Saturday, January 29, 2011

கூட்டாஞ்சோறு - தைப்பொங்கல் திருவிழா - கனெக்டிகட் தமிழ் சங்கம்

சில விஷயங்களை பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று கை பரபரக்கும் போது, ஹா...அதுலே என்னத்த பெருசா எழுத முடியும், ஒரு நாலஞ்சு வரிக்கு மேலே எழுத முடியாதே என்று நான் தயங்கும் சில சின்ன சின்ன விஷயங்களை பற்றி எழுதவே இந்த கூட்டாஞ்சோறு என்கிற பகுதி...இனி கூட்டாஞ்சோறு உங்களுக்காக...

தைப்பொங்கல் திருவிழா - கனெக்டிகட் தமிழ் சங்கம்
-----------------------------------------------------------------
கனெக்டிகட் தமிழ் சங்கத்தில் சென்ற வாரம் சனிக்கிழமை மாலையில் தைப்பொங்கல் திருவிழா கொண்டாடினார்கள். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதம் என குழந்தைகள் மேடையில் பாடியது மிகவும் நன்றாக இருந்தது. அதை தொடர்ந்து ரவி பாலசுப்ரமணியத்தின் கடதரங்கம் என்ற புதுமையான இசை நிகழ்ச்சி நடந்தது. எட்டு கடங்கள் வைத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தில் இருக்குமாறு வைத்திருந்தார். உடன் தபலாவும் வயலினும் வாசித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த இசை நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது. அதை தொடர்ந்து ஒரு சிறிய இடைவேளைக்கு பின்னர், சவாலை சமாளி என்ற புதுமையான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடந்தது. பாட்டுக்கு பாட்டு என்றதும், சன் டிவியில் அப்துல் ஹமீது அவர்கள் நிகழ்ச்சி போல, இலக்கம் ஐந்தின் கீழ் ஏழு, பெருமாள் கோயில் தெரு, சென்னை ஆறுலட்சத்து பதினைந்தில் இருந்து வந்திருக்கும் இவர் தன் விருப்ப பாடலை பாடுவார் என்றும் அதை தொடர்ந்து, அ குறில் அல்ல ஆ நெடில் என்று எழுத்தை சொல்லி பாட சொல்வார்கள் போல என்று நினைத்தேன்.

அந்த நிகழ்ச்சி பற்றி என்ன என்று எனக்கு முதலில் சரிவர தெரியாவிட்டாலும், எதோ பாட்டு சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி கண்டிப்பாக கலந்துகொண்டே ஆக வேண்டும் என்று எனக்குள்ளே இருக்கும் பாடகன்! கட்டளை போட்டுவிட்டான். வீட்டிலும் அனைவரும் கண்டிப்பா கலந்துக்கணும் என்று வற்புறுத்தியதால்! நான் சரி என்றேன். சரி எதோ பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி என்பதால் ப -வில் தொடங்கும் பாடல், அ -வில் தொடங்கும் பாடல் என்று கண்ணில் படுபவர்களை எல்லாம் கேட்க சொல்லி, பாட்டு பாடி ப்ராக்டிஸ் செய்திருந்தேன். கடதரங்கம் நிகழ்ச்சி முடிந்தவுடன் சிறிய இடைவேளைக்கு பின்னர் சவாலை சமாளி நிகழ்ச்சி தொடங்கும் என்றும், பங்கேற்பதற்கு பெயர் கொடுத்தவர்கள் மேடைக்கு பின்னே உடனே வருமாறு அறிவித்தனர். நான் பெயர் ஏற்கனவே கொடுக்காவிட்டாலும் சரி சென்று பார்க்கலாம், கலந்து கொள்ள முடிந்தால் கலந்துகொள்ளலாம் என்று நினைத்துகொண்டு மேடையின் பின்புறம் சென்று பார்த்தேன். அங்கே போனவுடன்தான் தெரிந்தது, அது வினாடி வினா போன்ற நிகழ்ச்சி, அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தால் பாடி காட்டலாம். இப்படி வினாடி வினா என்று தெரிந்ததும் லேசாக உதறல் எடுத்தாலும், சரி ஆனது ஆகட்டும் கலந்துக்கலாம் என்று ஒரு முடிவெடுத்து ஒரு வழியாக மேடை ஏறினேன்.  போட்டி இதுதான்... நான்கு அணிகள், ஒவ்வொரு அணியிலும் நான்கு பேர். நான்கு சுற்றுக்கள். ஆ என்று தொடங்கும் பாட்டில் அந்த ஆ -வை மட்டும் ஒலிக்க செய்வார்கள். அதை வைத்து அந்த பாடல் என்ன என்று கண்டு பிடித்து, சில வரிகளை சரியாக பாடி காட்ட வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் அவர்களுக்கு வரும் வாய்ப்பில் பாடலை கண்டுபிடித்தால் பத்து மதிப்பெண், அப்படி அவர்களுக்கு பாட்டு என்ன என்று தெரியாவிட்டால் அந்த கேள்வி அடுத்த அணிக்கு செல்லும், அப்படி அடுத்த அணி அந்த பாட்டை கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஐந்து மதிப்பெண். ஆனால் அடுத்த அணிக்கும் பாட்டு  தெரியாவிட்டால், கேள்வி அதற்கு அடுத்த அணிக்கு செல்லும். இப்படி எந்த அணிக்குமே தெரியாவிட்டால் கேள்வி பார்வையாளர்களிடம் கேட்கப்படும்.

