Showing posts with label மைக்ரோ சிறுகதை. Show all posts
Showing posts with label மைக்ரோ சிறுகதை. Show all posts

Friday, April 10, 2015

ட்வைலைட் - 55 வார்த்தை சிறுகதை



பத்து வயதே நிரம்பிய சிறுவன் மேடையில் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தான்.

அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.

ராபர்ட் மட்டும் மெதுவாக அருகில் இருந்த தன் நண்பனிடம் கிசுகிசுத்தான்.  நல்ல திறமை உள்ள பையன் தான். என்ன கடைவாய் பல்லு மட்டும் நம்மள மாதிரியே வாய்க்கு வெளியே நீளமாக வளர்ந்து இருந்தால் அவன் வளர்ந்த பின்னே உறிஞ்சி குடிக்க வசதியாக இருந்திருக்கும் என்றபடி கடை வாயின் ஓரத்தில் இருந்த ரத்தத்தை துடைத்தான்.


Tuesday, April 7, 2015

ரூல்ஸ்

லைப்ரரிலே படிச்சதும் புக்கை எடுத்த எடத்துலே வெக்க வேண்டாம்.

யாரும் ரூல்ஸை மதிக்கறதே இல்லே என்று பெரும் குரலெடுத்து கோபத்துடன் கத்திய லைப்ரரியனை படித்துக் கொண்டிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து பார்த்தனர்.

Wednesday, May 22, 2013

லிவிங் டுகெதர் - கி.பி. 2405




கல்யாணமே பண்ணிக்காம ரேகா கூட சந்தோசமா தானேம்மா இருக்கேன்.

இதெல்லாம் ஒரு வாழக்கையாடா. எனக்கும் பேரன் பேத்தி வேணும்னு ஆசை இருக்காதா.

குழந்தை பெத்துக்க மட்டும் தான் முடியாது.  பார்க்க அழகா இருக்கா, சொல்றதை கேக்குறா. அது போதும்.

இதெல்லாம் சரியில்லை. மொதல்ல இதை எங்கயாவது தொலைச்சிட்டு ஒரு நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணிட்டு வா.

இதைக் கேட்டு அப்படியே சரிந்த ரேகாவை பிடித்து அவள் இடுப்பின் பின்புறம் இணைந்திருந்த ஒயரை இழுத்து எலெக்ட்ரிக் பாயிண்டில் சொருகினான்.


பின் குறிப்பு: கதையை முட்டி மோதி ஐம்பைதைந்து வார்த்தைகளில் முடித்து விட்டேன். சில நேரங்களில் வார்த்தைகளைச் சுருக்கி விஷயத்தை சொல்வதற்கு நிறைய நேரம் பிடிக்கிறது. சுஜாதா அவர்கள் எல்லாவற்றையும் வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கூறுவார். அது போல அங்கங்கே ஹிண்ட்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


Friday, May 17, 2013

NRI மாப்பிள்ளை

NRI மாப்பிள்ளை - 55 வார்த்தை சிறுகதை 




ராஜம், அடுத்த வாரம் பட்டிமன்றத்திலே, இந்தியாவை சப்போர்ட் பண்ணி பேசப்போறேன் என்றார் சண்முகம்.

நோ, நோ, நீங்க வெளிநாட்டை தான் சப்போர்ட் பண்ணனும். நாம ரெண்டு தலைமுறையா இங்கே இருக்கோம். நம்ம குழந்தைங்களும் இங்கேதான் படிச்சு நல்ல வேலைக்கு போயிட்டு இருக்காங்க.

நீ சொல்றா மாதிரினா...

ஒரு நிமிஷம், இந்தியா கால் அண்ணாகிட்டேயிருந்து...

ஆமாண்ணா, ரிஷி கல்யாண விஷயம் பேசத்தான் காலைலே கூப்பிட்டிருந்தேன். நம்ம ஊருலேயே, நல்ல பொண்ணா பாருண்ணா. பாக்கறதுக்கு லட்சணமா, படிச்சு இருந்தாப் போதும்...


Saturday, August 20, 2011

வட்டம் - 55 வார்த்தை சிறுகதை



என்ன சாரதா, நாப்பது பவுனுக்கு என்ன பண்றது. இன்னும் கல்யாணச் செலவு வேற இருக்கு என்றார் கிருஷ்ணமூர்த்தி.

ஆமாங்க, நம்ம பொண்ணை வியாபாரப் பொருளாப் பாக்குறாங்க. இந்த வரதட்சணை கொடுமை என்னைக்குத்தான் ஒழியுமோ ?

பேசாமே நம்ம தாம்பரம் நிலத்தை வித்துடலாம். குமார் படிப்புக்கும் உதவும்.

நிலம் விற்ற பணத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. 

