இங்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு எப்போ போன் பண்ணினாலும் நம்ம மக்கள் கேட்கிற ஒரு முக்கியமான கேள்வி, எப்போ இங்கே வரீங்க என்பது தான். நாமும் இந்த வருஷம் வரணும்னு ஒவ்வொரு வருசமும் சொல்லிக்கிட்டு இருப்போம். சரி சரி, சீக்கிரமா வாங்க, புள்ளைங்களை எல்லாம் தேடுது என்று நம்பிக்கையுடன் சொல்பவர்களை பார்த்து நம் மைன்ட் வாய்ஸ் இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிட்டு இருக்கு என்று கேட்க்கும். ஒரு சில புத்திசாலி இளவட்டங்கள் நேரடியாக - ஆமாம் எப்ப கேட்டாலும் இதே பதில் தான் சொல்றீங்க என்று மனதில் உள்ளதை தைரியமாக சொல்வார்கள். ஆமாம் அதுவும் சரிதான், நாம் ஏன் இப்படி பண்றோம்னு யோசிச்சு மனசுல தோணினதை இங்கே எழுதுறேன்.
ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் பள்ளி விடுமுறையின் போது, இந்த வருஷம் இந்தியா போயிட்டு வரலாமாப்பா என்று வீட்டில் தங்கமணி ஒரு கேள்வி எழுப்புவார். நானும் சரி பாக்கலாம் என்று அப்போதைக்கு சொல்லிவிட்டு, அதை பற்றி மெதுவாக மனதில் அசை போட்டுகொண்டு அலுவலக வேலையோ அல்லது வீட்டு வேலையோ எதாவது ஒன்றில் மூழ்கி விடுவேன். அமெரிக்கா வந்த புதிதில் பல வருடங்களாக இங்கு வாழும் இந்தியர்களிடம் பேசும்போது நான் இந்தியா போய் ஐஞ்சு வருஷம் ஆச்சு, பத்து வருஷம் ஆச்சு என்று கூறுவார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும், எப்படி தான் அவ்ளோ நாள் இந்தியா பக்கம் போகாம இருக்காங்களோ என்று தோன்றும். ஒரு சிலரிடம் ஏங்க அவ்ளோ நாளா போகலே என்று கேட்டால், கிரீன் கார்டு போட்டு இருக்கோம், லீவ் இல்லை, குழந்தைகள் வளர்ந்து இங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள், வேறே யாரும் முக்கியமா பாக்குறா மாதிரி இந்தியாவிலே இல்லே என்று ஏதாவது ஒரு பதில் வரும். இதை போன்ற பதில்களை கேட்கும் போது, நம் மனம் எப்படி 'Decision making' செய்கிறது என்பதை பற்றி படித்த புத்தக வரிகள் நியாபகம் வரும். பொதுவாக நாம் உள் மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதற்கு ஏற்றமாதிரி ஆயிரம் காரணங்களை நம் மனம் அடுக்கி அந்த முடிவு சரி தான் என்று நம்மை சமாதானப்படுத்தும். அது தான் இங்கும் நடக்கிறதோ என்று தோன்றும்.
