அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சென்ற வருடம் புத்தாண்டு அன்று, எழுத ஆரம்பித்து அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. பெரிசா எதுவும் இல்லாவிட்டாலும் ஐம்பது பதிவு எழுதிவிட்டேன் என்று எழுத முடிந்தது. ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல, 2012-ல் மொத்த வருடத்திற்குமே ஐந்து பதிவுகள் தான் எழுத முடிந்தது. ஏன் என்று யோசித்து பார்த்தால் அலுவலக வேலை பளு, வீடு இடம் மாறியது, பிள்ளைகள் படிப்பு அது இது என்று பல காரணங்களை மனம் கூறி சமாதானம் செய்கிறது. எதோ ஒரு புத்தகத்தில் படித்த ஒரு வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. நீ ஒன்றை செய்ய வேண்டாம் என்று நினைத்து விட்டால், உன் மனம் அதற்கு சாதகமான ஆயிரம் காரணங்களை அடுக்கும். ஆனால் எழுத வேண்டாம் என்று நினைத்து எழுதாமல் இருந்ததில்லை. எழுத ஆரம்பித்து முடிக்க முடியாமல் டிராப்டில் பல பதிவுகள் உட்கார்ந்து இருகின்றன. ஏனோ சரிவர நேரத்தை ஒதுக்கி எழுத முடியவில்லை. மேலும் 2012 -ல் வெற்றிகரமாக ஒரு முழு மாரத்தான் ஓடியதும் இதற்கு காரணமாக இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடம் கடுமையாக பயிற்சி எடுத்து அக்டோபர் மாதம் 26.2 மைல்கள் (42.2 கிலோமீட்டர்கள்) வெற்றிகரமாக ஓடினேன். அந்த அனுபவத்தை பற்றி பின்னர் விரிவாக ஒரு பதிவிடுகிறேன். இந்த வருடம் நிறைய தமிழ் புத்தகங்கள் படிக்க வேண்டும், நிறைய இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
தமிழில் பேசுவது எழுதவது குறைந்துவிட்டது, யாருக்கும் ழகரம் உச்சரிக்க வரவில்லை என்று இப்போது புலம்ப போவதில்லை. தமிழ் கூட பரவாயில்லை. நம் மக்கள் கையில் ஆங்கிலம் படும் பாடு இன்னும் மோசமாக இருக்கிறது. What = wat, This=dis, the=d, இப்படி அடுக்கிகொண்டே போகலாம். ஸ்பெல்லிங் தெரியாமல் தப்பாக அடிக்கிறானா, இல்லை ஸ்டைல் என்ற பேரில் இப்படி அடிக்கிறானா(ளா) என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பாரதி இருந்தால் இந்நேரம், ஆங்கிலம் இனி மெல்ல...என்று எழுதி இருப்பார். உங்களுக்கு இதை எப்படி நான் புரிய வைப்பேன். ஆங்...ஞாபகம் வந்துருச்சு. 'Going out, just made dress' - வெளிலே போறாங்களாம், இப்போதான் டிரஸ் பண்ணாங்களாம். கிண்டலுக்காக சொல்லவில்லை, ஒரு ஆதங்கத்தில் தான் சொல்கிறேன். இவர்கள் எல்லாம் படிக்காதவர்கள் ஒன்றும் இல்லை, பலர் டிகிரி முடித்து பன்னாட்டு நிறுவனங்களில் ஆங்கிலத்திலேயே பேசி வேலை செய்பவர்கள். அது சரி, இவ்வளவு வாய் கிழிய சொல்றியே, நீ என்ன பெரிய தமிழ் புலவனா, இங்கிலீஷ்லே எல்லாம் கரைச்சு குடிச்சிட்டியா என்று நீங்கள் கேட்கலாம். இல்லை நான் ஸ்பெஷல் இல்லை , அதே சாதா தோசை தான் (உபயம் BigFM RJ பாலாஜி). ஆறாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து, பின்னர் ஆங்கிலத்தில் படித்தேன். தமிழும், ஆங்கிலமும் தட்டு தடுமாறி தான் கற்றுகொண்டேன், கற்றுக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை ஓரளவிற்கு வார்த்தைகளை கொலை செய்யாமல் சரியாக உபயோகிக்கிறேன். இதை எல்லாம் இவர்களிடம் சொல்லவும் பயமாக இருக்கிறது. அப்படியே சொன்னாலும், எனக்கு எல்லாம் நல்லாத் தெரியுமே என்று பதிலடி கொடுகிறார்கள். ஒரு விஷயம் தெரியாமல் இருப்பது தவறில்லை, அது தெரியவில்லை என்றால் அதை உணர்ந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும் என்பது தான் நான் சொல்ல வரும் கருத்து. இப்படி அட்வைஸ் செய்வதையும் இந்த வருடம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பல வருட அமெரிக்க வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக மாறியிருக்கிறேன் என்றால் அது வெளிப்படையாக பேசுவது. நான் ஒரு இன்றோவேர்ட்/ அவ்வளவாக யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். அப்படி பேசினால் மனதில் நினைப்பதை முலாம் பூசாமல் வெளிப்படையாக சொல்லிவிடுவேன். இது நம்ம ஆட்களுக்கு பிடிக்கவில்லை. அதுவும் அவர்களின் நலனுக்காக சொல்வதுதான். உதாரணதிற்கு, நீ ரொம்ப நாள் உயிர் வாழனும் என்றால், கண்டிப்பா டெய்லி உடற்பயிற்சி செய். இப்படி சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை. என்ன நல்ல நாள் அதுவுமா இவன் உயிரை பத்தி எல்லாம் பேசுறான் என்று நினைகிறார்கள். இப்படிதான் எதோ எழுத ஆரம்பித்து மனதை நிலைப்படுத்தாமல் என்னனமோ எழுதுவது வழக்கமாகிவிட்டது. மற்றபடி இந்த வருடம் நிறைய எழுத முயற்சிக்கிறேன். வருகைக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
2 comments:
நீ ஒன்றை செய்ய வேண்டாம் என்று நினைத்து விட்டால், உன் மனம் அதற்கு சாதகமான ஆயிரம் காரணங்களை அடுக்கும்.
அருமையான புத்தாண்டு பதிவு ,.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..
//இராஜராஜேஸ்வரி said...நீ ஒன்றை செய்ய வேண்டாம் என்று நினைத்து விட்டால், உன் மனம் அதற்கு சாதகமான ஆயிரம் காரணங்களை அடுக்கும். அருமையான புத்தாண்டு பதிவு ,.இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..//
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.
Post a Comment