முதல் அணிக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசைஅமைத்த அன்னக்கிளி உன்னை தேடுதே பாடலில் முதலில் வரும் ஆ -வை மட்டும் ஒலிக்க வைத்தனர். கொஞ்சம் சிரமம் தான் என்று நினைத்த அந்த பாடலை மிக எளிதாக முதல் அணியினர் கண்டுபிடித்தனர். அவர்கள் அணியில் இருந்து ஒரு பெண்மணி மிக அருமையாக சில வரிகள் பாடினார். அந்த வரிசையில் என்னுடைய அணிக்கு இதயக்கோவில் படத்தில் இருந்து இதயம் ஒரு கோவில் பாடலில் ஆ ஒலிக்க செய்தனர். இதெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடறா மாதிரி என்று மைக்கை பிடித்து மோகனின் இதயம் ஒரு கோவில் என்ற பாடலை பாடினேன். (அல்லது சுமாராக கத்தினேன்). பிறகு ஓ என்று தொடங்கும் பாடல் ஒலிக்க செய்து கேள்வி கேட்டனர். பின்னர் பாடலின் நடுவில் இருந்து இசையை ஒலிக்க செய்து என்ன பாடல் என்றும். மற்றொரு சுற்றில் குத்து பாடலில் சில வரிகளை படித்து (கவனிக்கவும் பாடி அல்ல படித்து) காட்டி என்ன பாடல் என்று கேட்டனர். இந்த சுற்றில் தான் ஒரு அணியை தவிர மற்ற அணிகள் கோட்டை விட்டன. அந்த குத்து பாட்டு சுற்றில் முதன்மையாக இருந்த அணியே போட்டியிலும் முதல் பரிசு பெற்றது. இப்படி நிகழ்ச்சி முடிந்ததும் அங்கேயே இரவு உணவை முடித்து விட்டு கிளம்பினோம்.

பனிப்புயல்
-----------------
கனெக்டிகட் பகுதியில் இருக்கும்  பனியை பார்க்கும் போது வெள்ளி பனி மலையின் மீது உலாகுவோம் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அப்படி ஊரை சுற்றி பனி குவிந்து கிடக்கிறது. நேற்று மீண்டும் ஒரு பனி புயல் அடித்து வீட்டை சுற்றி ஏற்கனவே குவிந்திருக்கும் ஐந்தடி பனி குவியலுடன் மேலும் இரண்டடி பனி சேர்ந்தது. இந்த வின்டரில் மட்டும் இதுவரை மொத்தம் எழுபத்தி ஐந்து இஞ்சு (சுமார் ஏழு அடி)  மேலே பனி பொழிந்திருகிறது என்று கூறுகின்றனர்.  இந்த மாதம் மட்டும் சுமார் அறுபது இன்சுகள் பொழிந்திருக்கிறது. இருவழி சாலைகள் எல்லாம் குறுகி ஒற்றையடி பாதை ரேஞ்சுக்கு வந்துவிட்டன. பனியை எங்கே போடுவது என்று தெரியாமல் நிறைய இடங்களில் பனியை ஒரு கருவியை வைத்து சூடாக்கி கரைய வைக்கிறார்கள். இன்னும் ஏப்ரல் மாதம் வரை பனி பொழியும் வாய்ப்பு இருப்பதை நினைத்தாலே சற்று நடுங்குகிறது.





குடியரசு தின நாள்
-----------------------
குடியரசு தினத்தன்று தமிழ்நாட்டில் வாழும் தமிழனை போல சுதந்திர நிகழ்சிகளை டிவி சேனல்களில் பார்த்து ரசித்து நேரத்தை ஓட்டினேன். என்ன ஒரே வித்தியாசம், இங்கு விடுமுறை இல்லாததால், மாலை வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே ரிகார்ட் செய்து வைத்த நிகழ்சிகளை வீட்டில் அனைவரும் பார்த்துகொண்டிருந்தோம். ஆடுகளம் படத்தை பற்றி தனுஷ், வெற்றிமாறன் மற்றும் கதாநாயகி Taapsee (இந்த பேரை தமிழில் எழுத முயன்று பின்னர் விட்டுவிட்டேன்) பங்கேற்ற பேட்டி நன்றாக இருந்தது. தனுஷ் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். பொதுவாகவே தனுஷின் டான்ஸ் எனக்கு பிடிக்கும், இதில் ஒத்தை சொல்லாலே பாடலில் லுங்கியுடன் ஆடும் டான்ஸ் சூப்பரா இருந்தது.  இந்த நிகழ்ச்சியில் பார்த்த சில காட்சிகளே படத்தை பார்க்கவேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது.


