Saturday, February 26, 2011

Guzaarish - என் பார்வையில்


குசாரிஷ் - சமீபத்தில் நான் பார்த்த அருமையான ஹிந்தி திரைப்படம். முதலில் ஆரம்பிக்கும் முன் இது ஒரு திரை விமர்சனம் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன். ஏனென்றால் ஒரு படத்தை பார்த்து விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு விஷயம் தெரியாது என்பது தான் உண்மை. இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் ஏனோ என்னை சற்று பாதித்ததால், படத்தில் எனக்கு பிடித்தது மற்றும் புரிந்தது பற்றி உங்களுடன் பகிர்கிறேன்.

தூம் 2, ஜோதா அக்பர் ஆகிய இரு படங்களை அடுத்து மூன்றவதாக ஹ்ரிதிக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதால் எனக்குள் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். படத்தின் ஆரம்ப காட்சியே அசத்தலாக இருந்தது. ஹ்ரிதிக் ரோஷன் படுக்கையில் தூங்கிகொண்டிருக்க, ஐஸ்வர்யா ராய் அறைக்குள்ளே வந்து அவரை எழுப்பி பல் தேய்த்து விட்டு, குளிக்க வைத்து, உடை மாற்றி, வீல் சேரில் உட்கார வைக்கும்போதே நம்மை அட பரவயில்லையே வித்தியாசமான படம் தான் போல இருக்கே என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பிற்கு கொஞ்சமும் பங்கம் வைக்காமல் ஆரம்பம் முதல் முடிவு வரை சற்றும் விறுவிறுப்பு குறையாமலேயே படம் செல்கிறது. முதலில் இப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த ஹ்ரிதிக் ரோஷனுக்கு ஒரு பெரிய சல்யுட் அடிக்கலாம். மனிதர் முகத்தில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் நடிப்பை வெளிபடுத்துகிறார். முக்கியமாக அவர் கண்கள் சந்தோசம், கோபம், ஆச்சரியம் என பல பரிமாணங்களை காட்டுகிறார்.

கதை கோவாவில் நிகழ்கிறது.  உலகிலேயே மிகச்சிறந்த மேஜிக் கலைஞனாக திகழும் Ethan Mascarenhas (ஹ்ரிதிக் ரோஷன்),  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு ஆபத்தான அந்தரத்தில் மிதக்கும் மேஜிக் நிகழ்த்தும் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் quadriplegic எனப்படும் உடல் முழுக்க உணர்வுகளை இழக்கும் ஒருவித நோய்க்கு ஆளாகிறார். உடலில் தலையை தவிர எந்த ஒரு பாகத்திலும் உணர்ச்சி இல்லாமல் வீல் சேரில் தான் அவர் வாழ்கை நகர்கிறது. இந்த நிலையில் பன்னிரெண்டு வருடங்கள்,  நர்ஸ் சோபியா டிசௌசா (ஐஸ்வர்யா ராய்) உதவியுடன் உற்சாகத்துடன் ரேடியோ ஜாக்கியாக 'ரேடியோ ஜிந்தகி' என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி கொண்டும் பல தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்களை எழுதியும் வெற்றிகரமாக விளங்குகிறார். ஐஸ்வர்யா ராய் ஒரு அழகிய நர்சாக ஒரு பார்பி டால் போல படம் முழுவதும் வலம் வருகிறார். நடிப்பிலும் ஹ்ரிதிக் ரோஷனுக்கு போட்டியாக மிக சிறப்பாக தன் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

இப்படி பதினான்கு ஆண்டுகள் சுதந்திரமாக தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த ஈதன் உடலில் உள்ளுறுப்புகள் பாதித்து இருப்பதாக தன் மருத்துவர் மூலம் அறிந்ததும், தன்னால் மருத்துவமனையில் காலத்தை தள்ள முடியாது என்று தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்புகிறார். அதனால் Euthanasia என்ற கருணை கொலைக்கு தன் தோழி மற்றும் வழக்கறிஞர் தேவயாணி தத்தா மூலம் நீதிமன்றத்தில் விண்ணபிக்கிறார்.  இந்தியாவில் இத்தகைய கருணை கொலைக்கு சட்டத்தில் அனுமதி இல்லை. பலர் இதை முதலில் எதிர்த்தாலும் பின்னர் கருணை கொலை சரியே என்று கூறுகின்றனர். வழக்கு விசாரணையின் போது ஈதன் தாயரே மகன் துன்பபடுவதை காண முடியவில்லை, கருணை கொலைக்கு அனுமதி கொடுங்கள் என்று நீதிபதியிடம் கூறும் இடம் மனதை ஏதோ செய்கிறது. இப்படி ஒரு பக்கம் கதை போய் கொண்டிருக்க இதற்கிடையே ஒமார் சித்திக் என்னும் இளைஞன் தனக்கு மேஜிக் கற்று தருமாறு ஈதன் முன் வந்து கெஞ்சுகிறான். முதலில் மறுக்கும் ஈதன் பின்னர் ஒமாருடைய ஆர்வத்தை பார்த்தும் தனக்கு பின்னர் தன் மேஜிக் நிகழ்சிகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் கற்று தர முன் வருகிறார். அப்படி மேஜிக் சொல்லி கொடுக்கும் போது பிளாஷ் பேக்கில் மேஜிக் ஷோ, நடன காட்சிகள் என ஹ்ரிதிக் ரோஷன் கலக்குகிறார்.

