Friday, February 23, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 9

Tuesday, February 20, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 8

Friday, February 16, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 7

Tuesday, February 13, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 6

Friday, February 9, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 5

Tuesday, February 6, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 4

Friday, February 2, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 3

Tuesday, January 30, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 2

ஜகன் வீட்டை விட்டு வெளியேறுவதை பார்த்துக்கொண்டிருந்த ஜான்சிக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. உணர்ச்சிகளின் கொந்தளிப்புடன் சுழன்ற அவள் மனதில் வருத்தம், கோபம் மற்றும் சந்தேகம் போன்ற உணர்வுகள் எழுந்து இதயத்தை ஏதோ அழுத்தியது போல தோன்றியது. தான் மிகவும் கடுமையாக நடந்துகொண்டோமா ? சிறிது பொறுமையாக இதை கையாண்டிருக்கலாமோ என்ற எண்ணமும் அவ்வப்போது வந்து சென்றது. ஆனாலும், ஜகன் நீண்ட காலமாக தன்னை ஏமாற்றி ஏதோ மறைத்திருக்கிறான் என்ற நினைவும், அந்த வஞ்சகத்தின் எடையும் அவளை கவ்வியது. 

திருமணத்திற்கு பின் ஜகனும் ஜான்சியும் ஹைதராபாத்தில் குடியேறிய பின்னர் ஒரு நாள் கூட ஜகன் இவ்வளவு கோபப்பட்டதில்லை.  அந்தக் கோபத்தில் கலந்திருந்த பொய் ஜான்சிக்கு மிகவும் புதிதாக இருந்தது. வழக்கமாக இது போல வாக்குவாதம் நிகழும் போது, ஒரு சில நேரங்களில் வீட்டை விட்டு எங்காவது வெளியே போய்விட்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவான். ஆனால் இப்போது ஜகன் வெளியே சென்றபோது இருந்த ஆவேசத்தின் காரணம் என்ன என்று புரியாமல் அன்று மாலை நடந்த நிகழ்வுகளை மீண்டும் ஜான்சி  நினைத்துப் பார்த்தாள். 

"ஜகன், ப்ளீஸ் உண்மையை சொல்லு. எதுக்காக லோன் அப்ளை பண்ணி இருக்கே ?"

 "நான் தான் சொன்னேனே, லோன் எதுவும் அப்ளை பண்ணலைன்னு. உன் முன்னாடி தானே போன் பண்ணி அந்த ஆளை திட்டினேன். சும்மா போட்டு டார்ச்சர் பண்ணாதே."

"நான் கேள்வி கேட்டா உனக்கு டார்ச்சரா இருக்கா ஜகன். சரி, உன் போனை என்கிட்டே குடு. நான் கொஞ்சம் பார்க்கணும்."

"எப்ப பார்த்தாலும் என் போனை எடுத்து நோண்டுறதே உன் வேலையாய் போச்சு. நான் முக்கியமான ஒரு ஆபீஸ் வேலையை பார்த்துட்டு இருக்கேன். இப்போ என்னை டிஸ்டர்ப் பண்ணாதே என்று லேப்டாப்பில் மூழ்கினான்."

"அதெல்லாம் எனக்கு தெரியாது ஜகன். இப்போ உன் போனை குடுக்க போறியா இல்லையா ?"

ஜகன் சிவந்துபோன முகத்தோடு, ஜான்சியை நோக்கி, 

"இங்கே பாரு ஜான்சி, ஆபீஸ் வேளையிலே ஒரு பெரிய ப்ராபளத்தை சரி செய்ய சொல்லி இருக்காங்க. என்னை கொஞ்சம் தனியா விடு."

"எப்ப பார்த்தாலும், இப்படி ஏதாவது சாக்கு சொல்லி சமாளிக்குறே ஜகன். இன்னைக்கு அதெல்லாம் நடக்காது. நீ சொல்றதை எல்லாம் நம்பறதுக்கு, என்னையும் உன் அம்மா மாதிரின்னு நினைச்சியா ? "

"இப்போ ஏன் எங்க அம்மாவை இழுக்குறே ? உன்கிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை. போன் எல்லாம் குடுக்க முடியாது. ப்ளீஸ் லீவ் மீ அலோன்."