Friday, January 28, 2011

தமிழா தமிளா

சில முறை இதை பற்றி நண்பர்களிடம் பேசி விவாதித்து இருந்தாலும், ஏனோ பெரும் யோசனைக்கு பின்னரே இந்த தலைப்பை பற்றி எழுத முன் வந்தேன்.  இதை போன்ற தலைப்புகளை விவாதிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு பேசி யாரையும் காயபடுத்தி விட கூடாது என்பதால் பல நேரங்களில் நான் கூற வந்ததை கூறாமல் விட்டு விடுவேன்.  மிக முக்கியமாக இந்த  பதிவை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறை கூறுவதற்காக எழுதவில்லை.

சரி போதும் மேட்டர்க்கு வாப்பா என்று நீங்கள் அன்புடன்! அழைப்பதால் உடனே விவரத்திற்கு செல்கிறேன். தமிழ்லே எழுத சுத்தமா வரலே, எங்க அம்மு குட்டிக்கு தமிழ் அவ்வளவா வராது, எங்க அம்மா வந்தாலும் அவ கிட்டே இங்கிலீஷ்லே தான் பேசுவாங்க, தமிழ்லே படிக்கறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு...இப்படி பட்ட வசனங்கள் எல்லாம் தமிழர்கள் தான் பேசுவார்கள் என்று  நீங்கள் சரியாக ஊகித்து இருந்தீர்கள் என்றால், வாங்க சார் (or  மேடம்) நீங்க தான் நம்ம ஆளு. அப்படி ஊகிக்கவில்லை என்றால் நீங்கள் தமிழ்நாட்டின் பக்கம் சென்றோ அல்லது தமிளர்! குடும்பங்களுடன் பழகியோ,  பல வருடங்கள் ஆகிவிட்டது என்று அர்த்தம். அப்படியும் இல்லாவிட்டால்,  நீங்கள் வேறு மொழியை தாய் மொழியாக கொண்டு தமிழ் படிக்க தெரிந்தவர் அதற்காக உங்களுக்கு ஒரு சல்யூட்.

சரி இது தான் உலகத்துக்கே தெரிஞ்ச கதை ஆச்சே, இதை பத்தி  என்ன பேச்சு இப்போ, என்று நீங்கள் நினைப்பீர்கள்.  எதோ மனதில் தோன்றுகின்ற இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டால் உங்க பக்கத்தில் இருந்தும் கொஞ்சம் சொல்வீர்களே என்று தான் இதை எழுதுகிறேன்.  சரி, சரி நான் ரொம்ப பேசலே, நீங்க மேல படிங்க. நான் அறிந்த வரையில், பொதுவாக இரு தமிழர்கள் புதிதாக சந்தித்து கொண்டால் முதலில் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பிகிறார்கள். இது எங்கோ ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ நடந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  ஆனால், இந்த கூத்து தமிழ்நாட்டிலே தான் அதிகமாக நடக்கிறது.  என் அனுபவத்தில் ஒரு உதாரணத்தை கூறுகிறேன். தமிழ்நாட்டில் கடைகளிலோ, அரசு அலுவலகத்திலோ உங்களுக்கு வேலை ஆக வேண்டும் என்றால் தமிழில் பேசாமல், ஆங்கிலத்தில் பேசி பாருங்கள், உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறு மாதிரி இருக்கும். இங்கே ஒன்றை கவனிக்கவும், அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை  மட்டுமே இலவசமாக கிடைக்கும்,  எப்படி நடந்துகொண்டால் வேலை நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.  நடிகர் விவேக் கூட ஒரு படத்தில் ட்ராபிக் போலிசிடம் மாட்டிகொண்டு ஆங்கிலத்தில் தத்து பித்து என்று ஒரு லீவ் லெட்டர் ஒப்பித்து விட்டு தப்பித்து செல்வார். இது நகைச்சுவையாக இருந்தாலும் அந்த படக்காட்சியை பார்க்கும் போது, தமிழர்களிடம் ஆங்கில மோகம் எவ்வளவு இருக்கிறது என்பது தெள்ள தெளிவாக தெரியும்.  இதை நீங்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவர்களிடம் காண்பது அரிது. தமிழகத்தில் பிறந்து வளர்ந்த வெற்றிமாறன் மற்றும் வடிவேல் என்கிற இருவர் ஆங்கிலத்தில் பேசிகொள்வது உலகமகா காமடியாக எனக்கு தோன்றுகிறது. இதை நீங்கள் பல தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் சில நேரங்களில் நேரில் கூட பார்த்திருக்க கூடும். விஜய் டிவி-ல் தமிழ் நிகழ்ச்சியான நீயா நானாவில் போன்றவற்றில் கூட ஆங்கிலத்தில் பேசுவதற்கு தான் நிறைய பேர் முனைகிறார்கள். அதற்கு கோபியும் நகரத்தில் வாழ்பவர்களுக்கு தங்கள் கருத்தை ஆங்கிலத்தில் தான் சரளமாக சொல்ல முடிகிறது என்று அதரவு தருகிறார். மொத்தத்தில் ஆங்கிலத்தில் பேசுபவன் படித்தவன், உண்மை பேசுபவன், பண வசதி அதிகம் படைத்தவன் போன்ற மாயை உருவாகி தமிழ் சரியா தெரியாது என்று தமிழன் சொல்வதே ஒரு ஸ்டைல் ஆகி விட்டதோ என்று தோன்றுகிறது.

மக்களை மட்டும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை, இந்தியாவில் உள்ள பல மாநிலத்தில் உள்ள கல்வி முறையும் அதற்கு ஒரு முக்கிய காரணமோ என்று தோன்றுகிறது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கவில்லையோ என்னமோ,  மக்கள் ஆங்கில வழி தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் கூட அரசு பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் -களை ஐம்பது சதவீதம் கூட முழுமையாக பயன்படுத்துவது இல்லை என்று ஒரு செய்தியில் படித்தேன். இது இந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் மெத்தன போக்கையே காட்டுகிறது.  இங்கு நான் மொத்தமாக அணைத்து ஆசிரியர்களையும் குறை கூறவில்லை,  அரசு பள்ளிகளில் பல நல்ல ஆசிரியர்களும் இருக்கிறார்கள். மேலும் கிராமப்புறங்களை தவிர ஓரளவு வசதி படைத்த அனைவரும் தங்கள் பிள்ளைகளை  ஆங்கில வழி கல்வியிலேயே படிக்க வைக்க விரும்புகின்றனர். இதில் ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமன்றி பொருளாதரத்தில் பின் தங்கி இருக்கும் கடை நிலை தொழிலாளிகள்  கூட தங்கள்  பிள்ளைகளை கடன் வாங்கியாவது கான்வென்ட் பள்ளிகூடத்திற்கு அனுப்பி, அவர்கள் டாடி மம்மி என்று அழைப்பதை பார்த்து பூரித்து போகிற நிலையில் தான் இருகிறார்கள். இந்த நிலை தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதுமே இருக்கிறது. அதற்கு வேலை வாய்ப்பு, மேல் படிப்பு என பல காரணங்கள் இருக்கலாம்.  தாய் மொழி வழி கல்வி முறையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது, அவ்வாறு கல்வி முறை கொண்ட நாடுகள் எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளன என்பது வேறு விஷயம்.  அதனால் அது சரியா தவறா என்று இங்கு நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு மூன்றாம் மொழியாகவாவது தமிழை எடுத்து படிக்கலாமே என்பது தான் என் ஆதங்கம். ஒருவர் தாய்மொழி தவிர, மற்ற மொழிகளை படிக்க வேண்டாம்  என்று நான் கூறவில்லை. மொழி ஒரு கருவியே, ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கான சாதனம் மட்டுமே. அதனால் தேவைப்பட்டால் (சில நேரங்களில் தேவைபடாவிட்டாலும்), எத்தனை மொழி வேண்டுமானாலும் படிப்பதில் தவறில்லை. ஆனால் தாய் மொழி என்று வரும்போது அதனால் கிடைக்கும் பொருளாதார ரீதியான நன்மைகளை (Materialistic gains) மட்டும் பார்க்காமல், அது நம் தாய் மொழி என்கிற ஒரே தகுதிக்காக மட்டும் கற்க வேண்டும் என்பதே எனது கருத்து. இது தமிழுக்கு மட்டும் அன்றி, மற்ற எந்த ஒரு மொழிக்கும் பொருந்தும். எதுக்கும் இருக்கட்டும் என்று ஹிந்தி முதற்கொண்டு பல வெளிநாட்டு மொழிகளையும் கற்றுகொள்ளும் திறன் மிக்கவர்கள், பிறந்தது முதல் கேட்டு, பேசி வளர்ந்த தமிழை பயில்வதில் என்ன சிரமம் இருக்க முடியும் என்று புரியவில்லை. அதற்காக புறநானூறு, கொன்றை வேந்தன் போன்றவற்றை படிக்கும் அளவிற்கு தமிழ் கற்க வேண்டும் என்பது இல்லை. (அப்படி படிக்கும் நிலைக்கு வந்தால் மிகவும் நல்லது). ஓரளவிற்கு நடைமுறை தமிழை எழுத படிக்க தெரிந்தால் கூட போதுமானது.

