Showing posts with label 55 வார்த்தை சிறுகதை. Show all posts
Showing posts with label 55 வார்த்தை சிறுகதை. Show all posts

Thursday, August 13, 2015

ஸ்பேஸ் டூரிசம் (55 வார்த்தைகள் சிறுகதை)




ஐம்பது வருடங்களுக்கு பிறகு திரும்புகிறோம் என்ற நினைப்பே கண்களில் கண்ணீரைத் துளிர்க்கச் செய்தது. அருகில் உறங்கும் மகளை அணைத்தபடி உறங்கிப் போனேன்.

எதோ சத்தம் கேட்டு கண் விழித்த போது விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததை உணர்ந்தேன். சற்றே அதிக புவியீர்ப்பை ஏற்க உடல் சிரமப்பட்டது. கண்களை மூடி சற்று நேர காத்திருப்புக்குப் பின்னர், 'சற்று நேரத்தில், பூமியின் சென்னைப் பகுதியில் இறங்கப் போகிறோம். வெளியே செல்லும் போது ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, May 9, 2015

மதர்ஸ் டே - 55 வார்த்தைகள் சிறுகதை


ஹேப்பி மதர்ஸ் டே என்று கூவியபடி கையில் கிப்டுடன் நுழைந்த மகன் அருண் தன்னிடம் பேசாமல் நேராக மனைவி ரேகா இருந்த அறைக்குள் சென்றதைப் பார்த்து திலகவதி சற்று விக்கித்து நின்றாள்.

ஏதோ புத்தகத்தில் மூழ்கி இருந்த கணவனிடம் என்னங்க இன்னிக்கு மதர்ஸ் டே, வாங்க உங்க அம்மாவைப் போய் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துரலாம் என்றாள்.

இத்தனை வருடம் இல்லாமல் என்ன இப்போ புதுசா என்று மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்காமல் உடனே கிளம்பினார் அவர்.


Friday, April 10, 2015

ட்வைலைட் - 55 வார்த்தை சிறுகதை



பத்து வயதே நிரம்பிய சிறுவன் மேடையில் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தான்.

அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.

ராபர்ட் மட்டும் மெதுவாக அருகில் இருந்த தன் நண்பனிடம் கிசுகிசுத்தான்.  நல்ல திறமை உள்ள பையன் தான். என்ன கடைவாய் பல்லு மட்டும் நம்மள மாதிரியே வாய்க்கு வெளியே நீளமாக வளர்ந்து இருந்தால் அவன் வளர்ந்த பின்னே உறிஞ்சி குடிக்க வசதியாக இருந்திருக்கும் என்றபடி கடை வாயின் ஓரத்தில் இருந்த ரத்தத்தை துடைத்தான்.


Wednesday, May 22, 2013

லிவிங் டுகெதர் - கி.பி. 2405




கல்யாணமே பண்ணிக்காம ரேகா கூட சந்தோசமா தானேம்மா இருக்கேன்.

இதெல்லாம் ஒரு வாழக்கையாடா. எனக்கும் பேரன் பேத்தி வேணும்னு ஆசை இருக்காதா.

குழந்தை பெத்துக்க மட்டும் தான் முடியாது.  பார்க்க அழகா இருக்கா, சொல்றதை கேக்குறா. அது போதும்.

இதெல்லாம் சரியில்லை. மொதல்ல இதை எங்கயாவது தொலைச்சிட்டு ஒரு நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணிட்டு வா.

இதைக் கேட்டு அப்படியே சரிந்த ரேகாவை பிடித்து அவள் இடுப்பின் பின்புறம் இணைந்திருந்த ஒயரை இழுத்து எலெக்ட்ரிக் பாயிண்டில் சொருகினான்.


