Friday, January 28, 2011

தமிழா தமிளா

சில முறை இதை பற்றி நண்பர்களிடம் பேசி விவாதித்து இருந்தாலும், ஏனோ பெரும் யோசனைக்கு பின்னரே இந்த தலைப்பை பற்றி எழுத முன் வந்தேன்.  இதை போன்ற தலைப்புகளை விவாதிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு பேசி யாரையும் காயபடுத்தி விட கூடாது என்பதால் பல நேரங்களில் நான் கூற வந்ததை கூறாமல் விட்டு விடுவேன்.  மிக முக்கியமாக இந்த  பதிவை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறை கூறுவதற்காக எழுதவில்லை.

சரி போதும் மேட்டர்க்கு வாப்பா என்று நீங்கள் அன்புடன்! அழைப்பதால் உடனே விவரத்திற்கு செல்கிறேன். தமிழ்லே எழுத சுத்தமா வரலே, எங்க அம்மு குட்டிக்கு தமிழ் அவ்வளவா வராது, எங்க அம்மா வந்தாலும் அவ கிட்டே இங்கிலீஷ்லே தான் பேசுவாங்க, தமிழ்லே படிக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு...இப்படி பட்ட வசனங்கள் எல்லாம் தமிழர்கள் தான் பேசுவார்கள் என்று  நீங்கள் சரியாக ஊகித்து இருந்தீர்கள் என்றால், வாங்க சார் (or  மேடம்) நீங்க தான் நம்ம ஆளு. அப்படி ஊகிக்கவில்லை என்றால் நீங்கள் தமிழ்நாட்டின் பக்கம் சென்றோ அல்லது தமிளர்! குடும்பங்களுடன் பழகியோ,  பல வருடங்கள் ஆகிவிட்டது என்று அர்த்தம். அப்படியும் இல்லாவிட்டால்,  நீங்கள் வேறு மொழியை தாய் மொழியாக கொண்டு தமிழ் படிக்க தெரிந்தவர் அதற்காக உங்களுக்கு ஒரு சல்யூட்.

சரி இது தான் உலகத்துக்கே தெரிஞ்ச கதை ஆச்சே, இதை பத்தி  என்ன பேச்சு இப்போ, என்று நீங்கள் நினைப்பீர்கள்.  எதோ மனதில் தோன்றுகின்ற இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டால் உங்க பக்கத்தில் இருந்தும் கொஞ்சம் சொல்வீர்களே என்று தான் இதை எழுதுகிறேன்.  சரி, சரி நான் ரொம்ப பேசலே, நீங்க மேல படிங்க. நான் அறிந்த வரையில், பொதுவாக இரு தமிழர்கள் புதிதாக சந்தித்து கொண்டால் முதலில் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பிகிறார்கள். இது எங்கோ ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ நடந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  ஆனால், இந்த கூத்து தமிழ்நாட்டிலே தான் அதிகமாக நடக்கிறது.  என் அனுபவத்தில் ஒரு உதாரணத்தை கூறுகிறேன். தமிழ்நாட்டில் கடைகளிலோ, அரசு அலுவலகத்திலோ உங்களுக்கு வேலை ஆக வேண்டும் என்றால் தமிழில் பேசாமல், ஆங்கிலத்தில் பேசி பாருங்கள், உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறு மாதிரி இருக்கும். இங்கே ஒன்றை கவனிக்கவும், அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை  மட்டுமே இலவசமாக கிடைக்கும்,  எப்படி நடந்துகொண்டால் வேலை நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.  நடிகர் விவேக் கூட ஒரு படத்தில் ட்ராபிக் போலிசிடம் மாட்டிகொண்டு ஆங்கிலத்தில் தத்து பித்து என்று ஒரு லீவ் லெட்டர் ஒப்பித்து விட்டு தப்பித்து செல்வார். இது நகைச்சுவையாக இருந்தாலும் அந்த படக்காட்சியை பார்க்கும் போது, தமிழர்களிடம் ஆங்கில மோகம் எவ்வளவு இருக்கிறது என்பது தெள்ள தெளிவாக தெரியும்.  இதை நீங்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவர்களிடம் காண்பது அரிது. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த வெற்றிமாறன் மற்றும் வடிவேல் என்கிற இருவர் ஆங்கிலத்தில் பேசிகொள்வது உலகமகா காமடியாக எனக்கு தோன்றுகிறது. இதை நீங்கள் பல தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் சில நேரங்களில் நேரில் கூட பார்த்திருக்க கூடும். விஜய் டிவி-ல் தமிழ் நிகழ்ச்சியான நீயா நானாவில் போன்றவற்றில் கூட ஆங்கிலத்தில் பேசுவதற்கு தான் நிறைய பேர் முனைகிறார்கள். அதற்கு கோபியும் நகரத்தில் வாழ்பவர்களுக்கு தங்கள் கருத்தை ஆங்கிலத்தில் தான் சரளமாக சொல்ல முடிகிறது என்று அதரவு தருகிறார். மொத்தத்தில் ஆங்கிலத்தில் பேசுபவன் படித்தவன், உண்மை பேசுபவன், பண வசதி அதிகம் படைத்தவன் போன்ற மாயை உருவாகி தமிழ் சரியா தெரியாது என்று தமிழன் சொல்வதே ஒரு ஸ்டைல் ஆகி விட்டதோ என்று தோன்றுகிறது.