"இப்போ நீ லேப்டாப்பை மூடி வச்சுட்டு என்கிட்டே எல்லா உண்மையும் சொல்ல போறியா இல்லையா என்று கண்களில் நீர் கொப்பளிக்க கோபத்துடன் கேட்டாள்."

"சும்மா சொல்லக்கூடாது ஜான்சி, நீ இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற சீன் இருக்கே...ரியலி பெண்டாஸ்டிக். "

ஜகனின் கிண்டலான தொனியில் இருந்த ஏளனத்தை உணர்ந்த ஜான்சி, சற்றே குரலை உயர்த்தி...
 
"யாரு, நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறேனா ? தொட்டதுக்கு எல்லாம் அழுகிறது நீதான் ஜகன். மரியாதையா என்கிட்டே போனை குடுத்துட்டு உக்காந்து பேசு. இல்லேனா..."

"இல்லேனா...இல்லேனா...என்ன ஜான்சி. சொல்லு என்ன பண்ணுவே. இங்கே பாரு, நீ இப்படியே என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருந்தீன்னா, நான் இந்த வீட்டை விட்டு போயிருவேன்."

"இப்படி எப்ப பார்த்தாலும் வீட்டை விட்டு போறேன்னு சொல்லி என்னை பயமுறுத்தாதே ஜகன். இந்த வீட்டுல இருக்க இஷ்டம் இல்லேன்னா நீ கிளம்பி போயிட்டே இருக்கலாம்.  நான் சொல்றத கேட்டு எனக்கு உண்மையா இருக்க முடியும்னா இந்த வீட்டுலே இரு. இல்லேனா, நீ இந்த வீட்டுலே இருக்க வேண்டிய அவசியம் இல்லை."

அதைக்கேட்ட ஜகன் கண்களில் கோபம் கொப்பளிக்க, லேப்டாப் மற்றும் அலுவலக உபகரணங்களை எடுத்து ஒரு பையில் போட்டுகொண்டு, விறுவிறுவென்று படிகளில் இறங்கி சாலையில் தன் கால்களை பதித்தான்.

இறுக்கமான முகத்தோடு சோபாவில் அமர்ந்து எதையோ வெறித்து பார்த்துக் கொண்டு நடந்தை மனதில் நினைவுகூர்ந்த  ஜான்சி திடீர் என்று தன்னிலைக்கு வந்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக பதினொன்று  முப்பது. இருளும் தனிமையும் சூழ அதன் தாக்கத்தை தாங்க முடியாமல் ஜான்சி தவித்தாள்.  சிறு வயதில் இருந்தே அவளுக்கு இருள் என்றால் ஒரு இனம் புரியாத அச்சம் மனதில் எழும். வீட்டில் உள்ள எல்லா மின் விளக்குகளையும்  மிளிர செய்து படுக்கையில் சரிந்து தூங்க முயற்சித்தாள். தூக்கம் அவளை தவிர்த்து. இரவின் கனம் அவளது அமைதியற்ற மனதைத் தாங்கியது. அமைதியையும் தனிமையையும் தாங்க முடியாமல், ஜான்சி தன் தந்தையை அழைத்துப் பேசினாள். அவருடன் பேசும்போது அவளுக்குள் இருந்த கொந்தளிப்பில் அவள் குரல் நடுங்கியது. 

"டாடி, எனக்கும் ஜகனுக்கும் வந்த சண்டையில் கோவிச்சுக்கிட்டு அவன் வீட்டை விட்டு வெளியே போய்ட்டான்."

"என்னம்மா இப்படி ராத்திரி நேரத்துலே குண்டை தூக்கி போடுறே. மாப்பிள்ளை எங்கே போறேன்னு சொல்லிட்டு போனாரா ?"

"தெரியலே டாடி, எப்பவும் போல தான் ஆர்க்யூ பண்ணிட்டு இருந்தோம். திடிர்னு கோபப்பட்டு  கிளம்பி போய்ட்டான். என்னோட போனையும் பிளாக் பண்ணிட்டான். நீங்க அவனுக்கு போன் பண்ணி பாக்குறீங்களா, ப்ளீஸ்."

"சரி, நீ லைனிலேயே இரு. நான் இன்னொரு போன்லே இருந்து கூப்பிட்டு பாக்குறேன்."

