Wednesday, August 31, 2011

ஒரு பதிவரின் கதை


அலுவலகத்தில் இருந்து வந்து பைக்கை நிறுத்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரவியை பார்த்தேன்.

ஏண்டா ரவி, ஸ்கூல்லே இருந்து வந்ததுலே இருந்து விளையாட்டுதானா, கொஞ்சம் நேரம் வீட்டுலே உக்காந்து படிக்ககூடாதா என்று கத்தினேன்.

இதோ வரேன் டாடி, ஒரு டென் மினிட்ஸ் ப்ளீஸ்...

சரி, சரி சீக்கிரம் வா என்றபடி உள்ளே சென்று, வழக்கம் போல சோபாவில் சாய்ந்து இன்று என்ன பதிவு எழுதலாம் என்று நினைத்துக்கொண்டே, லேப்டாப்பில் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.

பின் குறிப்பு: ஒரு சடன் பிக்க்ஷன் பாணியில் இந்த 55 வார்த்தை சிறுகதையை முயற்சித்திருக்கிறேன். அதனால் எல்லா விஷயங்களையும் விளக்காமல் உங்கள் கற்பனைக்கே விட்டிருக்கிறேன். 

Tuesday, August 30, 2011

பிரபஞ்சப் புதிர்கள் #1

முன்பு விண்வெளியில் முதல் மனிதன் என்ற ஒரு பதிவில் விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதாகக் கூறிப் பின்னர், எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்று ஒரு முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். மேலும் ஒரே பதிவில் பிரபஞ்சம் பற்றி நான் கூற விரும்பும் அனைத்தையும் அடைப்பது சற்று சிரமம் என்பதால், அதை ஒரு தொடராக எழுதலாம் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளேன். வானவியலைப் பற்றிப் படிப்பது எனது பொழுது போக்கு மட்டுமே, தொழில்முறையில் எனக்கு இந்தத் துறை சம்பந்தம் இல்லாதது. எனவே எதாவது தவறு இருந்தால் கூறுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

இதோ பிரபஞ்சப் புதிர்கள் உங்கள் பார்வைக்கு...

-----------------------------------------------------------------------


ஒரு நாள் மேகங்கள் அற்ற இரவு நேரத்தில் ஆரவாரம் அதிகம் இல்லாத இடத்தில் இருந்து விண்ணை சற்று உற்று நோக்குங்கள். பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுவதை எந்தவித தொலைநோக்கியும் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும். சிறிது சிறிதாக மின்னும் அத்தனை நட்சத்திரங்களும் நாம் வாழும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

நம் சூரியனும் ஒரு நட்சத்திரமே. என்ன, நமக்கு கொஞ்சம் அருகில் இருக்கிறது. எவ்வளவு அருகில் என்று கேட்கிறீர்களா ? சுமார் 93 மில்லியன் மைல்கள் அருகில் உள்ளது. இதை விட பல ஆயிரம் மடங்கு தூரத்தில் இருப்பதால் தான் மற்ற நட்சத்திரங்கள் நமக்கு மிகச்சிறியதாக தெரிகின்றன. நம் சூரியனை தவிர்த்து பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான ப்ராக்சிமா செண்டாரி (Proxima Centuari or Alpha Centauri C) சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யகூடிய தொலைவு. ஒளியின் வேகம் தோரயமாக ஒரு வினாடிக்கு 186 ,282 மைல்கள். கணக்குப் போட்டுப்பார்த்தால் சுமார் 5.88 மில்லியன் மில்லியன் மைல்கள் ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் என்று தெரிகிறது. ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் ப்ராக்சிமா செண்டாரி நட்சத்திரத்தை அடைய நமக்கு 4.3 ஆண்டுகள் ஆகும். சில நட்சத்திரங்கள் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் கூட இருக்கின்றன. நாம் சாதரணமாக இரவில் அண்ணாந்து பார்க்கும் பல நட்சதிரங்களின் ஒளியை அந்த நட்சத்திரம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உமிழ்ந்திருக்கலாம். நம் சூரியனில் இருந்து புறப்பட்ட ஒளி நம்ம வந்து சேர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகும். அதாவது நாம் பார்க்கும் சூரியன் எட்டு நிமிடங்களுக்கு முன்னதாக இருந்த நிலை, இப்போது இந்த நிமிடத்தின் நிலை அல்ல.

இப்படி ஒரு நட்சத்திர கூட்டத்திற்கிடையே ஒரு சிறிய கிரகத்தில் நின்று கொண்டிருக்கும் மனிதன் தன்னை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை பற்றி அறிய பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். அந்த முயற்சியில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த பிரபஞ்சம் இன்னும் பல புதிர்களை தன்னுள் கொண்டிருகிறது.

சரி பிரபஞ்சம், பிரபஞ்சம் என்று இந்தப் பதிவில் நான் வரிக்கு ஒரு தடவை எழுதும் பிரபஞ்சம் என்றால் என்ன ? நம்ம சுற்றி உள்ள சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சதிரங்கள், நட்சத்திரங்களுக்கு இடையே தெரியும் வெளி, இன்னும் பலவித கண்ணுக்கு தெரியாத வாயுக்கள் எல்லாம் சேர்ந்தது தான் பிரபஞ்சம், ஆங்கிலத்தில் யூனிவர்ஸ் என்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகள் வானவியல் வல்லுனர்கள் இந்த பிரபஞ்சத்தின் அளவு என்ன, வயது என்ன போன்ற அடிப்படை கேள்விகளுக்கு விடை தேட போராடிக் கொண்டிருந்தனர். முக்கியமான கேள்வி இந்த பிரபஞ்சம் முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருக்குமா அல்லது எங்காவது ஓர் இடத்தில் முடிந்துவிடுமா என்பது தான். மேலும் அது எப்போதுமே இருந்ததா அல்லது என்றாவது ஒரு காலகட்டத்தில் தோன்றியதா என்பது அடுத்த கேள்வி. அவர்களுக்கு (ஏன் நமக்கும் தான்) முடிவில்லாத ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இருந்தது. சரி பிரபஞ்சத்திற்கு ஒரு முடிவு உண்டு என்று வைத்துக்கொள்வோம். ஒரு வாதத்திற்காக - நீங்கள் அந்த முடிவின் விளிம்பில் நின்று கொண்டு கையை நீட்டினால், உங்கள் கை எங்கே செல்லும். இப்படி விடைத் தெரியாக் கேள்விகள் வானவியல் வல்லுனர்களிடையே எழுந்துகொண்டே இருந்தன, சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டைக்  கண்டுபிடிக்கும் வரை...

தொடரும்...

