Monday, September 26, 2011

குடும்ப அமைப்பு முறை - இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில்


சன் டிவியின் கல்யாணமாலை நிறுவனர் திரு மோகன் மற்றும் கல்யாணமாலை நிறுவன இயக்குனர் திருமதி மீரா நாகராஜன் அவர்களும் சென்ற சனிக்கிழமை, தங்கள் வட அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக கனக்டிகட் வந்திருந்தனர். கனக்டிகட் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய அந்த நிகழ்ச்சியில் கல்யாணமாலை நிகழ்ச்சி பற்றி ஒரு குறும்படமும் அதைத் தொடர்ந்து ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடந்தது. பட்டிமன்றத் தலைப்பு - இந்தியக் குடும்ப அமைப்பு முறை - இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில். அதாவது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கிறதா அல்லது இந்தியாவில் வாழும் இந்தியர்களின் குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கிறதா என்பது தான் தலைப்பு. இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு பேசினேன் என்பது எனக்கே சற்று ஆச்சரியமான விஷயம். சாதாரணமாக புதியவர்களிடம் கூட அதிகம் பேச மாட்டேன். இந்த நிலையில் பட்டிமன்றத்தில் பேசுவது என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தில் இருந்து நண்பர் ஒருவர் அட சும்மா வந்து பேசுங்க என்று கூறியதால் சரி போய் பேசித்தான் பார்ப்போம் என்று ஒரு அசட்டு துணிச்சலில் சென்று கலந்துகொண்டேன். ஓரளவுக்கு சுமாராக பேசினேன் என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு பேசும் வாய்ப்பு கடைசியில் கிடைத்ததால் நேரமில்லாமல் நான் பேச வேண்டும் என்று நினைத்ததை அனைத்தையும் பேச வாய்ப்பில்லாமல் போனது. அதனால் நான் பேச நினைத்தது அனைத்தையும் உங்கள் முன்னால் கொட்டலாம் என்று இந்த பதிவை எழுதுகிறேன். படித்துவிட்டு இந்தப் பதிவைப் பற்றியோ அல்லது பட்டிமன்றத் தலைப்பை பற்றியோ உங்கள் கருத்தை முடிந்தால் கூறுங்கள்.

சரி இனி என் பேச்சு இங்கே எழுத்தில்...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்வாங்க. சாதரணமா உள்நாட்டிலேயே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாறிப் போய் வாழ்வது சற்று சிரமம் தான். அப்படி இருக்கும் போது இந்தியாவில் இருந்து கடல் கடந்து வெளிநாட்டுக்கு ஒருவன் ஓடுவது எதற்காக. அப்படிக் கிளம்பும் யாரும், 'எனக்கு வெளிநாட்டில் யாரவது மூதாதையர் இருக்கிறார்களா என்று கண்டு பிடிக்கப் போகிறேன்னு' சொல்லிவிட்டு போவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியர்கள் வெளிநாட்டிற்கு வாணிபம் செய்வதற்காகத்தான் சென்றார்கள். இந்தக் காலத்தில் வேலை செய்யப் போகிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். இங்கு அடிப்படை நோக்கம் பொருள் ஈட்டுவது தான் அதாவது பணம் சம்பாரிக்கத் தான் ஒருவன் வெளிநாட்டிற்கு செல்கிறான். அவன் நினைப்பெல்லாம் தனக்கு கிடைக்கப்போகும் சம்பளத்தை முப்பதைந்தாலோ அல்லது நாற்பதைந்தாலோ பெருக்கி, இந்தியா ரூபாயில் கணக்குப் போடுவது தான். பல நேரங்களில் புதிதாகச் செல்பவர்கள், வெளிநாட்டில் செலவு செய்யபோவது இந்தியா ரூபாயில் அல்ல என்பதை மறந்து விடுகிறார்கள்.

