ஞாயிற்றுகிழமை சாயங்காலம் சினிமா தியேட்டர் -ல் உட்கார்ந்து படம் பார்த்துகொண்டிருக்கும் போது சிவாவின் செல்போன் ஒலித்தது. போனில் நவீன்...மாப்ளே, நம்ம குமாரை பாத்தேண்டா, மலேசியாலே இருந்து நேத்து தான் வந்தானாம், உன்கிட்டே எதோ பண விஷயமா உடனே பேசணும்னு போன் நம்பர் கேட்டான். உன்னோட வீட்டு நம்பரும், செல் நம்பரும் குடுத்திருக்கேன்.
நீ ஏண்டா போன் நம்பரை அவனுக்கு குடுத்தே, நானே அவன் கூட பேசி வருஷ கணக்குல ஆச்சு...எப்பவும் பணம் கேட்டு என்னை நச்சரிப்பான்...இப்போ தான் கொஞ்ச நாளா அவன் தொல்லை இல்லாமல் இருந்தேன்.
இல்லடா சிவா, பாக்க பாவாமா இருந்தது, நீயும் அவனும் தானே ஸ்கூல்லே இருந்தே க்ளோஸ் பிரண்ட்ஸ்...ஏதாவது பிரச்சனையோ என்னமோ, என்கிட்டே சொல்ல தயங்குறான், அதான் உன் நம்பரை கொடுத்தேன்.
சார், நீங்க போன் பேசணும்னா கொஞ்சம் வெளிலே போய் பேசுங்க, இங்கே உக்காந்து பேசி ஏன் எல்லாருக்கும் தொல்லை குடுக்குறீங்க, பின்னால் இருந்து ஒரு குரல் வர...சற்று மெதுவாக...நவீன்...நான் இப்போ தியேட்டர் -லே இருக்கேன், அப்புறம் உனக்கு கால் பண்ணுறேன்...வெச்சுரு. போனை வைத்த பின்னர் படத்தில் கவனமே ஓடவில்லை. இப்போ எதுக்கு இவன் பேசணும்னு சொல்றான் என்று குமாரின் பழைய நினைவுகளில் மூழ்கினான்.
சிவாவின் குடும்பம் விருதுநகரில் ஓரளவு வசதியான குடும்பம். அப்பா சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வந்தார். தாயார் வீட்டின் அருகிலேயே அரசாங்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்தார். வீட்டின் அருகே இருந்த காரணத்தால் அதே பள்ளியில் சிவாவை சேர்த்து படிக்க வைத்தனர். அந்த பள்ளியில் தான் குமார் சிவாவின் நட்பு சிறு வயதிலேயே துளிர் விட துவங்கியது. குமாரின் தந்தை கட்டட வேலை செய்யும் கூலி தொழிலாளியாக இருந்தார். குமாரும் தன் குடும்பத்தின் நிலை உணர்ந்து நன்றாக படித்தான். வகுப்பில் எப்போதும் அவன்தான் முதல் ரேங்க் வருவான். படிப்பிலும் விளையாட்டிலும் சரி குமார் பல நேரங்களில் சிவாவிற்கு குருவாக இருந்திருக்கிறான். கணக்கு அறிவியல் என பாடத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தீர்த்து வைப்பது மட்டுமல்லாமல் விளையாட்டில் பம்பரம் விடுவது, கில்லி விளையாடுவது, கிரிக்கெட்டில் ஸ்பின் போடுவது என பலவற்றை சிவாவிற்கு சொல்லிக்கொடுப்பான். சிவாவும் புத்தகங்கள், பென்சில், பேனா, விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள், தீபாவளி பட்டாசு என எல்லாவற்றையும் குமாருடன் பகிர்ந்து கொள்வான். இப்படி இருவரும் பிளஸ் டூ வரை ஒன்றாகவே படித்தனர். பள்ளிபடிப்பு முடிந்து சிவா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நன்கொடை கொடுத்து சேர்ந்தான். சிவாவை விட ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றும் குமார் வசதி மற்றும் அவன் தந்தை உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. அதன் பிறகு இருவருக்கும் தொடர்பு அவ்வளவாக இல்லாமல் போனது. அவ்வபோது எதாவது அவசரத்தேவை என்றால் சிவாவிடம் வந்து பணம் வாங்கி செல்வான் குமார். ஆனால் கண்டிப்பாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவான். சிவாவும் முகம் சுழிக்காமல் முடிந்த அளவு அவனுக்கு உதவி வந்திருக்கிறான். கல்லூரி படிப்பு முடிந்து சிவா சென்னையில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி -ல் சேர்ந்துவிட, குமாரிடம் நட்பு மேலும் படிபடியாக குறைந்தது. சிறு வயதில் பணம், அந்தஸ்து என்று பார்க்காமல் இருந்த சிவாவின் மனம் ஏனோ சற்று மாற தொடங்கியது. நகர வாழ்கையும் அங்கு கிடைத்த நட்பு வட்டாரத்தின் கவர்ச்சியும் குமாரின் தொடர்பை முற்றிலும் துண்டித்து. அவ்வபோது மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தொலைபேசியில் அழைப்பதை கூட நிறுத்திவிட்டான். இதனிடையே குமார் யார் கையை காலையோ பிடித்து மலேசியாவில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்தான். அவன் மலேசியா செல்வதற்கு முன்பணமாக கட்ட வேண்டிய இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை, சிவாவை சந்தித்து பேசி கடனாக வாங்கி இருந்தான். மலேசியா சென்றதும் எப்படியாவது உடனே பணத்தை திருப்பி கொடுக்கிறேன் எனகூறி சென்றவன்தான், அதன் பின்னர் ஓரிரு முறை அழைத்து பேசி இருக்கிறானே தவிர அதன் பின்னர் பேசவும் இல்லை பணத்தை திருப்பி அனுப்பவும் இல்லை. சிவாவை பொறுத்த வரை இருபத்தி ஐந்தாயிரம் ருபாய் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், நண்பன் ஏமாற்றி விட்டானோ என்று ஒரு சிறு எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தது. இப்படியே இரண்டு வருடங்கள் ஒடி விட்டது.