இவ்வளவு சொல்கிற நான் மட்டும் ஒழுங்கா ?, இதை எல்லாம் முழுவதும் கடைபிடிக்கிறேனா ? என்ற கேள்வியை நீங்கள் கேட்டீர்கள் என்றால், நிச்சயமாக இல்லை என்பதே என் பதில். நானும் இதே கூட்டத்தை சேர்ந்த ஒரு சராசரி தமிழன் தான் என்பதை சற்று வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன். ஆனால் இதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற கையாலாகாத நிலையை நினைத்து இங்கே பிதற்றுகிறேன். இந்த சமுதாய சீர்கேட்டை பற்றி எழுதினால் எனக்குள் இருக்கும் கோபம் கொஞ்சம் குறைகிறது.  நம்மால் முடிந்தவரை தமிழில் பேசவும், எழுதவும், நம் அடுத்த தலைமுறைக்கு தமிழை கற்றுகொடுக்கவும் முயல வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே இந்த பதிவு.  தங்கள் வருகைக்கு நன்றி.

Friday, January 21, 2011

ஆசை - சிறுகதை


இது என் முதல் சிறுகதை (அது சரி கதையா இல்லையானு நீங்க தானே சொல்லணும்) முயற்சி. ஏதும் குற்றம் குறை இருந்தால் பொருத்து கொண்டு அவை என்ன என்றும் உங்கள் கருத்துகளில் தெரிவியுங்கள். இதோ ஆசை உங்கள் பார்வைக்கு...
---------------------------------------------------------------------------------------------------------
என் பெயர் ராஜேந்திரன், திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கௌண்டண்டாக பணிபுரிகிறேன். மாத சம்பளம் பிடித்தம் போக பன்னிரெண்டாயிரம் வந்தாலும், இப்ப இருக்கிற விலைவாசியில் கைக்கும் வாயுக்குமே சரியாக இருக்கிறது. எதோ என் மனைவி திலகா சிக்கனமாக குடும்பம் நடத்துவதால் இரண்டு குழந்தைகளுடன் ஓரளவு கடன் இல்லாமல் காலத்தை ஓட்ட முடிகிறது. இப்போது நான் அவசரமாக வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறேன். அலுவலகத்தில் இருந்து என் வீடு 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் பஸ்ஸில் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் பயணத்தில் கழியும். அதுவும் டிராபிக் இல்லாவிட்டால் தான், இல்லை என்றால் சில நேரங்களில் ஒன்றரை மணி நேரம் கூட ஆகும்.  பைக் இருந்தால் 30 நிமிடத்தில் கூட வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சென்று விடலாம். ஆனால் பைக் வாங்க தான் எனக்கு இன்னும் வழி வரவில்லை. இப்போது எல்லாம் மாத தவணையில் சுலபமாக பைக் வாங்கி விடலாம், ஆனால் திலகாவிற்கு அதில் விருப்பம் இல்லை. அதுக்கு நிறைய முன் பணம் வேணும், வட்டி எல்லாம் சேர்த்து மாசம் நம்ம கைல இருந்து மூணாயிரம் ரூபாவாது கட்டனுங்க, அதுக்கு பேசாமே நம்ம பழனியப்பன் சார் தான் ஏல சீட்டு போடுறார் இல்லே, அவர் கிட்டே எதாவது சீட்டு சேருங்க. ரொம்ப நம்பிக்கையான ஆளு, எப்பாவது கம்மியா தள்ளு போகும் போது சீட்டை எடுத்து வண்டி வாங்கலாம் என்று என் பைக் வாங்கும் கனவிற்கு பிரேக் போட்டாள். அவள் சொல்வதும் சரி தான், அவசரப்பட்டு வாங்கிட்டு பின்னாடி அவஸ்தை படக்கூடாது என்று நினைக்கிறாள்.

