Wednesday, July 27, 2011

சொந்தம் - சிறுகதை


வாசலில் உட்கார்ந்து தினமணி படித்துகொண்டிருந்த குமரகுரு, உள்ளே பார்த்து ராஜி காபி என்னமா ஆச்சு என்று கேட்டது தான் தாமதம் - ஆமாம் இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லே.  இந்த மணி பையன், எப்பவும் திருச்சி வந்தா நம்ம வீட்டுக்கு தான் வருவான். இப்போ என்னமோ புதுசா நேரா அவன் பிரெண்ட் குமார்  வீட்டுக்கு போறான். அதை என்ன ஏதுன்னு போய் கேட்டீங்களா ? 

என்னமா பண்றது, அவன் பிரெண்ட் குமார் இத்தனை நாள் பரோடாலே வேலை பார்த்துட்டு இப்போதான் மாற்றலாகி திருச்சி வந்துருக்கான். அதான் அங்கே போறானோ என்னமோ, நீ மனசை போட்டு குழப்பிக்காமே வேலையை பாரு. 

ஆமாம், இப்படி எதாவது சொல்லி என் வாயை அடைச்சிருங்க. எப்பவும் அத்தை அத்தைன்னு சுத்தி வருவான், இப்போ எல்லாம் பெரியமனுசங்க ஆகிட்டாங்க...ஹ்ம்ம்...என்ன பண்றது. அப்பா இல்லாத பையன்னு படிப்புக்கு அதுக்கு இதுக்குன்னு எவ்வளவு செஞ்சு இருப்போம். நன்றி இல்லாத ஜென்மங்க...எவ்வளவு செஞ்சாலும் நம்மளுக்கு மரியாதையை இல்லை பாருங்க என்று பொருமிய மனைவி ராஜியை லேசான கவலையுடன் பார்த்தார் குமரகுரு.

விடு ராஜி, நீ ஏன் இப்போ டென்ஷன் ஆகுறே. அவனா வந்து நம்ம கிட்டே உதவி கேட்டான், நாமலே தானே போய் செஞ்சோம். தவிரவும் அதுல நம்மளுக்கும் ஆதாயம் இருக்கும்னு தானே செஞ்சோம்.

நீங்க கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்க. விட்டா, நீங்களே எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு காட்டி குடுத்திருவீங்க போல இருக்கு.  ஏய் ரேகா, சீக்கிரம் எழுந்து காலேஜுக்கு கிளம்பு, மணி இப்பவே ஏழு ஆச்சு என்று மகளிடம் கத்தினாள்.

மணியின் தந்தை அவன் பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே காலமாகிவிட்டதால் கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது, அவன் அத்தை ராஜி அவனுடைய கல்லூரி படிப்பு செலவை வலிய சென்று ஏற்றுகொண்டாள்.

ஏன் ராஜி இப்படி ஒரு முடிவெடுத்தே, நமக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை என்று குமரகுரு கேட்டபோது கூட - அட நீங்க கொஞ்சம் சும்மா இருங்க எல்லாம் எனக்கு தெரியும். மணி தங்கமான பையன், கல்லூரி செலவை நாம ஏத்துகிட்டு, அவனுக்கு படிப்பு முடிஞ்சு ஒரு வேலை கிடைச்சதும் - நம்ம பொண்ணு ரேகாவை அவனுக்கே கல்யாணம் செஞ்சு வெச்சிரலாம். பையன் நம்ம சொந்தம் அதனாலே நம்ம சொத்தும் வெளிலே போனா மாதிரி இருக்காது. நம்ம பொண்ணும் கூடவே இருக்கும் என்று தன் கணக்கை கூறி வாயடைத்தாள்.

மணி இப்போது, கல்லூரி படிப்பு முடிந்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறான். மாதம் ஒருமுறை திருச்சி வந்து அத்தை வீட்டில் தங்கி இருந்துவிட்டு செல்வான். ஆனால் இந்த முறை ஏனோ நண்பனின் வீட்டில் தங்க போவதாக சொல்லிவிட்டான்.

அது தான் ராஜியின் கோபத்திற்கு காரணம். நீங்க இப்போவே போய் அவனை கூட்டிட்டு வாங்க என்று பிடித்து தள்ளாத குறையாக குமரகுருவை அனுப்பி வைத்தாள். 

