Thursday, February 3, 2011

கனவு - மைக்ரோ சிறுகதை

நவம்பர் 22, 2155.
 
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து புன்னகையோடு வெளியே வந்தான் ரிஷி.  அந்த கட்டடத்தின் பின்னே இருந்த ரன்வே அருகில் பார்க் செய்ந்திருந்த பறக்கும் காரில் ஏறி என்ஜினை ஸ்டார்ட் செய்து, முன்னே இருந்த கம்ப்யூட்டர் திரையில் ஒரு பொத்தானை அழுத்தியதும் சில வினாடிகளில் வான்வெளி போக்குவரத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி மற்றும் அதிகபட்ச பறக்கும் உயரம், வேகம் போன்றவை திரையில் மின்னின. அடுத்த சில நொடிகளில் திரையில் பச்சை விளக்கு ஒளிர்ந்ததும், காரை ரன்வேயில் நானூறு மைல் வேகத்தில் செலுத்தி ஜிவ்வென்று வானில் கிளப்பினான். சரியாக இரண்டு நிமிடத்தில் இரண்டாயிரம் அடி உயரத்தில், 900 மைல் வேகத்தில் சென்று வான்வெளி போக்குவரத்தில் நுழைந்தான். GPS -ல் வீட்டு விலாசத்தை தேர்ந்தெடுத்து, காரை ஆட்டோ பைலட் -ல் போட்டு விட்டு சற்று சாய்ந்து சோம்பல் முறித்தான். முதலில் அம்மாவிடம் தான் இந்த செய்தியை சொல்லவேண்டும் என்று இடுப்பில் மாட்டி இருந்த கை அடக்க சாட்டிலைட் வீடியோ போனில் வீட்டிற்கு போன் செய்தான் . சில ரிங்குகள் சென்றதும், போன் திரையில் ஹலோ என்றபடி அம்மா தெரிந்தார்.  அம்மா, ஒரு குட் நியூஸ்...எனக்கு இந்தியாவிலே வேலை செய்யறதுக்கு விசா கிடைச்சிருச்சு, இன்னும் ரெண்டு வாரத்துலே கிளம்பனும். எப்படியோ ஒன்னும் பிரச்சனை இல்லாம விசா கிடைச்சிருச்சு. அங்கே போய் ஒரு வருஷத்திலே என் படிப்புக்கு அப்பா வாங்கின கடன், வீட்டு லோன் எல்லாத்தையும் அடைச்சுடலாம். உங்களுக்கும் அங்கே போனதும் டூரிஸ்ட் விசா அனுப்பறேன். வருஷத்துலே ஒரு நாலைஞ்சு மாசம் என்கூட வந்து நீங்க இருக்கலாம் என மகிழ்ச்சி பொங்க கூறினான். ரொம்ப சந்தோசம்டா ரிஷி, எங்கே விசா கிடைக்குமோ கிடைக்காதோன்னு பயத்துலே இருந்தேன். இப்போ தான் மனசுக்கு திருப்தியா இருக்கு, உங்க தாத்தாவும் பாட்டியும் இப்போ இருந்தா ரொம்ப சந்தோஷபட்டிருப்பாங்க என இரண்டு தலைமுறைக்கு முன்னர் லண்டன் வந்து செட்டில் ஆனா தன் குடும்பத்தை நினைத்து பார்த்து கண்ணில் துளிர்த்த லேசான கண்ணீரை துடைத்தார்.

2 comments:

Kandumany Veluppillai Rudra said...

"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருக்கக் காய் கவன்தற்று" மனதில் மயங்கிக் கிடந்த திருக்குறளை நினைவூட்டிய உங்கள் வலைப்பூவின் பெயர், நல்ல கற்பனைக் கதை,வாழ்த்துகிறோம்.

Narayanan Narasingam said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி உருத்திரா அவர்களே. என்னை மிகவும் கவர்ந்த குறள்களில் இதுவும் ஓன்று.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...