சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த போது, ஆடி பெருக்கிற்கு குடும்பத்துடன் பவானி சென்று விட்டு கொடிவேரி அணை செல்லலாம் என்று காலையில் அவரசரமாக கிளம்பிக் கொண்டிருந்தோம். அப்போது பெரியவள் அகிலா என்னிடம் வந்து டாடி, இன்னைக்கு நான் போட்டோ எல்லாம் எடுக்கட்டுமா என்று கேட்டாள்.
என்றைக்கும் இல்லாத அதிசயமாக, இது போன்ற கமிட்மெண்டில் எல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாத அகிலா அப்படி கேட்டதும், என் ஆச்சர்யத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று காமிராவை தூக்கி அவள் கையில் ஒப்படைத்தேன்.அவள் எடுத்த புகைப்படங்கள் மிகவும் நன்றாக வந்திருந்தன. அதுவும் பொதுவாக நாம் சாதரணமாக கொஞ்சம் கூட சட்டை செய்யாத பல விஷயங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது ஆச்சர்யமாக இருந்தது. அதில் முக்கியமான ஓன்று கொடிவேரி அணையில் சிறு பொம்மைகள் மற்றும் மருதாணி அச்சு போன்றவற்றை விற்பவர்களை படம் எடுத்தது. முதலில் சிறு பொம்மைகள் விற்கும் ஒரு கடையை புகைப்படம் எடுத்தாள். அதை எடுத்துவிட்டு அருகில் இருந்த அச்சுகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு புகைபடம் எடுத்துக் கொண்டிருந்தாள். உடனே அந்தக் கடைகாரர் பாப்பா ஒரு நிமிஷம், நானும் உட்காந்துக்குறேன், என்னையும் போட்டோ எடுக்கமுடியுமா என்று தயங்கிய படி கேட்டார். உடனே அவர் போஸ் கொடுக்க தயாராகிவிட, அவரையும் சேர்த்து அவர் கடையை புகைப்படம் எடுத்தாள். அங்கு அவர் விளையாடிகொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் இதைப் பார்த்தவுடன் அக்கா, அக்கா எங்களையும் போட்டோ எடுக்கிறியா என்று ஓடி வந்தனர். அவர்களை நிற்க வைத்து எல்லோரும் சிரிங்கனு சொல்லி புகைப்படம் எடுத்தாள். அதை எடுத்து காமிராவின் திரையில் அவர்களுக்கு காட்டியதும், அவர்கள் புன்னகை போஸ் கொடுக்கும் போது இருந்ததை விட ஆயிரம் மடங்கு விரிந்தது. நாம் என்று வாழ்கையில் சர்வ சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தின் மூலம் அவர்களின் மனதில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் புகைப் படங்களை கீழே காணலாம்.