Friday, August 5, 2011

சைதாபேட்டை நினைவுகள்




என் பின்னால் சுமார் பத்து பேர் கொண்ட ஒரு சிறிய கூட்டமே ஒடி வந்துகொண்டிருந்தது. டேய் புடிரா, விட்டுற கூடாது...என்று ஆக்ரோஷமான குரல்கள் கேட்டது. எனக்கு எப்படி ஒரு வேகம் வந்ததோ தெரியவில்லை எல்லோருக்கும் முன்னே ஒடிகொண்டிருந்தேன். அந்த வேகத்தில் ஓடும்போதும் என் கண்கள் மட்டும் வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. எனக்கும் என்னை பின்தொடர்ந்த கூட்டத்திற்கும் குறைந்தது பத்தடி தொலைவு இருக்குமாறு பார்துகொண்டேன். மூச்சிரைத்தது, போதும் ஓட்டத்தை விட்டுறலாமா என்று தோன்றியது. வேண்டாம், இப்போ விட்டால் இந்த மாதிரி வாய்ப்பு திரும்ப கிடைக்க எத்தனை நாள் ஆகுமோ தெரியாது. மனதிற்குள் உத்வேகத்தை ஏற்படுத்திக்கொண்டு வேகத்தை கூட்டினேன். இன்னும் சிறிது தூரம் தான் என்று எனக்குள் கூறிக்கொண்டு வானத்தை பார்த்தபடி ஓடினேன். இந்த மாதிரி ஒடிகொண்டிருப்பது அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான், என்னை ஒரு வழி ஆகிவிடுவாள். ஆனாலும் ஆசை யாரை விட்டது, இப்போது என் நோக்கம் எல்லாம் வேகமாக ஓடுவதுதான். இதோ என் இலக்கை நெருங்கி விட்டேன். சற்றே வேகத்தை கூட்டி இரண்டடி தாவி டீலில் அறுந்து வந்த, அந்த 1 சீட் (sheet) ரெட்டை கண் பானா காத்தாடியை பிடித்தேன். 


பின் குறிப்பு: சென்னை, சைதாபேட்டையில் வளர்ந்த நான், சிறுவயது நினைவுகளை அவ்வபோது எடுத்துவிட நினைத்ததின் விளைவே இந்த மைக்ரோ சிறுகதை.

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...