Thursday, May 7, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் நான்கு




இந்த அத்தியாயத்தை ஆரம்பிபதற்கு முன்பு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதை படித்த சிலர் 'ஆட்டோ-பயோகிராபியா ?' என்று கேட்டார்கள்.. அவர்களுக்கு நன்றி. ஆனால் இந்த எண்ண ஓட்டங்கள் தொடர் ஒரு ஆட்டோ-பயோகிராபி அல்ல. அதெல்லாம் பெரிய விஷயம். ஆட்டோ-பயோகிராபி இஸ் எ பிரிவிலெஜ்ட் வேர்ட். அந்த அளவிற்கு நான் இன்னும்  வளர்ந்து விடவில்லை மேலும் என் வாழ்வில் நடந்த பல விஷயங்களை பகிரும் தைரியமோ தகுதியோ எனக்கு இருப்பதாக தெரியவில்லை. என்னுடைய முதல் மாரத்தான் ஓட்ட அனுபவத்தை பற்றி எழுதும் முயற்சியில் என் வாழ்கை ஓட்டத்தில் உள்ள சுவாரசியம் என்று நான் கருதும் அனுபவங்களைக் கலந்து ஒரு ஜிகிர்தண்டாவாக கொடுக்க நினைக்கிறேன். அவ்வளவே. இனி அத்தியாயம் நான்கு.

ஸ்ரீதர் (பெயர் மாற்றப்படவில்லை). நம் வாழ்கைப் பாதையில் சற்று பின்னோக்கிப் பார்த்தால், ஒவ்வொரு கால கட்டத்திலும் யாராவது ஒருவர் நம் வாழ்கையின் திருப்பு முனையாக அமைந்திருப்பார்கள் . என் வாழ்க்கையில் பலர் அந்த வகையில் திருப்பு முனையாக இருந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீதர். இதை அவரிடம் நேரடியாக சொன்னதில்லை, மேலும் இப்போது அவருக்கும் எனக்கும் இப்போது நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் அவ்வபோது மனதின் ஒரு ஓரத்தில் வந்து தலைகாட்டி செல்லும் ஒரு சிலரில் ஸ்ரீதரும் இருக்கிறார். அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தேன். படிப்பில் பெரிய பிடிப்பு இல்லாமல் ஏனோ தானோ என்று படிதுக் கொண்டிருந்த நேரம். ஸ்ரீதர் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அந்த நேரத்தில் ஸ்ரீதர் தன் நண்பர்கள் அறிவழகன், மணிசேகர், கிச்சா என சில நண்பர்களுடன் சேர்த்து மாலை நேரத்தில் டியூஷன் எடுக்க ஆரம்பித்து இருந்தார். பெரிய இடம் எதுவும் இல்லாததால், சென்னை சைதாபேட்டையில் இருந்த (இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறன்) 'உதயம் மெடிகல்ஸ்' மேலே இருந்த ஒரு மொட்டை மாடியில் டியூஷன் ஆரம்பித்து இருந்தார்கள். அப்போது சும்மா மாலை நேரங்களில் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில், ஒருநாள் என்னையும் சேர்த்து சில நண்பர்களைப் பார்த்து 'டேய் ஐஞ்சு மணிக்கு டியூஷன், வந்துருங்க' என்று கட்டளையிட்டு விட்டு சென்றார். முதல் நாள் பயந்து கொண்டே வேண்டா வெறுப்பாக சென்றேன். பள்ளிக்கூடத்தில் சுமார் நாற்பதுக்கும் மேல் மாணவர்கள் உள்ள வகுப்பில் சந்தடியில்லாமல் சென்று திரும்பும் எனக்கு, ஒன்-டு-ஒன் டியூஷன் எல்லாம் பெரும் பயத்தைக் கிளப்பிய காலகட்டம் அது. நமக்கு தெரியாதது எல்லாம் என்னவென்று மற்றவர்களுக்கு தெரிய வந்தால் ரொம்ப கேவலமாக இருக்குமே என்று கவலை தான் அதற்க்கு காரணம். பயந்து கொண்டே சென்ற என்னை அழைத்து சென்று தரையில் உட்கார்ந்து கணக்கு புத்தகத்தைப் திறந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் ஸ்ரீதர். ஹீரோ பேனாவில் பர்புள் கலர் இங்கில் முத்து முத்தான கையெழுத்தில் எழுதிய முதல் மனிதனை அன்று தான் பார்த்தேன். வெரி யுனிக் கலர். தனக்கு ஒரு விஷயம் தெரிந்தாலும் அதை மற்றவருக்கு புரியும் வகையில் கற்றுக் கொடுப்பது ஒரு கலை. ஒரு மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்த இளைஞனுக்கு கணக்கு பாடம் கற்றுக் கொடுப்பதில் இவ்வளவு திறமையா என்று பின்னர் நான் வியக்காத நாள் இல்லை. ஸ்ரீதர் கற்றுக்கொடுக்கும் போது எனக்கு அதுவரை புரியாத கணக்கு பாடம் புரிந்தது. கணக்கு அடிப்படையிலே புரிதலில் அதல பாதாளத்தில் இருந்த என்னை பத்தாவது பாடத்திட்டத்திலே கூட இல்லாத பாலிடெக்னிக் பாடத்திட்ட கணக்குகளை போட வைத்தார். ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்த விதத்தில் அல்ஜீப்ரா அல்வா சாப்பிடுவது போல இருந்தது. ட்ரிக்ணாமெட்ரி பொழுது போக்காக மாறியது. ஸ்ரீதரின் உதவியால் பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றி எட்டு மதிப்பெண் எடுத்தேன். அந்த இரண்டு மதிப்பெண் கூட ஒரு சில்லி மிஸ்டேக்கினால் கோட்டை விட்டேன். பரீட்சை எழுதிவிட்டு வெளியே வந்ததுமே ரெண்டு மார்க் போச்சுன்னு உணர்ந்து என்னையே நான் மனதில் திட்டிக்கொண்டு இருந்தேன். அதன் பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஸ்ரீதரிடம் தான் படித்தேன். ஸ்ரீதருக்கு நல்ல வேலை கிடைத்து பிஸியாக இருந்த நேரத்திலும் மாலை நேரத்தில் என்னையும் சேர்த்து பாலாஜி, சத்யா என பல நண்பர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர் கற்றுகொடுத்த அடிப்படை தான் பின்னர் அனைத்து தொழில்முறை சார்ந்த விஷயங்களில் எனக்கு உதவியது. இப்படி என் வாழ்வில் மிக முக்கிய திருப்பு முனையாக இருந்த ஸ்ரீதருக்கு இந்தப் பதிவின் மூலமாக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கணக்கில் நல்ல மார்க் எடுத்தாலும் மற்ற சப்ஜெக்டில் எல்லாம் சுமார் மார்க் தான். இப்ப எல்லாம் பத்தாவது பாஸ் பண்ணின யாரை கேட்டாலும் ஐந்நூறுக்கு நானூற்றி ஐம்பது மதிப்பெண்ணுக்கு மேல் சொல்கிறார்கள். இப்படிதான் ஒருவர் பையன் மார்க் கம்மிதான், நானூத்தி ஐம்பத்தி ஐஞ்சு தான் எடுத்திருக்கான் என்றார். நானும் 'சென்னை 28' படத்தில் சின்ன பசங்களுடன் கிரிக்கெட்விளையாடும் சீனில், சிவா 'நானூறு ரூபா தான் இருக்கா', என்று லேசாக இழுத்தபடி கூறுவது போல, என்ன நானூத்தி ஐம்பத்தி அஞ்சு தானா, பரவால்லே பிளஸ் டூ லே இன்னும் நல்லா படிக்க சொல்லுங்க என்று நம்ம பத்தாவது டோட்டல் எல்லாம் இனிமேல் வெளியே சொல்லவே முடியாது போல மனதளவில் சொல்லிகொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். பத்தாவது முடித்ததும் கூட இருந்த எல்லாப் பயல்களும் எம்ப்லோய்மென்ட் எக்ஸ்சேஞ்ஜில் பதிய ஓடி நின்றபோது, நான் ஏனோ அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அடிச்சி பிடிச்சி பிளஸ் ஒன்னில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு எடுத்தேன். ஏன் கம்புயுட்டரை தேர்ந்தெடுத்தேன் என்று தெரியவில்லை. டேய் பையாலஜி எடு அப்பத்தான் மெடிக்கல் எண்டரன்ஸ் எழுதலாம் என்று சொன்ன சிலரின் நம்பிக்கையை நினைத்து பெருமையாக இருந்தது. நம்மளையும் ஒரு டாக்டரா எல்லாம் எப்படி இவங்களால கற்பனை பண்ண முடியுது என்று நினைத்துக் கொண்டேன். கணக்கு நன்றாக புரிந்ததாலோ என்னவோ கம்ப்யூட்டர் கண்ணா பின்னா என புரிந்தது. அதற்கு கம்ப்யுடர் சையன்ஸ் மாஸ்டர் ஜான் முக்கிய காரணம். அவருக்கு அப்போது  ஒரு இருபத்தி ஐந்து வயது இருக்கலாம். பார்பதற்கு லேசாக தாடியெல்லாம் வைத்துக்கொண்டு பெரிய ஆள் போல இருந்தாலும் பாடம் நடத்தும் விதத்தில் என்னமோ நம்ம கூடப் படிக்குற ஒரு ப்ரெண்ட் சொல்லி கொடுப்பது போல இருக்கும். யோசிச்சு பாத்தீங்கனா, எக்ஸாமுக்கு முன்னாடி நாள் ப்ரெண்ட் சொல்லி கொடுப்பது நல்லா புரியும், ச்சே இதையா இவ்வளவு நாள் புரியாமே குழம்பிக்கிட்டு இருந்தோம் என்று தோன்றும். ஜான் சார் பாடம் எடுப்பதும் அப்படிதான். பாடம் இருக்கும் போதே எதாவது அவர் வாழ்கையில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை சொல்லி கிளாசையே ஒரு கலக்கு கலக்கி விடுவார். அது இல்லாவிட்டால் கிளாசில் யாரையாவது உதாரண புருஷனாக்கி அவனை கலாய்த்து விடுவார். ஒரு முறை பேசிக் ப்ரோக்ராம்மிங் பற்றி பாடம் எடுத்து கொண்டிருந்தார். அதில் GoSub/Return என்று ஒரு ஸ்டேட்மண்ட் வரும். அதை அவர் சொல்லிக் கொடுத்த விதமே தனி. எப்படி என்றால்...