மக்களை மட்டும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை, இந்தியாவில் உள்ள பல மாநிலத்தில் உள்ள கல்வி முறையும் அதற்கு ஒரு முக்கிய காரணமோ என்று தோன்றுகிறது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கவில்லையோ என்னமோ,  மக்கள் ஆங்கில வழி தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் கூட அரசு பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் -களை ஐம்பது சதவீதம் கூட முழுமையாக பயன்படுத்துவது இல்லை என்று ஒரு செய்தியில் படித்தேன். இது இந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் மெத்தன போக்கையே காட்டுகிறது.  இங்கு நான் மொத்தமாக அணைத்து ஆசிரியர்களையும் குறை கூறவில்லை,  அரசு பள்ளிகளில் பல நல்ல ஆசிரியர்களும் இருக்கிறார்கள். மேலும் கிராமப்புறங்களை தவிர ஓரளவு வசதி படைத்த அனைவரும் தங்கள் பிள்ளைகளை  ஆங்கில வழி கல்வியிலேயே படிக்க வைக்க விரும்புகின்றனர். இதில் ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமன்றி பொருளாதரத்தில் பின் தங்கி இருக்கும் கடை நிலை தொழிலாளிகள்  கூட தங்கள்  பிள்ளைகளை கடன் வாங்கியாவது கான்வென்ட் பள்ளிகூடத்திற்கு அனுப்பி, அவர்கள் டாடி மம்மி என்று அழைப்பதை பார்த்து பூரித்து போகிற நிலையில் தான் இருகிறார்கள். இந்த நிலை தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதுமே இருக்கிறது. அதற்கு வேலை வாய்ப்பு, மேல் படிப்பு என பல காரணங்கள் இருக்கலாம்.  தாய் மொழி வழி கல்வி முறையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது, அவ்வாறு கல்வி முறை கொண்ட நாடுகள் எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளன என்பது வேறு விஷயம்.  அதனால் அது சரியா தவறா என்று இங்கு நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு மூன்றாம் மொழியாகவாவது தமிழை எடுத்து படிக்கலாமே என்பது தான் என் ஆதங்கம். ஒருவர் தாய்மொழி தவிர, மற்ற மொழிகளை படிக்க வேண்டாம்  என்று நான் கூறவில்லை. மொழி ஒரு கருவியே, ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கான சாதனம் மட்டுமே. அதனால் தேவைப்பட்டால் (சில நேரங்களில் தேவைபடாவிட்டாலும்), எத்தனை மொழி வேண்டுமானாலும் படிப்பதில் தவறில்லை. ஆனால் தாய் மொழி என்று வரும்போது அதனால் கிடைக்கும் பொருளாதார ரீதியான நன்மைகளை (Materialistic gains) மட்டும் பார்க்காமல், அது நம் தாய் மொழி என்கிற ஒரே தகுதிக்காக மட்டும் கற்க வேண்டும் என்பதே எனது கருத்து. இது தமிழுக்கு மட்டும் அன்றி, மற்ற எந்த ஒரு மொழிக்கும் பொருந்தும். எதுக்கும் இருக்கட்டும் என்று ஹிந்தி முதற்கொண்டு பல வெளிநாட்டு மொழிகளையும் கற்றுகொள்ளும் திறன் மிக்கவர்கள், பிறந்தது முதல் கேட்டு, பேசி வளர்ந்த தமிழை பயில்வதில் என்ன சிரமம் இருக்க முடியும் என்று புரியவில்லை. அதற்காக புறநானூறு, கொன்றை வேந்தன் போன்றவற்றை படிக்கும் அளவிற்கு தமிழ் கற்க வேண்டும் என்பது இல்லை. (அப்படி படிக்கும் நிலைக்கு வந்தால் மிகவும் நல்லது). ஓரளவிற்கு நடைமுறை தமிழை எழுத படிக்க தெரிந்தால் கூட போதுமானது.

இவ்வளவு சொல்கிற நான் மட்டும் ஒழுங்கா ?, இதை எல்லாம் முழுவதும் கடைபிடிக்கிறேனா ? என்ற கேள்வியை நீங்கள் கேட்டீர்கள் என்றால், நிச்சயமாக இல்லை என்பதே என் பதில். நானும் இதே கூட்டத்தை சேர்ந்த ஒரு சராசரி தமிழன் தான் என்பதை சற்று வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன். ஆனால் இதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற கையாலாகாத நிலையை நினைத்து இங்கே பிதற்றுகிறேன். இந்த சமுதாய சீர்கேட்டை பற்றி எழுதினால் எனக்குள் இருக்கும் கோபம் கொஞ்சம் குறைகிறது.  நம்மால் முடிந்தவரை தமிழில் பேசவும், எழுதவும், நம் அடுத்த தலைமுறைக்கு தமிழை கற்றுகொடுக்கவும் முயல வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே இந்த பதிவு.  தங்கள் வருகைக்கு நன்றி.

2 comments:

S.Venkatachalapathy said...
This comment has been removed by the author.
Narayanan Narasingam said...

வெங்கட்,வருகைக்கு நன்றி. உங்கள் பின்னூட்டம் சரியாக தெரியவில்லை. வெறும் கேள்விக்குறிகள் மட்டுமே வந்திருகிறது.மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தீர்கள் என்றல் நன்றாக இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...