Wednesday, August 22, 2012

முக்கோண நட்பு - சிறுகதை (மாதிரி)





ரொம்ப நாளா பதிவு எழுத வர முடியலை. வீட்டு வேலை, அலுவலக வேலை என பல காரணங்களை கூறி மனம் சமாதானம் செய்தாலும், எழுதுவது இல்லை, எழுதுவது இல்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு கோரஸ் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. பல நாட்களாக மனதில் அசை போட்டு கொண்டிருந்த ஒரு விஷயத்தை இன்று எழுதலாம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு கதை மாதிரி தான். முக்கோண காதல் மாதிரி, இது முக்கோண நட்பு. இது முழுக்க முழுக்க கற்பனை என்றெல்லாம் பொய் சொல்ல மனமில்லை. என் நண்பன் அவனுக்கு நிகழ்ந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டு என்னுடைய அபிப்ராயம் கேட்டான். அதை சற்று கற்பனை கலந்து உங்கள் முன் வைக்கிறேன். பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. நான் என்னுடைய கருத்தை அவனுக்கு சொல்லிவிட்டேன், ஆனால் நான் கூறிய கருத்து சரியா தவறா என்று தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள். உங்கள் கருத்து ஒரு நல்ல நட்பை சேர்த்து வைக்கும் வாய்ப்புள்ளது. இனி கதைக்கு செல்வோம்.

------------------------------

சென்னையில் வசிக்கும் சரவணனும், குமரனும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்கள் மட்டுமில்லாமல் இருவரின் மனைவிகளும் மேலும் நெருங்கிய சினேகிதிகள். இப்படி இரண்டு  குடும்பகளும் பல வருடங்களாகப் பழகி வந்தன. 

இப்படி இருக்கும் போது சரவணனின் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் மற்றொரு நண்பன் ராம் காலப்போக்கில் குமரனுக்கும் அறிமுகமாகிறான். புதிய நட்பு என்பதால் குமரன் மற்றும் ராம், தாங்கள் படித்த புத்தகங்கள், பின் நவீனத்துவம், இசை, பாடல்கள் என தங்களுக்குப் பிடித்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிக நேரம் தனியாக செலவழிப்பதைப் பார்த்த சரவணன் கொஞ்சம் எரிச்சல் அடைந்தான். ஒருநாள் குமரனிடம் சென்று...

குமரா, நீ இப்ப எல்லாம், ராம் கூட தான் ரொம்ப பேசுறே. எப்பவும் என்னை ஒதுக்கி வெச்சுட்டு, நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிட்டு இருக்கீங்க. 

டேய், அப்படி எல்லாம் இல்லடா. நானும் ராமும் இப்பதான் புதுசா பழகுறோம். ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் நிறைய தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு. இதுலே சீக்ரெட் எதுவும் இல்லே, நீயும் வந்து தாராளமா கலந்துக்கலாம்.

அந்தப் பிரச்சனை அதோடு முடிந்தது. அதன் பின்னர் சில மாதங்கள் ஒன்றும் பிரச்சனை இல்லாமல் சென்றது. இதற்கிடையில் ராமின் அலுவலகத்தில் வேலை மாற்றத்தினால் பெங்களூருக்கு குடும்பத்துடன் அடுத்த சில மாதங்களில் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சரவணன் செய்தான். அதனால் ராமும் சரவணனும் தனியாக அதிக நேரம் செலவு செய்ய நேர்ந்தது. இதைப் பற்றி அறிந்த குமரனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் அதை நேரடியாக சரவணனிடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

ஆனால் ராமிடம் மட்டும், இப்பல்லாம் சரவணன் உன்னோட நேரத்தை நிறைய எடுத்துக்குறான். நீயும் நானும் பேசவே முடியறது இல்லே. ஞாயித்துகிழமை கூட உன்னாலே என்னை பாக்க வர முடியலே.

அதெல்லாம் ஒன்னும் இல்லே குமரா. உனக்கே தெரியும் பெங்களூர் மாத்தி போறதுனாலே வீட்டுல ஏகப்பட்ட வேலை. அதான் ஞாயித்துகிழமை பாக்க வர முடியறதில்லை.

என்னவோ சொல்ற, நீ பெங்களூர் கிளம்பி போனதும் அவன் என்கிட்டே தானே வருவான். என்னாலே எல்லாத்தையும் மறந்துட்டு உடனே பழக முடியாது. கொஞ்சம் டைம் ஆகும் என்றான் குமரன். 