இவ்வளவு ஹெவி சப்ஜெக்டாக இருந்தும் படத்தில் மனதை பிழியும் சோகம் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே விறு விறு என்று படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர் மற்றும் திரைகதை எழுத்தாளர் 'சஞ்சய் லீலா பன்சாலி'.  ஆனாலும் சில இடங்களில் சறுக்கல்கள் இருக்கிறது.  சோபியா தன் குடும்பம் மற்றும் கணவனை விட்டுவிட்டு ஒரு நாள் கூட விடுப்பு ஒய்வு என்று இல்லாமல் ஏன் நர்சாக பணி புரிகிறார் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. ஈதன் - சோபியா இடையே ஒரு மெல்லிய காதல் இருப்பதை படத்தின் ஆரம்பத்தில் இருந்தே உணர முடிகிறது. ஆனால் அந்த காதலின் காரணம் புரியவில்லை.

முடிவில் ஈதன் வழக்கின் தீர்ப்பு என்ன ? ஈதன் - சோபியா காதல் வெற்றி பெற்றதா என்பது தான் படத்தின் மீதி கதை. மொத்தத்தில் என்னை பொறுத்தவரை இது ஒரு பார்க்க வேண்டிய படம்.

Trailer:


Sunday, February 13, 2011

நேரத்தின் வரலாறு

ஒரு கிலோமீட்டருக்கு ஆயிரம் மீட்டர், ஒரு மீட்டருக்கு நூறு சென்டிமீட்டர், ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு...இப்படி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எண்கள் அனைத்துமே தசம எண்களை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் தினமும் பார்க்கும் கடிகாரத்தில் நேரம் மட்டும் ஏன் ஒரு மணிநேரத்திற்கு அறுபது நிமிடங்கள் என்றும், ஒரு நிமிடத்திற்கு அறுபது வினாடிகள் என்றும் இருக்கிறது.  ஏன் ஒரு மணிநேரத்திற்கு 100 அல்லது 120 நிமடங்கள் என்றோ இருக்ககூடாது. இதற்கு சரியான பதில் இதுதான் என்று கூற முடியாது. அதனால் நான் படித்து அறிந்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். இதோ ஒரு மணி நேரத்திற்கு அறுபது நிமிடங்கள் இருக்கும் காரணம்...

இதற்கு பதில் தேட நாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் 3100 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். ஆம், பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியர்கள் Base 60 எண்களை பயன்படுத்தினர், அதுவே நாம் இன்றளவில் உபயோகபடுத்தும் பல அளவுகளின் முன்னோடி எனலாம். சுமேரிய மற்றும் அக்காடிய நாகரீகங்களில் பயன்படுத்திய எண்ணிக்கை முறையே பாபிலோனிய எண்களுக்கு அடித்தளம் ஆகும். இப்போது நாம் சிறு குழந்தைகளுக்கு கூட்டல் அல்லது கழித்தல் சொல்லு கொடுக்க கை விரல்களை பயன்படுவது போல, பாபிலோனிய காலத்து மனிதர்களும் முதலில் தங்கள் கை விரல்களையே பயன்படுத்தி இருகிறார்கள். சாதாரணமாக கை விரல்களை உபயோகித்து எண்ணினால் பத்து வரை என்ன முடியும், சரி கால் விரல்களையும் சேர்த்து எண்ணினால் இருபது வரை என்ன முடியும். அப்படி இருந்தால் அவர்கள் நாம் இன்றளவில் உபயோகிக்கும் Base 10 அல்லது Base 20 தானே பயன்படுத்தி இருக்கவேண்டும், இந்த அறுபது எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழும். அவர்கள் கை விரல்களை உபயோகபடுத்தி எண்ணியது என்னமோ உண்மை தான் ஆனால் ஒரு வித்யாசம், அவர்கள் கை விரல்களை சற்று நுணுக்கமாக பார்த்தான் விளைவே Base 60 எண்களை உபயோகித்ததின் காரணம்.