சரி வெளிநாட்டிற்கு சென்றாகிவிட்டது.  அங்கு அவன் கொஞ்சம் நிலைத்து நின்றதும், என்ன செய்கிறான். அண்ணனாக இருந்தால் தம்பியை கூப்பிடுவான், தம்பியாக இருந்தால் அண்ணனை கூப்பிடுவான். இரண்டும் இல்லாமல் திருமணம் ஆகதவனாக இருந்தால் கல்யாணம் செய்துகொண்டு மனைவியை அழைத்து வருவான். இதை தவறென்று கூறவில்லை. அடிப்படையில் பார்த்தால் அவன் மனது முழுவதும் அவன் வாழ்ந்து வளர்ந்த இந்தியக் குடும்ப சூழ்நிலையைத் தான் தேடுகிறது. அவனை சிரிக்க வைக்க, மகிழ வைக்க, நெகிழ வைக்க அவனை சுற்றிலும் உறவுகள் தேவைபடுகிறது. தன் சொந்த உறவுகளை அழைத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்திய நண்பர்களை சேர்த்துக் கொள்கிறான். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தான் வாழ்ந்த இந்தியக் குடும்ப சூழ்நிலை வெளிநாட்டில் கிடைக்காததால் தன்னால் இயன்ற அளவு தன் வீட்டிற்குள் ஒரு இந்தியக் குடும்பத்தை செயலவில் மெய்யாக்கதக்க சூழ்நிலையை உருவாக்கி அதில் மகிழ்ச்சி அடைகிறான். அது முழுமையான மகிழ்ச்சி அல்ல. சூரிய ஒளியை நிலவு பிரதிபலிப்பது போல இந்திய குடும்ப சூழலை சிறிய அளவு பிரதிபலித்து, அதுதான் மேன்மையானது என்று தங்களைத் தாங்களே சமாதானப் படுத்திகொள்ளும் ஒரு முயற்சி.

ஒரு சிறிய நாற்றை கூட ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் பிடுங்கி நடும்போது அதன் தாய் மண்ணோடு தான் நடுவார்கள். அப்படி நட்டால் தான் அது புதிய மண்ணில் முதலில் சிறிது வாட்டம் கண்டாலும் பின்னர் பட்டுபோகாமல் நன்கு வளரும். நம் குடும்பம் என்பது அந்த தாய்மண் போன்றது. அதுதான் அவன் வளர்ச்சிக்கு ஆதாரம். அந்த ஆதாரத்தை ஸ்திரபடுத்திக் கொள்வதற்கு தான் அவன் வெளிநாட்டிற்கே செல்கிறான். அவன் சம்பாரிபதையும் முடிந்த அளவு தன் குடும்பத்திற்கு கொடுக்கிறான். மகிழ்ச்சியிலே பெரிய மகிழ்ச்சி நாம் அன்பு செலுத்துபவர்களை மகிழ்விப்பது தானே. இப்படி பொருள் சேர்க்க சொந்த பந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு சென்று தன் தேவை எவ்வளவு என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லாமல் வாழ்க்கையில் ஓட வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். இந்த மாயையிலே சிக்கி கார், வீடு, நகை, நிலபுலன் என்று வாங்கி (கடன் வாங்கி) பொருளாதாரச் சங்கிலியில் புலி வாலைப் பிடித்தது போல மாட்டிக்கொள்கிறான். இதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. எங்கே புலியின் வாலை விட்டுவிட்டால் இதே வேகத்தில் தொடர்ந்து ஓடமுடியமா அல்லது எங்கே புலி தன்னை கடித்துவிடுமோ என்கிற பயம் தான் முக்கிய காரணம். சிலர் குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் வெளியில் வரத் தயங்குகிறார்கள்.

