Monday, May 27, 2013

கமல்ஹாசன் என்ற தந்தைக்கு ஒரு சல்யுட்
சமீபத்தில் ஸ்ருதிஹாசனின் ஒரு பழைய பேட்டியை ஏதோ ஒரு இணையதளத்தில் பார்த்தேன். ஏழாம் அறிவு திரைப்படம் வந்த நேரத்தில் அந்தப் படத்தை பற்றி பேட்டி மற்றும் தொலைபேசியில் ரசிகர்கள்/ரசிகைகளுடன் பேசுவது போன்ற ஒரு நிகழ்ச்சி. சாதரணமாக இந்த மாதிரி போன் போட்டு நடிக நடிகைளிடம் பேசும் நிகழ்ச்சியை பார்த்தால் எனக்கு மகா எரிச்சல் வரும். ஆனால் ஏனோ இந்த நிகழ்ச்சியை அமைதியாக முழுவதும் பார்த்தேன். அதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தொலைபேசியில் பேசிய யாரும் உளறி கொட்டாமல், ரொம்பவும் வழியாமல் பேசினார்கள். இரண்டாவது காரணம் ஸ்ருதிஹாசனின் போலித்தனம் இல்லாத பேச்சு. ஆங்கங்கே ஆங்கிலம் கலந்து பேசினாலும், முடிந்த வரை நல்ல தமிழில் பேசினார். அந்தப் பெண்ணின் துளியும் கர்வம் இல்லாத பேசும் அழகும் என்னை வெகுவாக கவர்ந்தது. கமல்ஹாசன் என்கிற பெரிய நடிகரின் பெண் என்கிற பந்தா எந்த இடத்திலும் தெரியவில்லை. தொலைபேசியில் பேசியவர்களிடம் கூட மிகவும் தன்மையுடன் பேசியது மிகவும் அருமையாக இருந்தது. அந்தப் பேட்டியில் ஸ்ருதி கூறிய ஒரு வாக்கியம் தான் என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. அது என்னவென்றால், 'என்னை என் அப்பா, இதைதான் செய்யவேண்டும் என்று வற்புறுத்தவில்லை, நீ என்னவாக விரும்புகிறாயோ அந்தப் பாதையில் தாராளமாக செல், ஆனால் அதில் ஒரு எல்லை வைத்துக் கொள்ளாமல் முழு முயற்சியுடன் ஈடுபடு' என்பது தான். முதலில் கேட்பதற்கு சாதாரணமாகத் தான் தோன்றியது. பின்னால் யோசித்து பார்த்ததில் அப்படி ஒரு சுதந்திரத்தை பிள்ளைகளுக்கு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்ற கேள்வி எழாமல் போகவில்லை. நம் பிள்ளைகளை நாம் என்ன நினைகிறோமோ அதை செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். நீ என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறாயோ அதை தாராளமாக செய் என்று கூறும் தைரியம் நான் பார்த்த அளவில் பல பெற்றோர்களிடம் இருந்தது இல்லை. அதற்கு முக்கிய காரணம், எங்கே பிள்ளைகள் எடுக்கும் முடிவு தவறாக போய்விடுமோ என்பதுதான். சரி நாம் அவர்களுக்கு காட்டும் வழி மட்டும் சரியாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. பொதுவாக ஒரு துறையில் இருப்பவர்கள், ஓன்று தன் பிள்ளைகளை அந்தத் துறையிலேயே கொண்டு வர முயற்சிப்பார்கள் அல்லது இந்தக் கஷ்டம் என்னோடு போகட்டும் நீயாவது வேறே வேலை செய் என்று கூறு வேறு வழி காட்ட முயற்சிப்பார்கள். நடிகர்களுக்கு ஆண் பிள்ளை இருந்தால், அந்த குழந்தை பிறந்தது முதல் நடிகனாக வருவதற்கு தேவையான அனைத்தையும் கற்று கொடுத்து தலை கீழாக நின்றாவது அவர்களை ஒரு பெரிய ஹீரோவாக ஆக முயற்சி செய்த பலரை நாம் பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில் பெண் குழந்தைகளை நடிப்பு துறையில் நுழைக்காமல் இருக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். கமல்ஹாசன் நினைத்திருந்தால் ஒரு நீ ஒரு பெரிய நடிகையாதான் வர வேண்டும் என்றோ அல்லது நீ சினிமா பக்கமே வரகூடாது என்றோ தன் பிள்ளைக்கு அறிவுரை சொல்லி இருக்கலாம். ஆனால் உனக்கு பிடித்ததை செய் என்பதற்கு ஒரு தில் வேண்டும். கமலிடம் பணம் இருக்கிறது, அந்த துணிச்சலில் தன் பிள்ளை எப்படி போனாலும் பின்னால் பணத்தால் சரி செய்து விடலாம், நம்மால் அது முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். ஓன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டும், எவ்வளவு பணம் இருந்தாலும் தன் பிள்ளைகள் நல்ல வழியில் தன் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புவார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அத்தனை பணமும் கை விட்டு போய் விட வாய்பிருக்கிறது. கமல் கண்டிப்பாக அதை உணர்ந்தவர் என்பதை திடமாக நம்புகிறேன். பிள்ளைகள் அவர்கள் விரும்பிய துறையில் சென்று வெற்றி பெறும்போது அதை பார்க்கும் பெற்றோர்களுக்கு எவ்வளவு பெருமிதமாக இருக்கும். மற்றபடி ஸ்ருதிஹாசன் இப்படி நடிக்கிறார், சொந்த வாழ்க்கையில் அப்படி நடக்கிறார் என்று குறை கூறுவதை ஏனோ என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. வாழ்கையில் நேர்மையாக, தனக்கு பிடித்தமான ஒன்றை செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதுபோல ஒரு மகிழ்ச்சி வேறு எதில் இருக்க முடியும்.