Monday, August 29, 2011

கூட்டாஞ்சோறு - Aug 29, 2011


கூட்டாஞ்சோறு - நெல்லை மற்றும் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் பிரசித்தி பெற்ற உணவு வகை. அரிசி, பருப்பு, பலவித காய்கறிகள், தேங்காய், சிவப்பு மிளகாய் என பலவித ஐட்டங்களை சேர்த்து காரசாரமாக செய்யப்படும் ஒரு உணவு. இப்போது கூட்டாஞ்சோறு என்ற பெயரில் சென்னையில் கூட ஒரு உணவகம் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

கூட்டாஞ்சோறு போல கதம்பமாக பல விஷயங்களை பதிவில் எழுதவேண்டும் என்று நினைத்துகொண்டு சில மாதத்திற்கு முன் ஒரு புதிய பதிவு வகையை சேர்த்தேன். ஆனால் அப்படி நினைத்தபடி அடிக்கடி இந்த வகையில் எழுத முடியவில்லை. இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்து துவங்கி இருக்கிறேன். இனி கூட்டாஞ்சோறு உங்களுக்காக...உப்பு, புளிப்பு, காரம் எதுவும் சரியாக இல்லை என்றால் சொல்லுங்கள், இந்த முறையோ அல்லது அடுத்த முறையோ சரி செய்ய முயற்சிக்கிறேன்.

நாட்டு நடப்பு:

லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக அன்னா ஹசாரே இருந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னதான் சட்டம் கொண்டுவந்தாலும், அதிகாரிகளும், மக்களும் இன்னும் சாமர்த்தியமாக மாட்டிகொள்ளாமல் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ முயற்சித்தால் என்ன செய்ய முடியும். லஞ்சம் கொடுக்காமல் ஒரு வேலையும் நடக்காது என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும், லஞ்சம் மற்றும் ஊழலில் மக்கள் பங்கும் பெருமளவில் இருக்கிறது என்பதே என் கருத்து. தன் காரியம் விரைவில் அதிகம் செலவு இல்லாமல் முடியவேண்டும் என்பதால் மக்கள் லஞ்சம் கொடுக்க முன்வருகின்றனர். முறையான ஓட்டுனர் உரிமம் கூட இல்லாமல் எத்தனைப் பேர் வாகனம் ஓட்டுகிறார்கள். டிராபிக் போலீசிடம் மாட்டிகொண்டால் சுலபமாக தப்பித்துகொள்ள இருக்கவே இருக்கிறது லஞ்சம். இன்று கல்லூரியில் முதலாம் ஆண்டு காலடி எடுத்து வைக்க இருக்கும் ஒரு இளைஞன் கூட போலீஸ்காரங்களை எல்லாம் மதிக்கக்கூடாது என்கிறான். இது ஒரு சிறு உதாரணம் தான், இதைப்போல நிலம் வாங்க/விற்க, கல்லூரியில் சேர்க்க, வருமான வரி என பல இடங்களில் கண்ணுக்கே தெரிந்தே லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் தேர்வு என்ன என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. நல்ல தலைவன் மற்றும் மக்களுக்கு கல்வியும் உலக அறிவும் கிடைத்தால் மட்டுமே இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது. 

அறிவியல் பிட்ஸ்:

செவ்வாய் கிரகம் கைகெட்டும் தூரம் தான்


தற்சமயம் உள்ள டெக்னாலஜியை உபயோகப்படுத்தி ராக்கெட்டுகள் மூலமாக சென்றால் செவ்வாய் (மார்ஸ்) கிரகத்தை அடைய சுமார் ஏழு மாதங்கள் வரை ஆகலாம். அதுவும் நினைத்த நேரத்தில் அப்படி செல்ல முடியாது. செவ்வாய் கிரகம் சுமார் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூமியில் இருந்து மிகக்குறைந்த தொலைவில் இருக்கும். அந்த நேரத்தை கணக்கிட்டு பயணித்தால் சுமார் ஏழு மாதங்கள் ஆகும். அதை தவிர திரும்பி வர இரண்டு வருடங்கள் காத்திருந்து பின்னர் பயணத்தை தொடங்க வேண்டும்.

மணிக்கு 123,000 மைல் வேகத்தில் செல்லகூடிய பிளாஸ்மா என்ஜின் மூலமாக மார்ஸ் கிரகத்திற்கு 39 நாட்களில் பயணிக்க முடியும் என்று கூறுகிறார்கள். பிளாஸ்மா எஞ்சினில் உள்ள நியுக்ளியர் ரியாக்டர்கள் பிளாஸ்மாவை இரண்டு மில்லியன் டிகிரி வரை சூடாக்கும் திறன் கொண்டவை. இவ்வகை என்ஜின் குறித்து ஆராய்சிகள் நடந்துகொண்டிருகிறது. பிளாஸ்மா என்ஜின் மெதுவாக தொடங்கி பின்னர் அதிவேகத்தில் செல்ல ஆற்றல் கொடுக்கும். அதனால் இதை தொலைதூரப் பயணத்திற்கு மட்டுமே உபயோகிக்கும் சாத்தியம் உள்ளது. இது போன்ற சிக்கல்களை சரி செய்தால், சந்திரனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம், உலகையே ஒரு மணிநேரத்தில் நான்கு முறைக்கு மேல் சுற்றிவந்து விடலாம்.

சினி பட்டறை:


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள, மங்காத்தா திரைப்படம் USA -வில் 70 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. படம் உலகெங்கிலும் (கேரளா தவிர) ஆகஸ்ட் 31 அன்று ரிலீஸ் ஆகிறது. அஜித்தின் லுக் அண்ட் ஸ்டைல் மிக வித்தியாசமாக உள்ளது. மங்காத்தா அஜித்தின் ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிரைலரே அசத்துகிறது, கிழே உள்ள வீடியோ கிளிக் செய்து பாருங்கள்.கருத்து கந்தசாமி:

புது மாப்பிள்ளைக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில்...

திருமண வாழ்கையில் நீ கடைபிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள்,
  • உன் மீது தவறு இருந்தால் ஒப்புக்கொள்.
  • உன் மீது தவறு இல்லாவிட்டால் வாயை மூடிகொண்டு அமைதியாய் இரு.

ரசித்த வீடியோ:நன்றி.


Sunday, August 28, 2011

ஐரீன் அப்டேட் - புகைப்படங்களுடன்

ஐரீன் சூறாவளியின் சீற்றம் ஒரு வழியாக குறைந்தது. வடகிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் பலத்த வெள்ளம் ஏற்பட்டிருகிறது. இப்போது கனடா பார்டரை நோக்கி முன்னேறி இருக்கிறது. இதுவரை இருபத்தி மூன்று பேர் ஐரீனால் உயிரிழந்திருகிரார்கள் என்று தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஐரீன் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. சராசரியாக ஏழு இன்ச் மழை பொழிந்திருகிறது. ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துகொண்டிருகிறது, இது நாளை வரை தொடரும் என்று கூறுகிறார்கள். இன்னும் பல இடங்களில் பலத்த காற்று (சுமார் ஐம்பது மைல் வேகத்தில்) வீசிகொண்டிருகிறது. சுமார் நான்கு மில்லியன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி இருக்கின்றன. இவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு வாரமோ அதற்கு மேலோ ஆகலாம். இங்கே கிழே உள்ள சில புகைப்படங்களும் மற்றும் காணொளி ஐரீனின் சீற்றத்தை விளக்கும்.


