சில வருடங்களுக்கு முன்னர் என்னிடம் யாரவது வந்து மாரத்தான் ஓடினேன் என்று கூறி இருந்தால், ஓ அப்படியா! என்று ஒரு போலியான ஆச்சர்ய கேள்வி கேட்டுவிட்டு, அப்புறம் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என் சடார் என்று ட்ராக் மாறி இருப்பேன். ஆனால், இப்போ கொஞ்ச நாட்களாக நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் பலவற்றிகாக அனைவரும் ஓடிக்கொண்டிருந்தாலும்
அத்தியாயம் ஓன்று - நீச்சல்
படிப்பு
மட்டும் தான் முக்கியம் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைகள் எல்லாம்
தேவையே இல்லை. அதெல்லாம் வேஸ்ட் ஒப் டைம் என்று சொல்லாமல் சொல்லும் நடுத்தர
வர்க்க குடும்பச் சூழலில் வளர்ந்தவன் நான். எனக்கு தெரிந்து எண்பதுகளில்,
நம்ம ஊரில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம்
இருந்தது இல்லை. (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு கேக்குறீங்களா ?). அதுவும்
நடுத்தர வர்கத்தில் உள்ள ஒருத்தன் சுமாரா படிச்சிட்டு, கிரிக்கெட்
மட்டும் விளையாடுறேன்னு சொன்னா வீடு கூட்டும் தொ. கட்டையை எடுத்து அடிக்க
வருவாங்க. மற்றபடி ஓட்டப்பந்தயம், கால்பந்து, நீச்சல் போன்றவைகளுக்கு
எல்லாம் வாய்ப்பே இல்லை.
இங்கு அமெரிக்காவில் குழந்தைக்கு நடை
பழக கற்றுகொடுப்பது போல சர்வ சாதாரணமாக நண்டு சிண்டுகளுக்கெல்லாம்
ஸ்விம்மிங் கற்று கொடுக்கிறார்கள். என் எட்டு வயது இளைய மகள், டைவிங்
போர்டில் இருந்து குதித்து பதிமூன்று அடி ஆழத்தில் உள்ளே சென்று வெளியே
வருவதை மகா ஆச்சர்யத்துடன் பார்த்துகொண்டு நிற்பேன். நமக்கு தெரிந்தது
எல்லாம் கடப்பாரை நீச்சல் தான். கடப்பாரையை தண்ணீரில் போட்டால் கொஞ்ச தூரம்
சென்று எப்படி நிற்குமோ அப்படி கொஞ்ச தூரம் நீந்தி பின் நின்று விடுவேன்.
என் உயரத்தைவிட அதிகமான ஆழத்திற்கு முடிந்த அளவு செல்ல மாட்டேன். அதுவும்
சிறிய வயதில் நண்பர்கள் உதவியுடன் கற்றுக்கொண்டதால் தான்
சாத்தியமாகியது. சிறு வயதில் ஒரு முறை, சென்னை நந்தனம் அருகே இருக்கும்
YMCA வில் உள்ள ஸ்விம்மிங் பூல் செல்லலாம் என்று கூறியதற்கு, சாராமாரியாக
பலரிடம் இருந்து வாங்கி கட்டிக்கொண்டது நினைவிற்கு வருகிறது. அப்படியும்
திருட்டுதனமாக நண்பர்களுடன் சேர்ந்து அங்கு சென்று நீந்துவது ஒரு சுகமானா
அனுபவம். அப்போது அங்கே அனுமதி கட்டணம், ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ என்று
நினைக்கிறேன். ஸ்விம்மிங் பூல் உள்ளே சர்வ சாதாரணமாக நூறு பேருக்கு
மேல் இருப்பார்கள். ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டும் மோதிக்கொண்டும்
நீச்சல் அடிப்போம். சென்னை , சைதாபேட்டையில் இருந்து டீச்சர்ஸ் காலேஜ்,
தாடண்டர் நகர் வழியாக (சில நேரங்களில் B கிரௌண்ட் வழியாக) YMCA
-விற்கு நடந்தே அங்கு செல்வோம். அப்போது அங்கு நிறைய சினிமா ஷூட்டிங்
நடக்கும். ஒரு முறை கமல் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. படம் பெயர்
வெற்றிவிழாவா அல்லது சூரசம்ஹாரமா என்று சரியாக நினைவில்லை. அநேகமாக
