Tuesday, May 19, 2015

ஆச்செண்ட் ரங்கமணிகள்

மற்ற வெளிநாடுகளில் எப்படியோ தெரியவில்லை, அமெரிக்காவில் நான் நிறைய ஆச்செண்ட் (Accent) ரங்கமணிகளை சந்தித்திருக்கிறேன். என்ன விஷயம்னா, நம்ம கிட்டே சாதாரணமா தான் இங்கிலீஷ் பேசிட்டு இருப்பார். யாராவது ஒரு வெள்ளைக்காரன் திடீர்னு நம்ம பேச்சினிடையே உள்ளே வந்தான்னா, உடனே இவர் பேசுற ஆச்செண்ட் அப்பிடியே ராபர்ட் கிளைவ் பேரன் மாதிரி மாறிடும். அதை கேட்கும் போது நமக்கே கொஞ்சம் பேஜாரா தான் இருக்கும், நடுவுல வந்து புகுந்த அந்த ஆளுக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க. அப்படிப் பேசுறது ரொம்ப செயற்கையா இருக்குனு தெரிஞ்சும் அப்படி பேசுறாங்களா, இல்லை தெரியாம அப்படி பேசுறாங்களான்னு புரியலே. அதுலே ஒருத்தர் குழந்தைங்க கிட்டே மட்டும் அமெரிக்க ஆச்செண்ட்னு நினைசிக்கிட்டு படு பயங்கரமா பேசி பயமுறுத்துவார். குழந்தைகள் அப்புறம் தனியாக வந்து அந்த அங்கிள் ஏன் திடீர்னு வேற மாதிரி பேசுறாரு என்று கேட்பார்கள். நான் அறிந்தவரையில் நம் இந்திய ஆக்செண்டுக்கு எந்தக் குறையும் இல்லை, என்ன கொஞ்சம் மெதுவா பேசணும், அவ்வளவுதான். மேலும் ஆச்செண்ட் பொறுத்தவரை ஆங்கிலம் பேச்சு மொழியா இல்லாத ஒரு நாட்டை எடுத்துகிட்டா மொத்த நாடுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆக்செண்டில் பேசும். நம்ம இந்தியாவில் தான் ஒவ்வொரு மாநிலத்து ஆளும் ஒவ்வொரு மாதிரி பேசி வெள்ளைக்காரனை முழி பிதுங்க வைப்பான். இங்கிலீஷை அவன் மாநில பாஷை மாதிரியே பேசுவானுங்க. ஆயிலை ஓயில்னு சொல்றது கூட பரவாயில்லை, டெஸ்டை என்ற வார்த்தையை டேஸ்ட்-னு சொல்லும் ஆளுங்க இருக்காங்க. இந்த டெஸ்ட் டேஸ்ட் பத்தி SPB அவர்கள் ஒரு பேட்டியில் சொன்ன ஒரு ஜோக் இருக்கு. யாருக்காவது தெரிஞ்சா கமெண்டில் சொல்லுங்க பாக்கலாம்.

இது போன்ற ஆக்செண்ட் சித்ரவதைகள் தமிழ் டிவி விளம்பரங்களிலும் காணலாம். லண்டனில் வெளியாகும் விளம்பரத்தில் கூட இல்லாத ஒரு ஆக்செண்டை தமிழ்நாட்டில் புகுத்த நினைத்து அந்த விளம்பரத்தை கொடுரமாக்கி இருப்பதை காணலாம். சரி அதுக்கு என்ன இப்போ என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில் நான் கூற விரும்பும் கருத்து என்னவென்றால் எப்போதும் ஒரே மாதிரி எப்படிப் பேச வருதோ அப்படிப் பேசுங்கள். இப்படி சடார் சடார் என்று மாற்றிப் பேசுவது, என் பள்ளிக் கால தோழன் ஒருவனை நினைவுபடுத்துகிறது. அவன் என்னுடன் சாதரணமாக பேசிக்கொண்டே இருப்பான், திடீர் என்று ஒரு மாதிரி அஷ்டகோணலில் வளைந்து வாயெல்லாம் பல்லாக சிரிப்பான். என்னடா இது நாம ஏதும் ஜோக் கூட சொல்லலியே, ஏன் இப்படி சிரிக்கிறான் என்று பார்த்தால், எனக்கு பின்னால் யாரவது நடந்து போய் கொண்டிருப்பார்கள், அவர்களைப் பார்த்து சிரித்திருப்பான். எனவே இயற்கையாய் வரும் பேச்சு மொழியை செயற்கையாக மாற்ற முயல வேண்டாம். அதுவே காலப்போக்கில் மாறினால் தவறில்லை, ஆக்செண்டில் வன்முறை வேண்டாம் என்பதே என் வேண்டுகோள் .4 comments:

முகுந்த் அம்மா said...

Good one. I have seen people like that as well. In order to gel with the americans they pretend to change their accents. They feel that by doing so, the americans will like their accent/them better. But they fail to understand one thing...whatever you do, they still treat you as an "alien"

Iqbal Selvan said...