சில வருடங்களுக்குப்பின், கல்யாணத் தரகரிடம் - எங்களுக்கு ஒரே பையன், இன்ஜினியரிங் முடிச்சிட்டு கை நிறைய சம்பாரிக்கிறான், நூறு பவுனுக்கு குறையக்கூடாது என்றாள் சாரதா.

Friday, August 12, 2011

பக்கோடா - சிறுகதை (சைதாபேட்டை நினைவுகள்)



டேய் இன்னாடா அது பையிலே தூக்கினு போறே என்று கேட்ட பக்கத்துக்கு வீட்டு ரகு அம்மாவை சற்று எரிச்சலுடன் பார்த்தேன். இதுக்கு வேறே வேலையே இல்லியா நம்மளை நோட்டம் விடுறது தான் இதுக்கு முக்கிய வேலை என்று நினைத்து கொண்டாலும் அதை வெளியே காட்டிகொள்ளாமல் பதில் கூறினேன்.
அது ஒன்னும் இல்லீங்க, முருகர் கோவிலுக்கு எதுர்க பக்கோடா கடை இருக்குதில்லே, அங்கே பக்கோடா, மிச்சர் போட்டு குடுக்க இந்த மாறி கவர் செஞ்சு குடுத்தா, நூறு கவருக்கு 75 காசு குடுப்பாங்க. அதான் வூட்டுல இருந்த பழைய பேப்பர்லே கவர் செஞ்சு எடுத்துனு போறேன் என்றேன்.

ஏய், உனுக்கு ஏண்டா இந்த தேவல்லாத வேலை, படீக்ரத வுட்டுட்டு, இரு இரு உங்க அம்மா கைலே சொல்றேன். இந்த பக்கோடா கடைக்காரன் இப்பிடி கவர் செஞ்சு குடுத்தா துட்டு குடுப்பானு இவ்ளோ நாள் எனுக்கு தெரியாம போச்சே, இரு அவனை இப்பமே போய் இன்னான்னு கேக்குறேன்.

சர்தான், இதுக்கும் வெச்சுதா ஆப்பு, எதோ கவர் வித்து கொஞ்சம் மூசுண்ட வாங்கி துன்னலாம்னு பாத்தா அத்த போய் இது கெடுக்குதே என்று மனதில் நினைதுகொண்டதை  வெளியில் காட்டாமல், ஐயோ வேணாங்க இந்த ஒரு தபா மட்டும் தாங்க, இனிமேல் பண்ண மாட்டேன், அம்மா கைலே சொல்லாதீங்க என்று கெஞ்சினேன்.

செரி, செரி சொல்லலே, அந்த பைய என் கைலே குடுத்துட்டு நீ போய் படீக்ற வேலைய பாரு. இன்னொரு தபா இத்த செஞ்சே அவ்ளோதான், அக்காங்...என்று பெரிய மகராணி தோரணையில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரகு அம்மா.

சில மணி நேரம் வீட்டில் உட்கார்ந்து ஏதேதோ செய்து கொண்டிருந்த நான், பின்னர் போரடிகுதே, ரகுவை கூப்பிட்டு எதாவது வெளையாடலாம என்று நினைத்து கொண்டிருந்தபோது  டிரௌசர் பாக்கட்டில் வைத்திருந்த கோலிக்குண்டுகள்  சலசலத்தது.

ரகு வீடு வாசலில் நின்று குரல் கொடுத்தேன், டேய் ரகு, வரியாட கொஞ்ச நேரம் ராஜா டோனி வெள்ளாடலாம்.

கொஞ்சம் உள்ளே வந்து உக்காருடா, எங்க அம்மா ஒரு வேலை கொடுதிருகுறாங்க, அத்த முட்சிடு வரேன் என்றான் ரகு.

நான் உள்ளே நுழைந்து பார்த்தபின் அதிர்ச்சில் ஒரு கணம் தடுமாறிவிட்டேன். ரகு, அவன் அக்கா, அண்ணன் என குடும்பமே பக்கோடா கட்ட கவர் செய்துகொண்டிருந்தது.

