எண்பதுகளில் பத்து பதினைந்து காசிற்கு பெட்டிகடைகளில் திரைப்படங்களின் பாட்டு புக் கிடைக்கும். ஏழெட்டு வயதில் பூந்தளிர், அம்புலிமாமா போன்ற தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்த போது இந்தப் பாட்டு புக் பைத்தியமும் பிடித்துக்கொண்டது. பாடல் வரிகளைப் படிப்பதற்காக வாங்கி கூடவே பாடும் பழக்கம் ஒட்டிக்கொண்டது. முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுகொள்ளும் ஆர்வம் இருந்தும் அன்றைக்கு நாங்கள் இருந்த பகுதியில் சமூகச் சூழல் இடம் தரவில்லை. அப்படியே சமூகச் சூழல் இடம் கொடுத்திருந்தாலும் என் குடும்பத்தின் அன்றைய பொருளாதார சூழல் இடம் கொடுத்திருக்குமா என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் பாடலில் மேல் இருந்த ஆர்வம் இன்றளவிலும் குறையவில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தின் மேல் நாம் வைக்கும் உணர்வு சார்ந்த விருப்பு, திறமையை விட முக்கியமானது. திறமை கூடவும் குறையவும் வாய்பிருகிறது. ஆனால் உணர்வில் இருந்து வெளிப்படும் விருப்பம் மாறுவது என்பது அரிதானது. இப்படி ஆரம்பித்த பாடல் ஆர்வம் பாத்ரூமில் பாடுவதில் தொடங்கி நண்பர்கள் மத்தியில் பாடுவது என்ற நிலையில் ஒரு கால கட்டத்தில் நின்றது. யாரும் பெரிதாக பாராட்டவில்லை என்றாலும் பாடும்போது நிறுத்து என்று சொல்லவில்லை. மேலும் பாராட்டை எதிர்பார்க்கும் நோக்கமும் இருந்ததில்லை. எனக்கு நிறைய கனவுகள் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக மனதில் தோன்றும் போது செய்து கொண்டிருப்பேன். நூறு மீட்டர் ஓட்டம் கூட ஓடாத நான், மாராத்தான் ஓட வேண்டும் என்று வெறி கொண்டு பயிற்சி எடுத்திருக்கிறேன். இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறது பாடலின் கடைசியில் வரும் பிஜிஎம்-ஐ எப்படியாவது வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு கிடாரை வாங்கி ராப்பகலாக முயன்று வாசித்திருக்கிறேன். அந்த ஒரு பிஜிஎம் மட்டுமே உருப்படியாக கிடாரில் வாசிக்கத் தெரியும் என்பது வேறு விஷயம். இப்படி ஒரு ஒரு கால கட்டத்தில் என்ன தோன்றுகிறதோ அதை செய்து கொண்டிருப்பேன். அது என் மனதிற்கு பிடிந்திருந்தால் மட்டும் போதும். சரி திரும்பவும் பாட்டுக்கு வருவோம். நான் ஏழாவது வகுப்பு படிக்கும் போது பள்ளியில் NCC-யில் சேர பள்ளியில் ஆள் எடுக்கிறார்கள் என்று ஒரு பரபரப்பான செய்தி வகுப்பில் அடிபட்டது. பரபரப்புக்கு முக்கிய காரணம், அதில் கிடைக்கும் உடை, பூட்ஸ் போன்றவை மட்டும் இல்லை. வாரத்தில் இரண்டு நாள் பயிற்சி, அதன் பின்னர் ஓட்டலில் இருந்து வரவழைக்கப்படும் இட்லி, பூரி, பொங்கல் ஒன்ற உணவு. நான் படித்து ஒரு அரசுப் பள்ளி. பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் வசதி குறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இந்த நிலையில் இரண்டு நாள் காலையில் ஓட்டல் சாப்பாடு என்பது பெரும் வரப்பிரசாதமாக எங்களிடையே கருதப்பட்டது. மாணவர்கள் கூட்டம் நான் நீ என முந்தி அடித்துக் கொண்டு சென்றது. அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். மாணவர்கள் ஒவ்வொருவராக NCC மாஸ்டர் ரூமிற்கு சென்று அவர்கள் கொடுக்கும் காக்கி NCC உடை அணிந்து மாஸ்டரின் முன் நிற்கவேண்டும். அவர் உயரம் மற்றும் உடல் தகுதி பார்த்து விட்டு தேர்ந்தெடுப்பார். அதில் ஒரு முக்கிய தகுதி கால் முட்டி இரண்டும் அட்டென்ஷனில் நிற்கும் போது இடிக்கக்கூடாது என்பது தான். பார்த்த மாத்திரத்தில் 'டேய், முட்டி தட்டுது இவனை திருப்பி அனுப்பு' என்று கூறி விடுவார். ஒரு சிலர் ஆஜானுபாகுவாக இருந்தால் முட்டி தட்டினாலும் எடுத்துகொள்வார். என் முறை வந்ததும் முதலில் உடை அணியும் அறைக்கு சென்றேன். அங்கு அடிக்கி