Monday, April 6, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு

 
இசை, நடனம், ஓவியம், எழுத்து போன்ற விஷயங்கள் மனிதனுக்கு கிடைத்த வரம். சில நேரங்களில் வாழ்கை ஓட்டத்தில் இது போன்ற அரிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது பெரும் பாடாகி விடுகிறது. எண்ண ஓட்டங்கள் என்ற தொடரின் முதல் அத்தியாயம் எழுதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. இப்போது தான் அடுத்த அத்தியாயம் எழுத முடிந்திருக்கிறது. இது என் மனதில் ஏதோ ஒரு மூலையில் தேங்கிக்கிடக்கும் எண்ண அலைகளை வார்த்தைகளாக்கும் ஒரு முயற்சியே. இதை படிப்பதால் உங்களுக்கு பெரிய பலன் ஒன்றும் இருக்காது. ஆனால் அந்த கால கட்டத்தில் என்னுடன் கை கோர்த்து நடந்த ஒரு உணர்வை அளிக்கும் முயற்சி தான் எண்ண ஓட்டங்கள். இதைப்பற்றி தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல், நினைவுகளைக் கிளறி மனம் போன்ற போக்கில் எழுத முனைகிறேன். இனி எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு...

ஆனால், நான் பிடித்து ஆடிய விழுது அறுந்து கீழே விழுந்தேன். என்னுடைய உடல் பாரம் முழுவதும் வலது கையின் மேல் இருக்கும்படி விழுந்ததில் மணிக்கட்டுக்கு சற்று மேலே வலது கையில் எலும்பு முறிந்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் கை பெரிதாக வீங்கி விட்டது. வலது கையின் பாரத்தை தாங்க முடியாமல், இடது கையால் தாங்கியபடி நடந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்கள் சிலர் கூட இருந்தனர், ஆனால் அவர்களும் மிரட்சியில் இருந்தார்கள். பின்னர் மெதுவாக நடந்து குருநாத் ஸ்டோர் அருகே வந்ததும் ஒரு ரிக்சா வண்டி வந்தது. நண்பர்கள் அவரிடம் பேசி என்னை ரிக்சாவில் ஏற்றி விட்டனர். ஒரு வழியாக வீட்டின் அருகே வந்து சேர்ந்து வாசலில் இருந்த ஒரு கடையில் போட்டிருந்த ஸ்டூலில் மிகுந்த வலியுடன் உட்கார்ந்தேன். ஒரு நிமிடத்தில் என்னை சுற்றி கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் ஐயோ பாவம் என்று சொல்லியபடி பார்த்துகொண்டு நின்றார்கள். இதை சொல்ல வருத்தமாக இருந்தாலும் சொல்கிறேன். அந்தக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரும் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார். அதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கண் முன்னே ஒருவன் வலியால் துடித்துகொண்டிருக்கும் போது  பார்த்துக் கொண்டு கையை பிசைந்து கொண்டு நிற்பது சாத்தியமில்லாதது. ஆனால் அங்கே ஒரு கூட்டமே நின்றுகொண்டிருந்தது. அப்போது எதேச்சையாக அங்கு வந்த ரங்கண்ணன் (ரங்கன் என்பது அவர் பெயர் அதனுடன் அண்ணனை சேர்த்து நாங்கள் ரங்கண்ணா என்று கூப்பிடுவோம்), என்னடா ஆச்சு என்று பதறியபடி கேட்டார். கை முறிந்திருப்பதைப் பார்த்து அடப்பாவி என்று உரக்க கூறியபடி வீட்டின் உள்ளே சென்று ஒரு துணியை நனைத்து கையின் மேலே லேசாக சுற்றினார். என்னை கைதாங்கலாக அழைத்தபடி அருகில் இருந்த கௌரி பார்மசி சேட்டிடம், 'சேட்டு, ஒரு இருநூறு ரூபா குடு, பையன் கையை ஒட்சினு வந்து நிக்குறான்' என்றார். சேட் என் தந்தையின் நெருங்கிய நண்பர். மறு பேச்சு பேசாமல் பணத்தை எடுத்து கொடுத்தார். கௌரி பார்மசி சேட் குணத்தைப் பற்றி மேலும் தெரிய வேண்டும் என்றால் இந்தப் பதிவை படிக்கவும்.
 
பணம்  கிடைத்தவுடன் புத்தூர் போகலாமா அல்லது ராயபேட்டா மருத்துவமனை போகலாமா என்று எழுந்த விவாதத்தில், ரங்கண்ணன் உடனடியாக  சின்னபையன் புத்தூர் ட்ரீட்மென்ட் வலி தாங்க மாட்டான், ராயபேட்டாவே போயிறலாம் என்று ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை கூட்டிச் சென்றார். ராயப்பேட்டை மருத்துவமனையை நெருங்கும் முன்னரே அதன் நெடி நாசியை துளைக்க ஆரம்பித்தது. அந்த நெடியே அடிவயிற்றில் ஒரு பயத்தைக் கிளப்பியது. எலும்பு முறிவுப் பிரிவிற்கு சென்று சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அங்கிருந்த மருத்துவர் அறைக்கு அழைக்கப்பட்டோம். அந்த மருத்துவர் என் கையைப் பார்த்ததும், பையனை பெட்லே படுக்க வெச்சு கையை தூக்கி கட்டுங்க என்றார். யாரோ ஒருவர் வந்து என்னை அழைத்துச்சென்று கையை தூக்கி ஒரு கம்பியில் கட்டி விட்டார். எனக்கோ வலது கையில் எலும்பு முறிவு, அவரோ ஒரு பெரிய கம்பியை என் இடது புறம் வைத்துக் அதில் வலது கையை தொங்கவிட்டார். ஏற்கனவே கையில் சொல்ல முடியாத அளவிற்கு வலி, அதில் ஒரு மாதிரி ஒருக்களித்துப் படுத்து இருந்தது மேலும் வலியை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று படுக்கவைத்தனர். அங்கிருந்த மருத்துவர் ஒருவர் குளோரோபார்ம் நிறைந்த ரப்பர் பை போன்ற ஒன்றை என் முகத்தில் அழுத்தினார்.
 
ஓட்டம் தொடரும்.....


No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...