காணொளி:போர் - சிறுகதைபீட்டர் விமானத்தில் இருந்து கீழே தெரிந்த எதிரிகள் மீது குண்டுகளை விடாமல் வீசிக்கொண்டிருந்தான். இன்னும் சிறிது தூரம் செல்லத்தான் எரிபொருள் இருந்தது. அதற்குள் எத்ரிகளை கொன்று குவித்து விட்டு அடுத்த இலக்கை அடைய வேண்டும். நடுநடுவில் வந்த பெரிய கட்டடங்கள் மீது குண்டுகளை வீசினான்.

கீழிருந்து எதிரிகள் தங்கள் பீரங்கிகளால் விமானத்தை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீசும் குண்டுகள் விமானத்தின் மீது பட்டுவிடாமல் வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.

திடீர் என்று விமானத்தின் பின்னால் இருந்து எதிரிகள் வீசிய குண்டு விமானத்தின் பின் பகுதியில் பட்டு, விமானம் நிலை தடுமாறி கிழே வேகமாக விழ ஆரம்பித்தது.

பீட்டர், அங்கே என்ன பண்றே. வீடியோ கேம் விளையாடியது போதும், சீக்கிரம் வந்து ஹோம் வொர்க் பண்ணு.


Saturday, August 27, 2011

மியுசியம் - 55 வார்த்தை சிறுகதைஇது ஒரு Sudden Fiction வகை கதை. இதை சுஜாதா அவர்கள் உடனடிக்கதை என்று குறிப்பிடுவார். உடனடிக்கதைகள் எளிமையானவை. கதை எழுதுபவனுக்கு சம்பவங்களும் கதாபாத்திரங்களும் நன்றாக தெரியும். ஆனால், எல்லாவற்றையும் வாசகர்களுக்கு காட்ட மாட்டான். ஒரு பகுதியை மட்டும் காட்டி மற்றவற்றை வாசகரை உணர வைப்பான். உடனடிக்கதைகள் 55 வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டும் என்ற நியதி இல்லாவிட்டாலும், இங்கு 55 வார்த்தைகளில் ஒரு உடனடிக்கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறேன். இனி கதைக்கு போகலாம்.


---------------------------------


சரி, சரி, சீக்கிரம் கிளம்புங்க. லேட்டா போனா உள்ளே அனுமதிக்கமாட்டாங்க.

ஒரு நிமஷங்க, இதோ கிளம்பிட்டோம்.

சில நிமிடங்களில் அனைவரும் கிளம்பி வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், அது சட்டேன்று வேகம் எடுத்தது.

சில மணிநேர பயணத்திற்கு பின் , புவிஈர்ப்பு விசையை லேசாக உணர ஆரம்பித்த சில நிமிடங்களில் ஜிவ்வென்று சென்று பூமியில் தரை இறங்கியது.

சுவாசிக்க மாஸ்க் போட்ட பின்னர் கீழிறங்கி, குழந்தைகளிடம் - இது தான் பூமி, நம்மோட மூதாதையர்கள் எல்லாம் இங்கே தான் வாழ்ந்தாங்க என்றேன்.

Friday, August 26, 2011

ஐரீனு ஐயாம் நாட் லவ் யு


ஆடுகளம் படத்திலே தனுஷ் சொல்ற வசனம் மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா. என்ன பண்ண, இப்ப இங்கே இருக்குற சூழ்நிலையிலே அதை தான் சொல்ல முடியும் போல இருக்கிறது. அண்ணன் இப்ப குளிக்கிறார், அண்ணன் டிபன் சாப்பிடுறார், அண்ணன் கிளம்பிட்டார் என்று எதோ ஒரு படத்தில் லைவ் கமெண்ட்ரி கொடுப்பது போல அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிற சூறாவளி ஐரீன் பற்றி டிவியில் எந்த சேனல் போட்டாலும் பேசிக் கொண்டிருகிறார்கள். நார்த் கேரலினாவில் இருந்து மக்களை வழுக்கட்டாயமாக வெளியேற சொல்லிவிட்டார்கள். அடுத்தது எந்தெந்த பகுதியில் இருந்து மக்களை ஊரைவிட்டு கிளம்ப சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. வீட்டை விட்டு மக்கள் வெளியே பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்று கொண்டிருகிறார்கள். என்ன செல்வம் சேர்த்து என்ன, இயற்கையின் முன்னால் ஒரு கொம்பனும் நிற்க முடியாது என்பது தான் உண்மை. அதன் சீற்றத்தில் இருந்து விலகி தலை தெறிக்க ஓட மட்டுமே முயற்சிக்கலாம் என்பது தெரிகிறது. 

இப்படி நிலை இருக்கும்போது, மக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஈமெயில் மற்றும் டிவியிலும் எல்லா பயபுள்ளங்களும் போய் ஒழுங்கா சாப்பாடு, தண்ணி (ஹலோ, வெறும் குடிக்கிற தண்ணி தான், ஓவரா கற்பனை பண்ணாதீங்க) எல்லாம் வாங்கி வெச்சுகோங்க என்று ஓயாம சொல்லிட்டு இருக்காங்க. சரி இவ்வளவு சொல்றாங்க, அதுக்கு மரியாதையை கொடுத்தாவது நம்மளும் போய் எதாவது வாங்கி ஸ்டாக் பண்ணுவோம்னு கடைக்கு போனேன். அங்க போய் பாத்தா, ஆளாளுக்கு ஷாப்பிங் கார்ட்டை புல்லா நிறைச்சிட்டு இருந்தாங்க. என்னடா ஒரு வருஷத்துக்கு தேவையானதை வாங்குறாங்க போலன்னு நினைச்சுகிட்டேன். அவங்களை சொல்லியும் குத்தம் இல்லை. ஏன்னா, அமெரிக்காவில் சாதரணமாக கரண்ட் போகாது, ஆனால் அப்படி போனால், திரும்பி வர சில நேரங்களில் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அதனாலே பிரிட்ஜிலே வைக்க வேண்டிய அவசியம் இல்லாத சாப்பாட்டு ஐட்டங்களா வாங்கி குவிக்கிறாங்க. எந்த நேரத்திலே ஊரை விட்டு வேறே இடத்துக்கு போக சொல்லுவாங்கனு தெரியாமே, மக்கள் எல்லாம் காருக்கு பெட்ரோல் நிரப்பிகிட்டு இருக்காங்க. இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் -ல் இருந்து கீழே பூமியை பார்க்கும் அஸ்டிராநட்ஸ் கூட, இங்கே இருந்து பாக்கவே ரொம்ப பயங்கரமா தான் இருக்கு என்கிறார்களாம்.

