Saturday, December 31, 2011

ஓட்டம் - ஐம்பத்தைந்து வார்த்தை சிறுகதைகாலை ஆறு மணி. அர்ஜுன் அவசரமாக எழுந்து கடிகாரத்தின் தலையைத் தட்டி அலாரத்தை நிறுத்தினான். நிமிடத்தில் கிளம்பி டிராக் சூட்டை எடுத்து மாட்டினான்.

டைனிங் மேஜை மீது காபி ரெடியாக இருந்தது.

போர்டிகோவில் வந்து காரை கிளப்பி, சரியாக ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த கட்டடத்தின் வாசலில் நிறுத்தி உள்ளே சென்றான்.

அங்கு உடற்பயிற்சி செய்பவர்களை பார்த்தபடி, ட்ரெட்மில்லில் ஏறி இனிமேல் தினமும் ஜிம்முக்கு வந்து அரைமணி நேரமாவது ஓடவேண்டும் என்று மனதிற்குள் கூறியபடி ஓட்டத்தை துவக்கினான்.


பின் குறிப்பு:

உங்களில் பலருக்கு இந்தக் கதையில் நான் சொல்லவந்தது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் மேலும் சில வார்த்தைகளை சேர்த்து, அர்ஜுன் செய்ததை நியாயப்படுத்த என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது. உங்களிடம் வேறு எதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்.


Friday, December 30, 2011

கூட்டாஞ்சோறு - Dec 30, 2011


நாட்டு நடப்பு:

சில நாட்களுக்கு முன்பு நாணயம் விகடனில் 'எகிறும் கைடுலைன் வேல்யூ... சுருளும் ரியல் எஸ்டேட்!'. தமிழகம் முழுவதும் சொத்துக்களுக்கான கைடுலைன் வேல்யூ (அரசு வழிகாட்டி மதிப்பு) கூடிய விரைவில் ஐந்து முதல் பத்து மடங்கு உயரப்போகிறது என்று கூறி இருக்கிறார்கள். இதனால் தாறுமாறாக விலை ஏறி இருக்கும் நில மதிப்பு குறைந்து அதனால் தங்கள் வருமானம் பாதிக்க படுமோ என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்கள் கலங்கிதான் போய் இருக்கிறார்கள்.  அதென்னமோ தெரியவில்லை நம்  மக்களுக்கு நிலத்தின் விலையும், தங்கத்தின் விலையும் குறையவே குறையாது என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வால் அரசுக்கு கூடுதல் வருமானம், மற்றும் கருப்பு பண பரிமாற்றம் குறைய வாய்ப்பிருகிறது என்றே தோன்றுகிறது. இந்த கைடுலைன் வேல்யூ மாற்றத்தால் நிலம் மற்றும் பிளாட் வாங்கும் விலை குறையுமா, கைடுலைன் வேல்யூ -வை விட குறைவாக பத்திர பதிவு செய்ய முடியும் என்ற கேள்விகள் எழுகின்றன. இதைப் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அஜய் பிரமல் அவரிடம் உள்ள பணத்தை எப்படி உபயோகிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் இருகிறாராம்.  எந்த ஒரு பெரிய வர்த்தக முதலீட்டிலும் தெளிவான வழிமுறைகள் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் அவருடைய ஹெல்த்கேர் நிறுவனத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் சுமார் $3.8 பில்லியன் விற்றிருக்கிறார். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி, அதை 53 -ஆல் பெருக்கி, இந்திய ரூபாயில் எவ்வளவு என்று கணக்கு போட்டு பாருங்கள்). அந்தப் பணத்தை வைத்து தன்னுடைய ரசாயன தொழிற்சாலை ஒன்றை பெரிது படுத்த விரும்புகிறார். ஆனால் அதை செயல்படுத்த கிட்டதட்ட ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டுமாம். இதை வேலையை சீனாவில் சுமார் இரண்டாண்டுகளில் செய்து விடலாம் என்று கூறுகிறார். எதுக்கு நம்ம ஊருலே மட்டும் ஐஞ்சு வருஷம் ஆகுது, ஒருவேளை இவர் சிவாஜி தி பாஸ் மாதிரி அந்த ப்ராஜெக்ட் வேல்யுலே ரெண்டு பெர்சென்ட் வளர்ச்சி நிதிக்கு கொடுக்க மாட்டேனு சொல்லி இருப்பாரோ ?


அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு பொருளை வாங்கிவிட்டு (உபயோகப்படுத்தியப் பின் கூட) நமக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த கடைக்கு சென்று திருப்பி கொடுத்து விடலாம். ஒரு கேள்வியும் கேட்க்காமல், வரிகள் உட்பட மொத்த பணத்தையும் உடனே திருப்பி கொடுத்துவிடுவார்கள்.  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் பரிசாக ஏதாவது பொருளைக் கொடுக்கும் போது, அந்தப் பொருளுக்கான கிப்ட் ரெசிப்ட் ஒன்றையும் கொடுத்துவிடுவார்கள். பரிசைப் பெற்ற நபருக்கு அந்தப் பொருள் பிடிக்கவில்லை என்றால் அதைத் திருப்பி கொடுத்துவிட்டு வேறு பொருளோ அல்லது அதற்கு சமமான தொகையை கிப்ட் கார்டு ஆகவோ வாங்கிகொள்ளலாம். பொதுவாக மக்கள் யாரும் இந்தச் சலுகையை தவறாக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.  இந்த முறை கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவில் அதிகமான மக்கள் தங்களுக்கு வந்த பரிசுப் பொருட்களை ரிடர்ன் செய்திருகிறார்கள். மந்தமான பொருளாதாரமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.


அறிவியல் பிட்ஸ்: 

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்று நமக்குத் தெரியும். பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்று உங்களைக் யாரவது கேட்டால், இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நினைத்துகொண்டு 24 மணி நேரம் என்று சொல்வீர்கள் தானே. ஆனால் உண்மையில் பூமி தன் அச்சில் ஒருமுறை சுழல இருபத்தி மூன்று மணி, 56 நிமிடங்கள், 4 வினாடிகள் தான் எடுத்துக் கொள்கிறது. இதை வானவியல் வல்லுனர்கள் 'Sidereal Day' என்கிறார்கள். அப்படி என்றால் மீதி நான்கு நிமிடங்கள் என்ன ஆகிறது என்ற கேள்வி எழும். பூமி தன் அச்சில் சுழலும் அதே நேரத்தில் சுமார் 1° முன்னோக்கி நகர்கிறது. இதை வேறு விதமாக சொல்லவேண்டும் என்றால் சூரியன் 1° பின்னோக்கி நகர்கிறது. சூரியனின் இந்த சிறு நகர்தல் மற்றும் பூமி தன் அச்சில் சுழலும் வேகத்தையும் கூட்டினால் வருவது தான் இருபத்தி நான்கு மணி நேரம். இதை 'Solar Days' என்கிறார்கள்.  இந்த விஷயம் மேலும் சிக்கலானது, இதை எளிமையாக புரிந்திகொள்ள மிகவும் சுருக்கமாக கூறி இருக்கிறேன். 
சினிப் பட்டறை:ஏழாம் அறிவு படம் பார்த்து, போதி தர்மரை பற்றி தெரிந்ததும் கொஞ்சம் பெருமையாக இருந்தது. இவரை எப்படி வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்யாமல் விட்டார்கள். நம்ம கார்டூனிஸ்ட் மதன் கூட 'வந்தார்கள் வென்றார்கள்' போன்ற வரலாற்று புத்தகத்தில் இதை சொல்லாம விட்டுட்டாரே என்று நினைத்துகொண்டேன். அதன் பிறகு இணையத்தில் தேடிப் பார்த்ததில், போதி தர்மர் பாரசீகத்தில் இருந்து வந்தவர், புத்த மதத்தை சார்த்தவர் அல்லது பல்லவ மன்னனாகவும் இருக்கலாம் என்பது விக்கிபீடியா கூறுகிறது. அதைத் தவிர அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை மேலும் கடல் வழியாக சீனாவை அடைந்தார் என்றும் கூறுகிறது. போதி தர்மரைப் பற்றி சரியான விவரம் எது என்று தெரியவில்லை. சரி சினிமாவைப் பொறுத்தவரை உண்மைகள் நிகழ்வுகளை கற்பனை கலந்து மாற்ற ஒரு இயக்குனருக்கு க்ரியேடிவிடி என்ற பேரில் உரிமை இருக்கிறது.  ஆனால் படம் ஆரம்பிக்கும் போது ஊரில் ஒரு தமிழனுக்கும் போதி தர்மனை பற்றி தெரியவில்லை, ஆனால் சீனாக்காரன், ஜப்பான்காரன் எல்லாருக்கும் தெரியுது என்பது போல தன் கோபத்தை இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் பதிவு செய்திருக்கிறார். முருகதாஸ் அண்ணே, எங்களுக்கு தான் இவ்வளவு நாள் போதி தர்மரைப் பத்தி தெரியாம போச்சு, உங்களுக்குக்கும் இப்போ தானே தெரிஞ்சிருக்கு. உங்களுக்கு போதி தர்மரைப் பற்றி எப்படி தெரிந்தது என்பதிலேயே பல சர்ச்சைகள் ஓடிகிட்டு இருக்கு. சரி அப்படியே, உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு தமிழனா இந்தப் படத்தை தானே உங்க முதல் படமா எடுத்திருக்கணும், அதுவும் இல்லாம நீங்க, இந்தப் படத்திலே தெலுங்கிலே போதி தர்மர் குண்டூர்லே பிறந்ததாகவும், ஹிந்திலே தாரவிலே பிறந்தாதகவும் சொல்லி இருக்கீங்கனு கேள்விப்பட்டேன். அவர் தமிழ் நாட்டிலே காஞ்சிபுரத்திலே பிறந்தவர் என்று மற்ற மொழிகளிலும் சொல்லி இருக்கலாமே. என்ன இருந்தாலும் நீங்க உண்மையான தமிழண்ணே, உங்க வியாபாரத்திலே சரியா இருப்பீங்க. கஜினி படத்தின் கதையையே சுயமா யோசிச்சு நீங்களே எழுதுனது போல பேட்டி கொடுத்த ஆளு தானே நீங்க. அதை பார்க்கும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.  சரி படத்தில் எது எப்படி இருந்தாலும் சூரியாவின் உழைப்பிற்கு ஒரு சல்யுட் அடித்தே ஆகவேண்டும்.

