Saturday, June 11, 2011

பொய்

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம்,  பொய்மையும் வாய்மை இடத்து  போன்ற வரிகளை பார்க்கும் போது,  நல்ல விஷயத்திற்காக ஒரு பொய் இல்லை பல பொய்கள் கூட  சொல்லலாம் என்று அறியலாம். ஆனால் பொய் சொல்வது தவறு என்று பல சான்றோர்கள் கூறவும், பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது போன்ற பழமொழிகளில் இருந்தும் அறிகிறோம். அதனால் இந்த பதிவு பொய் சொல்வது சரியா தவறா என்று தீர்மானிக்கவோ அல்லது யாரும் பொய் சொல்லகூடாது என்கிற போதனையோ அல்ல. ஏன் பொய் சொல்கிறோம் என்கிற ஒரு அலசல் மட்டுமே. இங்கு 'சொல்கிறோம்' என்று உங்களையும் ஒரு உரிமையுடன் என்னுடன் சேர்த்து கொள்கிறேன். அப்படி நீங்கள் இதுவரை பொய்யே சொல்லதவராக இருந்தால், ப்ளீஸ் இதற்கு மேலே நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஏனென்றால் இதை படித்துவிட்டு நீங்கள் கெட்டுபோய் விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் கூறுகிறேன். முதலில் முக்கியமாக ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறேன். இதை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காயப்படுத்த எழுதவில்லை. பல நாட்களாக மனதில் நினைத்து கொண்டிருந்ததை இப்போது எழுதுகிறேன்.  சரி நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பொய் சொல்லி இருப்பார்கள்.  பொதுவாக பொய்யை சுயநலம் காரணமாகவோ அல்லது பயம் காரணமாகவோ சிறு வயதிலேயே கூற பழகி விடுகிறோம். சிறு வயதில் தவறு செய்து பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ இருந்து தப்பிக்க கூறும் சிறு சிறு பொய்களில் இருந்தே பொய்யெனும் குன்றா விளக்கை நாம் ஏற்ற துவங்கிவிடுகிறோம். இப்படி தொடங்கி பின்னர் வளர்ந்து வயது வந்ததும் அந்த அந்த நிலைக்கு ஏற்ப பல நேரங்களில் பொய் சொல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறோம். திருக்குறள் தொடங்கி பல சமய நூல்களில் கூட நல்ல விசயத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற கருத்து நமக்குள் திணிக்கபடுகிறது. பொதுவாக நன்மை தீமை என்பது அவரவர் நிலையில் இருந்து வேறுபடும். இதற்கு உதாரணமாக 'ஹே ராம்' என்ற திரைப்படத்தில் வரும் வசன வரிகளை கூறலாம். ஒரு ஓநாய் சிறிய குழந்தையை தூக்கிகொண்டு போனால் அது தவறில்லையா என்ற கேள்விக்கு அது அந்த ஓநாயாய் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் என்று பதில் வரும்.  மனிதனோ அல்லது விலங்கினமோ தன் சுயநலத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இயற்கையே கற்று கொடுத்திருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இங்கு சுயநலம் என்பது உயிர் வாழ்வது என்கிற மிக அடிபடையான உரிமையையே குறிக்கிறது.  கற்கால மனிதன் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்து கொண்டு தன் உணவை தானே வேட்டையாடி உண்ணும் நிலையில் இருந்து பரிணாம வளர்ச்சியால்  இன்று  சமூகம், அறிவியல், அன்பு, காதல், குடும்பம், உறவு, நட்பு இப்படி பலவற்றை சொல்லிகொண்டே போகும் அளவில் பல முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறான்.