உங்கள் கை விரல்களை சற்று கூர்ந்து கவனித்து பார்த்தால், கட்டை விரலை தவிர மற்ற அணைத்து விரல்களிலும் மூன்று எலும்புகள் அல்லது ஜாயிண்டுகள் உள்ளன.  நம் இடது கையில் கட்டை விரலை லேசாக மடக்கிவிட்டு பார்த்தால் மற்ற நான்கு விரல்களால் பன்னிரெண்டு வரை என்ன முடியும். இப்போது வலது கைகளில் உள்ள விரல்களால் இடது கையில் உள்ள பன்னிரெண்டு பன்னிரெண்டாக ஐந்து முறை எண்ணினால் மொத்தம் அறுபது எண்கள் வருகிறது. இதுவே பாபிலோனியர்கள் Base 60 எண்களை உபயோகபடுத்திய காரணம். இதன் அடிப்படையிலேயே பாபிலோனியர்கள் ஒரு மணி நேரத்திற்கு அறுபது நிமிடம் என்றும் ஒவ்வொரு நிமிடத்தையும் அறுபது வினாடிகள் என்றும் பகுத்திருகின்றனர்.  பாபிலோனியர்கள் ஒரு நாளில் சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தை பன்னிரெண்டு மணி நேர பகல் பொழுதாகவும், சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தை பன்னிரெண்டு மணி நேர இரவு பொழுதாகவும் பிரித்திருந்தனர். அதனால் அவர்கள் உபயோகித்த நேர அளவுகள் நாம் இன்று உபயோகிப்பது போல இல்லாமல் வருடத்தில் மாறிக்கொண்டே இருந்தது. அதாவது சூரிய வெளிச்சம் இருக்கும் வரை நேரத்தை நீட்டி பன்னிரெண்டு மணிநேரமாக வைத்திருந்தனர். பாபிலோனியர்களை தொடர்ந்து எகிப்து நாகரீகத்தில் இந்த நிலையின்மையை மாற்றி, பகல் வெளிச்சம் மற்றும் இரவு நேரம் என்று பிரிக்காமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றும் அதை ஒரு மணி நேர பாகங்களாக நாம் இன்றளவில் பயன்படுத்தும் முறையை கொண்டு வந்தனர்.அதன் விளைவே நாம் இன்று மணிக்கு அறுபது வினாடிகள் என்றும், ஒரு வட்டத்தில் மொத்தம் 360 டிகிரி இருக்கிறது என்றும் உபயோகிப்பதற்கு காரணம்.

அது சரி, அப்படி என்றால் ஏன் இந்த Base 60 எண்கள் இன்று பயன்பாட்டில் இல்லை என்று நீங்கள் கேட்கலாம். பாபிலோனியாயர்களின் எண்ணிக்கை முறை அவ்வளவு துல்லியமானதாக இருந்ததாக தெரியவில்லை. அவர்கள் எண்களை எழுத இரண்டே குறிகளை உபயோக படுத்தினார்கள். ஓன்று என்ற எண்ணை குறிக்க I போன்ற குறியையும், பத்து என்ற எண்ணை குறிக்க < போன்ற குறியை மட்டுமே உபயோகபடுத்தி எண்களை எழுதினார்கள். உதரணத்திற்கு இருபத்திநான்கு என்ற எண்ணை குறிக்க <<IIII இப்படி எழுதினர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் பாபிலோனியர்கள்  ஜீரோ எனப்படும் பூஜ்ஜியம் என்ற எண்ணுக்கு குறிகள் எதுவும் வைத்துகொள்ளவில்லை. அதனால் அவர்கள் பூஜ்ஜியம் என்பதை அறியாமல் இருந்தார்கள் என்று கூறவில்லை. அதற்கான குறியீடு மட்டுமே இல்லாமல் இருந்தது, அதற்கு பதில் ஒரு வெற்று இடத்தை போட்டு அதன் அருகில் ஒரு பிராக்கெட் போன்ற குறியை போட்டனர். அவர்கள் பூஜ்யத்திற்கு குறியில்லாமல் விட்டதற்கு அந்த காலத்தில் நடந்த தத்துவ ரீதியான விவாதமும் ஒரு காரணம். பூஜ்ஜியம் என்றால் ஒன்றும் இல்லாதது, அப்படி ஒன்றும் இல்லாதது எப்படி எதாவது ஒன்றாகும், அதற்கு எப்படி குறிப்பிட முடியும் போன்ற விவாதங்களால் பூஜ்ஜியத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை.

