சமீபத்தில் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் திரு ராஜா அவர்களின் தலைமையில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு பேசினேன். பட்டிமன்றத்தின் தலைப்பு வாழ்வில் பெரிதும் உதவுவது உறவா நட்பா ? இது எல்லா இடத்துலேயும் தொவச்சு போட்ட பழைய தலைப்பு தான். ஆனாலும் இங்கு பாஸ்டன் பகுதியில் நடக்கும் பல பட்டிமன்றங்களில் இந்தியாவா அமெரிக்காவா எது சிறந்தது என்கிற ரீதியில் கேட்டு கேட்டு சலித்துப் போன காதுகளுக்கு இது சற்று வித்தியாசமான தலைப்பாகவே தோன்றியது. பட்டிமன்றத்தில் பேசுகிறீர்களா என்று கேட்ட தமிழ் சங்கத் தலைவர் திரு ராஜ் வேல்முருகனிடம், கண்டிப்பா பேசுகிறேன், ஆனால் இந்தியாவா அமெரிக்காவா என்ற தலைப்பு இல்லாவிட்டால் உங்களுக்கு புண்ணியமா போகும் என்றேன். நான் சொன்னதால் அந்தத் தலைப்பு வைத்தார்களா இல்லை எதேச்சையாக வைத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் தலைப்பு எனக்கு பிடித்து இருந்தது.
எல்லா வேலைக்கும் மெசின் இந்த அமெரிக்க மண்ணில் இருந்தாலும் அந்தந்த வேலையை நாம் தான் செய்யவேண்டும். இது இங்கு வாழ்பவர்களுக்கு நன்றாகப் புரியும். அலுவலக வேலை, வீட்டு வேலை போக கிடைக்கும் நேரத்தில் பட்டிமன்றத்திற்கு ஒரு மூன்று வாரத்திற்கு முன்பே அவ்வபோது தலைப்பை பற்றி மனதில் அசைபோட்டபடி இருந்தேன். இப்போது இங்கு குளிர் கொஞ்சம் குறைந்திருப்பதால் சாலைகளில் ஓட ஆரம்பித்திருக்கிறேன். (குளிர் காலங்களில் டிரெட் மில்லிடம் சரணாகதி). தனியாக ஓடுவதில் ஒரு வசதி இருக்கிறது. யாரும் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் நமக்கு தேவையானதை யோசிக்க முயற்சி செய்து சில நேரங்களில் வெற்றி பெறலாம். மனம் ஒரு குரங்கு என்பது அந்த நேரத்தில் நன்றாக புரியும். ஆனாலும் ஓட்டத்தின் போது எழும் சிந்தனைகளை அவ்வபோது குறிப்பெடுத்துக் கொள்வேன். எங்கள் அணியில் இருந்த நான்கு பேரும் அவ்வபோது தொலைபேசியில் பேசி யார் என்ன பேசுகிறோம் என்று பகிர்ந்துகொண்டோம். ஒரே விஷயத்தை அணியில் நால்வருமே பேசக் கூடாது என்பதால் நாங்கள் பேசும் விஷயத்தின் சாரத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதனிடையில் ஒரு முறை நேரில் சந்தித்துக் கொண்டோம். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் நால்வருமே முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள். இந்தப் பட்டிமன்றத்திற்காக ஓன்று சேர்ந்தோம். ஆனால் சில தொலைபேசி பேச்சு மற்றும் ஒரு சந்திப்பில் எங்களிடையே ஒரு நல்ல நட்புணர்வு வந்து விட்டது. ஆனால் நங்கள் அனைவரும் வேறு வேறு அலைவரிசையில் சிந்தித்துக் கொண்டிருந்தோம். பல நேரங்களில் கார சாரமான விவாதங்கள் தொலைபேசியில் நிகழ்ந்தன. பல தகல்வல்களைப் பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொரு மனிதனிடமும் எவ்வளவு தகவல்கள், ஆச்சர்யங்கள் நமக்காக காத்திருகின்றன. ஆனால் அவை வெளியே வர வைக்க ஒரு கிரியா ஊக்கியாக ஒரு காரணம் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த பட்டிமன்றதால் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே.
