Sunday, January 1, 2012

2012 புது வருடமே வருக



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நான் பதிவு எழுத தொடங்கி ஒரு வருடம் ஒடிவிட்டது என்று நினைக்கும் போது கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கிறது. பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும், அப்படி இப்படி என்று ஐம்பது பதிவுகளுக்குமேல் எழுதியாகி விட்டது. முதலில் எழுத ஆரம்பிக்கும் போது நம்மால் ஒழுங்காக நேரத்தை ஒதுக்கி உருப்படியா எழுத முடியுமா என்ற கேள்வி மனதில் அடிக்கடி எழுந்துகொண்டு இருந்தது. அவ்வப்போது கொஞ்சம் பிரேக் விட்டாலும் தொடர்ந்து எதையாவது எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்னது ப்ளாக் எழுதுறியா ? எதுக்காக, என்னத்தை பத்தி, எவ்வளவு ஹிட்ஸ் என்று சிலர் கேட்பார்கள். எவ்வளவு ஹிட்ஸ் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. யாரவது பத்து பேர் படித்து ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு உபயோகமாக இருந்தால் சரி. ஏன் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் - அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் எழுதினால் ஏதோ ஒருவித திருப்தி கிடைக்கிறது. மேலும் அறிவியல் பதிவுகளைப் படித்துவிட்டு சில மாணவர்களுக்கு அவை பயனுள்ளதாக இருப்பதாக வரும் பின்னூட்டங்கள் மற்றும் மின்னசல்களைப் பார்க்கும் போது அந்த திருப்தி பல மடங்காகிறது. இரண்டாவது காரணம் பதிவுகளைப் படித்துவிட்டு பாராட்டவோ, தவறை சுட்டிக்காட்டவோ வரும் கருத்துக்கள். இந்த உலகில் உள்ள அனைவருமே ஒரு சிறு பாராட்டுக்கு தானே ஏங்கிக் கிடக்கிறோம், நான் அதற்கு விதிவிலக்கல்ல. மூன்றாவது காரணம் கொஞ்சம் நீளமானது. எழுத ஆரம்பித்த புதிதில் என்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்த பெரும்பாலான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேட்ட ஒரு கேள்வி - தமிழில் எல்லாம் எப்படி எழுதுறே, அதுவும் அமெரிக்காலே இருந்துட்டு எப்படி இது மாதிரி எழுத முடிகிறது போன்ற கேள்விகள் தான். நான் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழியில் பதிவு எழுதி இருந்தால் கூட இவ்வளவு ஆச்சரியப் பட்டிருக்க மாட்டார்கள் போல இருக்கிறது. அது என்னமோ தெரியலே, தமிழர்களுக்கு மட்டும் தான் தமிழ் தெரியவில்லை என்று சொல்வது பெருமையாக இருக்கிறது. எப்படிதான் நம்ம ஆளுங்க மட்டும் ஹலோ ஐ ஆம் திருநாவுகரசு...ஐ ஆம் செந்தில்வேலன் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆங்கிலத்திலேயே பேசிகொண்டிருக்க முடிகிறதோ.

அது மட்டும் இல்லாமல், இன்றைய சூழ்நிலையில் 'ழகரம்' என்பதே வழகொழிந்து போய் விட்டதோ என்று தோன்றுகிறது. பலருக்கு அது தவறென்றே தெரியவில்லை, பள்ளிகூடத்தில் எல்லாம் தமிழ் வாத்தியார்கள் ஒன்றும் சொல்லமாட்டார்களா ? நான் படித்த காலகட்டத்தில் தமிழ் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது திடீர் என்று யாரையாவது ஒரு மாணவனை எழுந்து பாடத்தையோ, செய்யுளையோ படிக்க சொல்வார். கொஞ்சம் உச்சரிப்பு தவறினாலும் விட மாட்டார்கள், அதையே ஒரு காமடியாக்கி சம்மந்தப்பட்ட மாணவனுக்கு உச்சரிப்பு சரியாக வரும்வரை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இது கூட பரவாயில்லை, எனக்கு தெரிந்த தமிழ்நாட்டில் வாழும் ஒரு நண்பர் ஒருவர் - என் மகள் பேசும் போது அவள் நினைப்பதை ஆங்கிலத்தில் தான் சரளமாக கூற முடிகிறது என்று கூறினார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன். அவரும் தன் பிள்ளைகளுடன் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசுவார். இதைப் பற்றி இவர்களிடம் நேரடியாக பேசினால் கூட, 'ஆரம்பிச்சிட்டான்யா' என்று நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள். இதை எல்லாம் சொல்வதால் நான் தான் தமிழை மெத்த அறிந்தவன் என்றோ மற்றவர்களுக்கெல்லாம் தமிழ் தெரியவில்லை என்றோ கூறவில்லை. நம்மை சிந்திக்க வைக்கும் நம் தாய் மொழியை இகழ்ச்சி செய்பவர்களை பார்த்துகொண்டு என்ன செய்வது. இது ஒரு உதாரணம் மட்டுமோ, இது போல பல சமூக நிகழ்வுகள் என்னை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும்.  இது போன்ற தருணங்களில் என் கருத்துகளை நேரடியாக வெளிபடுத்த இயலாத நேரத்தில், அந்த சமூகக் கோபத்தை காட்ட சுயநலத்துடன் ஒரு வடிகாலாகவும் பதிவுகளை எழுதுகிறேன். எது அப்படி இருந்தாலும், நம் எண்ண ஓட்டத்தை சிரமமில்லாமல் தமிழிலேயே இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் இந்த பதிவுலக வாய்ப்பினால் தமிழ் நீண்ட நெடுங்காலம் வாழும் என்பது நிதர்சனமான உண்மை.

உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...