இப்படி வளர்ச்சி பெற்ற மனித இனம் தன் இனத்திற்கே செய்யும் தாக்குதல்கள் பல இருந்தாலும், அன்றாட வாழ்வில் உள்ள  சமூக உறவில் காணப்படும் பொய்யை பற்றி மட்டும் பார்ப்போம். நாம் பல நேரங்களில் சூழ்நிலைக்கு தக்கவாறு பொய் சொல்லி தப்பித்துகொள்ள முயல்வோம். இதில் மிக  முக்கியமாக சுய விருப்பங்களை பாதுகாத்து கொள்ளும் ஒருவித தற்காப்பு உணர்வே தலையோங்கி இருக்கும்.  இத்தகைய பொய்கள் காதலில், உறவில், நட்பில், வேலை பார்க்கும் இடத்தில் என்று பல இடங்களில் இருக்கும். இங்கு காதல், உறவு, நட்பு, வேலை பார்க்கும் இடம் என்ற அனைத்தையும் பொதுவாக உறவு என்று எடுத்து கொள்ளலாம். அடிபடையில் உறவில் ஏன் பொய் வருகிறது என்று பார்த்தால், அது பல நேரங்களில் அந்த உறவை தன்னிடம் தக்கவைத்து கொள்ளும் முயற்சியாக தான் இருக்கும். எங்கே அந்த உறவு நம்மை விட்டு பிரிந்து விடுமோ என்கிற ஒரு வித தாழ்வு மனப்பான்மையே இதற்கு காரணம். உதாரணத்திற்கு ஒரு காதலன் தன் காதலியிடம் தான் இதற்கு முன் எந்த பெண்ணுடனும் பழகியது இல்லை என்று பொய் சொல்லலாம். எங்கே தன் பழைய காதலை அவளிடம்  சொன்னால், தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என்ற பயத்தில் இத்தகைய பொய்யை கூறலாம். இது போன்ற பயமும், அதனால் கிடைக்கபோகும் தண்டனையும் தான் பொய் சொல்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.  சில நேரங்களில் ஒருவருடைய மனது புண்படகூடாது என்பதற்காக பொய் சொல்ல வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு பாட்டு நல்ல பாடுறீங்க, சாம்பார் சூப்பரா இருக்கு, இந்த டிரஸ் உங்களுக்கு நல்லா இருக்கு என்ற ரீதியில் சில பொய்களை சொல்ல நாம் தயங்குவதில்லை. இது போன்ற சிறு சிறு விசயங்களில் பொய் சொல்வதால் அந்த உறவு பலப்படுமேயன்றி பாதிக்கப்படாது. ஆனால் மற்ற சிக்கலான விஷயங்களை அடுத்தவர் மனம் புண்படகூடாது என்பதற்காக சில நேரங்களில் பொய் சொல்ல நேரிடும். ஆனால் அது ஒரு தற்காலிக தீர்வு, என்றாவது அந்த விஷயம் தெரிய வந்தால்,  நாம் அவர்களுடைய நம்பிக்கையை  இழந்துவிடுவோம். இங்கு ஒருவர் தன்னிடம் நம்பிக்கை வைத்துள்ள மற்றொருவரிடம் பொய் சொல்லும் போது அந்த பொய் அவருக்கு தெரிய வரபோவதில்லை என்று திடமாக நம்புவதால் தான் கூறுகிறார். ஆனால் அந்த பொய் வெளியே தெரிந்தால் அது அந்த உறவை வெகுவாக காயப்படுத்தும். அது மட்டும் அல்லாமல் அந்த பொய் நெடுநாட்களாக வளர்த்த நம்பிக்கையை முறித்துவிடும். அவ்வாறு முறிந்த நம்பிக்கைய மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவது மிகுந்த சிரமம், பல வருடங்கள் கூட ஆகலாம். மேலும் சிலர் சமுகத்தில் தன்னை அனைவரும் பெரிதாக மதிக்க வேண்டும் என்று பொய் சொல்வார்கள், எடுத்துக்காட்டாக குமாஸ்தாவாக இருக்கும் ஒருவர் தான் ஒரு பெரிய மேனேஜர் பதவியில் இருப்பது போல காட்டிகொள்வார், சைக்கிள் வைத்து இருக்கும் ஒருவர் பைக் வைத்திருப்பதாக சொல்வார். இப்படி பொய் சொல்லும் காரணங்களை பல விதமாக அடுக்கிகொண்டே போகலாம்.

