Wednesday, July 27, 2011

சொந்தம் - சிறுகதை


வாசலில் உட்கார்ந்து தினமணி படித்துகொண்டிருந்த குமரகுரு, உள்ளே பார்த்து ராஜி காபி என்னமா ஆச்சு என்று கேட்டது தான் தாமதம் - ஆமாம் இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லே.  இந்த மணி பையன், எப்பவும் திருச்சி வந்தா நம்ம வீட்டுக்கு தான் வருவான். இப்போ என்னமோ புதுசா நேரா அவன் பிரெண்ட் குமார்  வீட்டுக்கு போறான். அதை என்ன ஏதுன்னு போய் கேட்டீங்களா ? 

என்னமா பண்றது, அவன் பிரெண்ட் குமார் இத்தனை நாள் பரோடாலே வேலை பார்த்துட்டு இப்போதான் மாற்றலாகி திருச்சி வந்துருக்கான். அதான் அங்கே போறானோ என்னமோ, நீ மனசை போட்டு குழப்பிக்காமே வேலையை பாரு. 

ஆமாம், இப்படி எதாவது சொல்லி என் வாயை அடைச்சிருங்க. எப்பவும் அத்தை அத்தைன்னு சுத்தி வருவான், இப்போ எல்லாம் பெரியமனுசங்க ஆகிட்டாங்க...ஹ்ம்ம்...என்ன பண்றது. அப்பா இல்லாத பையன்னு படிப்புக்கு அதுக்கு இதுக்குன்னு எவ்வளவு செஞ்சு இருப்போம். நன்றி இல்லாத ஜென்மங்க...எவ்வளவு செஞ்சாலும் நம்மளுக்கு மரியாதையை இல்லை பாருங்க என்று பொருமிய மனைவி ராஜியை லேசான கவலையுடன் பார்த்தார் குமரகுரு.

விடு ராஜி, நீ ஏன் இப்போ டென்ஷன் ஆகுறே. அவனா வந்து நம்ம கிட்டே உதவி கேட்டான், நாமலே தானே போய் செஞ்சோம். தவிரவும் அதுல நம்மளுக்கும் ஆதாயம் இருக்கும்னு தானே செஞ்சோம்.

நீங்க கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்க. விட்டா, நீங்களே எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு காட்டி குடுத்திருவீங்க போல இருக்கு.  ஏய் ரேகா, சீக்கிரம் எழுந்து காலேஜுக்கு கிளம்பு, மணி இப்பவே ஏழு ஆச்சு என்று மகளிடம் கத்தினாள்.

மணியின் தந்தை அவன் பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே காலமாகிவிட்டதால் கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது, அவன் அத்தை ராஜி அவனுடைய கல்லூரி படிப்பு செலவை வலிய சென்று ஏற்றுகொண்டாள்.

ஏன் ராஜி இப்படி ஒரு முடிவெடுத்தே, நமக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை என்று குமரகுரு கேட்டபோது கூட - அட நீங்க கொஞ்சம் சும்மா இருங்க எல்லாம் எனக்கு தெரியும். மணி தங்கமான பையன், கல்லூரி செலவை நாம ஏத்துகிட்டு, அவனுக்கு படிப்பு முடிஞ்சு ஒரு வேலை கிடைச்சதும் - நம்ம பொண்ணு ரேகாவை அவனுக்கே கல்யாணம் செஞ்சு வெச்சிரலாம். பையன் நம்ம சொந்தம் அதனாலே நம்ம சொத்தும் வெளிலே போனா மாதிரி இருக்காது. நம்ம பொண்ணும் கூடவே இருக்கும் என்று தன் கணக்கை கூறி வாயடைத்தாள்.

மணி இப்போது, கல்லூரி படிப்பு முடிந்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறான். மாதம் ஒருமுறை திருச்சி வந்து அத்தை வீட்டில் தங்கி இருந்துவிட்டு செல்வான். ஆனால் இந்த முறை ஏனோ நண்பனின் வீட்டில் தங்க போவதாக சொல்லிவிட்டான்.

அது தான் ராஜியின் கோபத்திற்கு காரணம். நீங்க இப்போவே போய் அவனை கூட்டிட்டு வாங்க என்று பிடித்து தள்ளாத குறையாக குமரகுருவை அனுப்பி வைத்தாள். 