ஒருமுறை சுஜாதா அவர்களிடம் வெற்றிப் படத்திற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு அவர், அது ஒரு 'தங்க விதி'. இத்தனை வருடம் சினிமா இன்டஸ்டிரியில் இருக்கிறேன் இன்னும் எனக்கு புரியவில்லை என்றாராம். மக்களிடம் எது வெற்றி பெரும் என்பது யாருக்கும் தெரியாது. கொலைவெறி பாடலும் அதைப் போலதான். இவ்வளவு பெரிய வரவேற்ப்பை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வெற்றியால் தனுஷிற்கு, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்திருகிறது (ஹ்ம்ம், என்னத்தை சொல்ல) என்பதை பார்க்கும் போது 'தங்க விதி' இருக்கிறது என்பது நிரூபிக்கப் பட்டிருகிறது.

கருத்து கந்தசாமி: 

வார்த்தைகளும் தண்ணீர் போலதான், சுலபமாகக் கொட்டிவிடலாம் திரும்ப அல்ல முடியாது.

ரசித்த வீடியோ:


இதை பலர் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தினமும் நடக்கும் அணிவகுப்பு. இந்த அணிவகுப்பில் உள்ள ராணுவ வீரர்களை மிகுந்த கவனத்துடன்,  முக அமைப்பு மற்றும்  மீசை போன்றவற்றை பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்களாம். இவர்கள் காலை உயர்த்தி அடிக்கும் வீச்சினால் பிற்காலத்தில் அவர்கள் கால்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதால் இப்போது கொஞ்சம் வீச்சின் வேகத்தை குறைத்து இருக்கிறார்களாம்.

Friday, December 9, 2011

கண்டிப்பா சிரிப்பீங்க....
இதை ஆங்கிலம் தெரியாதவர்களை கேலி செய்வதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சும்மா ஒரு நகைச்சுவைக்காக...