பொடிநடையாக அருகில் இருந்த நண்பனின் வீட்டிற்கு வந்து சேர்ந்த குமரகுரு, வாசலில் செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைய முற்படும் போது மணியின் குரல் கேட்டது.

ஆமாண்டா குமார், இப்படி ஒரு எண்ணம் அவங்களுக்குள்ளே இருக்கும்னு நான் நெனைச்சு கூட பாக்கலே. என்னை எதோ பாசத்தால் மட்டும் தான் அத்தையும் மாமாவும் படிக்க வெச்சாங்கன்னு நினைச்சேன். ஆனா போன தடவை ஊருக்கு வந்திருக்கும் போது, நான் தூங்குறேன்னு நினைச்சு அத்தையும் மாமாவும் பேசிட்டு இருக்குறதை கேட்டுட்டேன்.அவங்க என்னை படிக்க வெச்சதே அவங்க சொத்தை பாதுகாக்கவும், ரேகாவை எனக்கு கட்டி கொடுக்கவும் தான் என்பதை தெரிஞ்சுகிட்டேன். நான் ரேகாவை கல்யாணம் செஞ்சுக்கிற கோணத்திலே பார்த்ததே இல்லை. என்னை விலை கொடுத்து வாங்குற ஒரு பொருள் மாதிரி அவங்க பார்க்கும் போது, நானும் ரேகாவும் கல்யாணம் பண்ணிகிட்டா எங்க வாழ்கை சந்தோசமா இருக்குமாங்கிறது சந்தேகம் தான். என்னை பொருத்தவரைக்கும், கல்யாணம்கிறது கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து சந்தோசமா வாழறதுக்கு தான். ஆனா இந்த கல்யாணத்துக்கு அப்புறம், எங்களுக்குள்ள வர சின்ன சின்ன விஷயத்தில் கூட நான் தான் விட்டுகொடுக்கனும்னு ரேகா எதிர்பார்கிறாளோ இல்லையோ அத்தையும் மாமாவும் எதிர்பார்பாங்க. அப்பிடி ஒரு வாழ்கை வாழறது எங்க ரெண்டு பேருக்குமே கஷ்டம்தான். அதனாலே தான் எனக்கு நன்றி கெட்டவன்னு பேரு வந்தாலும் பரவால்லேன்னு ரேகாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஒரு முடிவெடுத்தேன். இந்த நிலைலே எனக்கு அங்கே போய் தங்கவும் மனசு இல்லே, அதான் இங்கே வந்துட்டேன். இப்போ எங்க அத்தையும் மாமாவும் கேட்டா எனக்கு கல்யாணத்திலே விருப்பம் இல்லேன்னு சொல்லி கல்யாணமே செஞ்சுக்காம இருந்திட போறேன் என்றான் மணி. 

இதை கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற குமரகுரு, திரும்பவும் செருப்பை மாட்டிகொண்டு விறு விறுவென்று தன் வீடு நோக்கி நடந்தார். உள்ளே நுழைந்ததும், ராஜி ராஜி, கொஞ்சம் இங்கே கொஞ்சம் வா என்றார். 

என்னங்க அவ்ளோ அவசரம் என்ற ராஜியை பார்த்து, இங்கே பாரு ராஜி - ரேகா கல்யாணத்துக்கு இப்போ ஒன்னும் அவசரம் இல்லே, முதல்லே அவ படிப்பை முடிச்சிட்டு ஒரு ரெண்டு வருஷம் வேளைக்கு போகட்டும். அப்புறமா அவ கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம். இப்போ நம்ம மணிக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வெக்கணும் என்றார். 

உங்களுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க என்று கூறிய மனைவி ராஜியை பார்த்து - இத்தனை வருஷம் நீ சொல்றதை நான் கேட்டுட்டேன், இந்த தடவை நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு என்று அழுத்தமாக கணீரென்ற குரலில் கூறினார்.

Monday, July 25, 2011

சார் கொஞ்சம் லைன்லே வாங்க ப்ளீஸ்...