ஐரீன் அடுத்த இரு நாட்களில் எந்த பக்கம் திரும்புவானு எல்லாரும் உன்னிப்பா பாத்துட்டு இருக்கோம். பாக்கலாம் ஒன்னும் பெரிசா பிரச்சனை இல்லாம ஐரீன் கரை கடந்தால் நன்றாக இருக்கும்.

உங்க பிரெண்ட்ஸ் இந்த லிஸ்ட்லே இருக்காங்களா ?பேஸ்புக் அக்கௌன்ட்லே இருநூறு முன்னூறு பிரண்ட்ஸ் வெச்சு இருக்கறவங்களை பார்த்தா ஆச்சரியமா இருக்கும். எப்படி இத்தனை பேரை நியாபகம் வெச்சு அவங்க கூட பழகுறாங்கன்னு. இந்த மாதிரி சோசியல் நெட்வொர்கிங் வெப்சைட்லே அம்பது பேருக்கு மேலே பிராக்டிகலா பராமரிக்கறது ரொம்ப கஷ்டம்னு ஏதோ ஒரு ஆர்டிகல் படிச்சேன். சரி இந்த பதிவு பேஸ்புக் பத்தி இல்லை. இப்போ விஷயத்திற்கு வரேன். எல்லோருக்கும் பிரண்ட்ஸ் இருப்பாங்க. ஒவ்வொரு ப்ரெண்டும் ஒவ்வொரு ரகம். அப்பிடி இருக்குற வித விதமான பிரண்ட்ஸ் டைப் பத்தி என்னோட அனுபவத்துலே தெரிஞ்சதை இங்கே பகிர்ந்துக்குறேன்.

டிஸ்கி: இதை மத்தவங்களை குத்தம் சொல்றா மாதிரி பாக்காதீங்க. எல்லார் கிட்டேயும் நிறை குறைகள் இருக்கு. நம்ம நண்பர்கள் கிட்டே குறைன்னு நாம நினைப்பதை, எடுத்து சொல்லலாம் இல்லேன்னா அந்த ஏரியாவை மட்டும் அவாய்ட் பண்றது நல்லது. எனக்கு தெரிஞ்ச பிரண்ட்ஸ் வகைகளை இங்கே வரிசைப்படுத்தி இருக்கேன். இந்த வகையில் சில நேரங்களில் நானும் இருப்பேன். சும்மா ஜாலியா எடுத்துட்டு, உங்களோட அனுபவத்தையும் சொல்லுங்க. 


பொசசிவ் பொன்னுமணி / பொன்னமா:

இவங்க எப்படினா, நாம இவங்க கிட்டே மட்டும்தான் பிரெண்டா இருக்கணும்னு நினைப்பாங்க. மத்த யார் கிட்டேயும் பழகினா இவங்களுக்கு பிடிக்காது. அப்பிடி பழகினாலும் இவங்களையும் கூட்டு சேத்துகிட்டா ஓகே, இல்லேனா ஒரு வழியாக்கிடுவாங்க. அதே சமயம் இவங்க நம்மளை தவிர்த்துட்டு நிறைய பேர் கிட்டே பழகுவாங்க, அதை நாம ஒன்னும் கேட்க கூடாது.

திடீர் தங்கப்பன் / தங்கம்மா:

இவங்க ஆரம்பத்தில நல்லா பழகுற மாதிரி இருக்கும். அப்புறம் சில நாட்கள் கழிச்சு தான் அவங்க சுயரூபம் ஓரளவுக்கு புரியும். திடீர்னு காரணமே இல்லாம நம்மளை கண்டுக்க மாட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு நாள் திடீர்னு பாசமழை பொழிவாங்க. நம்மளாலே இன்னும் ஒரு மாசம் கழிச்சு ஏதாவது வேலை ஆகணும்னா, இன்னிக்கே பிட்டை போட ஆரம்பிச்சுருவாங்க. இதுலே இன்னொரு விஷயம் என்னனா, சில நேரங்கள்லே இந்த மாதிரி இடைவெளி விட்டு பேச ஆரம்பிக்கும் போது,  என்ன நீங்க எங்க கூட எல்லாம் பேசறதே இல்லேன்னு நம்ம மேலேயே பழியை தூக்கி போட்டு நம்மளை ஒரு நிமிஷம் கண்புயுஸ் பண்ணிருவாங்க.

போட்டு கொடுக்கும் பொன்னம்பலம் / பொன்னாத்தா:

இவங்க எப்படினா, யாரையாவது பத்தி தப்பா ஒரு வார்த்தை நம்ம கிட்டே எடுத்து விடுவாங்க. நம்மளும் உணர்ச்சிவசப்பட்டு ஆமாம் கரெக்டு, அவங்க சரியில்லை என்று ஓவரா கொட்டிவிட்டோம் என்றால் அவ்வளவு தான். அடுத்த நாளே அந்த விஷயம் நாம் யாரை குறை கூறி பேசினோமோ அவர்கள் காதுக்கு சென்றடையும்.

பா(யா)ச மணி:

சூப்பர்ஸ்டார் நடிச்ச வள்ளி படத்தை பார்த்தவங்களுக்கு இந்த கேரக்டர் ஈசியா புரியும். அதிலே பயில்வான் ரங்கசாமி ஒரு கூட்டத்தோட மரத்தடியிலே உக்காந்து பேசிட்டு இருப்பார். பேசிட்டு இருந்ததிலே, யாராவது ஒருத்தன் எழுந்து போனா, அவனை பத்தி கேவலமா பேசுவார். அதே டைப் ஆளுங்க நிறைய பேரு நாட்டுலே இருக்காங்க. நம்மளை பத்தி மத்தவங்க கிட்டே தப்பா பேசுவாங்க, நம்மளை நேர்ல பாத்தா, வாயிலையே பாயசம் வைப்பாங்க.

தங்கமணி பிரியன்:

இவர் எப்படினா தன் மனைவி யார்கிட்டே பழக சொல்றாங்களோ அவங்க கிட்டே மட்டும் தான் பேசுவாரு, பழகுவாரு. பல நாள் பழகினவரா இருந்தாலும், பெண்களுக்குள்ளே ஒரு பிரச்சனைனா, இவர் அந்த நட்பை முறித்து கொள்வார். (நான் இப்படி கிடையாது...ஹி ஹி...)

பல்டி பரந்தாமன்:

பல வருடங்களுக்கு முன்னர் படித்த ஜோக்:

அவர்: என்ன சார், குழந்தைய கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க ?
இவர்: கோர்ட்லே சாட்சிகள் எல்லாம் பல்டி அடிக்கிறாங்கன்னு பேப்பர்லே பாத்தேன், அதான் காட்டிட்டு போகலாம்னு வந்தேன்.

பல்டி பரந்தாமன் எப்படினா, எதாவது ஒரு விஷயத்திற்கு முதலில் சரி என்று தலையாட்டுவார். பின்னர் அவர் மனைவி வேண்டாம் என்று சொன்னால் அப்படியே பல்டி அடித்து வேண்டாம் என்று சொல்லிவிடுவார். உதாரணதிற்கு ஒரு சிறிய கதை இங்கே...

