Friday, April 10, 2015

ட்வைலைட் - 55 வார்த்தை சிறுகதை



பத்து வயதே நிரம்பிய சிறுவன் மேடையில் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தான்.

அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.

ராபர்ட் மட்டும் மெதுவாக அருகில் இருந்த தன் நண்பனிடம் கிசுகிசுத்தான்.  நல்ல திறமை உள்ள பையன் தான். என்ன கடைவாய் பல்லு மட்டும் நம்மள மாதிரியே வாய்க்கு வெளியே நீளமாக வளர்ந்து இருந்தால் அவன் வளர்ந்த பின்னே உறிஞ்சி குடிக்க வசதியாக இருந்திருக்கும் என்றபடி கடை வாயின் ஓரத்தில் இருந்த ரத்தத்தை துடைத்தான்.


Thursday, April 9, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் மூன்று




இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கும் முன் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த எண்ண ஓட்ட தொடர்கள் ஒரே நேர் கோட்டில் பயணிக்காது. அதாவது வயது வாரியாக என் வாழ்வில் நிகழ்ந்தவைகளை பகிர்ந்து கொள்ளும் முயற்சி அல்ல. எண்பதுகளில் நிகழ்ந்த நிகழ்வினை இரண்டாயிரத்து பதினைந்துடன் முடிச்சு போடும் சாத்தியம் இந்தத் தொடர்களில் உண்டு. அதனால் நான் பத்தாவது படித்துகொண்டிருக்கும் போது நடந்த ஒரு விஷயத்தை சொல்லும் போது அதற்கான காரணம் ஆறாவது படிக்கும் போது ஏற்பட்டிருக்கலாம். அதை மேற்கோள் காட்ட ஆறாம் வகுப்பிற்கு தாவ வேண்டும் இருக்கு. சரி, இனி என்ன ஓட்டங்கள் அத்தியாயம் மூன்றைப் பார்போம்.

அத்தியாயம் மூன்று

முகத்தின் மேல் குளோரோபார்ம் நிறைந்த பையை அழுத்த அதன் வினோத நெடி நாசியில் ஏறியது. அந்த நெடியை உணரும் அதே நேரத்தில் உடைந்த வலது கையை யாரோ பிடித்து தூக்குவதை உணர முடிந்தது. ஆனால் அது வரை இருந்த வலி தூக்கும் போது இல்லை. அதன் பின்னர் எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, நினைவு திரும்பியதும் முதலில் லேசாக குளிரை உணர்ந்தேன். கண்களை திறக்க முடியவில்லை. மேலே மின்விசிறி வேகமாக சுழல்வதை உணர முடிந்தது. உடல் குளிரில் லேசாக நடுங்கியது. என்ன மதினி இப்படி நடுங்குது என்று என் அம்மாவின் குரல் கேட்டது. கையில் ஏதோ கடினமாக கட்டபட்டிருந்தை வலியுடன் உணர்ந்தேன். லேசாக கண்களை திறந்து பார்க்க முடிந்தது. என்னை சுற்றி ஒரு பத்து பேர் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கையைப் பார்த்ததில் பெரிய மாவு கட்டு, மணிக்கட்டில் இருந்து கிட்டத்தட்ட தோள் வரைப் போடப்பட்டிருந்தது. ச்சே, ஒரு நிமிச விளையாட்டு புத்தி எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பார் என்று என் மனதிற்குள் என்னையே நான் திட்டிக் கொண்டிருந்தேன். மீண்டும் ஆட்டோவில் வீடு நோக்கி பயணம். வீட்டில் நுழைந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் வாசலில் வந்து நின்று விட்டனர். எல்லோரும் என்ன ஆச்சு, எப்படி ஆச்சு என்று கேட்டபடி ஒரே கூச்சல். ஸ்விம்மிங் பூல் போய் கையை ஒடச்சிகிட்டான், எதுக்கு இவனுக்கு ஸ்விம்மிங் எல்லாம் என்று அவர்களாகவே பேசிக் கொண்டனர்.  நானோ மனதிற்குள்  ஸ்விம்மிங் பூல் போய் வரும் வழியில் தான் கை உடைந்தது அதற்கும் ஸ்விம்மிங்கிற்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். 

