Sunday, May 11, 2014

பட்டிமன்றப் படிப்பினை - பாகம் 2

பட்டிமன்றப் படிப்பினை பதிவு எழுத இரண்டு காரணங்கள். அதில் முதல் காரணத்தை பாகம் 1 -ல் கூறிவிட்டேன். இப்போது இரண்டாவது காரணம்.

சாதாரணமாக நடைமுறைப் பேச்சை நகர்த்திச் செல்வதிலேயே சிரமப்படும் எனக்கு மேடைபேச்சு என்பதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். ஆனாலும் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இது போன்ற நிகழ்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் எப்படியாவது பிரயத்தனப்பட்டு அதை சரியாக செய்ய முயலுவேன். என்னிடம் பெரிய நிபுணத்துவம் எந்தத் துறையிலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றை செய்ய நினைத்தால் அதற்காக கடுமையாக உழைக்க தயாராக இருக்கும் மனம் மட்டுமே உண்டு.

உறவா நட்பா என்ற தலைப்பு கொஞ்சம் சிக்கலானது. எனக்கு உறவினர்களும் இருக்கிறார்கள் நண்பர்களும் இருக்கிறார்கள். நட்பை சார்ந்து பேசப்போகிறோம் என்பதை நினைத்தபோது சற்று யோசனையாத்தான் இருந்தது. ஏன் என்றால், எனக்கு உறவை விட நம்பிக்கை துரோகம் செய்த நண்பர்கள் பட்டியல் பெரியது. அதே நேரத்தில் உறவை விட நன்மைகள் செய்த நண்பர்கள் கூட்டமும் பெரியது. இது சிக்கலில் கொண்டு போய் விடுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்தது போலவே, இந்த பட்டிமன்ற பேச்சை கேட்டு இரண்டு தரப்பில் இருந்துமே விவாதங்கள் எழுந்தன. பட்டிமன்றங்களில் பேசும்போது எதாவது ஒரு தலைப்பை சார்ந்து தான் பேசுகிறோம். நட்பே வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் பேசியதால் எனக்கு பல நண்பர்கள் அவர்கள் தான் எனக்கு எல்லா உதவிகளையும் செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. நட்பை சார்ந்து நான் பேசியது என் விருப்பத்தின் பேரில் தான். பட்டிமன்றம் முடிந்தும் ஏன் இப்படி பேசினீர்கள் என்று மேடைக்கு வெளியே பல பட்டிமன்றங்கள் நடத்தும் அன்பர்களுக்கு பதில் கூறுவதுதான் இந்த இரண்டாவது காரணம். என்னைப் பொறுத்தவரை நல்ல உறவும் நட்பு தான், நல்ல நட்பும் உறவுதான். பலர் உறவை நட்புக்கு இணையாகவும், நட்பை உறவுக்கு இணையாகவும் கூறுவார்கள்.  உதாரணத்திற்கு, இவர் என் ப்ரெண்ட், ஆனா எனக்கு பிரதர் மாதிரி என்பதையும், நானும் அவளும் அம்மா பொண்ணு மாதிரி பழகறதில்லை, பிரெண்ட்ஸ் மாதிரி தான் பழகுகிறோம் என்பதையும் கேட்டிருப்பீர்கள். ஆனாலும் நம் சமூகத்தில் நண்பேண்டா வெற்றிபெற்றதைப் போல மாமேண்டா, மச்சாண்டா என்று எதுவும் வெற்றி பெறவில்லை.

உறவுகள் என்பது நம் ரத்த சொந்தங்கள், நண்பர்கள் நம் உணர்வு சொந்தங்கள் அவ்வளவு தான் வித்தியாசம். பொதுவாக உறவுகள் உதவி செய்தால் ஒன்று அதில் கடமை உணர்ச்சி இருக்கும் அல்லது நன்றிகடன் காரணமாக இருக்கும். உதாரணமாக என்ன இருந்தாலும் என் சித்தப்பா என்று செய்யும் உதவி இல்லாவிட்டால் அவங்க  குடும்பம்  நமக்கு செஞ்ச உதவிக்கு நாம என்ன செஞ்சாலும் ஈடாகாது என கடமை உணர்ச்சி மேலிட செய்யும் உதவி. ஆனால் நண்பன் (எளிமை கருதி நண்பன் என்று ஆண்பாலில் கூறுகிறேன்) செய்யும் உதவியில் பொதுவாக இப்படிப்பட்ட கடமை உணர்ச்சிகள் காரணமாக இருக்காது. எதோ ஒரு காரணத்திற்காக நட்பு உருவாகிறது. அப்படி உருவாகிய நட்பு ஒருவருக்கொருவர் எதையும் செய்யும் வலிமையை கொடுக்கிறது. அப்படி இல்லை, நட்பில் சுயநலம் இருக்கிறது, எதை வேண்டுமானாலும் நண்பன் செய்ய மாட்டான் என்று நீங்கள் சொன்னால்...அப்படிப்பட்ட நல்ல நண்பனை நீங்கள் இன்னும் சந்திக்கவில்லை என்பது தான் என் பதில்.  மேலும் அப்படிப்பட்ட நட்பை நீங்கள் மற்றொரு நண்பனுக்கு வழங்கினால் தான் உங்களுக்கு அதே போல ஒரு நண்பன் கிடைப்பான்.

இன்னொரு விஷயம், நம்ம பிரெண்ட்ஸ் கிட்டே பேசும் போது 'மாமா, மச்சான்' என்று கூப்பிடுகிறோமே, அப்படி என்றால் நட்பைக் கூட உறவு வைத்து அழைப்பதில் தானே பெருமைப் படுகிறோம் என்ற கேள்வி. இதற்கு பதில், நமக்கு நெருக்கமானவர்களை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அப்படிக் கூப்பிடுவதால் நாம் எந்த உறவின் பெயரை வைத்து கூப்பிடுகிறோமோ அந்த உறவு தான் உயர்ந்தது என்பதற்கில்லை. உதாரணத்திற்க்கு பல நாட்கள் பேசாமல் இருந்த நண்பனை பார்க்கும் போது நான் 'டேய் நாயே, ஒரு போன் பண்ண கூட உனக்கு தெரியாதா, அறிவு கெட்டவனே' என்று கண்ணா பின்னாவென்று திட்டுவேன். அதை அந்த நண்பன் சிரித்தபடி ஏற்றுக்கொள்வான். ஒரு குழந்தையை செல்லமாக நாய் குட்டி என்று அழைப்பதால் நமக்கு அந்தக் குழந்தையை விட நாய்க்குட்டி தான் பெரியது என்று அர்த்தம் இல்லை. அதனால் என்ன சொல்லி நண்பனை அழைக்கிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது.

இதனால் நான் தெரிவிப்பது என்னவென்றால் பட்டிமன்றம் முடிந்துவிட்டது. நான் பேசிய பேச்சு என் கருத்து என்றாலும் அது மட்டுமே என் கருத்து என்று கருத வேண்டாம். அங்கு கிடைத்த ஐந்து நிமிடத்தில் அவ்வளவு தான் கூற முடிந்தது, கூற முடியாத பல உறவின் பெருமையும், நட்பின் பெருமையும் நிறையவே இருக்கிறது. உறவு புனிதமானது, நட்பு பிராம்மாண்டமானது. அதனால் உறவு நட்பு   இரண்டையும் போற்றுவோம்.






















2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதை எதிர்ப்பார்க்கிறோமோ, அதை முதலில் நாம் செய்ய வேண்டும் என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

Narayanan Narasingam said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...