பரந்தாமனிடம் அவர் நண்பர் ஒருவர், அண்ணே, வரீங்களா, வேலூர்லே ஒரு வேலை இருக்கு, போயிட்டு வரலாம். எவ்வளவு நேரம்ணே ஆகும் போய்ட்டு வர்றதுக்கு...

அதுக்கு என்னடா, வரேன். இங்கே இருந்து பாரிஸ் கார்னர் போக ஒரு அரைமணி நேரம். அங்கே இருந்து பாயிண்ட் டு பாயிண்ட் பிடிச்சா மூணு மணி நேரத்துலே வேலூர். வேலையை முடிஞ்சதும், சாப்பிட்டிட்டு கிளம்பினா சாயங்காலம் ஐஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துரலாம்.

இதற்குள் பரந்தாமனின் மனைவி - என்னங்க கொஞ்சம் இங்கே உள்ளே வாங்க - உள்ளே சென்ற பரந்தாமனிடம், கிசிகிசுப்பாக, உங்களுக்கு வேறே வேலையே இல்லேன்னு நினைப்பா, இப்போ ஒன்னும் வேலூர்க்கு போக வேண்டாம். ஒழுங்கா வீட்டுல இருங்க.

பரந்தாமன் வெளியே வந்து, அது...வந்து...இந்த வேலூர்க்கு இன்னிக்கே போகணுமாடா...இப்பவே மணி எட்டரை ஆச்சு, இன்னும் குளிச்சு, சாப்பிட்டிட்டு கிளம்பி பஸ் ஸ்டான்ட் போய், பஸ் பிடிச்சி பாரிஸ் கார்னர் போக எப்படியும் பதினொன்னு ஆகிடும். அங்கே இருந்து பாயிண்ட் டு பாயிண்ட் பிடிச்சாலும், எப்படியும் சாப்பாடுக்கு, அரை மணிநேரம் போடுவான். நாம அங்கே போய் சேரவே மணி மூணு ஆகிடும். அதுக்கப்புறம் உன்னோட வேலைய முடிச்சுட்டு கிளம்பி வர நைட் பதினோரு மணி ஆகிடும். இன்னொரு நாள் பாத்துக்கலாமே என்றார்.

இன்னும் நிறைய டைப் இதை போல சொல்லிகொண்டே போகலாம். உங்கள் அனுபவத்தில் இதை போல பிரண்ட்ஸ் டைப் இருந்தால் பின்னூட்டத்தில் எடுத்து விடுங்கள். 

Saturday, August 20, 2011

வட்டம் - 55 வார்த்தை சிறுகதைஎன்ன சாரதா, நாப்பது பவுனுக்கு என்ன பண்றது. இன்னும் கல்யாணச் செலவு வேற இருக்கு என்றார் கிருஷ்ணமூர்த்தி.

ஆமாங்க, நம்ம பொண்ணை வியாபாரப் பொருளாப் பாக்குறாங்க. இந்த வரதட்சணை கொடுமை என்னைக்குத்தான் ஒழியுமோ ?

பேசாமே நம்ம தாம்பரம் நிலத்தை வித்துடலாம். குமார் படிப்புக்கும் உதவும்.

நிலம் விற்ற பணத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. 

சில வருடங்களுக்குப்பின், கல்யாணத் தரகரிடம் - எங்களுக்கு ஒரே பையன், இன்ஜினியரிங் முடிச்சிட்டு கை நிறைய சம்பாரிக்கிறான், நூறு பவுனுக்கு குறையக்கூடாது என்றாள் சாரதா.

Saturday, August 13, 2011

குப்பை - 55 வார்த்தை சிறுகதை

சுஜாதா அவர்களின் 55 வார்த்தை கதைகளின் மேல் கொண்ட ஈர்ப்பால் நான் முயற்சி செய்துள்ள சின்னஞ்சிறுகதை. இந்த கதையில் மொத்தம் 55 வார்த்தைகள் மட்டுமே. எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

குப்பைதீபாவளி சமயம் அலுவலக விடுமுறைக்கு பெரியம்மா  வீட்டுக்கு வந்திருந்த அரவிந்தன் காலை உணவு திருப்தியாக சாப்பிட்ட பின் கை கழுவ வாஷ்பேசின் அருகே வந்தான். 

சட்டென்று முகம் மாறி அருகில் இருந்த டம்ப்ளரில் தண்ணீர் பிடித்து ஹாலில் நடுவே கை கழுவினான்.

அரவிந்தா என்ன பண்றே என்று பதறிய பெரியம்மாவைப் பார்த்து சிரித்தபடி, நீங்க மட்டும் குப்பையை கொண்டு போய் குப்பைத்தொட்டியில் போடாம மாடிலே இருந்து கிழே வீசலாம், நான் நடு வீட்டில் கை கழுவக்கூடாதா என்றான்.

Friday, August 12, 2011

பக்கோடா - சிறுகதை (சைதாபேட்டை நினைவுகள்)டேய் இன்னாடா அது பையிலே தூக்கினு போறே என்று கேட்ட பக்கத்துக்கு வீட்டு ரகு அம்மாவை சற்று எரிச்சலுடன் பார்த்தேன். இதுக்கு வேறே வேலையே இல்லியா நம்மளை நோட்டம் விடுறது தான் இதுக்கு முக்கிய வேலை என்று நினைத்து கொண்டாலும் அதை வெளியே காட்டிகொள்ளாமல் பதில் கூறினேன்.
அது ஒன்னும் இல்லீங்க, முருகர் கோவிலுக்கு எதுர்க பக்கோடா கடை இருக்குதில்லே, அங்கே பக்கோடா, மிச்சர் போட்டு குடுக்க இந்த மாறி கவர் செஞ்சு குடுத்தா, நூறு கவருக்கு 75 காசு குடுப்பாங்க. அதான் வூட்டுல இருந்த பழைய பேப்பர்லே கவர் செஞ்சு எடுத்துனு போறேன் என்றேன்.

ஏய், உனுக்கு ஏண்டா இந்த தேவல்லாத வேலை, படீக்ரத வுட்டுட்டு, இரு இரு உங்க அம்மா கைலே சொல்றேன். இந்த பக்கோடா கடைக்காரன் இப்பிடி கவர் செஞ்சு குடுத்தா துட்டு குடுப்பானு இவ்ளோ நாள் எனுக்கு தெரியாம போச்சே, இரு அவனை இப்பமே போய் இன்னான்னு கேக்குறேன்.

சர்தான், இதுக்கும் வெச்சுதா ஆப்பு, எதோ கவர் வித்து கொஞ்சம் மூசுண்ட வாங்கி துன்னலாம்னு பாத்தா அத்த போய் இது கெடுக்குதே என்று மனதில் நினைதுகொண்டதை  வெளியில் காட்டாமல், ஐயோ வேணாங்க இந்த ஒரு தபா மட்டும் தாங்க, இனிமேல் பண்ண மாட்டேன், அம்மா கைலே சொல்லாதீங்க என்று கெஞ்சினேன்.

