Sunday, March 11, 2012

அமெரிக்கர்களிடம் எனக்கு புரிந்த ஐந்து விஷயங்கள்




சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவர் எழுதி இருந்த 'அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்' என்று ஒரு பதிவைப் படித்தேன். சரி அவருக்கு எது பிடிக்கிறது எது பிடிக்கவில்லை என்பது அவரது உரிமை. சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் கமலிடம் ரசிகர் ஒருவர் மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேரடி போட்டியின் போது கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

சார், ஹேராம் படத்திலே கடைசி சில காட்சிகளில் எல்லாமே கருப்பு வெள்ளையில் காட்டியிருப்பீர்கள். ஆனால் அதில் ஒரு பக்கம் நெருப்பு எரியும் போது அதை மட்டும் கலரில் காட்டி இருப்பீர்கள். அது ஏன் என்று புரியவில்லை.

அதற்கு கமல் - நீங்கள் பிடிக்கலை என்று சொல்லாமல் புரியலை என்று சொல்லியதே நீங்கள் புதிதாகத் தெரிந்துகொள்ளத் தயாராக இருக்குறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. என்னுடைய சமூகக் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக தன்னுள் கனன்று கொண்டுருந்த கோபத்தை வெளிப்படுத்தவே அவ்வாறு காட்டினேன் என்கிற ரீதியில் பதில் சொல்லி இருப்பார்.

இங்கு கவனிக்க வேண்டியது ஒருவர் செய்வது நமக்கு பிடிக்கவில்லை என்பதை விட அவர் ஏன் அதை செய்கிறார் என்று அறிந்து கொண்டால் நம் அறிவும் வளரும் அந்த உறவில் சிக்கல் ஏற்பாடாமலும் இருக்கும். இது போல தனிப்பட்ட பதிவைப் பற்றி என் கருத்துக்களை நான் இதுவரை நேரடியாக எழுதியதில்லை. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிற என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இது. அந்த பதிவரின் கருத்துக்களை // அடைப்பிற்குள்ளும், என் புரிதலை அதற்கு கீழேயும் கொடுத்திருக்கிறேன்.


//# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.//

இதில் எதுவும் தவறு இருப்பதாக அவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் குளிர் வாட்டும். அடிக்கடி சளி பிடிக்கும். அதனால் பள்ளிகளிலேயே முதலில் எப்படி மூக்கை சுத்தமாக சிந்தி அந்த நாப்கின்னை பத்திரமாக குப்பை தொட்டியில் போடுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இது மட்டும் இல்லை, குழந்தைகளுக்கு பள்ளிகளில் முதலில் படிப்பை விட அவர்கள் வாழும் சமுதாயத்தில் எப்படி ஒரு நல்ல குடிமகனாக நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தான் சொல்லிக் கொடுகிறார்கள். உதாரணதிற்கு எப்படி நன்றி சொல்வது, குளிருக்கு அணியும் கோட்டை எப்படி பத்திரமாக மாட்டுவது, ஒருவர் உதவி செய்தால் எப்படி நன்றி சொல்வது, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பொது இடங்களில் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். நம்ம ஊரில் சாப்பிட்டுவிட்டு எல்லோர் முன்னிலையிலும் பெரிதாக ஏப்பம் விடுவதைப் போல் அமெரிக்கர்கள் செய்வதில்லை. அப்படியே மீறி ஏப்பம் வந்தாலும் கண்டிப்பாக மன்னிப்பு கேட்பார்கள். பொது இடங்களில் லஜ்ஜை இல்லாமல் சிறுநீர் கழிப்பதில்லை. நீங்களே யோசித்து பாருங்கள், சளி வந்தால் போகிற போக்கில் சாலையில் துப்புவதை விட, எந்த இடம் என்றாலும் நாப்கினை உபயோகித்து சிந்தி அதைக் குப்பைத் தொட்டியில் போடுவது மேல் இல்லையா.

//# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்போது மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.//

ஐயா ஓரிரு மாதத்திற்கு பின் அல்ல, குழந்தை பிறந்ததில் இருந்தே தனியாகத் தான் படுக்க வைப்பார்கள். இதற்கு காரணம் குழந்தையின் மீது உள்ள அக்கறையால் தான். குழந்தையை கூடப் படுக்க வைப்பதால் போர்வை மூடியோ அல்லது தலையணை மூடியோ மூச்சுத் திணறி அதன் உயிருக்கே ஆபத்து ஏற்ப்படும் வாய்ப்பு இருக்கிறது. நம்ம ஊரில் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைப்பதில்லையா, அது போல் தான் இங்கு தனியாக கிரிபில் படுக்க வைப்பது. குழந்தையை தனியாக படுக்க வைப்பதால் அதற்கு பாதுகாப்பு மற்றும் நோய் தொற்றும் ஏற்படுவதில்லை என்பதால் மருத்துவர்களும் இதையே பரிந்துறைக்கிறார்கள். இதை போய் ஐந்தறிவு ஆறறிவு பாசம் போன்றவற்றை சொல்லி குழப்பிக் கொள்ளகூடாது. குழந்தைகளைத் தனியாகப் படுக்கவைப்பதால் அவரகளுக்கு பாசம் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

//# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.//

பணம் இல்லாதாதால் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்ற நிலை எனக்குத் தெரிந்து எந்த அமெரிக்க குடிமகனுக்கும் வந்ததாக தெரியவில்லை. ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தால் தான் வைத்தியம் கிடைக்கும் என்றில்லை, அது இல்லாதவர்களுக்கும் பல இலவச முகாம்கள் இருக்கின்றன. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். மேலும் இது விவாதத்திற்குரிய தலைப்பு.

//# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).//

எல்லா ஊரையும் நாம் வாழ்ந்த வாழ்கையை வைத்து கணக்குப் போடக் கூடாது. அமெரிக்காவில் உள்ள எலும்பைத் துளைக்கும் குளிரில் ஒரு சொம்புத் தண்ணீரை எடுத்து ஊற்றினால் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்து ஜன்னி வந்துவிடும் ஐயா. மேலும் வீடுகள் எல்லாம் பெரும்பாலும் மரத்தில் தான் கட்டியிருப்பார்கள். அதனால் நம்ம ஊரைப் போல் பாத்ரூமில் தண்ணீரை எல்லாம் ஊற்ற முடியாது. அப்படி ஊற்றினால் கிழே உள்ள தளத்தில் தண்ணீர் ஒழுகும் வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீர் உபயோகித்து நேரடியாக கழிவுகளைத் தொடாமல் பேப்பரை உபயோகித்து பின்னர் சோப்பு போட்டு கை கழுவுவதால் அதனால் நோய் ஏற்ப்படும் வாய்ப்பும் குறைவு.


//# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.//

அவர்களைப் பொறுத்தவரை தான் சரி என்று நினைப்பதை யோசிக்காமல் செய்வார்கள். ஐயோ நாம் இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதில்லை. என்னதான் நினைத்த நேரம் விவாகரத்து செய்து கொண்டாலும், திருமண வாழ்க்கையில் கணவனோ மனைவியோ வேறொரு நபரிடம் உறவு வைத்துக்கொள்வதை அனுமதிக்க மாட்டார்கள். கணவனோ மனைவியோ நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கும் போதே அடுத்த பெண்ணுடனோ, ஆடவனுடனோ உறவு வைத்துக் கொள்வதை விட பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துகொண்டு போவது எவ்வளவோ மேல். அமெரிக்காவில் இருதார மனம் எல்லாம் சட்டப்படி குற்றம். மேலும் பெண்கள் பொருளாதார ரீதியில் கணவனை சார்ந்து இருப்பதில்லை, அதனால் விவாகரத்து பெருகுகிறது. இப்போது இந்தியாவிலும் பெண்களின் பொருளாதார வளர்ச்சியால் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. அந்தக் காலத்தைப் போல கணவன் அடித்தாலும் உதைத்தாலும் தாங்கிக்கொண்டு குடும்பத்தை நடத்தும் நிலை இப்போது இல்லை என்பது என்னைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க விஷயம்.


15 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகத் தெளிவான
என் போன்ற இந்தியக் கலாச்சாரம் மட்டுமே அறிந்த
மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயலுகிறவர்களுக்கு
அருமையான பதிவு.விரிவான விளக்கத்திற்கு நன்றி

Narayanan Narasingam said...

//Ramani said...
மிகத் தெளிவான
என் போன்ற இந்தியக் கலாச்சாரம் மட்டுமே அறிந்த
மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயலுகிறவர்களுக்கு
அருமையான பதிவு.விரிவான விளக்கத்திற்கு நன்றி//

நன்றி ரமணி ஐயா,

நாம் கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள், வெளிநாட்டவர்களின் கலாச்சாரம் சீர்கெட்டது என்று நினைப்பது தவறு என்பதை நாம் உணர்ந்தாலே போதும். கலாச்சாரம் நாம் வாழும் வாழக்கை சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது என்பது நிதர்சனமான உண்மை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

பிடிக்காத ஐந்து விஷயங்கள் பதிவு எழுதியவர் அமெரிக்காவுக்கு சமீபத்தில் ( 2 - 3 வருடங்களுக்குள்) வந்தவராக இருக்கலாம். வேறு வேறு அமெரிக்க மாகாணங்களில் வாழ்ந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் போது அமெரிக்க மக்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை பற்றி நிறைய புதிய புரிதல்கள் பெறுவார்.

Narayanan Narasingam said...