பின் குறிப்பு: கதையை முட்டி மோதி ஐம்பைதைந்து வார்த்தைகளில் முடித்து விட்டேன். சில நேரங்களில் வார்த்தைகளைச் சுருக்கி விஷயத்தை சொல்வதற்கு நிறைய நேரம் பிடிக்கிறது. சுஜாதா அவர்கள் எல்லாவற்றையும் வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கூறுவார். அது போல அங்கங்கே ஹிண்ட்கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


Friday, May 17, 2013

NRI மாப்பிள்ளை

NRI மாப்பிள்ளை - 55 வார்த்தை சிறுகதை 




ராஜம், அடுத்த வாரம் பட்டிமன்றத்திலே, இந்தியாவை சப்போர்ட் பண்ணி பேசப்போறேன் என்றார் சண்முகம்.

நோ, நோ, நீங்க வெளிநாட்டை தான் சப்போர்ட் பண்ணனும். நாம ரெண்டு தலைமுறையா இங்கே இருக்கோம். நம்ம குழந்தைங்களும் இங்கேதான் படிச்சு நல்ல வேலைக்கு போயிட்டு இருக்காங்க.

நீ சொல்றா மாதிரினா...

ஒரு நிமிஷம், இந்தியா கால் அண்ணாகிட்டேயிருந்து...

ஆமாண்ணா, ரிஷி கல்யாண விஷயம் பேசத்தான் காலைலே கூப்பிட்டிருந்தேன். நம்ம ஊருலேயே, நல்ல பொண்ணா பாருண்ணா. பாக்கறதுக்கு லட்சணமா, படிச்சு இருந்தாப் போதும்...


Monday, April 9, 2012

ஸ்கூல் - 55 வார்த்தை சிறுகதை


எனக்கு இந்த ஸ்சூலுக்கு போறது கொஞ்சம் கூட பிடிக்கலை. பாடம், பரீட்சை இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டாலே எரிச்சலா வருது. நாள் முழுக்க நாலு சுவர்களுக்கு மத்தியிலே உட்கார முடியலே.

இன்னிக்கு அப்பாவிடம் இதைப் பத்தி பேசிடனும் என்று நினைத்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றேன். அப்பா...எனக்கு ஸ்சூலுக்கு போகவே பிடிக்கலே. பேசாமே, இந்த டீச்சர் வேலையை ரிசைன் பண்ணிட்டு எனக்கு பிடிச்ச மாதிரி பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்.



Saturday, March 10, 2012

ஏன் சார் எழுதறதே இல்லை - 55 வார்த்தை சிறுகதை



என்ன சார், ரொம்ப நாளா புதுசா எதுவும் எழுதலே போல இருக்கு, என்ன ஆச்சு என்றவரை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

அட நம்ப எழுதலேன்னு, இதே கேள்வியை நிறைய பேரு கேக்குறாங்களே என்கிற ஆச்சர்யம் தான்.

எங்கே சார், ஆபீஸ் வேலை ஏற்கனவே அதிகம், இப்போ ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. அதனாலே வேலை இன்னும் அதிகம். கண்டிப்பா எழுதுறேன்.

வீட்டிற்க்கு  வந்ததும்...எவன் கண்ணு பட்டுதோ ரெண்டு மாசமா எழுத முடியவில்லை என்று நினைத்தபடி தலைப்பை எழுதினேன் - தேவையற்ற  மூடநம்பிக்கைகள்.

Saturday, December 31, 2011

ஓட்டம் - ஐம்பத்தைந்து வார்த்தை சிறுகதை



காலை ஆறு மணி. அர்ஜுன் அவசரமாக எழுந்து கடிகாரத்தின் தலையைத் தட்டி அலாரத்தை நிறுத்தினான். நிமிடத்தில் கிளம்பி டிராக் சூட்டை எடுத்து மாட்டினான்.

டைனிங் மேஜை மீது காபி ரெடியாக இருந்தது.

போர்டிகோவில் வந்து காரை கிளப்பி, சரியாக ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த கட்டடத்தின் வாசலில் நிறுத்தி உள்ளே சென்றான்.

அங்கு உடற்பயிற்சி செய்பவர்களை பார்த்தபடி, ட்ரெட்மில்லில் ஏறி இனிமேல் தினமும் ஜிம்முக்கு வந்து அரைமணி நேரமாவது ஓடவேண்டும் என்று மனதிற்குள் கூறியபடி ஓட்டத்தை துவக்கினான்.