இவ்வளவு நாட்கள் ஒரு தொடர்பும் இல்லாமல் இப்போது மட்டும் எங்கிருந்து இவனுக்கு என் நினைப்பு வந்தது என்று சிவா தன் மனதில் கோபபட்டுகொண்டே காரை ஒட்டியபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். சிவா எண்டா இவ்வளவு லேட்டு, உன் பிரெண்ட் குமார் போன் பண்ணி இருந்தான் என்னமோ உன்னை அர்ஜண்டா பாக்கணுமாம், நீ வந்ததும் போன் பண்ண சொன்னான் என்று அப்பா கூறினார். பாத்துடா அவன் பாட்டுக்கு ஏதாவது பணம் வேணும்னு வந்து நிக்க போறான். ஏற்கனவே அவனுக்கு பணம் கொடுத்து ஏமாந்திருக்கே, இனிமேலும் ஏமாறாதே. நீயே இப்பதான் ஒரு வேலைலே சேர்ந்து சுயமா நாலு காசு சம்பாரிக்க ஆரம்பிச்சிருக்கே. நீ உன் இஷ்டத்துக்கு பணத்தை தூக்கி கொடுக்காதே என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்தார். அதெல்லாம் இல்லப்பா, நான் பாத்துக்குறேன். ஏற்கனவே ஸ்கூல் படிக்குற காலத்திலே இருந்து நிறைய அவனுக்கு செஞ்சிருக்கேன். இனிமேல் சும்மா அவனுக்கு கொடுக்க முடியாது. அவன் கிட்டே பேசும்போது கட் அண்ட் ரைட்டா சொல்லிடுறேன்.
அடுத்தநாள் காலையில் சிவா அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிகொண்டிருக்கும் போது அவன் செல்போன் ஒலித்தது. எடுத்து ஹலோ என்றதும், டேய் சிவா, நான் குமார் பேசுறேன்டா, எப்படி இருக்கே...பார்த்து ரொம்ப நாள் ஆச்சுடா...உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஈவ்னிங் எங்கயாவது மீட் பண்ணலாமா ? என்று கேட்டவனிடம் சரி ஒரு ஆறு மணிக்குமேலே போன் பண்ணு, நான் ப்ரீயா இருந்தா மீட் பண்ணலாம்.
அடுத்தநாள் காலையில் சிவா அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிகொண்டிருக்கும் போது அவன் செல்போன் ஒலித்தது. எடுத்து ஹலோ என்றதும், டேய் சிவா, நான் குமார் பேசுறேன்டா, எப்படி இருக்கே...பார்த்து ரொம்ப நாள் ஆச்சுடா...உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஈவ்னிங் எங்கயாவது மீட் பண்ணலாமா ? என்று கேட்டவனிடம் சரி ஒரு ஆறு மணிக்குமேலே போன் பண்ணு, நான் ப்ரீயா இருந்தா மீட் பண்ணலாம்.
இல்லடா அரைமணி நேரம் போதும்...ஆனா முக்கியமான விஷயம், எங்கயும் போகாம வெயிட் பண்ணுடா.
மணி ஏழு பதினைந்து. ஸ்பென்சர் பிளாசா. சிவா பொறுமையில்லாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். என்ன இவன், என்னை ஏழு மணிக்கு வர சொல்லிவிட்டு இன்னும் இவனை காணும். இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணலாம், அவன் வரலேனா கிளம்பி போய்டே இருக்க வேண்டியதுதான். இவனை எல்லாம் மதிச்சி இங்கே வந்து வெயிட் பண்றேன், இவன் என்னடான இவ்வளவு லேட்டா வரான். இப்படி சிவா கோபப்பட்டு கொண்டிக்கும் போதே குமார் அங்கு வந்து சேர்ந்தான்.
சாரிடா சிவா, டிராபிக் அதான் கொஞ்சம் லேட் ஆச்சு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்றான்.