Wednesday, May 22, 2013

லிவிங் டுகெதர் - கி.பி. 2405
கல்யாணமே பண்ணிக்காம ரேகா கூட சந்தோசமா தானேம்மா இருக்கேன்.

இதெல்லாம் ஒரு வாழக்கையாடா. எனக்கும் பேரன் பேத்தி வேணும்னு ஆசை இருக்காதா.

குழந்தை பெத்துக்க மட்டும் தான் முடியாது.  பார்க்க அழகா இருக்கா, சொல்றதை கேக்குறா. அது போதும்.

இதெல்லாம் சரியில்லை. மொதல்ல இதை எங்கயாவது தொலைச்சிட்டு ஒரு நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணிட்டு வா.

இதைக் கேட்டு அப்படியே சரிந்த ரேகாவை பிடித்து அவள் இடுப்பின் பின்புறம் இணைந்திருந்த ஒயரை இழுத்து எலெக்ட்ரிக் பாயிண்டில் சொருகினான்.


பின் குறிப்பு: கதையை முட்டி மோதி ஐம்பைதைந்து வார்த்தைகளில் முடித்து விட்டேன். சில நேரங்களில் வார்த்தைகளைச் சுருக்கி விஷயத்தை சொல்வதற்கு நிறைய நேரம் பிடிக்கிறது. சுஜாதா அவர்கள் எல்லாவற்றையும் வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கூறுவார். அது போல அங்கங்கே ஹிண்ட்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


Friday, May 17, 2013

NRI மாப்பிள்ளை

NRI மாப்பிள்ளை - 55 வார்த்தை சிறுகதை 
ராஜம், அடுத்த வாரம் பட்டிமன்றத்திலே, இந்தியாவை சப்போர்ட் பண்ணி பேசப்போறேன் என்றார் சண்முகம்.

நோ, நோ, நீங்க வெளிநாட்டை தான் சப்போர்ட் பண்ணனும். நாம ரெண்டு தலைமுறையா இங்கே இருக்கோம். நம்ம குழந்தைங்களும் இங்கேதான் படிச்சு நல்ல வேலைக்கு போயிட்டு இருக்காங்க.

நீ சொல்றா மாதிரினா...

ஒரு நிமிஷம், இந்தியா கால் அண்ணாகிட்டேயிருந்து...

ஆமாண்ணா, ரிஷி கல்யாண விஷயம் பேசத்தான் காலைலே கூப்பிட்டிருந்தேன். நம்ம ஊருலேயே, நல்ல பொண்ணா பாருண்ணா. பாக்கறதுக்கு லட்சணமா, படிச்சு இருந்தாப் போதும்...


Thursday, May 16, 2013

ப்ளீஸ்...இந்தப் பதிவை படிக்காதீங்க (கோபிநாத் பத்தி எதுவும் இல்லே)ப்ளீஸ்...இந்தப் பதிவை படிக்காதீங்க. இந்த மாதிரியே ஒரு தலைப்பு வெச்சு கோபிநாத் எழுதிய ஒரு புக் பல ஆயிரம் பிரதிகள் வித்து இருக்காம். மாங்கு மாங்குன்னு உக்காந்து எழுதுவதற்கெல்லாம் வராத ஆதரவு, கோபிநாத்தை பற்றி கொஞ்சமே கொஞ்சம் எழுதி தலைப்பில் மட்டும் கோபிநாத்தை போட்டதும் வந்த ஹிட்சை பார்த்து இப்படி ஒரு தலைப்பை வைக்கவில்லை என்ற உண்மையை கூறிக்கொள்கிறேன். மத்தபடி இதுக்கும் கோபிநாதுக்கும் எந்த சம்பதமும் கிடையாது ஹி...ஹி...

ஆரம்பிப்பதற்கு முன்னாடி இப்பவே சொல்லிடுறேன். இந்த பதிவுலே எந்த உருப்பிடியான விஷயமும் கிடையாது. ஆமா மத்த பதிவுகளில் மட்டும் என்னத்த உருப்புடியா எழுதிட்டே என நீங்க மைண்ட் வாய்சில் கேட்கறது எனக்கு புரியுது. உங்களுக்கு முக்கியமான வேலை எதாவது இருந்தா இன்னும் ஒரு ரெண்டு வரி மட்டும் படிச்சிட்டு,  போய் அந்த முக்கியமான வேலையைப் பாருங்க.  இப்ப இதைப் படிக்காம போகணும்னு நினைக்குறங்களுக்கு மட்டும் ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன். நீங்க தாராளமா இந்த பேஜை க்ளோஸ் பண்ணிட்டு போகலாம். ஹலோ ஹலோ, எங்கே போறீங்க. வந்தது தான் வந்துடீங்க ஒரு ஐஞ்சு நிமிஷம் பொறுமையா படிச்சுட்டு போங்க ப்ளீஸ். அது தானே ஒலக நியாயம்.  சரி இனி என்ன சொல்ல வரேன்னு பாக்கலாம்.