//@Anonymous said...
பிடிக்காத ஐந்து விஷயங்கள் பதிவு எழுதியவர் அமெரிக்காவுக்கு சமீபத்தில் ( 2 - 3 வருடங்களுக்குள்) வந்தவராக இருக்கலாம். வேறு வேறு அமெரிக்க மாகாணங்களில் வாழ்ந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் போது அமெரிக்க மக்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை பற்றி நிறைய புதிய புரிதல்கள் பெறுவார்.//

அருமையான கருத்து.

அந்தப் பதிவரின் மேல் தவறு என்று கூறவில்லை. நீங்கள் கூறியது போல அவருடைய அனுபவம் அப்படி நினைக்க வைக்கிறது. இது போன்ற மனோநிலை நம் இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழர்களிடம் நிறைய பார்த்திருக்கிறேன். மேற்கத்தியவர்களின் உடையை பற்றி கிண்டல் செய்வது, அவர்களின் உணவபழக்க முறையை கேலி செய்வது போன்றவை சரியானதாகப் படவில்லை. பதிவில் குறிப்பட்டது போல மற்ற நாட்டவர்களின் நமக்கு தெரியவில்லை என்பதே உண்மை. இதே நிலை அவர்களுக்கும் இருக்கும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

bandhu said...

நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரி. நல்ல பதில் அளித்திருக்கிறீர்கள். ஆனால், மெடிக்கல் இன்சூரன்ஸ் விஷயத்தில் இடிக்கிறது. இன்சூரன்ஸ் இல்லாமல் யாராலும் எமெர்ஜென்சி ரூம் சென்று மருத்துவம் செய்துகொள்ளலாம்தான். ஆனால், அதற்க்கு பல மணி நேரம் காத்து நிற்கும் பொறுமை வேண்டும், எனக்கு தெரிந்து ஒருவர் 17 மணி நேரம் காத்திருந்தார்! மெடிக்கல் கேம்ப் என்பதெல்லாம் எழுத்தளவில்தான் உள்ளது. இது அமெரிக்காவில் இன்னமும் ஒரு பெரிய பிரச்சனை தான்!

Narayanan Narasingam said...

//@bandhu said...//

வாங்க bandhu,

உண்மை தான், மெடிக்கல் இன்சூரன்ஸ் விஷயத்தில் நிறைய பிரச்சனை இருக்கிறது. ஹெல்த் கேர் ரிபார்ம் எதாவது செய்கிறதா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அந்தப் பதிவர் ஏழைகளுக்கு ஆஸ்பத்திரி இல்லை, ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தால் தான் மருத்துவ வசதி கிடைக்கும் என்பது சரியல்ல என்றுதான் கூறி இருக்கிறேன்.

நீங்கள் கூறும் எமர்ஜென்சி ரூமில் காத்திருக்கும் நேரம் நோயாளியின் நோயின் தீவிரத்தைப் பொருத்து மாறுபடுகிறது. நான் ஒரு முறை வயிற்று வலிக்கு எமர்ஜென்சி சென்றபோது சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன். ஆனால் ஒரு முறை எங்கள் மகள் நான்கு வயதாக இருக்கும் போது சுடு தண்ணீரை நெஞ்சில் ஊற்றிக்கொண்டு விட்டாள். அவளை எமர்ஜென்சி கூட்டி சென்றபோது ஒரு நிமிடம் கூட காத்திருக்காமல் அனுமதி கிடைத்தது.

இலவச முகாம்கள் எல்லா இடங்களிலும் இல்லை. நாங்கள் வசிக்கும் பகுதியில் வாரத்தில் ஒரு நாள் யார் வேண்டுமானாலும் சென்று மருத்துவ வசதி பெரும் முகாம்கள் இருக்கிறது.

எப்படி இருந்தாலும் இந்த விஷயம் சிக்கலானது என்பதால் விவாதத்திற்குரியது என்று பதிவில் கூறியிருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அமர பாரதி said...

நன்றாகச் சொன்னீர்கள்.  இப்படி எழுதினால் அமெரிக்காவுக்கு கொடி பிடிப்பவன் என்று பின்னூட்டங்கள் வந்தாலும் வரும்.  பொதுவாக நம் கலாச்சாரம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்பது மட்டும் தான்.  அதுவும் எக்ஸ்ட்ரா மேரீட்டல் தொடர்புகள் மிக மோசமாக உள்ள இடம் நம்மதே.  நாம் அப்படி இப்படி என்று தூக்கிப் பிடிக்கும் விஷயங்கள் எல்லாம் எந்த அளவு போலித்தனத்துடன் இருக்கிறது என்பது தெரியுமே.  

Narayanan Narasingam said...

