Saturday, March 5, 2011

குழந்தைகளும் நேர்மையும்

நேர்மை என்பது ஒரு நல்லொழுக்கம், அதை நாம் குழந்தைகளுக்கு கற்று தர முடியும். சரி, ஏன் நாம் நேர்மையை குழந்தைகளுக்கு கற்று கொடுக்கவேண்டும். இதற்கு பதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

இதன் பொருள், ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவரது மக்களை (குழந்தைகளை) கொண்டு அறிந்துகொள்ளலாம். இங்கு எச்சம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஓன்று மக்கள் அதாவது குழந்தைகள் மற்றொன்று அவருக்கு பின் எஞ்சி நிற்கும் புகழ் சொல்லோ அல்லது பழி சொல்லோ என்று பொருள் கொள்ளலாம். நண்பர் ஒருவருடன் சில மாதங்களுக்கு முன்னர் பேசிகொண்டிருந்த போது, அவர் தனக்கு சிறுவயதில் யாரும் நேர்மையாக இருக்கவேண்டும் என்று கற்று கொடுத்ததில்லை என்று வருத்ததுடன் கூறினார். அதை கேட்ட பின்னர் சிந்தித்து பார்த்ததில் உண்மைதான், ஏட்டு படிப்பாக நேர்மையாக இருக்கவேண்டும் என்று படித்ததை தவிர, நடைமுறை வாழ்க்கையில் யாரும் நமக்கு எப்படி நேர்மையாக இருக்கவேண்டும் என்று கற்று கொடுத்ததில்லையே என்று தோன்றியது. குழந்தைகள் வளரும் பருவத்திலே படிப்பு, விளையாட்டு, இசை, நடனம் என பலவற்றை கற்று கொடுக்கும் அதே நேரத்தில், நேர்மையான நடத்தையை கற்று கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இளம் கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப இளம் வயதில் எதையும் சிந்திக்காமல் செய்யும் தைரியம் இருக்கும். அது மட்டும் இன்றி, நன்மை எது தீமை எது என்று பகுத்தறிவதும், இளம் வயதில் சற்று கடினம் தான். வயதும் வாழ்கை அனுபவமும் சேர்ந்தே ஒருவற்கு நன்மை தீமையை இனம் கண்டுகொள்ள உதவுகிறது. 

முதலில் நேர்மை என்றால் என்ன என்று பார்க்கலாம். இதற்கு விளக்கம் ஒரு சில வார்த்தைகளில் கூறுவது கடினம். நேர்மை என்பது உண்மையாக, நடுவுநிலைமையுடன்,  வாக்கு தவறாமல், ஏமாற்றாமல், பொய் சொல்லாமல் இருப்பதே ஆகும். இப்படி நேர்மையாக இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கே சிரமம் தான். அதற்கு முக்கிய காரணம் நேர்மையாக இருப்பதால் உடனடி நன்மை எதுவும் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் நேர்மை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதனால் கிடைக்கும் உடனடி நன்மை தான். (இங்கு ஒரு இடைச்செருகல், அப்படி கிடைக்கும் நன்மை  உண்மையிலேயே நன்மையா என்பதை காலம் தான் சொல்லும்). உதாரணதிற்கு இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது, மேஜையில் இருக்கும் தண்ணீர் குவளையை கிழே தட்டி விட்டு தண்ணீர் முழுவதும் கொட்டிவிட்டது என்று வைத்துகொள்வோம்,  நீங்கள் யார் இதை செய்தது என்று கேட்டால், பொதுவாக அந்த இரண்டு குழந்தைகளும் நான் செய்யவில்லை என்று தான் கூறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் ஒருவித தற்காப்பு முயற்சியே ஆகும். நான் தான் கிழே கொட்டினேன் என்று கூறும் உண்மையினால் கிடைக்க போகும் தண்டனை பற்றி பயத்தினால் அவர்கள் பொய் சொல்லும் கட்டாயத்திற்கு தள்ள படுகின்றனர். நேர்மையின்மை என்பதில் ஒரு பகுதி தான் பொய் சொல்வது என்றாலும், இந்த பதிவில் எளிமையை கருதி நாம் நேர்மையின்மை மற்றும் பொய் சொல்வதை ஒரே பொருளில் எடுத்துகொள்ளலாம். 

சாதாரணமாக பொய் சொல்லும் பழக்கம் எல்லா குழந்தைகளிடமும் இருக்கவே செய்கிறது. இது முதலில் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று தோன்றினாலும், அது தவறு என்று அவர்களுக்கு புரியவைக்காமல் விட்டுவிட்டால் பின்னால் அது அவர்கள் வாழ்வில் பிரச்சனையாகலாம். முதலில் குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடித்து அந்த அடிப்படை பயத்தை ஒழிக்க வேண்டும். இதை சொல்வது போல் செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. நாம் எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும், அவர்கள் அந்தந்த செயலுக்கேற்ப,  சூழ்நிலைகேற்ப அதனால் கிடைக்கபோகும் தண்டனைகேற்ப பொய் சொல்லலாமா வேண்டாமா என்று முடிவு செய்கின்றனர். தண்டனை பயம் மட்டுமே பொய் சொல்ல காரணம் கிடையாது, சில பதின்ம வயது குழந்தைகள் தங்கள் நட்பு வட்டாரத்தில் தங்களை அனைவரும் உயர்வாக நினைக்க பல பொய்களை கூறுகின்றனர். 