சில நேரங்களில் யாராவது நம்மை கடுப்பேற்றுகிற மாதிரி கேள்வி கேட்பார்கள் அல்லது நடந்துக்கொள்வார்கள். ஆனால் நாகரீகம் கருதி நாம் சொல்ல நினைப்பதை சொல்லாமல் வேறு எதையாவது பேசி எஸ்கேப் ஆவோம். அப்பிடிப்பட்ட புண்ணியவான்களைப் பற்றிதான் இங்கு உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். இதெல்லாம் சொல்ற நம்மளும் ஞானி இல்லை, இந்த லிஸ்ட் நமக்கும் பொருந்தும் என்ற உண்மை சுட்டாலும் கூட நாம நினைப்பதை நாலு பேருக்கிட்டே சொல்றது தானே நியாயம். இதோ உண்மையிலேயே விஷயத்திற்கு வந்துட்டேன்.

ஒரு விஷயத்தை செய்வதற்கான எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியில் வந்து நம்மிடம் இதை செய்யலாம்னு இருக்கேன், ஏதும் பிரச்சனை வராது இல்லை என்று சிலர் கேட்பார்கள். கவுண்டமணி சூரியன் படத்தில் சொல்வது போல 'நாம என்ன வக்கீலா கோர்ட்டா', இதுக்கெல்லாம் தீர்ப்பு சொல்வதற்கு என்று மனதிற்குள் தோன்றினாலும், அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை என்று சொல்லிவிடுவேன். அந்த பதிலைத் தான் அவர்களும் எதிர்பார்பார்கள். இவர்களிடம் அதெல்லாம் வேண்டாம், உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறினாலும் அதை அவர்கள் கேட்கப்போவது இல்லை. அப்புறம் ஏன் மெனக்கெட்டு நம்ம அட்வைஸ் பண்ணனும். 

அதே மாதிரி, சப்போஸ் நாம் எடுத்து செய்த ஒரு விஷயம் ஓன்று சரியா ஒர்க்கவுட்ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே நான் அப்பவே சொன்னேன் நியாபகம் இருக்கா, இது சரியா வராதுன்னு என்று நீட்டி முழக்குபவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவு ஸ்டிராங்கா எல்லாம் சொல்லி இருந்ததா நமக்கு நினைவே இருக்காது. அப்படி கண்டிப்பா சரியா வராதுன்னு நினைசிருந்தாங்க என்றால் உடனே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டியது தானே. ஒன்னு நாம அதை பண்ணி இருக்க மாட்டோம், அப்பிடியே பண்ணி இருந்தாலும் இவர் தடுத்தார் அதையும் மீறி செய்தோம் என்பது கண்டிப்பா நினைவில் இருக்கும். இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் என்ன பாஸ் பண்றது ?

இன்னொரு டைப் ஆளுங்க. நீங்க எல்லாம் பெரிய ஆளு, எங்க கிட்டே எல்லாம் பேச மாட்டீங்க ஒரு போன் கூட கிடையாது என்று கூறுபவர்கள். அதை நம்ம கிட்டே கூட நேர்லே சொன்னா பரவால்லே, வேற யார் கிட்டே சொன்னா அந்த விஷயம் நாம காதுக்கு வரும்னு நினைகிறாங்களோ அவங்க கிட்டே சொல்றது. அப்படி யார் கிட்டே சொன்னாங்களோ அந்த ஆளும் அடிக்கடி நம்ம கிட்டே பேசி வெக்குற ஆளு கிடையாது. ஆனா இந்த மாதிரி பத்த வெக்குற விஷயம் என்றால் தான் உடனே சந்திர மண்டலமா இருந்தாலும் போனை போடுவாங்களே. நான் சும்மாவே ரொம்ப பேச மாட்டேன். இந்த காதலுக்கு மரியாதையை படத்துல ஹலோ, ஹலோ -ன்னு சார்லியும், விஜயும் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து ஷாலினி கிட்டே சொல்வாங்களே, கிட்ட தட்ட அவங்களை மாதிரி தான் நான். புதுசா யாரவாது நேர்ல உட்கார்ந்தா என்ன பேசறதுன்னு தெரியாம முழி பிதிங்கிடும். அதுவும் போன்லே பேசுறதுனா நல்ல இருகீங்களான்னு கேட்பதை தவிர அடுத்தது என்ன பேசணும்னு தோணாது. என்னோட தாட் ப்ரோசெச்ஸ் ரொம்ப ஸ்லோ. யாரவது பொறி வெச்சு பேசினாக் கூட, உக்காந்து மெதுவா யோசிச்சா தான் ஓரளவுக்கு என்ன சொல்றாங்கன்னு புரியும். அட இதுக்கு ஏன் சுத்தி வளைச்சிட்டு, சிம்ப்ளா தமிழிலே டுயுப் லைட்டுன்னு சொல்லேன்னு சொல்றீங்களா. இப்ப என்ன என்ன சொல்ல வரேன்னா, எதுவும் மேட்டர் இல்லாம சும்மா ஒரு அரைமணி நேரம் நம்மளால ரம்பம் போட முடியாது. (மேட்டர் இல்லாம எழுதுவது வேறு விஷயம்) அதே நேரத்துல எதோ ஒரு முக்கிய காரணத்திற்க்காக பேசணும்னு இருந்தா, என் கோபம் ஈகோ எல்லாத்தையும் கழட்டி வெச்சிட்டு வருஷக் கணக்கா பேசாதவங்க கிட்டே கூட போனை போட்டு பேசுவேன். என்னவோடா மாதவா, உன்னை உன்னாலேயே புரிஞ்சிக்க முடியலியே என்று அப்புறமா உட்கார்ந்து சிலாகித்த நேரங்கள் அதிகம்.

