Friday, January 21, 2011

ஆசை - சிறுகதை


இது என் முதல் சிறுகதை (அது சரி கதையா இல்லையானு நீங்க தானே சொல்லணும்) முயற்சி. ஏதும் குற்றம் குறை இருந்தால் பொருத்து கொண்டு அவை என்ன என்றும் உங்கள் கருத்துகளில் தெரிவியுங்கள். இதோ ஆசை உங்கள் பார்வைக்கு...
---------------------------------------------------------------------------------------------------------
என் பெயர் ராஜேந்திரன், திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கௌண்டண்டாக பணிபுரிகிறேன். மாத சம்பளம் பிடித்தம் போக பன்னிரெண்டாயிரம் வந்தாலும், இப்ப இருக்கிற விலைவாசியில் கைக்கும் வாயுக்குமே சரியாக இருக்கிறது. எதோ என் மனைவி திலகா சிக்கனமாக குடும்பம் நடத்துவதால் இரண்டு குழந்தைகளுடன் ஓரளவு கடன் இல்லாமல் காலத்தை ஓட்ட முடிகிறது. இப்போது நான் அவசரமாக வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறேன். அலுவலகத்தில் இருந்து என் வீடு 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் பஸ்ஸில் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் பயணத்தில் கழியும். அதுவும் டிராபிக் இல்லாவிட்டால் தான், இல்லை என்றால் சில நேரங்களில் ஒன்றரை மணி நேரம் கூட ஆகும்.  பைக் இருந்தால் 30 நிமிடத்தில் கூட வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சென்று விடலாம். ஆனால் பைக் வாங்க தான் எனக்கு இன்னும் வழி வரவில்லை. இப்போது எல்லாம் மாத தவணையில் சுலபமாக பைக் வாங்கி விடலாம், ஆனால் திலகாவிற்கு அதில் விருப்பம் இல்லை. அதுக்கு நிறைய முன் பணம் வேணும், வட்டி எல்லாம் சேர்த்து மாசம் நம்ம கைல இருந்து மூணாயிரம் ரூபாவாது கட்டனுங்க, அதுக்கு பேசாமே நம்ம பழனியப்பன் சார் தான் ஏல சீட்டு போடுறார் இல்லே, அவர் கிட்டே எதாவது சீட்டு சேருங்க. ரொம்ப நம்பிக்கையான ஆளு, எப்பாவது கம்மியா தள்ளு போகும் போது சீட்டை எடுத்து வண்டி வாங்கலாம் என்று என் பைக் வாங்கும் கனவிற்கு பிரேக் போட்டாள். அவள் சொல்வதும் சரி தான், அவசரப்பட்டு வாங்கிட்டு பின்னாடி அவஸ்தை படக்கூடாது என்று நினைக்கிறாள்.

தினமும் பஸ்ஸில் சென்று வரும் நான் இப்போது அவசரமாக செல்ல வேண்டும் என்பதால் நண்பன் ரகுவிடம் பைக்கை இரவல் வாங்கி வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்படி என்ன அவசரம் என்று கேட்கிறீர்களா. வீட்டிற்கு சென்று திலகாவிற்கு தெரியாமல் ஒன்றை மறைக்கவேண்டும். அடப்பாவி உனக்கு ஏன் இந்த புத்தி என்று உங்களுக்கு நினைக்க தோன்றும். எனக்கும் தெரியும், நான் இப்போதிருக்கும் நிலமையில் இந்த மாதிரி பண்ண கூடாது என்று ஆனாலும் ஆசை யாரை விட்டது. சரி சரி என்னிடம் ரொம்ப கோபப்படாதீங்க. அப்போது மணி சுமார் இரவு 7:00 மணி இருக்கும். இந்த போக்குவரத்து நெரிசலில் இன்னும் வீட்டிற்கு போய் சேர எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும். சீக்கிரம் வீட்டுக்கு போய் சேரவேண்டுமே என்ற நினைப்பில் மனம் லேசாக பதைபதைத்தது. இந்த திலகா ஏன் இப்படி பண்றா, காலைலயே சொல்லி இருந்தா நேரத்திலே வீட்டுக்கு போய் அவளுக்கு தெரியாம மறைச்சு வெச்சு இருக்கலாம் என்று மனதிற்குள் அவள் மீது சிறிது கோபப்பட்டேன். குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவ்  என்பதால், அறந்தாங்கியில் இருக்கும் அவள் அக்கா வீட்டிற்கு சென்று இருக்கிறாள். நாளை ஞாயிற்றுகிழமை என்பதால் நானே சென்று அழைத்து வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவளோ, நீங்க வீணா அலைய வேண்டாமேன்னு, நானே குழந்தைகளை கூட்டிட்டு கிளம்பிட்டேன். இன்னும் அரைமணி நேரத்திலே வீட்டுக்கு வந்துருவோம் என்றாள். கிளம்பறதுக்கு முன்னாடியே உங்க செல்போன் -க்கு அடிச்சேன், ஆனா ரிங் போய்டே இருந்துது, நீங்க எடுக்கவே இல்லை என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு வேறு என்னை துளைத்தாள். திலகா இப்படி இன்று இரவே கிளம்பி வருகிறாள் என்ற அதிர்ச்சியில் சரியாக பதில் சொல்ல முடியாமல் அது வந்து...திலகா...ஒரு முக்கியமான மீட்டிங் அதான் எடுக்க முடியல்லே என்று லேசாக திக்கியபடி கூறினேன்.

திலகாவிடம் வீட்டின் இன்னொரு சாவி வேறு இருக்கிறது. நான் வீட்டிற்கு செல்வதற்கு முன் அவள் சென்றால் அவ்வளவு தான், கண்டிப்பா கண்டு பிடிச்சிருவா.  நான் ஒரு சின்ன விஷயத்தை கூட அவளிடம் இருந்து மறைக்க கூடாது என்று நினைப்பாள். இப்படி ஓன்று நான் செய்திருக்கிறேன் என்று தெரிந்தால், இருக்குறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைபட கூடாது, ஏன் இப்படி பண்ணினீங்க என்று என்னை ஒரு வழி பண்ணிவிடுவாள். இதெல்லாம் உனக்கு தேவையா என்று என்னை நானே மனதிற்குள் திட்டிக்கொண்டேன். சரி எப்படியும் அவளுக்கு ஒருநாள் தெரியபோகுது அது இன்னிக்கே தெரிஞ்சா என்ன என்று இன்னொரு பக்கம் என் மனதில் தோன்றியது. ஆனாலும் அவள் இதை எப்படி எடுத்து கொள்வாளோ என்று சிறு சஞ்சலம் இருந்துகொண்டு தான் இருந்தது. அவ வீட்டுக்கு போய் அட்லீஸ்ட் ஹாலில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு இருந்தா கூட போதும், நாம  போய் கொஞ்சம் சரி பண்ணிரலாம். பெட்ரூம் உள்ளே போய் பாத்தா என் நிலைமை அவ்வளவு தான். இப்படி பண்றதை பண்ணிட்டு இப்போ மறைச்சு மட்டும் என்ன ஆக போது என்று சினிமாவில் வருவதை போல் என் மனசாட்சி என்னை கேட்டது. என்ன ஆனாலும் குழந்தைகள் முன்னாடி இது பற்றி விவாதிக்க கூடாது என்று நினைத்துகொண்டேன் . இதுக்கு தான் நேத்து ராத்திரியே எல்லாத்தையும் சரி பண்ணி இருந்தா, இன்னிக்கு இப்படி அவசரமா போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எல்லாத்தையும் கடைசி நிமிசத்துக்கு தள்ளி போடுறது எவ்வளவு தப்பு என்று அந்த நேரத்தில் திடீர் ஞானோதயம் வந்தது. திலகா எங்கே இருக்கிறாள் என்று கேட்க அவள் செல்போனில் அழைத்தேன். ஏனோ போனை அவள் எடுக்கவில்லை, ரிங் போய்க்கொண்டே இருந்தது. அய்யய்யோ வீட்டுக்கு வந்துட்டாள் போல இருக்கு, பெட்ரூம் போய் பார்த்துட்டு கோபத்தில் தான் போன் எடுக்கவில்லையோ, இல்லையே கோபம் இருந்தால் கூட திட்டுவதற்கு கண்டிப்பாக போன் எடுக்கணுமே, இல்லை இன்னும் வீட்டுக்கு வரலியோ இப்படி பல வித எண்ணங்கள் எனக்குள் ஒடிக்கொண்டிருந்தன.