நான் அந்த வருடம் பத்தாவது வகுப்பில் படித்துகொண்டிருந்தேன். ஏற்கனேவே படிப்பில் சுமார்.  இப்போது கை வேறு உடைந்து விட்டது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தேன், ஆறாம் வகுப்பில் இருந்து இங்கிலீஷ் மீடியம். எல்லாவற்றையும் தமிழ் படித்துகொண்டிருந்த நான், கணக்கு முதற்கொண்டு ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய நிலைக்கு ஆளானதும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலதான் முதலில் உணர்ந்தேன். அது சரியாகி ஓரளவிற்கு ஆங்கிலம் பிடிபட்டது ஒன்பதாம் வகுப்பில் தான். பத்தாவது எப்படியாவது நன்றாக படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்ட நேரத்தில் இப்படி நிகழ்ந்தது பெரும் கவலையைத் தந்தது. ஆனால் அதையெல்லாம் வெளியில் சொல்லிகொள்ளும் நிலையும் தேவையும் இல்லாத ஒரு கால கட்டம் அது. அன்றைக்கு அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தியதை இப்போது நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது. ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் இல்லை. ஒரு சில ஆசிரியர்களைத் தவிர மற்ற ஆசிரியர்கள் பாடம் சரியாக நடத்தியதே இல்லை. முக்கால்வாசி நேரம் மரத்தடியில் தான் வகுப்பு. அதுவும் அறிவியல் போன்ற பாடங்களில் யாரவது ஒரு மாணவனை எழுந்து படிக்க சொல்வார்கள். அவ்வபோது தோன்றும் போது எதாவது சொல்லி புரிந்ததா என்று ஒரு கேள்வி. அவ்வளவு தான் அங்கே நான் கற்ற பாடம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வில் முப்பது ஐந்து மதிப்பெண் எடுத்தவர்கள் தான் அடுத்த வகுப்பிற்கு செல்லவேண்டும் என்ற நிலைப்பாடு அப்போது அந்த பள்ளியில் இருந்திருந்தால் என்னையும் சேர்த்து வகுப்பில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பாஸ் ஆகி இருக்க மாட்டார்கள். மிக மிக மோசமாக படிக்கும் மாணவர்களைத் தவிர எல்லோரையுமே அடுத்த வகுப்பிற்கு தூக்கி போட்டு விடுவார்கள். இது இப்படி இருக்க, நான் சந்திந்த எல்லா தமிழ் ஆசிரியர்களும் மிகவும் சிறப்பாக பாடம் நடத்தினர். அதில் தட்சிணாமூர்த்தி என்ற ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அழகே தனி. ஒவ்வொரு மாணவனுக்கும் அழகாக தமிழில் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவார். உதாரணத்திற்கு, சைதாபேட்டையில் உள்ள கொசத்தெரு என்ற தெருவில் இருந்து வரும் மாணவனை வாடா கொசத்தெரு கோமகனே என்று கூப்பிடுவார்.