இன்னொரு டைப் ஆளுங்க இருக்காங்க. இவங்க வஞ்சப் புகழ்ச்சி அணியில் பெரிய ஆளுங்க. வஞ்சப் புகழ்ச்சி அணி என்றால் தெரியாதவர்களுக்காக அடுத்த இரு வரிகள். ஒன்றை புகழ்வது போல் பழித்தல், ஒன்ற பழிப்பது போல் புகழ்தல். இதை முதலில் ஆரம்பித்து வைத்தது ஓவையார் அவர்கள் என்று நினைக்கிறேன்.  அதியமான் பத்தி இன்னொரு மன்னர் கிட்டே சொன்னாங்கனு நினைக்கிறேன். அந்த மன்னன் பெயர் சரியா ஞாபகம் இல்லை. மேலும், இந்த டைப் ஆளுங்க பற்றி நான் உதராணம் குடுத்தா நல்லா மாட்டிப்பேன் என்பதால் அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இதெல்லாம் விட வேற ஒரு டைப் ஆளுங்க இருக்காங்க. திடீர்னு மாசக் கணக்குல பதிவு எதுவும் எழுத மாட்டாங்க. திடீர்னு ஒரு நாள் எழுத ஆரம்பித்த பின்னாடி, பதிவு எழுதுறேன்னு சொல்லிட்டு கண்ணா பிண்ணான்னு எதையாவது எழுதிட்டு இருப்பானுங்க. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னு தெரியலே. உங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமான டைப் ஆளுங்க தெரிஞ்ச சொல்லுங்க, இல்லாட்டி வேற எதவாது சொல்லலும்னாலும் சொல்லிட்டு போங்க.

Wednesday, May 15, 2013

நீயா நானா கோபிநாத்தும் நானும்பாஸ்டனில் உள்ள நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் நடத்திய நீயா நானா கோபிநாத்தின் விவாத மேடையில் சென்ற வாரம் கலந்து கொண்டேன். வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா அல்லது இழந்தது அதிகமா என்ற தலைப்பில் விவாதம். முதலில் தலைப்பை கேட்டவுடன் எனக்குள் இருந்த தத்துவஞானி விழித்துகொண்டார். ஒன்றை இழந்தால் தானே மற்றொன்றை பெற முடியும். இதில் பெரிது சிறிது என்று எப்படி பார்க்க முடியும். சூழ்நிலையைப் பொருத்து பெரிது சிறிது என்பது மாறுபடுமே. குளிர் அடிக்கும் ஊரில் வெயில் வந்தால் பெரிது, வெயில் அடிக்கும் ஊரில் குளிர் வந்தால் பெரிது. இப்படி இருக்கும்போது எதைப் பெற்றோம் எதை இழந்தோம் என்று எப்படி முடிவு செய்வது என்று கண்ணா பின்னவென்று பிதற்றிகொண்டிருந்தேன்.

