பல வருடங்களாக மனதில் நான் மெல்ல ஆசைப் போட்டுகொண்டிருந்ததை இன்று எழுத்தில் கூற முயற்சிக்கிறேன். இவை அத்தனையும் இனிமையான நினைவுகள் அல்ல, என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதையை, நினைவில் பதிந்து என்னை விட்டு விலகாத நிகழ்வுகளை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.
எனக்கு அப்போது ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். இன்று சாதரணமாக மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் வயிற்று போக்கிற்கு அரசு மருத்துமனையில் சேர்த்த என் தந்தை இளவயதிலேயே காலமாகிவிட்டார். விவரம் புரியாத வயதில், நான் முதன் முதலில் பார்த்த உயிர் இழப்பு அது. வீட்டில் தந்தையின் சடலம் கிடத்தப்பட்டு சுற்றி அனைவரும் அழுது கொண்டிருந்தனர். அவ்வபோது எல்லோரும் அழுவதைப் பார்த்து நானும் புரியாமல் அழுதேன். அழாதேடா, அப்பா எங்கேயும் போகலே, இன்னும் கொஞ்ச நாளில் வந்திடுவாரு என்று என்னை சமாதனப்படுத்த யாரோ கூறிய பொய்யை நம்பி என் அம்மாவிடம் சென்று அழாதேம்மா என்று கண்ணை துடைத்துவிட்டேன். ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகளுடன் வீட்டை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். அப்படி விளையாடி கீழே விழுந்து மண்டையை வேறு உடைத்துகொண்டேன். என்னைத் தூக்கி கொண்டு டாக்டரிடம் ஓடியது ஒரு கூட்டம். தந்தையின் இழப்பின் வலி அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அப்போது அதைப் பற்றி பெரிதாக நினைக்காத போதும், இன்று வரை அந்த நினைவு என்னை சுற்றிச் சுற்றி வட்டமிடுகிறது. தந்தையின் முகம் என்றாலே அன்று உயிரற்ற சடலமாகப் பார்த்தது தான் என் நினைவில் உள்ளது. அந்த வகையில் நான் கொஞ்சம் பரவாயில்லை. என்னை விட இரண்டு வயது இளையவனான என் சகோதரனுக்கு தந்தையின் முகம் என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது. தந்தை காலமாவதற்கு சில மாதங்கள் முன்பு தான் பல்லாவரத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறி இருந்தோம். பல இடங்களில் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டு கட்டிய வீட்டில் அவரால் அதிக காலம் வாழ முடியவில்லை. அடுத்த சில வாரங்களில் சுற்றி இருந்த உறவுகள் ஒவ்வொருவராக சென்றனர். தந்தையின் நினைவுகள் மற்றும் கடன் தொல்லையினால் அங்கு இருக்க முடியாமல், அதற்கு முன்பு இருந்த சைதாபேட்டையில் வாடகை வீடு பார்த்துக் குடியேறினோம்.