பின் குறிப்பு:

உங்களில் பலருக்கு இந்தக் கதையில் நான் சொல்லவந்தது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் மேலும் சில வார்த்தைகளை சேர்த்து, அர்ஜுன் செய்ததை நியாயப்படுத்த என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது. உங்களிடம் வேறு எதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்.


Thursday, November 24, 2011

திருமணச் சந்தை - 55 வார்த்தை சிறுகதை




என்னங்க இந்த இடமாவது நமக்கு அமையணுமேன்னு பதைபதைப்பா இருக்கு.


நம்ம கையிலே என்ன இருக்கு ரஞ்சிதம். நமக்குன்னு எங்கே அமையணும்னு இருக்கோ அங்கே தான் அமையும். இதோ போன் கூட அடிக்குது பாரு...அவங்கதான் கூப்புடுறாங்க.

ஹலோ, சொல்லுங்க சார். அ... அப்பிடியா.... சரி, சரி...வெச்சுடுறேன்.

இந்த இடமும் அமையலே ரஞ்சிதம். அவங்களுக்கு வரதட்சணையா நகையோ பணமோ கொடுக்கக்கூடாதுன்னு நம்ம பையன் போடுற கண்டிசன் பிடிக்கலையாம். பையனுக்கு எதாவது குறை இருக்குமோனு அவங்க உறவுகாரங்க சொல்றாங்களாம்.


--------------------------------------

பின் குறிப்பு:

சரி, கதையை ஒரு வழியாக ஐம்பத்தைந்து வார்த்தைகளில் முடித்துவிட்டேன். இனி என் கருத்து. இந்த கதையின் கருவில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. முற்போக்குவாதி போல பேசும் பல இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், வரதட்சணை வாங்காவிட்டால் தங்கள் மகனிடம் ஏதோ குறை உள்ளது என்று பெண்வீட்டார் பேசுவார்கள் எனக் கூறுகின்றனர். ஒரு சிலர் சாமர்த்தியமாக, உங்க பொண்ணு... உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி என்ன செய்யணுமோ செய்யுங்க என்று பெண்வீட்டாரின் சுயமரியாதைக்கு சவால் விடுவர். 

வரதட்சணை வாங்காமல் ஒருவனால் திருமணம் செய்ய முடியாதா. எங்களுக்கு வரதட்சணை வாங்க விருப்பம் இல்லைதான், ஆனா வாங்கலேன்னா எங்களையே இந்த சமூகம் சந்தேகபடுகிறது என்று பிள்ளை வீட்டார் கூறுவது உண்மையா இல்லை வெறும் சப்பைகட்டா.  நீங்களே சொல்லுங்கள்.


Friday, November 11, 2011

டமில் ஆசிரியர் - 55 வார்த்தை சிறுகதை


 
குமார் போன வாரம் நடத்தின திருக்குறளை சொல்லு பார்க்கலாம்.

இல்லே சார், தெரியாது. நான் போனவாரம் வரலே.

நீதான் யாரையாவது என்ன நடத்தினாங்கன்னு கேட்டு படிச்சிருக்கணும். மத்த பாடம் மாதிரி தமிழையும் நல்லாப் படிக்கலாம் இல்லே என்று கோபமாகக் கூறியபடி மேஜையின் மேல் ஒலித்த செல்போனை எடுத்தார்.

ஹலோ, சொல்லுங்க சார். மத்த டீச்சர்ஸ் எல்லாரும் கொடுத்துட்டாங்களா. ஊருக்கு போயிட்டு சண்டே தான் வந்தேன், எனக்கு தெரியவே தெரியாது. கண்டிப்பா நாளைக்கு மார்னிங் ரெடி பண்ணி கொடுத்துடுறேன்.

Sunday, October 23, 2011

கடன் ________ நெஞ்சம்போல (55 வார்த்தை சிறுகதை)

என்னங்க இப்படி சொல்றீங்க, நம்ம பொண்ணோட தலை தீபாவளி செலவுக்கு பணத்துக்கு என்ன பண்றது.