பொதுவாக இது போன்ற மேடையில் பேசுகின்ற விஷயம் என்றால் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓடிவிடுவேன். எவ்வளவுதான் அட்டகாசமாக தயார் படுத்தி இருந்தாலும் சில நேரங்களில பேசும் போது நாக்கு மேலன்னதில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் இது போன்ற விவாத நிகழ்ச்சிகளில் பேச்சு எந்த திசையில் போகும் என்றே தெரியாத போது மேலும் சிரமம். இதையெல்லாம் யோசித்து இந்த விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நினைத்திருந்தேன். இதை எங்க வீட்டம்மாவிடம் சொன்னதும், என்னங்க இப்படி சொல்றீங்க ? தமிழ் சங்க நிகழ்ச்சி வேற...நீங்க கலந்துக்க வேண்டாமா என்று கேட்டது வேறு மனதை நிரடிகொண்டே இருந்தது. சரி என்ன பெருசா...ஒரு கை பாத்துருவோம் என்று மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச பெயரை கொடுத்தேன். பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு...ரங்கூன் என் உயிரை வளர்த்தது, உயர்ந்தவனாக்கியது என்ற பராசக்தி சிவாஜி வசனம் மனதில் மின்னல் போல் வெட்டி வெட்டி சென்றதால், பாசிடிவாக 'பெற்றது தான் அதிகம்' என்று பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தமிழ் சங்க வெப்சைட்டில் ரெஜிஸ்டர் செய்யும் போது எந்தப்பக்கம் பேசப் போகிறோம் என்று குறிப்பிட முடியவில்லை. சரி பின்னாடி யாராவாது நம்மை தொடர்பு கொண்டு கேட்பார்கள் என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன். சில நாட்களில் தமிழ் சங்கத்தில் இருந்து ஒரு ஈமெயில் வந்தது. நீங்கள் விவாத மேடையில் கலந்து கொண்டு  'இழந்தது அதிகம்' என்ற பக்கத்தில் பேசப்போகிறீர்கள் என்று அதில் கூறியிருந்தார்கள். என்னடா இது வம்பா போச்சு, நான் இதை செலக்ட் செய்யவில்லையே என்று எனக்குள் சில நாட்கள் புலம்பிகொண்டிருந்தேன். சரி, பெற்றது அதிகம் பக்கம் பேச நிறைய பேர் இருக்காங்க போல இருக்கு, அதான் நம்மள இந்தப் பக்கம் போட்டு இருக்காங்க என்று ஒரு வழியா சமாதானம் ஆகி எதையெல்லாம் இழந்தோம் என்று இழந்தது அதிகம் பக்கம் பேச தயார் ஆக ஆரம்பித்துவிட்டேன். அந்த நேரத்தில், செம்பருத்தி படத்தில் ராதாரவி கூறும், 'நரம்பில்லாத நாக்கு மொதலாளி, எப்படி வேணும்னாலும் பேசும்' என்கிற டயலாக் அடிக்கடி நினைவிற்கு வந்தது. அந்த படம் வந்த புதிதில் என்னடா இது, நாக்குல அவ்ளோ நரம்பு இருக்குனு சொல்றாங்க, இந்த ஆளு நரம்பில்லாத நாக்குன்னு சொல்றாரே என்று நினைத்ததுண்டு. அதன் பின்னர் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்னர், தமிழ் சங்கத்தில் இருந்து இன்னொரு ஈமெயில் வந்தது. அதில் என்ன விஷயம்னா, ஐயா மகாஜனங்களே, உங்களில் நிறைய பேருக்கு நாங்களே எந்த பக்கம் பேசுறீங்கன்னு முடிவெடுத்து அனுப்பி இருந்தோம். இப்ப உங்களுக்கு அந்தப் பக்கம் பேச விருப்பம் இல்லை என்றால் மாற்றிகொள்ளலாம் என்று கூறி இருந்தார்கள். இதைப் பார்த்ததும் அடப் போங்கையா இதுக்கு மேல என்னால கட்சி மாற முடியாது என்று 'இழந்தது அதிகம்' பக்கமே பேசலாம்னு விட்டுட்டேன். அதன் பின் சில நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ச்சியில் என்ன பேசலாம் என்று மனதில் அசைப் போட்டுகொண்டிருந்தேன். அடுத்த சில நாட்கள், பார்க்கும் சில நண்பர்களுக்கெல்லாம் விஷயம் தெரிந்து (உபயம் தங்கமணி) அவர்களும் நிகழ்ச்சியை பார்க்க வருவதாக கூறி டென்ஷனை அதிகப்படுத்தினார். 
நிகழ்ச்சி நாள். ஒரு சனிக்கிழமை மாலை. நிகழ்ச்சி மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிபதாக இருந்தது. நம்ம ஆளுங்க நடத்துகிற நிகழ்சிகள் எப்பவும் ஒரு அரைமணி நேரம் கழித்து தான் ஆரம்பிப்பார்கள். அதனால் நாங்கள் சரியாக மூன்று மணிக்கு சென்றோம். அரங்கத்திற்கு முன்னாள் ரெண்டு மூணு டேபிள் போட்டு பட்டு புடவையில் இந்திய் பெண்கள் தெரிந்தனர். அதில்  ஒருவரிடம் சென்று இந்த மாதிரி நிகழ்ச்சியில் பேசப் போறேன் என்று கூறினேன். அவரும் கையில் இருந்த ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து சரி பார்த்து ஒரு சின்ன சீட்டில் என் பெயர், மற்றும் மனைவி குழந்தைகளின் பெயர் எழுதிக் கொடுத்தார். அதைக் வைத்துகொண்டு என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை. அரங்கத்தின் நுழைவு வாசலில் இருந்த மற்றொரு பெண்ணிடம் கேட்டால், அவர் சலான் வாங்கிடீன்களா என்று கேட்டார். சலான்...சலான்...இதை எங்கேயோ கேட்டு இருக்கேனே...என்று சுஜாதா 'ஸ்ரீரங்கத்து கதைகளில்' சொல்வது போல என் அத்தனை நியுரான்களிலும் தேடினேன். ஆங்...ஞாபகம் வந்துருச்சு...சின்ன வயசிலே தி.