இந்த வரிகளை எழுதிகொண்டிருக்கும் போதே எதை நினைத்து இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தோம், இப்பொழுது என்ன எழுதிகொண்டிருக்கிறோம் என்று ஒரு எண்ணம் என் மனதில் ஓடிக் கொண்டிருகிறது. அது என் எழுத்தின் பலவீனமா அல்லது பலமா என்று தெரியவில்லை. அதைப்பற்றி பெரிதாக கவலைப் படவும் தோன்றவில்லை. சரி எதற்காக இந்தப் பதிவு என்று பார்ப்போம். அதற்கு இரண்டு காரணங்கள்.
முதல் காரணம், பட்டிமன்றத்தில் எனக்கு எதிரணியில் பேசிய ஒரு பெண்மணி. அவர் அனுமதி இல்லாமல் பெயரைக் குறிப்பிட எனக்கு மனம் வராததால் பெண்மணி என்று குறிப்பிடுகிறேன். எனக்கு ஏற்கனவே ஓரளவிற்கு அறிமுகம் ஆனவர் தான். இது போன்று ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொள்வோம். என்னைப் பார்த்ததும் என்ன நீங்க இப்போ எழுதறதே இல்லை என்று கேட்டார். பல நண்பர்கள் இதைப் போல சம்பிரதாயக் கேள்வி கேட்பார்கள். நானும் டைம் இல்லைங்க என்று ஒரு சப்பைக்கட்டு பதிலை சொல்லுவேன். இவரிடமும் அதே போல ஆமாங்க எழுதனும்னு மனதளவில் ஒருவித சலிப்போடு கூறினேன். ஆனால் அவர் நான் முக்கியமாகக் கருதும் ஒரு பதிவைப் பற்றி விலாவாரியாகக் கூறி, அதைப் படித்ததும் மிகவும் மனம் நெகிழ்ந்து விட்டதாகவும் கூறினார். அதற்கு மேல் அந்தப் பதிவில் வரும் ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டதைக் கேட்டதும் நான் மனதளவில் வெட்கி தலை குனிந்தேன். இவ்வளவு நுணுக்கமாகப் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிறாரே என்று ஆச்சர்யமாக இருந்தது. இதை நான் எப்படி எழுதி இருக்கிறேன் பார் என்கிற சுய தம்பட்டம் அடிக்கும் தொனியில் கூறவில்லை. நான் எழுத்து என கூறிக்கொள்ளும் கிறுக்கல்களின் நிலை எனக்கு நன்றாத் தெரியும். ஆனால் என் கிறுக்கல்களை வலை உலகின் முன் சமர்பிக்கும் போது அது எங்கோ யாரையோ சென்றடைந்து ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் மனதை அசைக்கிறது என்பதை நினைக்கும் போது ஒரு நெகிழ்வான உணர்வு ஏற்படுகிறது. அந்தப் பெண்மணிக்கு நன்றி. முடிந்த அளவு நிறைய எழுகிறேன் அம்மா.
இரண்டாவது காரணம்...அடுத்தப் பதிவில் தொடரும்....
3 comments:
முன்பின் பாராத அன்பு உள்ளங்களிடமிருந்து பெறும் பாராட்டை விவரிக்க வார்த்தைகளில்லை...
நண்பரே,
நீங்கள் எந்த தயக்கம் இன்றி என் பெயரைக் குறிப்பிடலாம். உங்கள் எழுத்தைப் போல உங்கள் பட்டிமன்ற பேச்சும் மிக அருமை.
- பமிலா வெங்கட்.
அஹா..வாங்க பமிலா. உண்மையை சொல்லனும்னா, உங்க கிட்டே பேசிட்டு இருக்கும் போது நீங்க சொன்னதுலே பெரிசா இதைப்பற்றி எழுதனும்னு எதுவும் தோணலே. அப்புறம்தான் திடீர்னு ஒரு ஸ்பார்க், சரின்னு உடனே எழுதிட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment