குசாரிஷ் - சமீபத்தில் நான் பார்த்த அருமையான ஹிந்தி திரைப்படம். முதலில் ஆரம்பிக்கும் முன் இது ஒரு திரை விமர்சனம் இல்லை என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன். ஏனென்றால் ஒரு படத்தை பார்த்து விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு விஷயம் தெரியாது என்பது தான் உண்மை. இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் ஏனோ என்னை சற்று பாதித்ததால், படத்தில் எனக்கு பிடித்தது மற்றும் புரிந்தது பற்றி உங்களுடன் பகிர்கிறேன்.
தூம் 2, ஜோதா அக்பர் ஆகிய இரு படங்களை அடுத்து மூன்றவதாக ஹ்ரிதிக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்திருப்பதால் எனக்குள் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். படத்தின் ஆரம்ப காட்சியே அசத்தலாக இருந்தது. ஹ்ரிதிக் ரோஷன் படுக்கையில் தூங்கிகொண்டிருக்க, ஐஸ்வர்யா ராய் அறைக்குள்ளே வந்து அவரை எழுப்பி பல் தேய்த்து விட்டு, குளிக்க வைத்து, உடை மாற்றி, வீல் சேரில் உட்கார வைக்கும்போதே நம்மை அட பரவயில்லையே வித்தியாசமான படம் தான் போல இருக்கே என்று நினைக்க வைக்கிறது. அந்த நினைப்பிற்கு கொஞ்சமும் பங்கம் வைக்காமல் ஆரம்பம் முதல் முடிவு வரை சற்றும் விறுவிறுப்பு குறையாமலேயே படம் செல்கிறது. முதலில் இப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த ஹ்ரிதிக் ரோஷனுக்கு ஒரு பெரிய சல்யுட் அடிக்கலாம். மனிதர் முகத்தில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் நடிப்பை வெளிபடுத்துகிறார். முக்கியமாக அவர் கண்கள் சந்தோசம், கோபம், ஆச்சரியம் என பல பரிமாணங்களை காட்டுகிறார்.
கதை கோவாவில் நிகழ்கிறது. உலகிலேயே மிகச்சிறந்த மேஜிக் கலைஞனாக திகழும் Ethan Mascarenhas (ஹ்ரிதிக் ரோஷன்), பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு ஆபத்தான அந்தரத்தில் மிதக்கும் மேஜிக் நிகழ்த்தும் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் quadriplegic எனப்படும் உடல் முழுக்க உணர்வுகளை இழக்கும் ஒருவித நோய்க்கு ஆளாகிறார். உடலில் தலையை தவிர எந்த ஒரு பாகத்திலும் உணர்ச்சி இல்லாமல் வீல் சேரில் தான் அவர் வாழ்கை நகர்கிறது. இந்த நிலையில் பன்னிரெண்டு வருடங்கள், நர்ஸ் சோபியா டிசௌசா (ஐஸ்வர்யா ராய்) உதவியுடன் உற்சாகத்துடன் ரேடியோ ஜாக்கியாக 'ரேடியோ ஜிந்தகி' என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி கொண்டும் பல தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்களை எழுதியும் வெற்றிகரமாக விளங்குகிறார். ஐஸ்வர்யா ராய் ஒரு அழகிய நர்சாக ஒரு பார்பி டால் போல படம் முழுவதும் வலம் வருகிறார். நடிப்பிலும் ஹ்ரிதிக் ரோஷனுக்கு போட்டியாக மிக சிறப்பாக தன் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.
இப்படி பதினான்கு ஆண்டுகள் சுதந்திரமாக தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த ஈதன் உடலில் உள்ளுறுப்புகள் பாதித்து இருப்பதாக தன் மருத்துவர் மூலம் அறிந்ததும், தன்னால் மருத்துவமனையில் காலத்தை தள்ள முடியாது என்று தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்புகிறார். அதனால் Euthanasia என்ற கருணை கொலைக்கு தன் தோழி மற்றும் வழக்கறிஞர் தேவயாணி தத்தா மூலம் நீதிமன்றத்தில் விண்ணபிக்கிறார். இந்தியாவில் இத்தகைய கருணை கொலைக்கு சட்டத்தில் அனுமதி இல்லை. பலர் இதை முதலில் எதிர்த்தாலும் பின்னர் கருணை கொலை சரியே என்று கூறுகின்றனர். வழக்கு விசாரணையின் போது ஈதன் தாயரே மகன் துன்பபடுவதை காண முடியவில்லை, கருணை கொலைக்கு அனுமதி கொடுங்கள் என்று நீதிபதியிடம் கூறும் இடம் மனதை ஏதோ செய்கிறது. இப்படி ஒரு பக்கம் கதை போய் கொண்டிருக்க இதற்கிடையே ஒமார் சித்திக் என்னும் இளைஞன் தனக்கு மேஜிக் கற்று தருமாறு ஈதன் முன் வந்து கெஞ்சுகிறான். முதலில் மறுக்கும் ஈதன் பின்னர் ஒமாருடைய ஆர்வத்தை பார்த்தும் தனக்கு பின்னர் தன் மேஜிக் நிகழ்சிகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் கற்று தர முன் வருகிறார். அப்படி மேஜிக் சொல்லி கொடுக்கும் போது பிளாஷ் பேக்கில் மேஜிக் ஷோ, நடன காட்சிகள் என ஹ்ரிதிக் ரோஷன் கலக்குகிறார்.
இவ்வளவு ஹெவி சப்ஜெக்டாக இருந்தும் படத்தில் மனதை பிழியும் சோகம் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே விறு விறு என்று படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர் மற்றும் திரைகதை எழுத்தாளர் 'சஞ்சய் லீலா பன்சாலி'. ஆனாலும் சில இடங்களில் சறுக்கல்கள் இருக்கிறது. சோபியா தன் குடும்பம் மற்றும் கணவனை விட்டுவிட்டு ஒரு நாள் கூட விடுப்பு ஒய்வு என்று இல்லாமல் ஏன் நர்சாக பணி புரிகிறார் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. ஈதன் - சோபியா இடையே ஒரு மெல்லிய காதல் இருப்பதை படத்தின் ஆரம்பத்தில் இருந்தே உணர முடிகிறது. ஆனால் அந்த காதலின் காரணம் புரியவில்லை.
Trailer:
No comments:
Post a Comment