இது கொஞ்சம் புலம்பல் டைப் பதிவு. நான் செய்வது சரியா தவறா என்று புரியாமல் குழம்பி போய் தான் இதை எழுதுகிறேன். சரி விஷத்திற்கு வருகிறேன். மற்ற எந்த விஷயத்தையும் விட யாராவது வரிசையில் நிற்காமல் முன்னே நுழைய முயற்சித்தால் எனக்கு கொஞ்சம் கோபம் வருகிறது. கொஞ்சம் கோபத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக, சம்பத்தப்பட்ட நபரை அழைத்து வரிசையில் வருமாறு  கூறினால், ஒரு சிலர் என்னை ஒரு கிண்டலான பார்வை பார்த்து விட்டு முன்னே சென்று நின்று கொள்வார்கள். இது கூட பரவாயில்லை, ஒரு சிலர் நான் ஒழுங்கா தான் லைன்லே வரேன், நீதான் முன்னாடி வந்து நிற்கிறே என்று விவாதம் செய்வார்கள். இது எதோ சினிமா தியேட்டரில் அல்லது ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர் போன்ற இடத்தில் மட்டும் அல்லாமல்,  விமான நிலையத்தில் - மெத்த படித்த மேதாவிகள் போல் தோற்றம் அளிக்கும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர்களிடம் கூட நடக்கிறது. வரிசையில் நிற்காமல் முன்னே செல்பவர்களை அந்த சேவையை அளிக்கும் சிப்பந்திகளும் ஒன்றும் சொல்வதில்லை. வரிசையில் நிற்காமல் பல திசைகளில் இருந்து ஊர்ந்து வந்து அனைவரும் உள்ளே நிழைய முயற்சிப்பதை பார்க்கும் போது மகா எரிச்சலாக உள்ளது. 

இது வரிசையில் நிற்காமல் செல்லும் வழக்கம் தான் பல இடங்களில் சட்டத்தை மீற காரணமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. போக்குவரத்தில் முந்துவது, முண்டியடித்து கொண்டு நடப்பது என கூறிக்கொண்டே போகலாம். முடிந்தவரை அவர்களிடம் பேசி அவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்ட முயற்சி செய்தாலும், ஒரு சில நேரத்தில் அட போங்கடா எப்படியோ என்று அடக்கி வாசிக்க தோன்றுகிறது. நான் எல்லா விஷயத்திலும் பெர்பெக்ட் கிடையாது தான், ஆனாலும் நாம் சரின்னு நினைப்பதை எடுத்து சொல்லி, அது ஒருவரையாவது மாற்றாதா என்கிற நப்பாசையில் என் முயற்சியை விக்ரமாதித்தன் போல தொடர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு வேலை ஊரோடு ஒத்து வாழ் என்பதை பின்பற்றாமல், நான் தான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்றனோ...நீங்களே சொல்லுங்க...

Saturday, July 23, 2011

நான் யோசிச்ச (அட நிஜமாங்க) பத்து


அமர்க்களம் படத்தில் வரும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடலை போல, இதை எல்லாம் நம் தமிழ்நாட்டில் மக்களிடம் கேட்கலாம் என்று நான் நினைத்ததை இங்கு பட்டியலிடுகிறேன். இது எதோ வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து, இங்குள்ள குறைகளை கேலி செய்யும் எண்ணத்தில் கூறவில்லை. நம் மக்கள் இப்படி எல்லாம் நடந்துகொண்டால் மேலும் நன்றாக இருக்குமே என்று என் மனதிற்குள் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு தான். 

  • எந்த ஒரு இடத்திலும் வரிசையில் நின்றால்...
  • அனைவரும் போக்குவரத்து விதிகளை மீறாமல் கடைபிடித்தால்...
  • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மட்டுமாவது வழி விட்டு முன்னே செல்ல அனுமதித்தால்...
  • செல்போனில் சத்தமாக நம் காதுக்கு அருகே வந்து பேசாமல் இருந்தால்...
  • குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போட்டால்...
  • பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்றவைகளை செய்யாமல் இருந்தால்...
  • வாடிக்கையாளர்கள் சேவையை குறித்த நேரத்தில் சரியாக செய்து கொடுத்தால்...
  • தமிழ் தெரிந்தும் தேவையே இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதை குறைத்தால்...
  • முடிந்தவரை சட்டத்தை மதித்தும், பணம் மற்றும் அதிகார பலத்தால் அதை வளைக்காமல் இருந்தால்...
  • நம்மை விட பண வசதியில் குறைந்தவர்களையும் சக மனிதர்களாக மதித்தால்...
இந்த பட்டியலில் நீங்கள் ஏதேனும் சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Saturday, July 9, 2011