அதான் தெரியலே... கட்டாயம் கொடுக்குறேன்னு சொன்ன ராகவனை பிடிக்கவே முடியலே, நான் நேர்லயே போய் கேட்குறேன்.

சில மணி நேரத்தில் ராகவன் வீட்டில் - இப்படி திடீர்னு இல்லேன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன் ராகவா, என் பொண்ணு தலை தீபாவளி செலவுக்காக லோன் போட்டு வெச்சுருந்த பணத்தை, உன் அவசரத்தேவைக்காக கொடுத்தேன். இப்போ நான் திருப்பி கேட்கும் போது கொடுக்கலேனா எப்படி...

பின் குறிப்பு: தலைப்பில் உள்ள ____________ -ஐ இப்போது உங்களாலேயே நிரப்பிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

Friday, September 23, 2011

தீபாவளி - 55 வார்த்தை சிறுகதை


தீபாவளி. புதுச்சீலையில் மின்னிய அம்மாவை கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தேன்.

அவள் முகத்தில் பெருமை, நான் வாங்கிக் கொடுத்ததாம். அருகில் அப்பா பளீர் வேட்டி சட்டையில். அவர்கள் பின்னால் அண்ணன், அண்ணி, அக்கா, மற்றும் குழந்தைகள் பட்டாளம். இடையிடையே வெடிச்சத்தம். 

அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எதேச்சையாக மணி பார்த்தேன், இரவு பதினொன்று. நேரமாச்சு, நான் காலைலே சீக்கிரம் எழுந்து, நியூயார்க் ஆபீசுக்கு போகணும். நான் நாளைக்கு பேசுறேன் என்று ஸ்கைப் திரையில் தெரிந்த முகங்களை மனமில்லாமல் மூடினேன்.


Wednesday, September 7, 2011

மனசு - 55 வார்த்தை சிறுகதை



ஏண்டா இப்படி சின்னக் குழந்தைங்க மாதிரி அடிசுக்குறீங்க...நீங்களே பாருங்க வசந்தி அக்கா - பன்னெண்டு வயசுக்கு மேலே ஆச்சு, ரெண்டும் இப்படி அடிச்சிகிட்டு இருக்குதுங்க.

நீ ஒன்னும் கவலைப்படாதே, அதெல்லாம் போகப்போக சரி ஆயிடும்... சரி நீ சொல்லு, உன்னைப் பத்தி இப்படிப் பேசி இருக்கா அவ, சும்மாவா விட்டே நீ .

அதெப்படி விட முடியும், அவ வீட்டுக்கே போய் நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தைக் கேட்டுட்டு வந்துட்டேன், ஆனா நான் சொல்லவே இல்லைன்னு சாதிக்கிறா அவ.


Wednesday, August 31, 2011

ஒரு பதிவரின் கதை


அலுவலகத்தில் இருந்து வந்து பைக்கை நிறுத்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரவியை பார்த்தேன்.

ஏண்டா ரவி, ஸ்கூல்லே இருந்து வந்ததுலே இருந்து விளையாட்டுதானா, கொஞ்சம் நேரம் வீட்டுலே உக்காந்து படிக்ககூடாதா என்று கத்தினேன்.

இதோ வரேன் டாடி, ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்...

சரி, சரி சீக்கிரம் வா என்றபடி உள்ளே சென்று, வழக்கம் போல சோபாவில் சாய்ந்து இன்று என்ன பதிவு எழுதலாம் என்று நினைத்துக்கொண்டே, லேப்டாப்பில் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.

பின் குறிப்பு: ஒரு சடன் பிக்க்ஷன் பாணியில் இந்த 55 வார்த்தை சிறுகதையை முயற்சித்திருக்கிறேன். அதனால் எல்லா விஷயங்களையும் விளக்காமல் உங்கள் கற்பனைக்கே விட்டிருக்கிறேன். 