ஒரு பொண்ணு வீட்டுல தனியா படிச்சிட்டு  இருக்கு. அப்ப நம்ம விஜயானந்த் போய் கதவை தட்டுறான்.

சார், என்னை ஏன் சார் இப்ப இழுக்குறீங்க ?

இருடா, ஒன்னும் இல்லை. அப்ப அந்த பொண்ணு என்ன பண்ணும். படிச்சிட்டு இருக்குற புக்க வைச்சிட்டு வந்து கதவை திறந்து விஜயானந்த் முன்னாடி நிக்கும்.

வேண்டாம் சார், வேற எக்சாம்பிள் வெச்சு சொல்லுங்க சார், என்று விஜயானந்த் கதறுவான். சார் கண்டின்யு பண்ணுங்க,  கண்டின்யு பண்ணுங்க  கிளாசே உற்சாகத்தில் சத்தம் போடும்.

அந்தப் பொண்ணு வாசல்லேயே விஜயானந்த நிக்க வெச்சு பேசி அணிப்பிட்டு திரும்பவும் போய் அது என்ன படிச்சிட்டு இருந்துச்சோ அதை கண்டின்யு பண்ணும். இது தாண்டா GoSub/Return. கம்ப்யூட்டர்லே GoSub-னா சொல்ற எடத்துக்கு போகும், அங்கே வேலை முடிஞ்சதும் Return சொன்னா  திரும்பவும் வந்து என்ன பண்ணிட்டு இருந்துச்சோ அதைப் பண்ணும்.

இது ஒரு சின்ன உதாரணம். அந்த வகுப்பில் இருந்த அத்தனை பேருக்கும் இது மறந்திருக்காது. முன்னமே சொல்லியது போல சொல்லிக் கொடுப்பது ஒரு கலை. அதை தெரிந்தவர்கள் சரியாக செய்தால் யாருக்கு வேண்டுமானாலும் எதையும் புரிய வைக்கலாம். அவர் சொல்லிக் கொடுத்த அடிப்படை தான் இன்றைக்கும் கம்புயடரில் என் புரிதலுக்கு வித்து என்று சொல்லலாம்.

என்னதான் படிப்பு, விளையாட்டு, வேலை, திருமணம், குழந்தைகள் என்று காலச் சுழற்சியில் ஒரு இலைபோல காற்றடித்த திசையில் எல்லாம் நாம் பறந்து கொண்டது இருந்தாலும், எதோ ஒன்றை நாம் செய்ய நினைத்து அது சரியாக செட் ஆகாமல் இருந்திருக்கும். ஆனாலும் எவ்வளவு வயதானாலும் அதை தொடர்ந்து செய்யும் ஒரு ஆசை மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி எனக்கு பல விஷயங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான இடத்தில் இருந்த/இருக்கின்ற ஒரு விஷயம் பாட்டு. அதைப் பற்றி அடுத்த அத்தியாத்தில் காண்போம்.

ஓட்டம் தொடரும்.....


அத்தியாயம் ஓன்று 
அத்தியாயம் இரண்டு 
அத்தியாயம் மூன்று 






























No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...