இங்கு வந்த புதிதில் வருஷத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒன்றரை வருஷத்துக்கு ஒரு முறையோ என்று இருந்த இந்திய பயணம், சில ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் இந்திய பயணம் என்று ஆகிவிடும். இதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும், பலர் சொல்லும் முக்கியமான காரணம் பள்ளி விடுமுறை மற்றும் பயண செலவு தான். குழந்தைகள் வளரத்துவங்கி பள்ளி செல்லும் கால கட்டத்தில், இந்திய பயணம் என்பது பள்ளியின் கோடை விடுமுறையான ஜூன் தொடங்கி ஆகஸ்ட்-க்குள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரி கிட்டத்தட்ட மூணு மாசம் லீவ் இருக்கே அதுலே ஒரு மாசமாவது போயிட்டு வரலாமேன்னு கேட்டீங்கனா, அதுக்கு பதில் பிளைட் டிக்கெட் ரேட் தான். எல்லாருமே இந்த மூணு மாசத்துக்குள்ளே பயணம் செய்ய விரும்புவதால் பிளைட் டிக்கெட் எல்லாம் யானை வேலை சொல்லுவானுங்க. டிக்கெட் ரேட் தவிர இந்தியா போய் ஆகிற செலவு தனி. அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்று தெரிந்தால் - சலூனில் போய் சவரம் செய்து விட்டு எவ்வளவு ஆச்சுங்க என்று கேட்டால் கூட, குடுங்க சார், நீங்களே பார்த்து குடுங்க என்று நம் சுயமரியாதைக்கு சவால் விடுவார். அது மட்டும் இல்லாமல் இந்தியா போகும் போது 'இண்டியா ஷாப்பிங்' என்று கூறி ஒரு இங்கு வாழும் நம் மக்கள் ஒரு அலப்பறை குடுப்பார்கள் பாருங்கள்...எப்பா தலையே சுத்தும். பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தன் பெருமையை பெரிதாக அவர்கள் வாழும் ஊரில் காட்ட முடியாது, இந்த மாதிரி இந்திய பயணத்தின் போது தான், என் இந்திய மண்ணில் நடந்து போன இடத்தில் கூட, ஒரு பத்து நிமிடமாவது சென்ட் வாசனை வீச வேண்டும் என்கிற ரேஞ்சில் விலை கொடுத்து பொருட்கள் வாங்குவார்கள். தனக்கு ஷாப்பிங் செய்வதோடு இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எதாவது வாங்கி போக வேண்டும். இப்படி செலவு கணக்கை போட்டு - சொப்பா இப்பவே கண்ண கட்டுதே என்று சிலர் இந்திய பயணத்திற்கு கல்தா குடுத்துவிடுவதும் உண்டு. இது புலி வாலை புடிச்ச கதை தான், பணம் சம்பாரிக்க வெளிநாட்டுக்கு வந்து, நம்ம சொந்தங்களை பாக்க போக கூட யோசிக்க வைக்கிற சமூக மற்றும் பொருளாதார கண்ணாமூச்சிலே மாட்டிகிறோம்.
இப்படி இருந்தா அப்ப எப்பதான் இந்தியா போயிட்டு வருவீங்க என்று நீங்க கேட்கலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சிலருக்கு புரட்டாசி மாதம் முழுக்க அசைவம் சாப்பிடாமல் இருந்து அடுத்த மாதம் தொடங்கியதும் ஒரு கட்டு கட்ட ஆசை வரும் பாருங்கள், அதை போல சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் இந்தியா போயே ஆக வேண்டும் என்று ஆசை வரும் - அப்பொழுது மேலே கூறிய காரணங்கள் எல்லாம் தவிடு பொடியாகி, என்ன டேட் ஆனாலும், என்ன ரேட் ஆனாலும் எட்றா டிக்கெட்டை இந்தியாவுக்கு என்று ஒரு வேகத்தில் டிக்கெட் முடிவு செய்யப்படும். அதன் பின்பு எல்லா ஏர்லைன்ஸ் வெப்சைட்களையும் போட்டு தாக்கி, பல டிராவல் ஏஜென்ட்களுக்கு குடைச்சல் கொடுத்து ஒரு வழியாக டிக்கெட் எடுத்துருவோம். அப்படி எடுத்து முடித்ததுமே ஒரு வித உற்சாகம் வந்துவிடும். சரி அதே உற்சாகத்தில் இந்தியாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து சொல்லிவிடலாம் என்று முதலில் யாராவது ஒருவருக்கு போன் அடித்து அவருக்கு எப்போது வருகிறோம் எவ்வளவு நாள் தங்குகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த நபருக்கு போன் அடித்து ஹலோ என்று சொல்வதற்குள், 'ஆமா, அடுத்த வாரம் வரீங்கன்னு கேள்விப்பட்டேன்' என்று நம்மை அதிர வைப்பார். இந்தியாவின் தொலைதொடர்ப்பு விஞ்ஞான வளர்ச்சியை பற்றி வியந்துகொண்டிருக்கும் போதே - அவனுக்கு தெரியுது, எங்களுக்கு எல்லாம் முதல்ல சொல்ல மாட்டீங்க என்று சற்று கோபத்துடன் கூறுவார். நாம் மனதிற்குள் ஐயா வடை யாருக்காவது ஒருத்தருக்கு தான் முதல்லே கிடைக்கும் என்று நினைத்துகொண்டு, ஹி ஹி...நான் உங்களுக்கு தான் முதல்லே போட்டேன், லைன் கிடைக்கலேன்னு அவருக்கு பண்ணி சொன்னேன் என்று ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டிவரும்.