வெற்றிவிழாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறன். கமலை மிக
அருகில் பார்த்த நானும் என் நண்பர்களும் ரொம்ப குஷியாகிவிட்டோம். ஆனால்
கிட்டே போய் பேச பயம். அப்போது கமல் வேறு பயங்கரமா எக்சர்சைஸ் பண்ணி
ஆர்ம்ஸ் ரெண்டையும், எங்களில் பலருக்கு அப்போதிருந்த தொடை சைஸ் -க்கு
வைத்திருந்தார். குறைந்த பட்சம் ஒரு ஆட்டோகிராப் வாங்கலாம் என்று
நினைக்கும் போது, கையில் பேப்பர் பேனா எதுவும் இல்லை. ஆமா ஸ்சூலுக்கு
படிக்க போகும்போதே பேப்பர் பேனா கொண்டு போகாதவனுங்க, ஸ்விம்மிங் பூல்
போகும் போதா கொண்டு போவோம். அப்படி இப்படி என்று பேப்பர், பேனா எல்லாம்
யார்கிட்டயோ தேத்தி, கமல் கிட்டே போநூறு கலாம்னு பார்த்தா, அவர் ஒரு வேனில்
உட்கார்ந்து சுவாரசியமாக பூரி மசாலை உள்ளே தள்ளிகொண்டிருந்தார். சரி, அவரை
ப்ரீயா விட்டுரலாம்னு எங்களுக்குள்ளேயே பெருந்தன்மையா முடிவெடுத்து,
அருகில் வெண்ணிற ஆடை மூர்த்தியை வைத்து படமாக்கிக் கொண்டிருந்த ஒரு உப்பு
சப்பு இல்லாத காட்சியை பார்த்துவிட்டு நகர்ந்தோம்.
இப்படி அப்பப்ப போய் நீச்சல் கத்துகிட்டு வந்தோம்.
ஆனால் அதற்கும் சில நாட்களில் வேட்டு வந்துவிட்டது. ஒரு நாள் நீச்சல்
அடிச்சிட்டு திரும்பி வரும் போது வழக்கமா தண்ணீர் குடிக்கும் குழாயில்
தண்ணீர் குடித்து பின்னர் அருகில் இருந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம்.
அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, செந்தில்னு ஒருத்தன் ரஜினி மாதிரி இந்த
விழுதுலே தொங்கி ஆடலாமனு கேட்டான் (பத்தவெச்சுட்டியே பரட்டை!). அப்போ
வேற டிவியில் அடிக்கடி போடுற 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினி ஒரு
பாட்டில் கௌபாய் மாதிரி உடையில் ஆலமரத்துக்கு கீழே குதிரையில் வந்துட்டே
இருப்பார். குதிரையில் வேகமாக வரும்போதே அப்படியே தாவி ஆலமர விழுதை
பிடிப்பார். குதிரை பாட்டுக்கு முன்னாடி போயிரும். ரஜினியோ அப்பிடியே கொஞ்ச
தூரம் தொங்கியபடி முன்னாடி போய் நேரா குதிரை மேலே உட்காருவார். எப்டி
போறான் பார்றா என்று நாங்கள் நண்பர்கள் சிலாகிதுக்கொள்வோம். ரஜினி கமலுக்கு
எல்லாம் அவர் இவர் என்று மரியாதை கொடுத்து நாங்கள் தள்ளி வைத்ததில்லை.
எம்ஜியார் சிவாஜி என்றால் மரியாதை கொடுத்து பேசுவோம். இந்தப் பய ஆலமர
விழுதிலே ஆடலாம்னு சொன்னதும் எனக்கு அந்தக் காட்சி நியாபகம் வந்தது. உடனே
நான் முதல்லே பண்றேன்னு ஒரு நான்கடி உயர சிறிய சுவற்றின் மேல் இருந்து
குதித்து ஆலமர விழுதை பிடித்து ஆட நினைத்தேன். அதையெல்லாம் விட
ரிஸ்கான கில்லி தாண்டு, பம்பரம், கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டை ஆடும்
எங்களுக்கு அது ஒரு ஜுஜுபி -யாக அந்த நேரத்தில் தோன்றியது. சரி என்று
முதல் ஆளாக சுவற்றில் ஏறினேன், தாவி விழுதை பிடித்தேன். நான்கைந்து முறை
விழுதில் ஆடிவிட்டு கீழே குதித்து நின்று விடலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால்...
ஓட்டம் தொடரும்...
2 comments:
பயனுள்ள சுவரஸ்யமான தொடர்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
Post a Comment