நகர் துரைசாமி பிரிட்ஜ் கிட்டே இருக்கிற இந்தியன் பேங்க்லே கேட்டு இருக்கேன். முதன் முதலில் தனியாக பேங்க் போய் பணம் எடுக்கும் போது மிரண்டு போயிருக்கிறேன். யாரையாவது எப்படி என்று கேட்டால், அங்கே போய் சலான் போட்டுட்டு, கௌண்டர்லெ கொடு. அவங்க டோக்கன் கொடுப்பாங்க. அப்புறம் உன்னோட டோக்கன் நம்பர் அந்த டிஸ்ப்ளேலே வரும் போது, உடனே போய் கௌண்டர்லே கொடுத்தா பணம் தருவாங்க. அவங்க முன்னாடியே சரியாய் இருக்கானு எண்ணி பாத்துரு என்று ஸ்டெப் பை ஸ்டெப் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்து இன்னும் குழப்பி விடுவார்கள். ஒரு முறை எனக்கு முன்னால் இருந்த ஒரு பையன், தினமும் வந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு இருந்ததை காஷியர் திட்டிகொண்டிருப்பதை பார்த்து, நம்ம எதாவது தப்பா சலானில் எழுதி இருந்தால் அதற்கும் திட்டுவாரோ என்று பயந்திருக்கிறேன். இப்படி சலான் பற்றி ஒரு பிளாஷ் பேக் பளீரென்று வந்து போகவும், உடனடியாக என்னங்க சலானா...அது எங்கே வாங்கணும் என்று கேட்டேன். பின்னர் அவரே என் கையில் இருந்த பேப்பரை பார்த்து, நீங்க கையிலே வெச்சு இருக்கீங்களே, அது தான் சலான் என்று வயிற்றில் பாலை வார்த்தார். சலானை கொடுத்து டிக்கெட் வாங்கிகொண்டோம். ஏனோ இந்த ப்ராசஸ் கொஞ்சம் காம்ப்ளிகேட்டடாக (பழைய பேங்க் போல) தோன்றியது. அரங்கின் உள்ளே நுழைந்து சீட்டை தேடி அமர்ந்ததுமே, என் பெயரை மைக்கில் அழைத்து மேடைக்கு பின்புறம் வரச்சொன்னார்கள். என்ன இது இவ்வளவு அவசரமாக அழைக்கிறார்கள், கோபிநாத் அதற்குள் வந்துவிட்டாரா என்று அவரச அவசரமாக மேடைக்கு பின்புறம் ஓடினேன். அங்கு கோபிநாத் இல்லை. ஆனால் விவாதத்தில் கலந்துக்கொள்ளும் மற்றவர்கள் நின்று நின்றுகொண்டிருந்தனர். இரண்டு பக்கமும் நாற்காலிகளைப் போட்டு அதில் பங்கேற்ப்பவர்களின் பெயரை எழுதி ஒட்டி வைத்திருந்தனர். ஏனோ என் பெயர் வரிசையில் கடைசியில் இருந்தது. அதில் என்ன அரசியலோ என்று தோன்றியது. சிறிது நேரம் கழிந்து திரையை திறந்ததும் அனைவரும் அமர்ந்து கோபிநாத்தின் வருகைக்காக காத்திருந்தோம். ஒரு பதினைந்து நிமிடத்தில் மேடையின் ஓரத்தில் வந்த கோபிநாத் யாருடனோ பேசிகொண்டிருந்தார். அங்கு அவர் நின்றிருந்த இடம், மேடையில் ஒரு புறம் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். பார்வையாளர்களுக்கு தெரியாது. டிவியில் பார்த்ததை விட கொஞ்சம் பருமன் குறைவாகவே தோற்றம் அளித்தார். கோட் அணியாமல் இருந்தது தான் காரணமா என்று தெரியவில்லை. மைக்கை காதில் மாட்டிக்கொண்டு அவர் பெயரை அறிவபாளர் அறிவிப்பதற்காக காத்து நின்றிருந்தார். சிறிது நேரத்தில் கோபிநாத்தை அறிவிப்பாளர் அழைத்தவுடன் கூட,  ஏனோ கோபிநாத்  அமைதியாக நின்று கொண்டிருந்தார். என்னடா இவர் கூப்பிட்டதை கவனிக்கவில்லையா என்று தோன்றியது. அப்புறம் தான் அவர் ஒரு என்ட்ரி மியூசிக் போட்டதும் தான் நடந்து வருவார் என்று தெரிந்தது. நம்ம தமிழ் பட ஹீரோ அறிமுக காட்சியில் வரும் மியூசிக் போல ஒரு மியூசிக் போட்ட பின்னர், அவர் மேடையின் நடுவே வந்து நின்று பேச ஆரம்பித்தார். அவர் வந்து நின்றதுமே நம்ம மக்கள் கோபிநாத் கோட் எங்கே, கோட் எங்கே என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்.  தமிழன் எங்கே போனாலும் இந்த கேள்வியை கேக்காமல் விடமாட்டன், கோட்டை வேட்டுலே வெச்சு இருக்கேன் என்று கொஞ்சம் காமெடியா பேச்சை ஆரம்பித்தார். அவர் என்ன பேசினார், விவாதம் எப்படி சென்றது என்பதை எல்லாம் விளக்கி உங்களை போரடிக்க போவதில்லை. ஆனால் நிகழ்ச்சியை பற்றியும் கோபிநாத்தை பற்றியும் என் கருத்தை மட்டும் கூறுகிறேன். நிகழ்ச்சி நீயா நானா அளவிற்கு சுவாரசியமாக இல்லை. இரண்டு பக்கமும் சேர்த்து ஒரு இருபது பேர் தான் இருப்போம். ஆனால் அவர்கள் பெற்றது என்ன அல்லது இழந்தது என்ன என்று கூறுவதற்கு அனைவருக்கும் ஒரு நிமிடம் கூட அளிக்கவில்லை. ஒரு சிலரை மட்டும் கேட்டு விட்டு பின்னர், வேறு எதாவது விஷயத்திற்கு தாவி விடுகிறார். அதைத்தவிர ,ஏனோ தமிழ் சங்க கமிட்டியில் அவருக்கு இரண்டு நாட்கள் முன்னரே அறிமுகமானவர்களை நிறையை பேசி வைத்தாரோ என்று தோன்றியது. மேலும் இரண்டு பக்கத்திலும் இருப்பவர்களை விவாதிக்க நிறைய இடம் கொடுக்காமல், பல நேரங்களில் அவரே நம்மிடம் ஓவரா ஆர்க்யு பண்ணி, நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற ரீதியில் பேசுகிறார். நீயா நானாவின் வழக்கம் போல தீர்ப்பு எதுவும் கூறாமல், ரெண்டு பக்கத்துக்கும் கொஞ்சம் அறிவுரை கொடுத்து விட்டு, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அதன் பின்னர் அவருடன் போட்டோ எடுக்க மொத்த கூட்டமும் மேடைக்கு வந்து விட்டது. அவரோ அவசரமாக அடுத்த நிகழ்ச்சிக்கு நியூஜெர்சி செல்லவேண்டும் என்று கூறிக்கொன்டிருந்தார். அங்கிருந்த தமிழ் சங்க மெம்பெர் ஒருவரிடம், என்னங்க கொஞ்சம் பார்த்து ஆர்கனைஸ் பண்ணி இருக்க கூடாதா, இப்போ நான் எப்படி பதினைந்து நிமிடத்தில் கிளம்புவது என்று கடிந்து கொண்டார். கோபிநாத்தை அந்த நேரத்தில் பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருந்தது. இவர்களுக்கு கிடைத்த பெரும் புகழுமே இவர்களை இந்தப் பாடு படுத்துகிறதே என்று மனதில் நினைத்த படி மேடையில் இருந்து நகர்ந்தேன். 