Saturday, August 27, 2011

மியுசியம் - 55 வார்த்தை சிறுகதை



இது ஒரு Sudden Fiction வகை கதை. இதை சுஜாதா அவர்கள் உடனடிக்கதை என்று குறிப்பிடுவார். உடனடிக்கதைகள் எளிமையானவை. கதை எழுதுபவனுக்கு சம்பவங்களும் கதாபாத்திரங்களும் நன்றாக தெரியும். ஆனால், எல்லாவற்றையும் வாசகர்களுக்கு காட்ட மாட்டான். ஒரு பகுதியை மட்டும் காட்டி மற்றவற்றை வாசகரை உணர வைப்பான். உடனடிக்கதைகள் 55 வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டும் என்ற நியதி இல்லாவிட்டாலும், இங்கு 55 வார்த்தைகளில் ஒரு உடனடிக்கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறேன். இனி கதைக்கு போகலாம்.


---------------------------------


சரி, சரி, சீக்கிரம் கிளம்புங்க. லேட்டா போனா உள்ளே அனுமதிக்கமாட்டாங்க.

ஒரு நிமஷங்க, இதோ கிளம்பிட்டோம்.

சில நிமிடங்களில் அனைவரும் கிளம்பி வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், அது சட்டேன்று வேகம் எடுத்தது.

சில மணிநேர பயணத்திற்கு பின் , புவிஈர்ப்பு விசையை லேசாக உணர ஆரம்பித்த சில நிமிடங்களில் ஜிவ்வென்று சென்று பூமியில் தரை இறங்கியது.

சுவாசிக்க மாஸ்க் போட்ட பின்னர் கீழிறங்கி, குழந்தைகளிடம் - இது தான் பூமி, நம்மோட மூதாதையர்கள் எல்லாம் இங்கே தான் வாழ்ந்தாங்க என்றேன்.

Saturday, August 20, 2011

வட்டம் - 55 வார்த்தை சிறுகதை



என்ன சாரதா, நாப்பது பவுனுக்கு என்ன பண்றது. இன்னும் கல்யாணச் செலவு வேற இருக்கு என்றார் கிருஷ்ணமூர்த்தி.

ஆமாங்க, நம்ம பொண்ணை வியாபாரப் பொருளாப் பாக்குறாங்க. இந்த வரதட்சணை கொடுமை என்னைக்குத்தான் ஒழியுமோ ?

பேசாமே நம்ம தாம்பரம் நிலத்தை வித்துடலாம். குமார் படிப்புக்கும் உதவும்.

நிலம் விற்ற பணத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. 

சில வருடங்களுக்குப்பின், கல்யாணத் தரகரிடம் - எங்களுக்கு ஒரே பையன், இன்ஜினியரிங் முடிச்சிட்டு கை நிறைய சம்பாரிக்கிறான், நூறு பவுனுக்கு குறையக்கூடாது என்றாள் சாரதா.

Saturday, August 13, 2011

குப்பை - 55 வார்த்தை சிறுகதை

சுஜாதா அவர்களின் 55 வார்த்தை கதைகளின் மேல் கொண்ட ஈர்ப்பால் நான் முயற்சி செய்துள்ள சின்னஞ்சிறுகதை. இந்த கதையில் மொத்தம் 55 வார்த்தைகள் மட்டுமே. எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

குப்பை



தீபாவளி சமயம் அலுவலக விடுமுறைக்கு பெரியம்மா  வீட்டுக்கு வந்திருந்த அரவிந்தன் காலை உணவு திருப்தியாக சாப்பிட்ட பின் கை கழுவ வாஷ்பேசின் அருகே வந்தான். 

சட்டென்று முகம் மாறி அருகில் இருந்த டம்ப்ளரில் தண்ணீர் பிடித்து ஹாலில் நடுவே கை கழுவினான்.

அரவிந்தா என்ன பண்றே என்று பதறிய பெரியம்மாவைப் பார்த்து சிரித்தபடி, நீங்க மட்டும் குப்பையை கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போடாம மாடிலே இருந்து கிழே வீசலாம், நான் நடு வீட்டில் கை கழுவக்கூடாதா என்றான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...