//@அமர பாரதி said...
நன்றாகச் சொன்னீர்கள். இப்படி எழுதினால் அமெரிக்காவுக்கு கொடி பிடிப்பவன் என்று பின்னூட்டங்கள் வந்தாலும் வரும். பொதுவாக நம் கலாச்சாரம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்பது மட்டும் தான். அதுவும் எக்ஸ்ட்ரா மேரீட்டல் தொடர்புகள் மிக மோசமாக உள்ள இடம் நம்மதே. நாம் அப்படி இப்படி என்று தூக்கிப் பிடிக்கும் விஷயங்கள் எல்லாம் எந்த அளவு போலித்தனத்துடன் இருக்கிறது என்பது தெரியுமே. //

வாங்க அமர பாரதி,

சரியாகக் கூறினீர்கள். நம் மக்கள் பலர், நாம் கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டே தவறுகளை எல்லாம் அண்டர் தி கார்பெட் போட்டு மறைத்து வருகிறோம். இன்று தொலைகாட்சியில் வரும் சீரியல்களில் கூட சர்வ சாதரணமாக இரண்டு மனைவிகள் இருப்பதாகக் காட்டுகிறார்கள். நம் கலாச்சாரத்தையே நாம் சரியாகப் பின்பற்றாமல் இருக்கும்போது அடுத்தவர்களை பற்றி சொல்ல எதுவும் சொல்ல நமக்கு தகுதி இருப்பதாகத் தெரியவில்லை என்பதை சற்று வருத்ததுடன் ஒப்புகொள்ளதான் வேண்டிருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு ! நன்றி சார் !

Narayanan Narasingam said...

//@திண்டுக்கல் தனபாலன் said...சிறப்பான பதிவு ! நன்றி சார் !//

வாங்க தனபாலன் சார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Robin said...

//அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம்// எல்லாம் தெரிந்த இவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்பது மட்டும் தெரியாமல் போனதற்குக் காரணம் அதீத சுயநலமே.

Narayanan Narasingam said...

//Robin said...
எல்லாம் தெரிந்த இவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போவதுதான் வாழ்க்கை என்பது மட்டும் தெரியாமல் போனதற்குக் காரணம் அதீத சுயநலமே.//

உண்மை தான் ராபின். அப்படி விட்டுகொடுத்து வாழும் அமெரிக்கர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். நம் ஊரில் உள்ள பெண் அடிமைத்தனத்தினால் விவாகரத்து செய்ய முடியாமல் பெண் மட்டுமே எப்போது விட்டுகொடுத்து வாழ்கிறார்கள். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை.

நம் சமுதாயத்தில் விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்துகொள்ள எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள். எங்க தனக்கு சமுதாயத்தில் நிம்மதியாக வாழ முடியாமல் போய் விடுமோ என்கிற பயத்திலேயே பல பெண்கள் விட்டுகொடுத்து நரக வேதனை அனுபவித்தபடி வாழ்கிறார்கள். படிப்பும் பொருளாதார சுதந்திரமும் பெண்களுக்கு கிடைத்தால் நம் ஊரிலும் விட்டுகொடுத்து வாழும் நிலை குறைந்துவிடும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

ஏன் இப்டி அமெரிக்கா ஜால்ரா போடுற தம்பி ....உங்க blogs title கும் உங்க கருத்துக்கும் சம்பந்தமே இல்ல ...

Narayanan Narasingam said...

//Anonymous said...
ஏன் இப்டி அமெரிக்கா ஜால்ரா போடுற தம்பி ....உங்க blogs title கும் உங்க கருத்துக்கும் சம்பந்தமே இல்ல ...//

உங்க கருத்துக்கு நன்றி. எனக்கு தெரிந்த உண்மையை சொன்னா ஜால்ராவா. பிற நாட்டு நூல்கள் மொழி பெயர்தல் வேண்டும் என்று பாரதியார் கூட சொல்லி இருக்கார். நம்ம ஆட்கள் என்னமோ தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரம் தான் மேன்மையனதுன்னு சொல்லிக்கிட்டு, அண்டர் தி கார்பெட் எல்லா கூத்தும் பண்ணுவாங்க. உங்களுக்கு நான் எழுதிய குறிப்பிட்ட கருத்துல உடன்பாடு இல்லேனா சொல்லுங்க விவாதிக்கலாம். மத்தபடி நீங்க பொத்தாம் பொதுவா ஜால்ரான்னு சொல்றதை நான் ஒத்துகொள்ள மாட்டேன்.

தலைப்பு ஏன் அப்பிடி வெச்சேன்னு பதிவின் முதல் இரண்டு வரிகளை படித்து பாருங்க, புரியும்.

Common_Man said...

Narayanan,

Just got to read your old post.

Very well written. We all know that Culture & practices differ from place to place, it also depends on what everyone feels that is good for them.

We Indians have a habit of measuring everything with our yardstick, I think that also comes from a superiority complex.

Keep writing!

Regards
Aravind

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...