என்னதான் சொல்லுங்க, இத்தனையையும் தாண்டி தமிழ்நாட்டிலே காலடி எடுத்து வைத்ததும் ஒரு சூப்பர் பீலிங் வருங்க. என்னை பொருத்தவரை சுத்தி இருக்குற மக்கள் யாருகிட்டே வேணும்னாலும் தமிழ்லே பேசலாம் என்கிற நினைப்பே ஒருவித போதை தான். நாம என்ன நினைச்சு என்ன ஆக போகுது...தமிழ்நாட்டிலே போஸ்ட் ஆபீஸ் போனா கூட - எஸ், வாட் டூ யு வான்ட் -னு கேக்குறாங்க. என்ன பண்ண தமிழ் நாட்டிலே தமிழ் பேசாததை பத்தி முன்பு
தமிழா தமிளா என்கிற பதிவில் குமுறி இருக்கிறேன். அங்கே போய் சேர்ந்து ரெண்டாவது நாளே, நம்ம சொந்த பந்தங்கள் இத்தனை நாள் போனில் கேட்க முடியாமல், மனசுக்குள் பூட்டி வைத்திருந்த அனைத்தையும் எடுத்து நம் முன் வீச - நம்ம வாயும் சும்மா இருக்குமா, பெரிய நாட்டாமை மாதிரி எதாவது ஏடாகூடமா சொல்ல, அது சண்டையிலே போய் முடியும். என்ன தான் இருந்தாலும் நம்ம ஆளுங்க கிட்டே இருக்குற நல்ல குணம் என்ன பிரச்சனை வந்தாலும் கொஞ்ச நாள்லே மறந்துட்டு திரும்பி சகஜமா பேச ஆரம்பிச்சிருவாங்க. யாரவது ஏன்னு கேட்டா என்னோட மாப்ளை கிட்டே நான் சண்டை போடாம வேறே யாரு போடுவா என்று பதில் வரும். சும்மாவா சொன்னாங்க - குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லைன்னு. ஆனா ஒன்னு, நம்ம உறவுங்க மற்றும் நண்பர்கள் கூட இருந்து பழைய கதைகளை பேசி மனசு விட்டு பேசி சிரிக்கிறது இருக்கே அதுக்கு ஈடு இணை கிடையாது. அந்த சந்தோசத்திலே திளைத்துகிட்டு இருக்கும் போதே நம்ம திரும்பி கிளம்ப வேண்டிய நாள் வந்துரும். ஆனாலும் அந்த நினைவுகளை சுமந்து அடுத்த ட்ரிப் வரும் வரை ஓட்டலாம்.
பின் குறிப்பு:
ஒரு முக்கியமான விஷயம் மகாஜனங்களே, இது யாரையும் மனசுல நினைச்சுட்டு போட்டு தாக்க எழுதவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த வாரம் இந்தியா போக இருப்பதால், சும்மா எதோ மனசுல தோணினதை எழுதி இருக்கேன். இதுலே சொல்ற பல விஷயங்கள் நானும் பண்ணி இருக்கேன் அண்ட் பண்றேன். தப்பா நினைச்சுக்காம காமடியா நினைச்சிக்கோங்க.