Wednesday, December 7, 2011

கூட்டாஞ்சோறு - Dec 07, 2011

நாட்டு நடப்பு:

அமெரிக்காவில் உயிர் காக்கும் அவசர உதவி தேவை என்றால் 9-1-1 என்ற நம்பருக்கு போன் செய்தால் போதும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை, போலிஸ் என தேவைப்படும் உதவிக்கு ஏற்ப அனைத்தும் சில நிமிடங்களில் வந்து நிற்கும். போன் செய்து பேசவேண்டும் என்று கூட அவசியம் இல்லை, அந்த நம்பரை அழுத்தி விட்டு போனை வைத்து விட்டால் கூட போதும், சில நிமிடங்களில் இவர்கள் வந்து நம் வீட்டு வாசலில் நிற்பார்கள். ஆனால் சமீபத்தில் படித்த செய்தி ஒன்றை என்னால் நம்பவே முடியவில்லை. அது டென்நெஸ்ஸே (Tennessee) மாகாணத்தில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரியும் போதும் - அந்த வீட்டின் உரியமையாளர்கள் அருகில் இருக்கும் போதே, அங்குள்ள உள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் பார்த்துகொண்டு சும்மா இருந்தார்களாம். ஏனென்றால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு செலுத்த வேண்டிய வருடந்திர கட்டணம் $75 -ஐ செலுத்தவில்லையாம். இதை நம்பவே முடியவில்லை.  அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு தான் உண்மையான விவரம் தெரிந்து இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் போட்டியை டிவியில் பார்த்தேன். இதில் பங்கேற்கும் குழந்தைகளின் திறமை பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். இது போன்ற குழந்தைகள் பங்கேற்று பாட்டு, காமெடி, மிமிக்ரி போன்றவைகளை செய்யும் போது ஒரு பல நேரங்களில் நன்றாக இருந்தாலும், சில சமயம் அவர்களின் வயதிற்கு மீறிய பேச்சு/பாடல் மகா எரிச்சலை ஏற்படுத்துகிறது. திண்டுகல்லு, திண்டுகல்லு பெரிய பூட்டு...என்று தொடங்கும் மோசமான இரட்டை அர்த்தப் பாடலை ஒரு ஏழு வயது குழந்தை பாடுவதைப் பார்த்து எப்படித் தான் அதன் பெற்றோர்கள் வாயெல்லாம் சிரிப்புடன் பூரித்துப் போகிறார்களோ தெரியவில்லை. இது கூட பரவாயில்லை, அதற்கு ஜட்ஜஸ் கொடுக்கும் கமெண்ட், நல்லா பாடி இருக்கே...ஆனாலும், இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி பாடணும் என்பது தான். இந்த மாதிரி பாட்டை எப்படி சின்னக் குழந்தையால் பீல் பண்ணி பாட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. இதைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்றால், ஓன்று இவர்கள் பாடலின் வரிகளில் எல்லாம் கவனம் செலுத்துவது கிடையாது, இல்லை இதைப் போல பாடல்களைக் கேட்டு கேட்டு அதில் என்ன தவறு இருக்கிறது என்பதையே உணர முடியாத நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பைத் தவிர மற்ற கலைகள் கற்றுத் தேர்வதில் எந்தத் தவறும் இல்லை. போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியையும் தோல்வியையும் சந்திப்பதிலும் தவறு இல்லை. ஆனால் பங்கேற்கும் குழந்தைகள் வயதிற்கு ஏற்ப தரமான பாடல்களை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

அறிவியல் பிட்ஸ்:

நிலவை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:

  • சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியக் குடும்பம் தோன்றிய காலகட்டத்தில், பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவுள்ள ஒரு பாறை மோதியதால் உருவானது நிலவு.
  • முதலில் தோன்றியபோது நிலவு பூமிக்கு மிக அருகில் இருந்தது. அப்போது, பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை விட பல மடங்கு பெரிதாக தோன்றி இருக்கும்.
  • நிலவு வருடந்தோறும் பூமியை விட்டு 3.8 சென்டி மீட்டர்கள் விலகிச்சென்று கொண்டு இருக்கிறது. இது இப்படியே தொடரும் போது, ஒரு கட்டத்தில் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து முழுவதும் விலகிச் சென்றுவிடும்.
  • நிலவு பூமியை மணிக்கு 3683 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது.
  • பூமி தன் அச்சில் சுழலும் வேகமும், நிலவு தன் அச்சில் சுழலும் வேகமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதால், பூமியில் இருந்து நம்மால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.
  • நிலவில் பிரதிபலிக்கும் ஒளி பூமியை வந்தடைய 1.3 வினாடிகள் ஆகும். (சூரிய ஒளி பூமிய வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும்)
  • நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைப் போல 1/6 பங்கு தான். உங்கள் எடை பூமியில் 75 கிலோ என்றால், நிலவில் 12.5 கிலோ மட்டுமே இருக்கும். இந்தக் குறைந்த ஈர்ப்பு விசை காரணமாக நிலவில் வலுவான வளிமண்டலம் கிடையாது.
  • பூமியின் மீது உள்ள நிலவின் ஈர்ப்பு விசை, பூமி ஒரே அச்சில் நிலையாக சுழல உதவுகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமியின் சுழலும் அச்சு சுமார் 90 டிகிரி வரை மாறக்கூடும். அப்படி மாறினால் பூமியில் சீதோசன நிலையில் பலத்த மாறுதல்கள் ஏற்படக்கூடும்.
  • நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழலும் வேகம் மட்டுபடுத்தப் படுகிறது. நிலவு இல்லாவிட்டால் பூமி மேலும் வேகமாகச் சுழலக்கூடும். எவ்வளவு வேகம் என்றால், நம்முடைய ஒரு நாள் 6 மணி நேரமே என்ற அளவிற்கு குறைந்துவிடும். அப்படி பூமி வேகமாக சுழலும் பட்சத்தில் நீடித்த வலுவான காற்று, தாவரங்களின் வளர்ச்சி, தூக்கம் போன்ற பல விஷயங்களில் மாறுதல்கள் ஏற்படும்.

சினிப் பட்டறை:


எந்திரன் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கம் நண்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் ஒரு பாடல் காட்சியில் எந்திரன் ரோபோ கெட்டப்பிலும், இந்தியன் தாத்தா கெட்டப்பிலும் தோன்றுகிறாராம். ரஜினி மற்றும் கமலுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக ஒரு பாடல் காட்சியில் எடுத்திருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ், டிசம்பர் 14 அன்று நடக்கவிருக்கிறது. விஜயுடன் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாக படத்தில் வேலை செய்தவர்கள் கூறி இருகிறார்களாம். ஒரு சில நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கனேவே கேட்ட மாதிரி இருக்கே என்று தோன்ற வைக்கும். இதில் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அடுத்தது இந்தக் கொலைவெறிப் பாடல். பதினெட்டு லட்சம் ஹிட், அன்பரசன் முதல் அமிதாபச்சன் வரை பாராட்டுகிறார்கள்...ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். அது ஏன் என்று தான் புரியவில்லை. ஒரு பாட்டை ஓன்று அதன் இசைக்காக ரசிக்கலாம் அல்லது பாடல் வரிகளுக்காக ரசிக்கலாம். அது வேகமான இசையோ அல்லது மிதமான மெலடி என்று எதுவானாலும் ரசிக்கலாம். உதாரணத்திற்கு, சிம்புவின் 'எவண்டி உன்னை பெத்தான்' பாடல் வரிகள் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்தப் பாட்டில் உள்ள இசையின் வேகம் பிடித்திருந்தது. (நான் சிம்புவின் ரசிகன் இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயவைத் தவிர சிம்புவின் எந்தப் படத்தையும் நான் ரசித்ததில்லை). அப்படி இசை பெரிதாக பேசும்படி இல்லாவிட்டால் கூட அதன் வரிகளுக்காக ரசிக்கலாம். உதாரணம் 'அவள் அப்படிதான்' படத்தில் வரும் 'உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை' பாடல். இந்தப் பாடலின் வீடியோ இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன். ஆனால் இவை இரண்டுமே இல்லாததாக எனக்குத் தோன்றும் கொலைவெறிப் பாட்டை ஊரே ஏன் ரசிக்கிறது என்று புரியவில்லை. இதைதான் ஜெனரேஷன் கேப் என்று கூறுகிறார்களோ என்று தெரியவில்லை. இன்னும் இதே மாதிரி எத்தனை பாட்டு வரப்போகிறதோ. என்னை மாதிரி உங்களில் யாருக்காவது கொலைவெறி பாட்டு பிடிக்காவிட்டால் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா,  மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.கருத்து கந்தசாமி:

நண்பர்கள் கண்ணாடியைப் போன்றவர்கள், உங்களைத் தான் அவர்கள் பிரதிபலிப்பார்கள்.