சிறிது நேர அமைதிக்கு பிறகு...

"மாப்பிள்ளை என் போனையும் எடுக்கலே. மாப்பிள்ளையோட அம்மாவுக்கு இப்பதான் போன் பண்ணி பேசினேன். அவங்களுக்கு எதுவும் தெரியலைன்னு சொல்றாங்க. அவங்க இப்போ திருச்சிலே அவங்க வீட்டுலே இல்லையாம்.  புதுக்கோட்டையில் இருந்து நாளைக்கு காலையிலே தான் வீட்டுக்கு போவாங்கலாம். "

"சரி டாடி, நான் அவனுக்கு இன்ஸ்டாக்ராமலே மெசேஜ் பண்ணி பாக்குறேன்."

"சரி,  நீ பயப்படாமே தூங்குமா, நான் காலைலே விசாரிச்சு பாக்குறேன்."

தந்தையுடன் பேசிய பின் சற்றே பதட்டம் குறைந்த நிலையில், ஜான்சி படுக்கையில் சரிந்தாள். படுக்கை அறையில், இருளைத் துளைத்த விளக்குகளின் பிரகாசத்தின் மத்தியில், ஜான்சி தனது வாழ்க்கையில் இருந்த நிச்சயமற்ற  தன்மையைப் பற்றி எண்ணியபடி கண்களை மூடி தூங்க முயற்சித்தாள். அந்த இரவு முழுவதும் பல்வேறு சிந்தனைகளுடன் ஒரு புதிய நாளின் விடியல் அவள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் உறங்கிப்போனாள்.

தொடரும்...



Friday, January 26, 2024

இரகசியத்தின் விலை, பாகம் 1


முன் குறிப்பு: 

இந்தக்கதை எந்த உண்மை சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. இதில்  சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் கற்பனையே.

ஜகன் மற்றும் ஜான்சி இருவருக்கும் திருமணமாகி  சுமார் இரண்டு வருடங்கள் ஆகிறது. பெரும்பாலான தம்பதிகளை போல முதலில் அவர்களது வாழ்க்கை சிரிப்பு, அன்பு மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றிய வாக்குறுதிகளால் நிறைந்திருந்தது. ஜகன் மற்றும் ஜான்சி இருவரும் பெற்றோர்களால் மிகுந்த செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பதால் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அவர்கள் வாழ்க்கை ஓரளவு நேர்த்தியாகவே சென்று கொண்டிருந்தது.

ஜகன் நல்ல சம்பளத்துடன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அதிகமாக பணம் சம்பாதித்து தன் குடும்பத்திலேயே பெரும் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அத்தகைய எண்ணத்தால், தினமும் பங்குச் சந்தையில் கணிசமான நேரத்தை செலவிட்டு வந்தான். அவ்வப்போது பங்கு சந்தையில் லாபம் கிடைக்கும் போது அதைப்பற்றி ஜான்சியிடம் சிலாகித்து கூறி மகிழ்ச்சி அடைவான். பங்கு சந்தையில் அதிர்ஷ்டத்தின் காரணமாக முதலில் பணம் வருவது போல இருந்தாலும், பின்னர் அதை விட பல மடங்கு இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜகன் அப்போது உணரவில்லை. தான் பெற்ற லாபம் அனைத்தும் தன் திறமையால் மட்டுமே வந்தது என்று திடமாக நம்பினான். இந்நிலையில் கணவனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த ஜான்சி, கணவனுக்கு லாபமாக கிடைத்த பணத்தை செலவு செய்து பல்வேறு தருணங்களில் கொண்டாடினாள்.

எல்லா வர்த்தகத்தில் இருப்பது போல் பங்கு சந்தையிலும் லாபம் நஷ்டம் மாறி மாறி வரும். அப்படி லாபம் வரும் போது வெளிப்படையாக மனைவியிடம் பகிர்ந்த ஜகன், நஷ்டம் வரும் நேரத்தில் இரகசியமாக வைத்து அதை பற்றி மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்தான். இவ்வாறு இருக்கையில், காலப்போக்கில் ஜகனின் அதிர்ஷ்டம் மோசமாக மாறியது. அவன் தனது வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்திக்க தொடங்கினான். மேலும் அத்தகைய பெரிய இழப்புகளை ஜான்சியின் கோபத்திற்கு பயந்து மறைக்கவும் தொடங்கினான்.  விட்ட பணத்தை மீண்டும் பிடிப்பதற்காக வங்கிகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பல்வேறு பொய்களை சொல்லி கடன் வாங்கினான். கடன் வாங்கிய பணத்தை முதலாக வைத்து மீண்டும் பங்கு சந்தையில் முதலீடு செய்து மீண்டும் பணத்தை இழந்தான்.