தினமும் பஸ்ஸில் சென்று வரும் நான் இப்போது அவசரமாக செல்ல வேண்டும் என்பதால் நண்பன் ரகுவிடம் பைக்கை இரவல் வாங்கி வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்படி என்ன அவசரம் என்று கேட்கிறீர்களா. வீட்டிற்கு சென்று திலகாவிற்கு தெரியாமல் ஒன்றை மறைக்கவேண்டும். அடப்பாவி உனக்கு ஏன் இந்த புத்தி என்று உங்களுக்கு நினைக்க தோன்றும். எனக்கும் தெரியும், நான் இப்போதிருக்கும் நிலமையில் இந்த மாதிரி பண்ண கூடாது என்று ஆனாலும் ஆசை யாரை விட்டது. சரி சரி என்னிடம் ரொம்ப கோபப்படாதீங்க. அப்போது மணி சுமார் இரவு 7:00 மணி இருக்கும். இந்த போக்குவரத்து நெரிசலில் இன்னும் வீட்டிற்கு போய் சேர எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும். சீக்கிரம் வீட்டுக்கு போய் சேரவேண்டுமே என்ற நினைப்பில் மனம் லேசாக பதைபதைத்தது. இந்த திலகா ஏன் இப்படி பண்றா, காலைலயே சொல்லி இருந்தா நேரத்திலே வீட்டுக்கு போய் அவளுக்கு தெரியாம மறைச்சு வெச்சு இருக்கலாம் என்று மனதிற்குள் அவள் மீது சிறிது கோபப்பட்டேன். குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவ்  என்பதால், அறந்தாங்கியில் இருக்கும் அவள் அக்கா வீட்டிற்கு சென்று இருக்கிறாள். நாளை ஞாயிற்றுகிழமை என்பதால் நானே சென்று அழைத்து வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவளோ, நீங்க வீணா அலைய வேண்டாமேன்னு, நானே குழந்தைகளை கூட்டிட்டு கிளம்பிட்டேன். இன்னும் அரைமணி நேரத்திலே வீட்டுக்கு வந்துருவோம் என்றாள். கிளம்பறதுக்கு முன்னாடியே உங்க செல்போன் -க்கு அடிச்சேன், ஆனா ரிங் போய்டே இருந்துது, நீங்க எடுக்கவே இல்லை என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு வேறு என்னை துளைத்தாள். திலகா இப்படி இன்று இரவே கிளம்பி வருகிறாள் என்ற அதிர்ச்சியில் சரியாக பதில் சொல்ல முடியாமல் அது வந்து...திலகா...ஒரு முக்கியமான மீட்டிங் அதான் எடுக்க முடியல்லே என்று லேசாக திக்கியபடி கூறினேன்.

திலகாவிடம் வீட்டின் இன்னொரு சாவி வேறு இருக்கிறது. நான் வீட்டிற்கு செல்வதற்கு முன் அவள் சென்றால் அவ்வளவு தான், கண்டிப்பா கண்டு பிடிச்சிருவா.  நான் ஒரு சின்ன விஷயத்தை கூட அவளிடம் இருந்து மறைக்க கூடாது என்று நினைப்பாள். இப்படி ஓன்று நான் செய்திருக்கிறேன் என்று தெரிந்தால், இருக்குறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைபட கூடாது, ஏன் இப்படி பண்ணினீங்க என்று என்னை ஒரு வழி பண்ணிவிடுவாள். இதெல்லாம் உனக்கு தேவையா என்று என்னை நானே மனதிற்குள் திட்டிக்கொண்டேன். சரி எப்படியும் அவளுக்கு ஒருநாள் தெரியபோகுது அது இன்னிக்கே தெரிஞ்சா என்ன என்று இன்னொரு பக்கம் என் மனதில் தோன்றியது. ஆனாலும் அவள் இதை எப்படி எடுத்து கொள்வாளோ என்று சிறு சஞ்சலம் இருந்துகொண்டு தான் இருந்தது. அவ வீட்டுக்கு போய் அட்லீஸ்ட் ஹாலில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு இருந்தா கூட போதும், நாம  போய் கொஞ்சம் சரி பண்ணிரலாம். பெட்ரூம் உள்ளே போய் பாத்தா என் நிலைமை அவ்வளவு தான். இப்படி பண்றதை பண்ணிட்டு இப்போ மறைச்சு மட்டும் என்ன ஆக போது என்று சினிமாவில் வருவதை போல் என் மனசாட்சி என்னை கேட்டது. என்ன ஆனாலும் குழந்தைகள் முன்னாடி இது பற்றி விவாதிக்க கூடாது என்று நினைத்துகொண்டேன் . இதுக்கு தான் நேத்து ராத்திரியே எல்லாத்தையும் சரி பண்ணி இருந்தா, இன்னிக்கு இப்படி அவசரமா போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எல்லாத்தையும் கடைசி நிமிசத்துக்கு தள்ளி போடுறது எவ்வளவு தப்பு என்று அந்த நேரத்தில் திடீர் ஞானோதயம் வந்தது. திலகா எங்கே இருக்கிறாள் என்று கேட்க அவள் செல்போனில் அழைத்தேன். ஏனோ போனை அவள் எடுக்கவில்லை, ரிங் போய்க்கொண்டே இருந்தது. அய்யய்யோ வீட்டுக்கு வந்துட்டாள் போல இருக்கு, பெட்ரூம் போய் பார்த்துட்டு கோபத்தில் தான் போன் எடுக்கவில்லையோ, இல்லையே கோபம் இருந்தால் கூட திட்டுவதற்கு கண்டிப்பாக போன் எடுக்கணுமே, இல்லை இன்னும் வீட்டுக்கு வரலியோ இப்படி பல வித எண்ணங்கள் எனக்குள் ஒடிக்கொண்டிருந்தன.