ரசித்த வீடியோ:

Sunday, December 4, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #3

பிரபஞ்சப் புதிர்கள் இரண்டாம் பாகத்தில் நியூட்டன் வகுத்த விதிகளைப் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். 

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விவாதங்கள் எப்போதும் நடந்துகொண்டிருகிறது. பலர் கடவுள் படைத்தது என்று நம்புகின்றனர். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் ஒரு பெரும் வெடிப்பின் காரணமாகத் தோன்றியது என்று நம்புகின்றனர். பெருவெடிப்பு என்று கூறுவதை விட பெரும் விரிவு என்று கூறிவது சரியாக இருக்கும். ஒரு பலூனை ஊதினால் எப்படி விரிவடைகிறதோ அதைப் போல இந்தப் பிரபஞ்சமும் விரிவடைந்துக் கொண்டிருகிறது. இனி பெருவெடிப்புக் கொள்கை என்றால் என்ன என்று பார்ப்போம்.
பிரபஞ்சம் விரிந்துகொண்டே போகிறது என்று வானவியல் வல்லுனர்கள் உணர்ந்தபோது, அதற்கு முன்பு அது சிறியதாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தனர். பல வானவியல் வல்லுனர்கள் பெருவெடிப்பு சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது என்று கருதுகிறார்கள். சுமார் பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தப் பிரபஞ்சமே ஒரு குண்டூசியின் நுனி அளவை விட பல ஆயிரம் மடங்கு சிறிதாக இருந்திருக்கிறது. இது ஒருவித ஒருமை நிலை (ஆங்கிலத்தில் Singularity என்கிறார்கள்). இந்த நிலை ஏன் வந்தது, எப்படி வந்தது என்பதற்கு சரியான பதில் இல்லை என்பது தான் உண்மை. இந்த நிலையில் பிரபஞ்சம், நாம் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு வெப்பமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. ஏதோ ஒரு காரணத்தினால் அது திடீர் என்று விரிவடையத் தொடங்கியிருகிறது. அந்த கணத்தில் தான் நம் பிரபஞ்சத்தின் பிறப்பு நிகழ்ந்தது. காலம், வெளி, பொருள் (matter) போன்றவைகள் பிறந்திருக்கிறது. பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஏதோ ஓன்று வெடித்து அதனால் பல பொருட்கள் விண்வெளியில் பறந்து சென்றதாக கருத்தில் கொள்ளக் கூடாது. பெருவெடிப்பிற்க்கு முன்னர் வெளி (space) என்பதே கிடையாது. அதற்கு முன்னாள் காலமும் (time) கிடையாது, ஆம் காலம் பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கிய போது தான் உருவானது. இந்தப் விரிவடைதல் தொடங்கி சில வினாடிகளில் பிரபஞ்சம் ஒரு நட்சத்திர மண்டலத்தின் அளவிற்கு விரிவடைந்து விட்டது. இப்படி விரிவடைதல் தொடர்ந்து கொண்டு அதே நேரத்தில் குளிரவும் தொடங்கியது. அந்தக் குளிர்ச்சி தான் நாம் வாழும் இந்த பூமி, நம் சூரிய மண்டலம், நம்மை சுற்றி அண்டவெளியில் உள்ள வாயுக்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்கள் போன்றவை உருவாகக் காரணம்.
சரி பெருவெடிப்புக் கொள்கை கேட்பதற்கு பரபரப்பாகத் தான் இருக்கிறது. இது உண்மையா, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கருதப்படும் இந்த பெருவெடிப்பு உணமையிலேயே நிகழ்ந்ததா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு நிகழ்ந்திருந்தாலும் அது மூன்று பெரிய தடயங்களை கொடுத்திருகிறது. 

