Monday, May 27, 2013

கமல்ஹாசன் என்ற தந்தைக்கு ஒரு சல்யுட்




சமீபத்தில் ஸ்ருதிஹாசனின் ஒரு பழைய பேட்டியை ஏதோ ஒரு இணையதளத்தில் பார்த்தேன். ஏழாம் அறிவு திரைப்படம் வந்த நேரத்தில் அந்தப் படத்தை பற்றி பேட்டி மற்றும் தொலைபேசியில் ரசிகர்கள்/ரசிகைகளுடன் பேசுவது போன்ற ஒரு நிகழ்ச்சி. சாதரணமாக இந்த மாதிரி போன் போட்டு நடிக நடிகைளிடம் பேசும் நிகழ்ச்சியை பார்த்தால் எனக்கு மகா எரிச்சல் வரும். ஆனால் ஏனோ இந்த நிகழ்ச்சியை அமைதியாக முழுவதும் பார்த்தேன். அதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தொலைபேசியில் பேசிய யாரும் உளறி கொட்டாமல், ரொம்பவும் வழியாமல் பேசினார்கள். இரண்டாவது காரணம் ஸ்ருதிஹாசனின் போலித்தனம் இல்லாத பேச்சு. ஆங்கங்கே ஆங்கிலம் கலந்து பேசினாலும், முடிந்த வரை நல்ல தமிழில் பேசினார். அந்தப் பெண்ணின் துளியும் கர்வம் இல்லாத பேசும் அழகும் என்னை வெகுவாக கவர்ந்தது. கமல்ஹாசன் என்கிற பெரிய நடிகரின் பெண் என்கிற பந்தா எந்த இடத்திலும் தெரியவில்லை. தொலைபேசியில் பேசியவர்களிடம் கூட மிகவும் தன்மையுடன் பேசியது மிகவும் அருமையாக இருந்தது. அந்தப் பேட்டியில் ஸ்ருதி கூறிய ஒரு வாக்கியம் தான் என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. அது என்னவென்றால், 'என்னை என் அப்பா, இதைதான் செய்யவேண்டும் என்று வற்புறுத்தவில்லை, நீ என்னவாக விரும்புகிறாயோ அந்தப் பாதையில் தாராளமாக செல், ஆனால் அதில் ஒரு எல்லை வைத்துக் கொள்ளாமல் முழு முயற்சியுடன் ஈடுபடு' என்பது தான். முதலில் கேட்பதற்கு சாதாரணமாகத் தான் தோன்றியது. பின்னால் யோசித்து பார்த்ததில் அப்படி ஒரு சுதந்திரத்தை பிள்ளைகளுக்கு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்ற கேள்வி எழாமல் போகவில்லை. நம் பிள்ளைகளை நாம் என்ன நினைகிறோமோ அதை செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். நீ என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறாயோ அதை தாராளமாக செய் என்று கூறும் தைரியம் நான் பார்த்த அளவில் பல பெற்றோர்களிடம் இருந்தது இல்லை. அதற்கு முக்கிய காரணம், எங்கே பிள்ளைகள் எடுக்கும் முடிவு தவறாக போய்விடுமோ என்பதுதான். சரி நாம் அவர்களுக்கு காட்டும் வழி மட்டும் சரியாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. பொதுவாக ஒரு துறையில் இருப்பவர்கள், ஓன்று தன் பிள்ளைகளை அந்தத் துறையிலேயே கொண்டு வர முயற்சிப்பார்கள் அல்லது இந்தக் கஷ்டம் என்னோடு போகட்டும் நீயாவது வேறே வேலை செய் என்று கூறு வேறு வழி காட்ட முயற்சிப்பார்கள். நடிகர்களுக்கு ஆண் பிள்ளை இருந்தால், அந்த குழந்தை பிறந்தது முதல் நடிகனாக வருவதற்கு தேவையான அனைத்தையும் கற்று கொடுத்து தலை கீழாக நின்றாவது அவர்களை ஒரு பெரிய ஹீரோவாக ஆக முயற்சி செய்த பலரை நாம் பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில் பெண் குழந்தைகளை நடிப்பு துறையில் நுழைக்காமல் இருக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். கமல்ஹாசன் நினைத்திருந்தால் ஒரு நீ ஒரு பெரிய நடிகையாதான் வர வேண்டும் என்றோ அல்லது நீ சினிமா பக்கமே வரகூடாது என்றோ தன் பிள்ளைக்கு அறிவுரை சொல்லி இருக்கலாம். ஆனால் உனக்கு பிடித்ததை செய் என்பதற்கு ஒரு தில் வேண்டும். கமலிடம் பணம் இருக்கிறது, அந்த துணிச்சலில் தன் பிள்ளை எப்படி போனாலும் பின்னால் பணத்தால் சரி செய்து விடலாம், நம்மால் அது முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். ஓன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டும், எவ்வளவு பணம் இருந்தாலும் தன் பிள்ளைகள் நல்ல வழியில் தன் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புவார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அத்தனை பணமும் கை விட்டு போய் விட வாய்பிருக்கிறது. கமல் கண்டிப்பாக அதை உணர்ந்தவர் என்பதை திடமாக நம்புகிறேன். பிள்ளைகள் அவர்கள் விரும்பிய துறையில் சென்று வெற்றி பெறும்போது அதை பார்க்கும் பெற்றோர்களுக்கு எவ்வளவு பெருமிதமாக இருக்கும். மற்றபடி ஸ்ருதிஹாசன் இப்படி நடிக்கிறார், சொந்த வாழ்க்கையில் அப்படி நடக்கிறார் என்று குறை கூறுவதை ஏனோ என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. வாழ்கையில் நேர்மையாக, தனக்கு பிடித்தமான ஒன்றை செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதுபோல ஒரு மகிழ்ச்சி வேறு எதில் இருக்க முடியும்.


No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...