இந்திய பயணம்

இங்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு எப்போ போன் பண்ணினாலும் நம்ம மக்கள் கேட்கிற ஒரு முக்கியமான கேள்வி, எப்போ இங்கே வரீங்க என்பது தான். நாமும் இந்த வருஷம் வரணும்னு ஒவ்வொரு வருசமும் சொல்லிக்கிட்டு இருப்போம். சரி சரி, சீக்கிரமா வாங்க, புள்ளைங்களை எல்லாம் தேடுது என்று நம்பிக்கையுடன் சொல்பவர்களை பார்த்து நம் மைன்ட் வாய்ஸ் இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிட்டு இருக்கு என்று கேட்க்கும். ஒரு சில புத்திசாலி இளவட்டங்கள் நேரடியாக - ஆமாம் எப்ப கேட்டாலும் இதே பதில் தான் சொல்றீங்க என்று மனதில் உள்ளதை தைரியமாக சொல்வார்கள். ஆமாம் அதுவும் சரிதான், நாம் ஏன் இப்படி பண்றோம்னு யோசிச்சு மனசுல தோணினதை இங்கே எழுதுறேன்.

ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் பள்ளி விடுமுறையின் போது, இந்த வருஷம் இந்தியா போயிட்டு வரலாமாப்பா என்று வீட்டில் தங்கமணி ஒரு கேள்வி எழுப்புவார். நானும் சரி பாக்கலாம் என்று அப்போதைக்கு சொல்லிவிட்டு, அதை பற்றி மெதுவாக மனதில் அசை போட்டுகொண்டு அலுவலக வேலையோ அல்லது வீட்டு வேலையோ எதாவது ஒன்றில் மூழ்கி விடுவேன். அமெரிக்கா வந்த புதிதில் பல வருடங்களாக இங்கு வாழும் இந்தியர்களிடம் பேசும்போது நான் இந்தியா போய் ஐஞ்சு வருஷம் ஆச்சு, பத்து வருஷம் ஆச்சு என்று கூறுவார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும், எப்படி தான் அவ்ளோ நாள் இந்தியா பக்கம் போகாம இருக்காங்களோ என்று தோன்றும். ஒரு சிலரிடம் ஏங்க அவ்ளோ நாளா போகலே என்று கேட்டால், கிரீன் கார்டு போட்டு இருக்கோம், லீவ் இல்லை, குழந்தைகள் வளர்ந்து இங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள், வேறே யாரும் முக்கியமா பாக்குறா மாதிரி இந்தியாவிலே இல்லே என்று ஏதாவது ஒரு பதில் வரும். இதை போன்ற பதில்களை கேட்கும் போது, நம் மனம் எப்படி 'Decision making' செய்கிறது என்பதை பற்றி படித்த புத்தக வரிகள் நியாபகம் வரும். பொதுவாக நாம் உள் மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதற்கு ஏற்றமாதிரி ஆயிரம் காரணங்களை நம் மனம் அடுக்கி அந்த முடிவு சரி தான் என்று நம்மை சமாதானப்படுத்தும். அது தான் இங்கும் நடக்கிறதோ என்று தோன்றும்.