சுமார் இருபது நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வெளியில் இருந்து பார்க்கும்போது, எந்த அறையிலும் லைட் ஏதும் போட்டிருக்கவில்லை என்று தெரிந்தது. அப்பா...திலகா இன்னும் வரவில்லை போல இருக்கிறது. நான் பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு விட்டு நடக்க தொடங்கியதும் என்னுடைய செல்போன் சிணுங்கியது. திலகா தான் போன் பண்றா,  சற்று கலக்கத்துடன் போன் -ஐ  எடுத்து ஹலோ என்றேன். ஹலோ, நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா, நாங்களும் இங்கே வந்துட்டோம்...சின்னவன் தான் பஸ்லேயே தூங்கிட்டான், ராதா குட்டி இன்னும் முழிச்சி தான் இருக்குறா, அதான் இவனை தூக்கிட்டு பேசிட்டே பஸ் ஸ்டான்ட்லே இருந்து நடந்து வரோம் என்று லேசாக மூச்சு வாங்கியபடி கூறினாள். எனக்கு அப்போது இருந்த மனநிலையிலும் ஏம்மா தூக்கிட்டு நடந்து வந்தே, ஒரு ஆட்டோ பிடிச்சி வந்து இருக்கலாம் இல்லே என்று அவள் மீது கரிசனையுடன் கூறினேன். ஆட்டோ ஏதும் கிடைக்கலே, தவிரவும் இங்கே இருக்கிற பஸ் ஸ்டான்ட்லே இருந்து வர நாப்பது ரூபா கேப்பான்...எதுக்கு அனாவசிய செலவு...ஒரு பத்து நிமிச நடை தானேன்னு நடந்து வந்துட்டு இருக்கேன்.  சரி கதவை திறந்து அவசரமாக உள்ளே சென்று எல்லாத்தையும் சரி செய்து விடலாம் என்று வீட்டின் கதவை நோக்கி ஓடினேன். இன்னும் சில வினாடிகளில் திலகா வந்து விடுவாள். சீக்கிரம் சீக்கிரம் என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். என் நேரம் இருட்டில் கதவை உடனே திறக்க முடியவில்லை. நான் இப்படி தடுமாறிகொண்டிருக்கும் போதே திலகா குழந்தைகளுடன் வந்துவிட்டாள். நல்லா மாட்டினோம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே, என்ன வாசல்லே, ரகு அண்ணன் பைக் நிக்குது,  நீங்க ஏன் இன்னும் வெளிலே என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேள்விகளை அடுக்கியபடி கதவருகே வந்தாள். அது வந்து...திலகா...நீ...திடீர்னு இன்னிக்கே வரேன்னு சொல்லிட்டே அதான் சீக்கிரம் வீட்டுக்கு வரலாம்னு ரகு கிட்டே பைக் வாங்கிட்டு வந்தேன்,  நீ இங்கே பக்கத்துலே வந்துட்டேனு சொன்னதும் உனக்காக நான் வெளிலே வெயிட் பண்றேன் என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டேன். அப்பிடி என்ன அவசரம் பைக்லே வர அளவுக்கு, எனக்கு வீட்டுக்கு வந்து இருக்க தெரியாதா, இப்போ தேவை இல்லாத பெட்ரோல் செலவு வேற...சரி வாங்க உள்ளே போகலாம் என்று சற்று சலிப்புடன் கூறியபடி அவளிடம் இருந்த சாவியால் கதவை திறக்க முயன்றாள். உடனே படக் என்று கதவு திறந்து கொண்டது. நான் கதவை லேசாக முறைத்தபடி வீட்டின் உள்ளே சென்றேன்.
பஸ்லே பின்னாடி சீட் தாங்க கிடைச்சிது, தூக்கி தூக்கி போட்டதுலே ரொம்ப அசதியா இருக்கு, ஸ்டவ் -லே அந்த சின்ன பானையிலே லேசா வெண்ணி வெய்யுங்க, குளிச்சிட்டு சாப்பிடலாம் என்றாள். ரொம்ப லேட் ஆச்சு திலகா, இப்போ ஏன் குளிக்கிறே, முதலே சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் பசிக்கும், எனக்கும் ரொம்ப பசிக்குது என்றேன். சரி  நான் ஒரு பத்தே நிமிசத்துலே சாதம் வெச்சு ஒரு ரசம் வெக்குறேன், தொட்டுக்க அப்பளம் பொரிச்சு சாப்பிடலாம் என்றாள் திலகா. சரி நான் போய் முகம் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வரேன்,  ஒரே கசகசன்னு இருக்கு என்றபடி நான் அவசரமாக அருகில் இருந்த பெட்ரூம் -க்கு சென்றேன். படுக்கையை வேகமாக சரி செய்து அதன் மேலே இருந்த அத்தனையையும் அவசரமாக அள்ளி எடுத்து எங்கே வைக்கலாம் என்று இரு வினாடிகள் யோசித்து பின்னர் இப்போதைக்கு இந்த அலமாரியில் மறைத்து வைக்கலாம், என்று நினைத்து அடி எடுத்து வைக்கும்போது, திலகா அந்த அறைக்குள் வந்துவிட்டாள். உள்ளே வந்தவள் சட்டென்று முகம் மாறி, என்ன இதெல்லாம்...பட்டு புடவை, தங்க செயின், குழந்தைங்க டிரஸ் அது இதுன்னு இருக்கு, இதெல்லாம் வாங்க உங்ககிட்டே ஏது அவ்வளவு பணம் என்று சற்று குழப்பத்துடன் கூறினாள். அது வந்து திலகா...அடுத்த வாரம், நம்ம பத்தாவது வருஷ கல்யாண நாள் வருதுன்னு, நம்ம பழனியப்பன் சார் கிட்டே போட்டுட்டு இருந்த அம்பதாயிர ரூபா சீட்டை ஏழாயிரத்து ஐநூறு ரூபா தள்ளி எடுத்துட்டேன். அந்த பணத்துலே தான் உனக்கு தங்க செயின், பட்டு புடவை, குழந்தைகளுக்கு டிரஸ் எல்லாம் வாங்கிட்டேன். உன்கிட்டே சொன்னா வேண்டாம்னு சொல்லுவேன்னு உனக்கு தெரியாமே எல்லாத்தையும் வாங்கிட்டேன். இன்னிக்கு எல்லாத்தையும் பெட்டிலே வெச்சுட்டு உனக்கு அடுத்த வாரம் சர்ப்ரைசா காட்டலாம்னு நினைச்சேன். அதுக்கு வழி இல்லாமே நீ இன்னிக்கே வந்துட்டே...என்றேன் லேசாக அசடு வழிய. அந்த சீட்டு உங்களுக்கு பைக் வாங்கவும், வேற எதாவது அவசர தேவைக்கும்னு தானே போட்டிருந்தோம், அதை போய் இப்போ எடுக்கனுமா, நான் ஒரு வாரம் வீட்டில் இல்லேனா போதுமே இந்த மாதிரி எதாவது வேலை பண்ணுவீங்களே என்று ஒரு சற்று கோபத்துடன் கூறினாலும் மறு நொடியில், ஆசையுடன் நான் வாங்கி வந்திருந்த நகையும் மற்றும் ஆடைகளை கையில் எடுத்து பார்த்தாள். தங்க செயின் -ஐ எடுத்து கழுத்தில் போட்டு, நல்லா இருக்காங்க என்று என்னிடம் கேட்டுவிட்டு, சுவற்றில் மாட்டி இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்து ரசித்து புன்னைகைதாள். எதோ நினைவு வந்தவளாக சட்டென்று, என்ன உங்களுக்கு எதுவுமே வாங்கலே என்றவளிடம்...எனக்கு என்ன பெருசா வாங்குறது ஒரு வேட்டி, சட்டை  போதும், அப்புறமா வாங்கிக்கலாம். அதெல்லாம் கிடையாது நாளைக்கு ஞாயத்துகிழமை தானே, சாயங்காலம் போய் உங்களுக்கும் வாங்கிட்டு அப்பிடியே எதாவது ஹோட்டல் -க்கு போய் சாப்பிடலாங்க என்று கொஞ்சலாக கூறியவளை பார்த்து சிரித்தேன். பைக் இல்லாவிட்டால் என்ன, இன்னும் ரெண்டு வருசத்தில பணம் சேர்த்து வாங்கி கொள்ளலாம். எனக்காகவும் குடும்பத்திற்காகவும் எப்போதும் சிந்திப்பவளுக்கு, சந்தோசத்தை அள்ளி கொடுப்பது தான் எனக்கிருக்கும் ஆசை என்று நினைத்துகொண்டே மெல்ல அவளை அணைத்தேன்.


2 comments:

Karthik said...

I could readily visualize the typical middle class life in India. You have painted some beautiful images about their life without making them sound painful. Your as-a-matter-of-fact style of writing is very nice,just stating the 'existence' without becoming very emotional.

No sign of being a first. All the best and keep'em coming Narayanan.

Narayanan said...

நன்றி கார்த்திக்,

மிகவும் ஆழமாக படித்து இருக்குறீர்கள் என்று தோன்றுகிறது. அருமையான கருத்து.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...