சரி எப்படி நேர்மையை கற்று கொடுப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு விடை கூறுவது அவ்வளவு சுலபமானது இல்லை என்றாலும், எனக்கு தோன்றிய மற்றும் தெரிந்த சில வழிகளை கூறுகிறேன். முதலில் கற்றுகொடுக்கும் நாம் நேர்மையாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேர்மையாக இருப்பதில் முன் உதாரணமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நேர்மையை சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ கற்று கொடுக்க முடியாது. அது அவர்கள் வாழ்வோடு இணைந்து இருக்க வேண்டும். அவர்கள் நேர்மையை அல்லது நேர்மையின்மையை முதலில் வீட்டில் இருந்து தான் கற்று கொள்கின்றனர். முக்கியமாக பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதற்கு முக்கிய தூண்டுகோலாக இருகின்றனர். குழந்தைகள் எங்கே இதை எல்லாம் கவனிக்க போகிறார்கள் என்று நினைத்துகொண்டு பெற்றோர் செய்யும் பல செயல்களை மிக விரைவில் குழந்தைகள் கிரகித்து கொள்கிறார்கள். அந்த ஆளு வந்தா நான் வீட்டுல இல்லைன்னு சொல்லிடும்மா என்று அப்பா அம்மாவிடம் கூறுவதை கேட்கும் குழந்தைகள், அதே உத்தியை வேறு ஒரு சூழ்நிலையில் உபயோகிக்க தயங்குவதில்லை.

குழந்தைகள் நேர்மையாக இருக்க பெற்றோர் முக்கிய காரணமாக இருக்கும் அதே நேரத்தில், நேர்மையில்லாமல் இருபதற்கு பெற்றோர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. பள்ளி மற்றும் வீட்டின் அருகாமையில் கிடைக்கும் நட்பு முதலியவை நேர்மையை அல்லது நேர்மையின்மையை அவர்களுக்கு கற்று கொடுக்கும். அப்படி நேர்மையின்மையை அவர்கள் காணும் நேரத்தில் அடிக்கு அடி, உதைக்கு உதை என்னும் பாணியில் நேர்மையில்லாமல் நடக்க கூடும். அதனால் நேர்மையின்மையை அவர்கள் எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லிகொடுத்தல் அவசியமாகிறது. எதிராளி நேர்மை இல்லாமல் நடந்தால் பதிலுக்கு நாமும் நேர்மை இல்லாமல் நடக்க கூடாது என்பதை கூறவேண்டும். பொதுவாக எந்த ஒரு நல்ல விஷயத்தை எடுத்துகொண்டாலும் உடனடியாக நன்மை கிடைப்பது கடினம், நேர்மையும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அதனால் நேர்மையாக இருப்பதால் கிடைக்ககூடிய நன்மைகளை குழந்தைகளுக்கு எடுத்து கூறுதல் அவசியம். நேர்மையாக இருப்பதால் காலபோக்கில்  கிடைக்கும் மிகபெரிய நன்மை மற்றவர்கள் நம் மீது வைக்கும் நம்பிக்கை. அதற்கு அடுத்து, நாம் உண்மை என்று நம்புவதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதால் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துகொள்ளலாம்.  மேலும் தெளிவான மனதும், எதை பற்றியும் தயங்காமல் பேசக்கூடிய தைரியமும் கிடைக்கும். நேர்மையாக இருந்தால்  வீட்டில் மற்றும் சமூகத்தில் அனைவராலும் மதிக்கபடுவாய் என்றும், நேர்மையாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகளை நீதிகதைகள் மூலமாகவோ, அவர்களிடம் சொல்ல முடிந்த நிஜ வாழ்கை சம்பவத்தையோ உதாரணமாக கூறலாம். என்ன சொல்லலாம் என்பது குழந்தைகளின் வயது மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றவற்றை கொண்டு மாறுபடும். 

நான் ஆரம்பத்தில் கூறியது போல நேர்மை பற்றி விவரிப்பது கடினம். அது ஒரு நெடுந்தூர பயணம், பல நேரங்களில் பாதை கரடு முரடாக இருக்கும். ஆனால் சிறிது காலம் பழகிவிட்டால் நேர்மையாக இருப்பதை தவிர வேறு எதையுமே நினைக்க தோன்றாது. நேர்மையை கடைபிடித்தால் ஒட்டுமொத்த வாழ்கை தரம் மேன்மை அடையும். இப்படி நிறைய கூறிக்கொண்டே போகலாம். நேர்மையை பற்றி இவ்வளவு பிரச்சாரம் செய்வதால் நான் பெரிய உத்தமன் என்று காட்டிகொள்ள முயற்சிக்கவில்லை. முடிந்தவரை நேர்மையாக இருக்க முயற்சிக்கிறேன், அதை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நேர்மையை பற்றி  என்னால் முடிந்தவரை ஒரு சிறிய பகுதியை மட்டும் இங்கு பகிர்ந்திருக்கிறேன். ஏதேனும் பிழையோ, மாற்று கருத்தோ இருந்தால் கூறுங்கள்.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...