ரா சக்கை!அட்ரா சக்கை!வீட்டுக்கு வீடு வாசப்படிதான்:)
போகப்போக சரியாப் போயிடும்.நான் ஆறாவது டிக்கட்.பின் தொடர்பவர்களைச் சொன்னேன்:)
//அட்ரா சக்கை!அட்ரா சக்கை!வீட்டுக்கு வீடு வாசப்படிதான்:)//
ஆமாங்க சார், என்ன பண்றது, ஆனா அதுலயும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்யுது, என்ன சொல்றீங்க.
//போகப்போக சரியாப் போயிடும்.நான் ஆறாவது டிக்கட்.பின் தொடர்பவர்களைச் சொன்னேன்:)//
பின் தொடர்வதற்கு நன்றி. இன்னும் கொஞ்சம் பொறுப்பா பதிவு போடணும்னு கொஞ்சம் உதறல் இருக்கத்தான் செய்யுது, முயற்சி பண்றேன் சார்.
Post a Comment