Sunday, July 28, 2013

பாக்யா செய்தது சரியா

சுஜாதா அவர்களின் ஐம்பத்தைந்து வார்த்தைகள் கொண்ட ஈர்ப்பால் நானும் எனக்கு தோன்றுவதை கதை என்று கூறிக்கொண்டு, அவ்வப்போது என்னுடைய வலைத்தளத்தில் எழுதுவேன். நேற்று கோவை கிராஸ்கட் ரோட்டில் நடந்துகொண்டிருக்கும் போது, ஒரு பெட்டிக்கடையில் தொங்கிகொண்டிருந்த ஆனந்த விகடன் புத்தகத்தில் 'ஹன்சிகாவை காதலிக்கிறேன், எங்கள் திருமணம் நிச்சயம் - இது சிம்பு சிக்ஸர்' என்ற அட்டைப் படத்தை பார்த்து ஒரு ஆனந்த விகடன், குமுதம் மற்றும் பாக்யாவை வாங்கினேன். எப்போதும் பாக்யாவை வாங்காத நான் ஏதோ தோன்றியதால் அன்று வாங்கினேன். வீட்டிற்க்கு வந்ததும் ஆனந்த விகடன் மற்றும் குமுதத்தை படித்துவிட்டு பாக்யாவை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். நேற்று இரவு தூக்கம் வராமல் பாக்யாவை புரட்டிக் கொண்டிருக்கும்போது, ஒரு கதை எங்கேயோ படித்து போல இருந்தது. மேலும் சிலவரிகள் படித்ததும், அடப்பாவிங்களா இது நான் 2011-ல் என்னுடைய வலைத்தளத்தில் எழுதிய கதை என்று உரக்க கூறியபடி படுக்கையில் இருந்து துள்ளி எழுந்தேன். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அந்த இரு கதைகளுக்கு அடியில் என் பெயரைப் போட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து யாரும் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. அட்லீஸ்ட் ஒரு ஈமெயில் அல்லது கமெண்ட் போட்டு, இது போல உங்கள் கதையை பிரசுரிக்க போகிறோம் என்று கூறியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். நம்ம எழுதியதை எல்லாம் கதைன்னு மதிச்சு பாக்யாவில் போட்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், இது போல தெரியாமல் எத்தனை கதைகள் அச்சில் வந்திருகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் பெரிதாக எதுவும் டிஸ்க்ளைமர் எல்லாம் என் வலைத்தளத்தில் போடாததால், பாக்யா செய்தது சரியா தவறா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் கதைகள் பிரசுரமானது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதைகளில் வலைதள முகவரிகளையும், பாக்யாவில் வந்த பாகத்தையும் கீழே காணலாம்.

http://iniyaulavaaga.blogspot.in/2011/11/55.html
http://iniyaulavaaga.blogspot.in/2011/08/55.html
பருவம்மகளுடம் சேர்ந்து சாலையில் நடக்கும் நேரத்தில்
அடிக்கடி திரும்பிப் பார்க்கும் சாலையோரத்து இளைஞர்கள்
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை உணர்த்துகிறார்கள்.
மரியான் - விமர்சனம் அல்ல

