அமெரிக்காவிற்கு நாங்கள் வந்து ஒரு ஏழெட்டு மாதங்கள் இருக்கும். செப்டம்பர் 11 - பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு காலை வேலையில், சுமார் ஏழு மணிக்கு அவசர அவசரமாக புறப்பட்டு பாஸ்டன் நகரப் போக்குவரத்தில் கலந்தேன். இன்னும் சில மணிநேரத்தில் நிகழப்போகும் விபரீதத்தை உணராமல் அனைவரும் அவரவர் திசையில் பயனித்துக் கொண்டிருந்தோம். நான் அப்போது பார்த்துகொண்டிருந்த வேலையில் ஒவ்வொரு நாளும் வேறு வேறு வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கு சென்று அங்கு தேவையான வேலையை முடித்து கொடுத்துவிட்டு திரும்ப வேண்டி இருந்தது. அன்று போகவேண்டிய வாடிக்கையாளரின் அலுவலகத்தை அடைய சுமார் ஒன்றரை மணி நேரம் காரில் பயணிக்க வேண்டும். சுமார் எட்டரை மணிக்கு அந்த அலுவலகத்தை அடைந்து சிறிது நேரத்தில் வேலையில் மூழ்கினேன். மணி அப்போது காலை 10:30 மணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அமர்ந்திருந்த அறையில் என்னுடன் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். அனைவரும் மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று எனக்கு பின்னால் இருந்த அமெரிக்க நண்பர் ஒருவர் இருக்கையில் இருந்து துள்ளி, 'ஹேய், லுக் ஹியர்' என்று அவசரமாக அவருடைய கம்ப்யுடர் திரையை பார்க்க அழைத்தார். உடனே சென்று பார்த்தால், அவர் காட்டிய புகைப்படத்தில், உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டடங்களும் இடிந்து பாதி தெரிந்தது. அதன் மேலிருந்து பெரிய புகை மூட்டம் விண்ணை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த போதே என்னுடைய கம்புயடரில் இருந்து MSN Messanger-ல் இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். உனக்கு எல்லாம் ஓகே தானே என்று விசாரித்தார். அதற்குள் மற்றொரு இந்திய நண்பர் சாட் செய்தார். அவருடைய கசின் நியுயார்க்கில் வேலை செய்வதாகவும், அவர்களை தொலைபேசியில் அழைக்க முடியவில்லை, இது தான் அவர்கள் போன் நம்பர், கொஞ்சம் அவர்களை அழைத்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்க முடியுமா என்று கூறினார். அவருக்கு இதோ உடனே செய்கிறேன் என்று கூறி அந்த நம்பரை அழைத்துப் பார்த்தேன், ஆனால் லைன் போகவில்லை. என்னாலும் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்ததுடன் கூறினேன். வீட்டிற்கு அழைத்து வெளியில் எங்கும் போகவேண்டாம் என்று கூறி விட்டு, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, அலுவலகத்தில் இருந்து கிளம்ப விருப்பம் உள்ளவர்கள் கிளம்பலாம் என்று அறிவித்தனர்.
அங்கிருந்து கிளம்பி திரும்பவும் பாஸ்டன் நகரை நோக்கி காரை செலுத்திகொண்டிருந்தேன். வழக்கமாக டோல் (Toll) வசூலிக்கும் இடங்களில் அன்று இலவசம் யாரும் நிற்கத் தேவையில்லை என்று அறிவிப்பு கண்ணில் தென்பட்டது. நிலைமையின் விஸ்தீரணம் அப்போது நன்றாகப் புரிந்தது. வீட்டிற்கு வந்து தொலைக்கட்சியில் செய்திகள் பார்த்து ஆயிரக்கணக்கில் மக்கள் உயிர் இழந்திருகிறார்கள் என்று தெரிந்த போது மனதை ஏதோ செய்தது. இந்தியாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து, நீங்க நல்லா இருக்கீங்க இல்லே என்று கேட்டு பின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஒரு சிலர் பேசாமே நீங்க இங்கே கிளம்பி வந்துருங்க என்று கூட கூறினர். எதாவது ஒரு இடத்தில், உயிருக்கு உத்திரவாதம் என்று மட்டும் இருந்துவிட்டால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான் என்று நினைத்துகொண்டு, அவர்கள் மனம் நோகக் கூடாதே என்று, அதெல்லாம் எதுக்கு இங்கே ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி அவர்களை சமாதனப்படுத்தினேன். இன்று பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அன்றைய நிகழ்வுகள் மனதை ரீங்காரமிட்டபடி இருந்ததால் இந்தப் பதிவை எழுதுகிறேன். அந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டு, உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
4 comments:
நிச்சயம் அந்நிகழ்வு மறக்க குடியாத்த ஒன்று தான்.
//@மதுரை சரவணன் said...//
உண்மை தான் சரவணன். அந்த ஒரு நாளை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.
ஆஅல்ல்லொவ் நீங்க US வந்து பத்து வருசத்துக்கும் மேல ஆச்சா!?!?!?இதே நேரத்துல பத்து வருஷம் முன்னாடி ED போர்டு ல்ல டிவி முன்னாடி உக்கார்ந்துட்டு drawing போட்டுட்டு இருந்தேன்.
//@Anonymous said...
ஆஅல்ல்லொவ் நீங்க US வந்து பத்து வருசத்துக்கும் மேல ஆச்சா!?!?!?இதே நேரத்துல பத்து வருஷம் முன்னாடி ED போர்டு ல்ல டிவி முன்னாடி உக்கார்ந்துட்டு drawing போட்டுட்டு இருந்தேன்.//
அமாங்க, பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு. எனக்கும் இவ்வளவு வருடங்கள் ஓடினது நினைச்சு பிரமிப்பா தான் இருக்கு
வருகைக்கு நன்றி.
Post a Comment