முதல் தடயம், முக்கியமான தடயம். அது என்னவென்றால் பிரபஞ்சத்தின் இயக்கம் (motion). அதாவது பிரபஞ்சம் விரிந்துகொண்டே செல்லும் நிலை. பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்களின் வெளிப்படும் ஒளியை வைத்து அவை நம்மை விட்டு விலகிச் செல்கின்றன என்று வானவியல் வல்லுனர்களால் கூறமுடிகிறது. இந்த ஒளி விலகிச் செல்லும் விஷயத்தைப் பற்றி பின்னர் விவரமாக பார்க்கலாம்.

இரண்டாவது தடயம், பிரபஞ்சத்தில் அதிக அளவில் உள்ள ஹீலியம் தனிமம். பெருவெடிப்பை பொறுத்தவரை முதலில் தோன்றிய பொருட்கள் ஹீலியம் தனிமமும், ஹைட்ரஜன் வாயுவும் கொண்டதாக இருந்தன. ஒவ்வொரு ஹீலியம் அணுக்கும், பன்னிரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தன. பின்னர் 1995 -ல்  சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தொலை நோக்கி மூலமாக நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே உள்ள வாயுக்களை சோதித்தபோது சரியாக ஒவ்வொரு ஹீலியம் அணுக்கும், பன்னிரெண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தன. 

மூன்றாவது தடயம், பிரபஞ்சத்தில் உள்ள பின்னணி கதிர்வீச்சு (background radiation). பிரபஞ்சம் பிறந்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு நாளடைவில் குளிர்ந்து வெகுவாக குறைந்து இருந்தாலும், இன்றளவிலும் அந்த கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் உள்ளது. அறிவியல் உபகரணங்கள் மூலமாக விஞ்ஞானிகள் அதை உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.  வானவியல் அறிவியலைப் பொறுத்தவரை, மற்ற அறிவியல் துறைகளைப் போல சோதனைச் சாலைக்கு கொண்டுவந்து எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது. நம் பிரபஞ்சத்தின் உள்ள தடயங்களின் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக வருகிறது என்ற ரீதியில் தான் பல விஷயங்கள் நிரூபிக்க முடிகிறது. ஆனாலும் அறிவியல் வளர்ச்சியின் மூலமாக இன்று நிறைய விஷயங்கள் உறுதியாக நிரூபிக்கும் நிலைக்கு வளர்த்திருக்கிறது.

சரி இப்போது தொலைதூர நட்சத்திர மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஒளி நம்மை விட்டு விலகிச்செல்லும் விஷயத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளியை நிறமாலை மூலமாக சிவப்பில் இருந்து ஊதாவரை வேறு வேறு நிறங்களில் பிரிக்க முடியும். ஒளி நகரும் போது அலைகளாக பல்வேறு நிறங்களில் நகர்கிறது.  ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அலையளவு (wavelength) இருக்கிறது. சிவப்பு நிறத்தின் அலையளவு நீளமானதாகவும், ஊதா நிறத்தின் அலையளவு நீளம் குறைந்ததாகவும் இருக்கிறது. தொலைதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் ஒளியளைகளை நிறமாலையைக் கொண்டு சோதிக்கும் போது அவை சிவப்பு நிறத்தை நோக்கி நகர்கிறது. இதற்கு காரணம் அந்த நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிசெல்வதால் தான். நட்சத்திர மண்டலங்கள் நம்மை விட்டு விலகிச்செல்லும் வேகம் அவற்றின் தூரத்தைப் பொருத்து அமைகிறது. அதாவது எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு வேகமாக நகர்ந்து செல்கின்றன. நீங்கள் இந்த வரிகளைப் படித்துகொண்டிருக்கும் நேரத்தில் தொலைதூர நட்சத்திர மண்டலங்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் நம்மைவிட்டு நகர்ந்து சென்றிருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரபஞ்சப் புதிர்கள் மூன்று பாகங்கள் வரை வந்த பிறகும் ஒரு முக்கியமான நபரை பற்றி இன்னும் நான் கூறவில்லை. அவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீன் பற்றியும் அவருடைய கொள்கைப் பற்றியும் விரிவாக அடுத்தப் பகுதியில் காணலாம்.

தொடரும்...

முந்தய பகுதிகள்:
பிரபஞ்சப் புதிர்கள் #1

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...