இதைக்கேட்டு ராம் சற்று அதிர்ச்சி அடைந்தான். என்னடா இதே பிரச்சனை தானும் குமரனும் பழகுவதால் வந்தது. சரி நாம் இங்கிருந்து பெங்களூர் கிளம்பி விட்டால், இவர்கள் இருவரும் எப்படியும் ஓன்று சேர்ந்து விடுவார்கள். அதைத்தவிர ஏற்கனவே முன்பு இதேபோல் நடந்த பிரச்சனையை அவர்கள் இருவருமே பேசி தீர்த்துக் கொண்டார்கள். அப்படி இல்லாவிட்டாலும் இருவரின் மனைவிகளும் நெருங்கிய சினேகிதிகள், அவர்கள் பேசி சேர்த்து வைப்பார்கள். தானே கனியும் பழத்தை தடியை எடுத்து அடிப்பானேன். அவர்கள் இருவரும் பல வருடங்களாக பழகும் நண்பர்கள், இதில் நாம் தலையிட வேண்டாம் என்று நினைத்து சரவணனிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்து விட்டான்.

சில மாதங்களில் ராம் பெங்களூருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் சென்று விட்டான். அவ்வபோது தொலைபேசியில் இரு நண்பர்களிடமும் தொடர்பில் இருந்தான். குமரன் முன்பு கூறியதைப் போல சரவணனிடம் சற்று விலகியே இருந்தான். 

குமரன் ஏன் இப்படி இருக்கிறான் என்று குழம்பிய சரவணன், ஒரு நாள் தனியே சந்தித்து...

குமரா, அப்படி என்னதான் கோபம் என் மேலே, நீயா போன் பண்றதில்லை, நான் பேசினாலும் பட்டும் படாம தான் பேசுறே. என்ன ஆச்சு உனக்கு ?

நீயே யோசிச்சு பாரு, நீயும் ராமும் சேந்துகிட்டு என்னை ஒதுக்கி வெச்சீங்க. அன்னைக்கு ஒருநாள் அவனுக்கு நான் மெசேஜ் பண்ணினேன், அவன் உன் வீட்டுல இருக்கறதா எனக்கு ரிப்ளை பண்றான். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா இருக்கீங்க.

அதன் பின்னர் ஒருவழியாக சரவணனும் குமரனும்  ஏதேதோ பேசி சமாதானம் ஆகி விட்டார்கள்.  இப்போது பிரச்சனை என்னவென்றால் சரவணன் குமரன் இருவருமே ராமிடம் பேசுவதில்லை. சரவணனாவது அவ்வப்போது  தொடர்பு கொள்வான். ஏனோ தெரியவில்லை குமரன் சுத்தமாக ராமின் தொடர்பை துண்டித்து விட்டான். எப்படியும் காலபோக்கில் பேசுவார்கள் என்று காத்திருந்த ராம் ஒரு நாள் பொறுமை இழந்து சரவணனை அழைத்தான்.

சரவணா, என்னதான் அப்படி மனசில் நினைசிகிட்டு என்கிட்டே பேசாமே இருக்கே ?

குமரனுக்கு என்கிட்டே பிரச்சனைன்னு உனக்கு முன்னாடியே தெரியும் இல்லே, அதை ஏன் என்கிட்டே சொல்லலே. என்னை நீ நல்லா ஏமாத்திட்டே. என் வீட்டுல இருந்துட்டே அவனுக்கு மெசேஜ் பண்றே, என்கிட்டே சொல்ல கூட இல்லை. குமரன் என் மேலே கோவமா இருக்குறதை, என் கூடவே இருந்துகிட்டே எப்படி உன்னாலே மறைக்க முடிஞ்சது. உனக்கு முன்னாடியே நானும் குமரனும் பிரண்ட்ஸ், நாங்க சண்டை போட்டு பிரியறது உனக்கு சந்தோசம். அதான் என்கிட்டே சொல்லாம மறைச்சிட்டே என்று கத்தினான்.

இதைக் கேட்டதும் கண்களில் பொங்கிய அழுகையை அடக்கியபடி, அப்படி இல்லே சரவணா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா பிரண்ட்ஸ். நான் பெங்களூர் கிளம்பியதும், எப்படியும் நீங்க ஒன்னா சேர்ந்துருவீங்க. இதுலே நான் எதுக்கு நடுவுலே புகுந்து குட்டையை குழப்பனும்னு தான் சொல்லலே. நான் சொல்லாட்டியும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே பிரச்னை இருக்குனு நீங்க உணர்ந்து இருப்பீங்க. ஏற்கனவே இதுக்கு முன்னாடி வந்த பிரச்னையை நீங்களே தான் பேசி தீர்த்துகிட்டீங்க. அதே மாதிரி, இதையும்  நீங்களே எப்படியும் பேசி சால்வ் பண்ணுவீங்கனு தான் சொல்லலே. மத்தபடி நம்ம மூணு பேருமே எப்பவும் ஒன்னா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன்.

