சமீபத்தில் இங்கு அமெரிக்காவில் பாஸ்டன் அருகே ஒரு தமிழ் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். பெரிய அரங்கம்,
நூற்றுக்கணக்கில் தமிழ் மக்கள் அமர்ந்திருந்தார்கள். நிகழ்ச்சி
ஆரம்பிக்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்போவதாக அறிவிப்பு
வந்ததும் நான் தன்னிச்சையாக எழுந்து நின்றேன். அரங்கில் உள்ள மற்றவர்களும்
எழுந்து நின்றார்கள். என் இருக்கைக்கு பின்னே அமர்ந்திருந்த ஒரு தம்பதியர்
மட்டும் எழுந்திருக்கவில்லை. நான் பார்த்த வரையில் அவர்களுக்கு நடப்பதிலோ,
நிற்பதிலோ எந்த குறையும் இருந்ததாக தெரியவில்லை. ஆனாலும் எழுந்து நிற்கவில்லை.
இத்தனைக்கும் ஏதோ டெக்கனிகள் பிரச்சனையால் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
முழுவதும் போடாமல், மீண்டும் ஒரு முறை ஒலிக்க வைத்தார்கள். அப்படி இரு முறை
ஒலித்தும் அவர்கள் எழுந்து நின்ற பாடில்லை. அது போக எழுந்து நின்றவர்களை
சுற்றி சுற்றி ஒரு ஏளனப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் அந்தத்
திருவாளர்.
கடும் கோபம்
என்னுள்ளே கொப்பளித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தமிழ்த்தாய் வாழ்த்து
முடிந்ததும் அமைதியாக அமர்ந்தேன். சில நேரங்களில் நம் நாகரீகத்தை எல்லாம்
மூட்டை கட்டி வைத்து விட்டு இது போன்ற மனிதர்களை நன்றாக கேள்வி கேட்டு
வெளுத்து வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்நாள் எந்நாளோ ?