சுமார் இருபது நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வெளியில் இருந்து பார்க்கும்போது, எந்த அறையிலும் லைட் ஏதும் போட்டிருக்கவில்லை என்று தெரிந்தது. அப்பா...திலகா இன்னும் வரவில்லை போல இருக்கிறது. நான் பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு விட்டு நடக்க தொடங்கியதும் என்னுடைய செல்போன் சிணுங்கியது. திலகா தான் போன் பண்றா,  சற்று கலக்கத்துடன் போன் -ஐ  எடுத்து ஹலோ என்றேன். ஹலோ, நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா, நாங்களும் இங்கே வந்துட்டோம்...சின்னவன் தான் பஸ்லேயே தூங்கிட்டான், ராதா குட்டி இன்னும் முழிச்சி தான் இருக்குறா, அதான் இவனை தூக்கிட்டு பேசிட்டே பஸ் ஸ்டான்ட்லே இருந்து நடந்து வரோம் என்று லேசாக மூச்சு வாங்கியபடி கூறினாள். எனக்கு அப்போது இருந்த மனநிலையிலும் ஏம்மா தூக்கிட்டு நடந்து வந்தே, ஒரு ஆட்டோ பிடிச்சி வந்து இருக்கலாம் இல்லே என்று அவள் மீது கரிசனையுடன் கூறினேன். ஆட்டோ ஏதும் கிடைக்கலே, தவிரவும் இங்கே இருக்கிற பஸ் ஸ்டான்ட்லே இருந்து வர நாப்பது ரூபா கேப்பான்...எதுக்கு அனாவசிய செலவு...ஒரு பத்து நிமிச நடை தானேன்னு நடந்து வந்துட்டு இருக்கேன்.  சரி கதவை திறந்து அவசரமாக உள்ளே சென்று எல்லாத்தையும் சரி செய்து விடலாம் என்று வீட்டின் கதவை நோக்கி ஓடினேன். இன்னும் சில வினாடிகளில் திலகா வந்து விடுவாள். சீக்கிரம் சீக்கிரம் என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். என் நேரம் இருட்டில் கதவை உடனே திறக்க முடியவில்லை. நான் இப்படி தடுமாறிகொண்டிருக்கும் போதே திலகா குழந்தைகளுடன் வந்துவிட்டாள். நல்லா மாட்டினோம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே, என்ன வாசல்லே, ரகு அண்ணன் பைக் நிக்குது,  நீங்க ஏன் இன்னும் வெளிலே என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேள்விகளை அடுக்கியபடி கதவருகே வந்தாள். அது வந்து...திலகா...நீ...திடீர்னு இன்னிக்கே வரேன்னு சொல்லிட்டே அதான் சீக்கிரம் வீட்டுக்கு வரலாம்னு ரகு கிட்டே பைக் வாங்கிட்டு வந்தேன்,  நீ இங்கே பக்கத்துலே வந்துட்டேனு சொன்னதும் உனக்காக நான் வெளிலே வெயிட் பண்றேன் என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட்டேன். அப்பிடி என்ன அவசரம் பைக்லே வர அளவுக்கு, எனக்கு வீட்டுக்கு வந்து இருக்க தெரியாதா, இப்போ தேவை இல்லாத பெட்ரோல் செலவு வேற...சரி வாங்க உள்ளே போகலாம் என்று சற்று சலிப்புடன் கூறியபடி அவளிடம் இருந்த சாவியால் கதவை திறக்க முயன்றாள். உடனே படக் என்று கதவு திறந்து கொண்டது. நான் கதவை லேசாக முறைத்தபடி வீட்டின் உள்ளே சென்றேன்.
பஸ்லே பின்னாடி சீட் தாங்க கிடைச்சிது, தூக்கி தூக்கி போட்டதுலே ரொம்ப அசதியா இருக்கு, ஸ்டவ் -லே அந்த சின்ன பானையிலே லேசா வெண்ணி வெய்யுங்க, குளிச்சிட்டு சாப்பிடலாம் என்றாள். ரொம்ப லேட் ஆச்சு திலகா, இப்போ ஏன் குளிக்கிறே, முதலே சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் பசிக்கும், எனக்கும் ரொம்ப பசிக்குது என்றேன். சரி  நான் ஒரு பத்தே நிமிசத்துலே சாதம் வெச்சு ஒரு ரசம் வெக்குறேன், தொட்டுக்க அப்பளம் பொரிச்சு சாப்பிடலாம் என்றாள் திலகா. சரி நான் போய் முகம் கழுவிட்டு டிரஸ் மாத்திட்டு வரேன்,  ஒரே கசகசன்னு இருக்கு என்றபடி நான் அவசரமாக அருகில் இருந்த பெட்ரூம் -க்கு சென்றேன். படுக்கையை வேகமாக சரி செய்து அதன் மேலே இருந்த அத்தனையையும் அவசரமாக அள்ளி எடுத்து எங்கே வைக்கலாம் என்று இரு வினாடிகள் யோசித்து பின்னர் இப்போதைக்கு இந்த அலமாரியில் மறைத்து வைக்கலாம், என்று நினைத்து அடி எடுத்து வைக்கும்போது, திலகா அந்த அறைக்குள் வந்துவிட்டாள். உள்ளே வந்தவள் சட்டென்று முகம் மாறி, என்ன இதெல்லாம்...