இங்கு வந்த புதிதில் வருஷத்துக்கு ஒரு முறையோ அல்லது ஒன்றரை வருஷத்துக்கு ஒரு முறையோ என்று இருந்த இந்திய பயணம், சில ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் இந்திய பயணம் என்று ஆகிவிடும். இதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும், பலர் சொல்லும் முக்கியமான காரணம் பள்ளி விடுமுறை மற்றும் பயண செலவு தான்.  குழந்தைகள் வளரத்துவங்கி பள்ளி செல்லும் கால கட்டத்தில், இந்திய பயணம் என்பது பள்ளியின் கோடை விடுமுறையான ஜூன் தொடங்கி ஆகஸ்ட்-க்குள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரி கிட்டத்தட்ட மூணு மாசம் லீவ் இருக்கே அதுலே ஒரு மாசமாவது போயிட்டு வரலாமேன்னு கேட்டீங்கனா, அதுக்கு பதில் பிளைட் டிக்கெட் ரேட் தான். எல்லாருமே இந்த மூணு மாசத்துக்குள்ளே பயணம் செய்ய விரும்புவதால் பிளைட் டிக்கெட் எல்லாம் யானை வேலை சொல்லுவானுங்க. டிக்கெட் ரேட் தவிர இந்தியா போய் ஆகிற செலவு தனி. அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்று தெரிந்தால் - சலூனில் போய் சவரம் செய்து விட்டு எவ்வளவு ஆச்சுங்க என்று கேட்டால் கூட, குடுங்க சார், நீங்களே பார்த்து குடுங்க என்று நம் சுயமரியாதைக்கு சவால் விடுவார். அது மட்டும் இல்லாமல் இந்தியா போகும் போது 'இண்டியா ஷாப்பிங்' என்று கூறி ஒரு இங்கு வாழும் நம் மக்கள் ஒரு அலப்பறை குடுப்பார்கள் பாருங்கள்...எப்பா தலையே சுத்தும். பல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தன் பெருமையை பெரிதாக அவர்கள் வாழும் ஊரில் காட்ட முடியாது, இந்த மாதிரி இந்திய பயணத்தின் போது தான், என் இந்திய மண்ணில் நடந்து போன இடத்தில் கூட, ஒரு பத்து நிமிடமாவது சென்ட் வாசனை வீச வேண்டும் என்கிற ரேஞ்சில் விலை கொடுத்து பொருட்கள் வாங்குவார்கள். தனக்கு ஷாப்பிங் செய்வதோடு இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எதாவது வாங்கி போக வேண்டும். இப்படி செலவு கணக்கை போட்டு - சொப்பா இப்பவே கண்ண கட்டுதே என்று சிலர் இந்திய பயணத்திற்கு கல்தா குடுத்துவிடுவதும் உண்டு. இது புலி வாலை புடிச்ச கதை தான், பணம் சம்பாரிக்க வெளிநாட்டுக்கு வந்து, நம்ம சொந்தங்களை பாக்க போக கூட யோசிக்க வைக்கிற சமூக மற்றும் பொருளாதார கண்ணாமூச்சிலே மாட்டிகிறோம்.

இப்படி இருந்தா அப்ப எப்பதான் இந்தியா போயிட்டு வருவீங்க என்று நீங்க கேட்கலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சிலருக்கு புரட்டாசி மாதம் முழுக்க அசைவம் சாப்பிடாமல் இருந்து அடுத்த மாதம் தொடங்கியதும் ஒரு கட்டு கட்ட ஆசை வரும் பாருங்கள், அதை போல சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் இந்தியா போயே ஆக வேண்டும் என்று ஆசை வரும் - அப்பொழுது மேலே கூறிய காரணங்கள் எல்லாம் தவிடு பொடியாகி,  என்ன டேட் ஆனாலும், என்ன ரேட் ஆனாலும் எட்றா டிக்கெட்டை இந்தியாவுக்கு என்று ஒரு வேகத்தில் டிக்கெட் முடிவு செய்யப்படும். அதன் பின்பு எல்லா ஏர்லைன்ஸ் வெப்சைட்களையும் போட்டு தாக்கி, பல டிராவல் ஏஜென்ட்களுக்கு குடைச்சல் கொடுத்து ஒரு வழியாக டிக்கெட் எடுத்துருவோம். அப்படி எடுத்து முடித்ததுமே ஒரு வித உற்சாகம் வந்துவிடும். சரி அதே உற்சாகத்தில் இந்தியாவில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து சொல்லிவிடலாம் என்று முதலில் யாராவது ஒருவருக்கு போன் அடித்து அவருக்கு எப்போது வருகிறோம் எவ்வளவு நாள் தங்குகிறோம் என்று சொல்லிவிட்டு அடுத்த நபருக்கு போன் அடித்து ஹலோ என்று சொல்வதற்குள், 'ஆமா, அடுத்த வாரம் வரீங்கன்னு கேள்விப்பட்டேன்' என்று நம்மை அதிர வைப்பார். இந்தியாவின் தொலைதொடர்ப்பு விஞ்ஞான வளர்ச்சியை பற்றி வியந்துகொண்டிருக்கும் போதே - அவனுக்கு தெரியுது, எங்களுக்கு எல்லாம் முதல்ல சொல்ல மாட்டீங்க என்று சற்று கோபத்துடன் கூறுவார். நாம் மனதிற்குள் ஐயா வடை யாருக்காவது ஒருத்தருக்கு தான் முதல்லே கிடைக்கும் என்று நினைத்துகொண்டு, ஹி ஹி...நான் உங்களுக்கு தான் முதல்லே போட்டேன், லைன் கிடைக்கலேன்னு அவருக்கு பண்ணி சொன்னேன் என்று ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டிவரும். 