செரி, செரி சொல்லலே, அந்த பைய என் கைலே குடுத்துட்டு நீ போய் படீக்ற வேலைய பாரு. இன்னொரு தபா இத்த செஞ்சே அவ்ளோதான், அக்காங்...என்று பெரிய மகராணி தோரணையில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரகு அம்மா.

சில மணி நேரம் வீட்டில் உட்கார்ந்து ஏதேதோ செய்து கொண்டிருந்த நான், பின்னர் போரடிகுதே, ரகுவை கூப்பிட்டு எதாவது வெளையாடலாம என்று நினைத்து கொண்டிருந்தபோது  டிரௌசர் பாக்கட்டில் வைத்திருந்த கோலிக்குண்டுகள்  சலசலத்தது.

ரகு வீடு வாசலில் நின்று குரல் கொடுத்தேன், டேய் ரகு, வரியாட கொஞ்ச நேரம் ராஜா டோனி வெள்ளாடலாம்.

கொஞ்சம் உள்ளே வந்து உக்காருடா, எங்க அம்மா ஒரு வேலை கொடுதிருகுறாங்க, அத்த முட்சிடு வரேன் என்றான் ரகு.

நான் உள்ளே நுழைந்து பார்த்தபின் அதிர்ச்சில் ஒரு கணம் தடுமாறிவிட்டேன். ரகு, அவன் அக்கா, அண்ணன் என குடும்பமே பக்கோடா கட்ட கவர் செய்துகொண்டிருந்தது.

Tuesday, August 9, 2011

இந்திய பயணம், பாரிஸ் மற்றும் பதிவு எழுதுவது


ஒரு வழியா இந்திய பயணத்தை முடிச்சிட்டு, அமெரிக்க வாழ்க்கையிலே ஓடுறதுக்கு திரும்பி வந்தாச்சு. ஏர்போர்டுக்கு வழியனுப்ப வந்த உறவினர்கள் பலர் கண்கள் கலங்கி சிவந்து இருந்ததை கண்டு, நாங்களும் கலங்கி போய் கனத்த மனதுடன் தான் விடைகொடுத்தோம். இது போன்ற நேரங்களில் நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்ற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன சொல்ல இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை தவிர...சரி சொல்ல வந்ததை விட்டுவிட்டு, இப்படி சீரியஸ் ட்ராக்குக்கு போகலே. இந்தியா வரும் வழியில் பாரிஸ் ட்ரான்சிட்-ல்  சுமார் பதினோரு மணிநேர டைம் இருந்ததால், ரொம்ப நாள் பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்த ஈபில் டவர் போய் பாத்துட்டு வந்தோம். பாரிஸில் அன்று அவ்வபோது மழை பெய்தது, ஆனாலும் ரெயின் கோட் வாங்கி அணிந்து கொண்டு ஊர் சுற்றி பார்த்தோம். பாரிஸில் ஈபில் டவர் தவிர இன்னும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்குனு உள்ளே போய் பாத்தாதான் தெரியுது. எல்லாம் அவ்வளவு அழகு. ஊருக்கு போனதும், ஒழுங்கா பிரெஞ்சு வரலாற்றை பற்றி படிக்கணும்னு நினைச்சுகிட்டேன். எதாவது நல்ல புத்தகம் தெரிந்தால் சொல்லுங்க.

பாரிஸ் போயிட்டு வர விசயத்திலே, முதல்லே ஏர்போர்ட் விட்டு வெளிலே போய்ட்டு திரும்பி நேரத்துலே வந்து பிளைட் பிடிக்க முடியுமான்னு ஒரே குழப்பமா இருந்தது. சரி இருக்கவே இருக்கு நம்ம ப்ளாக் சைட், அதுலே ஒரு பதிவு போட்டு கேட்டு பார்ப்போம். நம்மை பதிவையும் மதிச்சு படிக்க வருபவர்களில், யாரவது ஒருத்தர் பாரிஸ்லே இருந்து பதில் சொல்ல மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை இருந்தது. என்ன ஆச்சரியம் பாருங்க, யாரோ ஒருத்தர் பேர் சொல்லாம அனானி முகவரிலே இருந்து பதில் போட்டு இருந்தாரு. பாரிஸ் பற்றி விவரங்கள் அளித்த அந்த அன்பருக்கு என் நன்றிகள், நீங்க இந்த பதிவை படித்தீர்கள் என்றால் உங்கள் பெயரை குறிப்பிட  வேண்டுகிறேன். நம்ம ப்ளாக் எழுதறதுல எப்படி எல்லாம் உதவி கிடைக்குது பாத்தியா என்று தங்கமணியிடம் சொல்லி ரெண்டு நாள் சிலாகித்துகொண்டிருந்தேன். ஆமாம் கூகிள்லே போட்டா பதில் வந்து தானா விழுது, இதுக்கு போய் அந்த கம்ப்யுட்டரை முறைச்சு முறைச்சு பாத்துகிட்டு ப்ளாக் எழுதறது தேவையா என்று ஒரு முனுமுனுப்பு கேட்டது. ப்ளாக் எழுதுவதில் எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை இருக்குனு தெரியலே, நான் எப்போ ப்ளாக் எழுத உக்காந்தாலும் உடனே இதை பண்ணலியா அதை பண்ணலியா என்று வீட்டுலே இருக்கிற நண்டு சிண்டுங்க கூட வந்து வேறே எதாவது வேலை தருவாங்க. எனக்கெல்லாம் எழுத தோணுவதே பெரிய விஷயம், அதை எழுத ட்ரை பண்ணும் போது அதுக்கு வர தடைகள் இருக்குதே, எப்பா சொல்லி மாளாது. அதுலே தங்கமணி சொல்ற இன்னொரு விஷயம், 'நீங்க எழுதும் போது நீங்க ரொம்ப டென்சனா இருக்குற மாதிரி இருக்கு, எதுக்கு அப்பிடி டென்சனா எழுதணும்' என்று அக்கறையா கேக்குற கேள்விக்கெல்லாம் என்னத்தை பதில் சொல்றது. ஏதோ நான் எதையாவது எழுதி/கிறுக்கி முடித்தால் ஒரு வித திருப்தி கிடைகிறது. அதைவிட திருப்தி அதற்கு நீங்கள் பின்னூட்டம் இடும்போது கிடைகிறது. அதனால் முடிந்த வரை நேரத்தை ஒதுக்கி மனதிற்கு தோன்றியதை எழுதுகிறேன். சரி இப்படி நான் பதிவு எழுதும் கதையை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். நான் சொல்லவந்ததை விட்டு விட்டு திரும்பவும் ரூட் மாறுகிறேன். என்ன சொல்லவந்தேன் ? ஆங்...இந்திய பயணம் நன்றாக இருந்தது. அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பொதுவாக நன்றாக கழிந்தது. எப்போதும் போல பயண நினைவுகளை அசை போட்டுகொண்டு அடுத்து முறை செல்வதற்காக காத்திருப்பு தொடர்கிறது. இங்கே சாம்பிளுக்கு ஒரு ஈபில் டவர் படம், மற்ற படங்களை தனியாக இன்னொரு பதிவில் போடுகிறேன்.மேகமூட்டமான வானிலையில் ஈபில் டவர்Friday, August 5, 2011