பொடிநடையாக அருகில் இருந்த நண்பனின் வீட்டிற்கு வந்து சேர்ந்த குமரகுரு, வாசலில் செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைய முற்படும் போது மணியின் குரல் கேட்டது.

ஆமாண்டா குமார், இப்படி ஒரு எண்ணம் அவங்களுக்குள்ளே இருக்கும்னு நான் நெனைச்சு கூட பாக்கலே. என்னை எதோ பாசத்தால் மட்டும் தான் அத்தையும் மாமாவும் படிக்க வெச்சாங்கன்னு நினைச்சேன். ஆனா போன தடவை ஊருக்கு வந்திருக்கும் போது, நான் தூங்குறேன்னு நினைச்சு அத்தையும் மாமாவும் பேசிட்டு இருக்குறதை கேட்டுட்டேன்.அவங்க என்னை படிக்க வெச்சதே அவங்க சொத்தை பாதுகாக்கவும், ரேகாவை எனக்கு கட்டி கொடுக்கவும் தான் என்பதை தெரிஞ்சுகிட்டேன். நான் ரேகாவை கல்யாணம் செஞ்சுக்கிற கோணத்திலே பார்த்ததே இல்லை. என்னை விலை கொடுத்து வாங்குற ஒரு பொருள் மாதிரி அவங்க பார்க்கும் போது, நானும் ரேகாவும் கல்யாணம் பண்ணிகிட்டா எங்க வாழ்கை சந்தோசமா இருக்குமாங்கிறது சந்தேகம் தான். என்னை பொருத்தவரைக்கும், கல்யாணம்கிறது கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து சந்தோசமா வாழறதுக்கு தான். ஆனா இந்த கல்யாணத்துக்கு அப்புறம், எங்களுக்குள்ள வர சின்ன சின்ன விஷயத்தில் கூட நான் தான் விட்டுகொடுக்கனும்னு ரேகா எதிர்பார்கிறாளோ இல்லையோ அத்தையும் மாமாவும் எதிர்பார்பாங்க. அப்பிடி ஒரு வாழ்கை வாழறது எங்க ரெண்டு பேருக்குமே கஷ்டம்தான். அதனாலே தான் எனக்கு நன்றி கெட்டவன்னு பேரு வந்தாலும் பரவால்லேன்னு ரேகாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஒரு முடிவெடுத்தேன். இந்த நிலைலே எனக்கு அங்கே போய் தங்கவும் மனசு இல்லே, அதான் இங்கே வந்துட்டேன். இப்போ எங்க அத்தையும் மாமாவும் கேட்டா எனக்கு கல்யாணத்திலே விருப்பம் இல்லேன்னு சொல்லி கல்யாணமே செஞ்சுக்காம இருந்திட போறேன் என்றான் மணி. 

இதை கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற குமரகுரு, திரும்பவும் செருப்பை மாட்டிகொண்டு விறு விறுவென்று தன் வீடு நோக்கி நடந்தார். உள்ளே நுழைந்ததும், ராஜி ராஜி, கொஞ்சம் இங்கே கொஞ்சம் வா என்றார். 

என்னங்க அவ்ளோ அவசரம் என்ற ராஜியை பார்த்து, இங்கே பாரு ராஜி - ரேகா கல்யாணத்துக்கு இப்போ ஒன்னும் அவசரம் இல்லே, முதல்லே அவ படிப்பை முடிச்சிட்டு ஒரு ரெண்டு வருஷம் வேளைக்கு போகட்டும். அப்புறமா அவ கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம். இப்போ நம்ம மணிக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வெக்கணும் என்றார். 

உங்களுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க என்று கூறிய மனைவி ராஜியை பார்த்து - இத்தனை வருஷம் நீ சொல்றதை நான் கேட்டுட்டேன், இந்த தடவை நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு என்று அழுத்தமாக கணீரென்ற குரலில் கூறினார்.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

உதவி என்றாலே அது கைமாறு கருதாதுதான்
இருக்கவேண்டும்
இல்லையெனில் இதுபோன்ற சங்கடங்களை
சந்தித்துத்தான் ஆகவேண்டும்
கருத்துள்ள கதை
சொல்லிச் செல்லும் விதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Narayanan Narasingam said...

வாங்க ரமணி ஐயா. கைமாறு கருதி உதவி செய்வதற்கு அந்த உதவியை செய்யாமலே விட்டுவிடுவதே நல்லது என்று சில நேரங்களில் தோன்றுகிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...