பட்டு புடவை, தங்க செயின், குழந்தைங்க டிரஸ் அது இதுன்னு இருக்கு, இதெல்லாம் வாங்க உங்ககிட்டே ஏது அவ்வளவு பணம் என்று சற்று குழப்பத்துடன் கூறினாள். அது வந்து திலகா...அடுத்த வாரம், நம்ம பத்தாவது வருஷ கல்யாண நாள் வருதுன்னு, நம்ம பழனியப்பன் சார் கிட்டே போட்டுட்டு இருந்த அம்பதாயிர ரூபா சீட்டை ஏழாயிரத்து ஐநூறு ரூபா தள்ளி எடுத்துட்டேன். அந்த பணத்துலே தான் உனக்கு தங்க செயின், பட்டு புடவை, குழந்தைகளுக்கு டிரஸ் எல்லாம் வாங்கிட்டேன். உன்கிட்டே சொன்னா வேண்டாம்னு சொல்லுவேன்னு உனக்கு தெரியாமே எல்லாத்தையும் வாங்கிட்டேன். இன்னிக்கு எல்லாத்தையும் பெட்டிலே வெச்சுட்டு உனக்கு அடுத்த வாரம் சர்ப்ரைசா காட்டலாம்னு நினைச்சேன். அதுக்கு வழி இல்லாமே நீ இன்னிக்கே வந்துட்டே...என்றேன் லேசாக அசடு வழிய. அந்த சீட்டு உங்களுக்கு பைக் வாங்கவும், வேற எதாவது அவசர தேவைக்கும்னு தானே போட்டிருந்தோம், அதை போய் இப்போ எடுக்கனுமா, நான் ஒரு வாரம் வீட்டில் இல்லேனா போதுமே இந்த மாதிரி எதாவது வேலை பண்ணுவீங்களே என்று ஒரு சற்று கோபத்துடன் கூறினாலும் மறு நொடியில், ஆசையுடன் நான் வாங்கி வந்திருந்த நகையும் மற்றும் ஆடைகளை கையில் எடுத்து பார்த்தாள். தங்க செயின் -ஐ எடுத்து கழுத்தில் போட்டு, நல்லா இருக்காங்க என்று என்னிடம் கேட்டுவிட்டு, சுவற்றில் மாட்டி இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்து ரசித்து புன்னைகைதாள். எதோ நினைவு வந்தவளாக சட்டென்று, என்ன உங்களுக்கு எதுவுமே வாங்கலே என்றவளிடம்...எனக்கு என்ன பெருசா வாங்குறது ஒரு வேட்டி, சட்டை  போதும், அப்புறமா வாங்கிக்கலாம். அதெல்லாம் கிடையாது நாளைக்கு ஞாயத்துகிழமை தானே, சாயங்காலம் போய் உங்களுக்கும் வாங்கிட்டு அப்பிடியே எதாவது ஹோட்டல் -க்கு போய் சாப்பிடலாங்க என்று கொஞ்சலாக கூறியவளை பார்த்து சிரித்தேன். பைக் இல்லாவிட்டால் என்ன, இன்னும் ரெண்டு வருசத்தில பணம் சேர்த்து வாங்கி கொள்ளலாம். எனக்காகவும் குடும்பத்திற்காகவும் எப்போதும் சிந்திப்பவளுக்கு, சந்தோசத்தை அள்ளி கொடுப்பது தான் எனக்கிருக்கும் ஆசை என்று நினைத்துகொண்டே மெல்ல அவளை அணைத்தேன்.


Wednesday, January 12, 2011

ஒரு சுய விளம்பரம்

வணக்கம். 

தமிழ் வலையுலகில் பல வருடங்கள் ஒரு வாசகனாகவே இருந்து, இப்போது எதோ ஒரு துணிவில் இந்த வலை பக்கத்தை துவங்கி இருக்கிறேன். சிறு வயது முதல் மாயாஜால கதைகள், ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமா பின்னர் பதின்ம வயதில் ராஜேஷ்குமார், சுபா, சுஜாதா போன்றவர்களின் புத்தகங்களை படித்திருந்தாலும் பெரிதாக ஏதும் இலக்கிய நூல்கள் படித்ததில்லை. என் நினைவலைகளில் தோன்றும் பல நல்ல விசயங்களையும் சில நேரங்களில் புலம்பல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றி.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...