கோவை - சில புகைப்படங்கள்


அவினாஷி சாலை - மாலை சுமார் ஆறு மணி அளவில்

கோவை வ.உ.சி பூங்கா

வ.உ.சி பூங்கா எதிரில் உள்ள சாலை

வ.உ.சி பூங்கா எதிரில் உள்ள சாலை

மருதமலை மேலிருந்து கோவை ஷாட்

மருதமலை மேலிருந்து கோவை ஷாட்

மருதமலை அடிவாரம்

சைதாபேட்டை நினைவுகள்
என் பின்னால் சுமார் பத்து பேர் கொண்ட ஒரு சிறிய கூட்டமே ஒடி வந்துகொண்டிருந்தது. டேய் புடிரா, விட்டுற கூடாது...என்று ஆக்ரோஷமான குரல்கள் கேட்டது. எனக்கு எப்படி ஒரு வேகம் வந்ததோ தெரியவில்லை எல்லோருக்கும் முன்னே ஒடிகொண்டிருந்தேன். அந்த வேகத்தில் ஓடும்போதும் என் கண்கள் மட்டும் வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. எனக்கும் என்னை பின்தொடர்ந்த கூட்டத்திற்கும் குறைந்தது பத்தடி தொலைவு இருக்குமாறு பார்துகொண்டேன். மூச்சிரைத்தது, போதும் ஓட்டத்தை விட்டுறலாமா என்று தோன்றியது. வேண்டாம், இப்போ விட்டால் இந்த மாதிரி வாய்ப்பு திரும்ப கிடைக்க எத்தனை நாள் ஆகுமோ தெரியாது. மனதிற்குள் உத்வேகத்தை ஏற்படுத்திக்கொண்டு வேகத்தை கூட்டினேன். இன்னும் சிறிது தூரம் தான் என்று எனக்குள் கூறிக்கொண்டு வானத்தை பார்த்தபடி ஓடினேன். இந்த மாதிரி ஒடிகொண்டிருப்பது அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான், என்னை ஒரு வழி ஆகிவிடுவாள். ஆனாலும் ஆசை யாரை விட்டது, இப்போது என் நோக்கம் எல்லாம் வேகமாக ஓடுவதுதான். இதோ என் இலக்கை நெருங்கி விட்டேன். சற்றே வேகத்தை கூட்டி இரண்டடி தாவி டீலில் அறுந்து வந்த, அந்த 1 சீட் (sheet) ரெட்டை கண் பானா காத்தாடியை பிடித்தேன். 


பின் குறிப்பு: சென்னை, சைதாபேட்டையில் வளர்ந்த நான், சிறுவயது நினைவுகளை அவ்வபோது எடுத்துவிட நினைத்ததின் விளைவே இந்த மைக்ரோ சிறுகதை.

Thursday, August 4, 2011

இந்திய பயணம், உதவும் கரங்கள் மற்றும் பாரிஸ் வாழ் மக்களுக்கு ஒரு கேள்விஇந்திய பயணம்:

இப்போது தான் இந்திய பயணம் என்று பதிவு எழுதியது போல இருக்கிறது, அதற்குள் திரும்பி இரை தேடும் வாழ்க்கைக்கு கிளம்பும் நாள் நெருங்கிவிட்டது. ஷாப்பிங், உணவகங்கள்,  உறவினர்களை சந்திப்பது, கோவில் குளம் சென்று வருவது என்று நன்றாக கழிந்தது. இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், எங்கள் மகள் பிறந்தநாளை மருதமலை கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, அங்கு அருகில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக (ஆதரவற்ற ? - இப்படி கூறலாமா என்று தெரியவில்லை, வேறு எதாவது வார்த்தை உள்ளதா ?) 'உதவும் கரங்கள்' நடத்தும் சொந்தம் என்கிற இடத்தில் கொண்டாடினோம். சுமார் எழுபது குழந்தைகள் உணவு மற்றும் இனிப்பு வகைகள் வழங்கிவிட்டு அவர்கள் அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்து பாடுவதை கேட்டு எனக்கு லேசாக கண்ணீரே வந்துவிட்டது. வேறு இடத்தில் எத்தனை ஆயிரம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாடினாலும் இந்த நெகிழ்ச்சி கிடைப்பதில்லை. இந்த எழுபது குழந்தைகளை பார்த்துகொள்வதுடன் அவர்களே அருகில் இந்த குழந்தைகளுக்கென ஒரு பள்ளியும் நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியில் வெளியில் இருந்து குழந்தைகள் வந்து பயில்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியா வந்தபோது, இதே இடத்தில் எங்கள் மகள் பிறந்தநாளை கொண்டாடினோம். அப்போது அங்கு 'சிம்ரன்' என்று பெயரிடப்பட்ட சிறு குழந்தையை எங்களுக்கு ஏனோ மிகவும் பிடித்திருந்தது. அப்போது சிறு குழந்தையாக பார்த்த சிம்ரன் நன்றாக வளர்ந்திருந்தாள். அந்த குழந்தைக்கென்று தனியாக எதாவது செய்யவேண்டும் என்று எங்கள் மகள் விரும்பியதால், சிம்ரனின் வருடாந்திர கல்வி செலவை நாங்கள் ஏற்றுகொள்வதாக கூறி, இந்த வருடத்திற்கான தொகையை கட்டிவிட்டு வந்தோம். அந்த குழந்தையின் முகத்தில் அப்படியொரு வெட்கம் கலந்த சந்தோசம். உதவும் கரங்கள் அமைப்பு தங்களுக்கு வரும் நன்கொடையை மற்ற பிரபலமாகாத சிறிய அமைப்புகளுக்கும் கொடுத்து உதவுதாக கேள்விப்பட்டேன். நீங்கள் கோவைக்கு சென்றால், இங்கு சென்று முடிந்த உதவி செய்ய கேட்டுக்கொள்ளவே இந்த விஷயத்தை கூறுகிறேன். இன்னொரு தகவல் - இங்கு வளரும் எல்லா குழந்தைகளுக்கும் அவர்களின் பெயரின் பின்னே வித்யாசாகர் என்று இந்த அமைப்பை உருவாக்கியவரின் பெயரை Lastname -ஆக போடுகிறார்கள்.

பாரிஸ் வாழ் மக்களுக்கு ஒரு கேள்வி:

இந்த வாரம் பாரிஸ் (Paris, Charles de Gaulle -CDG) வழியாக பாஸ்டன் செல்கிறேன். பாரிசில் சுமார் பதினோரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்திற்குள் ஏர்போர்ட் விட்டு வெளியே சென்று அருகில் எதாவது பார்த்துவிட்டு திரும்ப முடியுமா அல்லது ஏர்போர்ட்டிலேயே காத்திருப்பது உத்தமமா ? பாரிஸ் வாழ் மக்கள் அல்லது இது பற்றி தெரிந்தவர்கள், எதாவது ஐடியா கொடுத்தால் நன்றாக இருக்கும். 