Thursday, May 9, 2013

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் ஓன்றுசில வருடங்களுக்கு முன்னர் என்னிடம் யாரவது வந்து மாரத்தான் ஓடினேன் என்று கூறி இருந்தால், ஓ அப்படியா! என்று ஒரு போலியான ஆச்சர்ய கேள்வி கேட்டுவிட்டு, அப்புறம் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என் சடார் என்று ட்ராக் மாறி இருப்பேன். ஆனால், இப்போ கொஞ்ச நாட்களாக நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் பலவற்றிகாக அனைவரும் ஓடிக்கொண்டிருந்தாலும், புதிதாக ஒருவன் ஓடுவதற்காக நேரத்தை ஒதுக்கும் போது பல புருவ உயர்வுகளை சந்திக்க நேர்கிறது. என்ன சார், திடீர்னு ஓடறீங்க என்று சிலர் ஆச்சர்ய கேள்வி எழுப்பினர். ரன்னிங் பண்றது கால் மூட்டுகளுக்கு அவ்வளவு நல்லதில்லைங்க என்று சிலர் திடீர் டாக்டர்களாக மாறி அறிவுரை கூறினார்கள். என்னால எல்லாம் ஓட முடியாது என்று சிலர் தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்கள். சில நேரங்களில் எதற்காக ஒன்றை செய்கிறோம் என்று உடனடி பதில் சொல்ல முடியாது. ஏன் ஓடுகிறோம் என்ற கேள்வியை என்னையே நான் பல முறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். பல வித பதில்கள் மனதில் வந்து விழுகின்றன.என் எண்ண ஓட்டங்களை முடிந்த அளவு சுவாரசியமாக எழுத்தில் பகிர முயற்சிக்கிறேன். பொதுவாக ஓடுவதற்கு முன்னால் எந்த திசையில், எவ்வளவு தூரம் என்று மனதில் கணக்கு போட்டுகொண்டு செல்வேன். ஆனால் இந்த பதிவு எந்த திசையில் செல்லும், என்ன எழுதுவேன், எத்தனை அத்தியாயம் எழுதுவேன் என்று தெரியவில்லை. இனி என் ஓட்டம், உங்கள் பார்வைக்கு....அத்தியாயம் ஓன்று - நீச்சல்

படிப்பு மட்டும் தான் முக்கியம் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைகள் எல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் வேஸ்ட் ஒப் டைம் என்று சொல்லாமல் சொல்லும் நடுத்தர வர்க்க குடும்பச் சூழலில் வளர்ந்தவன் நான். எனக்கு தெரிந்து எண்பதுகளில், நம்ம ஊரில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் இருந்தது இல்லை. (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு கேக்குறீங்களா ?).  அதுவும் நடுத்தர வர்கத்தில் உள்ள ஒருத்தன் சுமாரா படிச்சிட்டு, கிரிக்கெட் மட்டும் விளையாடுறேன்னு சொன்னா வீடு கூட்டும் தொ. கட்டையை எடுத்து அடிக்க வருவாங்க. மற்றபடி ஓட்டப்பந்தயம், கால்பந்து, நீச்சல் போன்றவைகளுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