சரி பொய் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு பதிலாக ஒரு நிகழ்வையோ அல்லது நிகழாத ஒன்றையோ மாற்றி கூறுவது பொய் என்று வைத்துகொள்வோம். சரி நான் பொய் சொல்லவில்லை, ஆனால் வேண்டும் என்றே உண்மையை மறைத்துவிட்டேன் என்றால் அது பொய் ஆகுமா என்ற கேள்விக்கு என்ன பதில் என்று பல முறை எனக்குள் நானே கேட்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு விடை கூறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.  அதில் முதன்மையானது, அதை பற்றி நான் மறந்துவிட்டேன் என்று சொல்லி சுலபமாக தப்பித்து கொள்ளலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதை பொய் என்று கூற முடியாது. ஆனால் அந்த நிகழ்வை கூறக்கூடிய வகையில் பேச்சோ அல்லது மற்றொரு நிகழ்ச்சியோ நடந்தும், தெரிந்தே அந்த உண்மையை மறைத்திருந்தால் அதுவும் ஒருவகை  பொய் தான். முன்பு கூறியது போல் இதை பொய் என்று ஏற்றுகொள்வதில் அல்லது நிரூபிப்பதில் தான் சிக்கல்கள் உள்ளது.  இதில் மேலும் சிக்கலான ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியதை வெளியில் சொல்லலாமா என்பதாகும். அது சத்தியம், வாக்கு தவறாமை, நேர்மை போன்ற நியதிகளுக்குள் வந்துவிடுகிறது. அந்த குறிப்பிட்ட விஷயத்தை பற்றி நேரடியாக ஒருவர் கேட்கும் போது அதை பற்றி தெரியாது என்று கூறிவிடலாம அல்லது உண்மையை போட்டு உடைத்துவிடலாம. அப்படி தெரியாது என்று கூறினால் பொய் சொல்கிறோம் என்று ஆகிவிடும், அப்படியல்லாமல்  உண்மையை கூறினால் நாம் வெளியில் சொல்ல மாட்டோம் என்று கொடுத்த வாக்கு என்ன ஆவது போன்ற பல சிக்கலான கேள்விகள் வரும். இது போன்ற சூழ்நிலையில் கொடுத்த வாக்கை காப்பாற்றி பொய் சொல்வதே நல்லது என்பது என் கருத்து.

பல நேரங்களில் பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே  பொய் சொல்ல நேரிடும்.  ஒரு பொய்யை மறைக்க பல பொய்யை சொல்ல வேண்டியதாக இருக்கும் என்பதை போல, சிலர் ஏற்கனவே கூறிய பொய்யை காப்பாற்றுவதற்காக மேலும் பல பொய்களை சொல்லி பொய் சொல்வது பழக்கத்திற்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.  தொழில் ரீதியாகவும்  பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலை சிலருக்கு இருக்கும்.  வழக்கறிஞர்கள்  பெரும்பாலான நேரத்தில் பொய் சொல்ல வேண்டி இருக்கும். அது தொழில் தர்மம் என்ற கோட்பாட்டுகள் வந்துவிடும். மற்றபடி வியாபாரிகள் பொருளின் விலையை பற்றி கூறும் பொய்யும் இந்த வகை தான். மொத்தத்தில் பார்த்தால் ஏன் பொய் சொல்கிறோம் என்ற கேள்வியை விட, ஏன் பொய் சொல்லக்கூடாது என்கிற நிலை தான் இன்று இருக்கிறது. அதனால் அவரவர் சூழ்நிலையை பொருத்து சில பல பொய்களை சொல்வது மட்டுமே நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமானது. ஆனால் உறவுகள் பலப்பட முடிந்த அளவு அந்த உறவில் பொய் கலக்காமல் இருப்பதே நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. இதில் உங்களுக்கு உடன்பாடோ மாற்று கருத்தோ இருந்தால் தெரிவியுங்கள். 

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு அலசல் நண்பா.

ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் செய்யலாம்!

ஆயிரம் (பேருக்கு) போய் சொல்லி கல்யாணம் செய்யலாம்!

என்பது சரியா நண்பா.?

Narayanan Narasingam said...

வருகைக்கு நன்றி குணசீலன். ஆயிரம் பேருக்கு போய் சொல்லி கல்யாணம் செய்யலாம் என்பதும் சரியாகத்தான் தோன்றுகிறது.

Anonymous said...

Hello Narayanan,

May I know where in Glastobury do you live ?

Thanks
Muthu

Narayanan Narasingam said...

Hello Muthu,

Thanks for visiting. I used to live in Glastonbury and now moved to Shrewsbury, MA few days back.

Thanks

Narayanan

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...