Tuesday, August 2, 2011

சென்னை சில்க்ஸ் - கோவை அனுபவம்

நீங்கள் எப்போதாவது தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு பிரபல ஜவுளி கடைக்குள் சென்றுவிட்டு எதுவும் வாங்காமல் வெளியே வந்து இருகிறீர்களா. உள்ளே செல்லும் போது நம்மை வணக்கம் போட்டு வரவேற்பவர்கள், எதுவும் வாங்காமல் வெளியே வரும்போது - என்ன சார் எதுவும் வாங்கலியா, ஏன் எதற்கு என்று கேட்டு ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். ஒரு முறை குடும்பத்துடன் சென்னை சில்க்ஸ் (சென்னையில்) கடைக்குள் சென்று பின்னர் நான் மட்டும் வெளியே வந்த போது அங்கு வாசலில் நிற்கும் சிப்பந்திகள் என்னை சுலபத்தில் விடவில்லை. அவர்களிடம் விளக்கம் கூறி வெளியே வருவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. இது நடந்து சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்போது அந்த நிகழ்ச்சிக்கே - என்னடா இது கடைக்குள்ளே போயிட்டு ஒன்னும் வாங்காம வர விடமாட்டாங்க போல இருக்கே என்று எரிச்சல் பட்டவன் நான். இந்த முறை இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த கதையை கேளுங்கள்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடைக்கு மனைவி மற்றும் உறவினர் ஒருவருடன் சென்றிருந்தேன். எங்கள் காரை ஒட்டி வந்த டிரைவரிடம், கடைக்கு கீழே உள்ளே பார்கிங் பகுதியில் பார்க் செய்துவிட்டு காத்திருக்குமாறு கூறிவிட்டு கடைக்குள் சென்றோம். உள்ளே சென்று நாங்கள் வாங்க விரும்பிய ஆடையை தேடி பார்த்தோம், எதுவும் சரியாக இல்லை. யாரவது உதவிக்கு வருவார்களா என்று பார்த்தோம். ஓரிருமுறை கேட்டும், அந்த பக்கம் யாரும் வரவில்லை. எங்களுக்கும் நேரம் இல்லாததால் சரி, இன்னொரு நாள் வந்து பாத்துக்கலாம், மத்த பொருள் எல்லாம் போய் வாங்கிட்டு வரலாம் என்று கூறி அங்கிருந்து கிளம்பினோம். சென்ற முறை சென்னையில் ஏற்பட்டது போல, வெளியே செல்லும் போது யாரும் எங்களை கேள்வி கேட்கவில்லை. பரவால்லியே, இப்போ கொஞ்சம் மாறி இருக்கே நம்ம ஊரு என்று பெருமையுடன் கூறினேன். அதன் பிறகு, அருகில் மற்ற கடைகளுக்கு சென்றுவிட்டு சுமார் அரை மணிநேரம் கழித்து சென்னை சில்க்ஸ் வாசலுக்கு திரும்பினோம். ட்ரைவரை செல்போனில் அழைத்து கடை வாசலுக்கு வருமாறு கூறிவிட்டு காத்திருந்தோம். சில நிமிடங்களில் கார் வந்து நிற்க நாங்கள் உள்ளே உட்கார முற்படும் போது, அங்கு வேலை செய்யும் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்தார். அதுக்கு அப்புறம் எங்களுக்குள் நடந்த சம்பாஷணையை கீழே பாருங்கள்.

கொஞ்சம் நில்லுங்க, பர்சேஸ் ப்ரூப் எங்கே காட்டுங்க என்று சற்று அதிகாரமான குரலில் கேட்டார்.

அதற்கு நான் அவரிடம், சார், நாங்க வாங்கனும்னு நினைச்சு வந்த டிரஸ் கிடைக்கலே, தவிரவும் எங்களுக்கு கடையிலே உதவவும் யாரும் வரலே. அதனாலே வெளிலே வந்து வேறே பொருட்கள் வாங்கிட்டு கிளம்புறோம். பார்கிங் சார்ஜ் எதாவது வேணும்னா கூட குடுக்குறோம்னு பொறுமையா சொன்னேன்.

அதெல்லாம் முடியாது, இங்கே பார்கிங் பண்ணினா எதாவது வாங்கியே ஆகணும்.

இது சுரீர் என்று எனக்கு கோபத்தை கூடிவிட்டது. என்னங்க இது அநியாயம், உங்க கடைக்கு ஒரு பொருள் வாங்கனும்னு வரோம், அது புடிக்கலேனா என்ன பண்றது. கார் பார்க் பண்ணினதுக்காக எதாவது வாங்கியே ஆகணுமா என்ன ?

ஆமாம் நீங்க கண்டிப்பா எதாவது வாங்கியே ஆகணும்.

சரி, நான் உங்கள் மேனேஜர் கூட பேசணும் என்றேன்.

இங்கே நான் தான் மேனேஜர், எதுவா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க.

ஒ, அப்படியா, இந்தாங்க நூறு ரூபா, இதை பார்கிங் சார்ஜா வேணும்னா வெச்சுகோங்க, இல்லேனா எதாவது பொருள் வாங்கினதா நினைச்சுங்கோங்க. பேமிலி கூட வந்து இருக்கேன், இப்படி நடு ரோட்டுலே வெச்சு பேச்சை வளர்க்க நான் விரும்பலே.

அதெல்லாம் முடியாது, நீங்க கடைக்குள்ளே வந்து எதாவது வாங்கியே ஆகணும்.

எனக்கு உஷ்ணம் கூடிவிட்டது. இங்கே பாருங்க, இந்த மாதிரி என்னை ஏதாவது வாங்கறதுக்கு கட்டாயபடுத்தினா, இனிமேல் இந்த கடைக்கு நான் வரமாட்டேன். அது உங்களுக்கு ஓகேன்னு நினைசீங்கனா நான் கடைக்குள்ளே வந்து எதாவது வாங்குறேன் என்றேன்.

சரி, நீங்க இனிமேல் கடைக்கு வரவேண்டாம், இப்போ உள்ளே வந்து எதாவது வாங்குங்க.

நான் உள்ளே நுழைந்து முதலில் தென்பட்ட செக்சனில் இருந்து  கைக்குட்டை வாங்கி அதற்கு பணமும், அந்த கைக்குட்டையையும் அவருக்கு அன்பளிப்பாக! கொடுத்துவிட்டு வந்தேன்.

பின் குறிப்பு: இது பற்றி சென்னை சில்க்ஸ் வெப்சைட்டில் உள்ள எல்லா ஈமெயில் முகவரிக்கும் எழுதி சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இதுவரை எந்த பதிலும் இல்லை.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...