ஆனால், ராம் என்ன கூறியும் சரவணன் சமாதானம் ஆகவில்லை.

இப்பொழுது என் கேள்வி. 
  1. ராம் நிலையில் இருந்து பார்க்கும்போது, அவன் செய்தது சரியா அல்லது தவறா.
  2. கோபப்பட்டு பேசாமல் இருந்த குமரனிடம் நட்பு பாராட்டும் சரவணன், இதற்கு நடுவில் ஒரு பார்வையாளன் போல இருந்த ராமிடம் விலகி இருப்பது சரியா அல்லது தவறா.
  3. எந்தக் காரணமும் கூறாமல் குமரன் ராமிடம் விலகி இருப்பது சரியா அல்லது தவறா.
சரியா, தவறா என்று கூறி அது ஏன் என்று விளக்கம் கூறினால் நன்றாக இருக்கும். 


5 comments:

Anonymous said...

1. சரி
2. தவறு
3. தவறு

Anonymous said...

Ponga poi pullakuttikala padikka veinga....

Avan appraisal result parthuttu gaanfayittu vukkanthuttu erukkan.. Ethula saravanan , kumaranuttu...

Enna kodumai saravanan ethu...

Narayanan Narasingam said...

//@Anonymous said...Ponga poi pullakuttikala padikka veinga....//

முதலில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்க யார்னு தெரியலை, ஆனாலும் நான் சொல்றதை சொல்றேன்.

அது என்னமோ தெரியலே, நம்ம ஊரிலே மட்டும் தான் அடுத்தவன் என்ன பண்ணனும்னு வரிஞ்சு கட்டிட்டு அட்வைஸ் குடுக்குறோம். புள்ள குட்டிங்களை படிக்க வைக்கறதை பெத்தவங்க பாத்துப்பாங்க.

நீங்க வந்து படிச்சிட்டு முடிஞ்சா கேட்ட பதிவுக்கு சம்பந்தம் இருக்குற மாதிரி எதாவது பதில் சொல்லுங்க. நீங்க வேலை பாக்குறது, அப்ரைசல் எல்லாம் எதுக்காக சார். (நானே சார் என்று முடிவு பண்ணிட்டேன், இப்படி ஒரு கருத்தை ஒரு பெண் போட்டிருக்க முடியாது என்று ஏனோ நான் திடமாக நம்புகிறேன்). நாம் இருப்பது, சம்பாரிப்பது எல்லாமே இந்த சமூகத்தில் நம்மை சுற்றி உள்ள உறவுகளை மகிழ்விக்கத்தான். ஒரு மனிதன் தன் நட்பில் ஏற்ப்பட்ட விரிசலால் மன உளைச்சலுக்கு ஆளாகி, அதற்கு தான் காரணமோ என்று சுய பரிசோதனை செய்துகொள்ளும் முயற்சியில் என்னிடம் வந்து கேட்டான். அதை எனக்கு தெரிந்த வழியில் மற்றவர்களுக்கு கூறி அவர்கள் கருத்தை இந்தப் பதிவில் கேட்டிருக்கிறேன்.

அதை தயவு செய்து கேலி செய்யாதீர்கள். மனமில்லாமல் தான் இவ்வளவு கடுமையாக என் கருத்தை தெரிவிக்கிறேன்.

மீண்டும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.



Ganesh said...

idhu pondra sambavangal andraada vaazkaiyil nadai perubavai thaan.

In my opinion, Ram can be blamed (to an extent) for
a. not making Saravanan aware of Kumaran's misgivings
b. not ensuring that Kumaran was not getting left out

Had either of the above 2 actios happened, it is likely that the friendship between the 3 could have lasted.

Most problems stem from and fester due to a lack or breakdown of communication between the people concerned. If open discussions also do not help, one needs to accept change and move on. As Bernard Shaw said 'The reasonable man adapts himself to the world; the unreasonable one persists in trying to adapt the world to himself'. Let us be reasonable.

Narayanan Narasingam said...

//@Ganesh said...//

அருமையான கருத்துக்கு நன்றி கணேஷ். நீங்கள் கூறியது போல தான் நடந்து கொண்டிருகிறது. ராமும் சரவணனும் விலகி வேறு வேறு பாதையில் சென்று கொண்டிருகிறார்கள்.

என்னை பொறுத்தவரை, ஒரு நல்ல புத்தகத்தில் உள்ள சில பக்கங்கள் பிடிக்கவில்லை என்பதற்காக தூக்கி எறிவது போலதான் இருக்கிறது சரவணனின் செயல். அனைத்து கேள்விகளுக்கும் காலம் பதில் சொல்லும். பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...