அத்தனையும் மிக உண்மை, ஒரு சீனனோ, அரபியரோ என்ன தான் அமெரிக்கா, கனடாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர்களது ஆக்சண்டை போலியாக மாற்றிப் பேசுவதில்லை. ஆனால் இந்தியர்கள் பலரும், ஏன் 90 % பேரும் மாற்றித் தான் பேசுகின்றார்கள். இந்தியர்களுக்கு என தனி ஆக்சண்டு இல்லை என்றாலும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் தத்தம் தாய் மொழியின் தாக்கால் ஒருவித ஆங்கில ஆக்சண்டு உண்டு. அதில் தவறில்லை. அது இயல்பானது ! ஆனால் இந்தியாவிலும் சரி மேற்கில் வாழ்வோரிடமும் சரி போலி ஆக்சண்டுகள் நாவில் துள்ளி விளையாடுகின்றன. அவ்வாறு வேண்டுமென்று கடித்து மென்று துப்பி பேசுவதால் மிகவும் செயற்கையானதாகவும், உவாக் என்றும் இருக்கும். நமக்கே அப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் பாருங்கள்.

அதே சமயம் ஆக்சண்டில் வெள்ளைக்கார துரை கணக்கா மாற்றிப் பேச நினைப்பவர்கள் கொஞ்சம் தமது ஆங்கிலத்தின் இலக்கண பிழைகளை திருத்திக் கொண்டாலே போதும். ஆர் யு கமிங்க்? என்பதற்கு பதிலாக யு கமிங்க்? யு கமிங்கா ? என கேவலமான மொழிச் சிதைவை செய்பவர்கள் நம் தமிழர்கள் ( மற்றுமுள்ள இந்தியர்கள் ).. ஏன் இந்த பிழைப்பு.

கடந்த முறை ஊருக்கு போன போது நான் நல்ல தமிழில் பேசுவதை பார்த்துவிட்டு, என்னடா தமிழில் பேசுற, இத்தனை வருஷம் வெளிநாட்டுல இருந்தியே எனக் கேட்கின்றார்கள், அங்கே இருந்த தூணில் நான் முட்டிக் கொள்ளாத குறை தான். ஏனப்பா வெளிநாட்டுக்குப் போன கட்டின பெண்டாட்டியையும் தாயையும் மறந்தாவிடுவோம். அது போலத் தானே தாய் மொழியும்.

அதே போல எனது ஆங்கிலம் வடநாட்டு ஆங்கில செய்தி சானல்கள் போலவோ, தமிழ்நாட்டு கால் செண்டர் ஆசாமிகள் போலவோ கொடூரமாக இருக்காது. அதே சமயம் அது அமெரிக்கன் ஆக்சண்டும் இல்லை. மிக எதார்த்தமாக மிக மெதுவாக ஒரு சில அமெரிக்க வார்த்தைகளோடு இந்தியன் ஆக்சண்டை கொஞ்சம் பாலிஸ் செய்வது போல நடுத்தரமான ஆக்சண்டு. அதைக் கேட்டுவிட்டு இந்திய நண்பர்கள் ஏண்டா இவ்வளோ வருஷம் அமெரிக்கா, கனடாவில் இருந்திருக்கே நல்ல இங்கிலீஸ் கூட பேச வரலியா என்கின்றார். இதை நான் எங்கே போய் சொல்லி அழுவது. ஏன் நம்மவர்கள் இப்படி போலியான மொழிக்குள் புதைந்து கிடக்கின்றனர்.

இப்போதுள்ள தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள், அதில் வந்து உரையாடல் நிகழ்துவோர் என அனைவர் வாயில் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி இரண்டும் கலந்த களி மண்ணு மீது என வருவதைக் கேட்கும் போது காது புளிக்கின்றது. சில சமயம் ஒலிகளை அணைத்துவிட்டு சப் டைட்டிலோடு இந்த சேனல்களை பார்க்கின்றேன். ஏனெனில் இவர்கள் பேசும் மொழியைக் கேட்டால் நமக்கு ஆங்கிலமும் மறந்துபோய்விடும், தமிழும் மறந்துபோய்விடும் போலிருக்கின்றது. இந்தியாவில் தான் அப்படி என்றால்.

அமெரிக்காவில் இருக்கும் மாமா, மாமிகளின் தத்துபித்து ஆங்கிலத்தை கேட்டால் வயிறே கலக்குகின்றது. ஷப்பா முடியவில்லை.

Narayanan Narasingam said...

சரியாக கூறினீர்கள் முகுந்த் அம்மா. உடம்பெல்லாம் எண்ணையை தேய்ச்சிட்டு புரண்டாலும் ஓட்டுற மண்ணு தான் ஓட்டும் என்பது தான் நினைவிற்கு வருகிறது. அப்பிடி பேசிட்டா என்னமோ இவர்கள் மதிப்பு கூடுதுன்னு நினைப்பு.

Narayanan Narasingam said...

வாங்க இக்பால். நீங்க சொல்றது அத்தனையும் உண்மை. உங்க கமெண்ட் படிச்சதும் இன்னொரு கேள்வி தோணுது எனக்கு. இப்படிப் பேசுபவர்கள் பெரும்பாலும் தமிழர்களாக இருக்கிறார்களா இல்லை மற்ற மாநிலத்தவரும் இப்படி ஆக்செண்ட் மாற்றி பேசுகிறார்களா ?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...