பூஜ்ஜியத்தை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாவை சேர்ந்த பிங்களா மற்றும் அவருடன் இருந்த பண்டிதர்களும் தான், சூன்யா என்ற சம்ஸ்கிருத வார்த்தைதான் நாம் இன்று உபயோகபடுத்தும் ஜீரோ ஆகும். அதன் பின்னர் வந்த பிரம்மாகுப்தா பூஜ்ஜியத்தின் உபயோகம் மற்றும் நெறிமுறைகளை பற்றி ப்ரஹமசுப்த சித்தாந்தம் என்ற நூலில் எழுதி இருக்கிறார். அதன் பின்னர் ஆர்யபட்டர் பூஜ்ஜியத்தை உபயோகத்தினை மேலும் விரிவு படுத்தி, இன்று நாம் உபயோகபடுத்தும் Place value notation, அதாவது இன்று நாம் எண்களில் ஒவ்வொரு இடத்திற்கும் ஓன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று உபயோகபடுத்தும் முறைக்கு முன்னோடியாக விளங்கினார். மனித வரலாற்றில் கணிதம் எப்படி தோன்றி இன்று நம் மனித இனம் கண்டுள்ள முன்னேற்றத்திற்கும் வழிக்காட்டியாக இருந்திருப்பதை சற்று பின்னோக்கி பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.

நான் மேலே கூறிய தகவல்களில் ஏதும் பிழை இருந்தாலோ அல்லது மாற்று கருத்து இருந்தாலோ உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Thursday, February 3, 2011

கனவு - மைக்ரோ சிறுகதை

நவம்பர் 22, 2155.
 
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து புன்னகையோடு வெளியே வந்தான் ரிஷி.  அந்த கட்டடத்தின் பின்னே இருந்த ரன்வே அருகில் பார்க் செய்ந்திருந்த பறக்கும் காரில் ஏறி என்ஜினை ஸ்டார்ட் செய்து, முன்னே இருந்த கம்ப்யூட்டர் திரையில் ஒரு பொத்தானை அழுத்தியதும் சில வினாடிகளில் வான்வெளி போக்குவரத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி மற்றும் அதிகபட்ச பறக்கும் உயரம், வேகம் போன்றவை திரையில் மின்னின. அடுத்த சில நொடிகளில் திரையில் பச்சை விளக்கு ஒளிர்ந்ததும், காரை ரன்வேயில் நானூறு மைல் வேகத்தில் செலுத்தி ஜிவ்வென்று வானில் கிளப்பினான். சரியாக இரண்டு நிமிடத்தில் இரண்டாயிரம் அடி உயரத்தில், 900 மைல் வேகத்தில் சென்று வான்வெளி போக்குவரத்தில் நுழைந்தான். GPS -ல் வீட்டு விலாசத்தை தேர்ந்தெடுத்து, காரை ஆட்டோ பைலட் -ல் போட்டு விட்டு சற்று சாய்ந்து சோம்பல் முறித்தான். முதலில் அம்மாவிடம் தான் இந்த செய்தியை சொல்லவேண்டும் என்று இடுப்பில் மாட்டி இருந்த கை அடக்க சாட்டிலைட் வீடியோ போனில் வீட்டிற்கு போன் செய்தான் . சில ரிங்குகள் சென்றதும், போன் திரையில் ஹலோ என்றபடி அம்மா தெரிந்தார்.  அம்மா, ஒரு குட் நியூஸ்...எனக்கு இந்தியாவிலே வேலை செய்யறதுக்கு விசா கிடைச்சிருச்சு, இன்னும் ரெண்டு வாரத்துலே கிளம்பனும். எப்படியோ ஒன்னும் பிரச்சனை இல்லாம விசா கிடைச்சிருச்சு. அங்கே போய் ஒரு வருஷத்திலே என் படிப்புக்கு அப்பா வாங்கின கடன், வீட்டு லோன் எல்லாத்தையும் அடைச்சுடலாம். உங்களுக்கும் அங்கே போனதும் டூரிஸ்ட் விசா அனுப்பறேன். வருஷத்துலே ஒரு நாலைஞ்சு மாசம் என்கூட வந்து நீங்க இருக்கலாம் என மகிழ்ச்சி பொங்க கூறினான். ரொம்ப சந்தோசம்டா ரிஷி, எங்கே விசா கிடைக்குமோ கிடைக்காதோன்னு பயத்துலே இருந்தேன். இப்போ தான் மனசுக்கு திருப்தியா இருக்கு, உங்க தாத்தாவும் பாட்டியும் இப்போ இருந்தா ரொம்ப சந்தோஷபட்டிருப்பாங்க என இரண்டு தலைமுறைக்கு முன்னர் லண்டன் வந்து செட்டில் ஆனா தன் குடும்பத்தை நினைத்து பார்த்து கண்ணில் துளிர்த்த லேசான கண்ணீரை துடைத்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...