இங்கு அமெரிக்காவில் குழந்தைக்கு நடை பழக கற்றுகொடுப்பது போல சர்வ சாதாரணமாக நண்டு சிண்டுகளுக்கெல்லாம் ஸ்விம்மிங் கற்று கொடுக்கிறார்கள். என் எட்டு வயது இளைய மகள், டைவிங் போர்டில் இருந்து குதித்து பதிமூன்று அடி ஆழத்தில் உள்ளே சென்று வெளியே வருவதை மகா ஆச்சர்யத்துடன் பார்த்துகொண்டு நிற்பேன். நமக்கு தெரிந்தது எல்லாம் கடப்பாரை நீச்சல் தான். கடப்பாரையை தண்ணீரில் போட்டால் கொஞ்ச தூரம் சென்று எப்படி நிற்குமோ அப்படி கொஞ்ச தூரம் நீந்தி பின் நின்று விடுவேன். என் உயரத்தைவிட அதிகமான ஆழத்திற்கு முடிந்த அளவு செல்ல மாட்டேன். அதுவும் சிறிய வயதில் நண்பர்கள் உதவியுடன் கற்றுக்கொண்டதால் தான் சாத்தியமாகியது. சிறு வயதில் ஒரு முறை, சென்னை நந்தனம் அருகே இருக்கும் YMCA வில் உள்ள ஸ்விம்மிங் பூல் செல்லலாம் என்று கூறியதற்கு, சாராமாரியாக பலரிடம் இருந்து வாங்கி கட்டிக்கொண்டது நினைவிற்கு வருகிறது. அப்படியும் திருட்டுதனமாக நண்பர்களுடன் சேர்ந்து அங்கு சென்று நீந்துவது ஒரு சுகமானா அனுபவம். அப்போது அங்கே அனுமதி கட்டணம், ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ என்று நினைக்கிறேன். ஸ்விம்மிங் பூல் உள்ளே சர்வ சாதாரணமாக நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டும் மோதிக்கொண்டும் நீச்சல் அடிப்போம்.  சென்னை , சைதாபேட்டையில் இருந்து டீச்சர்ஸ் காலேஜ், தாடண்டர் நகர் வழியாக (சில நேரங்களில் B கிரௌண்ட் வழியாக) YMCA -விற்கு  நடந்தே அங்கு செல்வோம். அப்போது அங்கு நிறைய சினிமா ஷூட்டிங் நடக்கும். ஒரு முறை கமல் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. படம் பெயர் வெற்றிவிழாவா அல்லது சூரசம்ஹாரமா என்று சரியாக நினைவில்லை. அநேகமாக வெற்றிவிழாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன். கமலை மிக அருகில் பார்த்த நானும் என் நண்பர்களும் ரொம்ப குஷியாகிவிட்டோம். ஆனால் கிட்டே போய் பேச பயம். அப்போது கமல் வேறு பயங்கரமா எக்சர்சைஸ் பண்ணி ஆர்ம்ஸ் ரெண்டையும், எங்களில் பலருக்கு அப்போதிருந்த தொடை சைஸ் -க்கு வைத்திருந்தார். குறைந்த பட்சம் ஒரு ஆட்டோகிராப் வாங்கலாம் என்று நினைக்கும் போது, கையில் பேப்பர் பேனா எதுவும் இல்லை. ஆமா ஸ்சூலுக்கு படிக்க போகும்போதே பேப்பர் பேனா கொண்டு போகாதவனுங்க, ஸ்விம்மிங் பூல் போகும் போதா கொண்டு போவோம். அப்படி இப்படி என்று பேப்பர், பேனா எல்லாம் யார்கிட்டயோ தேத்தி, கமல் கிட்டே போநூறு கலாம்னு பார்த்தா, அவர் ஒரு வேனில் உட்கார்ந்து சுவாரசியமாக பூரி மசாலை உள்ளே தள்ளிகொண்டிருந்தார். சரி, அவரை ப்ரீயா விட்டுரலாம்னு எங்களுக்குள்ளேயே பெருந்தன்மையா முடிவெடுத்து, அருகில் வெண்ணிற ஆடை மூர்த்தியை வைத்து படமாக்கிக் கொண்டிருந்த ஒரு உப்பு சப்பு இல்லாத காட்சியை பார்த்துவிட்டு நகர்ந்தோம். 

இப்படி அப்பப்ப போய் நீச்சல் கத்துகிட்டு வந்தோம். ஆனால் அதற்கும் சில நாட்களில் வேட்டு வந்துவிட்டது. ஒரு நாள் நீச்சல் அடிச்சிட்டு திரும்பி வரும் போது வழக்கமா தண்ணீர் குடிக்கும் குழாயில் தண்ணீர் குடித்து பின்னர் அருகில் இருந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, செந்தில்னு ஒருத்தன் ரஜினி மாதிரி இந்த விழுதுலே தொங்கி ஆடலாமனு கேட்டான் (பத்தவெச்சுட்டியே பரட்டை!). அப்போ வேற டிவியில் அடிக்கடி போடுற 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினி ஒரு பாட்டில் கௌபாய் மாதிரி உடையில் ஆலமரத்துக்கு கீழே குதிரையில் வந்துட்டே இருப்பார். குதிரையில் வேகமாக வரும்போதே அப்படியே தாவி ஆலமர விழுதை பிடிப்பார். குதிரை பாட்டுக்கு முன்னாடி போயிரும். ரஜினியோ அப்பிடியே கொஞ்ச தூரம் தொங்கியபடி முன்னாடி போய் நேரா குதிரை மேலே உட்காருவார். எப்டி போறான் பார்றா என்று நாங்கள் நண்பர்கள் சிலாகிதுக்கொள்வோம். ரஜினி கமலுக்கு எல்லாம் அவர் இவர் என்று மரியாதை கொடுத்து நாங்கள் தள்ளி வைத்ததில்லை. எம்ஜியார் சிவாஜி என்றால் மரியாதை கொடுத்து பேசுவோம். இந்தப் பய ஆலமர விழுதிலே ஆடலாம்னு சொன்னதும் எனக்கு அந்தக் காட்சி நியாபகம் வந்தது. உடனே நான் முதல்லே பண்றேன்னு ஒரு நான்கடி உயர சிறிய சுவற்றின் மேல் இருந்து குதித்து ஆலமர விழுதை பிடித்து ஆட நினைத்தேன். அதையெல்லாம் விட ரிஸ்கான கில்லி தாண்டு, பம்பரம், கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டை ஆடும் எங்களுக்கு அது ஒரு ஜுஜுபி -யாக அந்த நேரத்தில் தோன்றியது.  சரி என்று முதல் ஆளாக சுவற்றில் ஏறினேன், தாவி விழுதை பிடித்தேன். நான்கைந்து முறை விழுதில் ஆடிவிட்டு கீழே குதித்து நின்று விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்...

ஓட்டம் தொடரும்...
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...