ஏண்டா, இருபது நிமிஷமா வெயிட் பண்றேன், நான் அர்ஜண்டா போகணும்னு சொன்னேன் இல்லே. சரி சீக்கிரம் சொல்லு என்ன விஷயம்னு என்று படபடத்தான் சிவா.
என்ன சிவா, இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்றோம், எப்படி இருக்கேன்னு கூட ஒரு வார்த்தை கேட்காம...நீ என்னடான கால்லே சுடு தண்ணி ஊத்தினா மாதிரி பறக்குறே...
சாரிடா கொஞ்சம் ஆபீஸ் டென்ஷன்,
நான் மலேசியாலே இருந்து இங்கேயே செட்டில் ஆகலாம்னு வந்துட்டேன்டா, நாளைக்கு கோயம்பத்தூர் போறேன், அதுக்கு முன்னாடி உன்னை பார்த்து ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் கூப்பிட்டேன்.
தெரியும்டா உனக்கு இப்போ பணம் தேவைப்படும்...அதான் என்னோட நினைப்பு வந்துருச்சு உனக்கு, இத்தனை நாள் எங்கடா இருந்தே, ஒரு கஷ்டம்னதும் கொஞ்சம் கூட வெக்கபடாம என்கிட்டே வந்து நிக்கிறியே... சாரிடா குமார், நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு தெரியுது...என்னாலே இப்போ ஏதும் உனக்கு பண உதவி செய்ய முடியாது. ஏற்கனவே உனக்கு நான் எவ்வளவோ செஞ்சுட்டேன், இனிமேல் என்னாலே உனக்கு எதுவும் செய்ய முடியாது. எனக்கும் லைப் இருக்கு, புரிஞ்சிப்பேன்னு நினைக்குறேன்...சாரி...நான் கிளம்புறேன்.
குமார் ஒரு நிமிடம் வாயடைத்து போய் கண்கள் குளமாக நின்றான். அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க முயன்ற சிவாவை பார்த்து ஓடினான். சிவா, சிவா...ஒரு ரெண்டு நிமிஷம் உன்கிட்டே பேசணும்டா, ப்ளீஸ் என்று தடுத்து நிறுத்தினான்...நான் சின்ன வயசிலே இருந்து உதவின்னு உன்னை தவிர வேற யார் கிட்டேயும் போய் கேட்டதில்லை. நீயும் நானும் சேர்ந்து வளர்ந்த உரிமையிலே தான் எப்பவும் உன்கிட்டே எனக்கு கஷ்டம்னா வந்து நிற்பேன். உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்து இருக்கேன்னு எனக்கு இவ்வளவு நாள் தெரியலேடா. மலேசியாவுக்கு வேலைக்கு போய் உன்கிட்டே வாங்கின பணத்தை திருப்பி கொடுக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா என்னோட விதி நான் நெனைச்ச மாதிரி வேலை அமையலே, சம்பளம் இல்லாம, சில நேரம் சாப்பாடு தூக்கம் இல்லாம ரெண்டு வருஷமா கஷ்டப்பட்டேன். உன்கிட்டே தரேன்னு சொன்ன பணத்தையும் தர முடியலே, வீட்டுக்கும் பணம் அனுப்ப முடியலே, இப்படி பல பிரச்சனைகளில் மாட்டிகிட்டேன். சரி விடு நடந்ததை பத்தி பேசி என்ன பிரயோஜனம்...ஆனா...இப்போ உன்கிட்டே பணம் வேணும்னு கேக்க வரலே சிவா. நான் மலேசியாவுலே இருக்கும் போது ஒருநாள் எதேச்சையா வாங்கின ஒரு லாட்டரி சீட்டுலே எனக்கு இருபது கோடி ரூபா விழுந்துது. அந்த பணம் கிடைச்சதும் முதல்லே உனக்கு தான் சொல்லனும்னு இங்கே கிளம்பி வந்தேன். என்னை பொருத்தவரைக்கும் நான் இன்னிக்கு இந்த நிலையிலே இருக்குறதுக்கு காரணம் நீ தான் சிவா. அதுக்கு கைமாறா என்னாலே எதுவுமே செய்ய முடியாது. நான் இது வரைக்கும் உனக்கு எதுவுமே கொடுத்ததில்லை. இந்த பெட்டிலே ஒரு கோடி ரூபா கேஷ் வெச்சு இருக்கேன், கூடவே ஒரு பிளான்க் செக்கும் வெச்சு இருக்கேன். நீ எவ்வளவு வேணும்னாலும் எழுதிக்கோ...தயவு செய்து மறுக்காம வாங்கிகோடா சிவா என்று நா தழுதழுக்க கூறி பெட்டியை கையில் திணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான். சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் சிலையாக நின்ற சிவா, அங்கிருந்து மெதுவாக நடந்து செல்லும் போது எதிரே ஒரு புத்தக கடையில் சுவற்றில் மாட்டியிருந்த கரும்பலகையில் தினம் ஒரு திருக்குறள் என்று எழுதி அதன் கீழே எழுதி இருந்த குறள் தெரிந்தது.
தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர் பயன் தெரிவார்.