மரியான் படத்திற்கு ஆன்லைனில் புக் செய்துவிட்டு டிக்கெட்டை பெற்றுக்கொள்ள கவுன்டரில் நின்று கொண்டிருந்த நேரத்தில் அருகில் இன்னொரு கவுன்டரில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தன் மனைவியிடம் மரியான் டிக்கெட் இருக்காம், எடுத்துரட்டுமா என்று கேட்டுகொண்டிருந்தார். அதற்கு அவர் பின்னால் காக்கி சட்டை போட்டு (ஆட்டோ டிரைவராக இருக்கலாம்) நின்றுகொண்டிருந்த ஒருவர் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, சார் மரியான் வேண்டாம், அதுக்கு நீங்க சிங்கம் II இல்லைனா பட்டத்துயானை பார்க்கலாம் என்று கூறி எனக்கு பீதியை கிளப்பி விட்டார். சரி டிக்கெட்எடுத்தாகிவிட்டது, போய் பார்த்து விடுவோம் என்று மனதை தேற்றிக்கொண்டு சென்று தியேட்டரில் அமர்ந்தோம். படம் பார்த்துகொண்டிருக்கும் போது சிறிது நேரத்திலேயே அந்த காக்கி சட்டைக்காரரை மானசீகமாக இந்தப் படம் ஏன் சார் உங்களுக்கு பிடிக்கல என்று கேட்டேன். தனுஷ் நடிப்பு, ரஹ்மான் இசை, காமிரா, டைரக்க்ஷன் என்று எல்லாமே என்னைப் பொறுத்தவரை நன்றாகத் தான் இருந்தது. இடைவேளைக்கு அப்புறம் சிறிது மெதுவாக சென்றாலும் ரசிக்கும்படி இருந்தது. அதுவும் பசியில் பிடியில் இருக்கும் நேரத்தில் கற்பனையில் விருந்து சாப்பிடுவது சிம்ப்லி அமேசிங். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் சிரிக்கும் மக்களைப் பார்த்து, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா என்று எழுந்து நின்று கத்தத் தோன்றியது. அதைத் தவிர பனிமலரிடம் தனுஷ் தொலைபேசியில் பேசும் காட்சி மற்றும் பாலைவனத்தில் சிறுத்தை சுற்றிவரும் காட்சிகளில் தனுஷின் நடிப்பு அற்புதம்.

இந்த வாரம் என்ன வி.ஐ.பி வாரமா என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்னாள் வைகோவிடம் பேசினேன். இப்போது மரியான் படம் பார்த்து வெளியில் வரும்போது படத்தின் இயக்குனர் பரத்பாலா, அந்த மாலில் உள்ள ஒரு உணவகத்தில் எதோ வாங்கிகொண்டு நின்றிருந்தார். அவரிடம் சென்று இப்போது தான் படம் பார்த்துவிட்டு வருகிறோம், படம் நன்றாக இருந்தது என்று கூறியதும் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை காண முடிந்தது. அவரே ஆவலாக பாட்டு எல்லாம் எப்படி இருந்தது என்றும் கேட்டார். அவர் அவசரமாக விமான நிலையம் சென்று கொண்டிருப்பதாக சொன்னதால், அவரை தாமதப்படுத்தாமல் வேகமாக ஒரு புகைப்படம் எடுத்துகொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

வைகோவை சந்தித்தேன்


சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில் திரு. வைகோ அவர்கள் நான் அமர்ந்திருந்த வரிசைக்கு அருகில் உள்ள வரிசையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் வைகோ தான் என்று தெரிந்தாலும், வேறு யாராவதாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. ஏற்கனேவே சமீபத்தில் மும்பையில் நம்ம கொலைவெறி புகழ் அனிருத் போல ஒருவரைப் பார்த்து நீங்கள் அனிருத் தானே என்று கேட்டு பல்பு வாங்கி இருந்தது நினைவிற்கு வந்ததால் அமைதியாக இருக்கையில் உட்கார்ந்து விட்டேன். அவர் எதோ நெல்சன் மண்டேலா பற்றிய புத்தகத்தைப் படித்தபடி இருந்தார். விமானம் தரை இறங்கியதும் ஒரு சிலர் அவருக்கு வணக்கம் கூறியதைப் பார்த்ததும், அவர் வைகோ தான் என்று ஊர்ஜிதப்படுத்திகொண்டேன். இதுவரை எந்த பிரபலத்தையும் இவ்வளவு அருகில் பார்த்திராத காரணத்தினால் அருகில் சென்று பேச சற்று தயக்கமும் பயமுமாக இருந்தது. சற்று தயங்கியபடி அவர் அருகில் சென்று வணக்கம் கூறியதும், அவரே சரளமாக பெயர் என்ன, எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார். நான் பாஸ்டனில் இருந்து விடுமுறைக்கு வந்திருக்கிறேன் என்று கூறியதும் பாஸ்டனை பற்றிய வரலாற்று சிறப்புகளைப் பற்றி பேசினார். சிறிது நேரம் பேசிய பின்னர் புகைப்படம் எடுத்துகொண்டு, என் கையில் இருந்த ஒரு புதிய புத்தகத்தில் அவர் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். மனித நேயமே உயர்வு என்று கையெழுத்திட்டு கொடுத்தார். பிரபலமான மனிதர்களை அருகில் பார்க்கும் போது சற்று பதட்டம் ஏற்பட்டாலும், அருகில் சென்றால் பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...