கடன்கள் மேலும் மேலும் குவிந்ததால், ஒரு கட்டத்தில் ஜகன்  வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணை அவனது மாத வருமானத்தை விட அதிகமானது. பெருகிவரும் கடன்களின் சிரமமும் அதனால் உண்டான அழுத்தமும் தாங்க முடியாமல், ஜகனிற்கும் ஜான்சியிற்கும்  இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாக துவங்கியது. ஜகன் தன்னிடமிருந்து முக்கியமான ஒன்றை மறைப்பதாக ஜான்சி உணர்ந்தாலும், அது என்னவென்று தெளிவாக தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தாள்.  இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் மாலை நேரத்தில் வேலை முடிந்து ஜான்சி மற்றும் ஜகன் வீடு திரும்பிய பின்னர் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். ஒய்வு நேரத்தில் ஜகனின்  செல்போனில் இருந்து  நெட்ஃபிலிக்ஸ் பார்ப்பது ஜான்சியின் வழக்கம். அப்படி பார்த்துக்கொண்டிருக்கும் போது வந்த ஒரு மெசஜை பார்த்து ஜான்சி வெகுண்டெழுந்தாள்.

என்ன ஜகன் இது, கொக்சிஸ் பாங்கில் லோன் அப்ளை பண்ணி இருக்கியா ? ஏன், யாரோ லோன் டாக்குமெண்ட் கேட்டு மெசேஜ் அனுப்புறாங்க ?

ஏய், அதெல்லாம் சும்மா ஸ்பாம். எனக்கு அது யாருன்னே தெரியாது.

பொய் சொல்லாதே ஜகன். இரு நான் அந்த நம்பருக்கு, நான் போன் பண்ணி கேக்குறேன்.

ஜான்சி வெயிட், நானே பேசுறேன்.

ஸ்பீக்கர்லே போட்டுட்டு பேசு ஜகன்.

தொடர்ந்து ஜகன் அந்த நம்பரை தொடர்பு கொண்டு, 

ஹலோ யாருங்க நீங்க. நான் உங்க கிட்டே லோன் கேட்டேனா. எதுக்கு இப்படி தொல்லை பண்றீங்க. உங்களால எனக்கு என் வைப் கிட்டே பிரச்சனை வருதுங்க. இனிமேல் எனக்கு போன் பண்ணாதீங்க என்று அதட்டலாக ஆங்கிலத்தில் கூறினான். 

அதற்கு எதிர் முனையில் இருந்தவர், 

ஓகே சார், ஓகே சார் என்று நமட்டு சிரிப்புடன் கூறியதை கேட்டு ஜான்சியிற்கு லேசான சந்தேகம் பொறி தட்டியது.

ஜகன் ஏதோ நிதிச் சிக்கலில் இருக்கிறான் என்று ஜான்சி தீர்க்கமாக உணர்ந்தாலும், எவ்வளவு கடன் மற்றும் ஏன் கடன் வாங்கினான் என்ற கேள்விகள் அவள் மனதை துளைத்துக் கொண்டிருந்தது. இருப்பினும் எப்போதெல்லாம் பண விஷயத்தைப் பற்றி ஜான்சி பேச்சு எடுத்தாலும் ஜகன் கோபத்துடன் கிளிர்த்தெழுந்தான். அப்படி ஒரு மாலை நேரத்தில் நிகழ்ந்த சூடான விவாதத்தின் போது, ஜான்சியின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல், ஜகன் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டான். தன் அலுவலக உடமைகளை எடுத்துக்கொண்டு ஜகன் வெளியேறுவதைக் கண்டு தன் செயல் சரியா தவறா என்று புரியாமல் ஜான்சி  திகைத்து நின்றாள்.

தொடரும்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...