Sunday, December 18, 2022

போர்டிங் பாஸ்

ஒவ்வொரு முறை இந்திய மண்ணை மிதிக்கும் போதும் இந்தியா குறிப்பாக தமிழகம் என்னை சுவாரஸ்யமான அனுபவத்துடன் வரவேற்கத் தவறியதே இல்லை. 

பல நேரங்களில் அது போன்ற அனுபவங்களை சோம்பேறித்தனம் காரணமாக எழுத்தில் பிதற்றாமல் விட்டு விடுவேன். இதோ அப்படிப்பட்ட ஒரு அனுபவம் உங்கள் பார்வைக்கு...
 
பிளைட் சென்னையில் லேண்ட் ஆனதும் தான் தாமதம், அதுவரை முழுப் பயணத்திலும் அமைதியாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரரின்  மனைவி, படு அதட்டல் கலந்த குரலில் அவரிடம் தமிழில் பேசினார்.

'போர்டிங் பாஸ் எடுத்து வச்சுக்கோ, பிளைட் விட்டு இறங்கியதும் கேப்பாங்க.

ஏம்மா இனிமேல் போர்டிங் பாஸ் கேப்பாங்க ?

உனக்கு தெரியாது, கண்டிப்பா கேப்பாங்க, எடுத்து வச்சுக்கோ.

சரிம்மா, இதோ பாக்குறேன்.

ஐயோ, ஏன் இப்படி பேக் ஜிப்பை தொறந்து போட்டு இருக்கே. பாஸ்போர்ட் எல்லாம் கீழே விழுந்து இருக்கும், மொதல்லே எல்லா பாஸ்போர்ட்டும் ஒழுங்கா இருக்கான்னு பாரு.

பாஸ்போர்ட் எல்லாம் இருக்குதும்மா. போர்டிங் பாஸ் தான் காணும். உன்கிட்டே தானே போர்டிங் பாஸ் இருக்கணும்.

என்கிட்டே போர்டிங் பாஸ் இல்லை, நீ நல்லா பாரு, பேக் ஜிப்பை இப்படி தொறந்து போட்டிருந்தீனா எங்கயாவது ஏர்போர்ட்டிலேயே விழுந்து இருக்கும்.

வேற எங்கேயும் விழுந்து இருக்காது, போர்டிங் பாஸ் இருந்தா தானே பிளைட் உள்ளே ஏறி இருக்க முடியும் என்ற லாஜிக்கலான கேள்விக்கு மனைவியிடம் இருந்து என்னவென்று கிரகிக்க முடியாத ஒரு முணுமுணுப்பே பதிலாக வந்தது.

பலத்த டென்ஷனுடன் அவர் போர்டிங் பாஸை பேக்கின் எல்லா பக்கங்களிலும் தேடுகின்றார்.

அவர் தேடுவதை ஒரு முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவி, ஏதோ நினைவுக்கு வந்தது போல தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்து துழாவுகிறார். அடுத்த நிமிடம், சற்று தாழ்ந்த ஸ்தாயியில், ஏய், ஒரு நிமிஷம் இரு. போர்டிங் பாஸ் என் ஹேண்ட் பேக்ல தான் இருக்கு. இந்தா, நீயே பத்திரமா வச்சுக்கோ. உள்ள வச்சுட்டு ஒழுங்கா பேக் ஜிப்பை மூடு.

இந்த சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த நான், சத்தமில்லாமல் எதற்கும் இருக்கட்டும் என்று என் போர்டிங் பாஸையும் தேடி எடுத்து வைத்துக் கொண்டேன்.

அதற்குள் பிளைட் கதவு திறக்கவும் மேற்கொண்டு அவர்களின் பேச்சை (ஒட்டு) கேட்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தேன்..

பி.கு:  பிளைட் விட்டு இறங்கியதும், யாரும் போர்டிங் பாஸை கேட்கவே இல்லை.






LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...