வைக்கப்பட்டுள்ள உடைகளில் நம் அளவிற்கு என்ற உடையை தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். நான் அப்போது இருந்த மாணவர்களிடையே சராசரி உயரத்திற்கும் மிகவும் உயரம் குறைவாக இருந்தேன். உடல் பருமன் கேட்கவே வேண்டாம். அப்போது கூட படித்த சத்தீஷ் போன்ற நண்பர்கள் சடாரென்று உடை கம்பீரமாக நின்ற போது, நான் அங்கு இருப்பதிலேயே சிறிய உடையை தேர்ந்தெடுக்க தடுமாறிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக இருப்பதிலேயே சிறிய உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு, மாஸ்டரின் முன் போய் நின்றேன். அவர் என்னைப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். சுற்றிலும் இருந்த மாணவர்களும் விவரம் புரியாமல் கூடவே சிரித்தனர். அப்போது பெரிய அவமான உணர்சியெல்லாம் எனக்கு இல்லை. நானும் லேசாக சிரித்து வைத்தேன். சிரித்த முடித்ததும் அவர் 'என்னடா இவன் இந்த ட்ரஸ்லே பாதர் மாதிரி இருக்கான்' என்று கிண்டலாகக் கூறினார். உனக்கெல்லாம் எதுக்கு NCC, வேண்டாம்டா என பரிவா அல்லது கோபமா என்று புரியாத தொனியில் கூறினார். நான் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உனக்கு வேறே என்ன பண்ண தெரியும் என்று கேட்டார். எனக்கு முன்னர் இதே கேள்வியை சற்று பருமனான நடேசனிடம் கேட்க அவன் 'பல்டி அடிக்க தெரியும் சார்' என்று இரண்டு மூன்று முறை தரையில் பல்டி என்கிற பேரில் விழுந்து பிரண்டதைப் பார்த்து அனைவரும் சிரித்தது மனத்திரையில் வர, நான் சற்று யோசனையுடன் நின்றேன். அந்த நேரம் பார்த்து, எவன் சொன்னான்னு தெரியலே, 'சார் அவன் பாட்டு பாடுவான் சார்' என குரல் கொடுத்து விட்டான். என்னது பாட்டா, எங்கே எதாவது பாடு என்றார். அப்பொழுது ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் படத்தில் வரும் 'கண்ணே கட்டிக்கவா' பாடலை முழுவதும் பயங்கரமான பீலிங்க்சுடன் பாடிக் காட்டினேன். பாடி முடித்ததும் எக்ஸ்ட்ரா கரிக்குலர் போன்ற எதோ ஒரு கோட்டாவில் என்னையும் NCC-யில் சேர்த்துக் கொண்டார். அது தான் என் பாட்டிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.
பின்னர் எங்கு கேம்ப் போனாலும் சரி பாடும் வாய்ப்பு நமக்கு வந்து விடும். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது, உண்மையிலே ரசிச்சாங்களா இல்லை சும்மா ஓட்டுனனுன்களா தெரியவில்லை. ஏழாவது எட்டாவது என இரண்டு வருடங்கள் NCC-ல் இருந்தேன். அப்போது நான் அந்த வகுப்பில் இருப்பதிலேயே உயரம் குறைவானவன், இல்லை என்னை விட சிவகுமார் என்ற சற்றே உயரம் குறைவானவன் இருந்தான். 'Tall in the right, short in the left, single line follow-in' என்று சத்தீஷ் தொண்டை கிழிய கத்தினால் கண்ணை மூடிக் கொண்டு நானும் சிவக்குமாரும் கடைசி இடது பக்கத்திற்கு போய் விடுவோம். எங்களுடன் சேர்ந்த சத்தீஷ் அப்போதே படு உயரமாகவும் நல்ல உடல் கட்டுடன் இருந்ததால் ஹையர் ரேங்கிற்கு போய்விட்டான். இயற்கையாகவே அப்போது சத்தீஷிர்க்கு சிக்ஸ் பேக் ஆப்ஸ் இருந்தது. அவனுக்கு கார்போரலோ லேன்ஸ் கார்போரலோ ஏதோ ஒரு ரேங்க் கொடுத்திருந்தார்கள். எட்டாவது படிக்கும் வரை உயரம் குறைவாக இருந்த நான், பத்தாவது படிக்கும் போது கிட்டத்தட்ட ஆறடி உயரத்திற்கு வளர்ந்தது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு இரண்டு வருடத்திற்கு முன்னரே அந்த உயர வரத்தில் பாதியாவது கிடைத்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் அப்போது இருந்தது. இந்தப் பாட்டு மேட்டர் எல்லாம் அப்போது தான், இன்று எதேச்சையாக என் குரலை வாய்ஸ் மெயிலில் கேட்டால் கூட பாட்டு எல்லாம் நமக்கு ரொம்ப தூரம் என்று புரிகிறது.
ஓட்டம் தொடரும்...
அத்தியாயம் ஓன்று
அத்தியாயம் மூன்று
அத்தியாயம் நான்கு