ஆனாலும் அப்போது எனக்கு தமிழ் மேல் பெரிய ஆர்வம் என்றெல்லாம் இல்லை. ஒரே விஷயம் கண்ணா பின்னா என திருக்குறள் படித்தேன். அதுவும் திருக்குறள் போட்டி ஒன்றில் ஆறாவது படிக்கும் போது கலந்துகொண்டேன். அதில் முதல் பரிசும் பெற்றேன். அதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். அந்த போட்டிக்காக திருக்குறள் நிறைய படித்தேன். திருக்குறளைப் போன்ற ஒரு பொக்கிஷத்தை தமிழன் பெற்றது ஒரு வரப்ரசாதம். அதில் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தனைக்கும் விடை இருக்கிறது. தந்தையின் கடமை, பிள்ளைகளின் கடமைகளில் தொடங்கி மருத்துவன், அரசன், காதலன் என வாழ்வின் அத்தனை நிலைகளிலும் நம்மை வழி நடத்தும் தகவல்கள் திருக்குறளில் உள்ளது. குறைந்த பட்சம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் ஒரு திருக்குறள் புத்தகத்தையாவது வாங்கி வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.  இப்படி நான் படித்துகொண்டிருந்த நிலையில் கையையும் உடைத்துக் கொண்டேன். அதுவும் வலது கை, எழுத முடியாது. சுமார் மூன்று மாதங்கள் கை கட்டுடன் வீட்டிற்குள் இருந்தேன். பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்ததில் பொழுது போகாமல் ஒரு நாள் வரலாறு பாடப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன். நன்றாகப் புரிந்தது. நல்லாதானே இருக்கு,  இத்தனை நாள் ஏன் நாம இதை படிக்கலே என்று தோன்றியது. வலது கையில் எழுத முடியாததால் சில நாட்கள் இடது கையில் எழுத பழகினேன். ஆனாலும் கணக்கு மட்டும் புரியவே இல்லை. சரியான அடிப்படை கணிதம் கூட தெரியாததால் ஒன்றுமே புரியவில்லை. கணக்கு புரியாததால் அறிவியலும் முழுவதுமாகப் புரியவில்லை.  படிக்காவிட்டால் வாழ்கை திசை மாறிப் போய்விடும் என்ற புரிதல் இருந்தது,  ஆனால் படித்தால் புரியவில்லை என்று திணறிக் கொண்டிருந்த வேளையில்  என் வாழ்வில் நுழைந்தவர் ஸ்ரீதர்.

ஓட்டம் தொடரும்.....


Tuesday, April 7, 2015

ரூல்ஸ்

லைப்ரரிலே படிச்சதும் புக்கை எடுத்த எடத்துலே வெக்க வேண்டாம்.

யாரும் ரூல்ஸை மதிக்கறதே இல்லே என்று பெரும் குரலெடுத்து கோபத்துடன் கத்திய லைப்ரரியனை படித்துக் கொண்டிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து பார்த்தனர்.

Monday, April 6, 2015

எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு

 
இசை, நடனம், ஓவியம், எழுத்து போன்ற விஷயங்கள் மனிதனுக்கு கிடைத்த வரம். சில நேரங்களில் வாழ்கை ஓட்டத்தில் இது போன்ற அரிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது பெரும் பாடாகி விடுகிறது. எண்ண ஓட்டங்கள் என்ற தொடரின் முதல் அத்தியாயம் எழுதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. இப்போது தான் அடுத்த அத்தியாயம் எழுத முடிந்திருக்கிறது. இது என் மனதில் ஏதோ ஒரு மூலையில் தேங்கிக்கிடக்கும் எண்ண அலைகளை வார்த்தைகளாக்கும் ஒரு முயற்சியே. இதை படிப்பதால் உங்களுக்கு பெரிய பலன் ஒன்றும் இருக்காது. ஆனால் அந்த கால கட்டத்தில் என்னுடன் கை கோர்த்து நடந்த ஒரு உணர்வை அளிக்கும் முயற்சி தான் எண்ண ஓட்டங்கள். இதைப்பற்றி தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல், நினைவுகளைக் கிளறி மனம் போன்ற போக்கில் எழுத முனைகிறேன். இனி எண்ண ஓட்டங்கள் - அத்தியாயம் இரண்டு...