முதலில் குடும்பம் என்றால் என்ன என்று பார்க்கவேண்டும். அண்ணன், அண்ணி, மாமன், மச்சான், அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி இப்படி பல உறவுகள் ஒரு நல்லது கெட்டது என்றால் ஓன்று கூடி, பேசி, சிரித்து, அழுது, சண்டைபோட்டு, பின்னர் சமாதானமாகி...இப்படி பல வகை வேறுபாட்டு நிலைகளை கொண்டதுதான் உண்மையான குடும்பம். வெளிநாட்டில் வாழும் பல குழந்தைகளுக்கு (சில நேரங்களில் பெரியவர்களுக்கும்) தெரிந்த உறவு எல்லாம் ஆண்டி, அங்கிள் தான். பல இடங்களில் பிறந்து சிலவாரங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகளைக் கூட காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள். இதே குழந்தை இந்தியக் குடும்பச் சூழலில் பிறந்திருந்தால் அதன் சித்தியோ, பெரியம்மாவோ, அத்தையோ, பாட்டியோ யாரவது ஒருவர் வீட்டிலேயே பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் அந்தக் குழந்தை தன் பாட்டியின் மடியின் கதகதப்பிலே தூங்குவது சுகமா அல்லது ஒரு செவிலித்தாய் கண்காணிப்பில் பத்தோடு பதினொன்றாக இருப்பது சுகமா. இது பிறந்த குழந்தைகளின் நிலை. அவர்கள் வளரும் போதும் கிட்டத்தட்ட இதே நிலைதான் பாட்டு, டான்ஸ், கராத்தே, கீ போர்டு அப்படி இப்படி என்று பல வகுப்புகளில் சேர்த்துவிடுவார்கள். முக்கியமாக பக்கத்துக்கு வீட்டு இந்தியக் குடும்பத்தில் உள்ள குழந்தைச் செல்லும் கிளாசிற்கு கண்டிப்பாக அனுப்பி விடுவார்கள். இதையெல்லாம் தவிர இந்திய புராண கதைகள், பஜனை போன்றவற்றை கற்றுக் கொடுக்க தனியாக ஒரு கிளாஸ் அனுப்புவார்கள். அதாவது சாமி எப்படி கும்பிடுவது என்பதற்கே ஒரு கிளாஸ். இது போன்ற விஷயங்களை இந்தியக் குடும்ப சூழ்நிலையில் தாத்தா பாட்டியே அந்த குழந்தைகளை தூங்கவைக்கும் போது தலை முடியை கோதி விட்டுக்கொண்டே சொல்லித் தந்துவிடுவார்கள்.

எத்தனை வித கொண்டாட்டங்கள், பண்டிகைகள், திருமணங்கள். நம் குடும்பத்துடன் சேர்ந்து குதுகலிக்க எத்தனை விஷயங்கள். வெளிநாட்டில் இருந்து தீபாவளி, பொங்கல் என்றால் ஸ்கைப்பில் பேசிவிட்டு வேலைக்கு செல்ல வேண்டியதுதான். இதெற்கெல்லாம் மேல் இன்றளவிலும் இந்தியக் குடும்ப வாழ்க்கை மேலோங்கி இருப்பதால் தான், இன்றைய இளைய சமுதாயம், தன்னை பெற்று, வளர்த்து, ஆளாகிய தன் பெற்றோர்கள் தங்களுக்கு சரியான வாழ்கை துணையைத் தேடித்தருவார்கள் என்று அந்தப் பொறுப்பை தன் பெற்றோர்களிடமும் விட்டிருகிறார்கள். அதற்கு கல்யாணமாலை போன்ற நிகழ்ச்சியே சான்று. நம் நாட்டில் நடப்பது போல இத்தனை பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. அதெல்லாம் அந்தக் காலம் இப்போதெல்லாம் இந்தியாவிலேயே யாரும் ஓன்று கூடி பண்டிகைகளை கொண்டாடுவதில்லை, பலர் காதல் திருமணம் தான் செய்கிறார்கள், விவாகரத்துகள் அதிகரித்து விட்டன என்று நீங்கள் கூறுவதாக இருந்தால்...அவர்கள் அனைவரும் இந்திய குடும்ப சூழலில் வாழாமல் மேற்கத்திய மோகத்தில், மேற்கத்திய வாழ்கை முறையை கடைபிடிக்க முயற்சிகிறார்கள் என்பதே என் பதில். சில இடங்களில் தவறுகள் நேரத்தாலும் இந்தியக் குடும்ப முறை மேலோங்கி இருப்பது இந்தியாவிலே என்று கூறி வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.

1 comment:

fiona said...

tharkala kudumbha amaipu oru thani manithanai evvaru pathikirathu???

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...