அங்கு குடியேறிய சில நாட்களில் தீபாவளி திருநாள் வந்தது. தந்தை இல்லாத முதல் தீபாவளி, அம்மா ஒருபுறம் அழுது கொண்டிருக்க, என் மனமோ புதுத்துணி, பட்டாசு என்று அலை பாய்ந்துகொண்டிருந்தது. ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும் போது நாங்கள் சுற்றி யாரும் இல்லாமல் தனித்தீவில் விடப்பட்டது போல இருந்தது. அப்பொழுது தான் தந்தையில் இழப்பு லேசாகப் புரிந்தது. அது சுயநலம் தான், மறுக்கவில்லை. ஆனால் அந்த சுயநலம் தான், அந்த தீபாவளியை எனக்கு மறக்க முடியாத தீபாவளியாக மாற்றியது. வீட்டில் ஒரு ஓரத்தில் அழுது கொண்டே முடங்கிக் கிடந்த நேரத்தில், யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவை திறக்க சென்ற அம்மாவின் பின்னல் நானும் ஓடினேன். கதவைத் திறந்ததும் அங்கு ஒருவர் ஒரு பெரிய அட்டைப் பெட்டியை இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். கௌரி பார்மசிலே இருந்து சேட் குடுத்து அனுப்பி இருகாரும்மா, ஸ்வீட், பசங்களுக்கு துணி, பட்டாசு எல்லாம் இருக்கு என்று அட்டைப் பெட்டியை வைத்துவிட்டு சென்றார். அம்மாவிற்கு கண்ணில் கண்ணீர், எனக்கோ மனதில் மகிழ்ச்சி. அவசரமாக பெட்டியை திறந்து பார்த்து பூரித்தேன். வித விதமான பட்டாசுகள், ஸ்வீட் மற்றும் புதுத்துணி. எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன். இத்தனையும் கொடுத்து அனுப்பிய, கௌரி பார்மசி சேட் வேறு யாரும் இல்லை, என் தந்தையின் நெருங்கிய நண்பர். மார்வாடி இனத்தை சேர்ந்த சேட் கண்டிப்பாக திருக்குறள் படித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் குறிப்பறிந்து காலத்தினால் செய்த உதவி அது. அன்று அந்த தீபாவளியில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பிறகு வசதியும் வாய்ப்பும் பெருக, எத்தனையோ தீபாவளி சிறப்பாக கொண்டாடினாலும், அவை எதுவும் என் நினைவில் அந்த அளவு நிற்கவில்லை. அந்த ஒரு துயரமான நேரத்தில் கிடைத்தப் புது துணிக்கும், பட்டாசுக்கும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று நினைக்கும் போது இப்போது சற்று வெட்கமாக இருந்தாலும், அந்த நிகழ்வை எங்காவது பதிய வேண்டும் என்று பல வருடங்களாக என்னை உறுத்திக் கொண்டிருந்ததின் விளைவே இந்த பதிவு.
10 comments:
sentimental feeling
வாங்க ராமமூர்த்தி,
கொஞ்சம் செண்டிமெண்டல் தான், தீபாவளி அன்று இதை எழுத வேண்டுமா என்று எனக்கு கொஞ்சம் உறுத்தலாகத் தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு தீபாவளிக்குள் உழலும் நினைவுகளை வெளியே கொட்டினால் என்ன என்று தோன்றியதால் ஒரு வேகத்தில் எழுதிவிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இதை படித்த பின் என் தந்தையிடம் அன்று நடந்த சம்பவத்தை பற்றியும் நீங்கள் கடந்து வந்த பாதை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டேன்......மனது கொஞ்சம் சங்கடப் பட்டது......
வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி விசு.
ஆமாம், அருகில் இருந்து பார்த்த மாமாவால் (உன் தந்தை) இன்னும் அதிக விவரம் கூற முடியும். பல்லாவரம் வீட்டு மாடியில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடி 'என் உயிரை எடுத்துகொண்டு, என் அத்தான் உயிரை கொடுத்து விடு' என்று உன் தந்தை கதறி அழுதது, இன்னும் என் கண் முன்னே நிற்கிறது.
அருமையான பதிவு . இது போன்ற நிகழ்வு என் வாழ்வினிலும் 1962 ஆம் ஆண்டில் நடந்தது . சிறு பிரயைத்து நிகழ்வுகள் என்றும் மனதை விட்டு அகலாது
வாங்க கிரிகுமார் சார்,
நீங்கள் சொல்வது சரிதான், சிறு வயதில் நடக்கும் சில நிகழ்வுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
hi your story was good..
i have to really convey this.. i dint mean this diwali ninaivugal as story but its a small history of u... by saying this it is a memory that we can hold till our life..end.. thanks for sharing the memories. and we do expect more from u..
மிகவும் மனதை நெகிழ வைத்து விட்டது உங்களின் உண்மை சம்பவம்.
- பமிலா.
Post a Comment