ஆனால், நான் பிடித்து ஆடிய விழுது அறுந்து கீழே விழுந்தேன். என்னுடைய உடல் பாரம் முழுவதும் வலது கையின் மேல் இருக்கும்படி விழுந்ததில் மணிக்கட்டுக்கு சற்று மேலே வலது கையில் எலும்பு முறிந்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் கை பெரிதாக வீங்கி விட்டது. வலது கையின் பாரத்தை தாங்க முடியாமல், இடது கையால் தாங்கியபடி நடந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்கள் சிலர் கூட இருந்தனர், ஆனால் அவர்களும் மிரட்சியில் இருந்தார்கள். பின்னர் மெதுவாக நடந்து குருநாத் ஸ்டோர் அருகே வந்ததும் ஒரு ரிக்சா வண்டி வந்தது. நண்பர்கள் அவரிடம் பேசி என்னை ரிக்சாவில் ஏற்றி விட்டனர். ஒரு வழியாக வீட்டின் அருகே வந்து சேர்ந்து வாசலில் இருந்த ஒரு கடையில் போட்டிருந்த ஸ்டூலில் மிகுந்த வலியுடன் உட்கார்ந்தேன். ஒரு நிமிடத்தில் என்னை சுற்றி கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் ஐயோ பாவம் என்று சொல்லியபடி பார்த்துகொண்டு நின்றார்கள். இதை சொல்ல வருத்தமாக இருந்தாலும் சொல்கிறேன். அந்தக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரும் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார். அதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கண் முன்னே ஒருவன் வலியால் துடித்துகொண்டிருக்கும் போது  பார்த்துக் கொண்டு கையை பிசைந்து கொண்டு நிற்பது சாத்தியமில்லாதது. ஆனால் அங்கே ஒரு கூட்டமே நின்றுகொண்டிருந்தது. அப்போது எதேச்சையாக அங்கு வந்த ரங்கண்ணன் (ரங்கன் என்பது அவர் பெயர் அதனுடன் அண்ணனை சேர்த்து நாங்கள் ரங்கண்ணா என்று கூப்பிடுவோம்), என்னடா ஆச்சு என்று பதறியபடி கேட்டார். கை முறிந்திருப்பதைப் பார்த்து அடப்பாவி என்று உரக்க கூறியபடி வீட்டின் உள்ளே சென்று ஒரு துணியை நனைத்து கையின் மேலே லேசாக சுற்றினார். என்னை கைதாங்கலாக அழைத்தபடி அருகில் இருந்த கௌரி பார்மசி சேட்டிடம், 'சேட்டு, ஒரு இருநூறு ரூபா குடு, பையன் கையை ஒட்சினு வந்து நிக்குறான்' என்றார். சேட் என் தந்தையின் நெருங்கிய நண்பர். மறு பேச்சு பேசாமல் பணத்தை எடுத்து கொடுத்தார். கௌரி பார்மசி சேட் குணத்தைப் பற்றி மேலும் தெரிய வேண்டும் என்றால் இந்தப் பதிவை படிக்கவும்.
 
பணம்  கிடைத்தவுடன் புத்தூர் போகலாமா அல்லது ராயபேட்டா மருத்துவமனை போகலாமா என்று எழுந்த விவாதத்தில், ரங்கண்ணன் உடனடியாக  சின்னபையன் புத்தூர் ட்ரீட்மென்ட் வலி தாங்க மாட்டான், ராயபேட்டாவே போயிறலாம் என்று ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை கூட்டிச் சென்றார். ராயப்பேட்டை மருத்துவமனையை நெருங்கும் முன்னரே அதன் நெடி நாசியை துளைக்க ஆரம்பித்தது. அந்த நெடியே அடிவயிற்றில் ஒரு பயத்தைக் கிளப்பியது. எலும்பு முறிவுப் பிரிவிற்கு சென்று சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அங்கிருந்த மருத்துவர் அறைக்கு அழைக்கப்பட்டோம். அந்த மருத்துவர் என் கையைப் பார்த்ததும், பையனை பெட்லே படுக்க வெச்சு கையை தூக்கி கட்டுங்க என்றார். யாரோ ஒருவர் வந்து என்னை அழைத்துச்சென்று கையை தூக்கி ஒரு கம்பியில் கட்டி விட்டார். எனக்கோ வலது கையில் எலும்பு முறிவு, அவரோ ஒரு பெரிய கம்பியை என் இடது புறம் வைத்துக் அதில் வலது கையை தொங்கவிட்டார். ஏற்கனவே கையில் சொல்ல முடியாத அளவிற்கு வலி, அதில் ஒரு மாதிரி ஒருக்களித்துப் படுத்து இருந்தது மேலும் வலியை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று படுக்கவைத்தனர். அங்கிருந்த மருத்துவர் ஒருவர் குளோரோபார்ம் நிறைந்த ரப்பர் பை போன்ற ஒன்றை என் முகத்தில் அழுத்தினார்.
 
ஓட்டம் தொடரும்.....


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...