Friday, August 5, 2011

சைதாபேட்டை நினைவுகள்




என் பின்னால் சுமார் பத்து பேர் கொண்ட ஒரு சிறிய கூட்டமே ஒடி வந்துகொண்டிருந்தது. டேய் புடிரா, விட்டுற கூடாது...என்று ஆக்ரோஷமான குரல்கள் கேட்டது. எனக்கு எப்படி ஒரு வேகம் வந்ததோ தெரியவில்லை எல்லோருக்கும் முன்னே ஒடிகொண்டிருந்தேன். அந்த வேகத்தில் ஓடும்போதும் என் கண்கள் மட்டும் வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. எனக்கும் என்னை பின்தொடர்ந்த கூட்டத்திற்கும் குறைந்தது பத்தடி தொலைவு இருக்குமாறு பார்துகொண்டேன். மூச்சிரைத்தது, போதும் ஓட்டத்தை விட்டுறலாமா என்று தோன்றியது. வேண்டாம், இப்போ விட்டால் இந்த மாதிரி வாய்ப்பு திரும்ப கிடைக்க எத்தனை நாள் ஆகுமோ தெரியாது. மனதிற்குள் உத்வேகத்தை ஏற்படுத்திக்கொண்டு வேகத்தை கூட்டினேன். இன்னும் சிறிது தூரம் தான் என்று எனக்குள் கூறிக்கொண்டு வானத்தை பார்த்தபடி ஓடினேன். இந்த மாதிரி ஒடிகொண்டிருப்பது அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான், என்னை ஒரு வழி ஆகிவிடுவாள். ஆனாலும் ஆசை யாரை விட்டது, இப்போது என் நோக்கம் எல்லாம் வேகமாக ஓடுவதுதான். இதோ என் இலக்கை நெருங்கி விட்டேன். சற்றே வேகத்தை கூட்டி இரண்டடி தாவி டீலில் அறுந்து வந்த, அந்த 1 சீட் (sheet) ரெட்டை கண் பானா காத்தாடியை பிடித்தேன். 


பின் குறிப்பு: சென்னை, சைதாபேட்டையில் வளர்ந்த நான், சிறுவயது நினைவுகளை அவ்வபோது எடுத்துவிட நினைத்ததின் விளைவே இந்த மைக்ரோ சிறுகதை.

Thursday, February 3, 2011

கனவு - மைக்ரோ சிறுகதை

நவம்பர் 22, 2155.
 
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து புன்னகையோடு வெளியே வந்தான் ரிஷி.  அந்த கட்டடத்தின் பின்னே இருந்த ரன்வே அருகில் பார்க் செய்ந்திருந்த பறக்கும் காரில் ஏறி என்ஜினை ஸ்டார்ட் செய்து, முன்னே இருந்த கம்ப்யூட்டர் திரையில் ஒரு பொத்தானை அழுத்தியதும் சில வினாடிகளில் வான்வெளி போக்குவரத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி மற்றும் அதிகபட்ச பறக்கும் உயரம், வேகம் போன்றவை திரையில் மின்னின. அடுத்த சில நொடிகளில் திரையில் பச்சை விளக்கு ஒளிர்ந்ததும், காரை ரன்வேயில் நானூறு மைல் வேகத்தில் செலுத்தி ஜிவ்வென்று வானில் கிளப்பினான். சரியாக இரண்டு நிமிடத்தில் இரண்டாயிரம் அடி உயரத்தில், 900 மைல் வேகத்தில் சென்று வான்வெளி போக்குவரத்தில் நுழைந்தான். GPS -ல் வீட்டு விலாசத்தை தேர்ந்தெடுத்து, காரை ஆட்டோ பைலட் -ல் போட்டு விட்டு சற்று சாய்ந்து சோம்பல் முறித்தான். முதலில் அம்மாவிடம் தான் இந்த செய்தியை சொல்லவேண்டும் என்று இடுப்பில் மாட்டி இருந்த கை அடக்க சாட்டிலைட் வீடியோ போனில் வீட்டிற்கு போன் செய்தான் . சில ரிங்குகள் சென்றதும், போன் திரையில் ஹலோ என்றபடி அம்மா தெரிந்தார்.  அம்மா, ஒரு குட் நியூஸ்...எனக்கு இந்தியாவிலே வேலை செய்யறதுக்கு விசா கிடைச்சிருச்சு, இன்னும் ரெண்டு வாரத்துலே கிளம்பனும். எப்படியோ ஒன்னும் பிரச்சனை இல்லாம விசா கிடைச்சிருச்சு. அங்கே போய் ஒரு வருஷத்திலே என் படிப்புக்கு அப்பா வாங்கின கடன், வீட்டு லோன் எல்லாத்தையும் அடைச்சுடலாம். உங்களுக்கும் அங்கே போனதும் டூரிஸ்ட் விசா அனுப்பறேன். வருஷத்துலே ஒரு நாலைஞ்சு மாசம் என்கூட வந்து நீங்க இருக்கலாம் என மகிழ்ச்சி பொங்க கூறினான். ரொம்ப சந்தோசம்டா ரிஷி, எங்கே விசா கிடைக்குமோ கிடைக்காதோன்னு பயத்துலே இருந்தேன். இப்போ தான் மனசுக்கு திருப்தியா இருக்கு, உங்க தாத்தாவும் பாட்டியும் இப்போ இருந்தா ரொம்ப சந்தோஷபட்டிருப்பாங்க என இரண்டு தலைமுறைக்கு முன்னர் லண்டன் வந்து செட்டில் ஆனா தன் குடும்பத்தை நினைத்து பார்த்து கண்ணில் துளிர்த்த லேசான கண்ணீரை துடைத்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...