என்னதான் சொல்லுங்க, இத்தனையையும் தாண்டி தமிழ்நாட்டிலே காலடி எடுத்து வைத்ததும் ஒரு சூப்பர் பீலிங் வருங்க. என்னை பொருத்தவரை சுத்தி இருக்குற மக்கள் யாருகிட்டே வேணும்னாலும் தமிழ்லே பேசலாம் என்கிற நினைப்பே ஒருவித போதை தான். நாம என்ன நினைச்சு என்ன ஆக போகுது...தமிழ்நாட்டிலே போஸ்ட் ஆபீஸ் போனா கூட - எஸ், வாட் டூ யு வான்ட் -னு கேக்குறாங்க. என்ன பண்ண தமிழ் நாட்டிலே தமிழ் பேசாததை பத்தி முன்பு தமிழா தமிளா என்கிற பதிவில் குமுறி இருக்கிறேன். அங்கே போய் சேர்ந்து ரெண்டாவது நாளே, நம்ம சொந்த பந்தங்கள் இத்தனை நாள் போனில் கேட்க முடியாமல், மனசுக்குள் பூட்டி வைத்திருந்த அனைத்தையும் எடுத்து நம் முன் வீச - நம்ம வாயும் சும்மா இருக்குமா, பெரிய நாட்டாமை மாதிரி எதாவது ஏடாகூடமா சொல்ல, அது சண்டையிலே போய் முடியும். என்ன தான் இருந்தாலும் நம்ம ஆளுங்க கிட்டே இருக்குற நல்ல குணம் என்ன பிரச்சனை வந்தாலும் கொஞ்ச நாள்லே மறந்துட்டு திரும்பி சகஜமா பேச ஆரம்பிச்சிருவாங்க. யாரவது ஏன்னு கேட்டா என்னோட மாப்ளை கிட்டே நான் சண்டை போடாம வேறே யாரு போடுவா என்று பதில் வரும். சும்மாவா சொன்னாங்க - குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லைன்னு.  ஆனா ஒன்னு, நம்ம உறவுங்க மற்றும் நண்பர்கள் கூட இருந்து பழைய கதைகளை பேசி மனசு விட்டு பேசி சிரிக்கிறது இருக்கே அதுக்கு ஈடு இணை கிடையாது. அந்த சந்தோசத்திலே திளைத்துகிட்டு இருக்கும் போதே நம்ம திரும்பி கிளம்ப வேண்டிய நாள் வந்துரும். ஆனாலும் அந்த நினைவுகளை சுமந்து அடுத்த ட்ரிப் வரும் வரை ஓட்டலாம். 

பின் குறிப்பு:

ஒரு முக்கியமான விஷயம் மகாஜனங்களே, இது யாரையும் மனசுல நினைச்சுட்டு போட்டு தாக்க எழுதவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த வாரம் இந்தியா போக இருப்பதால், சும்மா எதோ மனசுல தோணினதை எழுதி இருக்கேன். இதுலே சொல்ற பல விஷயங்கள் நானும் பண்ணி இருக்கேன் அண்ட் பண்றேன். தப்பா நினைச்சுக்காம காமடியா நினைச்சிக்கோங்க.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...